Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு :

இதோ அரசியை பஸ் ஏற்றி விட்டு ஒரு வாரம் ஆகிறது.  இன்னும் மூன்று நாட்களில் திருமணம் இவனும் கிளம்ப வேண்டும். இந்த ஒரு வாரமாக அரசி அவனிடம் பேசவேயில்லை. பேசவில்லை என்றால் சாதாரண பேச்சுக்கள் இல்லை. அழைத்தால் என்ன ஏது என்று கேட்டு விட்டு வைத்து விடுவாள்.

மிகவும் தள்ளி நிறுத்தினாள்!

அரசி! அரசி அன்றி அவன் நினைவில் எதுவுமில்லை. எந்த வேலையும் செய்ய தோன்றவில்லை. எதுவும் ஓடவில்லை!

“ஹெல்த் பார்த்துக்கங்கன்னா எப்படி பார்ப்பேன்…?” என்று தோன்றினாலும், அதை சொல்லக் கூட அவனால் பேச முடியவில்லை.

அரசி தள்ளி நிறுத்தும் போது அவனால் அணுகவே முடியவில்லை. நேரில் என்றால் வேறு. அலைபேசியில் கெஞ்சவா முடியும். இந்த ஒரு வாரத்திலேயே அரசியுடன் கழித்த கணங்கள் முன் ஜென்ம நிகழ்வுகளாகிப் போனது. யோசனை, யோசனை, யோசனைகள் மட்டுமே எல்லாம் அரசியை பற்றி!

அவனுக்காக அவன் டென்ஷன் ஆகக் கூடாது, என்பதற்காகவே இவன் யோசனைக்கு சென்றால் அதனை மாற்ற அத்தனை பிரயத்தனப்படுவாள்.

அதுவும் “உனக்கு நான் தான் டென்ஷன் என்றால் நான் உன்னை விட்டு போகிறேன்…” என்றதும் அப்போது கோபமும் வருத்தமும் வந்தது.

இப்போது சிரிப்பு வந்தது! அரசியை விட்டெல்லாம் இந்த ஜென்மத்தில் இனி முடியும் போல அவனுக்கு தோன்றவில்லை. ஒரு விஷயம் நன்றாய் புரிந்தது. மேக்னா சென்ற போது வாழவே முடியாது போலத் தோன்றவில்லை. வாழ்வே அர்த்தமற்றதாய் தோன்றவில்லை!

ஆனால் அரசி ஊருக்கு சென்றது கூட அவனால் தாள முடியவில்லை. அரசி இல்லாத வாழ்க்கை “ம்ம்…!” முடியவே முடியாது!

“அவள் தான் உனக்கு! குழப்பிக் கொள்ளாதே! அப்படி ஒன்றும் மேக்னாவை மறந்தது போல இவளையெல்லாம் மறக்கவும் மாட்டாய். விடவும் மாட்டாய்…” என்று சற்று தெளிந்து தான் இருந்தான். 

கையில் இருக்கும் பொருட்களின் அருமை தெரிவது இல்லையே! அரசி மிக சுலபமாய் அவனின் வாழ்வில் வந்து விட்டாள்  அல்லவா…? அதுதான் இப்படி என்று அவனுக்கே புரிய, இன்னமும் எதுவும் அவளிடம் பேசி வைக்காதே, அவள் வேறு என்ன செய்ய காத்திருக்கிறாளோ என்ற கவலை இருந்த போதிலும், திருமணம் முடியும் வரை எதுவும் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது.  

கூட இருந்த போது இருந்த குற்ற உணர்ச்சி எதுவுமில்லை. அவள் வேண்டுமென்ற உணர்வு மட்டுமே பிரவாகமாக ஒவ்வொரு நொடியும் உள்ளே பொங்கியது.

அரசி சொன்னது போல அவள் ஏன் கெட்ட பெண் ஆக வேண்டும். நான் நல்லவனில்லை! நான் சுயநலவாதி! எனக்கு அவள் வேண்டும்! அரசி விஷயத்தில் அப்படியே இருந்து கொள்கிறேன் என்ற எண்ணம் தான் ஸ்திரமாகியது.

இதோ விடுமுறை எடுத்து ஊருக்கு கிளம்பினான். வீட்டிற்கு சென்றதும் கண்கள் அரசியைத் தான் தேடியது. அவள் இருந்தால் தானே!

