Advertisement

                 அத்தியாயம் இருபத்தி ஒன்று : 

காலையில் அரசிக்கு எழவே முடியவில்லை அப்படி ஒரு சுகமான அயர்வு, உடன் உறக்கமும் கூட. எப்போதும் போல காலையில் எழுந்து விட்ட குரு, அவளை எழுப்ப மனமின்றி அவளை சிறிது நேரம் பார்த்திருந்தான்.

அவனின் வாழ்வில் வந்த ஜக்கம்மா என்று தான் அப்போதும் தோன்றியது. தேவதையுமல்ல ராட்சசியும் அல்ல. எல்லாம் மாற்றி விடுகிறாள் அவளின் எண்ணம் போல, ஆனால் எல்லாம் அவனுக்காக மட்டுமே!  

இப்போது அவனின் பெரிய கேள்வியே இவள் என்னை திகட்ட திகட்ட காதல் செய்கிறாள். எனக்கு அந்த தகுதி இருக்கின்றதா? பழையது எல்லாம் இவள் ஞாபகத்திலேயே இல்லையா?

எப்படி அந்த ஞாபகம் இல்லாமல் இருக்க முடியும். மனதில் இவன் வேறொரு பெண்ணை காதலித்தவன் என்ற உறுத்தல் இருக்காதா? எனக்காக அதை சகித்துக் கொள்கிறாளா? 

நான் அவளை நன்றாக வைத்திருக்கிறேனா? இவளுக்கு என்னை பிடித்திருக்கிறது தெரியும்! இது கணவன் மனைவிக்கான உறவு மட்டுமா? இல்லை அதையும் மீறி பிடித்தமா? இதில் காதல் இருக்கிறதா?

சொன்னாலே நேற்று புடவை எடுக்கும் போது கூட, ‘எனக்கு இந்த மாதிரி ப்ளசன்ட் மெமரீஸ் எதுவும் இல்லையென்று…’ எதுவுமே இல்லை தானே! திருமணம் ஆகிவிட்ட காரணத்தினால் பிடித்தத்தை வளர்த்துக் கொண்டு இருக்கிறாளோ? அது தான் குழந்தை கூட கேட்கிறாளோ? 

இன்னும் வாழ்க்கை வாழ்வே ஆரம்பிக்கவில்லை!

ஏதேதோ குழப்பம்!

தேவையற்றது என்று அறிவு பலமாய் அடித்துச் சொல்ல, மனது கேட்பேனா என்றது!

அதுவும் அரசி ஏதாவது கேள்வி கேட்டு, திட்டி, கலாட்டா செய்து, இப்படி ஏதாவது செய்தாலாவது பரவாயில்லை. எதுவும் செய்யாமல் அவனை அப்படியே ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அந்த விஷயம் கூட அவளின் வீட்டினருக்கோ மற்றவருக்கோ தெரியாமல் பார்த்துக் கொள்ள, அவனின் கௌரவம் எங்கேயும் களங்கப் படவில்லை! அதுவே பெரிய உறுத்தலைக் கொடுத்தது. 

அரசி மட்டு சொல்லியிருந்தால் மாமனார் வீட்டினில், பின்னர் எல்லாம் சரியாகிருந்தால் கூட மரியாதை குறைவு தானே!

அதனையும் விட அவனின் குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டாள். ஆனாலும் இந்த சஞ்சலம் ஏன் வந்தது என்று தெரியவில்லை.

“ஒன்றுமில்லை…” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு கீழே இறங்க,

“அண்ணா காஃபி கொண்டு வரட்டுமா…” என்று இவனை பார்த்ததுமே ஜோதி கேட்க,

“ம்ம்” என்றவனிடம், “அண்ணிக்கு” என,

“தூங்கறா, எனக்கு மட்டும் கொடு…” என்று பேப்பரை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

பின் அவன் குளித்து காலை உணவு உண்ணும் வரையிலும் கூட அரசி எழவில்லை.

எப்போதும் இப்படி அரசி உறங்கியிராததால் “அண்ணா, அண்ணி இன்னும் எழலை…?” என்று புனிதா கேட்க செய்தாள்.

“தலைவலின்னு சொன்னா, நான் தான் தூங்க சொன்னேன்…” என்று குரு சமாளித்தான்.

சரியாக பத்து மணி அரசியின் மொத்த குடும்பமும் வந்திறங்க, “அச்சோ! மறந்து போனேனே இவர்கள் வருவார்கள்…” என நொந்து கொண்டான்.

“என்ன இன்னும் இவ எழலையா?” என்று பூமா சத்தமாய் பேச,

பெண் இன்னும் எழாததால் அர்த்தனாரியின் முகம் மாறிவிட்டது, புகுந்த வீட்டில் இப்படி தான் நடப்பதா என்பது போல.

