Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
                  
                          அத்தியாயம்  –  5
 
அஸ்வின் ஸ்ருதியையும் ஸ்ரீக்குட்டியையும் பார்த்துக் கொண்டிருக்க தன்னை அறியாமல் அவன் கண்கள் ஸ்ருதியையும் சேர்த்து ரசித்திருந்தது.. குழந்தையோடு குழந்தையாக அவளும் தூங்கிக் கொண்டிருக்க ஸ்ரீயும் அவளை உரிமையாக அணைத்திருந்தான்.. அதோடு சேர்த்து ஸ்ரீக்குட்டியை இனி தாய்பாசத்துக்கு ஏங்காத அளவுக்கு எப்படி வளர்க்க போறோம் என்று கவலையும் வந்திருந்தது.. இருவரையும் அப்படியே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் தோளில் ஒரு கரம்.. திரும்பி பார்க்க கற்பகம் நின்றிருந்தார்..
 
என்ன கண்ணா..??”
 
அவர் கையை பிடித்து தன் நெஞ்சோடு அணைத்தவன்,” ஒன்னுமில்லமா.. சும்மா குட்டியை பார்க்கலாம்னு வந்தேன்.. எப்பவும் இந்நேரத்துக்கு முழிச்சிருவான்ல.. இப்ப நல்ல தூக்கத்தில இருக்கான்..
 
ஆமாப்பா.. நைட் ரொம்ப நேரம் அவன் சித்தியோட விளையாடிட்டு இருந்தான்.. கொஞ்சமா லேசா தவக்க முயற்சி பண்றான்.. இல்லனா நெஞ்சால தவந்து தவந்து போக கத்துக்கிட்டான்ல அதான் ஒரு இடத்தில இருக்கிறதில்ல.. ரெண்டும் ஒரே ஆட்டம்தான்..”
 
இவர்கள் பேச்சு சத்தத்தில் லேசாக தூக்கம் கலைந்த ஸ்ருதி திரும்பி நேராக படுக்க ஸ்ரீக்குட்டிக்கும் அரைத்தூக்கம்தான் போல.. அப்பாவின் மேல் படுப்பது போல ஸ்ருதியின் மேலேறி படுத்து தன் விட்ட தூக்கத்தை தொடர ஸ்ருதியும் அவனை அணைத்தபடி தூங்கினாள்..
 
அதை பார்த்த கற்பகத்திற்கும் அஸ்வினுக்கும் சிரிப்பு.. கற்பகம் தன் கலங்கிய கண்களை முந்தானையால் துடைக்க அவரை அணைத்தபடி ஹாலுக்கு கூட்டிவந்தவன்,
 
 அம்மா ஒரு நல்ல காப்பி கிடைக்குமா..??”
 
இதோ வர்றேன்பா..
 
ஸ்ருதி வந்திருந்த இரண்டு நாட்கள் கோகிலா தன் மகளோடு இருந்தவர் அவளை ஸ்ரீக்கு துணை வைத்துவிட்டு தன் கணவரை பார்க்க கிளம்பியிருந்தார்.. ஏற்கனவே அவருக்கு சுகர் பிராபளம் இருக்க சாப்பாட்டு பிரச்சனைதான் ஹோட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக் கொள்ளாது.. பேரனையும் விட்டுச் செல்ல மனதில்லை.. டிரான்பரும் இன்னும் கிடைக்காமல் இருக்க ஸ்ருதி இங்கு இருக்கும் நாட்களிலாவது அங்கு சென்று வரலாம் என கிளம்பியிருந்தார்..
 
முதலிரண்டு நாட்கள் அம்மாவோடும் ஸ்ரீக்குட்டியோடும் பொழுதை போக்கியவளுக்கு கோகிலா ஊருக்கு போகவும் பொழுதை நெட்டித் தள்ள வேண்டியிருந்தது.. ஸ்ரீ விழித்திருக்கும் நேரங்கள் அவள் பார்த்துக் கொண்டாலும் மற்ற நேரங்களை போனில் தன் தோழிகளோடு கழித்தாள்..
 
