Advertisement

அத்தியாயம் இருபத்து மூன்று :   

அவனின் இறுக்கத்தில் தவித்தவளாக அரசி வெகுவாக முயன்று விட்டு விலகிய போது, “தேங்க் யு, தேங்க் யு வெரி மச். நான் பர்த்டே எல்லாம் செலப்ரேட் பண்றது இல்லை…” என்றான் நெகிழ்ந்த உணர்ச்சிமயமான குரலில்.

“அ மு க்கு முன்னாடி உங்க வாழ்க்கை வேற, அ பி க்கு பின்னாடி உங்க வாழ்க்கை வேற…” என்று அரசி இலகுவாய் பேசினாள்.

குருபிரசாத் புரியாமல் பார்க்க, ‘அரசிக்கு முன் அரசிக்கு பின்…’ என்று தமிழரசி விளக்கம் கொடுக்க,

“சான்சே இல்லைடி அரசி நீ…” என்றான் உணர்ந்து.

“எந்திரிங்க எந்திரிங்க…” என்று வேகமாக அவனை விட்டு எழுந்தவள் அவனையும் எழுப்ப, “என்ன?” என்றான் எழுந்து,

கப்போர்டில் இருந்து உடையை எடுத்து நீட்டியவள் “போட்டுக்கங்க…” என்றாள்.

“இப்போவா காலையில குளிச்சிட்டு போடலாம்…” என்றவனிடம், “அதெல்லாம் வேற போட்டுக்கலாம், இப்போ இதை போடுங்க…” என,

“பிடிவாதம்டி நீ…!” என்று சலித்தாலும் உடை மாற்ற, வேகமாக வெளியில் சென்றாள் அரசி.

உடை மாற்றி கதவை திறந்து வெளியே வர பார்த்தால் முடியவில்லை, கதவு வெளியில் இருந்து தாளிடப்பட்டிருந்தது.

“என்ன பண்றா இவ? கேக் ரெடி பண்ணியிருக்காலோ. நான் என்ன சின்ன பையனா…?” என்று யோசித்தான்.

“அதுதான்…” என்பது போல அரசி கதவை திறந்தாள்.

அவனின் உடை ஒரு வெளிர் ரோஸ் நிறத்தில் இருக்க, அதற்கு மேட்சாக அவள் புடவை அணிந்திருந்தாள்.

“இப்பவும் மேட்சா…?” என்றவனிடம், “எஸ், எப்பவும் மேட்ச் தான்…” என்று ராகம் படித்தாள்.

“தேங்க்ஸ் அரசி…” என்றான் சற்று கிண்டலான குரலில்.

“என்ன?” என்று இடுப்பில் கை வைத்து கேட்டாள்.

“ரொம்ப அடிக்காத கலர் முதல் முறையா எடுத்திருக்க, அண்ட் குளிச்சிட்டு தான் போடணும்னு சொல்லாம போனியே…” என்றான்.

“தோடா நக்கலு…!” 

“எதுக்கு இவ்வளவு விலை?” என்றான் ஆதங்கமாக. 

“இதெல்லாம் ஒரு விலையா, ஜஸ்ட் நாலாயிரம் ரூபாய். ஐம்பது பெர்சென்ட் ஆஃபர், ரெண்டாயிரம் ரூபாய் தான்…”

“நான் இவ்வளவு விலை எல்லாம் எடுக்க மாட்டேன். இவ்வளவு விலை எடுத்தா டெய்லி போட முடியுமா? இல்லை இவ்வளவு விலைன்னு வருஷக் கணக்கா யூஸ் பண்ண முடியுமா? விலை கம்மில எடுத்தா பத்து தடவை போட்டுட்டு யாருக்காவது எடுத்து கொடுத்துட்டு போயிட்டே இருக்கலாம்!”

“புதுசு புதுசாவும் போடலாம்…” என்று புது கான்சப்ட் சொன்னான்.

