Advertisement

அத்தியாயம் இரண்டு :

தமிழரசி தலை குனிந்து பொன் தாலியை வாங்கும் போது, நெஞ்சம் கனத்தது. அந்த ஆறு கிராம் பொன் தாலி அதையும் விட கனத்தது. அதையும் விட நேற்று வாங்கிய அடி கன்னத்தில் இன்னும் எரிந்தது.

ஆம், நேற்று அடித்து விட்டார், சிறு பெண்ணாய் இருந்த பொது வாங்கிய அடி. அதன் பிறகு எல்லாம் அடித்தது இல்லை, மிரட்டல் மட்டுமே. ஆனால் நேற்று இந்தத் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாய் நின்றாள். அவரும் பொறுமையாக விளக்கம் சொல்ல, இவளின் மனதில் இருந்த பதட்டத்தில் அப்பாவிடம் கத்தி எல்லோர் முன்னிலும் எதிர்த்து பேச, கன்னத்தில் இடியாய் இறங்கியது அடி. 

அடித்தது அம்மா, பொறி கலங்கித் தான் விட்டது.

“அப்பாவை எதிர்த்து பேசறியா நீ, உன்னைவிட உன்னைப் பத்தி எங்களுக்குத் தான் கவலை, அக்கறை” என்று அம்மா பேச, அதன் பிறகு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை, ஆனால் மனது ஸ்பஷ்டமாய் சொன்னது, “எனக்கு வாழ்க்கை சரியில்லாம போகட்டும், அப்புறம் என்ன பண்றேன் பாருங்க!” என்று.

இவள் இப்படி “வேண்டாம்! வேண்டாம்! மாப்பிள்ளை யாரையோ லவ் பண்றாங்க” என்று எல்லோர் முன்னிலையிலும் பேச,

“ஒரு வேளை பொண்ணு யாரையாவது காதலிக்குதோ என்னவோ, அதான் மாப்பிள்ளையைச் சொல்லுதோ! இந்தக் காலத்துல இதெல்லாம் தப்பில்லை! பேசாம அதுக்கு பிடிச்சதை கட்டி வைப்பா!” என்று ஒரு பெருசு நாட்டாமை வேறு செய்ய.  

பெற்றோர்களுக்குத் தலையிரக்கமாய் போய் விட, “எங்கள் பெண் அப்படியில்லை!” என்று காட்டத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டனர்.    

“அரசி! நான் பேசினேன், மாப்பிள்ளை நல்லா பேசறார், நம்புடா! அப்பா கண்டிப்பா தப்பானவனை தேர்ந்தெடுக்க மாட்டேன்!” என்றார் திடமாய். “என்னவோ செய்து கொள்ளுங்கள்” என்று விட்டுவிட்டாள். கன்னத்தில் அம்மா அடித்ததன் கைத் தடங்கல்.

குருப்ரசாதின் அப்பா மருத்துவமனையில் இருந்ததினால், நிறைய சடங்குகள் இல்லை.

தாலி கட்டி முடித்ததும், “அவ்வளவு சொல்லியும் நீ ஏன் கல்யாணத்தை நிறுத்தலை!” என்று சற்று கோபமாக குரு அவளிடம் மெதுவான தொனியில் கேட்டான். ஆனால் முகத்தினில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் அவனைத் திரும்பி தமிழரசி பார்த்த பார்வையில் அவ்வளவு துவேஷம். மணமக்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எதோ கனிவாக குரு சொல்வது போலவும், அரசி முறைப்பது போலவும் தான் தோன்றியது. “இந்தப் புள்ள எப்படிப் பொழைக்கப் போகுதோ?” என்று தான் பார்த்தவர்களுக்கு தோன்றியது.   

ஒரே ஊர் என்பதால் குருவிற்கு மிகவும் நல்ல பெயர், யார் வம்பு தும்பிற்கும் போகாத பையன். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். அப்படித் தான் அவனை எல்லோருக்கும் தெரியும். அரசி எங்கே போனாலும் பிரச்சனை என்ற ஒன்றை இழுக்காமல் வர மாட்டாள். அவளாக எதுவும் செய்யா விட்டாலும் அவளின் பெயர் ஏதாவதில் அடிபடும். அவளின் ராசி அப்படி!

“கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னா, அதைச் செய்யாம என்னை முறைச்சுப் பார்த்தா?” என்றான் திரும்ப,

“போடா” என்று எழுந்து ஓடிவிட வேண்டும் போல ஒரு ஆத்திரம் உடல் முழுவதும், எல்லோருக்கும் இந்த சமயத்தில் காட்சி பொருள் ஆக வேண்டாம். அதையும் விட கேவலம் என்ன இருக்கின்றது என்று அமைதி காத்தாள்.

ஆனால் யாரும் நம்பாமல் போய் விட்டார்களே! ஏன் அப்படியா தான் யாருக்கும் நம்பிக்கை கொடுக்கவில்லை, இவள் உண்மை சொல்வாள் என்பது போல, கழிவிரக்கமும் தோன்ற, ஓய்ந்து போனாள் இனி என்ன வாழ்க்கை என்பது போல.

வாய் பேசும் பெண்களை யாரும் சிறந்த பேச்சாளர் என்று சொல்வது இல்லையே! வாயாடி என்று தான் சொல்வார்கள். இதுதான்  நிதர்சனமான உண்மை. எப்படி அருமை பெருமையாய் வளர்த்து இப்படி செய்து விட்டார்களே. திருமணம் என்று வரும் பொழுது பெரும்பாலான பெற்றோர்களின் நிலை இதுதான்.

குருவின் மனதில் ஓடியது “இந்தப் பெண் என்னை ஏன் இப்படி முறைத்து பார்க்கின்றாள், ப்ச், இப்படிச் செய்து விட்டாளே என்னால் அணுவளவும் முடியவில்லை என்று தானே இவளிடம் சொன்னேன். இப்போது என்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல இவளுடைய வாழ்க்கையும் அல்லவா சீர் குலைந்து நிற்கின்றது. இதில் என்னை வேறு முறைக்கின்றாள்” என்று யோசித்தபடி இருந்தான்.

“இனி டைவர்ஸ் அது இது என்று போக வேண்டும், எல்லோருக்கும் சிக்கல். இப்படி செய்து விட்டாளே!” என்று தான் தோன்றியது.

“அவங்க நெத்தில பொட்டு வைங்கோ” என்று அய்யர் சொல்ல, கையினில் குங்குமத்தை எடுத்தான், அவள் முகத்தை திருப்பினால் அன்றோ பொட்டு வைக்க முடியும். கையினில் குங்குமத்துடன் இவன் இருக்க, “முகத்தை திருப்பு அரசி” என்று கலையரசி சொல்ல, வேண்டா வெறுப்பாக திருப்பினாள் அரசி.. அவளுடைய வெண்மையான கன்னங்களில் சிவக்க அப்பியிருந்த ரூஜ்ஜையும் மீறி கைதடங்கள்.

கைகள் நெற்றியை நெருங்கும் பொழுது, அதைப் பார்த்தான், பார்த்தது பார்த்தபடி இருந்தான். “வை அண்ணா” என்று அருகில் இருந்த அவனின் பெரிய தங்கை ஜோதி சொல்லவும், இயந்தரகதியில் வைத்தான். அது அடி வாங்கிய கைதடம் என்று கூடவா புரியாமல் இருக்கும். அதிர்ந்து விட்டான், இப்படி அடிப்பார்களா என்ன என்று.

அதன் பிறகு வாயேத் திறக்கவில்லை, தன்னால் தான் அடி வாங்கி இருக்கிறாளோ என்ற நினைப்பே கசந்தது. தப்பல்லவா! எப்படியிருந்த என்னுடைய வாழ்க்கை எப்படியாகி விட்டது.

