Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                                        அத்தியாயம்  – 2
 
 
ஸ்வேதாவுக்காக காத்திருந்தவர்கள் இவர்கள் மட்டும்தான்.. ஆனால் அங்கு ஏகப்பட்ட பேர் காத்திருந்தனர் எங்கு பார்த்தாலும் அழுகை சத்தம்தான்.. இப்போதுதான்  இப்படி ஒரு நிகழ்வை பார்க்கிறார்கள்.. 22 அல்லது 23 வயது பெண் தன் இரண்டு குழந்தைகளோடு அழுது கொண்டிருக்க அவள் கணவன் பிணமாக உள்ளே ..!!! காரணம் குடிக்க காசு தரவில்லை என தற்கொலை செய்து கொண்டதாக சொன்னார்கள்..
 
அடுத்து இரு கல்லூரி மாணவர்கள் குடித்துவிட்டு வண்டியில் வேகமாக சென்று பாலத்தில் மோதி அடிப்பட்டு இறந்திருந்தார்கள்.. அவர்களின் பெற்றோர் கதறிய கதறல் தாங்க முடியவில்லை..காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளஞ்ஜோடியின் பெற்றோர்கள் ஒருபுறம் என ஸ்ருதியின் தோழர் தோழிகளுமே மிரண்டுதான் போயிருந்தார்கள்.. பட்டாம்பூச்சியாய் சுற்றிக் கொண்டிருந்தவரக்ளுக்கு இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அனுபவம்தான்.. பிணங்கள் வரவும் போவதுமாக இருக்க அந்த சூழ்நிலையை இவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை..
 
அடுத்த ஒருமணி நேரத்தில் ஸ்வேதாவின் உடலை தந்திருக்க அதை ஆம்புலன்சில் ஏற்றியவர்கள் ஸ்வேதாவின் வீட்டை நோக்கி அனைவரும் கிளம்பியிருந்தார்கள்.. கோகிலாவுக்கும் ஸ்ருதிக்கும் அழுது அழுது கண்ணீர் வற்றிப்போய் இருக்க  உடலெல்லாம் துணியால் சுற்றப்பட்டு முகம் மட்டும் வாடாமல் பூப்போல் இருந்த ஸ்வேதாவின் முகத்தை பார்த்து பார்த்து அழுதார்கள் .. வீட்டில் உறவினர்கள் அனைவரும் வந்திருக்க அஸ்வினின் நண்பர்கள் அங்கிருந்த மற்ற வேலைகளை கையில் எடுத்தனர்..
 
கோகிலாவால் தன் மகளை இந்த நிலையில் பார்க்கமுடியவில்லை.. செல்லமாய் வளர்த்த மகள்.. 23 வயதிற்குள் இப்படி ஒரு நிலையா..!! யாரை நோவது..?? அதுவும் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது.. பிறந்தவீட்டை விட்டு வந்து
பத்து நாட்கள்தான் முடிந்திருந்தது..
 
ஆயிற்று இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது.. ஸ்ருதி குடும்பம் இங்கேதான் இருந்தார்கள்.. குழந்தையை பார்த்துக் கொள்ளவே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்க வீட்டிற்கும் துக்கம் கேட்டு ஆட்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.. தந்தைதான் தனியாக சென்று அஸ்வினோடு அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்..
 
தன் தாயை தனியாக அழைத்த ஸ்ருதி, அம்மா அக்கா குட்டிப்பையன மட்டும் விட்டுட்டு எங்கம்மா போனா..??”
 
மாமா எப்ப ஊர்ல இருந்து வந்தாங்க..?”
 
இவங்க கார் ரெண்டும் இங்க இருக்கு.. அப்ப ஆக்சிடெண்ட் ஆன கார் யாரோடதுமா..??”
 
எதுக்கு அக்கா அந்த கார்ல போனா..?”
 
அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அக்காவோட இன்னொருத்தரும் ஆக்சிடென்ட்டில இறந்ததா சொன்னாங்க அவர் யாரும்மா..??”
 
ஏற்கனவே இடிந்து போயிருந்த கோகிலா தன் மனதிற்குள் ஓடிய கேள்விகளை எல்லாம் மகள் கேட்கவும்  அவருக்கு பதில் தெரியவில்லை.. அதைவிட தெரிந்து கொள்ள பயமாய் இருந்தது.. அவர் மனதிற்குள்ளும் ஏதோ ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது.. தன் மகளை போல இந்த கேள்விகளை யாரிடம் சென்று கேட்பது..??
 
எனக்கு எதுவும் தெரியலடா ..??”அவர் அழுது கொண்டே சொல்ல இன்னும் நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் யாரிடம் தெளிவு படுத்திக்கொள்ள அது தெரியாமல் ஸ்ருதியும் அமைதியாகவே இருந்தாள்..
 
 
 அஸ்வின் தன் தாயை தவிர யாரிடமும் ஒரு வார்த்தை பேசுவதில்லை.. குழந்தையை சற்று நேரம் வைத்திருப்பவனால் அதன் அழுகையை சகிக்க முடியவில்லை.. மூன்று மாதக்குழந்தைக்கு அனைவரையும் விட தாய்தான் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் என்ன செய்ய..!! திடிரென தாய்பாலை நிறுத்திவிட்டு பவுடர் பாலை கொடுக்கவும் அதுவேறு வயிற்றுக்கு சரியில்லாமல் ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டிற்குமாக அலைகிறார்கள்..
 
 ஸ்வேதா மாமியார் கற்பகம் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர் ஸ்வேதா இறந்ததிலிருந்து வாயே திறப்பதில்லை.. தன் மகனை பார்த்து பார்த்து கண்ணீர் வடித்தார்.. ஒரே மகன் அவன் வாழ்க்கை இப்படி கருகிப் போனதில் அவருக்கு அவ்வளவு வேதனை.. அதைவிட இந்த குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம் என்பதே அவருக்கு முன் பூதாகரமாக நின்றது..
 
 ஸ்ருதி தன் தந்தையிடம் அடிக்கடி போய் தன் சந்தேகங்களை கேட்க அவர் அவளை வாயே திறக்கவிடுவதில்லை.. மீறி கேட்டால் ஒரு முறைப்பு இல்லையென்றால் திட்டு.. அஸ்வினிடம கேட்கலாம் என்றால் அவனிடம் இதுவரை அதிகம் பேசியதே இல்லை..
 
ஒரு வாரம் கழித்து ஸ்ருதி கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.. இந்த சூழ்நிலை அவளுக்கு மூச்சு முட்டியது.. இவர்களின் அமைதியே அவளை அச்சுறுத்த இவள் கிளம்பிவிட்டாள்.. சந்திரனும் கோகிலாவும் குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் இன்னும் சிலநாட்கள் கழித்து போகலாம் என முடிவு செய்தார்கள்.. அஸ்வின் அடுத்த மூன்று நான்கு நாளிலேயே தன் கம்பெனிக்கு கிளம்பியிருந்தான்.. வீட்டு வேலைக்கு சமையல் வேலைக்கு ஆளிருந்தாலும் குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தார்கள்..
 
 
ஸ்ருதி கல்லூரிக்கு வந்ததும் தோழர் தோழிகள் வந்து ஆறுதல் சொல்லிச் செல்ல இந்த ஒரு வாரம் விட்டுப்போன பாடங்களை எழுதவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது… இடையில் குழந்தை நியாபகமும் தன் அக்காவின் நியாபகமும் வரும்போது தன் தாய்க்கு போன் செய்து பேசுவாள்.. அவளுக்குமே ரோஜா நிறத்தில் குட்டி குட்டி கைகால்களை அசைத்து தலையில் பொசுபொசுவென முடி முகச்சாயலை பார்க்கும்போது அஸ்வினை போலிருந்த தன் அக்காவின் குழந்தையை விட்டு வர மனதில்லை என்றாலும் அந்த சிறு குழந்தையை தூக்கி பழக்கமில்லாததால் தாயின் மடியில் இருக்கும் போதுதான் கொஞ்சுவாள்.. தனியாக தூக்கி கொஞ்ச பயம்.. தான் இருந்தாலும் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது இல்லை தெரியாது அதைவிட அவர்களின் அந்த வேதனை முகத்தை பார்க்க முடியவில்லை..
 
