Advertisement

அத்தியாயம் நான்கு :

குருபிரசாத் ஃப்ளைட்டில் பறந்து கொண்டிருந்தான் அலுவலக வேலை நிமித்தம். ஒரு வார வேலை டெக்ஸாசிற்கு, நினைவுகள் அவனோடு சேர்ந்து பயணித்தது!

அன்று ஹாஸ்பிடலில் அர்த்தனாரி வந்தவுடனே குரு அவரிடம் பேசப் போனான். ஆனது ஆகட்டும் உண்மையைச் சொல்லிவிடுவோம் என்று. க்ஷண நேரத்தில் சுதாரித்த அரசி அவனைப் பேச விடவில்லை. அவனைப் பார்த்து வேண்டாம் என்பது போல தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே தலையையும் அசைக்க, மீறி அவனால் பேச முடியவில்லை.

அதற்குள் நாதன் கண்விழிக்க, அவரோடு பேசியிருந்து கிளம்பினர்.

அவர்கள் நடக்க, அரசி பின்தங்கி குருவைப் பார்க்க, தனக்காகப் பார்க்கின்றாள் என்று புரிந்து, போவதா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்திப் போகவேண்டாம் என்று முடிவு செய்து அவன் தேங்கி நிற்க, ஜோதியிடம் “உன் அண்ணாவை ஒரு நிமிஷம் வரச் சொல்லு!” என்றாள் அரசி.

ஜோதி அண்ணனைப் பார்க்க, வேறு வழியில்லாமல் சென்றவனிடம் “அவசரப்பட்டு சொல்ல வேண்டாம், உங்கப்பா மாதிரி எங்கப்பா ஹாஸ்பிடல்ல எல்லாம் படுக்க மாட்டார். உங்களைப் படுக்க வெச்சிடுவார், அது இங்க பிரச்சனையில்லை, என் பொண்ணுக்கு அமையாத வாழ்க்கை உங்க பொண்ணுக்கும் அமையக் கூடாதுன்னு கிளம்பிடுவார். உங்க தங்கச்சிங்களுக்கும் கல்யாணம் நடக்க விடமாட்டார்!” என்றாள்.

“ஏய்! என்ன வந்ததுல இருந்து சும்மா மிரட்டிட்டே இருக்க! பூச்சாண்டி காட்றியா” என.

“எங்கப்பா கண்ணுக்குத் தாண்டா நீ ஹேண்ட்சம்! ஆனா என் கண்ணுக்கு நீ பூச்சாண்டி மாதிரி தான் இருக்க! நீயே ஒரு பூச்சாண்டி, இதுல உனக்கு பூச்சாண்டி காட்ட முடியுமா? என்று மனதில் தோன்ற,  முகத்தில் ஒரு சிறு நக்கலோடு,

“உங்க இஷ்டம், எனக்கென்ன?” என்று தோளைக் குலுக்கி சென்றவள் தான், திரும்ப அவனின் அப்பா ஹாஸ்பிடலில் இருந்து வந்த பிறகு அர்த்தனாரி தடபுடலாக சீர்வரிசை இறக்கினார். பத்து லட்ச ரூபாய் காரை நிறுத்தினார் வாயிலில், ஊரே “இவனுக்கு வந்த வாழ்வைப் பாரேன்! நாமளும் நம்ம பையனை இப்படிப் படிக்க வெச்சி வேலை வாங்கிடனும்!” என்று நினைக்க வைத்தது.

