Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:    

“ஓகே, பெரியம்மா…” என்று தோளைக் குலுக்கினாள். பின்பு பட்டு புடவை செக்சன் சென்றனர்.

விஸ்வமும் ஜோதி தன்னை பார்ப்பாளா பார்ப்பாளா எனப் பார்க்க, ஜோதி அவன் புறம் திரும்பவே இல்லை. புனிதாவும் விஸ்வத்தின் தங்கையும் பேச ஆரம்பிக்க, பெரியம்மாவும் அரசியும் பேச, ஜோதியும் குருவும் அமைதியாக நிற்க, யாரிடம் பேசுவது என்று தெரியாமல் விஸ்வம் தான் முழித்தான்.

பின்பு புடவைகள் எடுத்து போடப்பட, “பிடிச்சதை எடும்மா…” என்று ஜோதியிடம் விஸ்வத்தின் அம்மா சொன்னார்.

அவளுக்கு எப்படி எடுப்பது என்ன விலையில் எடுப்பது என்று தெரியவில்லை.

“அண்ணி நீங்க எடுங்க…” என்றாள் தயங்கி,

“உனக்கு என்ன பிடிக்குதோ எடு, அண்ட் உனக்கு பிடிச்சது தான் எடுக்கணும். உன் கல்யாணப் புடவை இது. காலம் பூரா உன் ஞாபகத்துல அந்த நாள் நிற்கணும். என்னையெல்லாம் யாரும் கேட்கக் கூட இல்லை…” என்று அரசி என்னவோ சாதாரணமாகச் சொல்ல,

குருவிற்கு மனதை ஏதோ செய்தது. ஆனாலும் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

“நீதான் எடுக்கணும்…” என ஜோதியை கட்டாயப் படுத்தினாள்.

அப்போது ஜோதி திரும்பி விஸ்வதை பார்த்து “நீங்க எடுக்கறீங்களா?’ எனத் தயங்கி தயங்கி கேட்க,

“ஐ அம் வெயிடிங்…” என்று சொல்லியபடி முறுவலித்து விஸ்வம் அருகில் வந்தான்.

“அவங்க எடுக்கட்டும், நாம வேற புடவை பார்க்கலாம் பெரியம்மா…” என்று அவளின் பெரியம்மாவை அந்த இடத்தை விட்டு தள்ளி கொண்டு போனாள் அரசி.

விஸ்வமும் ஜோதியும் மெல்லிய குரலில் பேசி புடவையை எடுக்க, குரு அவர்களை பார்த்திருந்தான்.

“நாம மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாமா…” என்ற அரசியின் குரல் மெதுவாக அருகில் கேட்க, சட்டென்று திரும்பினான் குரு.

“எனக்கு இந்த மாதிரி ஒரு ப்ளசன்ட் மெமரீசும் இல்லை, நாம மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாமா…” என்று மீண்டும் அரசி கேட்க, என்ன பதில் சொல்வது என்று குருவிற்கு தெரியவில்லை, அமைதி காத்தான்.

“ஹலோ பாஸ், தனியா உட்கார்ந்து இருக்கீங்களேன்னு சும்மா கலாய்ச்சேன்…” என்று அரசி சிரித்தாள்.

அப்போதும் குருவின் மனம் சமாதானம் ஆகவில்லை.

“அட வாங்க பாஸ், நாம கல்யாணத்துக்கு மேட்சா சட்டையும் புடவையும் எடுப்போம்” 

சட்டென்று அவனின் சஞ்சலத்தில் இருந்து வெளியே வந்தவன் “என்ன கலர்?” என்றான் அவசரமாக.

“ம்ம்ம்ம், மிட்டாய் ரோஸ்” என்றாள் ராகமாக.

“அம்மாடி, இதெல்லாம் ஆகாது” என்று மெல்லிய குரலில் அலறினான் குரு.

“அதெல்லாம் நான் முடிவு பண்ணிட்டேன்…” என்று அரசி சிரிக்க ,

“போடி, ஆளையும் அவளையும் பாரு, முடியாது!” என்று குரு பதில் பேசினான்.

