Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
                             
                                       அத்தியாயம் – 3
 
 
இரவு 11 மணி இருக்கும் காரை வேகமாக ஓட்டி வந்த  அஸ்வின் விடாது கொடுத்த ஹாரன் சத்தத்தில் வாட்ச்மேன் விழுந்தடித்து வந்து கேட்டை திறந்துவிட கார் உள்ளே சீறிப்பாய்ந்தது..
 
 அதிலிருந்து இறங்கிய தன் முதலாளியை வித்தியாசமாக பார்த்தவர் ,”எதுக்கு இந்த தம்பி இம்புட்டு வேகமா வர்றாகன்னு தெரியலையே.. இந்த மாதிரி வேகமாவெல்லாம் வரமாட்டாங்க.. மகராசன் பொண்டாட்டி இறந்ததில அவருக்கும் மன கஷ்டம் இருக்கும்ல..” தனக்குள்ளேயே  முனுமுனுத்துக் கொண்டார்..
 
காரை விட்டு இறங்கியவன் வீட்டிற்குள் நுழைய வீடே இருட்டாய் இருந்தது.. அனைவரும் உறக்கத்தில் இருந்தார்கள் போல, குழந்தையை காணும் ஆவலில் ரூம் பக்கம் காலை வைக்க,
 
கண்ணா… தன் தாயின் குரலில் அப்படியே நின்றான்..அந்த இருட்டிற்குள் சோபாவில் அமர்ந்திருந்தவர் எழுந்து விளக்கை போட்டார்..
 
தன் தாயை பார்க்கவும் அவரிடம் வந்தவன்,” ம்மா நீங்க இன்னும் தூங்கல.. இவ்வளவு நேரம் முழிச்சிருந்தா உங்க உடம்பு  என்னத்துக்காகும்.. மாத்திரையெல்லாம் போட்டிங்களா..??”
 
தன் மகனையே கண்சிமிட்டாமல் பார்த்தவர்.. அவன் தலையை கோதியபடி ,”வா கண்ணா சாப்பிட..??”
 
ப்பச் வேண்டாம்மா..
 
அவன் சட்டையை இறுக்கி பிடித்தவர்.. டேய் குடிச்சிருக்கியா..??” அதிர்ச்சியுடன் கேட்க,
 
பிடித்த கையை விடாமல் அவர் காலடியில் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.. அவரை வயிற்றோடு அணைத்தவன் அவர் மேல் முகம் புதைத்து..என்ன மன்னிச்சிருங்கம்மா.. என்னால முடியல.. எனக்கு மட்டும் ஏன்மா இப்படி நடக்குது.. பத்து வயசுக்கு அப்புறம் அப்பா இல்லாமலே நமக்கு அவ்வளவு கஷ்டமா இருந்திச்சு.. இப்ப என் பையனுக்கு இந்த வயசிலயே அம்மா இல்லையே.. என்னால அங்க ஒருநிமிசம்கூட நிம்மதியா வேலை பார்க்க முடியலம்மா.. தன் மகனின் வேதனையை உணர்ந்தவருக்கு கண்ணீர் நிற்கவே இல்லை…
 
எத்தனை வயதாயிருந்தாலும் தாய்க்கு அவன் மகன்தானே.. தன்னை திடப்படுத்தி தானாவது பனிரென்டு ஆண்டுகள் தன் கணவனோடு வாழ்ந்த பசுமையான காலங்கள் நினைவில் இருக்கிறது.. ஆனா என் பையன் என்ன தப்பு பண்ணினான்.. எண்ணி ஒரு வாரம்கூட வாழலை.. அதற்குள் அவன் வாழ்க்கை சூன்யமாவதா.. அப்ப அம்மான்னு எதுக்கு நான் இருக்கேன்..
 
என்னாலதான் என் பையனோட வாழ்க்கை கெட்டுப்போச்சு.. அப்ப நான்தான் அத சரிப்படுத்தனும்.. என் கண்ணுக்கு முன்னாடியே என் மகன் இப்படி குடிச்சு சீரழிஞ்சு போறத நான் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா.. இவனுக்கு என்ன குறைச்சல்.. அழகில்லையா.. அந்தஸ்தில்லையா.. இல்ல நல்ல குணம்தான் இல்லையா.. எதுல இவன் குறைஞ்சிட்டான்.. மனதிற்குள் இந்த எண்ணங்கள் ஓடினாலும் கை அவனை ஆறுதல் படுத்துவதை நிற்கவே இல்லை..
 
