Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு :

இரவு உணவை எடுத்து வந்திருந்தனர், அதை உணவு மேஜையில் வைத்திருக்க குரு உண்டு முடித்து லேப் எடுத்துக் கொண்டு அமர்ந்தான். அரசியும் உண்டு முடித்து சிறிது நேரம் பார்த்தாள், அவன் அதனை வைப்பதாக காணோம் எனவும் அவளுக்கு டென்ஷன் கூடியது.

“எப்போ பார்த்தாலும் எதையாவது நினைச்சு மனசை குழப்பிக்கிட்டு, பைத்தியக்காரன் எப்படியோ போறான்…” என்று கோபம் பொங்கியது.

பேசாமல் சோஃபாவில் ஒரு தலையணை எடுத்து போட்டு படுத்துக் கொண்டாள். ஆனால் உறக்கம் தான் வருவேனா என்றது. குரு வெறுமையாய் இருந்தால் அதையும் இதையும் நினைப்போம் என்று முழுவதுமாக வேலையில் மூழ்கடித்துக் கொள்ள, அரசி சோஃபாவில் படுத்ததுக் கூடத் தெரியவில்லை.

இரவு ஒரு மணிக்கு நிமிர்ந்த போது அரசி சோஃபாவில் படுத்திருப்பது தெரிந்தது. எழுந்து வந்தவன் அவளை ரூமிற்கு தூக்கி போக முனைய, அவளைத் தூக்கவும் விழித்து விட்டவள், “விடுங்க, விடுங்க…” என்று திமிறினாள்.

“எனக்கு தூக்கம் வருது” என்றான் குரு.

“போய் தூங்குங்க…” என்று சண்டை பிடித்தாள்.

“ப்ச், அங்க வந்து படு…” என்று குருவும் முறைக்க,

“நீ சொன்னா நான் செய்யணுமா?” என்ற பார்வை பார்த்த போதும், அரசிக்கு உறக்கத்தை விட மனதில்லாமல், எப்போதும் போல “போடா…!” என்று சொல்லி அவன் கையில் இருந்து இறங்கி வேகமாக சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

விளக்கெல்லாம் அணைத்து ரூமின் கதவை தாளிட்டு குரு உள்ளே வந்த போது அரசி மீண்டும் உறங்கியிருக்க, அவளை அணைத்து படுத்துக் கொண்டவனுக்கு அவனின் தேவை என்னவென்றே தெரியவில்லை.

கையில் ஒரு பொக்கிஷம் இருக்கிறது, ஆனாலும் என்ன உறுத்துகிறது என்று அவனுக்கே புரியவில்லை. “இலகுவாய் இரு…” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு அவளை இன்னும் இறுக்கி அணைத்துக் கொள்ள உறக்கம் தழுவியது.

காலையில் அவனுக்கு முன்பே அரசி விழித்து விட்டாள். இறுக்கமாய் அணைத்துக் கொண்டு அவன் உறங்குவதை பார்த்தவள் எழுந்தால் அவன் உறக்கம் கலைந்து விடும் என்று அப்படியே படுத்திருந்தாள்.

அவளுக்கு வேண்டியது என்ன குருவின் நிம்மதியான உறக்கம் தானே!

அருகில் இருந்து பார்க்கவும், “உனக்கு என்னடா கவலை..?” என்று அவனின் தலை முடியை பிடித்து ஆட்ட வேண்டும் போல ஒரு உணர்வு, அடக்கியபடி அப்படியே படுத்திருந்தாள்.

கொஞ்சம் அவன் நகர்ந்தால் எழுந்து கொள்ளலாம் எனப் பார்க்க, அவன் அசையவேயில்லை, மேலும் உறக்கத்தில் வெகுவாய் இறுக்கம் கூட.

“ஷப்பா, முழிச்சிருந்தா தள்ளி போ தள்ளி போன்னு அட்வைஸ் பண்ண வேண்டியது, தூக்கத்துல என்ன பண்றான் பாரு இவன்…” என்று முனகியபடி படுத்துக் கிடந்தாள்.

நேரம் கழித்தே அவன் அசைய, அவனின் பிடியில் இருந்து விடுபட முயல, “ஷ் படு…!” என்று கண் திறக்காமலேயே குரு சொன்னான்.

