Advertisement

அத்தியாயம் இருபது :    

“அப்பா, இன்னைக்கு பெரியம்மா பெரியப்பா கூட போய் அவங்க பக்கம் முகூர்த்த புடவை நகை எல்லாம் வாங்கினோம்” என்று ஒலிபரப்பிய அரசி,  

“நீங்களும், அம்மாவும், கலையையும் மாமாவையும் கூட்டிட்டு ஒரு நாள் இங்க வீட்டுக்கு வாங்க. நாம வாங்கின பொருள் நகை எல்லாம் இங்க தான் இருக்கு. சரியா இருக்கா பார்த்து சொல்லுங்க. எதாவது விட்டு போயிருந்தா வாங்க சௌகரியமா இருக்கும். இன்னும் பதினஞ்சு நாள் தான் இருக்கு!” என்றாள்.

“இப்போ போய் புடவை எடுத்தா எப்படி? பொண்ணுக்கு ப்ளவுஸ் தைக்க, அதுக்கு முன்ன அதை டிசைன் பண்ண வேண்டாமா?” என்று பூமா கேட்டார்.

“தெரியலைம்மா, அப்படியே அங்க வீட்ல எல்லோர் கிட்டயும் காண்பிக்க எடுத்து போயிட்டாங்க. எனக்கும் இது ஞாபகத்துலயே இல்லை!” என்று சொன்னாள்.

இப்படியாக பேச்சுக்கள் வளர்ந்த போது, கலையரசியின் குழந்தை பாந்தமாய் அரசியின் கைகளுக்குள் அடங்கியிருக்க, ராஜா வெளியே சென்று வந்ததுமே குழந்தையின் முகத்தை பார்ப்பவன், இன்று அரசின் கைகளில் இருப்பதினால் எட்டி எட்டி பார்த்திருந்தான்.

அதனை கவனித்த குரு, “அரசி என் கைல கொடு” என்றான்.

இது புரியாத அரசி, “போங்க நீங்க, நான் இப்போ தான் தூக்கினேன், யாருக்கும் குடுக்க மாட்டேன்!” என்றாள்.

“அண்ணி, அண்ணாக்கிட்ட குடுங்க அவருக்கு ப்ராக்டிஸ் வேண்டாமா?” என்று புனிதா பட்டென்று சொல்லிவிட்டு, பின் நாக்கை கடிக்க, அங்கே எல்லோர் முகத்திலும் புன்னகை.

அரசியின் முகத்திலும் சிறு வெட்கத்தின் சாயல்!

“அதான் பொண்ணு சொல்றாலல குடு” என்று அர்த்தநாரி அதட்டினார்.

சிணுங்கிக் கொண்டே அரசி குருவிடம் குழந்தையை கொடுக்க சென்றவள் , அருகில் சென்றதும் கொடுக்காமல், “போங்க, போங்க, கை கால் கழுவி வாங்க” என்று அதட்டினாள்.

“நீ கழுவினியா” என்று குரு கேட்க,

“இல்லை, அதான் உங்களை சொல்றேன்” என்று அரசி வாயடித்தாள்.

குழந்தையை அப்படி தான் தூக்க வேண்டும் என்று புரிந்தவன் “உன்னை யார் அப்படியே தூக்க சொன்னா” என்று கடிந்து அவன் கை கால் கழுவி வரப் போக, பின்னேயே அவன் தங்கைகள் சென்றனர்.

அரசி யோசனையாய் பார்க்க, “நாங்களும் தூக்கணும் அண்ணி” என்று சொல்லிச் சென்றனர்.

அதற்குள் குரு வந்தவன் “கொடு” என்று வாங்கினான்.

“சும்மா, சும்மா, முறைக்கக் கூடாது. அப்புறம் அந்த கண்ணு வெளில வந்துடப் போகுது” என்று குருவிடம் மெதுவாக அரசி சொன்னாலும் அங்கிருந்தோர் காதில் விழ,

எப்படியிருக்குமோ இவர்களின் வாழ்க்கை என்று கவலை கொண்டிருந்தவர் அத்தனை பேர் முகத்தினிலும் புன்னகை.

“போடி” என்றான் செல்லமாக குரு.

இவர்கள் செய்த ஆர்பாட்டத்தில் ராஜாவும் கை கால் கழுவி வந்து குருவின் அருகில் அமர்ந்து குழந்தையின் கன்னத்தை தடவி கொடுத்தான்.

பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை அல்லவா.

கலை வெளியே வந்து அப்போது தான் எல்லோரையும் “வாங்க” என்று வரவேற்றாள்.

“அதென்ன தம்பி ரெண்டு பேரும் மேட்ச்” என்று கலை இருவரின் உடையையும் பார்த்து விட்டு கேட்க,

“அச்சோ அண்ணி, உங்க தங்கச்சி என்னை கொல்றா பாருங்க, இதை தான் போடணும்னு” என்று குரு சலித்தான்.

“நல்லாயிருக்கு தம்பி” என்றும், “நல்லாயிருக்கு குரு” என்று ஒரு சேர கலையும் ராஜாவும் கூறினர்.

“பாருங்க” என்று அரசி இல்லாத காலரை தூக்க,

எப்போதும் உடைகள் பற்றி எதையும் சொல்லாத அர்த்தனாரியும் “நல்லாத் தான் இருக்கு” என்று சொல்ல, அரசிக்கு பெருமை பிடிபடவில்லை.

முகம் பெருமையில் ஜொலிக்க, குருபிரசாத்தை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தாள்.

“வீட்டுக்கு போனதும் சுத்திப் போட்டுக்கங்க” என்று பூமா பொறுப்பை ஜோதியிடம் கொடுத்தார். 

பூமாவிற்கு உதவ கலை போக, “அண்ணி, நீங்க இருங்க” என்று கலையை சொல்லி ஜோதி பொறுப்பாக உடன் செல்ல,

“கல்யாணப் பொண்ணு நீ எங்க கிச்சன் வர்ற, நீ போய் உட்கார்” என்று என்ற படி கலை திரும்ப போக,

இதையெல்லாம் பார்த்த அரசி எழுந்து, “நீங்க எல்லாம் உட்காருங்க, நான் போறேன்” என்று சென்றாள்.

என்னவோ பெண்ணை பொறுப்பில்லாமல் சிறு பிள்ளை தனமாய் வளர்த்து விட்டோமோ என்று இருந்த பூமாவிற்கும் அர்த்தனாரிக்கும் மனம் நிறைவாய் இருந்தது.

பின் குழந்தையை ஆளாளுக்கு மாற்றி தூக்க, சிறிது நேரத்தில் அது விழித்து விட, குழந்தையை கொஞ்ச, என்று நேரம் போனது. இரவு உணவை முடித்து மாமனாருக்கும் எடுத்துக் கொண்டு அவர்கள் கிளம்பினர்.

அப்போதும் குழந்தையை அரசி கையில் தூக்கி கொண்டே இருந்தாள்.

“ஓய், நீ சீக்கிரம் பெத்துக்கோ” என்று அதட்டிய படி கலை குழந்தையை கையில் வாங்கினாள்.

“செம அட்வைஸ் போ, நான் குழந்தை பெத்துக்கிட்டா இவனை தூக்க கூடாதா” என்று அக்காவை சண்டைக்கு இழுத்தாள். 

“அம்மா தாயே, நீயே வெச்சிக்கோ” என்று கலை குழந்தையை திரும்ப கொடுக்க போக,

“வேண்டாம், வேண்டாம், நீ இன்னொன்னு பெத்துகிட்டு, இவனை குடு” என்று கலையை பார்த்து கண்ணடித்தாள்.

அங்கே நின்றிருந்த ராஜாவிற்கு சிரிப்பு வர, எல்லோரும் பார்க்க சிரித்தால் நன்றாய் இருக்காதே என்று அவன் உள்ளே சென்றான்.

“நீ இருக்கியே, வாயாடி!” என்று பூமா வாய் விட்டு அதட்டினார்.  

“இவ இருக்காளே” என்று குருவும் நினைக்க,

கலைக்கு என்ன முயன்றும் முகத்தினில் வெட்கம் வந்தது.

இப்படியாக எல்லோர் முகத்திலும் புன்னகையை நிலைக்க விட்டு  கொண்டே கிளம்பினாள் அரசி.

“உங்க அம்மா வீடு இப்போ அலையடிச்சு ஒஞ்ச மாதிரி இருக்கும் அண்ணி” என்று புனிதா வாய் விட்டே சொல்ல, அரசியின் முகத்தில் சிரிப்பு.

