Advertisement

அத்தியாயம் மூன்று :

ஆகிற்று! மூன்று நாட்கள் முடிந்து விட்டது திருமணம் முடிந்து! வாழ்க்கை இப்படி முழுக்க குற்றவுணர்ச்சியோடு மாறி விடும் என்று குருபிரசாத் நினைத்ததே இல்லை.

யாரும் நம்புவார்களா என்ன? ஆனால் அதுதான் உண்மை! அவனுக்குத் திருமணம் தெரியவே தெரியாது, வந்த பின் தான் தெரியும்! அவன் நிறுத்த முனைந்த போது அப்பாவிற்கு மாரடைப்பு. அப்போதும் தமிழரசியிடம் சொல்லிவிட்டான். அவளும் நிறுத்தவில்லையா? நிறுத்த முடியவில்லையா? தெரியவில்லை!

நாதனும் திருமணம் வேண்டாம் என்று சொல்லுகிறான் என்று நினைத்து, கடைசி நிமிடத்தில் சொன்னால் மறுக்க முடியாது எனத் தான் நினைத்தார். குரு காதலிப்பான் என்று நினைக்கவே இல்லை.

திருமணம் முடிந்து விட்டாலும், இந்த நொடி வரையிலும் மேக்னா மட்டுமே அவனின் மனதில். எப்படி இந்த சிக்கலை முடிப்பது எப்படி அரசியிடம் இருந்து விடு படுவது என்ற எண்ணம். இன்னும் இந்தத் திருமணம் தெரிந்தால் அவள் என்ன பாடுபடுவாள் என்று தான் எண்ணம் ஓடியது. இங்கே மூன்று நாட்களாக ஒருத்தி பாடுபடுவது அவனுக்குத் தெரியவில்லை.

அரசிக்கும் கஷ்டம் என்று புரிய செய்தது. ஆனால் அது ஒன்றும் அவனின் சிந்தனையில் பெரிதாக இல்லை! மாறாக குற்ற உணர்ச்சி மட்டுமே! தானா இப்படி ஒருத்தியிடம் காதல் சொல்லி இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டி… இப்படியிருக்கிறேன் என்று.         

அப்பாவை இப்போது ஐ சீ யு வில் இருந்து ரூமிற்கு மாற்றியிருந்தனர். அர்த்தனாரி புது மாப்பிள்ளை என்று அவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அப்பா ஹாஸ்பிடல் இருந்து வரட்டும் என்றார். ஆனால் அவன் செய்வதற்கு எதுவுமே இல்லை! அவனின் வீட்டை அர்த்தனாரி பார்த்துக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். எல்லா வேளைக்கும் அவரின் வீட்டினில் இருந்து உணவு வந்தது.

“நீங்க சமைக்க மாட்டீங்களா?” என்று குருபிரசாத் கத்த, “இல்லை அண்ணா, அவரை மறுத்துப் பேச முடியலை!” என்று சொன்ன ஜோதியைப் பார்த்து முறைக்கத்தான் முடிந்தது.

ஆம்! வந்ததில் இருந்து தங்கைகளிடம் கூட சரியாகப் பேசவில்லை. இப்படி ஒரு திருமண ஏற்பாட்டை தன்னிடம் சொல்லாமல் விட்டு விட்டார்களே என்று. ஒரு மெயில், ஒரு மெஸேஜ் எதுவுமில்லை. இருவரும் கல்லூரியில் படிப்பவர்கள்.

“ஒரு வார்த்தை யாரவது சொல்லியிருந்தா, இப்போ இவ்வளவு கஷ்டம் யாருக்கும் வந்திருக்காது!” என்று அவர்களை ஆவேசமாக கடிய, ஜோதி அமைதியாகத் தான் நின்றாள். ஆனால் அண்ணன் திட்டியதில் புனிதாவிற்கு அழுகை வந்து விட்டது. அப்பா சொல்லக் கூடாது என்று கட்டளையாக சொல்லியிருக்க அவரின் பேச்சை பெண்களால் மீற முடியவில்லை. கண்களில் கண்ணீர் வர, அப்போது பார்த்து அர்த்தனாரி தமிழரசியுடனும் மனைவியுடனும் வர, அவசரமாக கண்ணைத் துடைத்தால் புனிதா.

