இரு வீட்டினரையும் தொடர்பு கொள்ளும் எண்ணம் இல்லை! நல்ல நிலையில் இருந்தால் அது வேறு! இப்படி ஒரு நிலையில் இருப்பது தெரிந்து, அவர்கள் பாவம் பார்த்து ஏற்றுக் கொண்டாலும், அவர்களுக்கும் அனுதினமும் தங்களின் நோய் வேதனையைத் தான் தரும், அதற்கு நாங்கள் விலகியே இருந்து விடுகிறோம் என்று அலக்கியா சொன்னாள்.

கேட்ட தாராவின் முகம் வாடிப் போய்விட்டது.

“இனி கவலைப்பட ஒன்னும் இல்லைன்னு எத்தனை முறை சொல்லறது?” என்று அலக்கியா தோழியின் தோளை அணைத்துத் தைரியமூட்டினாள்.

தாரா வெகுவாக தயங்கி, “ட்ரீட்மெண்ட்…” என்று இழுக்க, “ரெண்டு பேருக்கும் ஹெட்ச்.ஐ.வி., தானே தாரா? இது எய்ட்ஸா மாறாம பார்த்துக்கணும். அவ்வளவு தானே? நானும் ஒரு டாக்டர் தானே, எங்க ஹெல்த்தை நான் கவனிகிச்சுக்க மாட்டேனா?” என்று மிகவும் சாதாரணமான விஷயம் என்பது போல சொன்ன தோழியைக் கண்கள் கலங்கப் பார்த்தாள்.

‘எப்படி இவளால் இத்தனை அழகாக இந்த சூழலை கடக்க முடிகிறது?’ என்ற பிரமிப்பில் மெய் சிலிர்த்தது.

“நீ ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட். நீ போயி இப்படி பயப்படலாமா சொல்லு? இப்ப எங்களோட இம்யூன் சிஸ்டம் புல் டேமேஜ்ல இருக்கும். ஆர்ட் தெரபி தான் எடுத்துட்டு இருக்கோம், டெயிலும் ரொட்டீன் மெடிசின்ஸ் ஸ்கிப் பண்ணாம எடுத்துக்கறோம். புட் ஹெல்த் கான்ஷியஸா கவனிச்சுக்கறேன். ஹெல்தி லைப்ஸ்டைல்… இப்போதைக்கு அந்த ஹெட்ச்.ஐ.வி., வைரஸை எங்க உடம்புல ஸ்ப்ரெட் பண்ண வைக்கிற ஐடியா இல்லை, ட்ரீட்மெண்ட் மூலமும் நல்ல வாழ்க்கை முறை மூலமாவும் கட்டுக்குள்ள வெச்சிட்டு இருக்கும்போது நாங்க லாங், ஹெல்தி லைஃப் வாழ்வோம் தானே?” நம்பிக்கை மிளிர பேசிய தோழியினை உணர்ச்சி பெருக இறுக அணைத்துக் கொண்டாள்.

ஆதி தன் மனைவியின் செய்கைகளை அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டே தான் பாபுவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அதற்கு பாபு கிண்டலாக, “நாங்க லவ் மேரேஜ், ஆனா நாங்க கூட இத்தனை தூரம் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் சுத்தறது, கண்ணுலயே பாலோ பண்ணறது இந்த மாதிரி சின்ன சின்ன ரொமான்ஸ் எல்லாம் அதிகமா பண்ணினது இல்லைன்னு நினைக்கிறேன். ஆனா நீங்க கலக்கறீங்க” என்று சொல்ல,

அவஸ்தையுடன் தலையை கோதிக் கொண்டவன், அழகான புன்னகையுடன், “ஒருவேளை இந்த வேலையெல்லாம் நீங்க காதலிச்சப்பவே செஞ்சிருக்கலாம். எங்களுக்கு கல்யாணத்துக்கு அப்பறம் தான் வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று சொல்ல, “யங் மினிஸ்டர் லவ் லைஃப்ன்னு ஒரு ஸ்டோரி போட போறேன் பாருங்க” என்று அதற்கும் கலாய்த்தான்.

“ஓ… தாராளமா போடுங்களேன், அரசியல்வாதி கதையைப் படிக்க யார் இருப்பா. அதுவும் காதல் கதையை சொல்லுங்க. சினிமா காரங்க காதல் கிசுகிசுவும், அரசியல்வாதிங்க லஞ்ச கிசுகிசுவும் தான் நல்லா ஓடும். ஆர்டர் மாத்தினா சொதப்பிடும்” என்று சொல்லி ஆதி சிரிக்க,

அவர்கள் இருவரும் இலகுவாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கவனித்த அலக்கியா, “எவ்வளவு பெரிய மினிஸ்டர், ஆனா எப்படி இந்த மாதிரி ரொம்ப சாதாரணமா இருக்காரு” என்று சிலாகித்துப் பேச, தாராவிற்கும் பூரிப்பாக இருந்தாலும், “வெளிய தானே மினிஸ்டர் எல்லாம், இங்கே அவர் என் ஹஸ்பண்ட் தானே” என்று கெத்தாகச் சொன்னாள்.

