Advertisement

 காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                          அத்தியாயம்  – 6
 
அஸ்வினை திட்டியபடி திரும்பியவள் அவன் மாமரத்தில் சாய்ந்தபடி அவளை பார்த்துக் கொண்டிருக்க இவள் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.. ஐயோ மகராசா….. இவரா..!! இவர் எப்ப வந்தாரு..?? இப்ப நாம இவருக்கு கொடுத்த அர்ச்சனையெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தாரா.. இனி சும்மா சும்மா கண்ணாலயே நம்மள மிரட்டி ஒரு அரைமணி நேரம் அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சிருவாரே .. அவன் ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி எடுத்து வைக்கசிக்கிராத ஸ்ருதி.. எப்படியாவது எஸ்கேப் ஆகிரு.. சிக்கினோம் கதை கந்தல் ஆகிரும்.. யோசி.. யோசி.. மூளைக்கு வேலை கொடுக்க பார்வை அஸ்வின் முகத்திலேயே இருந்தது..
 
அவன் அவளருகில் வரவர நடையில் தள்ளாட்டம் தெரிந்தது.. என்னாச்சு இவருக்கு வளைஞ்சு வளைஞ்சு வர்றாரு…அவள் அருகில் வந்திருந்தவன் அவள் தோளில் ஒரு கையை வைத்து அழுத்தி மறுகையால் தாடையை பிடித்து,
 
 என்ன சொன்ன…?? ம்ம் இப்ப சொல்லு..? சொல்லுடி..??” அவளை முறைக்க,
 
அவன் மேலிருந்து குப்பென்று அடித்த மதுவாடை இவரு குடிப்பாரா..!! கீழ விழாம இருக்கத்தான் மாமரத்துக்கிட்ட இவ்வளவு நேரம் முட்டுக்குடுத்து நின்னாரா..?? இவர… அவளுக்கு இன்னும் கோபம் கொப்பளிக்க,” என்னது.. டி….யா.. யாரப்பார்த்து என்ன வார்த்தை சொன்னிங்க.. எனக்கு இப்படி வாடி போடின்னெல்லாம் சொன்னால் பிடிக்காது மாமா சொல்லிட்டேன்..??” அவள் இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தபடி சொல்ல,
 
ஹாஹாஹா உனக்கு பிடிக்காதா.. சூப்பர்.. அப்ப  இனி வாடி போடின்னுதான் கூப்பிடுவேன்.. ம்ம் சற்று யோசித்தவன்.. என்னடி சொன்ன ஆளும் மண்டையும் பாரா..” அவள் கையை பிடித்து அப்படியே பின்னால் வளைத்தவன் அவளிடம் இன்னும் நெருங்கி,” நல்லா பாருடி எனக்கு என்ன குறைச்சல்..??” ஒரு நூல் இடைவெளிதான் அவன் சூடான மூச்சுக்காற்று அவள் மேல் படும் அளவுக்கு நெருங்கியிருந்தான்..
 
அவளுக்கு நெஞ்சு படபடவென அடித்தது.. இவ்வளவு அருகில் அவன் முகம் மீசை முடிகள் ஒன்றிரண்டு அவள் மேல் உரசியது.. ஸ்ருதிக்கோ மூளை வேலை செய்யவில்லை..
 
அப்புறம் என்ன சொன்ன ஹிட்லரா..??”
 
நான் ஹிட்லரா.. ஹிட்லர்தான் நீ நைட் அப்பான்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு லட்ச லட்சமா செலவுபண்ணி உங்கொப்பனை இங்க டிரான்பர்ல கூட்டிட்டு வருவானா..??”
 
என்னமா பேசுற இந்த வாய..??” அவள் தாடையை பிடித்தவன் அப்படியே அவள் மேல் சாய்ந்துவிழ இவளும் அவன் பாரம் தாங்காமல் கீழே விழுந்திருந்தாள்..
 
அடப்பாவி மாமா உன்வெயிட்ட என்னால தாங்க முடியுமா.. ஐயோ எழுந்திரிங்க..??” அவள் அவனுக்கு கீழிருந்து கத்திக் கொண்டிருக்க அப்படியே கைகளால் துளாவி அவள் வாயை அடைத்தவன்,
 
யேய்.. சும்மா சும்மா கத்தாதடி எனக்கு தூக்கம் வருது.. ??”
 