“அண்ணி எங்கே..?” என்றான்.

“இப்போ தான் அவங்க அம்மா வீட்டுக்கு போனாங்கண்ணா. ஏதோ வேலை இருக்கு நைட் தான் வருவேன் சொன்னாங்க…” என்று ஜோதி சொன்னாள்.

“வேண்டுமென்றே நான் இன்று வருவேன் என்று தெரிந்து போயிருக்கிறாள்…” என்ற கோபம் வந்த போதும்,

“அவளுக்கு உன்னை பார்க்க பிடிக்கவில்லை, நீயும் பார்க்க வேண்டாம்…” என்று தோன்றியது.

எப்படியிருந்தாலும் அவள் எனக்கு வேண்டும் என்று அறிவு மனது எல்லாம் சொன்ன போதும், எப்படி போகலாம் என்ற கோபம் வந்து அமர்ந்து கொண்டது. வீட்டினில் இருந்த வேலைகளைப் பார்த்தான். பெரிதாக ஒன்றுமில்லை, சீர் கொடுக்க வேண்டிய பொருட்களின் பேக்கிங் மட்டுமே. நேரத்தை எட்டித் தள்ளினான்.

“அண்ணா, பியுட்டி பார்லர் போகணும். நாங்க போயிட்டு வர்றோம்…” என்று தங்கைகள் சொன்ன போது,

“நீங்க மட்டுமா, உங்க அண்ணி வரலையா…?” என்றான்.

“அவங்க அப்படியே வந்துடறேன், சொல்லிட்டாங்க…” என்றார்கள்.

“ஓஹ்…! என்னை தவிர்க்கிறாள், போடி…!” என்று தோன்றியது.

“இவள் எதற்கு என்னை பார்த்து பார்த்து கவனிக்க வேண்டும். இப்போது ஏங்க விட வேண்டும்…” என்ற கோபம் அதிகமாகியது

நாதனுடன் பேசி அமர்ந்திருந்தவன், ஒன்றும் முடியாது, எப்போதும் போல அவனின் லேப் டேப் எடுத்து அமர்ந்து கொண்டான். உணவிற்கு கூட கீழே வரவில்லை. பெண்கள் மூவரும் வரும் போதே எட்டு மணியாகிவிட, இவன் வந்தது தெரிந்தும் அரசி மேலே ஏறவில்லை. இவர்களை பார்த்ததும் நாதன் உறங்க சென்று விட அவன் உண்ணாதது அரசிக்கு தெரியவில்லை.

இவர்கள் மூவரும் மதியம் மீதம் இருந்த உணவையே உண்ண, தட்டை கழுவ வந்த புனிதா தான் “அண்ணி! அண்ணா சாப்பிடவேயில்லை போல. சாதமும் ரொம்ப மீதியிருக்கு, அண்ணா தட்டு கழுவ இல்லவேயில்லை. அப்பா சாப்பிட்டது மட்டும் தான் இருக்கு…”

“மதியமும் சாப்பிடலை, இப்போவும் சாப்பிடலை போல… காபி கப் மாதிரி எதுவும் இல்லை…” என்று பெரிய ஆராய்ச்சியே நடத்திச் சொன்னாள்.

“ஓஹ்..!” என்றவள் யோசனைக்கு தாவினாள்.

அப்போது அரசி உண்டு முடிக்கவில்லை. “நான் சாப்பிடக் கூப்பிட்டேன்னு உங்க அண்ணாவை கூட்டிட்டு வா…” என்றாள்.

புனிதாவிற்கு வித்தியாசம் தெரியவில்லை, “அண்ணா, அண்ணி சாப்பிடக் கூப்பிடறாங்க…” என்று அண்ணனின் முன் நின்றாள்.

“எனக்கு பசிக்கலைன்னு சொல்லிடு…” என்று முடித்து விட்டான்.

“அண்ணி அண்ணாக்கு பசிக்கலையாம். மதியம் கூட சாப்பிடலை…” என்று புனிதா சொல்லவும்,  

“எப்படி பசிக்காமல் போகும்? சாப்பிடாமல் எப்படி பீபி மாத்திரை சாப்பிடுவான்..?” என்ற கவலை மட்டுமே அவளிடத்தில்.