“எப்போ டிஸ்சார்ன்னு ஏதாவது சொன்னாங்களா?” என்றபடி அர்த்தனாரி கேட்க, “இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொல்லியிருக்காங்க!” என்று அவருக்கு பதில் கொடுத்தான்.

பார்த்திருந்த அரசிக்கு கோபம் கிளர்ந்தது, “என்னவோ பெரிய இவன் மாதிரி என் அப்பா இவனை மாப்பிள்ளை ஆக்கினால், மொட்டையாகப் பேசுகின்றான், மாமா என்று பின் சேர்க்க வேண்டும் என்று தெரியாதா?” என்று தோன்றியது.

“வாங்க மாமா!” என்று ஜோதி அர்த்தனாரியை உள்ளே அழைத்து செல்ல அவளோடு புனிதாவும் பூமாவும் செல்ல, பின் தங்கினாள் அரசி.

எதற்கு இவள் நிற்கின்றாள் என்று பார்க்க, “எங்கப்பா இங்க பெரிய மனுஷரா வாழ்ந்திட்டார்! இப்படி உறவு முறை சொல்லாம பேசக்கூடாது. மாமா, அத்தை, அண்ணா, அண்ணின்னு தான் என் வீட்டு ஆளுங்களை கூப்பிடணும்” என்றாள் சற்று அதிகாரமாக.

“தோ பார்ரா! அதிகாரம் தூள் பறக்குது!” என்று தான் குருவிற்கு தோன்றியது. அவள் சொன்ன தொனி இப்படி இல்லாமல் நல்ல விதமாக இருந்திருந்தால் உடனே சரி என்றிருந்திருப்பான். அப்படி ஒன்றும் மரியாதை தெரியாதவன் அல்ல குரு.

ஆனால் அரசி அதிகாரமாகப் பேசவும், “இவ்வளவு அதிகாரமாகப் பேசுபவள், ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை, நான் அவளிடம் பேசினேன் என்று சொல்லியே நிறுத்தியிருக்கலாம் தானே!” என்று தான் தோன்றியது.

அதனாலேயே “எனக்கு இந்தக் கல்யாணமே பிடிக்கலை, அப்புறம் எதுக்கு நான் இதெல்லாம் சொல்லி உறவு வளர்க்கணும்” என்றான் அமைதியாக.

“அது உறவு இல்லை முறை! உறவுன்றது நமக்குள்ள மட்டும் தான்! அது வளருமா வளராதா தெரியாது! அவங்க கிட்ட அப்படிப் பேசாதீங்க!” என்றால் மீண்டும் அந்தத் தொனியிலேயே.

“பிடிக்கவில்லை!” என்று சொல்லும் போதே இவ்வளவு அதிகாரமாகப் பேசுகின்றாள். இனி பிடித்திருக்கிறது என்று சொன்னால் என்னை கூஜா தூக்க செய்வாளோ! முதலில் இவளுக்கு மரியாதை தெரிகின்றதா!” என்று தோன்ற, “உறவா நமக்குள்ளையா? வாய்பே இல்லை!” என்றான்.

“அய்யயோ! இப்படி சொல்லிடாதீங்க! நீங்க என்னோட புருஷன்! என்னைக் கை விட்டுடாதீங்கன்னு கெஞ்சணுமா இப்போ!” என்று அரசி கேட்ட விதத்தில் அசந்து தான் விட்டான்.

பார்த்தது பார்த்தபடி நிற்க, “வேணும்னா நீங்க என்கிட்டே என்னை விட்டுடுன்னு கெஞ்சுங்களேன்! ஏதாவது வாய்பிருக்கான்னு நான் பார்க்கிறேன்!” என்றும் சொல்ல,

“ம்கூம்! இவ எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிப்பா போல, குரு தள்ளியே நில்லு!” என்று மனதிற்குள் சொல்லியவன், எதுவுமே சொல்லாமல் கதவை திறந்து உள்ளே சென்று விட…

அந்த நீளமான காரிடாரில் தனித்து நின்றாள். தனித்து நிற்கவும் அழுகை முட்டியது. இனி இப்படித் தனி தானா என் வாழ்க்கை என்றும் தோன்றியது. திருமணமாகி மூன்று நாட்கள் இன்னும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வேண்டாம் என்பதை கூட பேசிக் கொள்ளவில்லை.