மூச்சு விடமுடியாமல் தவித்தவள் கஷ்டப்பட்டு அவன் கையை தள்ளிவிட்டு,” ஐயோ  பாவி மாமா இப்படி வாயோட சேர்த்து மூக்கையும் அமுக்கிட்டியே..” தஸ்ஸுபுஸ்ஸென்று மூச்சை இழுத்து விட்டவள்,” ஸ்ருதி கொஞ்ச நேரம் விட்டிருந்தா பரலோகத்துல நம்ம அப்பத்தா ஐயாவோட ஸ்வேதாவையும் சேர்த்து பார்த்திருப்போம்.. சற்று தன்னை சமன்படுத்தி கஷ்டப்பட்டு தன் முழுபலத்தை செலுத்தி அவனை கீழே தள்ளினாள்..
 
அஸ்வினோ போதையில் எங்கிருக்கிறோம் என்பதே தெரியாமல் கைகளால் துலாவியவன்,” ஸ்ரீக்குட்டி அப்பா மேல தாச்சுக்கோ ச்சோ..ச்சோ என அவள் கையை பிடித்து தட்டிக் கொடுத்து உனக்கு அம்மா இல்ல.. எனக்கு அப்பா இல்ல.. நாம ரெண்டுபேரும் பாட்டிய பார்த்துக்குவோம்..
 
கிழிச்சிங்க போதையில ஸ்ரீயாரு ஸ்ருதியாருன்னே இவருக்கு தெரியலையாம் இதுல இவர் எல்லாரையும் பார்த்துக்குவாராம்..
 
அவன் விழுந்தது சிமிண்ட் தரையாக இருந்ததால் அவள் பயமில்லாமல் நிற்க அவனோ அவள் ஒரு கையை பிடித்தபடி ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருந்தான்..
 
அவளுக்கு இருந்த கோபத்தில் இப்படியே விட்டுட்டு நாம மட்டும் வீட்டுக்குள்ல போயிருவமா அவனிடமிருந்த தன் கையை பறித்துக் கொண்டு சில எட்டுகள் எடுத்து வைத்தவள் மனது கேட்காமல் மீண்டும் திரும்பி வந்தாள்..
 
இப்ப என்ன பண்றது.. மெதுவாக வீட்டிற்குள் சென்று எட்டிப்பார்க்க ஹாலில் யாரையும் காணவில்லை.. எப்படியாவது அவரோட ரூம்வரைக்கும் கூட்டிட்டு போனா போதும் அப்படியே படுக்க வைச்சிரலாம்.. இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டவள்.. ஜெய் பாகுபலி.. இல்ல இல்ல … ஜெய் ஆஞ்சநேயா.. அவன் முதுகுபுறம் கைகொடுத்து மெதுவாக அவனை தூக்கி தன் காலில் சாய்ந்து அமர வைத்தாள்..
 
அதற்கே அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியிருக்க இன்னும் அழுத்தம் கொடுத்து அவனை கன்னத்தில் தட்டி எழுப்பியபடி தோளில் கைபோட்டு அணைத்து நடக்க துவங்கினாள்..
 
அவளும் அவனோடு தள்ளாடியபடி நடந்து கொண்டிருக்க இதுக்குத்தான் குடிகாரன் சகவாசம் கூடாதுன்னு சொல்றது.. இப்ப யாராச்சும் பார்த்தா யாரு குடிச்சான்னே கண்டுபிடிக்க முடியாது..  மாமா பாதைய பார்த்து நடங்க விழுந்தா உங்களுக்கென்ன ஸ்டீல் பாடி எனக்குத்தான் புத்தூர்கட்டு போடவேண்டியிருக்கும்.. இத மட்டும் எங்க அம்மா அப்பா பார்க்கனும்.. மாப்பிள்ள அத செஞ்சாரு இத செஞ்சாருன்னு என்னமா பில்டப் பண்ணினாங்க.. இப்ப நல்ல குடிமகன்னு தெரிஞ்சு போகும்..
 
மாமா.. இப்ப ஏன் நேரா நடக்குறிங்க.. உங்க ரூமுக்கு போகச் சொன்னா உங்க அம்மா ரூமுக்கு போறிங்க..
 