அரசிக்கு அதன் பிறகு உணவே இறங்கவில்லை. அவளே மேலேறி வந்து “சாப்பிடலையா…?” என்றாள்.

திடீரென்று கேட்ட அவளின் குரலில் வேகமாய் தலை நிமிர்ந்தான்.  சிறிது நேரம் அரசியை கண்களில் நிரப்பினான். எப்போதும் பளபளப்பாக இருக்கும் அரசியின் முகம் இன்னும் பொலிவோடு பளிச்சென்று இருந்தது.

அது அன்றைக்கு அவள் செய்த ஃபேஷியலின் விளைவு! அதெங்கே குருவிற்கு உரைத்தது!

“நான் இல்லாமல் ஜாலியா இருக்கா போல. நான் தான் பைத்தியக்காரன் மாதிரி இவளையே நினைச்சுட்டு இருந்தேன்…” என்ற பார்வை பார்த்தான்.

“சாப்பிடலையான்னு கேட்டேன்…” என்றாள் அதிகாரமான குரலில் அரசி.

“பசியில்லை…” என்றான் அவளை விடாது பார்த்துக் கண்டே.

இருவரின் பார்வையும் நேருக்கு நேர் மோதி நின்றது! இருவருமே ஒருவரை ஒருவர் சலைக்காத பார்வை பார்த்தனர்!

“எப்படி பசியில்லாம போகும், மதியமும் சாப்பிடலை போல…”

“ஓஹ், நீ எனக்கு சாப்பாடு போட வெயிட் பண்ணிட்டு இருந்தியா…?” என்றான் சூடாக.

“ஏன் பொறந்ததுல இருந்து நான் சாப்பாடு போட்டு தான் சாப்பிட்டு இருந்தீங்களா…?” என்றாள் பதிலுக்கு அரசியும் சூடாக.

“அப்போலாம் நீ என் பொண்டாட்டி கிடையாது. இப்போ தானே நீ என் பொண்டாட்டி…” என்றான் குரு.

அரசியை வாயடைக்க வைக்க ஒருவனால் முடியும் என்றால், அது குருவால் மட்டுமே முடியும்! ஒன்று அதட்டல், இல்லை பதில் சொல்ல முடியாத பதில்!

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சலில்லை…” என்று சன்னக் குரலில் பேசினாள்.

“வேற எதுலடி குறைச்சல்?” என்றான் காட்டமாக.

“அதெல்லாம் சொல்ல முடியாது. ஒழுங்கா சாப்பிட வாங்க…” என்றாள் மிரட்டலாக.

“வரலைன்னா என்ன பண்ணுவ?”

“என்ன பண்ணுவனா? அதெல்லாம் சொல்ல முடியாது… நான் யோசிக்கணும். ஆனா ஏதாவது பண்ணுவேன்…” என்றாள் அதிகாரமாக.

சற்று நேரம் யோசித்தவள் “ம்ம்…!” என்று சொல்லி, “ஏன் எங்கப்பா வீட்டுக்கு இப்போவே கிளம்பி போவேன்…” என்றாள்.

“என்ன பண்ணிடுவார் உங்கப்பா என்னை…? பயப் படுத்தறையா…?” என்றான் கிண்டலாக.

“ஹா.. ஹா…” என்று சிரித்து விட்டாள்.

“அது எதுக்கு உங்களை பயப்படுத்தறேன். உங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. என்னை தான் திட்டுவாங்க. ஏன் அடிக்கக் கூட செய்யலாம். எதுவும் சொல்ல முடியாது. இன்னும் எதுவும் புதுசா கூட செய்யலாம்…” என்று இழுத்தாள். 

இந்த பதில் வேலை செய்ய, அவளை முறைத்துக் கொண்டே லேப்பை மூடி வைத்து விட்டு எழுந்தான்.

“அதுதானே யாரு கிட்ட? அரசி கிட்டயா?” என்று சன்னமாக பேசி அவன் முன் நடந்தாள்.

அவளின் பின்னே சென்ற குருபிரசாத்தின் முகத்தில் கோபத்தையும் மீறிய புன்னகை.  

“கொல்றடி என்னை…” என்றான் அவளை போலவே சன்னக் குரலில்.

அவளின் காதுகளில் தெளிவாக விழுந்தாலும் திரும்பிப் பார்க்கவில்லை. சாதம் வைத்து குழம்பினை ஊற்றினாள். ஜோதியும் புனிதாவும் அந்த இடத்தில் இருந்து அகன்று விட்டனர்.