நாதன் “இல்லை, எப்பவும் இப்படி எல்லாம் தூங்க மாட்டா, தலைவலின்னு குரு சொன்னான்…” என்று மருமகளுக்காகப் பரிந்து பேசினார்.

“என்ன தலைவலி? மாத்திரை போட்டா சரியா போகுது…!” என அப்போதும் அர்த்தனாரி பேசினார்.

“ப்பா, ஏதோ ஒரு நாள் தலைவலின்னு அசந்து தூங்கறது தான். ஏன்பா நீங்க…” என்று கலை அப்பாவை அதட்ட, அதன் பிறகே சற்று அமைதியானார்.

ராஜா குழந்தையை வைத்திருக்க, ஜோதி வந்து குழந்தையை வாங்க, அவனின் வீடு பக்கம் தான் என்பதால் அவனின் அம்மா உடனே வந்து விட்டார். இவர்கள் வீடு ஆட்களால் நிறைந்தது. குரு மாடி மேலேறினான் அரசியை எழுப்புவதற்காக.

அப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, “அரசி…” என்று மெதுவாய் அவளை உலுக்கினான்.

“ம்ம்…” என்று சோர்வாய் கண்களை திறக்க, அங்கே பார்த்தது குளித்து ஃபிரெஷ்ஷாக இருந்த குருவை தான்.

“வாவ் குளிச்சிட்டீங்களா…” என்று அவன் எதிர்பாராத போது கை பிடித்து இழுக்க படுக்கையிலே விழுந்தான்.

அவனை வாசம் பிடித்து அணைத்துக் கொண்டு உறக்கத்தை தொடர,

“அரசி, உங்க அப்பா அம்மா எல்லாம் கீழ வந்துட்டாங்க…” என்று குரு சொன்னது தான் போதும்,

“என்ன?” என்று வேகமாக எழுந்து அவன் மேல அமர்ந்தாள்.

“உனக்கென்ன வேண்டுதலா? என் மேல உட்காரணும்னு, நேத்து இருந்து இதே வேலை தான் செய்யற…!” என்று குரு சிறு புன்னகையோடு சொல்ல,

“உங்களை யார் என்னை எழுப்ப வேண்டாம்னு சொன்னது. இப்போ யார் அவங்கக் கிட்ட பேச்சு வாங்கறது. போச்சு! போச்சு! எங்கப்பாவும் எங்கம்மாவும் எனக்கு பொறுப்பே இல்லைன்னு சொல்லிச் சொல்லி என்னை ஒரு வழியாக்குவாங்க…!”

“எல்லாம் உங்களால தான்…” என்று மேலே அமர்ந்தவாறே அவனை முறைத்து பார்த்தாள்.

“என்னாலையா? இப்படி மேல உட்கார்ந்து உட்கார்ந்து கடிச்சு கொதறி என்னை சித்ரவதை செஞ்சிட்டு, நீ என்னை சொல்றியா…?”

“ஆங்! அதெல்லாம் ஒரு பத்து நிமிஷம்! அதுக்கப்புறம் நானா பண்ணினேன்..?” என்று முகம் சிவக்க சிவக்க அவனை பார்த்து நியாயம் கேட்டாள்.

“அம்மாடி ஜக்கம்மா, எல்லோரும் இருக்காங்க, கீழ போகணும், முதல்ல எழுந்துரு…” என்றான் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக அவளின் சிவக்கும் முகத்தினை ரசித்தவாறே.

“நான் கீழ வரும்போது என்னை யார் பேசினாலும் நான் கௌன்ட் பண்ணிக்குவேன். உங்களுக்கு அத்தனை கடி இருக்கு…” என்று தீர்ப்பை வேறு சொன்னாள்.

“எத்தனை வேணா கடிச்சிக்கோ. சீக்கிரம் குளிச்சிட்டு வா, தலைவலின்னு சொல்லியிருக்கேன். அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கோ…”  என,  வேகமாக அரசி குளிக்கச் சென்றாள்.

என்னவோ திகட்டத் திகட்ட கூடிக் களித்துவிட்டு தலைக்கு ஊற்றாமல் இருக்க முடியாமல், தலைக்கு ஊற்றி வேகமாக கீழே வந்து “வாங்கப்பா…” என்றபோது அரை மணிநேரம் கடந்து இருந்தது.

“ம்ம்” என்று ஒற்றை வார்த்தையில், “நீ எழுந்து வர இவ்வளவு நேரமா…?” என்று அர்த்தனாரி பார்த்தார்.