யாரிடம் சொல்வது எவரிடம் சொல்வது என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் அடித்து நொறுக்க வேண்டும் போல ஆத்திரம். எவனையும் திரும்பியும் பார்த்தது இல்லை, ஆனால் தனக்கு இப்படி ஒரு கணவன் என்பதை அவளால் தாள முடியவில்லை. திருமண நாள் அன்று இவர்களை இங்கு அழைத்து வந்த ராஜசேகரன் காய்ச்சலில் விழுந்தவன் தான் இன்னும் எழவில்லை.

காலையில் கலையரசி இல்லாத சமையம் இவளாகச் சென்று “நான் பார்த்துக்கறேன் மாமா! நீங்க அதையும் இதையும் மனசுல போட்டு குழப்பாதீங்க, அஞ்சு வருஷம் கழிச்சு அக்கா இப்போ தான் கர்ப்பமா இருக்கா! அவளைப் பாருங்க! நீங்க இப்படிக் கவலையா முகத்தை வெச்சிருந்தீங்கன்னா அவ முகத்துல சிரிப்பே இல்லை!” என்று சமாதானம் சொல்லி வந்தாள். 

“அரசி!” என்று ராஜசேகரன் கலங்க,

“நடக்கறது எதுக்கும் யாரும் பொறுப்பில்லை, ஒரு வகையில கடவுள் விதிச்சது இதுன்னா என்ன செய்ய முடியும்! அதே சமயம் எல்லோரும் பொறுப்பும் கூட, ஏன்னா நான் அவ்வளவு சொல்லியும் யாரும் நம்பலை இல்லையா!” என்றாள்.

அதைக் கேட்டு ராஜா இன்னும் கலங்க, “விடுங்க மாமா! பார்த்துக்கலாம்!” என்று சலிப்பாக சொல்லி அவள் வெளியேப் போக,

தனக்கும் கலைக்கும் நடந்த திருமணத்தை தான் ராஜா நினைத்தான், எவ்வளவு மகிழ்ச்சி! எவ்வளவு குதூகலம்! என்ன உணர்வு அது! புதிதாக தன் இணையைக் கண்ட உணர்வு, இந்த மூன்றாவது நாளில் தாங்கள் எப்படி இருந்தோம், இவள் எவ்வளவு சலிப்பாக பேசிப் போகிறாள்!” என்று அவனுக்கும் மிகுந்த குற்ற உணர்ச்சியாகப் போய்விட்டது.

கலையிடம் இதைச் சொல்ல முடியாது! அவளிடம் எந்த ரகசியமும் தங்காது! உடனே அம்மாவிடம் சொல்லி அழுது ஆர்பாட்டம் செய்து விடுவாள். அவனும் யாரிடமும் சொல்ல முடியாமல் அரசியின் வாழ்க்கை குறித்து புழுங்கினான்.

அப்படி பாதிக்கப்பட்டும் சமாதானம் சொல்லி தாங்கள் இருக்க, எனது அப்பாவிடம் இப்படி பேசுவதா என்ற ஆத்திரத்தில் பேசிவிட்டாள் அரசி. உள்ளே சென்ற குரு எதையும் முகத்தினில் காட்டாமல் கை கட்டி நிற்க, “மாப்பிள்ளை எவ்வளவு பவ்யமா பெரியவங்க முன்ன நிற்கராறு” என்று தான் அர்த்தனாரிக்குத் தோன்றியது.

“எங்க அரசி? கூப்பிடு பூமா! இன்னும் புள்ளைக்கு ஒரு விவரமும் தெரியலை!” என்று மனைவியைக் கடிய, அவர் வெளியே செல்லப் போக, “நான் போறேன்!” என்று அவசரமாக ஜோதி போனவள், “உள்ள வாங்க அண்ணி!” என்று அழைத்துச் சென்றாள்.

