Advertisement

இருவருக்கும் இருந்த பிணக்கு எதனால் என்று தெரியாத போதும், திருமணம் முடிந்து இவர்களுக்குள் சரியில்லை என்று எவ்வளவு பயந்து இருந்தான். சரியில்லாமல் போயிருந்தால் அவ்வளவு தான் அர்ததனாரி அவனை என்ன செய்திருப்பார் என்று தெரியாது என்பது ஒரு புறம். அரசியின் வாழ்க்கை, அது என்னவாகி இருக்கும்?

அவனும் அவர்களையே பார்த்திருந்தான்.

இப்படி எல்லோரும் பார்க்க தமிழரசியும் குருபிரசாத்தும் ஜோதியை தகப்பன் தாயின் ஸ்தானத்தில் இருந்து தாரை வார்த்துக் கொடுத்தனர்.

பின்பு சுற்றம் பார்த்தவன் “எல்லோரும் என்னையே பார்க்கறாங்க அரசி, ஏன் நான் ஒழுங்கா தானே டிரஸ் பண்ணியிருக்கேன்…” என்று போட்டிருந்த வெள்ளை வேஷ்டி மஞ்சள் சட்டையை பார்த்துக் கொண்டான்.

ஆம்! அவளின் மஞ்சள் புடவைக்கு மேட்ச். நேற்றிலிருந்து சண்டை பிடித்து அணிய வைத்திருந்தாள்.

“எல்லோரும் என் சட்டையை பார்க்கறாங்க போல…” என்று முகம் தூக்கினான்.

“அய்ய, எல்லோரும் அரசி புருஷனை சைட் அடிக்கறாங்க, எப்படி இவ்வளவு ஹேண்ட்சமா இருக்கீங்கன்னு…” என்று சொல்லி இரு புருவம் உயர்த்தி அரசி பார்த்த பார்வையில், அவர்கள் அடிக்கிறார்களோ இல்லையோ அவள் அடிக்கிறாள் என்று புரிந்து அமைதியாகிவிட்டான்.    

ஆம்! அரசியை அவன் ரசித்து பார்த்ததை விட அவள் அவனை பார்த்தது தான் அதிகம். அவள் அவனை விட்டு சண்டை போட்டுக் கொண்டு வந்தாள் என்பதனை மறந்தாள்.

“நீ காதலிச்சதை மறக்கலைன்னா நான் உன்கூட வரமாட்டேன்…” என்று இரண்டு நாட்கள் முன்பு சொன்னதையும் மறந்தாள். எல்லாம் மறந்து விட்டாள்.

“இவன் தான் கிறுக்கன் மாதிரி உளறுகிறான் என்றால் நீ ஏன் சண்டை போடுகிறாய்…?”

“உன் மனம் தானாக அவன் மீது லயிக்கிறது. அதை ஏன் லாடம் கட்டுகிறாய். இழுத்துப் பிடிக்காதே, அது போகட்டும் விட்டு விடு…”

“வாழ்க்கையை அனுபவி அரசி, அவனையும் அனுபவிக்க செய். அவனின் நல்லதனம் ஏன்? ஏன்? என்ற கேள்வியை அவனுள் கேட்க வைக்கிறது. முன்பை விட அவன் யோசனைகள் குறைந்து விட்டன. இன்னம் காலப் போக்கில் குறைந்து விடும்…”

“நீ அவனின் நினைவுகளை மறக்க வைத்து யோசனைகளை பின்னுக்கு தள்ளாவிட்டாலும் காலம் அவனை மறக்க வைத்து விடும். காலம் எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து…” என்று சொல்லிக் கொண்டாள்.

ஆம்! குருவிற்கு அரசியை விட்டிருந்த ஒரு வாரம் எப்படியோ அவளுக்கு முடியவேயில்லை. என்ன செய்வானோ அவன் என்பது தான் அனுக்ஷணமும் அவளின் ஞாபகம். அவளின் சிங்கக் குட்டியை கையினில் வைத்துக் கொண்டு இதற்கு மேல எனக்கு அலைய முடியாது என்பது போல அமர்ந்து கொண்டாள். திருமண வேலைகள் ஒரு வழியாக்கி விட்டன அவளை.