சற்று நேரம் பொறுத்தவர் அவனை எழுப்பி சோபாவில் அமரவைத்து டிபனை எடுத்து வந்து ஊட்டிவிட வேண்டாம் என தடுத்தவனை கண்டித்து ஊட்டி விட்டார்..
 
ஸ்ரீ இன்னைக்கு ரொம்ப அழுதானாம்மா..??”
 
இல்லப்பா.. அழல நீ சாப்பிடு..
 
அவன போய் பார்க்கவா..?”
 
வேண்டாம்டா.. அண்ணி உள்ள தூங்குறாங்க.. இந்த நிலைமையில உன்னை அவங்க பார்க்கிறத நான் விரும்பல.. எப்பவும் என் பிள்ள சிங்கம் மாதிரிதான் நிற்கனும்.. நீ காலையில வந்து பாரு..” அவனுக்கு பாலை கொண்டு வந்து கொடுத்தவர் அவன் அறைக்கு போகச் சொல்லி அனுப்பிவிட்டு தனக்கு ஒரே துணையான கடவுளை சரணடைந்தார்..
 
இங்கு நடந்த அனைத்தையும் தங்கள் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கோகிலா தன் முந்தானையால் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தவர்அவர்களின் அரவம் தெரியவும் வேகமாக சென்று குழந்தையின் அருகில் படுத்துக் கொண்டார்..
 
தாங்கள் வந்து தங்கியிருக்கும் இந்த இரு மாதமாக அஸ்வினை கவனிப்பவர் ஒரு பழுது சொல்ல முடியாத குணம்.. தங்களிடம் அதிகம் பேசவில்லையென்றாலும் எந்த மரியாதை குறைவும் இல்லை.. என்ன தேவையோ அது இவர்கள் கேட்காமலே வீடு வந்து சேர்ந்துவிடும்..
 
தன் மூத்த மகளை நினைத்தவருக்கு கோபம்தான் வந்தது.. என்ன பொண்ணு இப்படி பூ போல பையனையும், தங்கம் மாதிரி புருசனையும் விட்டுப்போக மனசு எப்படி வந்திச்சு.. தன் கணவரை கொஞ்சம் கொஞ்சமாக தொந்தரவு செய்து விபரங்களை கேட்டுக் கொண்டவருக்கு ஸ்வேதா மற்றும் தன் கணவரின் மேல்தான் முழுத்தவறு என்பதும் புரிந்தது.. நாமளும் அந்த வீட்லதான இருந்திருக்கோம் நமக்கு தெரியாமலே இவ்வளவும் நடந்திச்சா..தன் மேலேயே அவருக்கு வருத்தம் எழுந்தது..
 
முதல் பத்து நாட்கள் இறுகி போயிருந்த கற்பகமும் ஸ்வேதா செய்த தவறுக்கு பெற்றவர்களை நொந்து என்ன பயன் என நினைத்தவர் அவர்களோடு சகஜமாகியிருந்தார்.. ஸ்ருதி பேசும் பொழுது இரண்டு மூன்று முறை பேச துவங்கியவர் இப்போது தினமும் பேசினார்.. பாசமாக பேசும் அந்த சிறுபெண்ணை தள்ளி வைக்க மனதில்லை..
 
அடிக்கடி ஸ்வேதாவையும் ஸ்ருதியையும் ஒப்பிட்டு பார்த்து இந்த ஒருவருடத்தில் இங்கிருந்த ஸ்வேதாவுக்கும் அவள் தங்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று ஆச்சர்யப்பட்டிருந்தார்.. அஸ்வினை பொருத்தவரை அவன் என்ன நினைக்கிறான் என்பது யாருக்குமே தெரியவில்லை.. ஸ்வேதாவை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை..
 
இரண்டு மூன்று முறை போலிஸ் வந்து விசாரனை செய்துவிட்டு செல்ல அந்த நாட்களில் இன்னும் இறுகிப்போய் இருந்தான்..
 
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது போல அவர்களின் மனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்தது.. அஸ்வின் தன்னுடைய கம்பெனிகளை மதுரையில் வைத்திருந்ததால் தினமும் காலையில் சென்று இரவு திரும்பிவிடுவான்.. கோகிலாவுக்கு தன் சின்ன மகளை ஒருமுறை சென்று நேரில் பார்த்துவிட்டு வர ஆசை இருந்தாலும் குழந்தையை விட்டு செல்ல மனமில்லாமல் இருந்தார்..
 
