Advertisement

 
 காட்டு ரோஜா என் தோட்டத்தில்
                      
                                                     அத்தியாயம்  –  4
அஸ்வின் ஸ்ருதியை திடிரென காருக்குள் இழுத்து கதவை மூடவும் அவள் இசகுபிசகாக அவன் மேல் மொத்தமாக விழுந்திருந்தாள்.. அவ்வளவு நேரம் நாய் விரட்டியதால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியிருந்தவள் அவன் மார்பில் நேருக்கு நேராக மோதியிருக்க அவளின் படபடப்பு அவன் இதயத்திற்கு தெரிந்தது.. அதிர்ச்சியில் அவன் சட்டையை ஒரு கையால் பிடித்தவள் மறுகையால் அவன் கழுத்தை வளைத்திருந்தாள். இரண்டு நிமிடங்கள்தான் சட்டென தன்னுர்வு பெற்றவள் அவனிடமிருந்து விலகி,
யாரோ தன்னை ஏதோ செய்ய போகிறார்களோ என பயந்து, “டேய் யாருடா நீ..? அறிவு கெட்டவனே, பக்கி , பரதேசி என்னை யாருன்னு நினைச்ச இந்த மதுரையே நான் நில்லுனா நிக்கும்..உக்காருன்னா உக்காரும்..” இருட்டில் கைகளால் துளாவி அவனை அடிக்க முயல ஏற்கனவே அவள் தடுமாறும் போது ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்திருந்தவன் மறுகையால் அவள் கையை பிடித்தபடி உள்விளக்கை போடவும் கையை தூக்கியபடி அதிர்ச்சியில் அப்படியே இருந்தாள்..
வாய் திறந்தபடி ஆவென்றிருக்க,
அவளை கண்களால் எறித்தவன் ,”என்ன..??”
அவள் வாயசைக்க ஒன்றும் வெளியில் வரவில்லை.. மறுபடியும் கோபத்தில்  பல்லை கடித்து ,”என்ன சொன்ன..?”
தேவர்மகன் ரேவதி வாய்ஸில் ,”வெறும் காத்துத்தான் மாமா வருது.. ??”
ஏனோ அவளுடைய அந்த ஹஸ்கி வாய்சிலும் அவளுடைய முகபாவத்திலும் அவனுக்கு லேசாக சிரிப்பு வந்திருந்தது..
 உடலெல்லாம் வியர்வையில் குளித்திருந்தவளுக்கு அந்த ஏசியின் சில்லிப்பு இதமாக இருக்க யாரோ எவரோ என பயந்திருந்தவள் அஸ்வினை பார்க்கவும் சற்று மூச்சை சமன்படுத்தி நிதானத்திற்கு வந்தாள்..  இவர் இப்ப லேசா சிரிச்ச மாதிரி இருந்துச்சே ஒரு வேளை கனவோ.. ஆமா கனவாத்தான் இருக்கும்.. நேர்ல நாம எங்க இவர் சிரிச்சு பார்த்திருக்கோம்..
“ஏம்மாமா இப்படி காருக்குள்ள புடிச்சு இழுத்திங்க..??”
“தப்பு பண்ணிட்டேன்.. நாய் கடிக்கட்டும்னு விட்டிருக்கனும்..”
“ஹாஹாஹா நாயாவது என்னைய கடிக்கிறதாவது.. உண்மைய சொல்லுங்க உங்களுக்கும் நாய்னா பயம்தானே..”
கோபத்தில் பல்லை கடித்தவன் முகத்தில் மாற்றமே இல்லை.. அதே இறுக்கம் அவன் முகத்தில் தென்பட்டது.. அதையும் மீறி வெளியில் இன்னும் அந்த நாய் நிற்கிறதா என எட்டிப்பார்க்க அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்து வளைவில் சூடாக பட்டது..  இப்போதுதான் கவனித்தாள் அவன் கை தன் இடுப்பில் இருப்பதை அவனுக்கு அவள் இடுப்பை பிடித்திருப்பதுகூட தெரியவில்லை.. நாயை காணாமல் சற்று விலகி அமர்ந்தான்..