அதனை பார்த்தவுடனே “நீ வைக்கலையா…?” என்றான்.

“ஏன் உங்களுக்கு சமைச்சு போட தான் நான் பிறந்தேனா?” என்றாள் முறைப்புடன். எப்போதும் பேசும் கேலிப் பேச்சு தான். ஆனால் அவன் பசியில் இருப்பான் இப்போது வார்த்தையாடக் கூடாது என்பது நினைவில் இல்லை. குருவை பார்த்த பரவசத்தில் அவனை வம்புக்கு இழுத்து சீண்டிக் கொண்டிருந்தாள். பின்னேயே வருவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் ஒரு வாரம் கழித்து வரவும் அந்தக் கோபமும் இருந்தது.  

“நீ எனக்கு சமைக்க பிறக்கலை இல்லையா…?” என்றவன் உணவில் கை வைக்காமல் எழுந்தான்.

அன்று அவர்கள் வீட்டினில் சமைக்கவில்லை. கடையில் தான் வாங்கியிருந்தனர். அது அவனின் கவனத்தில் இல்லை.

“உணவு…” என்ற ஒன்றை வீணாக்குவதை எப்போதும் விரும்ப மாட்டான். எவ்வளவு கேவலமாய் இருந்தாலும் உண்டு கொள்வான். பின்னே அவனின் சமையல் அப்படி தானே.

அரசி இல்லாத ஒரு வாரமும் அவனாய் சமைத்து தான் உண்டிருந்தான். அதன் தாக்கம் இது, காலையில் ஊருக்கு வருவதால் உண்ணவில்லை. மதியமும் உண்ணவில்லை. இப்போதும் இரவும் இந்த உணவினை பார்த்ததும் உண்ணப் பிடிக்கவில்லை. உணவை உண்ணாமல் எழுந்த அவனை அரசி வியப்பாய் பார்த்தாள். பின்பு வார்த்தையாடலை கை விட்டு “சாப்பிடுங்க…” என்றாள் பணிவாகவே.

“இல்லை வேண்டாம்…”

“வேஸ்ட் ஆகிடும்…”

“அப்போ என் தலையில எடுத்து கொட்டு…” என்றான் அவ்வளவு கோபமாக.

அரசிக்கு சட்டென்று கண்கள் கலங்கி விட்டது.

“ஒரு மனுஷன் காலையில இருந்து சாப்பிடலை. யாருக்கும் தெரியலை! நீ வேஸ்ட் ஆகறதுக்காக என்னை சாப்பிடப் சொல்ற. என்னோட வயிறு என்ன வேஸ்ட் பேஸ்கட்டா…?” என்று பொரிந்தவன் அரசியின் கலங்கிய கண்களை பார்க்கவும், நிறுத்திக் கொண்டான்.

சில அமைதியான நொடிகள்!

அரசிக்கு அவன் பேசியது கோபம். கூடவே ஒரு வாரம் கழித்து அவனை பார்த்த ஒரு இனம் புரியா உணர்வு. இதில் அவனை சாப்பிட விடவில்லை. எல்லாம் சேர்ந்து கண்களில் நீர் நிறைத்தது. குருபிரசாத்தை விடவும் அவனை பாராமல் அரசி தான் தவித்திருந்தாள். 

“சாரி…” என்றவன், “ரொம்ப பசிக்குது, இதை சாப்பிட முடியாது…” என்றான்.

அவனாக சமையல் அறை உள்ளே சென்று ஃபிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து காய்ச்ச துவங்கினான். கூடவே அதில் இருந்து அரிசி மாவையும் எடுத்து வெளியே வைத்து, தேங்காயை எடுத்து உடைத்தான்.

சட்னி ஆட்ட விழைகிறான் என்று புரிந்து அதன் பிறகு அமர்ந்திருக்க முடியாமல், கலங்கிய கண்களோடு தான் வந்தவள், “நீங்க போய் உட்காருங்க…” என்றாள்.

“இல்லை, நான் பார்த்துக்கறேன், நீ போ!” என்றான் அமைதியான குரலில். அந்த குரல் அரசியை ஏதோ செய்தது.  அங்கேயே அரசி பிடிவாதமாய் நின்றாள்.

Advertisement