நடப்பவையை எல்லாம் பார்க்கத் தான் முடிந்தது குருவால். எதுவும் செய்ய முடியவில்லை. அவனின் அப்பாவும் அதே வார்த்தையைத் தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்த உடனே சொன்னார், “அசட்டுத்தனமா ஏதாவது செஞ்ச, உன் தங்கச்சிங்க வாழ்க்கையை நீயே முடிச்சிடுவ” என,

   எரிச்சலாக வந்தது “இவர் செய்த தப்பிற்கு நான் பலியாடா” என, அந்த நேரம் சரியாக, இவனின் திருமணம் இன்னும் அழுவலகத்திற்கு தெரியாததால், “அப்பாக்கு உடம்பு எப்படி இருக்கு, ஒரு அர்ஜன்ட் அசைன்மென்ட் ஒரு ஒன் வீக் டெக்ஸாஸ் போகணும்!” என, “சுயூர் சர்!” என்று கிளம்பிவிட்டான்.  

வாழ்க்கைத் தன் கையை விட்டுப் போகின்றது போல எண்ணம்.

பல நாட்களுக்குப் பிறகு அன்று தான் அவன் ஏர்போட்டில் காத்திருந்த போது மேக்னா பேசினாள், “ஹேய், என்ன நீ, எத்தனை மெயில் உனக்கு அனுப்பறது, இந்தியா வந்துட்டாயாமே, என்கிட்டே சொல்லவேயில்லை. எப்போ உன் நம்பர் கூப்பிடாலும் போகவேயில்லை!” என்று ஆங்கிலத்தில் பொரிய,

குரு தான் நம்பரை ப்ளாக் செய்திருந்தானே மேக்னாவிற்கு பயந்து. எத்தனை நாள் தவிர்ப்பது என்று தான் இன்று திரும்ப ஆக்டிவேட் செய்தான், உடனே அழைத்து விட்டாள். “சாரி டாலி! அப்பாக்கு உடம்பு சரியில்லை, ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிடல்ல இருந்தார்!” என்றான் அவனும் ஆங்கிலத்தில்.

“ஓஹ், அப்படியா! ஐ அம் சாரி! ரியல்லி சாரி! இப்போ எப்படி இருக்காங்க!” என்று சண்டையை விட்டு சமாதானமாகப் பேச,

“டாலி! ஐ மிஸ் யு வெரி மச்!” என்றவனிடம், “மீ டூ பிரசாத், நான் நாளைக்கு வந்துடுவேன்!” என்றாள்,

“பட், நான் இப்போ டெக்சாஸ் கிளம்பறேன்”, .. “சரி! நீ போ! நான் சென்னை போனதும் உங்க வீட்டுக்குப் போய் பார்க்கிறேன்!” என,

“வேண்டாம்! வேண்டாம்! இன்னும் யாருக்கும் நம்மைப் பத்தி தெரியாது. நான் வர்ற வரை அப்படி எதுவும் செய்திடாத!” என்றான். “ம்! சரி!” என மேக்னாவிடம் பதில் வாங்கி கைபேசியை வைத்தவன், இப்போது பறந்து கொண்டே அந்த நினைவுகளை அசை போட்டிருந்தான்.

ஒரு வாரத்தில் வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டது. எவ்வளவு மரியாதையான ஆண்மகனான தான், இப்போது ஒன்றுமில்லாமல் போய் விட்டதாக எண்ணம். எப்போதும் அப்பா தங்கைகள் என்று யோசித்து செயல்படும் நான் இப்போது எல்லோர் பார்வைக்கும் சுயநலாவதியாக மாறிவிட்டேன். இதற்கா இப்படி இரவு பகல் பாராமல் உழைத்தேன். மனதில் மிகவும் பாரமாக உணர்ந்தான்.   

சரி செய்து கொண்டாலும், தமிழரசியை விடப் போகின்றோம், வாழ்க்கை முழுவதுமே இந்த வடு இருவருக்கும் இருக்கும். அதுவும் பெண்ணாகிய அவளுக்கு மிகவும் அதிகம் என்றும் புரியத்தான் செய்தது.  ஆனால் புரியாதது, இரண்டாம் திருமணம் செய்து போவது எளிது, ஆனால் அந்த வாழ்க்கை முதல் திருமணத்தின் வடுக்கள் இல்லாமல் வாழ்வது எளிது அல்ல! அவனுக்குப் புரியவில்லை!