ஸ்ருதியோ.. அடச்சே இவர் முன்னாடி இப்படி நாய் துரத்தியா என்ட்ரி குடுக்கனும்.
“மாமா நீங்க இங்க என்ன பண்றிங்க..??”
“அத நான் கேட்கனும் நீ இங்க என்ன பண்ற.. கண்டிக்க அம்மா அப்பா பக்கத்தில இல்லைன்னா இப்படித்தான் சுவர் ஏறி குதிப்பியா.. இது யார் வீடு.. ஏற்கனவே ஒருத்தி பண்ணி வைச்ச கொடுமையால மத்தவங்க அனுபவிக்கிற வேதனை பத்தாதா.. நீ வண்டியில மோதி.. இல்லை நாய் கடிபட்டு அதுக்கு வேற உங்க அம்மா அப்பா வேதனை படனுமா..??” அவள் வாயை பிளந்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளின் பார்வையில் தன் கைவிரலை அவள் முகத்தின் முன்னால் சொடுக்க..
 “மாமா.. நீங்க இவ்வளவு நீளமா பேசி இன்னைக்குத்தான் பார்க்கிறேன்..” அவன் நெற்றிக் கண் திறப்பில் கப்பென வாயை மூடியிருந்தாள்..
“நீயென்ன சின்ன பிள்ளையா.. இந்த இடத்தில நான் இல்லாம வேற யாராவது இருந்திருந்தா என்னாகிருக்கும்.. கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. அறிவு இருக்கா..”
என்ன ரொம்பத்தான் திட்றாரு..” நீங்களா இருக்கவும்தான் பேசாம இருக்கேன்.. வேற யாராவத இருந்தா அப்ப தெரியும் இந்த ஸ்ருதி யாருன்னு..??”
அவள் கையை பிடித்து பின்புறம் மடக்கியவன்,” இப்ப காட்டு இந்த ஸ்ருதி யாருன்னு நானும் பார்க்கிறேன்..”
அவன் முகம் அவள் முகத்திற்கு அருகே அவளால் ஒன்றும் செய்ய முடியாதநிலை.. அவள் மனமோ என்ன ஸ்ருதி பேசாம இருக்க அவனை ஓங்கி ஒரு அறை வை எத்தனை பேரை அறைஞ்சிருக்க..
சட்டென அவள் கையைவிட்டவன்,” என்ன வாய்தான் பேசுவியா செயல்ல ஒன்னுமில்ல போல..” தன் போனை எடுத்து தன் மாமனாருக்கு டயல் செய்ய முயல,
அவன் பிடித்த கையை தடவிக் கொண்டிருந்தவள் ஐயோ அப்பாட்ட போட்டுக்குடுக்கப் போறாரா.. எட்டி போனை பறித்து அதை கட் செய்ய அவன் தன் கையை கட்டியபடி பேசாமல் இருந்தான்..,
 இவருக்கென்ன பெரிய சிவாஜிகணேசன்னு நினைப்போ.. கண்ணாலயே மிரட்டுறாரு.. ஸ்ருதி இப்படி ஏடாகூடமா மாட்டிக்கிட்டியே.. இப்ப எப்படி இவர்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறதுன்னு மட்டும் பாரு.. இன்னும் கொஞ்ச நேரம் நாம போகல நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் அந்த மங்கிசொங்கி வார்டன்கிட்ட போய் நம்மள காணோம்னு கம்பிளைண்ட் பண்ணிடுங்க அப்புறம் பிரச்சனை பெரிசாயிரும்..
நல்ல பிள்ளை போல முகத்தை வைத்தவள்,” ஹிஹிஹி அது ஒன்னுமில்ல மாமா.. இன்னைக்கு என் பிரண்டோட பர்த்டே அதான் வார்டனுக்கு தெரியாம செலிபரேட் பண்ணலாம்னு வந்தோம்..” அதற்குள் ஸ்ருதியை காணாத அவள் தோழிகள் காம்பவுண்டில் ஏறி நின்று அவளை அந்த இருட்டுக்குள் காணாமல் பதறி போன் செய்திருந்தனர்..