“எனக்கு போகணும்…” என்று மெல்லிய குரலில் முனகினாள். கண்திறந்து குரு பார்க்க, ஒற்றை விரலை காண்பித்து “அர்ஜென்ட்…” என்றாள் சிறு குழந்தை போல.

“கொல்றடி…” என்று அவளைப் போல முணுமுணுத்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.

“பெரிய ரொமாண்டிக் ஹீரோன்னு நினைப்பு…” என்று அதற்கும் பேசிக் கொண்டே அரசி விலகிச் செல்ல, குரு விட்ட உறக்கத்தை தொடர்ந்தான்.

“ஆஃபிஸ் போக வேண்டாமா?” என்ற அரசியின் குரல் கேட்க, அதன் பிறகு தான் நேரமாவதை உணர்ந்தான்.

பின்னர் ஜெட் வேகம் தான் அரை மணி நேரத்தில் தயாராகி வந்துவிட்டான். அரசி எல்லாம் பாதி சமையலில் இருக்க, “லேட் ஆகுது அரசி, நான் பார்த்துக்கறேன்…” என்று கிளம்ப முற்பட,

“எல்லாத்தையும் எடுத்து உங்க தலை மேல கொட்டிடுவேன். டிராஃபிக் ஆகிடுச்சுன்னு நினைச்சு உட்காருங்க. பத்து நிமிஷம் ரெடி ஆகிடும்…” என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு தோசையும் பொடியும் வைத்தாள்.

“பொடியா…? வெயிட் பண்றேன். சட்னி ஆட்டு!” என்று குரு அமர்ந்து கொண்டான்.

“என்னை கிட்சன்குள்ளயே விடாம இருந்த மனுஷனுக்கு இப்போ அதிகாரம் பாரேன்…” என்று பேசிக் கொண்டு சென்றாலும் அவன் கேட்டதை செய்து கொடுத்தாள்.

அவளின் வார்த்தைகள் மீண்டும் அவனுக்குள் அவன் சரியில்லாததை எல்லாம் செய்ததை ஞாபகப் படுத்த முகம் சுருங்கி விட்டது. திரும்ப எல்லாம் கொண்டு வந்த போது அரசி கவனித்தது அவனின் சுருங்கிய முகத்தை தான்.

“திரும்ப என்ன ஆச்சு?” என்ற யோசனைக்கு போன போதும் அவனிடம் எதுவும் கேட்காமல் அவனுக்கு எல்லாம் செய்து கொடுக்க, அவனும் உண்டு விரைந்து கிளம்பி விட்டான்

அரசி என்ன நடந்தது என்று அமர்ந்து யோசிக்க, அவள் பேசிய வார்த்தைகள் அவனை காயப் படுத்தியதோ என்று தோன்ற, ஆழ்ந்து  யோசித்தாள். அது அவனை காயப்படுத்தவில்லை, குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது என்று புரியவில்லை

அரசியிடம் சரியாக நடந்து கொள்ளாமல், பேசக் கூட செய்யாமல், விட்டு போ, டைவர்ஸ் கொடு, என்று சொல்லி விட்டு, விரும்பத்தகாதது எல்லாம் அவளுக்கு செய்து விட்டு, இப்போது இப்படி எல்லாம் அவளிடம் எதிர்ப்பார்ப்பதும், அவளன்றி அவனுக்கு எதுவும் அசையாயதும், அவனுக்கு மனதை சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று புரியவில்லை.

“அது சாதரணமாய் பேசும் வார்த்தை, அது கோபப் படுத்துமா? இப்படி எல்லாம் யோசித்து யோசித்து என்னால் பேச முடியுமா? இல்லை முடியாது! என்ன செய்வது என்றே புரியவில்லையே?” என்று அரசியின் மனமும் சஞ்சலம் கொண்டது.

நாளை அவனின் பிறந்த நாள் என்பது ஞாபகத்திற்கு வர வேகமாக குளித்து கிளம்பி ஷாப்பிங் சென்றாள். பரிசுகள் அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் சேர்த்தே வாங்கினாள். எப்போதும் போல மேட்ச் மேட்ச்.