“மூச், நீங்க சொல்றது சரியா இருந்தாலும் எல்லா நேரமும் கணக்கு பார்க்கக் கூடாது…!” என்று அதட்டி

“பர்த்டே மூட் ஸ்பாயில் பண்ண கூடாது…” என்று முகம் சுருக்கினாள்.

“பேசவில்லை…” என்பது போல குரு வாயில் கை வைத்தான்.

“அஃது…” என்றவள் அவன் கை பிடித்து கேக்கின் முன் அழைத்து சென்று விட்டாள்.

“இது வேறையா, சின்ன பையனா நான் கேக் வெட்ட…” 

“என்னோட நீங்க செலப்ரேட் பண்ற முதல் பர்த்டே உங்களுக்கு எப்படியோ? எனக்கு ரொம்ப ஸ்பெஷல், புரியுதா!” என்று அவனை நேர் பார்வை பார்த்து சொல்ல,

இரு கைகளையும் உயர்த்தி “சாரி…” என்பது போல காண்பித்தான்.

“கம், கம்…” என்றவள் இளையராஜாவின் இசையை ஒலிக்க விட்டாள். பின்பு கேக்கின் முன் அவனை நிறுத்தி ஓடிச் சென்று கேமராவை செட் செய்து அவனிடம் வந்து கத்தியை கொடுக்க,

சிகப்பு வர்ணத்தில் இருதய வடிவில் இருந்த கேக்கில் “ஹேப்பி பர்த்டே பாஸ்…” என்று எழுதியிருந்தது. பெரிதாக எல்லாம் இல்லை சிறிய கேக் தான். 

“ஹார்ட் ஷேப்ல இருக்கு, அதுல கத்தி வைக்க வேண்டாம். அப்படியே சாப்பிடுவோம்!” என்றான் குரு.

“ஹா ஹா…” என்று வாய் விட்டு சிரித்தவள், “நீங்க எப்படி சொன்னாலும் எனக்கு ஓகே…?”

பின்பு அதில் இருந்த ஒற்றை கேண்டிலை ஊதி அணைத்தான். அவள் கேக்கை தொடப் போக, அவனுக்கு ஊட்ட எடுக்கிறாள் எனப் புரிந்து அவளுக்கு முன் அவன் எடுத்துக் கொண்டான்.

     கேக்கை அப்படியே எடுத்து அவளின் வாயருகில் கொண்டு போக, “இப்படியே சாப்பிட்டா என் முகத்துல அப்பும்…” என்றவளிடம்.

“பரவாயில்லை…” என்று அவளுக்கு கொடுக்க, சிறிது தான் வாயின் உள் போனது. அப்போது அவளின் மூக்கின் நுனியில் அந்த கிரீம் அப்பி கொள்ள,

‘நான் சொன்னேன்ல” என்று அரசி சிணுங்க, கேக்கை கீழே வைத்தவன் மெதுவாய் அரசியின் முகம் அருகில் இழுத்து உதடுகளால் அதனை துடைக்கப் போக,

அவன் அருகில் இழுக்கும் போதே அனுமானித்தவள் “கேமரா” என்று சொல்லி அவசரமாய் அவளே கை வைத்து துடைத்து கொண்டாள்.

“ஷ், உன்னை யாரு அதை செட் பண்ண சொன்னா..?” என்று குரு பேச,

“நீங்க சாப்பிடுங்க…” என்று அவனுக்கு ஊட்ட,

கேக்கை  கடித்து வாயில் பாதி எடுத்தாலும், செய்த முதல் வேலையாக கேமராவை ஆஃப் செய்தான்.

“இப்ப எதுக்கு கேமராவை ஆஃப் செய்யறீங்க. நான் இன்னும் கிஃப்ட் கொடுக்கவேயில்லை…”

“அது தான் ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு கொடுத்திட்டியே. அதை விட பெரிய கிப்ட் என்ன வேணும்…”  

“ஷ்…!! அதில்லை…” என்றவள், அவனிடம் ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸ் கொடுத்து பிரிக்கச் சொல்ல, பிரித்தால் அதில் இரு வாட்ச்கள், ஒன்று ஆண் அணிவது போல, இன்னொன்று பெண் அணிவது போல.