போனை பார்த்தவள், “மாமா என் பிரண்ட்ஸ் என்னை காணாம தேடுறாங்க.. நான் போறேன்..” காரின் கதவை திறக்கப் போக,
அவளின் கையை பிடித்து தடுத்தவன்,” வா நான் முன்பக்கமா கொண்டு போய் விடுறேன்..?”
“முன்பக்கமா..!! அவனிடமிருந்து கையை விலக்கி கொண்டவள் இரு கையால் அவனை கும்பிட்டு,” தெய்வமே அந்த வார்டன் சும்மாவே என்னை காட்டு காட்டுன்னு காட்டும் இது மட்டும் தெரிஞ்சிச்சு இப்பவே பொட்டிய கட்டி எங்க வீட்டுக்கு போக  வேண்டியதுதான்.. உங்க திசைக்கே ஒரு கும்பிடு நீங்களும் என்னை பார்க்கல.. நானும் உங்கள பார்க்கல ..” அதற்குள் மறுபடி மறுபடி போன் வந்து கொண்டே இருக்க,
வேகமாக காரை விட்டுறங்கி காம்பவுண்டை நோக்கி ஓடியவள்,” வரேன் மாம்ஸ்.. சீ..யூ..லேட்டர்..” தோழிகளை பார்த்து கைகாட்டியவள் ஒருநிமிடத்தில் அந்த கல்லில் கால்வைத்து காம்பவுண்டில் ஏறி திரும்பி காரை பார்க்க அவனும் காரை விட்டிறங்கி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
 வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அவன் உருவம் தெரிய இப்போதுதான் அவளுக்கு அவனோடு மோதியது தன் கையை அவன் பிடித்தது எல்லாம் நியாபகத்திற்கு வந்தது.. அவனுக்கு கைகாட்டியபடி மறுபக்கம் குதித்தவள் தன்னைக் கட்டிக் கொண்டு அழுத தோழிகளை சமாதானப்படுத்தியபடி பின்புறமாக கதவை திறந்துவிட சொல்லி தன் தோழிக்கு போன் செய்தனர்..
ஸ்ருதி உள்ளே குதிக்கும்வரை அப்படியே நின்றிருந்தவன் பின் காரை கிளப்பியிருந்தான்.. அவனுக்கு இன்னும் ஸ்ருதி மேல் கோபம் குறையவில்லை.. இதென்ன பார்க்க இவ்வளவு பெரிய பொண்ணாயிருக்கா.. இவ்வளவு லூட்டி அடிக்கிறா.. ஸ்ருதியின் செயல்களால் கோபம்தான் ஆனால் அவ்வளவு கோபமா என்றால் இல்லை..
அவள் வண்டிக்காரனிடமிருந்து எஸ்கேப் ஆகியது ,நாயிடமிருந்து தன் தோழியை காப்பாற்றியது.. காருக்குள் தன்னை திட்டியது என அவன் செயல்கள் அவன் முகத்தில் கீற்றாக புன்னகையை தோற்றுவித்திருந்தது.. தான் பேசியதை வியப்பாக பார்த்த ஸ்ருதியை நினைத்துப் பார்த்தவன் இவகிட்ட பேசின வார்த்தை அளவுக்குகூட இவ அக்காட்ட நாம பேசினதில்ல..!!
ஏனோ திருமணம் முடிந்து ஸ்வேதாவோடு தான் வாழ்ந்த அந்த ஒருவாரத்தை நினைத்துப் பார்த்தவன் அவளிடம் பேச்சை இருக்காது.. சாதாரணமாகவே அவனும் அதிகம் பேசமாட்டான் அதனால் அப்போது அவனுக்கு அது பெரிதாய் தெரியவில்லை..அதைவிட அவனுக்கு அந்த நேரம் அவன் கவனமெல்லாம் ஜெர்மனியில் துவங்க போகும் தொழிலை பற்றியே இருந்தது.. தான் ஊருக்கு போனால் தன் தாய்க்கு ஒரு துணை என்று மட்டுமே ஸ்வேதாவை நினைக்க தோன்றியது.. ஸ்வேதாவும் அவனிடம் எதுவுமே பேசியதில்லை..
