Advertisement

அத்தியாயம் பதினெட்டு : 

எங்கும் அரசி! எதிலும் அரசி! அரசி! அரசி மட்டுமே குருவின் மொத்தமும் ஆகிப் போனாள் என்றால் மிகையல்ல! அதிகம் பேசாத குருவை அதிகமாய் பேசி கொள்ளைக் கொண்டாள்.

இத்தனை நாள் பிடிப்பற்று தனிமையாய் இருந்த வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாய் மாறிவிட்டது. அவளுடைய அப்பா, அம்மா, அக்கா, மாமா மட்டும் அவளின் வட்டத்தில் இல்லை, குருவின் அப்பாவும் தங்கைகளும் கூட சேர்ந்து கொண்டனர்.

குருவிடம் எவருக்கும் நேரடி பேச்சுக்கள் கிடையாது. எல்லாம் அரசி மூலமே!    

எல்லாம் சரியாகப் போனாலும் அவ்வப்போது திடீரென்று ஒரு குற்ற உணர்ச்சி குருபிரசாத்திடம் முளைத்துக் கொள்ளும்.  என்ன செய்துவிட்டேன் நான் என்பது போல. அரசியின் மன்னிக்கும் மறக்கும் மனப்பான்மை தான் அவனைக் கொன்றது. ஒருவேளை அரசி அவனோடு இணக்கமாய் போயிராவிட்டால் அவனை சரி படுத்தியிராவிட்டால் என்னவாகிருப்பான் அவன்.

நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது .

கூடவே ஒரு பெண்ணை அப்படி விழுந்து விழுந்து காதலித்தேன், அவள் சென்று ஒரு வருடம் கூட ஆகவில்லை, அவளின் ஞாபகம் எனக்கு எங்கேயுமில்லை. அப்போதைய காதல் நினைவுகளில் இருந்தாலும் இப்போது எதுவுமே இல்லை!

என்ன மாதிரியான மனிதன் நான்! இப்போது என் நினைவு முழுவதும் அரசி இருந்தாலும், நாளை அவள் இல்லாவிட்டாலும் இப்படி தான் மாறி விடுவேனா? என்னென்னவோ குழப்பிக் கொள்வான்!

‘மூடனே! எதையும் நினையாதே…’ என்று அவனை அவனே சாடியும் கொள்வான்.

அரசிக்கு புரியும் அவன் அவ்வப்போது மூட் அவுட் ஆவதும். ஏதோ யோசனைக்குப் போவதும். என்ன என்று கேட்டாலும் சொல்ல மாட்டான். அதனால் என்ன என்று கேட்காமலேயே அவனின் கவனத்தை ஏதாவது செய்து மாற்ற முயல்வாள் .

அவ்வளவு இனிமையான பெண் அரசி. அவள் எல்லோரிடமும் இப்படித் தானா என்று கேட்டால் அவளுக்கே பதில் தெரியாது. ஆனால் குருபிரசாத்திடம் அப்படி தான்.

எங்கே எந்த இடத்தினில் அவளின் வாழ்வின் இன்றியமையாதவனாக ஆகிப் போனான் என்று அவளுக்கு தெரியவில்லை. அவனுக்கு பிடிக்கவில்லை என்றதும் திருமணத்தை முழு மூச்சாய் எதிர்த்தாள் தான். பின்பும் அவனை விட்டு வந்து விட வேண்டும் என்று நினைத்தாள் தான். ஏன் அவன் உடல் நிலை தெரிந்தபோது அவன் நன்றாயிருக்க வேண்டும் என்பதற்காக அவனை பிரியவும் தயாராய் தானே இருந்தாள்.

அவனின் உடல் நலம் இவளால் கெடுகிறது என்று நினைத்து நான் விட்டு போகிறேன் என்று சொன்னவள் தானே!

ஆனால் எப்போதும் அவன் நன்றாய் இருக்கக் கூடாது என்று நினைக்கவேயில்லை.    

அவன் முகம் வாடினால் இவளுக்கு தாளாது. இப்போது எல்லாம் சரியாகி விட்டால் கூட எதுவும் சரியாகும் முன்பு, விட்டு பிரியும் நிலையில் கூட அவன் முகம் வாடினால் அவளுக்கு பொறுக்காது தானே!

இதை எதற்குள் வரையறுக்க என்று அவளுக்கும் தெரியவில்லை! அவனுக்கும் தெரியவில்லை! காதலா? அன்பா? பாசமா? இல்லை அதை மீறிய ஒன்றா?

இதற்கு பெயர் என்ன?

தன்னலமில்லாத சுயநலமற்ற அன்பு!

இது காதல் என்ற வரையறைக்குள் வருமா?    