“எனக்கு பர்த்டே, உனக்கு எதுக்கு…?” என்று கிண்டல் செய்தான்.

“மேட்ச் வேண்டாமா? போங்க!” என்று அரசி முகம் சுருக்கவும், அவளின் கையை பிடித்து அதில் அவனே வாட்சை கட்டி விட்டான்.

“இப்போ நானு…” என்று அவள் பதிலுக்கு கட்டி விட்டாள்.

ஆர்வமாய் கட்டிவிடும் அரசியை பார்த்தவனுக்கு எல்லா கணவன் மனைவியும் இப்படி தான் இருப்பார்களா என்ற யோசனை தான் குருவிற்கு ஓடியது.

அமைதியாய் நின்றிருந்தான். கட்டி விட்டு அவனின் முகம் பார்க்க அதில் யோசனைகள் தெரிய,

“அய்யோடா, என்ன ஆச்சு இப்போ?” என்று தான் தோன்றியது.

“நீங்க உட்காருங்க…” என்று சொன்னவள், பிரிட்ஜில் இருந்து இரண்டு க்ளாஸ்களை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் ஒன்று கொடுத்து, இவள் ஒன்றை எடுக்க, பார்த்தவுடனே தெரிந்தது அது மாதுளை ஜூஸ் என்று.

குருவிற்கு மிகவும் பிடிக்கும்!

அவனின் அருகில் அமர்ந்தவள் “உங்களுக்கு தூக்கம் வருதா?” என்றாள்.

“இல்லை” என்று குரு தலையசைத்தான்.

“எனக்கு கொஞ்சம் பேசணும்! பேசட்டுமா? உண்மையா பதில் சொல்லணும். உங்க பர்த்டேக்கு எனக்கு நீங்க குடுக்கற கிஃப்ட் அதுதான்…” என்றாள் அவனை தீர்க்கமாகப் பார்த்து.

“கேள்…” என்பது போல அவன் தலையசைக்க..  

“என்ன பிரச்சனை? ஏன் இப்படி இருக்கீங்க? திரும்ப நீங்க ஸ்ட்ரெஸ் கொடுத்து பீபி அதிகம் ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது…”

“என்ன பிரச்சனை ஒன்னுமில்லை” என்றவனிடம்,

“ப்ளீஸ், எனக்கு பயமாயிருக்கு…” என்று அவன் தோள் சாய்ந்தாள்.

“என்ன பயம் அரசி?” 

“எனக்கு சொல்லத் தெரியலை. நீங்க அடிக்கடி டிஸ்டர்ப் ஆகறீங்க, என்னன்னு சொல்லியே ஆகணும்! ஒரு வேளை உங்க டாலியை மறக்க முடியாம இப்படி ஆகுதா?” என்று கேட்டே விட்டாள்.

“அரசி…!” என்று பட்டென்று எழுந்து கொண்டான். இதை அரசியிடம் எதிர்பார்க்கவில்லை. அவளின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கக் கூடும் என்று எண்ணவேயில்லை.

“இல்லை, உங்களால என்னை சகிச்சிக்க முடியலை, ரொம்ப கலாட்டா பண்றேன்னு தோணினா, நீங்க வேணா அப்ராட் போயிடுங்க. நான் இங்க இருந்துக்கறேன். அங்கேயே நீங்க செட்டில் ஆகிடுங்க. எனக்கு நீங்க நல்லா இருக்கணும், சும்மா ஸ்ட்ரெஸ் ஆகி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்…” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“உங்களுக்கு எது சந்தோஷமோ, நிம்மதியை கொடுக்குமோ செய்ங்க. எனக்காக யோசிக்காதீங்க, நீங்க போயிடுங்க..!” என்றாள் அவனை பாராமல்.