இரண்டு மூன்று முறை அஸ்வினும் ஸ்ருதியும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டாலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. இருவருக்குமே கோபம் குறையவில்லை.. சாப்பிடும் போது கற்பகம் இருவரையும் பேச்சில் இழுத்தாலும் அவன் காதிற்விழுந்தாற் போல காட்டிக் கொள்ள மாட்டான்.. அவளுக்கு அப்போதுதான் முக்கிய போன் வந்திருக்கும்.. அஸ்வினிடம் மட்டும்தான் பேச மாட்டாளே தவிர அவன் தலை மறைந்ததும் கற்பகத்தோடு அரட்டையில் இறங்கிவிடுவாள்..
 
கல்லூரி கலாட்டாக்களை எடுத்துவிட அவருக்கு சிரித்து சிரித்தே வயிறுவலி வந்துவிடும் .. கள்ளமில்லாமல் தன்னுடன் பேசும் ஸ்ருதியை அவருக்கு ரொம்பவே பிடித்தது.. தன் கணவர் இருந்தவரை இப்படிதான் அவர்களுக்கான நேரத்தில் அன்று நடந்த நிகழ்வுகளை அவரிடம் பகிராமல் இருக்க மாட்டார்.. கற்பகம் அவர் பேச்சை ரசித்தபடி இருப்பார்..
 
அவருக்கு பிறகு அஸ்வினும் தன்னை போலவே இருந்துவிட ஸ்வேதாவும் அவரிடம் அதிகம் பேசமாட்டாள்.. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க இத்தனை வருடங்களுக்கு பிறகு தன் கணவனை போல அனைத்தும் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஜீவன்.. கண்களை உருட்டி கன்னம் குழிவிழ அவள் பேசும் அழகே தனி.. இந்த ஸ்ரீக்குட்டியும் அவளிடம் பசைபோட்டு ஒட்டியது போல ஒட்டிக் கொள்ள அவளும் அவனை கீழிறக்க மாட்டாள்..
 
இரண்டு மூன் று நாட்கள் சென்றிருக்கும் அஸ்வின் அன்று சற்று சீக்கிரமாக கிளம்பியிருக்க வீட்டிற்கு வரும்போது மணி எட்டிருக்கும்.. காரை நிறுத்தி வீட்டுக்குள் வந்தவன் உள்ளே தன் தாயையும் ஸ்ரீயையும் காணாமல் ஒவ்வொரு ரூமாக பார்த்து எங்கும் இல்லாமல் ஒருவேளை மாடியில இருக்காங்களோ.. படியேறி வந்தவன் அங்கு கண்ட காட்சியில் அப்படியே ரசித்து நின்றிருந்தான்..
 
கற்பகம் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருக்க அவர் மடியில் தலைவைத்து ஸ்ருதி படுத்திருந்தாள்.. அவள் நெஞ்சில் அமர்ந்தபடி ஸ்ரீக்குட்டி.. கற்பகம் ஸ்ருதியின் நெற்றியை பிடித்தபடி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அதை கேட்டு ம்ம்ம் கொட்டியபடி அவ்வப்போது ஸ்ரீயின் வயிற்றில் வாய்வைத்து பூவென ஊதிக் கொண்டிருக்க ஸ்ரீக்குட்டிக்கு சிரிப்பு தாங்கவில்லை.. ஏனோ ஓவியம் போல  அந்த காட்சி அவன் நெஞ்சில் பதிந்தது..
 
 
அவர்களோடு தானும் சேர்ந்திருக்க அவன் மனம் உந்தியதில் தன்னை அறியாமல் இரண்டெட்டு எடுத்து வைத்திருந்தான்..
 
தன் மகனை பார்க்கவும் ,”வா கண்ணா.. ஸ்ருதி தலையை தூக்கி பார்த்தவள் அஸ்வினை காணவும் எழுந்து அமர்ந்து ஸ்ரீயை கற்பகத்திடம் கொடுத்துவிட்டு,
 
 அத்த அம்மாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வர்றேன்..
 
தலைவலி இப்ப எப்டிடாம்மா இருக்கு..??”
 
இப்ப கொஞ்சம் பரவால்லத்த.. சற்று தள்ளி நடக்க அஸ்வினுக்கு ஏதோ போல இருந்தது..
 
 தாயிடமிருந்து தன் மகனை வாங்கியவன் கீழே இறங்கி வர கற்பகமும் பின்னாலே வந்திருந்தார்..
 
என்னப்பா இன்னைக்கு சீக்கிரமே வந்துட்ட..??”
 
வேலை கொஞ்சம் சீக்கிரமாவே முடிஞ்சிருச்சும்மா..
 