குழந்தையை கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தாள்.

“போ கண்ணு போ, கல்யாணப் பொண்ணு கூட உங்க பக்கம் யாருமில்லை பாரு…” என்று அரசியிடம் பூமா சொல்ல,

“அம்மா காலெல்லாம் நின்னு நின்னு வலிக்குது. எனக்கு முடியலை…” என்று அம்மாவிடம் சிணுங்கிக் கொண்டே குருபிரசாத் எங்கே என்று தேடினாள்.

யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான், எப்போதும் போல பேச்சின் இடையே அரசியை ஒரு பார்வை பார்த்தான்.

அவள் தலையசைக்க அருகில் வந்தவனிடம் “ஜோதி கூட எல்லாம் அவங்க ஆளுங்க தான் இருக்காங்க. புனிதா அனுப்புங்க…” என்றாள்.

“இந்த புனிதா எங்கே?” என்று பார்க்க திருமணதிற்கு வந்த அவளின் தோழிகளுடன் அரட்டையில் இருந்தாள்.

தங்கையை டிஸ்டர்ப் செய்ய விரும்பாமல் “நான் இருக்கேன். ஜோதி எதுக்காவது தேடுனா உன்னை கூப்பிடறேன்…” என்று சொல்லி ஜோதியின் அருகில் நின்று கொண்டான்.

“மாப்பிள்ளை ரொம்ப பொறுப்பில்லை கண்ணு…” என்று பூமா சொல்ல,

“ஆமாம் பூமா, எனக்கு ரொம்ப திருப்தி…” என்று அர்த்தனாரி சொல்ல,

“மா, என்னை விட என் வீட்டுக்காரரை இந்த அப்பா தான் சைட் அடிக்கறாங்க. நீ இன்னும் கொஞ்சம் மேக் அப் போட்டு அவரை திசை திருப்பு…” என்று அரசி கிசுகிசுத்தாள்.

“போடி வாயாடி…” என்று பூமா சிரிக்க,

அதற்குள் கையில் இருந்த கலையின் குழந்தை சிணுங்க “அங்க பாருங்க…” என்று வேடிக்கை காண்பிக்க ஆரம்பித்தாள்.

“என்னடியம்மா அக்கா குழந்தையே எத்தனை நாள் வெச்சிருக்கறது. நீ எப்போ பெத்துக்கப் போற…” என்று அவர்களை கடந்து சென்ற ஒரு முதிய பெண்மணி கேட்க,

“என்னங்க….” என்று சத்தமாக குருவை அழைத்தாள்.

அவன் என்னவோ என்று வேகமாய் வரவும், “இந்த அத்தை ஏதோ கேட்கறாங்க…” என்று சீரியசாய் சொல்லவும், சுற்றி இருந்தவர்கள் ‘பே…’ என்று விழித்தனர், 

“நான் இவங்களை எப்படி கூப்பிடணும்…” என்று அரசியிடம் கேட்டு, “என்ன பெரியம்மா…?” என்று மரியாதையாய் கேட்டான்.

கேட்ட பெண்மணி “ஆங்…!” என நிற்க, பார்த்திருந்த அர்த்தனாரிக்கே அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது.

“என்ன அரசி?” என்று குருபிரசாத் அவளிடமே மீண்டும் கேட்க,

“நாம எப்போ குழந்தை பெத்துக்க போறோம்னு கேட்டாங்க. நான் மட்டும் சொல்ல முடியாது இல்லையா அதான் உங்களை கூப்பிட்டேன்…” என்று சீரியசாய் சொல்ல,

குருவின் முகம் லஜ்ஜையில் சுருங்க, “போடி…!” என்று செல்லமாக அவளை கடிந்து விட்டு இடத்தை விட்டு நகர்ந்தான்.