 
 
பெரும்பாலும் தூக்கத்தில் இருக்கும் குழந்தை இரவானால் கண்விழித்து தன் முட்டை கண்ணை உருட்டியபடி அழும் அல்லது சிரிக்கும்.. அடிக்கடி அஸ்வின் எழுந்து வந்து பார்த்து செல்வான் இல்லையென்றால் தன் பக்கத்தில் படுக்க வைத்து கொள்வான்.. இவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும் எப்படி பயமில்லாம தூக்குறாங்க என்று அவன் குழந்தையை கொஞ்சும் போது பேவென பார்த்து நிற்பாள்..பெருசானா இவனும் அவங்க அப்பா மாதிரி உம்முனா மூஞ்சியாத்தான் வருவானோ..??
 
அஸ்வின் திருமணம் முடிந்து வெளிநாடு சென்றவன் ஸ்வேதா இறப்பதற்கு முதல்நாள்தான் வந்திருந்தான்.. இவளுக்கு அஸ்வினும் ஸ்வேதாவும் சிரித்து பேசி பார்த்ததாக நியாபகம் இல்லை.. ஜோடியாக பார்த்த இரண்டு மூன்று தருணங்களிலும் ஒன்று அவன் போன் பேசிக் கொண்டிருப்பான் இல்லையென்றால் லேப்டாப்பில் வேலைப்பார்த்து கொண்டிருப்பான்.. இவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்..
 
 
தோழிகளின் உற்சாகப்பேச்சால் ஸ்ருதி மெல்ல மெல்ல தன் கூட்டுக்குள் இருந்து வெளியில் வந்திருந்தாள்.. அவள் வந்த அன்று ஹாஸ்டல் வார்டன் ஒரு கடிதத்தை கொடுத்திருக்க அதைப்படித்து பார்த்தவளுக்கு பல கேள்விகளுக்கு விடை தெரிந்தது.. இரண்டு நாட்கள் அந்த கடிதத்தை நினைத்திருந்தவள் பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தாள்.. இன்னும் இரண்டு மாதத்தில் பிராஜக்ட் வேறு சம்மிட் பண்ணச் சொல்லியிருக்க இனி அந்த வேலையை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும் மற்றதை பிறகு யோசித்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தாள்..
 
 
அன்று கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தவள்  தன் தோழி சந்தியாவை பார்க்கவும், ஏய் இந்த பத்து நாளும் பிராஜக்ட் பத்தி எதுவும் யோசிக்கவே இல்லையாடி.. நீ என்னதான் பண்ணின .. நம்ம குரூப்ல யாரு அந்த லோகேஷ் மண்டையனும்  கார்த்திக் தடியனும் தானே.. அந்த ரெண்டு தடியன்களும் என்னதான் பண்றாங்க.. இன்னைக்கு பாரு அவனுங்கள என்ன பண்றேன்னு..??”
 
அந்த லோகேஷ் என்பவன் அந்த கல்லூரியின் ரௌடி என பெயர் எடுத்திருக்க பீம்பாய் போல அவ்வளவு உயரம் அதற்கேற்ற உடல்வாகு அடியாள் போல இருப்பவனை பார்த்தாலே சந்தியாவுக்கு உள்ளுக்குள் பயம்..
 