இதுதான் நமது சமூகம்! காதலிப்பவர்கள் இணையாமல் வேறு வேறு திருமணம் செய்து கொள்வதை ஒத்துக் கொள்பவர்கள், இப்படிக் கணவன் மனைவி பிரிந்து வேறு திருமணம் செய்வதை அனுமதிப்பதில்லை.

என்னவோ அரசியைப் பிரிந்து விடுவது எளிது என்பதுப் போல நினைத்து இருந்தான். ஆனால் அர்த்தனாரி என்று ஒரு மனிதர் இருக்கும் வரை அது சாத்தியமேயில்லை என்று இன்னும் அவனுக்குப் புரியவில்லை.

மகளின் மாப்பிள்ளை என்பதால் தான் அந்த மரியாதை, இல்லை அவன் சாதாரண மனிதனே! ஆனால் அவன் எவ்வவளவு பெரிய மனிதன் என்றாலும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார்.

குருபிரசாத்தும் அதற்கு சளைத்தவன் அல்ல, ஆனால் இது அவன் விஷயம் அல்ல, யார் என்ன செய்தாலும் “பார்த்துக்கலாம் வாங்கடா!” என்று சொல்ல,

அவனுக்கு இரு தங்கைகள்! ஊரோடு ஒட்டி வாழ்ந்தாக வேண்டும், அவர்களின் வாழ்க்கைக்காகவாவது. தங்கைகள் என்ற பாசம் இருக்கும், ஒட்டுதலும் இருக்கும். ஆனால் எல்லாம் பகிர்ந்து பேசும் நெருக்கம் கிடையாது. ப்ளஸ் டூ முடித்தவுடனே வீட்டை விட்டுப் போய்விட்டான், அதன் பிறகு காலேஜ் முழுவதும் ஹாஸ்டலில், பின்பு வேலை தனியாக சென்னையில். இதற்கு பொன்னேரி பக்கம் தான். வாரம் வாரம் என்ன இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூட வரலாம், தினமும் கூட வந்து போகலாம். ஆனால் அவன் தான் விடுமுறை, ஒய்வு, எதுவும் இல்லாமல் உழைத்தானே! பின்பு பாதி நாட்கள் வெளிநாட்டு வாசம், வீடு பக்கத்தில் இருந்தாலும் அவன் தூரத்தில் தான்!

ஆனால் அவன் செயல் எல்லாம் குடும்பத்தை ஒட்டியே இருக்கும். அதுதான் மனதிற்கு வருத்தமாக இருந்தது. அவனின் வாழ்க்கையை இப்படி அவனுக்கு தெரியாமல் முடிவெடுத்து, இப்படி அப்பா செய்தது அவனால் தாள முடியவில்லை.

என்ன செய்வது எப்படிச் சரி படுத்துவது என்றும் தெரியவில்லை. தங்கைகள் மேல் அவ்வளவு கோபமாக வந்தது. ஒரு வார்த்தைக் கூட தன்னிடம் சொல்லாமல் விட்டுவிட்டார்களே. எல்லோரும் சுயநலவாதிகள் என்று தோன்றியது.

தங்கைகளை திட்ட மட்டுமே பேசினான், இப்போது அமெரிக்கா கிளம்பும் போது கூட அவர்களிடம் சொல்லவில்லை, “என்ன செய்யப் போகிறானோ?” என்று விடாமல் முகத்தைப் பார்த்த தந்தையை பாராது, “நான் வர ஒரு வாரம் ஆகும்!” என்று எங்கோ பார்த்துச் சொல்லி கிளம்பினான்.