“ஆங்! பதில் சொல்லிட்டு போங்க…” என்ற அரசியின் குரல் உரத்துக் கேட்க,

“ஏன் டி மாப்பிள்ளையை இந்த பாடு படுத்துற…” என்ற பூமாவிற்கு முகம் கொள்ளா சிரிப்பு.

“ஆமாம், அவர் படுத்துற பாடு எனக்கு தான் தெரியும். வெளில சொல்லவா முடியும்…” என்று நினைத்த அரசிக்குமே முகம் சிவந்தது.

கேட்ட பெண்மணி “என்னடா இது கலாட்டா?” என்று பார்த்து, பின் ஆசுவாசப் பெருமூச்சு விட்டு “சீக்கிரம் பெத்துக்கோ…” என்று அவளை திருஷ்டி எடுக்கவும்,

“இருங்க அத்தை அவர் கிட்ட சொல்லுங்க…” என்று மீண்டும் அவனை அழைக்கப் போக, “அம்மாடி நான் போறேன்…” என்று அத்தை வேகமாய் அகன்று விட்டார். 

“தம்பி மானத்தை வாங்கறடி நீ…” என்று கலை சிரிக்க,

“ஆங்! பின்ன, கல்யாணம் பண்ணினவங்களுக்கு குழந்தை பெத்துக்க தெரியாதா, சும்மா சொல்லுவாங்களா…?” என்று சிரிப்போடு சொன்னாலும் சிறு எரிச்சல் தெரிய,

“என்ன அரசி?” என்றாள் கலை.

“பின்ன உனக்கு குழந்தை இல்லாத போது எத்தனை பேச்சு. இந்த அத்தை எவ்வளவு பேசிச்சு…” என்று ஆதங்கமாகச் சொல்ல,

“அதெல்லாம் இப்போ இல்லைல்ல, அதான் குட்டி வந்துட்டான் தானே…” என்று கலை தான் சமாதனம் செய்யும் படி ஆகிற்று.

ஆம்! யார் செய்த சிறு செயலையும் அரசி மறப்பது இல்லை. ஆனால் குருபிரசாத்தின் விரும்பத்தகாத செயல் எல்லாம் அவளின் ஞாபகத்திலேயே இல்லை.

திருமணம் இப்படியாக முடிவுக்கு வர, மணப்பெண்ணை மணமகனுடன் அனுப்பி வைத்து விட்டு இவர்கள் வீடு வந்தனர். இவர்களை விட்டு அரசியின் அம்மாவும் அப்பாவும் மகள் மருமகனுடன் வீடு சென்று விட்டனர். எல்லோரும் ஓய்ந்து தான் அமர்ந்திருந்தனர். சீர் வரிசை நாளை தான் கொண்டு போக இருந்தனர். அதனால் வேலை எதுவும் இல்லை.

குருபிரசாத் வேறு ஒரு முக்கியமான் வேலையில் இருந்தான்.

என்ன அது? அதொன்றுமில்லை அரசிக்கு கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான்.

“கால் வலிக்குது…” என்று அவள் வந்த உடனே படுத்து கொள்ள, குருவிற்குமே அயர்வு அவனும் படுத்துக் கொண்டான். ஆம்! அரசியின் கால் இருக்கும் புறம் தலை வைத்து படுத்துக் கொண்டவன், அப்படியே கால் அழுத்தி விட்டுக் கொண்டிருக்க,

அரசி அதன் சுகத்தினில் வலியையும் மீறி  உறங்கிவிட்டாள். அவள் நன்கு உறங்கி விட்டாள் என்று புரிந்து அமுக்கி விடுவதை நிறுத்தினான்.

அரசிக்கு சிறிய அழகிய பாதங்கள், அதனால் சிறிது அலைச்சல் பட்டால் பாதம் வலி எடுத்து விடும். அவளின் உயரத்திற்கும் உடல் எடைக்கும் சிறு பாதங்கள் என்பதால் இப்படி. கொஞ்சமாய் வலியிருந்தாலும் குருவின் அருகாமைக்காவே வலிக்குது என்பவள், இன்று அதிகமாய் இருக்கும் போது விடுவாளா என்ன?