“என்ன கண்ணு வெளில நின்னுட்ட, கல்யாணமாகிடுச்சு, இன்னும் பொறுப்பில்லாம இருப்பியா, மாமனார் படுத்திருக்கார், நீ இங்க தானே இருக்கணும்!” என்று கடிய,

அவர் யார் இருக்கிறார் இல்லை என்று பாராமல் பேசலாம். ஆனால் அரசி அப்படியல்லவே “சரிங்கப்ப்பா!” என்று நின்றாள். திருமணதிற்கு முன் வெகுவாக எதிர்த்தாள். இப்போது யார் என்ன சொன்னாலும் கேட்டாள். இனி எதிர்த்து என்ன ஆகப் போகின்றது என்ற விரக்தி.

“மாப்பிள்ளைக்கு கார் புக் பண்ணியிருந்தோம், நான் சொன்ன கலர் இல்லாம வேற கலர் சொல்றானுங்க, அவனுங்களைப் பார்த்துட்டு வர்ரேன். நான் வர்ற வரை நீ இங்க இரு!” என்று சொல்லி, “வர்றோம் மாப்பிள்ளை!” என்று சொல்லி அவர் பாட்டிற்குப் போக,

“என்ன? காரா! இது எப்போ?” என்று விழித்து நின்றான் குருபிரசாத்.

“மா! பிடிச்சா வாங்கச் சொல்லு! இல்லை புக் பண்ணினதை கேன்சல் பண்ணச் சொல்லு! அங்க போய் சண்டை போடப் போறார், மாமாவும் கூட இல்லை, என் வீட்டுக்கறார்ன்னு அவர் பண்றதை எல்லாம் ரசிச்சு வேடிக்கை பார்த்துட்டு நிற்காத போ!” என்று அம்மாவை அதட்டினாள்.  

பூமா தலையைத் தலையை ஆட்டினார், “ஒன்னும் பண்ண வேண்டாம்! புக் பண்ணினதை முன் பணம் போனா போகுதுன்னு கேன்சல் பண்ணச் சொல்லு! ஆட்டோமேட்டிக்கா அவர் பின்னாடியே வருவானுங்க” என்று சொல்லி அனுப்ப,

அரசிக்கு மட்டும் கேட்குமாறு, “என்னை ஏன் கேன்சல் பண்ணலை!” என்றான்

ஒரு கசப்பான புன்னகையை முகத்தில் தவள விட்டவள், “நான் சொன்னேன்! கேட்கலை! எங்கப்பாவுக்கு உங்களைப் பிடிச்சிருக்காம்!” என்று நக்கலாகச் சொல்லி அமைதியாகிவிட்டாள்.

அப்போதும் அவனின் தந்தை நாதன் உறக்கத்தில் இருக்க, இவர்களை விட்டு ஜோதியும் புனிதாவும் வெளியே செல்ல, அவள் ஒரு சேரில் அமர, இவன் ஒரு சேரில் அமர்ந்தவன் ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்.

திடீரென்று ஞாபகம் வந்தவனாக “எனக்கு கார் எல்லாம் வேண்டாம்!” என்றான்.

“என்னையே எங்கப்பா உங்கக்கிட்ட குடுத்துட்டார்! இன்னும் காரு வேண்டாம்னு சொல்லி என்ன ஆகப் போகுது?”

“உன்னையும் தான் வேண்டாம்னு சொல்றேன்!”

“இப்போ வருவாரு, அவர்க்கிட்ட தைரியமிருந்தா சொல்லுங்க!”

“ஏன்? எனக்கு என்ன தைரியமில்லைன்னு நினைக்கிறியா. இவர் வந்து இப்படிப் படுக்கலைன்னா அன்னைக்கே சொல்லிக் கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்!” என்றான் தெனாவெட்டாக.