வெளிநாட்டிலிருந்து போன் செய்தாலும் பாதி நேரம் தூங்குவாள்.. இல்லையென்றால் தோட்டத்தில் இருப்பாள்.. அவள் தாய்மை அடைந்தது தெரிந்து மகிழ்ச்சியில் இரண்டு மூன்று முறை போன் செய்ய அவள் இரண்டு வார்த்தைக்கு மேல் பேசியதில்லை.. அவசிய பேச்சே இருக்காது இதில் அந்தரங்கமாக எங்கே பேசுவது.. பல சமயங்களில் அவள் செல்லுக்கு அடித்து ஓய்ந்து தாய்க்கு அடித்து பேசுவான்..
 ஏழு மாதத்திலேயே வளைகாப்பு போட்டு தாய்வீட்டுக்கு சென்றிருக்க இதுதான் அவளது இயற்கை குணமோ என்றுதான் நினைத்தானே தவிர மனதில் ஒருவனை வைத்துக் கொண்டு தன்னோடு குடும்பம் நடத்தினாள் என்று நினைக்கவில்லை.. ஆனால் கணவனாக தானும் எதையும் சரியாக செய்யவில்லையோ.. சாதாரண கணவன் மனைவியா வாழ்க்கையை துவங்காம அவ மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சிருக்க முயற்சி பண்ணியிருக்கனுமோ.. அவ லேசா குறிப்பு காட்டியிருந்தாக்கூட அவ கைவிரலக்கூட நாம தொட்டிருக்க மாட்டோம்..
அப்பதான் சொல்லல.. நாம திரும்பி வந்த அன்னைக்காச்சும் சொல்லியிருக்கலாம்.. நானே மரியாதையா ஒதுங்கியிருப்பேன்.. ஸ்வேதாவை நினைத்துப் பார்த்தவனுக்கு வேதனையாகவும் பாவமாவும் இருந்தது.. அவ தங்கச்சி இந்த அளவுக்கு தைரியமா பயப்படாம இருக்கா.. ஸ்வேதாவுக்கு ஏன் வாழ்க்கையில இவ்வளவு குழப்பம்..  ஸ்ரீக்குட்டியை நினைத்து பார்த்தவன் தன் காரின் வேகத்தை அதிகப்படுத்தியிருந்தான்..
அங்கு தன் அறையில் படுத்திருந்த ஸ்ருதிக்கோ.. அஸ்வின் நினைவுதான்..தன் அக்காவின் கடிதத்தை ஒருமுறை நினைத்து பார்த்தாள்.. அவர்கிட்ட இதப்பத்தி கேட்கலாம்னு நினைச்சா சின்னப்புள்ள மாதிரி இப்படி நாய்விரட்டி அவர் முன்னாடி அசிங்கப்பட்டுடமே..இவர் நம்மள திட்டினத வைச்சு பார்க்கும்போது ரொம்ப நேரமா நம்மள வாட்ச் பண்ணியிருப்பாரோ..?? அதென்ன பழக்கம் லேடிஸ பாலோ பண்றது   அடுத்த தரம் பார்க்கும்போது கண்டிப்பா கேட்கனும்.. அக்கா என்னமோ அவர் ரொம்ப நல்லவரு, வல்லவரு, 916 தங்கம்னு எல்லாம் பில்டப் பண்ணி எழுதியிருந்தா..
ஆமா உடம்பா அது..?? இரும்பு மாதிரி இருக்கு..இன்னும் கொஞ்ச நேரம் நம்ம கையை பிடிச்சிருந்தா நம்ம கையை தனியா வந்திருக்கும் போல.. தட்டிப்பார்க்காம விட்டுட்டோம்.. டொய்ங் டொய்ங்ன்னு சத்தம் வந்திருக்குமோ ..!