 லோகேஷ் கல்லூரிக்கு முன்னால் இருக்கும் பஸ்ஸ்டான்டில் நின்று அங்கு வரும் பெண்களை தன் நண்பர்களோடு சைட் அடித்துக் கொண்டிருக்க அவன் பின்னால் சென்றவள், டேய்ய்ய்ய்….” என சத்தமாக கத்தினாள்..
 
கும்பலாக நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பி பார்க்க இவ யார இப்படி பாசமா கூப்பிடுறா..?? அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. ஐயோ எல்லார் முன்னாடி மானத்தை வாங்கிருவாளே ஆளாளுக்கு யோசிக்க ,
 
டேய் லோகேஷ் மண்டையா வாடா இங்க..??”
 
அவன் நண்பர்களோடு சேர்த்து அங்கு வந்து கொண்டிருந்த மாணவிகளும் கொல்லென சிரித்துவிட இவனுக்குத்தான் அவமானமாக போயிற்று..இவள..” சட்டையை மடித்து விட்டவன் அவளே நோக்கி வேகமாக வர..
 
சந்தியா ஸ்ருதியின் முதுகுபுறம் பயந்து போய் ஒளிந்து நின்றாள்.. அடிப்பதுபோல அருகில் வந்தவனை இரண்டு கைகளால் தடுத்தவள் ,”டேய் எருமைமாடுமாதிரி மோதிராத.. இந்த டிரஸ இப்பத்தான் அயர்ன் பண்ணி போட்டிருக்கேன் கசங்கிறாம..!!”
 
ஏய் இந்த காலேஜே என்ன பார்த்து அப்படி நடுங்குது.. உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா எல்லாரும் இருக்கும்போதே என்னை இப்படி அசிங்கப்படுத்துவ..??”
 
அவங்க எல்லாருக்கும் குளிரா இருந்திருக்கும் அதான் நடுங்கியிருப்பாங்கடா.. உன்னை பார்த்துன்னு நினைச்சிட்டியா.. சரி சரி ப்ராஜக்ட் என்னாச்சு உன்னோட போய் என்னை கோர்த்து விட்டிருக்காங்க பாரு என் நேரம்.. என்னடா ஆச்சு..?”
 
இவள ஒன்னும் சொல்ல முடியாது.. பதிலுக்கு பதில் பேசும் அராத்து,, எத்தனை டா போடுறா..?? நமக்கு வாய்த்த அடிமை எங்க..!! ஸ்ருதியின் பின்புறம் நின்ற சந்தியாவை பார்த்தவன்,” ஏய் குள்ளவாத்து உன்கிட்ட என்ன சொன்னேன்..? பணம் செலவாகும் மூனுபேருகிட்டயும் கலெக்ட் பண்ணி கொண்டுவரச் சொன்னேன்தானே கொண்டு வந்தியா..
 
அவளை முறைத்தவனை பார்த்த சந்தியாவுக்கு பயத்தில் மயக்கம் வருவது போலிருக்கவும் ஸ்ருதியின் கையை கெட்டியாக பிடித்தவள் இ… இல்ல என்னோட பணம் இந்தாங்க..” தன் பர்சிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்க,
 
டேய் மண்டையா எனக்குள்ள அமௌண்ட்ட நீயே போட்டிரு..?”
 
ஏய் குரங்கே என்னை லோகேஷ்ன்னு கூப்பிடு.. எருமை மாடே..என்னை ஏன் இப்படி அசிங்கப்படுத்துற.. அப்புறம் உனக்கு நான் பணத்தை கொடுக்கனுமா இதுக்கு வேறாள பாரு..??” அவனும் சிலிர்த்து நிற்க..
 
அப்ப நீ பணம் போட மாட்ட..
 
மாட்டேன் உன்னால முடிஞ்சத பார்த்துக்க.. மேம்கிட்ட சொல்லி என்னோட வேற ஆள சேர்த்துக்கப் போறேன்..
 