சரியாக திருமணம் முடிந்து பதினோரு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது என்பதை மறந்து போனால் அரசி. அவள் யோசனையிலேயே இருந்ததினால் குருபிரசாத்தின் வாடிய முகத்தினை கவனிக்கவில்லை

மறுநாள் அப்பா அம்மா எல்லோரும் வந்து பொருட்களை பார்க்கலாம் என்று சொன்னதினால் அன்றிரவு பொன்னேரியிலேயே தங்கி கொண்டனர்.

“ஒரு வருஷம் ஆகப் போகுது, நமக்கு ஏன் குழந்தை இல்லை” என்றாள் இரவின் தனிமையில்.

அப்பாவிடம் பேசிவிட்டு அப்போது தான் உள்ளே வந்தான் இன்னும் படுக்க கூட இல்லை குரு. அரசி அங்கே முன்பே வந்து படுத்திருந்தாள். அவள் கேட்ட குருவை பார்த்து கேட்ட கேள்வி தான் இது.

குருவிற்கு சிரிப்பு வந்தது, “நீ கணக்குல புலியோ” என்றான்.

“என்ன புலி, புளின்னுட்டு” என்று அரசி முகத்தினை சுருக்கினாள்.

“பின்ன நமக்கு கல்யாணமாகி பதினோரு மாசம் தானாகுது” என்றான்.

“பதினோரு மாசம் ஆகிடுச்சுள்ள”

குருவிற்கு அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது.

“என்ன சிரிப்பு?” என்று படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தவள், அவனை முறைத்து பார்த்தாள்.

அவள் சொன்னதை போலவே “சும்மா, சும்மா முறைக்காத, கண்ணு வெளில வந்துடப் போகுது” என்று கிண்டலடித்தான்.

அங்கிருந்த தலையணையை தூக்கி அவன் மீது வீசினாள்.

வாகாக அதை அவன் கேட்ச் பிடித்து அருகினில் வந்தான்.

“வராதீங்க அடிச்சிடுவேன்” என்று அரசி பயமுறுத்த,

“அம்மா பயமாயிருக்கே” என்றபடி அருகில் வந்து அவளை ஒட்டியபடி அமர்ந்தான்.

“எதுக்கு கிண்டல் பண்ணறீங்க” என்று புசுபுசுவென மூச்சு வாங்க கோபத்தை காண்பித்தாள்.

“போடி” என்றவன் படுத்துக் கொள்ள,

“என்ன போடி?” என்று அவன் மேல் ஏறி அமர்ந்து  கொண்டாள்.

“அம்மாடி ஜக்கம்மா! என்னடி பண்ற?” என்றான்.

“பதினோரு மாசம் ஆச்சுல்ல, ஏன் குழந்தை வரலை?” என்று அவளின் பிடியினில் நின்றாள்.

“கொஞ்சம் தள்ளி உட்காரு” என்று அவனின் மேலேயே வாகாய் அமர்த்திக் கொண்டவன் “இப்போ கேளு” என்றான்.  

வசதியாய் படுத்திருந்த அவனின் மேல் அமர்ந்து கொண்டவள் அவனின் டீ ஷர்ட்டை பிடித்துக் கொண்டு “ஏன் குழந்தை வரலை இன்னும்?” என்று கேட்டாள். கலைக்கு சில வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்ததினால் அப்படியாகிவிடுமோ என்ற பயம் தோன்றவே இந்த கேள்வி. 

“ஹே ஜக்கம்மா, இது தான் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கறதா?” என்றான்.

“இது சட்டை இல்லை, டீ ஷர்ட்” என்று முகத்தை சுருக்கி அதி முக்கியமான பதிலை சொல்லவும் செய்தாள்.

விளையாட்டுத்தனத்தை விட்ட குரு, “நமக்கு கல்யாணமாகி பதினோரு மாசம் ஆனாலும், நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சு மூணு மாசம் தான் ஆகுது!” என்று சொல்ல,

“ம்ம் ஆமாமில்லை” என்று அரசி அசடு வழிந்தாள்.

“இதுல நான் ரெண்டு மாசம் நடுவுல நடுவுல பத்து நாள் வெளிநாடு போயிட்டு வந்தேன்” என்றும் சொல்ல,

“ம்ம் ஆமாமில்லை” என்று இன்னும் அரசி வழிய,

“குழந்தை வேணுமா என்ன?” என்றான் குரு.

வாய் திறந்து சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

“என்ன அவசரம்?” என்றான் கனிவான குரலில்.