பூமா இவளை பார்த்தவர் “தலைவலின்னு சொன்னாங்க, எதுக்குடி தலைக்கு குளிச்ச…” எனக் கடிந்தார்.

அம்மாவிடம் எகிறினாள் “இப்போ என்ன பண்ணனும்ன்ற என்னை. என்ன பண்ணனும்ன்ற? அப்போ தலைவலி, இப்போ போச்சு…!”

“இவ்வளவு கேள்வி கேட்கறவங்க, நான் பொறுப்பா இருக்க மாட்டேன்னு நினைக்கறவங்க, எனக்கு கல்யாணம் செஞ்சிருக்கக் கூடாது. வீட்லயே வெச்சிருக்கணும்…!” என்று கிளம்ப, அர்த்தனாரி அசந்து விட்டார் பெண்ணின் பேச்சினில்.  

“அரசி…” என்று ஓங்கி ஒலித்த குருவின் ஒற்றை அதட்டல் வேலை செய்ய, முகத்தை சுருக்கி சமையல் அறை சென்று அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள்.

குரு பின்னோடு சென்றவன் ஜோதியை நகரச் சொல்லி, அரசிக்கு அவனே காஃபி கலக்கி அவளின் கையில் திணித்தவன்,

“குடிச்சிட்டு எல்லோர் கூடவும் சிரிச்சு பேசற, யார் கிட்டயும் சண்டை போடக் கூடாது…” என்று குழந்தையை மிரட்டுவது போல சொல்லி வெளியே போகப் போக, பார்த்திருந்த பூமா, கலை, ஜோதி, புனிதா என அனைவருக்கும் புன்னகை வந்தது.

“இது போதாது, பசிக்குது, டிஃபன் வேணும்…” என்று விட்டேனா என்று குருவை பார்த்து அரசி கேட்டாள்.

“எனக்கொன்னுமில்லை. நான் இப்போவே தோசை சுடுவேன். ஆனா உங்கப்பா பார்த்தா உன்னை வெச்சி செய்வார்…” என்றான் அசால்ட்டு போல.

“எங்கப்பா எனக்கு பிரச்சனையில்லை. அவர் பேசறது எனக்கு புதுசில்லை.  ஆனா பாருங்க, உங்க காஃபி ஓகே, தோசை ரொம்ப கஷ்டம். அதனால நீங்க வேண்டாம். உங்களுக்கு பதிலா எங்கம்மாவை சுடச் சொல்லிட்டு போங்க…!” என்றாள் அவனை விடவும் அசால்டாக.

“முதல்ல அவ கைல இருக்குற காஃபி கப்பை புடுங்குங்க தம்பி…” என்று பூமா கிளம்ப,

“என் பக்கத்துல வந்துடுவாரா என்ன?” என்று சொல்லியபடி மெதுவாக அரசி அதனை அருந்தத் துவங்கினாள்.

“இவளை…” என்ற பார்வை பார்த்தவாறே குரு வெளியே சென்று அமர்ந்தான்.

“மாப்பிள்ளையை ரொம்ப படுத்துறடி நீ…” என்று பூமா குறைபட,

“மா, ஒரு நாள் காஃபி விட்டா ஒன்னும் குறைஞ்சிட மாட்டார். எனக்கு தோசை சுடு…” என்று அதட்டி, சுட வந்த ஜோதியை “நீ போ கல்யாணப் பொண்ணு…” என்று அனுப்பி வைத்தாள்.

இப்படியாக அம்மாவிடம் வேலை வாங்கி, பட்டு குட்டியை தூக்கி, என்று நாள் முழுவது அழிச்சாட்டியம் செய்து, திருமணத்திற்கு எல்லா பொருட்களும் சரியாக இருக்கின்றது என்று பெரியவர்கள் சொல்ல, பின் சென்னை நோக்கி கிளம்பினர்.

குருபிரசாத் யாரும் அரசியை ஒரு வார்த்தை சொல்ல விடவில்லை. பெரிதாக அர்த்தனாரி பெண்ணிற்கு அறிவுரை வழங்க காத்திருக்க,

“மாமா உங்களை பார்த்ததும் செல்லம் கொஞ்சறா, மத்தபடி அவ ரொம்ப பொறுப்பு. எதுவும் பேசக்கூடாது…” என்று சொல்லிவிட, அதன் பிறகே அவர் அடங்கினார்.

இப்படியாக காரில் திரும்ப சென்று கொண்டிருக்கும் போது, “ஏன் இவ்வளவு கலாட்டா அரசி? ஒருத்தர் மாதிரி ஒருத்தர் இருக்க மாட்டாங்க. இன்னும் கொஞ்சம் நீ அமைதியாகலாம்…” என்று தன்மையாக சொன்னான்.