அவனோ போதையில் ,”அவ ஏன் என்னை இப்படி ஏமாத்தினா.. என்னை பிடிக்காம எப்படி நான் தொடும்போது பேசாம இருந்தா .. பிடிக்கலைனா சொல்லியிருக்கலாம் தானே .. இப்ப என்னோட குழந்தைக்கு அம்மா இல்ல.. அவங்கல்லாம் என்னை சொல்ற அளவுக்கு விட்டுட்டா..??” ஸ்ருதிக்கு அவன் பேசியது யாரை என்று தெரிந்தாலும் அதைப்பற்றி பேச இப்போது நேரமில்லை என்பதை உணர்ந்து அவனை அவன் அறையில் படுக்க வைத்து காலில் இருந்த ஷூ சாக்ஸை கழட்டியவள் டையை கழட்டி சட்டை பட்டன்களை கழட்டிவிட்டாள்..
 
அவனோ கைகளால் ஸ்ரீ… ஸ்ரீ என தடவியவன் ஒரு தலகானியை எடுத்து தன் நெஞ்சில் போட்டுக் தட்டிக் கொடுக்க ஒருநிமிடம் ஸ்ருதிக்கு கண்கலங்கியது.. கண்களை துடைத்தபடி வெளியில் வர கற்பகமும் கண்களை துடைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்.. அவர் முகத்திலிருந்தே அவன் பேசியது அனைத்தையும் கேட்டுருக்கிறார் என்பதை உணர்ந்தவள் அவர் அருகில் சென்று அமர்ந்து அவர் கையை பிடித்து ஆறுதலாக அழுத்தினாள்..    
 
என் பையன் அவங்க அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தான்..கல்யாணம் பண்ணிவைச்சா அவன் வாழ்க்கையில இன்னும் சந்தோசம் வரும்னுதான் நினைச்சேன் ஆனா அதுவே இப்ப இவன் இப்படி மாற காரணம் ஆயிருச்சேம்மா.. இவன் இப்படி இருந்தா ஸ்ரீயை யார் பார்த்துக்குவா..
 
அத்தை கவலைப்படாதிங்க எல்லாம் சரியாயிரும் சற்று நேரம் ஆறுதல் சொல்லி அவரை படுக்க சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றவள் ச்சே.. அவசரப்பட்டு அம்மாவ தனி வீடு பிடிக்கச் சொல்லிட்டமோ மாமாவ மட்டும் நினைச்சு பார்த்துட்டு அத்தைய மறந்திட்டமே.. ஸ்ரீயோடு படுத்தவள் ஸ்வேதாவைத்தான் நினைத்து பார்த்தாள்.. அக்கா உன் ஒருத்தியோட முடிவால எத்தனை பேர் வேதனை படுறாங்க பாரு..
 
சிறுவயதில் இருந்தே ஸ்வேதாவுக்கு ஒரு தெளிவான முடிவு எடுக்கத் தெரியாது துணிக்கடைக்கு சென்றால்கூட அதுவா இதுவா என குழம்பியே அவளும் குழம்பி அடுத்தவருக்கும் தொல்லையை தருவாள்.. கடைசியில் ஒருமனதாய் எடுத்தது அவளுக்கு பிடிக்காது.. வீட்டிற்கு வந்தாலும் அங்கு விட்டு வந்ததைதான் சொல்லிக் கொண்டிருப்பாள்.. அப்பாவிற்கு மட்டும் கொஞ்சம் பயம்.. அம்மாவிடம்தான் செல்லம் கொஞ்சுவாள்.. படிப்பில இருந்து அவ கல்யாணம் வரைக்கும் அவளுக்கு எல்லாம் குழப்பம்தான் கிடைச்சதவைச்சு நல்லா வாழாம கிடைக்காதத நினைச்சு இன்னைக்கு உயிர விட்டுட்டா.. திரும்பி திரும்பி படுத்தவள் வெகுநேரம் தூக்கமில்லாமல் இருந்துவிட்டு விடிகாலையில்தான் கண்ணயர்ந்தாள்..
 
காலை எட்டு மணிக்குத்தான் எழுந்தாள் அருகில் ஸ்ரீயை காணவில்லை.. அஸ்வின் அலுவலகம் செல்லும்வரை அவன்தான் வைத்திருப்பான்.. குளித்து ரெடியாகி வந்தவள் அஸ்வின் டைனிங்டேபிளில் சாப்பிட்டு கொண்டிருக்க அவன் முகத்தைதான் பார்த்திருந்தாள்..
 