பர்ச்சேஸ் செய்தது குருவின் கார்டில் என்பதினால் அதனை தேய்க்க தேய்க்க அவனிற்கு மெசேஜ் பறந்தது. அடிக்கடி வந்து விழுந்த மெசேஜ் பார்த்தவன், அரசிக்கு அழைத்தான்.

எடுத்தவளிடம் “எங்க இருக்க அரசி? கார்ட் நீயா யூஸ் பண்ற…?” என்று உர்ஜிதம் செய்யக் கேட்டான்.

“ஆமாம். நான் தான் ஷாப்பிங் வந்தேன்…”

“இப்போ எதுக்கு தனியா ஷாப்பிங்! என்ன வாங்கற? இப்போ தானே கல்யாணத்துக்கு அவ்வளவு வாங்கினோம்…!” என்றான்.

“எவ்வளவு வாங்கினோம்? கஞ்சூஸ்!” என திட்டியவள், “அது உங்க தங்கைக்கு வாங்கினது, உங்களுக்கும் எனக்கும் இல்லை…!” என்று அதட்டினாள்.

“அதான் நம்மக்கிட்ட இருக்கே! எதுக்கு அனாவசிய செலவு? கல்யாண செலவு தலைக்கு மேல இருக்கு…!” 

“உங்க தலைக்கு உள்ள என்ன இருக்குன்னும் எனக்கு தெரியலை! தலைக்கு மேல என்ன இருக்குன்னும் எனக்கு தெரியலை! அப்படி தான் செலவு செய்வேன்! இப்போ வைங்க…!” என்று கடுப்பாக பேசி வைத்தாள்.

“இவளை என்ன செய்யன்னு தெரியலையே…” என்று நொந்து கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தான்.

இதற்கொன்றும் அரசி அப்படி செலவு செய்து விடவில்லை, மொத்த செலவே பத்தாயிரம் ரூபாய்க்குள் தான். குருவின் சம்பளத்திற்கு அது பெரிய தொகையே கிடையாது. ஆனால் குரு செய்யும் செலவுகளுக்கு அது பெரிய தொகை தான். அவனுக்கு அவனின் பிறந்த நாள் நாளை அதற்காக வாங்குகிறாள் என்றெல்லாம் நினைவிலேயே இல்லை.

அன்று வேலை அதிகம் இழுத்துக் கொள்ள அவன் வீடு வந்த போது பத்து மணியையும் கடந்து இருந்தது.வந்த உடனே அரசி எதுவும் பேசாமல் மௌனமாய் உணவை எடுத்து வைக்க, குருவும் எதுவும் பேசாமல் உண்டு விட்டு எழுந்தான். எல்லாம் ஒதுக்கி வைத்து நேற்று போல வந்து சோஃபாவில் படுத்துக் கொண்டாள்.

பார்த்த குரு “உள்ள வந்து படு அரசி, உன்னை நான் எதுவும் கேட்க கூடாதா…” என்றான்.

“கேட்கக் கூடாது! அப்படி அனாவசியமா எதுவும் செய்ய மாட்டான்ற நம்பிக்கை வேண்டாமா…?” என்று சண்டைக்கு கிளம்பினாள்.

அவள் கிளம்பிய வேகத்திற்கு “அச்சோ புல் ஃபார்ம்ல இருக்கா போலவே, வாய் கொடுக்காத குரு…” என்று தோன்ற,

“சரி, தப்பு தான், வா, வந்து படு…” என்றான் தன்மையாக.

“முடியாது…” என்று முறுக்கினாள்.

“நீ பக்கத்துல இல்லைன்னா, எனக்கு தூக்கமே வர்றதில்லைடி…” என்றான் பாவம் போல.

“இருந்தா மட்டும் என்ன நினைக்கறீங்கன்னே தெரியறதில்லை. இப்போவே பீபிக்கு மாத்திரை சாப்பிடறோம். இன்னும் அதை அதிகம் பண்ண கூடாதுன்னு தெரியுதா?”