அமர்ந்திருந்தவள் அவன் மேலேயே படுத்துக் கொண்டு “குட்டியை தூக்கும் போது எனக்கும் குழந்தை வேணும்னு ஆசையா இருக்கு!” என்று சொல்ல,

அவளை அணைத்துக் கொண்டவன் “நாம குழந்தை பெத்துக்கற அளவுக்கு பொருப்பாகிட்டோமா” என்றான்.

“நான் எப்படியோ தெரியாது. ஆனா நீங்க பொறுப்பு தான்” என்றாள் தலையை உயர்த்தி அவனின் முகத்தினை பார்த்தவாறே.

“நீ இன்னும் என் வாழ்கையில வந்ததையே நம்ப முடியலை ஜக்கம்மா” என்றான் உணர்ந்து.

“என்ன நம்ப முடியலையா?” என்றவள் அவனின் உதடுகளை வேகமாக முற்றுகையிட்டாள், கூடவே அவளின் உடலின் முழு பாரத்தினையும் அவன் மேல் கொடுக்க,

உதடுகள், உடல் என அனைத்திலும் குருபிரசாத்திற்கு சுகமான வலி.

அந்த வலி அவனுக்கு வேண்டுமாய் இருக்க எதிர்ப்பு எதையும் காண்பித்தான் இல்லை.

“வலிக்கவில்லையோ” என்று அரசி இன்னும் அழுத்தம் கொடுக்க , குரு ஒரு கையினால் அவளின் உடலையும் இன்னொரு கையினால் அவளின் தலையும் பற்றி இன்னும் அழுத்தம் கூட்டினான்.

சில நொடிகளுக்கு பிறகு திமிறி விலகினாள் அரசி.

“இப்போ நம்பறீங்களா?” என்ற கேள்வியோடு.

“இன்னும் நம்பிக்கை வரலை” என்று குரு சிரித்தான்.

“இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா உங்க உதடை பிச்சி எடுத்திருப்பேன், இன்னுமா நம்பிக்கை வரலை” என்று அரசி சிறிதும் லஜ்ஜையின்றி சண்டையிட,

“ஹே ஜக்கம்மா தாண்டி நீ” என்றான் சரசமாக குரு.

“நான் சண்டை போடறேன்”

“போடு, நான் எப்போ வேண்டாம்னு சொன்னேன்” என்று சொன்னாலும், அவனையும் மீறி அவனின் கைகள் அவனின் உதடுகளை தடவியது.

“வலிக்குது தானே” என்று அரசி சிரிக்க,

“கொஞ்சமா வலிக்குது, இன்னும் நிறைய வலிக்க வையேன்” என்று குரு ஆழ்ந்த குரலில் பேசினான்.

“தோடா” என்று அவள் சிரித்த போதும், குருவின் முகத்தை பார்த்தவள், “ஏன் காலையில இருந்து ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்க,

“என்ன ஒரு மாதிரி இருக்கேன், இல்லையே, எப்பவும் போல தான் இருக்கேன்”

“இல்லை, சம்திங் ராங், ஐ கேன் சென்ஸ், எதுவும் பிரச்சனையில்லையே!”

“நீ இருக்க எனக்கு என்ன பிரச்சனை அரசி?”

“தோடா, செம டைலாக்!” என்றவளிடம்,

“பின்ன உன்னை விட யார் எனக்கு பிரச்சனை கொடுக்க முடியும்!” என்று குரு சொல்ல,

“உன்னை என்ன பண்றேன் பார்!” என்று கிடைத்த இடத்தினில் கொஞ்சமாய் வலிப்பது போலக் கடிக்க துவங்க,

“ஹே விடுடி ஜக்கமா” என்று குரு மெலிதாய் அலறி அவனின் மேலே இருந்த அவளை கீழே தள்ளி இவன் மேலேறினான். 

அங்கே ஒரு சிறு யுத்தம்!

உடை என்னும் தடை விலக ஒரு யுத்தம்!

உடல்கள் லேசாக ஒரு யுத்தம்!

உணர்வுகள் பாரமாக ஒரு யுத்தம்!

முத்த யுத்தம் தொடங்கி,

மொத்தமாய் வீழ ஒரு யுத்தம்!

இருவரும் தோற்கும் யுத்தம்!

இருவரும் ஜெயிக்கும் யுத்தம்!

இருவரை ஒருவராக்கி மூவராய் ஆக்கும் யுத்தம்!

 

Advertisement