சாப்பிடுறியாப்பா.. இந்த ஸ்ருதி பொண்ணப்பாரேன்.. இத்தனை நாளு எப்படி பட்டாம்பூச்சி மாதிரி சுத்திக்கிட்டு இருந்திச்சு.. இன்னைக்கு தலைவலின்னு அப்படியே சோர்ந்து போய் இன்னைக்கு பூராவும் படுத்தே இருந்திச்சு.. நான்தான் காத்தாட மாடிக்கு கூட்டிட்டு போனேன்.. அண்ணி வரவும் இந்த தலைவலி அடிக்கடி வருதாம் டாக்டர்கிட்ட போய் செக் பண்ணச் சொல்லனும்.. அவர் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தார்..
 
தன் மகனை கொஞ்சியபடியே கவனத்தை தாயின் பேச்சில் வைத்திருந்தவன் உடம்பு சரியில்லையா அதான் இவ்வளவு அமைதியா.. இல்லனதான் ஒரே ஆட்டம்தானே போடுவா.. தன்னிடம் பேசாவிட்டாலும் இந்த இரண்டு நாட்களாக அவளும் ஸ்ரீயும் என்ன ஆட்டம்..!! அவளுக்கு நடக்கவே தெரியாதோ என தோன்றும் வகையில் ஒரே ஓட்டம்தான், ஆட்டம்தான் செல்போனில் ஏதாவது பாட்டை வைத்து ஸ்ரீயோடு சேர்த்து டிக்டாக் செய்வது,  ஆடுவது என ஏதாவது செய்து கொண்டேதான் இருப்பாள்..
 
அஸ்வின் சாப்பிட்டு முடிக்கவும் ஸ்ரீக்கு சற்று நேரத்திலேயே தூக்கம் வந்திருக்க அவனை தன் அறையில் படுக்க வைத்தவன் கற்பகம் டைனிங் ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்து, என்னமா படுக்கல..??”
 
இல்லபா இன்னும் ஸ்ருதி வரலை.. அவளுக்கு டிபன் வைச்சிட்டு நான் படுக்குறேன்.. முழங்கால் வலிக்கிது இல்லனா மேல போய் கேட்டுட்டு வந்திருப்பேன்..
 
ம்மா அவ என்ன சின்னப்புள்ளையா நீங்க போங்க நான் சாப்பிட சொல்றேன்.. அவரை படுக்க அனுப்பியவன் மாடிக்கு செல்ல ஸ்ருதி ஊஞ்சலில் படுத்திருந்தாள்..
 
அங்கு பாதிவரை சீட்போடப்பட்டு அழகுக்காக சில பூக்கன்றுகள் வைத்திருந்தான்.. டென்சனான நேரங்களில் இந்த இடத்திற்கு வந்தால் ரம்யமாக இருக்கும் மெல்ல மெல்ல டென்சன் குறைவதை உணர்ந்திருக்கிறான்..
 
ஸ்ருதி கண்மூடி இருக்கவும் உறங்குகிறாளோ புருவத்தை அவ்வப்போது சுழித்தாள்.. இன்னும் தலைவலி இருக்கோ..
 
பனியில படுத்தா இன்னும்தானே அதிகமாகும்.. மெதுவான குரலில் ஸ்ருதி.. ஸ்ருதி…
 
ம்கூம் அசைவே இல்லை.. லேசாக கன்னத்தை தட்டி ஸ்ருதி கீழ வந்து படு..?”
 
ப்பச் போங்கப்பா..” தட்டிய தன் கையை பிடித்தவள் அவள் நெற்றியில் வைக்க,,
 
ஒருகணம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. தலை ரொம்ப வலிக்குதோ அவள் உறக்கம் கலையாதவாறு ஊஞ்சலில் அவள் அருகில் அமர்ந்து அவள் நெற்றியை பிடித்துவிடத் துவங்கினான்..
 
மிருதுவாக அவள் நெற்றியை பிடித்துவிட சுழித்திருந்த புருவத்தை நீவிவிட அவள் மெல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..
 