அவளின் பாதங்களை பார்த்திருந்தான்!

பின்பு மென்மையாய் உள்ளங்கால்களில் முத்தம் பதித்தான். “இது நீ என் வாழ்க்கையில வந்ததுக்கு…” என்று சொல்லிக் கொண்டே.

குருபிரசாத் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தான். மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் பார்த்ததை விட இவர்களை பார்த்தவர் தான் அநேகம் பேர். அரசியும் அரசி வீட்டினரும் அவனுக்கு கொடுத்த முக்கியத்துவம் என்னவோ அவனை பெரிய ஆளாக காண்பித்தது.

அவனுக்கு சமுதாயத்தில் ஒரு கௌரவம் வந்து அமர்ந்து கொண்டது. அது அவனுக்கு பிடித்திருந்தது பெருமையாய் உணர வைத்தது. 

குடும்பத்திற்காக உழைத்த சாதாரண, மிகச் சாதாரண மனிதன். தன்னுடைய நிலையை சாதாரண நிலையில் இருந்து வெகுவாக உயர்த்திக் கொண்டாலும் அது யாருக்கும் தெரிய வந்தது கூட இல்லை. யாருக்கும் அவனை தெரியக் கூட தெரியாது. கடுமையான உழைப்பாளி! பணம் வந்தாலும் இந்த மரியாதைகள் புதிது! 

இதோ இவள் வந்த பிறகு எல்லாம் மாறி விட்டது. விஸ்வத்தின் வீட்டினர் இன்னும் செல்வ செழிப்போடு கூடப் பெண் எடுத்திருக்கலாம். ஆனால் அர்த்தனாரியின் வார்த்தையைக் கொண்டு ஜோதியின் அழகையும் அமைதியையும் கொண்டு தான் பெண் எடுத்தனர் என்று புரிந்திருந்தான்.

அவனுடைய சாதாரண உழைப்பை அசாதாரணமாக்கி அதனை பெருமைப் படுத்துகிறாள். மீண்டும் அவளின் பாதங்களை முத்தமிட்டான். அரசி குறுகுறுப்பில் கால்களை சுருக்க,

அவள் உறக்கம் கலையாமல் அதனை நன்றாய் இழுத்துப் பிடித்து அணைத்து படுத்தான்.

வெண் பஞ்சு மேகங்கள், உன் பிஞ்சுப் பாதங்கள்,

மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு!

விண் சொர்க்கமே பொய் பொய், என் சொர்க்கம் நீ பெண்ணே!

விண் சொர்க்கமே பொய் பொய், என் சொர்க்கம் நீ பெண்ணே!

மனதில் எந்த சஞ்சலமும் இல்லை எந்த நினைவும் இல்லை அவனின் காதல் நினைவில் இல்லையா தெரியாது ஆனால் அரசி அவனை விட்டு வந்த நாளாக ஞாபகத்தில் வரவே இல்லை. அவனின் ஜக்கம்மா இவனை காதலிக்க கற்றதும், இவன் காதலை மறந்து விட்டான்.    

ஆம், அவள் அவனை காதலிக்கிறாள் என்பது வெகுவாக நிச்சயம் ஆகிவிட்டது. எப்படி அரசியால் இப்படி என்னை மன்னித்து என் முகம் பார்த்து நடக்க முடிகிறது என்ற ஆச்சர்யங்கள் எல்லாம் ‘காதல்…’ என்னும் ஒரு வார்த்தையில் அடிபட்டு விட்டது.

அவளுக்கு அவனின் மீதான காதல் தான் எல்லாவற்றிற்கும் காரணம்!

எப்போது எப்படி அவளுக்குமே தெரியாது. ஆனால் இப்போது இப்படி, அது காதல் என்பது அவளுக்கும் நிச்சயம், அவனுக்கும் நிச்சயம். முகம் தெரியாத மனிதர்களை சேர்த்து வைத்தாலும், திருமணம் என்ற பந்தம் எல்லாவற்றையும் நடத்திக் காட்டி விடுகிறது.

 

Advertisement