அதற்கும் அலக்கியா அவளை கிண்டல் செய்தே ஒரு வழி செய்தாள். நேரம் தான் கடந்ததே தவிர தோழிகள் இருவருக்கும் தூங்கும் எண்ணம் இருப்பது போலவே தெரியவில்லை.

“உங்க பொண்டாட்டியை பார்த்ததுல என் பொண்டாட்டிக்கு என் நினைப்பே வரலை போல” என பாபு போலி சோகத்துடன் ஆதியிடம் சொல்லிக் கொண்டிருக்க, ‘நீ சொல்லிட்ட, என்னால முடியலை’ என்ற உண்மையைச் சொல்ல முடியாத நிலையிலிருந்த ஆதி வேறு வழியின்றி சிரித்து வைத்தான்.

“ரெண்டு பேருக்கும் அஞ்சு வருஷ பிரண்ட்ஷிப், நாளைக்கு கிளம்பிடுவேன்னு அலக்கியா வேற ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருப்பா. இனி எப்ப பார்ப்போம்ன்னு ரெண்டு பேருக்கும் ஏக்கம் இருக்கும். பேசாம இவங்களை இங்கே தூங்க சொல்லிடலாம். எனக்கு வேற ஒரு ரூம் அரேஞ் செஞ்சு தரீங்களா?” என்று வெகு இலகுவாக முடிவெடுத்து கேட்ட தான்பாபுவை ஆதீஸ்வரன் பிரமிப்பாகப் பார்த்தான்.

பின்னே இவனுக்கே மேலே அல்லவா பொண்டாட்டி தாசனாக இருக்கிறான்.

“என்ன பார்க்கறீங்க?” என பாபு புரியாமல் கேட்க, ஆதிக்கு உடனடியாக என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

மனைவியை வாரக்கணக்கில் பிரிந்திருந்து விட்டு இன்றுதான் பார்க்கிறான். இன்னும் சரியாக அவளிடம் பேசக்கூட இல்லாமல் அழகான கண்ணாமூச்சி ஆட்டம் வேறு இருவருக்குள்ளும். இன்றைய இரவுக்கான எதிர்பார்ப்பு ஆதியிடம் நிறைய கொட்டிக் கிடந்தது. ஆனாலும், மனம் அவளின் ஏக்கத்தைக் கொஞ்சம் முழுமையாகத்தான் பூர்த்தி செய்து விடேன் என்றும் கேட்டுக் கொள்ள, தான்பாபுவின் கோரிக்கையையே முழுமனதோடு ஏற்றுக் கொண்டான்.

அங்கே பெண்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க, இவர்கள் இருவரும் அவர்களை நோக்கி வந்ததைப் பார்த்ததும், “ஓ லேட் ஆயிடுச்சா?” என்று சோகம் இழையோட இருவரும் ஒருசேரக் கேட்டனர்.

அதற்கு தான்பாபு சிரித்தபடி, “எவ்வளவு லேட் ஆனாலும் பரவாயில்லை, நீங்க ரெண்டு பேரும் இங்கேயே பேசிட்டு இங்கேயே தூங்கிக்கங்க. ஆனா, எங்களுக்கு தூக்கம் வருது, எனக்கு வேற ரூம் கேட்டிருக்கேன்” என்று சொல்ல, அலக்கியா புருவம் உயர்த்தி கேலியாகச் சிரித்தாள்.

அவள் கணவன், திருமணம் முடிந்த தினத்திலிருந்து அவளை அணைத்துக் கொண்டு தான் உறங்குவான். காய்ச்சல் சமயங்களில், “ஈஸியா ஸ்ப்ரெட் ஆகிடும்” என்று அவள் விலகியிருக்க கேட்டாலும் ஒப்புக்கொண்ட சரித்திரமே இல்லை. இன்று அவளுக்காக அவன் தன் நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கிறான். மனம் கண்டபடி தளும்பித் தள்ளாடியது.

‘நான் அருகில் இல்லாமல் உறங்கி விடுவாயா?’ என்று பெண்ணவளின் விழிகள் கேள்வியைத் தொடுக்க, அதற்கு பாபுவும் ‘வேற வழி’ என்பதாக அழகானதொரு பாவனையைக் காட்டியவன், அவள் முகம் லேசாக வாட்டம் காணுவதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், ‘இட்ஸ் ஓகே, ஐ வில் மேனேஜ்’ என்றும் கண்சிமிட்டித் தலையசைத்து சைகை செய்ய, அவள் முகத்தில் அழகானதொரு வெட்கம் கலந்த புன்னகை.