“என்ன, இன்னுமா என்னை நீங்க பார்க்கலை?” என்று அரசி கண்ணடிக்க,

அவசரமாக சுற்றி உள்ளவர்களை பார்த்து, யாரும் கவனிக்கவில்லை என்றதும் அரசியை பார்த்து முறைத்தவன், “ஜக்கம்மா ஒழுங்கா பேசு, யார் காதுலயாவது விழப் போகுது…” என்று மெல்லிய மிரட்டினான். அவளின் செல்லப் பெயர் தானாக குருவின் வாய் மொழியாக வந்தது.

இப்படியாக அரசியின் கலாட்டாவிற்கு நடுவில் புடவை நகை என வாங்கி மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பினர். இவர்களும் வீடு வந்தனர். குரு எதுவும் பேசாமல் லேப் எடுத்து அமர்ந்து கொள்ள, அவனின் முகம் பார்த்தே எதோ சரியில்லை என்று அரசிக்கு புரிந்தது.

அவனின் தங்கைகள் கவனிக்காதவாறு அருகில் வந்து “என்ன பிரச்சனை…?” என்றாள்.

“ஒன்னுமில்லையே” என்றான் ஸ்திரமாக. அப்போதும் நம்பாமல் பார்த்தாள் அரசி.

பின் அவனின் தங்கைகள் இருப்பதினால் வேலைகள் இழுக்க, அதுவுமன்றி தங்கைகள் இருப்பதினால் அருகில் சென்று அதிக நேரம் இருந்தால் கடித்து குதறுவான் என்று அவனை பற்றி தெரிந்தவளாக, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

இதற்கு அரசி அப்படி ஒன்றும் அருகில் சென்று இழைய மாட்டாள், ஆனாலும் குரு அப்படி ஒரு கவனமாய் இருப்பான். இதனால் தான் இவன் காதலித்தது யாருக்கும் தெரியவில்லையோ என்று அரசிக்கு தோன்றும். 

இந்த பொறுப்புணர்சிகள், அதனால் அவன் இழுத்துக் கொண்ட வேலை, அவனின் காதல், அரசியுடனான  திருமணம், எதையும் யாருடனும் பகிராமல் ஒரு மன அழுத்தத்தைக் கொடுக்க, அதுதான் ரத்த அழுத்தமாக உருமாறி இருக்கிறது என்று அரசிக்கு புரிந்தது.

அவனுக்கு அவளால் யாதொரு அழுத்தமும் வந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தாள் அரசி. சீண்டல்கள் எல்லாம் அவனை இலகுவாக்க, அவனின் கவனத்தை இந்த கடமையின் பாதையில் இருந்து திருப்ப மட்டுமே.

இதோ இன்னும் இரண்டு நாட்களில் அவனின் பிறந்த நாள், இன்னும் ஒரு வயது அவனுக்கு கூடப் போகிறது. அவனின் பிறந்த நாள் அவனுக்கு ஞாபகமே இல்லை. அவனுக்கு மட்டுமல்ல அவனின் வீட்டில் யாருக்கும் இருந்த மாதிரி தெரியவில்லை.

அவர்களுக்கு இந்த கொண்டாட்டங்கள் பழக்கமல்ல என்று அரசிக்கு புரிந்து தான் இருந்தது. ஆனாலும் இவ்வளவு செய்யும் அண்ணனின் பிறந்த நாள் கூட தங்கைகளுக்கு எப்படி ஞாபகமில்லாமல் போகும் என்ற வருத்தம் அரசிக்கு மனதின் ஒரு ஓரத்தில் இருந்தது.

ஏனென்றால் அவளிடம் ஜோதியோ புனிதாவோ அதனை பற்றி பேசவில்லை.

அவளுக்கு எங்கே தெரியும், இருவருக்கும் நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆனால் குருவிற்கு அதை பற்றி பேசினால் பிடிக்காது. அதை ஒரு பெரிய விஷயமாய் எடுத்து கொள்ள மாட்டான்.

தங்கைகள் என்று பார்த்து பார்த்து செய்தாலும் பாசமும் கடமையும் தான் அதில் இருக்கும். ஒரு நெருக்கம் இருக்காது. குரு அவனின் அம்மாவிற்கு பிறகு அடுத்து நெருங்கியிருக்கும் ஜீவன் அரசி மட்டுமே!