கண்டுக்காம விட்டிருந்தாலே  நான் என்ன நாய்க்கிட்டயா மாட்டியிருப்பேன்.. அத ஒரு கை பார்த்திருக்க மாட்டேன்.. தேவையில்லாம பிடிச்சு இழுத்து, திட்டி இதெல்லாம் தேவையா அவன் மேல் காண்டானவள், பிறகு சரி சரி விடு ஸ்ருதி அவர் நம்மள பார்த்தாலும் கண்டுக்காம போகாம காப்பத்தனும்னுதான் இத செஞ்சிருக்காரு..அப்ப அக்கா சொன்ன மாதிரி நல்லவருதான்..சட்டென தன் நினைவுகளை நாயிடம் கொண்டு சென்றவள் அடுத்து தோழிகளின் அழுகையின் நினைவோடு தூக்கத்திற்கு சென்றிருந்தாள்..
நாட்கள் அதன் போக்கில் செல்ல பிராஜக்ட் ஒர்க்கை வெற்றிகரமாக முடித்திருந்தார்கள்.. நாளையிலிருந்து அடுத்த பத்துநாட்கள் ஸ்டடி லீவ் விட்டிருக்க இன்று மாலை அனைவரும் ஹாப்பிங் போவதாக முடிவு செய்திருந்தார்கள்.. காலேஜ் விடவும் அப்படியே ஒரு பெரிய ஹாப்பிங் மாலுக்கு செல்ல ஸ்ரீக்குட்டிக்கு சில பல பொம்மைகளும் சில டிரஸ்களும் எடுத்தவள் தனக்கு இரண்டு மூன்று டாப்ஸ் மட்டும் எடுத்துக் கொண்டாள்.. 
ஹாப்பிங் செய்து அனைவரும் களைத்துபோயிருக்க அங்கிருந்த காப்பிஷாப்பில் காப்பி ஸ்னாக்ஸ் சாப்பிடலாம் என முடிவு செய்து  ஐந்து பேரும் சலசலவென பேசியபடி அங்கிருந்த சேரில் அமர்ந்தார்கள்.. தாங்கள் வாங்கிய பொருட்கள், விலை, டிசைன் பற்றி பேசிக் கொண்டிருக்க பவித்ரா மட்டும் அமைதியாக இருந்தாள்..
மேகலா“பவி என்னடி ஆச்சு இவ்வளவு சைலண்டா இருக்க..?”
“ப்பச் அங்க ரெண்டு பேரு என்மேல வேணும்னே மோதிட்டு போனாங்கடி..”
“விடு பவி கூட்டத்தில எந்த எருமைக்காவது கண்ணு தெரிஞ்சிருக்காது..??”
ஸ்ருதியின் குரலில் அவர்களுக்கு நேர்பின்னால் அமர்ந்திருந்த அஸ்வின் தன் கவனத்தை இங்கே செலுத்தினான்..ஸ்ருதியை அடையாளம் கண்டு கொண்டவன் அவ ஹாஸ்டல் எந்த மூலையில இருக்கு.. இங்க என்ன அலப்பறை பண்ணிட்டு இருக்கா.. தன் நண்பன் ஒருவன் தாயார் ஆப்ரேசனுக்காக பணம் கேட்டிருக்க அவனுக்கு அதை கொடுக்கத்தான் இங்கு வந்திருந்தான்.. அவனும் அவன் நண்பனும் காலேஜில் நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருக்க ஸ்ருதியின் குரல் அவன் மகனை போல அவனுக்கும் அடையாளம் தெரிந்திருந்தது..
“இல்லடி அவன் வேணும்னேதான் இடிச்சான் ஒருதரம்னா தெரியாம பட்டிருச்சுன்னு நினைக்கலாம் மறுமறுபடி வந்து எந்த பக்கம் போனாலும் அங்க கரெக்டா நிக்குறானுங்க.. இந்த டென்சன்ல நான் ஒன்னுமே வாங்கல.. ப்பச்..”