ஜோதி விஸ்வத்தின் திருமண வேலைகள் குருவையும் அரசியையும் இழுத்துக் கொண்டன. நிச்சயமான இரண்டே மாதத்தில் திருமணம் என்றாகிவிட, சனி ஞாயிறு ஆனால் உறவுகளுக்கு பத்திரிக்கை வைப்பது என்று இருவருக்கும் கழிய, வார நாட்களின் மாலைப் பொழுதுகளில் ஜோதிக்கு சீர் கொடுக்க வேண்டிய பொருட்களை வாங்குவதில் கழிய, இதோ இன்னும் பதினைந்து நாட்கள் இருந்த நிலையில் விடுப்பு எடுத்திருந்தான் குரு.

பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் புடவையும் நகையும் வாங்க அன்று வருவதாய் சொல்லியிருந்தனர். ஊரிலிருந்து புனிதாவும் ஜோதியும் வந்திருந்தனர்.

அப்போது தான் வந்தனர், லீவ் என்பதினால் குரு தாமதமாக எழுந்து குளித்துக் கொண்டிருக்க, அரசி சமையல் அறையில் காலை டிஃபன் தயாரித்துக் கொண்டிருந்தாள்.

ஜோதி அவளுக்கு உதவ சமையல் அறை வர நினைக்கவுமே, “மூச், அங்கே வீட்லயும் நீதானே செய்யற, பேசாம போய் உட்கார்…!” என்று அவளை அதட்டி அனுப்பி இருந்தாள்.

அதனால் இருவரும் டிவி முன் அமர்ந்திருந்தனர். அரசி தான் லொட லொட, ஜோதியும் புனிதாவும் அண்ணனைப் போலவே பேச்சுக்கள் குறைவு தான். ஆனால் அண்ணியிடம் அலாதி பிரியம்.

“அரசி…” என்ற குருவின் குரலுக்கு,

“தோ வந்துட்டேன்…” என்று குரல் கொடுத்துக் கொண்டே சமையல் அறையிலேயே நிற்க,

“அண்ணி, நீங்க போங்க, என்னன்னு நாங்க பார்க்கறோம்…” என்று புனிதாவும் ஜோதியும் வந்தனர்.

 “இதோ வந்துடறேன்…” என்று அவர்களிடம் விட்டு ரூமின் உள் வந்தவள்,

“ஷப்பா, சமைக்க விடறீங்களா? சும்மா பத்து தடவை கூப்பிட்டா, நான் எப்படி சமைப்பேன்…” என்று குருவை பார்த்து பொறிந்தாள்.

“அரசி…” என்று கையை கட்டி அவளை முறைத்து பார்த்தான் குரு.

“என்ன முறைப்பு? எழுந்ததுல இருந்து ஒரு தடவை தான் கூப்பிட்டீங்க, நான் பத்து தடவை சொல்லிடேன், அதுக்கு ஒரு முறைப்பா..?” என்று இடுப்பில் கைவைத்து மிதப்பாகக் கேட்க, 

“அஃது” என்றவன், “எங்கே என் ட்ரெஸ்…?” என்றான்.

“எனக்கு தெரியாதே…” என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல.

அவன் எடுத்து வைத்த டிரஸ் இருந்த இடம் தெரியவில்லை. அதற்கு பதிலாய் அந்த இடத்தினில் வேறொன்று வீற்று இருந்தது.

 “அடியேய் அரசி…” என்றான் அவளைப் போல,

ஆம்! அரசி அவளிடம் அவளே பேசிக் கொள்வாள் அல்லவா, அப்படி!

“தோடா, இந்த கிண்டல் எல்லாம் பண்ணுனீங்க…” என்று ஒற்றை விரல் காண்பித்து மிரட்ட, ஒரே எட்டில் அருகில் வந்து நின்றவன், அவளின் விரலினை பிடித்தான்.

“ஆ… வலிக்குது…” என்று சத்தமாகக் கத்தினாள்.

“நீ அடங்கவே மாட்டடி…” என்றவன், இன்னொரு கையால் அவளின் வாயினை மூடினான்.

மூடிய அவனின் கையை இவளின் இரு கை கொண்டு அழுத்தி பிடித்து கடித்தாள்.

“அரசி…” என்று இப்போது குரு அலறி கையை விலக்க,

“அஃது” என்றாள் அவனை போலவே.

“என்னை டென்ஷன் பண்ணாத…” என்று குரு கோபமாய் பார்த்தான்.

“எனக்கு பிடிச்ச டிரஸ் தான் போடணும் என்னோட வரும் போது…” என்றாள் பிடிவாதமான குரலில் அரசி.

“ஏன் டி? ஏன்? அது அப்படியே அடிக்குது, அந்த கலர் உனக்கு எங்க கிடைச்சதுன்னு கூட தெரியலை, அரசி ப்ளீஸ்…!” என்றான் பரிதாபமாக. 

“அதெல்லாம் முடியாது…” என்று பிடிவாதமாய் குரு நிற்க,

வெளியே எட்டி பார்த்து “ஜோதி, நீங்க சாப்பிடுங்க நான் ஒரு டென் மினிட்ஸ் வந்துடறேன்…” என்று சொல்லி கதவை தாளிட்டாள்.