குரு ஸ்தம்பித்து நின்று விட்டான். அவனால் பேசக் கூட முடியவில்லை.

“உன்னால என்னை விட்டுட்டு இருக்க முடியுமா?” என்றான் கம்மிய குரலில் அவளையே பார்த்தவாறு.

“கஷ்டம் தான், ஆனா உங்களுக்காக செய்வேன்!” என்று மெல்லிய குரலில் சொன்னவளின் கண்களில் நீர் படலம்.

கசப்பான ஒரு முறுவல் பூத்து, “என்னை கொல்றடி நீ..!” என்றான் எப்போதும் சொல்வது போல.

அரசி சோபாவில் அமர்ந்திருக்க அவளின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன், “முதல்ல என்ன பாரு!” என்றான் அதட்டலாக.

அவள் பார்த்ததும் “என்னோட பிரச்சனை என்னன்னு சொல்றேன் கேளு…” என்றவன்,

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி இந்த நேரமெல்லாம் ஒரு பொண்ணை உருகி உருகி காதலிச்சேன். இப்பவும் அந்த பொண்ணா என்னை வேண்டாம்னு சொல்லிப் போகலைன்னா, உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு அவளோட சேரணும்னு தான் நினைச்சிருப்பேன்…”

“இதுதான் என்னோட பிரச்சனை. அண்ட் இப்போ அவ எங்கேயும் என் வாழ்க்கையில இல்லை…”

“ஆனா எல்லாம் தெரிஞ்சும் நீ என்னை இப்படி கவனிக்கற. என்னகாக எல்லாம் செய்யற, என்னோட தப்பை யார் கிட்டயும் காண்பிச்சு கொடுக்கலை”

“ஒன்னுமில்லைன்னு சொல்லிக்கிட்டாலும் மனசு கிடந்து தவிக்குது. ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரியே, அதுவும் நீ என்னை ரொம்ப ரொம்ப… எப்படி சொல்றதுன்னு தெரியலை. என்னோட முகம் சின்ன வித்தியாசம் காட்டினா கூட என் முகம் சிரிக்கிற வரை இல்லை நான் டைவர்ட் ஆகற வரை என்னை திசை திருப்புற…”

“இவ்வளவு நல்லவளா இருக்க வேண்டாம். கொஞ்சம் கெட்டப் பொண்ணா இரு. என்னை திட்டு, நீ தப்பு செஞ்சவன்னு ஒரு ஃபீல் கொடு…” என உணர்ச்சிகரமாய் பேசினான்.

“நீ என்ன லூசா?” என்ற பார்வை பார்த்தாள். கூடவே எதையாவது எடுத்துப் போட்டு அவனின் மண்டையை பிளக்கும் ஆத்திரம் வந்தது.

“எதையும் பேசிவிடாதே அரசி, அவன் உணர்ந்து பேசுகிறான். நீ பேசினால் பின் அது காலத்திற்கும் நிற்கும்…” என்று முயன்று அமைதி படுத்தினாள்.

ஆனாலும் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.  

“பைத்தியக்காரன் மாதிரி தோணுதா? எனக்கும் புரியுது! ஆனா அடிக்கடி ஞாபகம் வந்துடுது. என்ன பண்றதுன்னு தெரியலை?” என்றான் பரிதாபமாக.

அவனின் காதலை எப்போதும் பேசியதில்லை ஆனால் காதலியை பற்றி முன்பு சில முறை பேசியிருக்கிறாள். ஆனால் இருவரும் சேர்ந்து வாழ துவங்கிய பிறகு எதுவுமே பேசியதில்லை. 