நல்ல ஆரஞ்சுநிற டாப்பும் கருப்பு நிற பேண்ட்டும் போட்டிருந்தாள்.. அவர்கள் மட்டும் இருந்ததால் ஷால் போடாமல் இருக்க அவள் ஒரு அழகான பெண் என்பதை அந்த உடை உரக்கச் சொல்லியது.. அவள் உறங்கியிருந்தாலும் அவன் தன் கையை விலக்கிக் கொள்ளவில்லை.. நெற்றியை வருடியபடியே அவளை பார்த்தபடி இருக்க எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியவில்லை அவனும் அப்படியே கண்ணயர்ந்திருந்தான்.. அந்த ஏரியா கூர்கா கொடுத்த விசில் சத்தத்தில் விழித்தவன் மணியை பார்க்க மணி பனிரெண்டாக பத்து நிமிடங்கள் இருந்தது..
 
நாம வந்து ரெண்டுமணி நேரமாச்சா.. எழுந்து ஸ்ருதியை எழுப்ப முடியவில்லை.. வா வந்து கீழ படு..
 
 அவள் தூக்க கலக்கத்தில் கையை நீட்டி, ப்பா..தூக்குங்க..
 
 இப்போது அஸ்வின் பேவென விழித்திருந்தான்..இவ தெரிஞ்சு சொல்றாளா இல்ல அவங்க அப்பா செல்லமா.. முழிச்சிருந்தா பேட்ட ரௌடி மாதிரி ஒரு பொம்பள டாண் மாதிரி இருக்கா.. தூங்கிட்டா சின்ன குழந்தையா மாறிருறா..இவ எப்ப வளருவா யாராவது அட்வைஸ் சொன்னாலும் பிடிக்க மாட்டேங்கிது.. மனது யோசித்துக் கொண்டிருந்தாலும் கைகள் அவளை பூபோல அள்ளியிருந்தது..
 
அவள் அவன் மார்பில் முகம் புதைத்திருக்க ஒருகை அவன் கழுத்தை வளைத்திருந்தது.. ஒரு பூங்கொத்து போல இருந்தவளை அறையில் படுக்க வைத்து நிமிர்ந்தவன்  அப்படியே அதிர்ச்சியில் நின்றிருந்தான்..  லேசாக விலகியிருந்த சுடிதார் டாப் அவள் இடையையும் வயிற்றையும் பளிச்சென எடுத்துக்காட்ட அவன் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க ஆரம்பித்தது.. அவள் போட்டிருந்த ஆரஞ்சு நிற டாப் இள மஞ்சளில் இருந்த அவள் இடையை இன்னும் தூக்கலாக எடுத்துக்காட்டியது..
 
 ஒருவருடத்திற்கு முன் ஒரு பெண்ணை முழுவதும் அறிந்தவன்தான்.. அதைவிட எல்லா படங்களிலும் இதுபோல நிறைய சீன்களை பார்த்திருந்தாலும் இன்றன்னவோ அவனுக்கு அந்த இடத்தைவிட்டு கண்ணை எடுக்க முடியவில்லை.. அவள் திரும்பி படுக்க சட்டென தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் போர்வையை போர்த்திவிட்டு தன் அறைக்குள் வேகமாக நுழைந்து கதவை தாளிட்டிருந்தான்..
 
காலையில் கண்விழித்த ஸ்ருதிக்கு இரவு நடந்தெதுவும் நியாபகத்திற்கு வரவில்லை.. தலைவலி விட்டதே பெரிதாக தெரிய எப்போதும் உள்ள உற்சாகம் போல ஸ்ரீக்குட்டியை தூக்கிவைத்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தாள்.. சற்று நேரம் கழித்து அலுவலகத்திற்கு கிளம்பி வந்த அஸ்வின் டைனிங்டேபிளில் சாப்பிட்டு கொண்டிருக்க ஸ்ருதி அவனை கண்டு கொள்ளாமல் தன் தட்டில் இருந்த சாப்பாட்டை கூட கவனிக்காமல் போனை எடுத்து தன் தோழிகளுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்..,
 
நைட் நம்மள என்ன பாடு படுத்திட்டு இந்த ராட்சசி என்ன பண்ணிட்டு இருக்கா..அந்த போனை வெடுக்கென பறித்தவன்,” உனக்கெல்லாம் அறிவே இல்லையா நைட்டெல்லாம் தலைவலின்னு சொல்லிட்டு இப்ப போனும் கையுமா இருக்க.. இடியட்..
 
திடிரென இப்படி போனை பறித்து திட்டுவான் என எதிர்பார்க்காதவள் மாமா என பல்லை கடித்து சண்டைக்கு தயாராகிவிட்டாள்..
 