அப்பா டிரான்பர்க்கு மாமாதான் உதவிபண்ணினாங்கன்னு அம்மா சொல்லியும் நாம இவர அப்படி பேசியிருக்க கூடாது.. அதோட மாமாவும் நிறைய பணம் செலவழிச்சிருக்காங்க.. கொஞ்சம் ஓவரா பேசிட்டமோ.. ஏனோ அவன் இரவு ஸ்ரீக்காக பரிதவித்ததே நினைவில் வர மெதுவாக அங்கு வந்து அமர்ந்தாள்.. மடியில் ஸ்ரீயை வைத்தபடி சாப்பிட்டு முடித்தவன் கைகழுவி தாயிடம் சொல்லிவிட்டு கிளம்ப ஸ்ருதியிடம் ஒருவார்த்தை பேசவில்லை.. அவன் பின்னாலே சென்றவள் மாமா என கூப்பிட
 
அவள் கூப்பிட்டது காதில் விழுந்தாலும் ஒன்றும் சொல்லாமல் போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தபடி காரை கிளப்பியிருந்தான்.. அடுத்த இரண்டு நாட்கள் வீடு அதே அமைதியில் இருக்க கற்பமும் தன் மகனை நினைத்து கவலையில் தனக்குள்ளேயே மறுகத்துவங்கினார்..
 
அன்று கோகிலா போன் செய்து ஸ்ருதியை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்.. நீ என்ன சொன்ன ஸ்ருதி மாப்பிள்ள வேற வீடு வாடகைக்கு பார்த்துகொடுத்து நம்மள அங்க நாளைக்கு பால்காய்ச்ச சொல்லிட்டார்.. நீ ஏதோ சொல்லியிருக்க அதான் வீடு பார்த்திருக்கார்.. இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருந்தா என்ன பண்றது.. நாம அங்கயேவா இருக்கப்போறோம் எப்படியும் இன்னும் ஒருவருசத்துல அப்பாவுக்கு அடுத்த ப்ரோமோசன்ல வேற ஊர்ல போடப்போறாங்க அதுவரைக்கும் அவங்களுக்கு கொஞ்சம் மன ஆறுதல் எனக்கும் நம்ம ஸ்ரீக்குட்டியோட கூட இருக்கலாமேன்னுதான் நினைச்சேன். ஸ்வேதாவவிட நீ ரொம்ப தெளிவானவசூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்குவன்னு நினைச்சா ச்சோ போ..” போனை வைத்துவிட ஸ்ருதி அப்படியே நின்றாள்.. தப்பு பண்ணிட்டமோ..
 
இப்போதுதான் இவளுக்கும் புரிந்தது.. அம்மா அப்பா ஏன் இங்க இருக்க ஒத்துக்கிட்டாங்கன்னு.. அன்று முழுவதும் யோசனையிலே இருந்தவள் எப்படியும் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்க அவனை பார்க்கவே முடியவில்லை.. இரவு பதினோரு மணிவரை விழித்திருந்தவள் அஸ்வின் வராமல் ஸ்ரீயோடு படுக்கச் சென்றாள்..
 
அதிகாலையில் கோகிலா வந்து மகளை எழுப்பியவர் குளித்து பால்காய்ச்ச வரச் சொல்ல ஸ்ருதியோ அஸ்வினை பார்க்க விரைந்திருந்தாள்..  அங்கு கட்டிலில் ஸ்ரீயை நெஞ்சோடு அணைத்தபடி படுத்திருந்தவன் ஸ்ருதியை பார்க்கவும் எழுந்தமர்ந்தான்..
 
மாமா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும்..??”
 
அவன் வாயை திறக்கவில்லை.. ச்சே ஸ்ருதி இந்த ஹிட்லர் ரொம்பத்தான் பண்றாரு..ம்ம் வாயவிட்டுறாத.. மாமா அம்மா அப்பாக்கு இங்க ஸ்ரீயோட இருக்கத்தான் பிரியம் போல நான்தான் புரிஞ்சுக்காம பேசிட்டேன்.. நாங்க இங்கயே இருக்கோம்..
 