“இப்போவே நாலு நாளா வாக்கிங் போகலை. கல்யாணம் முடியற வரை போகறது கஷ்டம் தான். மனசுக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்காம இருக்கணும் தானே. என்ன பிரச்சனை எப்போ பார்த்தாலும் ஏதாவது யோசிச்சுக்கிட்டே?”

ஆம்! மாத்திரை உடற் பயிற்சி உணவு கட்டுப்பாடு என்று அரசி குருவை மிகவும் கட்டுக்குள் வைத்திருந்தாள். முன்பும் குருவே அப்படித்தான். தேவையில்லாத சிந்தனைகள் தானே அவனின் உறக்கத்தை கெடுத்து உடலைக் கெடுக்கிறது. 

“நான் சாதாரணமா ஏதாவது பேசினாக் கூட கோபப்படறீங்களோன்னு  எனக்கு ரொம்ப டவுட்டா இருக்கு…” என்று அரசி சொல்லவுமே, 

“சே, சே, எனக்கு ஒரு கோபமும் இல்லை…” என்றான் அவசரமாக.

“இல்லை, எனக்கு அப்படி தான் தோணுது” என்றாள் அரசியும் விடாமல்.

தன்னை ஏதோ ஒரு வகையில் கண்டு கொள்கிறாள் என்பது குருவிற்கு எரிச்சலை கொடுத்தது. “உனக்கு தோன்றதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை. இப்போ கூட வந்து படுக்க முடியுமா முடியாதா…” என்றான் காட்டமாக.

“முடியாது போடா…” என்றாள் பதிலுக்கு அவளும் அதே போல.

“போடி…” என்று அவனும் சொல்லி ரூமின் உள் சென்று படுத்துக் கொண்டான்.

“அதெப்படி நீ முடியாதுன்னு சொல்லலாம்னு என்னை தூக்கிட்டு போகாம, முறைச்சிக்கிட்டு போய் படுக்குது! இவன் எல்லாம் எப்படி லவ் பண்ணினான். நம்மளை கல்யாணம் பண்ணலைன்னாலும் இவன் லவ் பிச்சிக்கிட்டு இருக்கும்.” என்று அவளுக்கு அவளே நக்கலாய் பேசிக் கொண்டு நேரம் பார்த்தாள். பதினொன்றரை என்று கடிகாரம் காண்பித்தது. 

அவன் படுத்திருந்து பார்த்தாலும் தெரியாத இடத்தினில் இருந்து மெதுவாக ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தாள். டீபாய் மேல் கேக் வைத்தாள், பின்பு வாங்கின பரிசு பொருளை வைத்தாள். அவனின் கேமராவை எடுத்து செட் செய்தாள்.

எல்லாம் ஐந்து நிமிடத்தில் முடிந்து விட்டது இன்னும் இருபது நிமிடம் இருக்க, அவன் தூங்கிவிட்டால் என்ன செய்வது, தூக்கத்தில் எழுப்ப வேண்டாமே என நினைத்து ரூமின் உள் சென்று வெளிச்சத்தை உயிர்ப்பித்தாள்.

“என்ன…?” என்று கண் திறந்து பார்த்தான்.

அவனை கவனியாதது போல, எதோ தேடுவது போல அலமாரியை திறந்து வைத்து குடைந்து கொண்டிருந்தாள்.

“எனக்கு தூங்கணும் அரசி, லைட் ஆஃப் பண்ணு…” என்றான்.

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் அலமாரிக்குள் தலையை புகுத்தினாள்.

வேண்டுமென்றே கலாட்டா செய்கிறாள் என புரிந்து, “அரசி…” என்றான் அதட்டலாக.

அரசி திரும்பவே இல்லை.

கடுப்பானவன் கவிழுந்து படுத்து முகத்தை தலையணையினுள் புகுத்திக் கொண்டான்.

“தோடா, இவனாவது லவ் பண்ணியிருப்பானாவது. எப்படி அந்த மெடிக்கல் மிராக்கில் நடந்தது தெரியலையே! ஹ! ஹ! ஒரு வேளை அந்த பொண்ணு பின்ன சுத்தியிருக்குமோ…?”