“இன்னுமா இவன் மனதில் இது ஓடுகிறது? அப்போது நான் எந்த வகையிலும் அவனின் காதலை மறக்க வைக்கவில்லையா? அவ்வளவு தானா அரசி நீ!” என்ற எண்ணம் தோன்றியது”

குருபிரசாத்தை எதையும் நினைக்க விடாமல் மொத்தமாய் ஆக்கிரமித்ததாள் தான், எப்படி இப்படி ஆனேன் என்று அவனுக்குள் குழப்பங்கள் என்று அவளுக்கு புரியவில்லை.   என்னவோ கோபம், கடுப்பு, எல்லாம் சேர்ந்து வர,

“நான் கெட்ட பொண்ணு ஆகறது இருக்கட்டும். முதல்ல நீங்க நல்ல பையனா ஆக முயற்சிக்காதீங்க. என்ன நடந்ததோ அது நடந்துடுச்சு. இன்னும் ஏன் அதை நினைக்கறீங்கன்னு புரியலை. எங்க நான் தப்பு பண்றேன்னு எனக்கே புரியலை…” என்று நிறுத்த, குரு அவளின் முகத்தையே பார்த்திருந்தான்.

“உன் முடியை பிடிச்சு ஆட்டி, அப்படியே சுவர்ல போய் நச்சு நச்சுன்னு இடிக்கணும்னு ஆத்திரம் வருது…” என்று பற்கள் கடித்து வார்த்தை உதிர்த்தாள்.

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் “நீ கேட்ட நான் சொல்லிட்டேன்…” என்ற பார்வையை குரு பார்த்தான்.

சட்டென்று எழுந்து நின்றவள், மாதுளம் பழம் ஜூஸை எடுத்து குடித்து ஒன்றுமே நடவாதது போல, “அதை குடிச்சிட்டு படுங்க…” என்று சொல்லி சோபாவில் உறங்க ஆயத்தமானாள்.

“என்ன பிரச்சனைன்னு கேட்ட, நான் சொல்லிட்டேன்…” என பாவமாய் குருபிரசாத் சொல்லவும்,

“எனக்கு யோசிக்கணும், நீங்க போய் தூங்குங்க. திரும்பவும் சொல்றேன், எதுவா இருந்தாலும் உங்க ஹெல்த்ல காம்ப்ரமைஸ் இருக்கக் கூடாது. போங்க!” என்றாள் மிகவும் கடுமையான த்வனியில்.

இந்த த்வனியில் எப்போதுமே இதுவரை பேசியதில்லை. அதுவே அவனை தள்ளி நிறுத்தியது.  தமிழரசி என்ற பெண் அப்படித்தான். அவனின் மனைவி என்பதினால் மட்டும் இணக்கமாய் நடக்கவில்லை அவனிடம். அதையும் மீறி அவனை பிடித்திருந்தது. அதுதான் அவனுக்காக நிறைய விட்டுக் கொடுத்து அவன் முகம் பார்த்து நடந்தாள். இல்லை எந்த ஒரு சிறு காரியமும் அவளிடம் நடத்திக் கொள்ள முடியாது. 

“போடா…!” என்று வார்த்தையில் அடிக்கடி சொன்னாலும் அது “போய்விடு…” என்ற அர்த்தம் கொடுக்காது.

ஆனால் இப்போது பேசிய த்வனியே அவனை “போய்விடு…” என்று தான் உணர்த்தியது. ஸ்பஷ்டமாய் உணர்ந்தான். 

அரசி படுத்து கண்மூடிக் கொள்ள, சிறிது நேரம் நின்று அவளின் முகத்தையே பார்த்தான். பின் போய் படுத்துக் கொண்டான். காலையில் எழுந்த போது அரசி எழுந்து தயாராகி இருந்தாள். காலை டிஃபன் மதிய உணவு எல்லாம் பேக் செய்து இருந்தது.

“என்ன இது?” என்பது போல பார்வை பார்த்தவனிடம்.

“இன்னும் கல்யாணத்துக்கு பத்து நாள் தான் இருக்கு. நான் அங்க ஊருக்கு போறேன். நீங்க அப்புறம் வாங்க…” என்று பேசினாள்.