தமிழரசியாவது எப்போதும் வாய் பேசுவாள், ஆனால் குருபிரசாத் அப்படி எல்லாம் பேச மாட்டான். அதிகமாக எப்போதும் வாய் வார்த்தைகள் வராது. ஆனால் என்னவோ அரசிக்கு பதில் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

காயப்படுவாள் என்று தெரியும், பிடிக்காமல் போகட்டுமே என்ற எண்ணம் தான். பிரியும் போது வருத்தப் படமாட்டாள். ஒரு கொடுமைக்காரனிடம் இருந்து தப்பிவிட்டோம் என்ற எண்ணம் வரட்டுமே என்ற எண்ணம் தான். அவனாக முடிவு செய்திருந்தது தான். இப்போது அரசி அலட்சியமாகப் பேசவும், அது தானாக வந்தது.

அரசிக்கு எரிச்சலாக வந்தது, “நான் எப்போது இவனைப் பிடித்திருக்கின்றது என்று சொன்னேன், வார்த்தைக்கு வார்த்தை உன்னை பிடிக்கவில்லை என்கின்றான். அப்படியா நாம் இருக்கின்றோம்” என்று தோன்ற, வேகமாக கண்களில் நீர் இறங்க காத்திருக்க, அடக்கவும், கண்கள் வலித்தது, தொண்டை அடைத்தது.

எழுந்து அங்கிருந்த ஜன்னலை திறந்து வெளியேப் பார்க்க முற்பட,  ஏ சி ஓடுது, அதையேன் திறக்கற!” என்றான் குரு.

ஜன்னலை மூடி விட்டாள் அரசி. அங்கே இருக்கவும் முடியவில்லை, வெளியேப் போனால் அங்கே ஜோதியும் புனிதாவும் இருப்பார். இங்கிருந்து போனால் அப்பா ஆயிரத்து எட்டு கேள்வி கேட்பார், அவனைத் திரும்பிப் பார்க்கவும் பிடிக்கவில்லை, வாழ்க்கையே வெறுத்தது.

மனது கனத்தது. ஒரு உடை எடுத்தால் கூட மகளுக்குப் பிடிக்குமா என்று கேட்கும் அப்பா மாப்பிள்ளை விஷயத்தில் மட்டும் ஏன் சறுக்கி விட்டார். என்ன தளைகள் நமக்கு? ஏன் இப்படி? கேள்விகள் ஓட எவ்வளவு நேரம் மூடிய ஜன்னலைப் பார்த்து நின்றிருந்தாள் தெரியவில்லை. சில நிமிடங்கள் பார்த்தவன், அந்த மூடிய ஜன்னலைப் வெறித்துப் பார்த்து நின்றிருந்தவளை பார்த்தான்.

நிச்சயம் அழகி! தன்னுடைய உயரத்திற்கு சரியாக இருப்பாள் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவளுடைய அப்பாவை விட உயரமாக இருந்தாள். நல்ல நிறம்! கலையான முகம்! ஆங்காங்கே கன்னத்தில் எட்டிப் பார்த்த பருக்கள் இன்னும் அழகு சேர்த்தது! நல்ல வசதி! அவனுக்கு இணையான படிப்பு! எதிலும் குறையில்லை!

அவள் நின்றிருந்த விதம் பாவமாக இருந்தது.

ஆனால் அவனும் எதுவும் தவறு செய்யவில்லை. அவனுக்கு இந்த திருமண நிகழ்வே தெரியாது, காதலித்து ஒரு வருடம் திருமணதிற்கு நம்பிக்கை கொடுத்த பெண்ணை ஏமாற்ற முடியாது என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. அவனுக்கு மேக்னாவை தான் பிடித்திருந்தது. அவளை நினைக்கும் போது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. கூடவே இந்தத் திருமணம் அவளுக்கு தெரிய வரும் போது என்னவாகும் என்ற ஒரு பயம்!   

திரும்ப அரசியின் புறம் பார்வையை ஓட்டினான், “இந்தப் பெண் அதிகம் பேசுகின்றாள், இதையெல்லாம் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்ற எண்ணம் ஸ்திரமாக மனதில் பதிந்தது. “எனக்கு ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டும்! இப்படிக் காலம் முழுவதும் சண்டையிடுவார்களா என்ன?”

மொத்தத்தில் இந்த உறவில் இருந்து எப்படி சிக்கல் இன்றி விடுபடுவது என்று யோசித்து இருந்தான். அது இடியாப்பச் சிக்கல் என்று அவனுக்குப் புரியவில்லை.

 

Advertisement