ஸ்ருதியும் காலை மாலை இருவேளையும் தவறாமல் போன் செய்வாள்.. ஸ்ருதியின் குரலை போனில் கேட்டாலே ஸ்ரீக்கு சிரிப்பு வந்துவிடும் அளவிற்கு அவள் குரல் அவனிற்குள் பதிந்திருந்தது.. இரு பாட்டிகளின் கவனிப்பால் சற்று உடல் தேறி இப்போது குப்புறபடுக்க துவங்கியிருந்தான்..
 
அன்று காலை ஸ்ருதி போன் செய்ய கோகிலா பேசி முடித்து கற்பகத்திடம் கொடுக்கவும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தவள் ஸ்ரீயை கேட்க  பேசியபடி போனை ஸ்ரீயிடம் திருப்பினார்.. அவனோ தன் தந்தையின் மேல் குப்புற படுத்திருந்தான்.. தன் மகனை ஒரு கையால் அணைத்தபடி ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்து அஸ்வின் படுத்திருக்க அவர்களை நோக்கி கற்பகம் போனை திருப்பவும் ஸ்ருதியின் குரலை கேட்டு சின்னக்குட்டி ஆ.. ஊ.. என சிரிக்க ஆரம்பித்தது..
 
அதுவரை கண்ணை மூடி தன் குழந்தையின் ஸ்பரிசத்தை ரசித்துக் கொண்டிருந்தவன் குழந்தையின் சிரிப்பால் உந்தப்பட்டு மெதுவாக கண் திறந்து பார்க்க அதன் சிரிப்பில் ஒரு நிமிடம் மயங்கிவிட்டான்..
 
புஞ்சிம்மா.. என்னடா குட்டி பண்றிங்க..செல்லக்குட்டிதங்கக்குட்டிபட்டுக்குட்டி..  அவள் கொஞ்ச கொஞ்ச குழந்தையும் அவள் பேச்சிற்கு பதில் சொல்வது போல தன் குருவிகுஞ்சு வாயை திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தது..
 
அஸ்வினுக்கு ஆச்சர்யமாக இருக்க பார்வையை முதல்முறையாக ஸ்ருதி புறம் திருப்பினான்.. நைட் பேண்ட் சர்ட்டில் அப்போதுதான் முகத்தை கழுவியிருப்பாள் போல பால்முகம் பளிச்சென்றிருந்தது..முகத்தில் வேறு எந்த அலங்காரமும் இல்லை.. தலையை மேலே தூக்கி கிளிப் போட்டிருந்தாள்.. குழந்தையோடு கொஞ்சி சிரிக்கும் போது அவள் கன்னத்தில் விழுந்த குழியில் ஒரு நிமிடம் பார்வையை செலுத்தியவன் மீண்டும் தன் மகனை ரசிக்க ஆரம்பித்து விட்டான்..
 
அவள் முதலிலேயே அஸ்வினை பார்த்துவிட்டாலும் அவனை கண்டுக் கொள்ளாமல் தன் போக்கில் குழந்தையை கொஞ்சி கொண்டிருக்க இவனும் அவளின் கொஞ்சலிலும் அதற்கு தன் குழந்தை கொடுக்கும் பதிலிலும் தன்னை இழந்திருந்தான்..
 
போனை பேசிமுடித்ததும் கற்பகம் தன் பேரனை தூக்க போக,’ எப்படிம்மா அங்க பேசுறதுக்கு இவன் இங்க பதில் சொல்றான்..இந்த பொண்ணு ..??”அவன் இழுக்க அவனின் முகம் போன போக்கில்..
 
டேய் டேய் இவ நம்ம ஸ்ரீயோட சித்தி.. பத்துநாள் இங்க இருந்துட்டுத்தான போனா..?”
 
தெரியும்மா.. தன் திருமணத்தன்று வலிய வலிய தன்னிடம் வந்து பேசியது நியாபகம் இருந்தது..
 
ரொம்ப நல்ல பொண்ணுடா.. கலகலன்னு பேசும்.. தினம் ரெண்டு மூனுதரமாச்சும் நம்ம ஸ்ரீயோட பேசலைன்னா அதுக்கு தூக்கமே வராது.. போன்ல பேசி பேசியே நம்ம ஸ்ரீயோட மனசில இடம்பிடிச்சிட்டா…
 
ஒன்றும் சொல்லாமல் குழந்தையை முத்தமிட்டவன் தன் அறையை நோக்கிச் செல்ல பெருமூச்சுடன் தன் பேரனோடு ஹாலுக்குள் சென்றார்..
 