அவள் புறங்கையை நோண்டிய சந்தியா,” யேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டி.. உன்னோட பிராஜக்ட்டுக்கு இவன் பணம் தரனுமா.. ஏண்டி இப்படி அநியாயம் பண்ற ..” அவள் காதிற்குள் கிசுகிசுத்தாள்..
 
யேய் இவனுக்கு நீ சப்போர்ட் பண்ணாம அந்த கார்த்திக் தடியன் வர்றான் பாரு அவன்கிட்ட பணத்தை வாங்கு.. நான் இவன்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன்..?” சந்தியா ஆள விட்டா போதுமென கார்த்திக்கை நோக்கி ஓட..
 
லோகேஷை பார்த்தவள்,” சரிடா நான் வேற குரூப்போட சேர்ந்துக்குறேன்.. நான் ஒரு வீடியோவை நம்ம வாட்ஸ் அப் குரூப்க்கு அனுப்பலாம்னு வைச்சிருக்கேன் அத பாரு.. ??”அவள் தன் போனை எடுத்து காட்ட அதில் ஒரு மாணவியிடம் அவன் காதலை சொல்லி அடிவாங்கியதை அவள் வீடியோ எடுத்து வைத்திருந்தாள்..
 
அதை பார்த்தவனின் முகம் அஷ்டகோணலாகி ,”இத எப்ப எடுத்த லூசு.. பக்கி..??” அந்த போனை பறித்து வேகமாக அதை டெலிட் செய்தவன்..மூச்சை இழுத்துவிட்டு ,” இப்ப என்ன பண்ணுவ.. இப்ப என்ன பண்ணுவ ஹாஹாஹா..” அட்டகாசமாக சிரித்தவன் அவள் மண்டையில் ஒரு கொட்டு வைக்க..
 
ஹாஹாஹா ஹிஹிஹி…. ஹுஹுஹு இவளும் வயிற்றைப்பிடித்துக் கொண்டு சிரித்தவள்,” இதுக்குத்தான்டா ஆளு வளர்ற அளவுக்கு அறிவும் வளரனும்னு சொல்றது..”  அவளுக்கு எட்டாமல் இருந்தவனை குதித்து இரு கொட்டுக்கள் வைத்து,” இதை நான் என்னோட லேப்டாப்லயும் சேவ்பண்ணியிருக்கேன்டா.. மங்கூஸ் மண்டையா.. அவனுக்கு வக்கலம் காட்டியவள்.. இப்ப என்ன பண்ணுவ .. இப்ப என்ன பண்ணுவ..??”
 
போடி பிசாசே இதுக்கெல்லாம் அனுபவிப்ப பாரு..?? பொம்பள ரௌடி.. சந்தியா கார்த்திக்கோடு அங்கு வந்திருக்க அவனே ஸ்ருதிக்கு பணம் போடுவதாக சொல்லவும் சந்தியா அதிர்ச்சியில் வாய்திறந்தபடி நின்றாள்..
 
ஏய் வாய மூடுடி.. டெங்கு கொசு ஒன்னு வாய்க்குள்ள போகப்போகுது..??” அவள் வாயை தன் கையால் மூடியால் தரதரவென இழுத்து சென்றாள்..
 
……………………………………………………………….
 
அங்கு அஸ்வின் தன் டையை தளர விட்டிருந்தவன் சர்ட் பட்டனை கழட்டிவிட்டு  தன் கேபினில் தன் இருக்கையில் பின்னால் சாய்ந்திருந்தான்.. ஒரு காலை கீழே வைத்து மறுகாலால் அந்த சேரை சுழற்றிக் கொண்டிருந்தவனுக்கு தன் வாழ்க்கையில் எங்கே தவறிழைத்தோம் என்றே புரியவில்லை..
 