சீர்வரிசையைக் கொண்டு வந்து இறக்கிய அர்த்தனாரியிடம், “நான் வந்ததும் பேசிக்கலாம், நானே இங்க இல்லை, தமிழரசி இங்க தனியா இருக்க கஷ்டமா இருக்கும்!” என்று அங்கிருந்த பொன்னேரி வீட்டைச் சொல்ல,

“அதென்ன மாப்பிள்ளை அப்படி சொல்லீட்டீங்க, எதுக்கு கஷ்டமா இருக்கும், உங்க தங்கச்சிங்க இருக்காங்க! அப்பா உடம்பு சரியில்லாம இருக்கார். இங்க இருக்கட்டும் உங்க வீட்ல!” என்று அந்த மனிதர் நிற்க..

அவனின் அப்பா நாதன் தான், “அவன் சொல்றது சரி தான் மச்சான், அவன் வரட்டும்!” என்றார். அதன் பிறகே மகளை அழைத்துப் போனார்.

தமிழரசியிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் யு எஸ் கிளம்பிவிட்டான், அவனுக்குத் தெரியும், இது இமாலய தவறு என்று. ஆனால் அரசிக்கு தன்னைப் பிடிக்காமல் போகவேண்டும் என்று முழுமூச்சாக இருந்தான்.

யுஎஸ்சில் இறங்கும் வரை தான் இந்தக் குழப்பம். அதன் பிறகு அவன் சிந்தனைகளை வேலையில் திருப்பினான். அது அவனுக்கு மிகவும் முக்கியம். இதில் தவறு வந்தால் அவன் மட்டுமே பொறுப்பு என்றுணர்ந்து ஒரு வாரம் சிரத்தையாக அதில் கவனம் வைத்தான். ஆனால் ஒருவாரத்தின் வேலையை மூன்று நாட்களில் முடித்து விட்டான், அதன் பிறகு இந்திய ஹெட் வேறு சில வேலைகளையும் சொல்ல அதையும் செய்தான். மொத்தத்தில் பதினைந்து நாள் வேலையை ஒரு வாரத்தில் முடித்தான்.

இதில் அவன் தொலைத்து தூக்கம். வேலை மட்டுமல்ல அவனின் வாழ்க்கை பிரச்சனையும் அவனை உறங்க விடவில்லை. அவனிற்குத் தெரியாமலே அவனின் இதயத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.

திரும்ப இந்தியா வந்த போது அவனின் அழுத்தம் இன்னும் அதிகரித்தது. ஆம்! அலுவலகம் சென்றால் மேக்னாவை பார்க்க வேண்டும். பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்த போதும், அவளிடம் விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற அழுத்தம் இன்னும் கூடியது.

அவனின் அபார்ட்மெண்டிர்க்குச் சென்று குளித்து கிளம்பிய போது, வீட்டில் இருந்து இறங்க காலே வரவில்லை. சிறிது நேரம் வீட்டை சுத்தப் படுத்தி நேரத்தைக் கடத்தினான். சென்று தானே ஆகவேண்டும்! சந்தித்து தானே ஆகவேண்டும்! சென்றான்! இவனை அலுவலகத்தில் பார்த்ததுமே மேக்னா “ஹாய்” என்று அருகில் வர, முகம் தானாக மலர்ந்தது குருப்ரசாதிற்கு, “ஹாய் டாலி!” என்றான் பதிலிற்கு,

“ஹேய், என்னப்பா நீ இன்னும் ஹேண்ட்சம் ஆகிட்ட!” என்று அவள் கண்களை சுருக்கி கண்ணடித்துச் சொல்ல, எப்போதும் “நீ பார்க்கலை தானே! அதனால் என்னை யாரும் கண்வைக்கலை!” என்று கலாய்ப்பவன் இன்று அமைதியாக புன்னகை மட்டுமே செய்ய,

“என்ன? நானும் அழகாகிட்டேனா பேச்சே காணோம்!” என்று சிரித்தாள்.

ஆம்! என்பது போல தலையசைத்தவன், “எனக்கு ரிப்போர்ட் பண்ணனும், நாம இன்னைக்கு ஈவ்நிங் ஒரு டின்னர் போகலாம்!”  