ஸ்ரீக்குட்டி அவளை பார்த்து சிரித்து வைக்க இவளுக்கு அவனை தூக்க கை துறுதுறுத்தது.. அதை அறிந்தோ என்னவோ குழந்தையை இன்னும் நெஞ்சோடு இறுக்கியவன்,” ஒன்னும் தேவையில்ல நீங்க தனியாவே இருந்துக்கோங்க.. நீ இங்க இருந்தா நான் உன்கிட்ட பேசாதநடக்காதஉட்காரதன்னு ஆர்டர் போடனும் நீயும் என்கிட்ட சொல்லுங்க எசமான்னு கைகட்டி வாய் பொத்தி நிக்கனும் எதுவும் தேவையில்ல..
 
ப்பா அவ்வளவு குடிச்சிருந்தாலும் நாம சொன்னத ஒருவார்த்த விடாம சொல்றாரு..
 
அப்புறம் என்ன சொன்ன நான் உங்கவீட்டு மாப்பிள்ள இல்ல அதானே.. கண்டிப்பா நான் மாப்பிள்ள இல்ல.. ஸ்ரீயோட அப்பா மட்டும்தான் அந்த உறவே போதும்.. அதோட நீ இனிமேல் குழந்தையை ரொம்ப தூக்காத நாங்களே பார்த்துக்குறோம்..அப்புறம் நீங்க போயிட்டா அவன் ரொம்ப ஏங்கிருவான்.. நீ நீயாவே இரு நான் இனி உன்விசயத்தில தலையிட மாட்டேன்..
 
சட்டென ஸ்ருதிக்கு கண்ணீர் கரகரவென வடிந்தது.. நாம பேசினது இவங்கள இந்தளவுக்கு பாதிச்சிருச்சா.. அதுக்காக.. அதுக்காக இவர் எப்படி என்னை ஸ்ரீய தூக்கக் கூடாதுன்னு சொல்வாரு.. அதுக்கு இவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு.. அவனிடம் வேகமாக சென்றவள் குழந்தையை பறிக்க முயல அவனோ குழந்தையை மறுபக்கம் தூக்க இவள் தடுமாறி மொத்தமாக அவன் மேல் விழுந்திருந்தாள்..
 
ஏய் பேசாம எழுந்து போடி.. நான் இருக்க கோபத்துக்கு என்ன செய்வேன்னு தெரியாது.. அவளை விலக்கிவிட்டு பொம்பளபிள்ளைக்கு அடக்க ஒடுக்கம் வேணாம் ஒரு ஆம்பளய போய் தொட்டுட்டு.. போடி அடங்காப்பிடாரி..
 
அப்படியிருந்தும்  ஸ்ரீயை அவனிடமிருந்து பறித்தவள்.. ஹலோ.. நைட் நான் பேசினது எல்லாம் நியாபகம் இருந்துச்சே.. நான் போடி வாடின்னு கூப்பிடாதிங்கன்னு சொன்னேன்ல.. அது மட்டும் நியாபகம் இல்லையா.. அப்புறம் ஆம்பள மேல விழுறனா.. நைட் நீங்க என்மேல விழுந்திங்களே அது நியாபகம் இல்லையா.. நைட் குடிச்சிட்டு வந்தவர அப்படியே தோட்டத்துல தூங்க விட்டிருக்கனும்.. பாவம்னு உள்ள கூட்டிட்டு வந்து படுக்கச் சொன்னேன்ல இந்த திட்டு எனக்கு ரொம்ப தேவை மாமா…
 
அவளை கையெடுத்து கும்பிட்டவன்,” ஆத்தா பரதேவதை உன்கிட்ட பேசுற மூடு எனக்கு இப்ப இல்ல வெளிய போ..” வெளியில் தள்ளி கதவை தாளிட்டவன் அப்படியே கட்டிலில் படுத்தான்..ஏனோ அவனுக்கு எல்லாவற்றின் மேலும் ஒரே வெறுப்பாய் இருந்தது..
 