இப்ப எதுக்கு என்னோட போனை பறிச்சிங்க.. இதென்ன பழக்கம் ஒருத்தவங்க போனை பறிக்கிறது.. குடுங்க எனக்கு வாட்ஸ் அப் பார்க்கனும்..
 
ஒன்னும் தேவையில்ல.. சாப்பிடு…  சாப்பிட்டு போய் வேலை இருந்தா பாரு.. நீயெல்லாம் எப்ப வளருவ.. அம்மா இவளுக்கு ஏதாவது வீட்டுவேலை கத்துக்குடுங்கம்மா..
 
கற்பகத்திற்கு ஆச்சர்யம் தன் மகனா இப்படி பேசுறான்னு..!!
 
ஒன்னும் தேவையில்ல எனக்கு ஆர்டர் போடுற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சிக்காதிங்க.. ஒழுங்கா போனை குடுங்க.. அத்த என்னோட போனை குடுக்க சொல்லுங்கத்த..
 
முடியாது உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்கோ.. போனை ஸ்விட்ச் ஆப் செய்து தன் பையில் போட்டவன் தன் போக்கில் சாப்பிட ஸ்ருதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. இவரென்ன லூசா.. ??
 
கண்ணா பாவம் சின்னப்புள்ள.. குடு போன.. ரொம்பநேரம் பார்க்காம நான் பார்த்துக்குறேன்..
 
ஆமா சின்னப்புள்ள தொட்டில கட்டி  தாலாட்டுங்க.. அவங்க வீட்லதான் செல்லம் கொடுத்து இப்படி குட்டிச்சுவராக்கி வைச்சிருக்காங்கன்னா நீங்களாவது கொஞ்சம் ஸ்டிக்டா இருங்கம்மா.. கைகழுவியவன் பல்லை கடித்து ஏதாவது கோபத்தில் அவனை மரியாதை இல்லாமல் பேசிவிடுவமோ என தன் வாயை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த ஸ்ருதியை கண்டு காணாமல் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்…
 
தஸ்ஸுபுஸ்ஸென்று மூச்சை விட்டவள் இவரென்ன பெரிய ஹிட்லரா.. அவர் சொல்படிதான் நாம கேட்கனுமா.. இந்த ஸ்ருதிய பத்தி இவருக்கு இன்னும் தெரியல.. பாவம் வயசில பெரியவருன்னு கொஞ்சம் பேசாம இருந்தா ரொம்பத்தான் பண்றாரு.. மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்தவள்.. சாப்பிடாமலே கைகழுவியிருந்தாள். அன்று முழுவதும் அவன் மேல் கோபமாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தாள்..
 
அன்று இரவு எப்போதும் போல அஸ்வின் வேலை முடிந்துவர ஹால் சோபாவில் படுத்து கற்பகத்தின் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தாள்..
 
அஸ்வின் கற்பகத்தை கோபமாக பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அவளுடைய போனை டேபிளில் வைத்துவிட்டு தன் அறைக்கு செல்ல பின்னாலே கற்கமும் சென்றிருந்தார்..
 
பாவம்டா அந்த பொண்ணு உன்மேல கோபத்துல காலையிலயும் மதியமும் சாப்பிடவே இல்லை.. அதான் இப்ப இப்பதான் என்னோட போனை கொடுத்தேன்.. நீ கோவிச்சிக்காத..
 
அஸ்வினுக்கு சிரிப்பு.. தன் தாயை அணைத்தவன்.. ம்ம் விடுங்கம்மா.. ரொம்ப தலைவலியால அவதிப்பட்டாலேன்னுதான் போனை வாங்கிட்டு போனேன்.. கேடி அவளாவது சொல்பேச்சு கேட்கிறதாவது.. இவள எப்படிம்மா வீட்ல கட்டி மேய்கிறாங்க.. நம்ம ஸ்ரீயும் வளர்ந்தா இப்படிதான் சேட்டை பண்ணுவானா…உண்மைய சொல்லுங்க இப்பதான் போன வாங்கினாளா..??”
 
அது.. அது வந்து..
 
சரி விடுங்க.. எனக்கு பசிக்கிது டிபன் எடுத்து வைங்கம்மா..??”
 
இதோ போறேன்பா..வேகமாக வெளியில் வந்திருந்தார்..
 
தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீயை பார்த்துவிட்டு சாப்பிட வந்தவன் ஸ்ருதியை முறைக்க அவளாவது அவனை கண்டு கொள்வதாவது.. அவள் கேம்ஸிலேயே மூழ்கிவிட்டாள்.. அன்றிலிருந்து அவனை முறைத்துக் கொண்டு திரிந்தாள்.. ஸ்ரீயைக்கூட அவனை தூக்கவிடாமல் அவளே கையில் வைத்திருந்தாள்.. அவளுடைய சிறுபிள்ளை தனத்தில் அவனுக்கு சிரிப்பு எவ்வளவு தூரம் போகிறாள் என நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டான்.. லீவ்விட்டு ஏழுநாட்கள் முடிந்துவிட்டது கல்லூரி திறக்க இன்னும் மூன்றுநாட்களே இருந்தது..
 
அன்று அஸ்வின் காரை நிறுத்திவிட்டு இறங்கிவர தோட்டத்தில் ஸ்ருதியின் பேச்சுக்குரல்.. இவ இருட்டுல இன்னேரத்துல யார்கிட்ட பேசிட்டு இருக்கா.. பூச்சிகள் எதாவது திரியுமே அவளை நோக்கி வர,
 
தன் தாயிடம்தான் பேசிக் கொண்டிருந்தாள்.. இல்லை திட்டிக் கொண்டிருந்தாள்.. நீங்க என்னமா நினைச்சிட்டு இருக்கிங்க..  அவர் சொன்னதுக்காக வேற வீடு பார்க்க மாட்டிங்களா.. இந்த வீட்லயே என்னால இருக்க முடியாது.. வேணும்னா இந்த தெருவிலயே ஒரு வீட்ட பாருங்க நம்ம ஸ்ரீக்குட்டிய நாமளே வைச்சிக்கலாம்..?”
 
ஏய் மாப்பிள்ளதான்டி அப்பாவுக்கு டிரான்ஸ்பர்க்கு ஹெல்ப் செஞ்சிருக்காரு.. அங்கதான் தங்கனும் சொல்லிட்டாராம்.. அப்பா முடிவே பண்ணிட்டாங்க..”
 
நீங்க இப்படி சொன்னிங்க நான் இங்க வரவே மாட்டேன்.. மதுரையிலயே தங்கிருவேன் பார்த்துக்கோங்க..??”
 
மாப்பிள்ள சொல்லும்போது நாங்க எப்படி மறுத்து பேசுறது.. மரியாதையா பேசி பழகு..??”
 
 மாப்பிள்ள கீப்பிள்ளைன்னு சொன்னிங்க எனக்கு செம கோபம் வரும் பார்த்துக்கோங்க.. மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை..
 
வாயை அடக்கு ஸ்ருதி அவங்க கேட்டா கோவிச்சுக்க போறாங்க..
 
 அவர் ஒன்னும் இங்க இல்லை.. நான் தோட்டத்திலதான் பேசுறேன்.. ம்மா நான் சொல்றத கேளுங்க.. என்னால இங்க இருக்க முடியாது.. நீங்க போனை வைங்க நான் அப்பாட்ட பேசுறேன்..??”
 
போனை வைத்தவள்,” ஹிட்லர் ஒருத்தர வீட்ல வைச்சிட்டு நானும் இங்க இருக்கனுமாம்.. சும்மாவே போன் பேசாதன்னு ஆர்டர் போட்டாரு.. இங்கயே தங்கினா பேசாத, நடக்காத, உக்காரதன்னு சொல்வாரு.. நாமளும் சொல்லுங்க எஜமான்னு கைகட்டி வாய் பொத்தி கேட்கனுமா.. மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை.. இவர் ஒன்னும் மாப்பிள்ளையெல்லாம் இல்ல.. ஸ்ரீக்கு அப்பா.. அது மட்டும்தான்… அவர் ஆளும் மண்டையும் பாருங்க.. சும்மா சும்மா முறைக்கிறது.. இல்ல வாய திறந்தா திட்டுறது.. சிரிக்கக்கூட காசு கேப்பாரு போல..” படபட பட்டாசாய் பொறிந்தவள் திரும்பி பார்க்க மாமரத்தில் சாய்ந்தபடி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின்…!!!
 
                                                                   இனி…………????

Advertisement