“நான் அமைதியானா நீங்க தான் ஏதோ யோசனைக்குப் போயிடறீங்களே. உங்களை இழுத்துப் பிடிக்கவே நான் கலாட்டா செய்ய வேண்டி இருக்கு…” என்று சொன்னவள்,

“சொல்லுங்க! என்ன மனசுக்குள்ள ஓடுது ரெண்டு நாளா! பெருசா உங்க கவனம் எதுலையும் இல்லை! வாட் இஸ் ஈட்டிங் யு…?” என்று தீவிரமாகக் கேட்டாள்.

“அரசி இஸ் ஈட்டிங் மீ…” என்றான் சிறு சிரிப்புடன்.

“தோடா, இப்படியே பேசி என்னை டைவர்ட் பண்ணிடலாம்னு நினைக்கறீங்களா. திரும்ப ஏதாவது ஸ்ட்ரெஸ் குடுத்து உடம்பை கெடுத்துக்கிட்டீங்க, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது…” என்றாள் மிரட்டலாக.

“என்ன பண்ணுவ?” என்று குரு அவளின் தீவிரம் புரியாமல் கிண்டல் செய்தான்.

அவனின் பதிலில் கோபம் வரப் பெற்றவள், “ம்ம்ம், உங்களை விட நான் உடம்பை கெடுத்துக்குவேன்…” என்று அதி தீவிரமாய் சொன்னாள்.

அப்படி ஒரு கோபம் குருவிற்கு பொங்க காரை ஓரமாய் நிறுத்தியவன், “இப்படியெல்லாம் பேசின அப்படியே ஒரு அறை வைப்பேன். ரொம்ப திமிராகிடுச்சு உனக்கு. உடம்பை கெடுத்துக்குவியா, தொலைச்சிடுவேன் தொலைச்சு..!” என்று கை நீட்டி மிரட்டினான்.

“ம்ம், அப்புறம்…!” என்று சலைக்காமல் நேர் பார்வை பார்த்தாள் அரசி.

ஆனாலும் குருவின் கோபம் அடங்கவில்லை, “எப்படி இப்படி பேசலாம்?” என்று காரை சீறிப் பாய விட்டான்.

வேகத்தில் அரசி பயந்து போனாலும், எந்த சமாதானமும் செய்யவில்லை. வீட்டிற்கு வந்ததும், “சும்மா, சும்மா, நீங்க எதையாவது நினைச்சு மனசை கெடுத்துக்குவீங்க நான் பார்த்துட்டு இருப்பேனா..?” என்று பேசினாள்.

மேலும் மேலும் அவளின் அக்கறை என்னவோ ஒரு குற்ற உணர்ச்சியை சஞ்சலத்தை கொடுக்க, “நீ என்னை பார்க்கவே வேண்டாம்…” என்று அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான்.

ஒரு சின்ன விஷயம் தான், ஏனென்று தெரியாமல் ஒரு கோபம்! அதுவும் அரசி அவளின் ஆரோக்யத்தை கெடுத்துக் கொள்வேன் என்றது அப்படி ஒரு கோபத்தை கொடுத்தது. இப்படி கண்டதையும் நினைத்து மனதை குழப்பி ஒரு அழுத்தம் கொடுக்கிறான் என்று அவனுக்கு புரியவேயில்லை. அது அரசிக்கு கவலையை கொடுக்கிறது என்று புரியவில்லை. 

எப்போதும் போல “போடா…!” என்ற அரசியின் வார்த்தை அவனின் செவிகளை தீண்டியது.

ஆனாலும் அவள் போக விடுவது இல்லையே. என்ன இருந்தாலும் நடந்தாலும், அவளின் பார்வை கவனம் முழுவதும் அவனிடம். குருபிரசாத்தின் சிறு மாற்றமும் அவளுக்கு புரியும். அவன் பேசினாலும் பேசாவிட்டாலும் முகம் பார்த்தே கண்டு கொள்வாள்.

அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை கண்டு கொள்வது போல!

அரசி தனக்கு கிடைத்த வரம் என்று புரிந்தாலும் ஏன் என்று நம்பத்தான் முடியவில்லை குருபிரசாத்திற்கு. அது தான் அவனின் குழப்பம். எப்படி ஒருவர் இப்படி இருக்க முடியும் என்று

ஆனால் அதுதானே வரம்!

அவன் காதல் கற்றாலும் அதனை மறக்க வைத்த வரம்!

எப்படி மறக்க வைக்கலாம் என்று நினைத்தால் இதற்கு விடை தான் என்ன?

 

Advertisement