அங்கு ஸ்ருதியோ.. இந்த உம்முனா மூஞ்சிக்கு எப்புடி இப்படி சிரிக்கிற புள்ள பொறந்திருக்கு.. மூஞ்சியை கண்ணாடியில் அவனை போல இறுக்கமாக வைத்து பார்த்தவள்.. உவ்வ… வாந்தி வருவது போல பாவனை செய்து.. இதெல்லாம் நமக்கு செட்டாகாது.. விசில் அடித்தபடி,
 
 வர்றேன்.. எனக்கு ஸ்டடி லீவ் விடப்போறாங்க.. அப்ப உங்கள ஸ்டடி பண்ண நேரா வர்றேன்.. உங்க முன்னாடி மாஸா வந்து எப்படி என்ட்ரி குடுக்கப் போறேன் பாருங்க பாஸ்..?” ஒற்றை கண்ணை அடித்தவள்.. தூங்கிக் கொண்டிருந்த தன் தோழியின் மேல் ஒரு வாட்டர்கேன் தண்ணீரை அப்படியே ஊற்ற அவள் அடித்து பிடித்து எழுந்தாள்..
 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்டி தர்ஷினி.. அவள் தூக்க கலக்கத்தில் தலையிலிருந்து தண்ணீர் வடித்தபடி நின்றவள் இவளின் வாழ்த்தில் அங்கிருந்த தலகாணியை எடுத்து துரத்த ஆரம்பிக்க இவள் ரூமை விட்டு ஓடியவள் எல்லோருடைய ரூம் கதவையும் படபடவென தட்டிவிட்டு ஓட எல்லாரும் என்னவோ ஏதோவென அடித்துபிடித்து கதவை திறந்தவர்கள் இவளின் அழும்பில் காண்டாகி நின்றார்கள்..
 
அலுவலகத்திற்கு கிளம்பி வந்த அஸ்வின் ,”ம்மா நைட்டு வர கொஞ்சம் லேட்டாகும் முக்கியமான ஒருத்தர மீட் பண்ண வேண்டியிருக்கு.. நீங்க எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கோங்க..
 
குழந்தையை கோகிலாவிடம் இருந்து வாங்கியன் அவனை கொஞ்சியபடி அவரை பார்த்து,” நானும் மினிஸ்டர் மூலமா மூவ்பண்றேன் மாமாக்கு சீக்கிரமே இந்த பக்கம் டிரான்பர் வாங்கிரலாம்னு சொன்னாரு..?”
 
சரி மாப்பிள்ள.. கணவர் அங்கு சாப்பாட்டுக்கு என்ன பண்றாறோ என்ற பரிதவிப்பில் இருந்தவர் அஸ்வினின் பதிலில் சற்று அமைதியடைந்தார்..
 
இரவு ஒன்பது மணி இருக்கும் ஸ்ருதிதர்ஷினியோடு சந்தியாபவித்ராவும் வெளியில் கிளம்ப மேகலாவும் தானும் வருவதாக அடம்பிடித்தாள்..
 
 ஸ்ருதியோ ,”வேண்டாம் குண்டூஸ் நாங்களெல்லாம் காம்பவுண்ட் ஏறி குதிச்சிருவோம் உன்னால முடியாது தேவையில்லாம மாட்டாத.. வரும்போது எல்லாரும் என்ன சாப்பிட்டமோ உனக்கும் ஒரு பார்சல் வாங்கிட்டு வர்றோம்..
 
முடியாதுடி.. இதுதான் லாஸ்ட் சான்ஸ் அப்புறம் எல்லாரும் ஊருக்கு போயிருவோம்.. எக்ஸாம் வந்திரும் நானும் வந்தே ஆவேன்..
 
விதி வலியதுடி.. வந்து தொலை..??” தலகாணிகளை தூங்குவது போல செட்பண்ணி வைத்துவிட்டு ஹாஸ்டல் பின்புறம் வந்து காம்பவுண்ட் ஏறி குதிக்க மேகலாவால் முடியாமல் ஒரு சிறு சந்து போல இருந்த இடத்தில் மெதுவாக நகர்ந்து நகர்ந்து வந்தாள்..
 