‘அன்பு முத்தங்கள்’ என்னும் பாவனையில் மற்றவர்கள் பார்வையைக் கவராமல், கீழ் உதட்டை மட்டும் லேசாக முன்னோக்கி நகர்த்தி சைகை செய்ய, ஆணவனின் விரிந்த புன்னகையில் வெட்கம் சுமந்திருந்தது. பிடறிமுடியை கோதியபடி அவனும் பதிலுக்கு அதே சைகையைச் செய்தான்.

தாராவோ தான்பாபு இங்கேயே உறங்கி விடுங்கள் என்று சொன்னதும், வேகமாக கணவனைத் தான் பார்த்தாள். அவன் என்னவோ தீவிரமாகக் கைப்பேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு இங்கே உறங்குவதா வேண்டாமா என்று பெருங்குழப்பம்.

மற்ற தம்பதிகளைப் போல என்றால், இந்த ஒருநாள் பெரிதாகத் தெரியாதோ என்னவோ? இவர்கள் தான் தம்பதிகளுக்கான கோட்பாடுகள் எதையும் பின்பற்றுவதில்லையே! போதாக்குறைக்கு நீண்டதொரு பிரிவு வேறு! அதில் கொஞ்சம் சஞ்சலம்! தோழி முக்கியம் தான், அவளோடு பேச நிறைய இருக்கிறது தான், ஆனால், அவளோடே உறங்குவது தான் கொஞ்சம் நெருடியது. இத்தனை நாட்கள் கழித்து இவளுக்கே இன்று தான், தங்களறையில் கணவனையும் சேர்த்துக் காணக் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் இவள் தங்கள் அறையைத் தவிர்ப்பதா?

தாரா இந்த முடிவுக்கு ஆனந்தப் பட்டு எதிர்பார்ப்புடன் தன்னிடம் ஒப்புதல் கேட்பாளோ என்று மனம் சுணங்கியிருந்த ஆதிக்கு, அவள் தவிப்பும், தடுமாற்றமுமாக தன் முகம் பார்த்துக் கொண்டிருப்பது ஓர விழிப் பார்வையில் விழுந்ததில் சொல்லத்தெரியாத ஆசுவாசம் அவனுக்குள்.

நாம் தவிப்பது போலத்தான் அவளும் தவிக்கிறாள் என்பது அவனது மனதை ஆனந்தத்தில் நிரப்பியது.

லேசாக நிமிர்ந்து அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கினான். அவள் என்ன பேச, என்ன கேட்க என்று தெரியாமல் தடுமாற, கீற்றாக ஒரு புன்னகையுடன் இரு விழிகளையும் அழகாக முடித் திறந்து லேசாகத் தலையசைத்து, ‘இங்கேயே உறங்கு பரவாயில்லை’ என்னும் விதமாக சைகையில் சொன்னவனைப் பிரமித்து நோக்கினாள்.

‘இவன் ஏன் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் வசீகரிக்கிறான்?’ பெண்ணவளின் காதல் தளும்பிய மனம் இப்படித்தான் எண்ணிக் கொண்டது. அந்த பூரிப்புடன், அவளும் பதிலுக்கு அழகாகப் புன்னகைத்து தலையை அசைத்தாள். கணவனுக்கு அவளை அள்ளிக்கொள்ளலாம் போல இருந்தது. வேறு வழியின்றி அறையிலிருந்து வெளியேறினான்.

அன்றைய இரவு தோழிகளுக்குக் கதைகள் பேசுவதிலும், ஆண்கள் இருவருக்கும் மெல்லிய ஏக்கத்துடனும் கழிந்திருக்க, மறுநாள் தான்பாபு, அலக்கியா இருவரும் அந்த குடும்பத்தினரிடமிருந்து மகிழ்ச்சியோடு விடைபெற்றிருந்தனர்.

2030 ஆம் ஆண்டை இலக்காக எடுத்துக் கொண்டு, ‘ஹெட்ச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோய்களை அழித்துவிட வேண்டும்’ என்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பெரும்பாலான நாடுகள் எல்லாம் தீர்மானித்து, தங்கள் வேலைகளைத் துரிதமாக்கி வருகிறார்கள். அவர்களின் இலக்கை அடைந்து, அவர்களது கண்டுபிடிப்பின் மூலம் பலரையும் காப்பாற்றக் கூடிய நிலை இவ்வுலகில் விரைவில் வரும் என்றும், அதில் அலக்கியா, தான்பாபு போன்ற நல்லுள்ளங்கள் வாழ்வும் சிறக்கும் என்றும் நாம் நம்பிக்கை கொள்வோம்.

((இன்னும் கூட ஒரு எபிசோட் வரும் போல டியர்ஸ். கதை ரொம்ப பெருசா யோசிச்சு வெச்சிருக்கேன் போல. கண்டிப்பா கடைசி அத்தியாயம் ஆதி, தாராவுக்கு முடிஞ்சளவுக்கு ரொமான்ஸ் வைக்கறேன், அது எந்த அழகுல எழுத வருதுன்னு தான் தெரியலை… வீக்கெண்ட் தந்துடறேன்))