“என்னது?” என்று ஆச்சரயமாக அதிர்ந்தாள். பின்னே வெளியே என்று அழைத்தால் வரவே மாட்டான். நாம லவர்ஸ் ன்னு பார்க்க்கரவங்களுக்கு தானா தெரியணும், நீ காட்டவே மாட்டேன்ற!” என்று சலிப்பாள். 

“உன்னோட டப்பா ஹோட்டல் இல்லை, உன்னோட ஸ்ட்ரீட் ஹோட்டல்ஸ்க்கு நான் வரமாட்டேன்!” என்று தலையசைக்க, “நோ! என்னோட டேஸ்ட்க்கு இல்லை, உன்னோட டேஸ்ட்க்கு ப்ளேஸ் நீ செலக்ட் பண்ணு!” என,

“ஓஹ் வாவ்! என்ன அச்சு உனக்கு! டின்னர் எல்லாம்! ஐ லவ் இட் அண்ட் லவ் யு டூ” என்க, ஒன்றுமே சொல்லாமல் வருகிறேன் என்பது மாதிரி தலையசைத்து குரு அவனின் ஹெட் பார்க்கச் செல்ல,

 குருபிரசாத் செல்வதையே ரசித்து நின்றிருக்க, அவளின் அருகில் இருந்த தோழி ஒருத்தி,

“ஐயோ! திரும்ப இவ லவ் சீன ஓட்ட ஆரம்பிச்சிட்டா, எங்க இருந்தோ வந்து எங்க பசங்களை தட்டிட்டுப் போயிடறாங்க, இவனுங்களும் வெள்ளைத் தோலை பார்த்தா விழுந்திடறாங்க!” என்று செல்லும் குருபிரசாத்தை முறைத்துப் பார்த்தாள்.

திரும்பி மேக்னாவை பார்த்தாள், “என்ன நல்லா இருக்கா இவ? மைதா மாவு மாதிரி இருக்கா! இவ முகத்தை ஒரு தடவை தான் பார்க்க முடியும் பார்த்துகிட்டே இருக்க முடியாதுன்னு இவனுங்களுக்கு ஏன் புரியலை!”

“இவளைப் பார்த்து ரசிக்கத் தான் முடியும்! குடும்பம் நடத்த முடியாதுன்னு இவனுங்களுக்கு ஏன் தெரியலை! கிறுக்கன், இவளைப் பார்த்துட்டே இருந்தா சாப்பிட வந்திடுமா, கிட்சன்னா, அப்படின்னா என்னன்னு கேட்கறா? எனக்கு ஹாட் வாட்டர் தான் பாயில் பண்ணத் தெரியும்னு சொல்றா! ம்ஹும்! யாருக்குத் தெரியும் இவனே சமைச்சும் போடுவான், காலும் அமுக்கி விடுவான்!” என்று பார்த்து இருக்க,

இவள் பார்ப்பதை பார்த்த மேக்னா “ஹேய் பவித்ரா! வை யு ஆர் லுக்கிங் லைக் திஸ்!” என “யு ஆர் சோ ப்ரெட்டி!” என்று சிரித்து வைத்தாள் பவித்ரா.

“எஸ்! அப்படித்தான் பிரசாத் கூட சொன்னான். வி ஆர் கோயிங் பார் எ டின்னர்!” என்று மலர்ச்சியோடு சொல்ல,

“ஐயோ! சாயந்தரம் வரை பேசுவா! நாளைக்கு காலையில வந்தும் பேசுவா! என் காது தீஞ்சிடுமே, இவ பக்கமே திரும்பிடாதடி பவி!” என்று சொல்லிக் கொண்டே பவித்ரா, கம்ப்யுட்டர் திரையை சின்சியராய் பார்க்க ஆரம்பித்தாள்.

 

Advertisement