மேக்னா அவளிடம் மனதை இழந்தான் தான், ஆனால் அதனை விடுத்து பெரிதாக ஒன்றுமில்லை. அதாகப்பட்டது அவனின் மன உணர்வுகளை எல்லாம் அவ்வளவு எளிதாக அவளிடம் பகிர்ந்து கொண்டது இல்லை. அவள் பேசுவதை தான் கேட்பானே தவிர, அவனை பற்றி எல்லாம் அதிகம் பேச மாட்டான்.   

இப்போதும் அரசியிடம் முழுதாக மனம் லயித்து இருந்தாலும், வாழும் வாழ்க்கை பிடித்து இருந்தாலும், சட்டென்று எல்லாம் பேசிவிட மாட்டான். பேசக் கூடாது என்று இல்லை, பேச வரவில்லை.

இப்போது தங்கையின் திருமணம் நன்றாக நடக்க வேண்டுமே என்பதில் தான் முழு கவனமும். பணமும் அதற்கு இதற்கென்று செலவாக அது வேறு உறுத்தல், கையை கடிக்காமல் எல்லாம் செய்து விட வேண்டும் என்பது போல.    

இப்படிப்பட்ட மனநிலையில் இருக்க, “என்னோட கல்யாணம் இப்படி நடக்கலை…” என்பதாக இருந்த அரசியின் பேச்சு மனதிற்கு ஒரு உறுத்தலை கொடுக்க, ஒரு சஞ்சலம் வந்து அமர்ந்து கொண்டது.  

மாலை எல்லோரும் பொன்னேரி கிளம்பினர். அவர்கள் இருவரையும் விட்டு வருவதற்காக, பஸ்ஸில் போய் கொள்வர் தான், ஆனாலும் என்னவோ அரசியுடனான் தனிமை அப்போது வேண்டாம் என்று குருவிற்கு தோன்ற கிளம்பிவிட்டான்.

சொன்னது போல நாற்பது பவுன் நகை, ஒரு இடம், கூட கல்யாண செலவில் பாதி அதுவே கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வர எல்லாம் தயாராகிக் கொண்டான் குரு. இடமும் கிட்டத்தட்ட பதினைத்து இருபது லட்சம் வரும் பிற்காலத்தில் இன்னும் மதிப்பு கூடும்.

அரசிக்கு கணவனை குறித்து மிகவும் பெருமை. அவனின் உழைப்பு ஒவ்வொரு பைசாவும் அல்லவா. செய்வதற்கு மனதும் வேண்டும் அல்லவா. இன்னும் இதே போல இன்னொரு தங்கைக்கும் செய்வான். ஒரு அதிகப் படியான செலவு கூட அவனுக்கென்று செய்யாமல் எல்லாம் பார்த்து பார்த்து சேகரித்து வைத்தது. 

மிகவும் கர்வமாய் அவளின் பார்வை அவ்வப்போது ஜோதியும் புனிதாவும் அறியாமல் அவனை தொட்டு தொட்டு மீள, அதெல்லாம் குருவின் கவனத்தில் பதிந்தாக தெரியவில்லை. அவன் சாலையிலேயே அவ்வளவு கவனமாக இருந்தான்.

“இதெல்லாம் வேலைக்காகாது, நான் பேசாமல் இருந்தால் எனக்கு வாய் வலிக்கும்…” என்று அரசி உணர,

புனிதாவிடமும் ஜோதியிடமும் முன் சீட்டில் இருந்து வாகாய் திரும்பி அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.

பொன்னேரி வரும் வரையிலும் அரட்டை, அரட்டை, அரட்டை மட்டுமே! அரசி பேசுவாள் என்று தெரியும், ஜோதியும் புனிதாவும் இவ்வளவு பேசுவார்களா என்ற ஆச்சர்யம் மட்டுமே குருவிடம். இந்த பேச்சுக்களை கேட்டுக் கொண்டு வந்ததினால் மனம் சற்று இலகுவாக உணர்ந்தது.

“முதல்ல எங்க அம்மா வீட்டுக்கு போவோம், பின்ன நம்ம வீட்டுக்கு போகலாம்…” என்று அரசி சொல்ல,

“நாங்க எதுக்கு அண்ணி, எங்களை வீட்ல விட்டுட்டு போங்க!” என்று புனிதா சொன்னாள்.

“மூச்! வீட்டுக்கு போயிட்டு, அங்க நைட் தூங்க போனா போதும்!” என்று அரசி கட்டளை போல சொல்ல, பின் எதற்கு இருவரும் வாயை திறக்கப் போகின்றனர்.