அஸ்வின் 29 வயது ஆண்மகன் வெளிநாட்டில் தன் மேல்படிப்பை முடித்து இரண்டு மூன்று சாப்ட்வேர் கம்பெனி நடத்திவருகிறான்..பத்து வயதில் தந்தை இறந்திருக்க நெருக்கமான சொந்தங்கள் இல்லாமல் தாயும் மகனும் மட்டும்தான்.. திருமணம் முடிந்து அஸ்வின் பிறந்தவுடன் பிழைப்புக்காக கிராமத்தை விட்டு இங்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்கள்.. கிராமத்தில் வீடு நிலம் இருந்தாலும் எப்போதாவது கற்பகம் மட்டும் சென்றுவருவார்.. அஸ்வினை அவன் போக்குக்கே விட்டுவிட அவனும் நன்கு படித்து இங்கேயே தொழிலை துவங்கிவிட்டான்..
 
அஸ்வின் ஆறடி உயரம் அதற்கேற்ற உடல்வாகு உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய புஜங்கள்.. அகன்ற மார்பு..யாருக்கும் அடங்காத தலைமுடி..அழுத்தமான உதடுகள் சிரித்தால் இன்னும் அழகாக இருக்கும்.. முகத்தை எப்போதும் இறுக்கமாகவே வைத்திருப்பான்.. அதிகம் பேசமாட்டான்.. செயல்தான் அதிகமாக இருக்கும்.. தாய்மேல் அதிக பாசமுள்ளவன்..24 மணி நேரமும் வேலை வேலை அது மட்டுமே அவன் மூச்சு.. காலை எட்டு மணிக்கு கிளம்பி போனால் இரவு திரும்ப 11 மணிக்கு மேலாகும்..
 
25 வயதில் இருந்தே அஸ்வினை திருமணத்திற்காக கேட்டு வந்தவர் அவன் பிடிகொடுக்காமல் இருக்க தானே அந்த வேலையில் இறங்கிவிட்டார்..27 வயதில் இருந்து பெண்தேடி தரகர் மூலம்தான் ஸ்வேதாவை முடித்திருந்தார்.. மகன் ஜெர்மனியில் தொழில் ஆரம்பிக்க இருப்பது தெரிந்து இப்போதுவிட்டால் அவனை பிடிக்க முடியாது என அவசர அவசரமாக ஒரே மாதத்தில் திருமணத்தை முடித்து வைத்தார்.. அவனுக்கும் தன் விருப்பத்தைவிட தாய்க்கு பிடித்தால் போதும் என்று நினைத்தவன் ஸ்வேதாவை மறுக்க காரணம் எதுவும் இல்லை..
 
 நல்ல அழகு..m.com படித்திருந்தாள்.. அதைவிட பார்க்க அமைதியாக தெரிய அஸ்வினுக்கு அதுவே போதுமாக இருந்தது.. அதைவிட அவனுக்கு அங்கு ஜெர்மனிக்கு செல்வதற்கு முன் இங்கு பார்க்க வேண்டிய வேலைகள் வரிசைகட்டி நிற்க அதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது..
 
திருமணம் என்பது வாழ்வின் எவ்வளவு பெரிய நிகழ்வு.. அதை அனுபவித்து மகிழாமல் அதை ஒரு கடமையாக நினைத்தவன் தன் தாயின் நச்சரிப்பு இனி இருக்காது வீட்டிற்கு மருமகள் என்ற பெயரில் ஒரு பெண் தாய்க்கு துணையாக இருப்பாள் என்ற எண்ணமே அவனுக்கு மேலோங்கியிருந்தது.. அதைவிட அவனுக்கு திருமணத்தில் லயிப்பு இல்லாமல் தன் கம்பெனியைத்தான் விரும்பினான்..
 
 
போன் ஒலி அவன் கவனத்தை கலைக்க நேராக அமர்ந்தவன்,” சொல்லுங்க கணேஷ்.. 
 
ஸார் உங்கள பார்க்க கம்பெனி பேரை சொன்னவன் அந்த கம்பெனியோட MD வந்திருக்கார் ஸார்..
 