வெளியில் வந்தவள் எப்புடி..??” தன் சுடிதார் காலரை தூக்கிவிட்டுக் கொள்ள பவியோ அவள் கன்னத்தில் திருஷ்டி கழித்தாள்..
 
அனைவரும் ஒரு கையேந்தி பவனுக்கு சென்றவர்கள் ஆளாளுக்கு முட்டை புரோட்டா. தோசைஇடியாப்பம் பாயாபிரைடு ரைஸ் என தர்ஷினிக்கு ஏகப்பட்ட செலவு வைத்து ஒருவாறு பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்..
 
 அஸ்வின் தொழில் முறையில் ஒருவரை பைஸ்டார் ஹோட்டலில் சந்தித்து பேசி தன் டின்னரை முடித்தவன் காரை தங்கள் ஊருக்கு விட போன் வரவும் காரை நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்தவன் அப்போதுதான் ஸ்ருதியை பார்த்தான்..
 
நன்றாக உற்று பார்க்க காலையில் பார்த்த பெண்தான் ஆழ்ந்த ரோஸ் நிறத்தில் ஒரு பட்டியாலா பேண்ட்டும் அதே நிறத்தில் டீசர்ட்டும் போட்டிருந்தவள் கழுத்தை சுற்றி ஒரு ஷால்.. தன் தோழிகளோடு ஏதோ வம்பிழுத்தவள் அவர்கள் அடிக்க வரவும் வேகமாக ஓட ஒரு வண்டியின் மேல் மோத போய் கடைசி நேரத்தில் விலகியிருந்தாள்..
 
இவள் அடிபடுவது போலிருக்கவும் பதறி அஸ்வின் போனை வைக்கஅந்த வண்டிக்காரனோ வண்டியோடு கீழே விழுந்திருந்தவன் கோபத்தோடு எழுந்து வண்டியை தூக்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு வர ஸ்ருதி சற்று விலகி நின்றிருக்க அவளை விரட்டிக் கொண்டு வந்த மற்றவர்கள்தான் அவனிடம் மாட்டிக் கொண்டார்கள்..
 
ஏம்மா உங்களுக்கு ஓடி விளையாட இந்த நடுரோடுதான் கிடச்சிச்சா.. சாவு கிராக்கிகளா..பொம்பள பிள்ளைங்க அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்குங்களா இப்படி ரோட்டுல ஓடிப்பிடிச்சி விளையாடிட்டு இருக்கிங்க?” அவன் லேசான போதையில் இருந்தான் போல சண்டைக்கு கிளம்பியிருந்தான்.. அவர்கள் நால்வரும் என்ன பேசுவதென்று தெரியாமல் முழிக்க இவளோ கையை கட்டிக் கொண்டு அவர்கள் திட்டு வாங்குவதை ரசித்துக் கொண்டிருந்தாள்.. அஸ்வின் காரிலிருந்து இறங்க போனவன் ஸ்ருதி அப்படி நிற்கவும் கவனத்தை அங்கே செலுத்தினான்..
 
சற்று நேரம் அவனை பேச விட்டவள் அவன் கவனம் அவர்களை திட்டுவதில் இருக்கவும் மெதுவாக வண்டிக்கு பின்னால் சென்று அவன் பின்சக்கரத்தின் காற்றை இறக்கிவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல முன்புறம் வந்து,
 
ஏய் என்ன ரொம்ப பேசுற..?? நீ குடிச்சிட்டு வண்டிய என் மேல மோத பார்த்திட்டு சவுண்ட் விடுறியா.. அடிங்.. யாருக்கிட்ட..?” இவள் ஓங்கி பேச அந்த வண்டிக்காரனுக்கு பயங்கர கோபம்..
 
ஏய் என்ன பார்த்தா சின்ன பொண்ணுங்க மாதிரி இருக்கிங்க போனா போகுது விடலாம்னு பார்த்தா ரொம்ப ஓவரா பேசுற.. நான் யாருன்னு தெரியுமா..??”
 
 இந்தா நிப்பாட்டு முதல்ல..!! நாங்க எல்லாரும் யாருன்னு தெரியுமா..?? எங்ககிட்டயே நீ ஓங்கி பேசுவியா.. இன்னும் அஞ்சு நிமிசத்தில பாரு உன்கதி என்னாகுதுன்னு உன்னோட லைசன்ஸ் எங்க..? ஹெல்மெட் போடல..? அதோட போதையில வேற இருக்க..?” தன் போனை வேகமாக எடுத்து டயல் செய்ய,
 
அந்த வண்டிகாரனுக்கு ஒருவேளை போலிஸா இருக்குமோ இல்ல பெரிய இடத்து பொண்ணுகளா இருப்பாங்களோ.. நமக்கெதுக்கு வம்பு..
 