“நம்மாள் தான் எக்ஸ்ட்ரா ஹேண்ட்சமா இருக்கான்! நல்லா சம்பாதிக்கறான்! அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான்! அப்படித் தான் இருக்கும்! இதுல எனக்கு டைவர்ஸ் குடுத்துட்டு அவளை கல்யாணம் பண்ணியிருப்பானா…? எதையும் பண்ணாம நடுவுல தான் நின்னிருப்பான்…”

“ஹ! ஹ! கவுந்து படுத்துகிட்டா அரசி விட்டுடுவாளா. நீ போன்னு சொன்னப்போவே விடலை, இப்போவா விடுவேன், இருடா வர்றேன்…” என்று நினைத்தவளுக்கு சத்தமாய் சிரிக்க தோன்றியது. 

“சிரிச்சிடாத அரசி…” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு சமீபமாக வந்த பழக்கமாக அவன் மேல் ஏறி அமரும் ஆசை வர, சத்தம் செய்யாமல் அருகில் சென்று இரு புறமும் கால் போட்டு அவனின் முதுகின் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

குருவிடம் எந்த அசைவும் இல்லை!

“தோடா! கோபமாம், இம்சை, மனசுல என்ன ஓடுதுன்னு சொல்றதே இல்லை!” என்று தோன்றவும்,

அவனை வாய் சண்டைக்கு இழுக்கும் முடிவாக பேச வாய் திறந்தவள், பின்பு என்ன நினைத்தாளோ அப்படியே அவன் மேல் படுத்துக் கொண்டாள். அப்போதும் குருவிடம் எந்த அசைவும் இல்லை!

அவனின் காதின் அருகில் மெதுவாக “நான் வெய்ட்டா இல்லை..?” என்று கிசுகிசுத்தாள்.

“இவ என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டா போல, நேத்தைக்கு முந்தின நாளே ஒரு வழியானா, திரும்பவும் வம்பு செய்யறா, இவளுக்குத்தானே கஷ்டம், எனக்கு என்ன?” என்று நினைத்த போதும்,

எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தான்.

உடலில் அழுத்தத்தை கூட்டி அவன் மேல் இன்னும் பாரம் கொடுத்தாள். என்ன செய்தாலும் குரு அசைவேணா என்றிருக்க,

“போடா…!” என்று சலிப்பான குரலில் சொல்லி உருண்டு கீழே படுத்தாள்.

அடுத்த நொடி என்ன நடந்ததென்றே தெரியவில்லை, குரு நேராய் படுத்திருக்க இவளை தூக்கி அவன் மேலே போட்டிருந்தான்.

“வாவ்! எப்படி இப்படி?” என்று ஆச்சர்யமாய் வினவினாள்.

“ம்ம், மறுபடியும் டெமான்ஸ்ட்ரேஷன் பண்ணனுமா என்ன?”

“ம்ம், பண்ணலாமே…” என்றாள் முகம் முழுக்க புன்னகையோடு.

“கொல்றடி…” என்று எப்போதும் போல சொன்னவன், “என்னதான் உன் பிரச்சனை ஜக்கம்மா…?” என்றான் தணிந்த குரலில்.

அதற்குள் நேரம் பன்னிரெண்டை தொட்டிருக்க, “அதை விடுங்க…” என்றவள்,

அவன் முகத்தினை நெருங்கி, முழுக்க காதலை சுமந்து அவனின் கண்களை பார்த்து “ஹேப்பி பர்த்டே…!” என்றாள் ஆழ்ந்த மயக்கும் கிசுகிசுப்பான குரலில்.

குருவிற்கு அப்போது தான் தேதி ஞாபகம் வர, அவனின் முகமும் புன்னகை பூச, அவனின் முகத்தின் மலர்ச்சியை சில நொடிகள் ரசித்தவள், அழைப்பு விடுக்கும் அவனின் கண்களை உணர்ந்து, அவனின் உதடுகளில் ஒரு ஆழ்ந்த முத்தத்தை பதித்தாள்.

அரசியை இறுக்கி அணைத்துக் கொண்டான்! இறுக்கம்… விடுவேணா என்ற இறுக்கமோ? விட்டு விடாதே என்ற இறுக்கமோ? என் மன சுமையை போக்கிவிடு என்ற இறுக்கமோ? சொல்வதற்கில்லை!

 

Advertisement