அன்று இரவு பலகோடி மதிப்புள்ள பிராஜக்ட் இவர்களுக்கு கிடைத்திருக்க அதற்காகத்தான் ஒரு பெரிய பார்ட்டி.. வேறு சில கம்பெனிகளும் அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள அவர்களோ இவனிடம் நன்றாக பேசிவிட்டு அவன் முதுகுக்கு பின்னால்
 
இவன் பொண்டாட்டி இவனை வேண்டாம்னுதான் பெத்த குழந்தையை விட்டுட்டு வேற ஆளோட ஓடிப்போனா..என்னாச்சோ ஏதாச்சோ கார் ஆக்சிடென்ட் ஆச்சு.. அந்த குழந்தைக்கூட இவனுக்கு பொறந்ததான்னு தெரியல.. எதனால இந்த பொண்ணு ஓடிப்போச்சுன்னும் தெரியல.. ஒருவேளை இவன் ஆம்பளையே இல்லையே.. இந்த சம்பாத்தியத்தை வைச்சு என்ன பண்ண … பணம் மட்டும் ஒருத்தனுக்கு போதுமா.. அவனை கேலி பேச அவன் நெஞ்சு கொதிக்க ஆரம்பித்தது.. அவர்களோடு சண்டையிட மனது துடித்தாலும் எத்தனை பேரிடம் சண்டையிடுவது.. அந்த கோபத்தில்தான் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தான்.. அவர்கள் சொன்னது போல இந்த பணத்தை மட்டும் வைத்து என்ன பண்ண.. மனசுக்கு நிம்மதி இல்லாம.. அப்படியே அவன் தலைக்குள் ஏதோ செய்வது போலிருக்க தலையை பிடித்தபடி அப்படியே அமர்ந்தான்..
 
அறைக்கு வெளியே அங்கேயே ஸ்ருதி நின்றிருக்க அவளால் அஸ்வினின் செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. தன்னை யாரும் இந்த அளவுக்கு அவமானப் படுத்தியதும் இல்லை.. அப்படியே நின்றவளை முதுகில் ஒரு அடிப்போட்டு சுயநினைவுக்கு வரவைத்த கோகிலா.. ஏய் உன்னை எழுப்பிவிட்டு எவ்வளவு நேரம் போ போய் குளி இன்னும் அரைமணி நேரத்தில பால்காய்ச்சனும்..
 
ஸ்ரீயை வாங்கி கொண்டு அவளை அறைக்கு அனுப்பியவர் பேரனை கொஞ்சியபடி வேறு வேலை பார்க்க போனார்.. இயந்திரம் போல குளித்து உடை மாற்றி வந்தவள் கோகிலாவோடு கிளம்ப அஸ்வின் வீடு இருந்த தெருவிலேயே ஒரு பத்து வீடுகள் தள்ளி வீடு பிடித்திருந்தான்.. தனி வீடு மூன்று பெட்ரூம்கள் மாடியில் ஒரு அறை பால்கனியோடு இருந்தது.. சுற்றிலும் தோட்டம் என பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.. கற்பகமும் வந்திருந்தார் பாலை காய்ச்சி முடித்தவர்கள் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அலுவலகத்திற்கு கிளம்பி அஸ்வினும் வந்திருந்தான்..
 
மாமா வீடு பிடிச்சிருக்கா.. டைம் இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் பெரிய வீடா பிடிச்சிருக்கலாம்..
 
என்ன மாப்பிள இப்படி சொல்றிங்க.. நாங்க மூனு பேர்தானே.. இதுவே அதிகம்தான்.. அப்புறம் அட்வான்ஸ் எவ்வளவுன்னு சொன்னிங்கனா நான் குடுத்துருவேன்..
 
பரவால்ல மாமா இருக்கட்டும் யார் குடுத்தா என்ன.. ??” அவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப ஸ்ருதி தலைநிமிர்ந்து அவனை பார்க்கவில்லை.. அவனும் அவளிடம் சொல்லிக் கொள்ளவில்லை..
 
மேலும் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து தாய்க்கு உதவியாக வீட்டை ஒழுங்கு படுத்தியவள் மாடியில் இருந்த அறையை தனக்கென்று எடுத்துக் கொண்டாள்.. ஸ்ரீயை பார்க்க கற்பகத்தை பார்க்கவென ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது அங்கும் இங்கும் நடக்க இப்போதுதான் தாய் எதற்காக சொன்னார் என்பதும் அவளுக்கு தெரிந்தது..
 
நாளை கல்லூரிக்கு கிளம்புவதாக முடிவு செய்தவள் அன்று முழுவதும் ஸ்ரீக்குட்டியோடுதான் பொழுதை போக்கினாள்..
 