துரோகியும் ஆகிப் போனேன்!                                                                              விரோதியும் ஆகிப் போனேன்!                                                                                     கோழையும் ஆகிப் போனேன்!                                                                                    பெற்றவர்களுக்கும் நல்லவனாகவில்லை!                                                                           உடன் பிறந்தவர்களுக்கு நல்லவனாகவில்லை!                                                             காதலிக்கும் இல்லை! கரம் பற்றியவளுக்கும் இல்லை!

இப்படி இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்பார்த்தவன் இல்லை, அதனால் அதைச் சமாளிக்க முடியவில்லை. மணமேடை வரும் போதுக்கூட, அவ்வளவு சொல்லியும் இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணிடுச்சே!” என்ற ஒரு கோபம், ஆத்திரம், அதனுடன் தான் வந்தான். “நான் சொல்லிட்டேன், அதையும் மீறிக் கல்யாணம் பண்ணினா நான் பொறுப்பு கிடையாது. சேர்ந்து எல்லாம் வாழ முடியாது” என்ற எண்ணம் தான்.  

அதுவும் தமிழரசி திமிராகப் பார்ப்பது போலத் தான் தோன்றியது. ஆனால் அவள் அடியெல்லாம் வாங்கியிருக்கின்றால் என்ற போது அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

குருவின் அப்பா இரண்டு மாதங்களுக்கு முன் அரசியின் புகைப்படத்தை அவன் அமெரிக்காவில் இருந்த போது அனுப்பி இந்தப் பெண் எப்படி இருக்கின்றாள் என்று கேட்க,

“நன்றாக இருக்கிறாள்! எதற்குக் கேட்கிறீர்கள்?” என்று அவன் தொலைபேசியில் அழைத்தே கேட்டான், இந்த வயதில் பெண்ணின் புகைப் படம் அனுப்பினால் என்னவென்று தெரியாமல் இருக்குமா என்ன?

அவர் “திருமணதிற்கு” என, “அப்பா! எதுவாகினும் தான் இந்தியா வந்த பிறகு பேசிக் கொள்ளலாம்!” என்று தெளிவாகச் சொன்னான்.

“பெரிய இடம் குரு! வசதி மட்டுமில்லை, நம்ம ஆளுங்கள்ள பெரிய ஆளுங்க இந்தச் சம்மந்தம் கிடைக்கறது அவ்வளவு சுலபம் இல்லை, இப்போ போய் ரெண்டு மாசம் கழிச்சு எல்லாம் பேசறேன்னு சொல்ல முடியாது!” என்றார்.

“அப்பா! சொன்னாப் புரிஞ்சிக்கணும். நான் வந்த பிறகு முடிவு பண்ணிக்கலாம்!” என்றான். வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கின்றேன் என்று அவன் சொல்லியிருந்தால் குருவின் அப்பா தயங்கியிருப்பார். ஆனால் இவன் வெறுமனே வந்து பேசிக் கொள்ளலாம் என்று சொல்லவும்   அவருக்கு அந்த சம்மந்தத்தை விட மனதில்லை, அவர்களின் சமூகத்தில் பெரிய ஆள் அர்த்தனாரி. இவர்கள் எல்ல்லாம் பெயர் சொல்லும் படி ஆட்கள் கிடையாது.

குருப்ரசாத் பெரியவன்! அவனுக்கு கீழே தான் இரு பெண்கள் ஜோதி யும் புனிதாவும். அவரின் சம்பாதணையின் ஒரு பகுதி அவர்களின் உணவிற்குப் போக மீதம் இருந்த எல்லாம் மகனிற்கு தான் செலவு செய்தார். அவனுக்கு நல்ல பெரிய பள்ளியில் படிப்பு, ஆனால் அவன் அப்படி ஒன்றும் பெரிதாக மதிப்பெண் எடுக்கவில்லை. அவனின் மார்க்கிற்கு  நல்ல கல்லூரியில் ஃப்ரீ சீட் கிடைக்காமல் போக, பேமென்ட் சீட்டில் சேர்த்தார்.

அதுவரை பெரிதாக படிப்பில் ஆர்வம் இல்லாதவன் அப்பாவின் சிரமம் பார்த்து, கண்ணும் கருத்துமாக படிக்க ஆரம்பித்தான், முடிக்கும் சமயம் நல்ல வேலையில் அமர்ந்தான். அமரும் போதே பெரிய சம்பளம்.