ஒரு பைமினிட்ஸ் கழிச்சு வரச் சொல்லுங்க.. ரெண்டு ஆப்பிள் ஜூஸ் அனுப்பச் சொல்லுங்க..” தன் சர்ட் பட்டனை மாட்டியவன் தன் தலையை கோதி தன்னை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தான்..
 
அவன் கம்பெனிக்கு வந்த நாளில் இருந்து இதுபோலத்தான் துக்கம் கேட்கும் சாக்கில் அவன் நெஞ்சை குத்திக் கிழிக்க ஒரு கும்பலே தினமும் வந்து கொண்டிருந்தது.. இந்த சிறுவயதில் அவன் முன்னேற்றத்தில் பொறாமை கொண்ட போட்டி கம்பெனிகாரர்கள் அவன் மனைவி இறந்த சோகத்தில் அவன் மனம் எவ்வளவு பாடுபடும் என்பதை கவனிக்க ஆறுதல் சொல்வது போல தினம் வர அவன் முகததில் சிறு வருத்தத்தையும காட்டவில்லை.. எப்போதும் போல அதே அமைதி.. அதேபேச்சு.. அதே இறுக்கம்..
 
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஸ்ருதியும் தன் பிராஜக்ட் ஒர்க்கில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.. அன்று மாலை கல்லூரி விட்டு வந்தவள் உடைமாற்றி கைகால் கழுவி ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி தன் தாயை வீடியோகாலில் அழைத்தவள் தாயின் மடியில் படுத்திருந்த குழந்தையை கொஞ்ச ஆரம்பிக்க..
 
ஸ்ரீக்குட்டி செல்லக்குட்டி அம்முகுட்டி..”
 
ஸ்ரீஜன் என்ன பண்றிங்க.. மம்மு சாப்பிட்டிங்களா.. 
 
ஸ்ருதியின் முகத்தில் தன் மூத்த மகளை கண்டவர் சின்ன வயசில இருந்தே இந்த பொண்ணுக்கிட்ட இருந்த தைரியம், தெளிவு அவக்கிட்ட இல்லாம போச்சே.. ரெண்டு பேரையும் ஒரே மாதிரிதான வளர்த்தேன்.. எதில குறை வைச்சேன்.. அவருக்கு இப்போது ஸ்வேதா இறந்ததைவிட இந்த குழந்தையின் நிலையை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தார்..
 
ம்மா.. ம்மா சத்தமாக அழைக்க,
 
 என்ன ஸ்ருதி ஏன் இப்படி கத்துற.. பாரு குழந்தை பயப்பட போகுது..
 
அதெல்லாம் பயப்பட மாட்டான் ஆம்பள சிங்கம்தானே எங்கச் செல்லக்குட்டி.. அப்பா எங்க கேட்டுட்டே இருக்கேன் பதிலே சொல்லாம இருக்கிங்க..
 
அப்பாவுக்கு லீவு முடிஞ்சிருச்சு அதான் வேலைக்கு கிளம்பி போயிட்டாங்க..?”
 
அப்ப நீங்க போகலையா..”
 
ப்பச் எனக்கு போகவே மனசில்லடி.. அப்பாவுக்கும் மனசில்ல இன்னைக்கே வேண்டா வெறுப்பாத்தான் போயிருக்காங்க.. இந்த ஊருக்கே டிரான்பர் கேட்க போறதா சொன்னார்டி..
 
ஸ்ருதியோ நாமளே இதப்பத்தி அப்பாட்ட பேசலாம்னு நினைச்சோம் அதுவே நடக்குதா.. பரவாயில்ல வேலை மிச்சம்.. ம்மா ஸ்ரீக்குட்டி முகத்துக்கு நேரா போனை காட்டுங்கம்மா.. ??” மீண்டும் தன் போக்கில் குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தாள்..
 
 
                                                                   இனி…………….????

Advertisement