ஸாரிம்மா விடுங்க என் மேலதான் தப்பு..??” கையெடுத்து கும்பிட்டவன்  வண்டியில் வேகமாக ஏறி ஸ்டார்ட் செய்ய போக இப்போதுதான் பார்த்தான் காற்று இல்லாமல் இருப்பதை ச்சை இதுவேறயா..?” வண்டியை வேகமாக தள்ளிக் கொண்டு செல்ல,
 
அவன் தங்கள் பார்வையை விட்டு மறையும் வரை அவனையே பார்த்து கொண்டிருந்தவர்கள்.. “ஏய் யாருக்குடி போன் பண்ண போன.. உனக்கு போலிஸ் யாரையும் தெரியுமா..?”
 
நான் யாருக்குடி போன் செஞ்சேன் ஒரு நல்ல ஸாங் கேட்கலாம்னு தோனுச்சு அதான்.. இதோ போட்டுட்டேன்..
 
                                                                           “ கும்முறு டப்பர
                                                                                கும்முறு டப்பர
                                                                             கும்முறு டப்பர
                                                                                   
                                                                                 கும்முறு டப்பர
                                                                                 கும்மறு கும்மறு கும்மறு
                                                                                    கும்மாறா

                                                                                 காந்தக் கண்ணழகி
                                                                                   லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
                                                                                 முத்து பல் அழகி
                                                                                       சோடி சேர வாடி…..”

 
அவள் போட்ட பாட்டில் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்க்க சிரிப்புதாளவில்லை..
 
 
உனக்கிருக்குற கொழுப்பு மாதிரி யாருக்குமே இல்லடி.??” மீண்டும் ஸ்ருதியை விரட்ட ஆரம்பித்தார்கள்.. அவர்கள் பின்னாலேயே அஸ்வின் காரில் பின்தொடர்ந்து வரஇருட்டில் ஹெட்லைட் போடாமல் மெதுவாக உருட்டியபடி  அவன் பின்தொடர்ந்ததை அவர்கள் கவனிக்கவில்லை..
 
ஹாஸ்டலை நெருங்கியவர்கள் மெதுவான குரலில் அரட்டை அடித்தபடி வர  இவர்களில் யாரோ அங்கு படுத்திருந்த நாயின் வாலை மிதித்து விட்டார்கள் போல அவ்வளவுதான் அது குறைத்தபடி அவர்களை விரட்ட ஆரம்பித்தது.. அலறியடித்து ஓட ஆரம்பித்தவர்கள் நால்வரும் வேகமாக சென்று ஏற்கனவே கீழே போட்டிருந்த கல்லில் காலை வைத்து காம்பவுண்ட்டில் ஏறி மறுபக்கம் தாவியிருக்க மேகலாவால் முடியவில்லை.. அலறியடித்து அந்த சின்ன சந்து போல இருந்த இடத்திற்குள் புகுந்தவளால் வேகமாக செல்ல முடியாமல் தவிக்க நாய் அவளருகில் வந்திருந்தது..
 
போச்சு இன்னைக்கு நாம நல்லா கடிவாங்க போறோம் என பதறியவளுக்கு அழுகை வர சட்டென மறுபடி காம்பவுண்டில் ஏறி இந்தபக்கம் குதித்த ஸ்ருதி நாயின் கவனத்தை தன் பக்கம் திருப்ப மற்ற மூவரும் மேகலாவை அந்த பக்கம் இருந்து இழுத்தார்கள்..
 
 
இப்போது நாய் ஸ்ருதியை துரத்த துவங்க இவள் அதற்கு போக்கு காட்டி அங்கு நின்றிருந்த காரை இருமுறை சுற்றி வரவும் அதற்குள் மேகலாவை பாதிக்கு மேல் அவர்கள் இழுத்திருந்தார்கள்.. இனி நாயால் மேகலாவுக்கு ஆபத்தில்லை என்பதை உணர்ந்தவள் நாய்க்கு இன்னும் போக்கு காட்டியபடி காரை தாண்டிச் செல்ல போக சட்டென காரின் கதவை திறந்த அஸ்வின் அவளை உள்ளிழுத்திருந்தான்..!!!
 
                                                          இனி…………..????

Advertisement