பின்பு அவர்களுக்கு ஏறுமுகம் தான். இந்திய சம்பளமும் வெளிநாட்டு சம்பளமுமாக அவனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியது. அதில் பெரும் பங்கு குடும்பத்திற்கு செய்தான் என்பதும் உண்மை.

அப்பாவின் கடனை அடைத்தான், ஓட்டு வீடாக இருந்த பூர்வீக இடத்தை மெத்தை வீடாக மாற்றி இருந்தான். தங்கைகளுக்கு திருமணதிற்கு ஆளுக்கு நாற்பது பவுன் நகை செய்தான். இப்போது அவனின் பெயரில் அபார்ட்மெண்டில் லோனில் ஒரு வீடு வாங்கியிருந்தான். குடும்பத்திற்கு செய்வது எல்லாம் செய்த பிறகே தன் பெயரில் அந்த ஃபிளாட் வாங்கினான்.

இன்னும் சொந்தமாக ஒரு டூ வீலர் கூடக் கிடையாது. அவ்வப்போது வெளிநாடு செல்வதால் தேவையில்லை என்பதாக எண்ணம். வீணாக அது ஏன் தான் இல்லாத போது அப்படியே நிற்க வேண்டும். பணத்தின் அருமை பெருமை தெரிந்ததால் அதன் பொருட்டு அயராது உழைத்து, அவனின் பணியில் நல்ல நிலையில் இருந்தான். அதிகமான சம்பளம் கூட அதற்கு காரணம். இடைவிடாத அவனின் உழைப்பு, எல்லோரும் வீக் எண்டு என்று ஐ டி கம்பனிகளில் ரெஸ்ட் எடுக்க, அந்த நேரத்திலும் வேலை செய்தான்.

விடுமுறை என்று எடுத்ததே இல்லை.

இப்படி விடாது ஓடி கொண்டிருந்தவன் மனதை இந்த ஒரு வருடமாக புயல் வந்து தாக்க, அதன் சேதாரமும் அதிகம் தான். புயலின் பெயர்  மேக்னா, புனேவைப் பிறப்பிடமாக கொண்டவள், தமிழ் என்பதைக் கூட சரியாக உச்சரிக்க தெரியாதவள், மாராத்தி பெண். வேலை நிமித்தம் சென்னையில் சேர, மெழுகு பொம்மை போல இருந்த அவள் குருப்ரசாத்தை அதிகம் கவர, மூன்றே மாதத்தில் காதல் சொல்லி, அவளும் ஓகே சொல்லி, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து இருந்தது.

அப்பா இப்படிச் செய்வார் என்று குருப்ரசாத் எதிர்பார்க்கவில்லை. அவன் இங்கே வந்த பிறகு தான் தெரியும். வீட்டில் சண்டை போட்டவன், இது நடக்காது என்று பெண்ணின் வீட்டில் சென்று சொல்கிறேன் என்று கிளம்ப, அப்போது நெஞ்சை பிடித்துச் சாய்ந்தவர் தான், நேற்று தான் கண்விழித்தார்.

இன்று திருமணம், இன்னும் மேக்னாவிற்குத் தெரியாது. அவன் ஊருக்கு வருவது சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று குரு சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்க, இதில் அவன் வந்ததே தெரியாது. அவளும் சென்னையில் இல்லை, நேற்று புனே சென்றிருகின்றேன் என்று மெசேஜ் வந்திருந்தது.

“எப்படி அவளை எதிர்கொள்ளப் போகிறோம், எப்படிச் சமாளிக்க போகிறோம்!” என்று தான் எண்ணம். அரசியுடன் வாழும் எண்ணம் எல்லாம் இல்லவே இல்லை. இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தான்.