“ஏன்? ஏன் இப்போ ஊருக்கு போற?” என்று குரு பதறி கேட்டான்.

“எனக்கு தனியா இருக்கணும் தோணுது. எப்பவும் உங்களையே நினைச்சு, உங்க முகம் பார்த்து நடந்து, எனக்கு எரிச்சலா வருது. நீங்க அதுக்கு வொர்த் இல்லையோன்னு தோணுது…” என்று அவனின் முகம் பார்த்து நிர்தாட்சண்யமாய் கூறினாள்.

குருவின் மனது அப்படி காயப்பட்டது. அரசி இப்படி பேசுவாள் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. “ஆனால் இதை தானே நீ எதிர்பார்த்தாய்…” என்று மனது அவனுக்கு எடுத்து உரைக்க அமைதியாய் அதனை எதிர்கொண்டான்.

“சரி உன் இஷ்டம்…” என்றவன்,

“இரு குளிச்சிட்டு வர்றேன். நான் ஆஃபீஸ் போகும் போது பஸ்க்கு விட்டுட்டுப் போறேன்…” என்றான்.

“இல்லை, நீங்க ட்ராப் பண்ண வேண்டாம். ஓலா புக் பண்ணிட்டேன்…”

“என்ன ஓலாவா? தனியா அவ்வளவு தூரமா? வேண்டாம்! பஸ்ல போறதுன்னா போ! இல்லைன்னா வேண்டாம்!” என்றான் சற்று கடுமை காண்பித்து.

“முதல்ல அதை கேன்சல் பண்ணு, நான் தான் பஸ் ஏத்துவேன். இல்லைன்னா நீ எங்கேயும் போகலை, புரியுதா! அப்படியும் போறதானா, உங்க அப்பா குடுத்த கார் தானே, எனக்கு வேண்டாம்! டிரைவர் சொல்றேன், நீ எடுத்துட்டு கிளம்பு!” என்று சொல்லி குளிக்க சென்றான். 

இப்படி சொல்பவனிடம் என்ன சொல்ல முடியும். பிறகு காரை தொடக் கூட மாட்டானே. அந்த காரை அவனை தினமும் உபயோகிக்க வைக்கவே அத்தனை சிரமப் பட்டாள்.

“எங்கப்பா குடுத்ததுன்னு எடுக்கலையோ?” என்று சண்டையிட்ட போது,

“உங்கப்பா பெத்த பொண்ணையே எடுத்துக்கிட்டேன், கார் ஒரு விஷயமா?” என்று பதில் கொடுத்திருந்தான்.

“பின்ன ஏன் போக மாட்டேங்கறீங்க…?”

“பெட்ரோல் மாசம் எவ்வளவு ஆகும். வேண்டாம், தேவையில்லாத செலவு…” என்று கணக்கு சொன்னவனிடம், 

“அதொண்ணும் பெரிய விஷயமில்லை, அப்படி நமக்கு செலவு பண்ணாம சேமிச்சு என்ன பண்ண போறோம். கொஞ்சம் சௌகரியமா இருக்கலாம் தப்பில்லை…” என்று அவனை மிகவும் கன்வின்ஸ் செய்து காருக்கு பழக்கி இருந்தாள்.

என்ன கோபம் இருந்தாலும் குருவின் சௌகர்யம் தான் முன் நின்றது. அதனை கெடுக்க மனது சற்றும் யோசிக்கவில்லை. இப்போது அதுதான் சாக்கென்று அவன் திரும்ப பஸ் ஆட்டோ என்று ஆரம்பித்தால், “அம்மாடி, வேண்டாம்!” என்று தோன்றியது.

“பேசாம விடுடி அரசி. கொண்டு போய் விட்டா விட்டுட்டுப் போறான்…” என்று சொல்லிக் கொண்டாள்.

ஆனாலும் “போடா…!” என்றவளின் குரல் எப்போதும் போல அவனை பின் தொடர்ந்தது.

 

Advertisement