“எல்லோரையும் இவ ரொம்ப மிரட்டுறா…” என்று குரு அரசியை ஒரு பார்வை பார்த்தான்.

“ஷப்பா, இப்போ தான் நான் கண்ணுக்கு தெரியறேன் போல…” என்று அரசி முணுமுணுத்தாள்.

“என்ன?” என்பது போல குருபிரசாத் இரு புருவம் உயர்த்தி பாவனையாய் கேட்க,

“ஒன்றுமில்லை…” என்பது போல அரசியின் தலையசைப்பு சொன்னாலும் அவளின் கண்கள் என்னவோ குருவின் செய்கையை ரசித்து பார்த்தது. 

“கொல்றாடா ஜக்கம்மா…” என்று தான் குருபிரசாத்திற்கு தோன்றியது

அரசியின் வீடு வர, புனிதாவையும் ஜோதியையும் வீட்டின் உள் வரும் வரை பொறுமையாய் நின்றவள், அவளின் அம்மா அவர்களை வரவேற்று பேச ஆரம்பிக்கவுமே, கலையின் ரூம் நோக்கி ஓடினாள் குட்டியை தூக்க!

“கல்யாணம் ஆகிடுச்சு ஆனாலும் சின்ன பொண்ணு போல ஓடறா, இவளை..” என்று அம்மா சத்தமிட்ட போதும், “போம்மா, போம்மா…” என்ற அவளின் குரல் தேய்ந்து ஒலித்தது.

“கொஞ்சமாவது பொறுப்பா இருக்காளா மாப்பிள்ளை…” என்று குருவிடம் கேட்க வேறு செய்தார்.

“கொஞ்சம் இல்லை, ரொம்ப பொறுப்பா இருக்கா!” என்றான் குரு.

     அதற்குள் கலையின் அறைக்குள் நுழைந்து இருந்தாள், “சிங்கக் குட்டி, என்ன பண்றீங்க…?” என்று கத்திக் கொண்டே.

“அரசி கத்தாத… தூங்கறான்…” என்று கலை அதட்டினாள்.

“சிங்கக் குட்டி, என்ன பண்ணறீங்க?” என்று அதையே மெதுவாக சொன்னவள்,

“நான் அவன் முழிக்காம தூக்கிக்கறேன்…” என்று குழந்தையை தூக்கி அணைவாய் பிடித்து ஹாலிற்கு எடுத்து வந்தாள்.

அப்போது தான் அர்த்தனாரியும் ராஜாவும் உள்ளே நுழைந்தனர்.

“வாங்க மாப்பிள்ளை, வாங்க பொண்ணுங்களா…” என்று சொல்லி குருவின் அருகில் அமர்ந்து

“அப்புறம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது மாப்பிள்ளை…” என்று பேச ஆரம்பித்தார்.

“ஒன்னும் பாக்கி இல்லை மாமா, அழைப்பெல்லாம் முடிஞ்சது, நகை புடவை சீர் சாமான் வாங்கறதும் முடிஞ்சது. மீதம் எல்லாம் அவங்க வேலை தான். நாம பணம் மட்டும் தானே கொடுக்கறோம்…” என்றான்.

“எதுன்னாலும் தயங்காம கேளுங்க மாப்பிள்ளை, பணம் பத்தலைன்னாலும் கேளுங்க, மெதுவா திருப்பிக் குடுத்துக்கலாம்…” என்று அவர் சொல்ல,

“அச்சோ, இந்த அப்பா என்ன எவ்வளவு சொன்னாலும் திரும்ப திரும்ப பணத்தை வாங்கிக்கவே பேசறார்…” குருவிற்கு கோபம் வருமோ என்று அரசி பதட்டமாய் பார்த்திருந்தாள்.

அவர் தனக்கு உதவ தான் மீண்டும் மீண்டும் கேட்கிறார் என்று புரிந்து, “இல்லை மாமா, தேவையில்லை, தேவைன்னா கேட்டுக்கறேன்…” என்று பொறுமையாகவே பதில் சொன்னான்.

“ஷப்பா, கோபம் வரலை…!” என்று அரசி ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.

முழு நேரமும் அவளின் கவனம் சிந்தனை எல்லாம் குருபிரசாத் மட்டுமே!

 

Advertisement