திருமண சடங்குகள் முடிய, “அப்பாக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிடுங்க!” என்ற அர்த்தனாரி “ராஜா, இவங்களை கூட்டிட்டு போங்க! வர்றவரை நாங்க மதிய விருந்து முடிச்சிடறோம்” என்றார் பெரிய மாப்பிள்ளையை பார்த்து.

மாமனாரின் வார்த்தையைக் கொண்டு ராஜசேகரன் மணமக்களை சென்னைக்கும் பொன்னேரிக்கும் இடையில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லல,

மருத்துவமனையின் படிகளை ஏறும் போது கட்டியிருந்த கனமான புடவை தடுக்க தடுமாறினாள் அரசி,

“பார்த்து! பார்த்து!” என்று குருப்ரசாதின் வாய் தானாக மொழிந்த போதும் அவளை ஆதூரமாக பிடிக்க முற்படவில்லை.

மச்சினியை தொட்டெல்லாம் பேச முடியாத ராஜ சேகரன் பார்த்து நிற்க, யாரென்றே தெரியாத ஒரு இளவயது ஆண்மகன் அவர்களைக் கடந்தவன், சட்டென்று அவளின் கைகளை பிடித்து நிறுத்தி “பார்த்துங்க!” என்றான்.

அப்படி ஒரு கோபம் மனதினில் குமிழ்விட்டது. அந்த ஆண்மகனிடம் இருந்து கைகளை உடனே விளக்கி கொண்டவள், “நன்றி!” என்றாள் அனிச்சையாய் ஒரு புன்னகையை முகத்தில் தேக்கி. அந்த இளைஞன் சென்றதும்,

திரும்பி அவளின் மாமாவைப் பார்த்த பார்வையில் இருந்த கோபத்தில் ராஜசேகரன் அரண்டு போனான். முதல் முறையாக அரசி சொன்னது நிஜமாக இருக்குமோ என்று குருப்ரசாத்தை பார்க்க, அவள் நிலை பட்டு நன்றி சொல்லியிருந்த நொடியே, அப்பாவைப் பார்க்க குரு விரைந்து இருந்தான்.

ஐயோ ஏதாவது பிரச்சனை என்றால் மகள் விதவையாவதை கூட பொருட்படுத்தாமல் மாமனார் என்னை கொன்று புதைத்து விடுவாரே என்று ராஜசேகரின் மனம் நினைத்தது. அவனின் நல்ல மனம் அடுத்த நொடி சொன்னது, மாமனார் உன்னைக் கொல்லுவது ஒரு புறம் இருக்கட்டும், தமிழரசியின் வாழ்க்கை???

அவன் அப்படிப் பார்த்து நிற்க, “என்ன எண்ணம் வைத்து நடந்தேன் நான் தடுமாறுவது போல, அடுத்தவன் கை பிடிப்பது போல, நேற்று வரை கைப்பிடிக்க போகின்றவன் உன்னை நிலை படுத்துவான் என்றா நினைத்தாய்! முட்டாள்! பார்த்து நட! எவனும் உன்னை தாங்கி நிறுத்த வேண்டிய அவசியமில்லை!” என்று தன்னையே திட்டிக் கொண்டு, தன்னை நிலைப்படுத்தி படியேற ஆரம்பித்த அரசி தன்னுடைய நடையில் ஒரு அரசியின் கம்பீரத்தைக் கொண்டு வந்திருந்தாள்.

ஐ சீ யு வாசலிற்கு வந்திருந்தவன், பின் திரும்பி இவர்கள் வருகின்றார்களா என்று பார்க்க, அரசி நடந்து வந்த தோரணை அவளின் பார்வையின் தீட்சண்யம் எல்லாம் அவளை அரசியாகத் தான் குருவின் கண்களுக்கும் காட்டியது.

பார்த்தது பார்த்தபடி நின்றான். கூடவே இவளுக்கு என்னை பிடிக்காமல் போக வேண்டும் என்னை விட்டு விட வேண்டும் என்ற வேண்டுதலும் மனதில்.

இப்போது என்ன பிடித்தா திருமணம் செய்து கொண்டாள் என்று அவனுக்கு தோன்றவே இல்லை!!! 

  

 

 

Advertisement