அன்று இரவு மணி ஏழிருக்கும் அஸ்வின் வீட்டிற்கு வந்தவன் வீட்டில் கற்பகமும் கோகிலாவும் இருக்க ஸ்ரீயை காணவில்லை.. என்ன கண்ணா சீக்கிரம் வந்திட்ட..??”
 
ஒன்பதுமணிக்கு ஒரு மீட்டிங் இருக்குமா அதுக்கு ஒரு முக்கியமான பைல இங்க விட்டுட்டேன் அதான் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.. நைட் நான் வரமாட்டேன்மா நீங்க படுத்துக்கோங்க..
 
கற்பகமோ,” அப்ப நீ போகும் போது நம்ம ஸ்ருதிய அவ ஹாஸ்டல்ல விட்டுட்டு போப்பா அவ கிளம்பிட்டு இருந்தா .. இந்நேரத்துல பஸ்ல போகாம உன்கூட போனா கொஞ்சம் பயமில்லாம இருக்கும்ல..
 
மாமா எங்கத்த..??”
 
அவங்க புதுக்கோட்டைக்கு போயிருக்காங்க மாப்பிள்ள..
 
ம்ம்ம் கிளம்பச் சொல்லுங்க.. அவன் மாடியேறி போனவன் சில போன்கால்களை பேசி முடித்து கிளம்பி வர அரைமணி நேரமாயிற்று..
 
அங்கு சென்றவன் காரை விட்டு இறங்காமல் ஹாரனை மட்டும் அடிக்க ஸ்ருதி ஒரு பேகோடு ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வந்தாள்.. கற்பகமும் கோகிலாவும் கூடவே வர ஸ்ரீயோ ஸ்ருதியை விட்டு வரமாட்டேன் என ஒரே அடம், அழுகை அவனை சமாதானப்படுத்தி கோகிலாவிடம் கொடுப்பதற்குள் இவளுக்கு அழுகையே வந்திருந்தது.
 
ஏய் லூசு நீயேன் அழர இன்னும் ரெண்டு மாசம்தானே அப்புறமா காலேஜே முடிஞ்சிரும் அப்புறம் வந்து தூக்கி வைச்சிக்கோ.. கோகிலா மகளை சமாதானப்படுத்த,
 
இது எங்க போய் முடிய போகுதோ பெருமூச்சுவிட்ட அஸ்வின் ஸ்ருதியை திட்ட வாய்திறந்தவன் அப்படியே அமைதியாகிவிட்டான்..
 
கொஞ்சநேரம் இருவரும் பேசாமல் வர ஸ்ருதியை லேசாக கவனித்தவன் அவள் முகம் சோர்ந்து போய் இருக்க காப்பி ஷாப்பை பார்த்து காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று இரண்டு காப்பி வாங்கி வந்தான்.. ஸ்ருதியிடம் ஒன்று கொடுத்தவன்,” என்ன உடம்பு சரியில்லையா..??”
 
ஆமா இல்லையென தலையை எல்லாப்பக்கமும் ஆட்டி வைக்க அவளை தலையில் கைவைத்து அப்படியே பிடித்தவன் தாடையில் ஒரு விரலை வைத்து,” என்ன பண்ணுது.?”.
 
ஒன்னுமில்ல மாமா..
 
 அவள் கண்களை பார்த்தவன் காப்பி அருந்தி முடிக்கவும் காரை கிளப்ப சற்று நேரத்தில் ஸ்ருதி கண்மூடி உறங்கிருந்தாள்.. இவ இப்படியெல்லாம் அமைதியா இருக்க மாட்டாளே  அவளை திரும்பி பார்க்க தலையில் கைவைத்து அழுத்தியபடி கண்களை இறுக்கியிருந்தாள்.. அந்த நெடுஞ்சாலையின் ஒரு ஓரத்தில் காரை நிறுத்தியவன் அவளருகில் சென்று அன்று போல இன்றும் மிருதுவாக அவள் நெற்றியை பிடித்துவிட அப்படியே இறுக்கம் தளர்ந்து தூக்கத்தில் அவன் மடியிலேயே படுத்துவிட்டாள்.. அவள் நெற்றியை மட்டும் வருடியபடி இருந்த கை கொஞ்சம் கொஞ்சமாக புருவம் , கண்கள், கன்னம் என வருடத்துவங்கியது..!!
 
                                                   இனி…………..????.

Advertisement