அவளை அணைத்தவள்,” விடு.. கவலைபடாத..” அனைவரும் பேசிக் கொண்டே பப்ஸ்.  சாப்பிட்டு காப்பி ஆர்டர் கொடுத்திருக்க பவியோ மெதுவாக தன் அருகில் அமர்ந்திருந்த மேகியின் கையை சுரண்டினாள்..
“ஏய் பப்ஸ் வேணும்னா இன்னொன்னு வாங்கிக்க நான் தரமாட்டேன்..?”
“ஏய் லூசு அவனுகதாண்டி என்மேல மோதினது..?” தங்கள் அருகில் வந்திருந்த அந்த இருவரை காட்டவும்,
மெதுவாக அவர்களை திரும்பி பார்த்த ஸ்ருதி அவர்களை பார்த்து சிரித்தாள்..
“டேய் நான் சொல்லல இந்த பொண்ணுக நம்ம பர்சனால்டியில விழுந்திருங்கன்னு அங்க பாரு.. ஒன்னு சிக்னல் கொடுத்திருச்சு..,”
இன்னும் அருகில் வர ஸ்ருதி,” ஹாய்” என எழுந்து கைகொடுக்க போனவள் கைதட்டி விட்டது போல கொதிக்க கொதிக்க சூடாக இருந்த அந்த காப்பி கப்பை அவன் பேண்டில் தட்டி விட்டிருந்தாள்..
காப்பியின் சூடு தன் வேலையை காட்டியிருக்க,” ஐயோ அம்மா” என அலறியவன் வேகமாக வாஸ்ரூமை நோக்கி ஓட மற்றவன் ஸ்ருதியை முறைத்தபடி,” நீ வேணும்னேதான் காப்பிய தள்ளிவிட்ட..??”
“அதான் நான் தள்ளிவிட்டத பார்த்திட்டில அப்புறமும் ஏன் கேணத்தனமா இந்த கேள்விய கேட்கிற..??”
“ஏய்…” என அவனை நோக்கி கோபமாக வர அவளோ அசால்டாக நின்றிருந்தாள்.. இங்கு நடந்த அனைத்தையும் அஸ்வின் பார்த்தபடிதான் இருந்தான்..மற்றவர்கள் அனைவரும் பயந்து எழுந்திருக்க அவன் அவளை அடிக்க கை ஓங்க அதற்குள் ஸ்ருதியின் கை அவன் கன்னத்தில் பதிந்திருந்த்து.. வேகமாக அவர்களை நெருங்கியிருந்த அஸ்வினோ ஓங்கிய அவன் கையை பின்னால் முறுக்கியிருந்தான்..
“ஏய் என்ன திமிர் இருந்தா லேடிஸ்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணிட்டு அடிக்கவேற கைய ஓங்குவ ..?”ஒருகையால் அவன் கையை பிடித்திருந்தவன் மறுகையால் ஓங்கி அவன் மூக்கில் குத்தியிருந்தான்..
ஸ்ருதி அஸ்வினை அங்கு எதிர்பார்க்காதவள் மாமா எங்க இங்க வந்தாங்க.. மற்றவர்களுக்கும் அஸ்வினை அடையாளம் தெரிந்திருந்தது..
“ஸ்ருதி இவங்க உன்னோட மாமாதானடி..??”
“ம்ம்..”
“செம ஜிம்பாடிடி.. ப்பா ஒரு குத்துக்கே மூக்குல ரத்தம் வந்திருச்சே..?”
அவனை நன்கு வெளுத்து அனுப்பியவன் ஸ்ருதியை முறைத்தபடி ,”கொஞ்சம் வா உன்கிட்ட பேசனும்..?”
அடடா இவர்வேற தன்னோட அட்வைஸ ஆரம்பிச்சிருவாரே.. அவனோடு நடக்க “உன்னோட காலேஜ் எங்க இருக்கு நீ எதுக்கு இவ்வளவுதூரம் வந்த.. அறிவிருக்கா..அவன பார்த்தாலே பொறுக்கி மாதிரி இருக்கு அவன கைநீட்ற.. அவன் ஏதாவது பண்ணினா என்னாறது..நீங்க கண்டுக்காம இருந்திருந்தாலே அவனுக பேசாம போயிருப்பானுக தேவையில்லாம அவங்கள கூப்பிட்டு அசிங்கப்படுத்துற.. நீயெல்லாம் எப்ப வளருவ..?”
அவள் கையை கட்டி பேசாமல் இருக்க பொது இடத்தில் எப்படி நடக்கவேண்டும் என பாடம் எடுத்து முடித்திருந்தான்.. ஸ்ருதிக்கு கோபம்தான்.. இதென்ன தப்பு யார்மேல இருந்தாலும் நம்மள திட்டுறது அவள் அவனுக்கு பதில் பேசாமல் இருக்க,
“உனக்கு ஸ்டடி லீவ் விட்டாச்சுதானே..?”
“ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்..”
“அதைத்தான் ஊரே கேட்கிற மாதிரி பத்துதரம் சொன்னிங்களே.. வா நானும் அங்கதான் போறேன் .. கூட்டிட்டு போறேன்..”
“ஒன்னும் தேவையில்ல இத்தன வருசமா நீங்களா கூட்டிட்டு போனிங்க.. எல்லாம் எனக்கு தெரியும்.. நானே வந்துக்குவேன்..”
“இந்த திமிர் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. மரியாதையா வா அடுத்த ஊர்வம்பு இழுக்க போகாம..??”
“முடியாது மாமா.. எனக்கு வரத்தெரியும் நீங்க கிளம்புங்க..?”
“உனக்கு போய் நல்லது நினைச்சேன் பாரு.. ரொம்ப தேவை வந்தா வா.. இல்லாட்டா  என்னமோ பண்ணு..” அவனும் முறைத்தபடி அங்கிருந்து கிளம்பியிருந்தான்..
“ஏதோ அந்த பொறுக்கிய அடிச்சாருன்னு பார்த்தா ரொம்பத்தான் பேசுறாரு.. நாம என்ன இவர் வளர்க்கிற நாய்குட்டியா.. கூப்பிட்ட உடன போக.. போய்யா போ.. அதெல்லாம் இந்த ஸ்ருதிக்கிட்ட நடக்காது..”
அவனும் அவளைத்தான் திட்டிக் கொண்டிருந்தான்.. “நமக்கு இது தேவையா எவ ஊருக்கு போனா என்ன போகாட்டா என்ன .. என்னமா வாய் பேசுறா ராட்சசி.. ஏதோ நம்ம ஸ்ரீக்குட்டிக்கிட்ட நல்லா பழகுறாளே ஹெல்ப் பண்ணலாம்ன்னு பார்த்தா ரொம்பத்தான் திமிரு…இவள பார்த்தாலே நாமளும் இவ மாதிரி லொட லொடன்னு பேச ஆரம்பிச்சிருறோம்.??”
இரண்டு நாட்கள் கழிந்திருக்கும் ஸ்ருதி வந்தாளா. வரவில்லையா எதையும் கண்டு கொள்ளவில்லை.. அன்று காலை எழுந்தவன் எப்போதும் போல ஸ்ரீயை பார்க்க போக அங்கு கட்டிலில் ஸ்ருதியும் ஸ்ரீக்குட்டியும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்திருந்தார்கள்.. அவள் ஒரு கங்காரு தன் குட்டியை பாதுகாப்பது போல தன் வயிற்றுக்குள் அணைத்து பிடித்திருந்தாள்.. ஸ்ரீயும் பால்குடிக்கும் நியாபகத்தில அவள் விரலை தன் வாய்க்குள் வைத்திருக்க இந்த காட்சியை ரசித்து பார்த்தவனுக்கு இரண்டு நாட்களாக அவள் மேலிருந்த கோபம் காற்றில் கரைந்திருந்தது..
                                                           இனி………….????
 
 
 
 
 

ReplyForward
 
 
 
 
 
 

 
 
 

Advertisement