“ஐயோ, காலையில என்னடி பண்ற? வெளில தங்கச்சிங்க வேற இருக்காங்க…!” என்று குரு பேச,

“ஓவரா பண்ணின தொலைச்சிடுவேன், என்ன பண்றாங்க உன்னை? ஓவரா சீனப் போடற. காலையில குளிச்சிட்டு வந்து இடுப்புல துண்டை மட்டும் கட்டிட்டு நிக்கற, உன் பொண்டாட்டி வர்றா, ரொமாண்டிக்கா கட்டி பிடிச்சு ஒரு முத்தம் குடுக்கத் தெரியலை. ஆளையும் பாரு, அவரையும் பாரு…” என்று இடுப்பில் திரும்ப கைவைத்து முறைத்தாள்.

“ரெண்டு வயசுப் பொண்ணுங்களோட அண்ணன் நான். அவங்க வெளில இருக்காங்க…” என்று குரு பதிலுக்கு முறைத்தான்.

“போடா, போடா” என்று அலட்சியமாய் சொன்னவள், நிமிர்ந்த நடையோடு அவனை நேர் பார்வை பார்த்து நடந்து அவனின் அருகில் வந்தாள்.

என்னவும் செய்யப் போகிறாளோ என்று அவன் அனுமானிக்க, அவனை கடந்து சென்று படுக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கைகளை பின்னுக்கு கொடுத்து அமர்ந்து ஒரு பார்வை பார்க்க,

அந்த பார்வை அவளின் தோற்றம் எல்லாம் அரசியாய் தான் அவளை காண்பித்தது.

சிறிது நேரம் அவளை ரசித்து பார்த்து அப்படியே நின்றிருந்தான்.

அரசியும் அவனை தான் பார்த்திருந்தாள். குளித்து வந்தவுடனே அழைத்திருந்தான். ஒரு பெரிய டவல் மட்டுமே கட்டி நின்றிருந்தான். சரியாய் துவட்டாத தேகமும் சிகையும் வா வந்து என்னை துவட்டிவிடு என்று அவளுக்கு அழைப்பு விடுக்க, எழுந்து அவனருகில் செல்ல துடித்த கால்களை அசையாமல் காப்பது பெரும் பாடாய் இருக்க, எதையும் முகத்தில் கண்களில் காண்பிக்காமல் சொன்னதை செய்ய வேண்டும் என்ற கட்டளையை மட்டும் கண்களில் காட்டி நின்றாள்.

இரண்டு முழு நிமிடம் இருவரும் அவரவர் பிடியில் நின்றனர்.

அரசி தான் “எனக்கொன்னுமில்லை எவ்வளவு நேரமும் இருப்பேன். ஆனா பாருங்க ஜோதியும் புனிதாவும் வெளில இருக்காங்க…” என்று சொல்லவும்,

“அரசி, திஸ் இஸ் டூ மச்” என்று எரிச்சலாக சலித்தான் குரு.

அரசி அசையவே இல்லை!

“அதை போட்டுட்டு நான் போனா எல்லோரும் என்னை தான் பார்ப்பாங்க…”

“பார்க்கட்டும்! எனக்கே அப்ஜக்ஷன் இல்லை! உங்களுக்கு என்ன?” 

குருவின் கோபம் அதிகமாகியது! அவளுக்குப் புரிந்து விட்டு கொடுத்து விடுவோமா என்று அவள் யோசிக்க ஆரம்பிக்க,  நேரமாவதை உணர்ந்து “நீ போடி, நான் போட்டுட்டு வர்றேன்…” என்று கடுப்பாக குரு சொல்லவும்,

“எப்படியோ அவன் போட்டால் சரி…” என்று வேகமாக அரசி எழுந்து வெளியில் வந்து விட்டாள்.

உணவு மேஜையில் எல்லாம் எடுத்து வைத்து மூவரும் அவனுக்காகக் காத்திருக்க, தயாராகி வெளியில் வந்தான் குரு.

“வாவ் அண்ணா, சூப்பரா இருக்க…” என்று புனிதா பார்த்தவுடனே சொல்ல,

“கிண்டல் பண்றியா என்னை…” என்று முறைத்து கொண்டே அமர்ந்தான்.

வேறொன்றுமில்லை, முதல் முதலாக அரசி அவனுக்காக பார்த்து பார்த்து எடுத்த ஒரு ப்ளோரசன்ட் கிரீன் கலர் சட்டை, அதன் பிறகு எடுத்ததெல்லாம் கூட அணிந்து விட்டான், இதனை அணியவேயில்லை.

“சரி ஆஃபிஸ் தான் போடமாட்டாய், இப்போது என்னோடு தானே வருகிறாய், அணிந்தே ஆக வேண்டும்…” என்ற அரசியின் பிடிவாதம் தான் இந்த கலாட்டா.

“இல்லை அண்ணா, நிஜம்மா…!” என புனிதா சொல்ல,

“ஆமா, பச்சை கலரு சிங்கு சா, மஞ்ச கலரு சிங்கு சான்னு இருக்கு…” என்று குரு கடுப்பாச் சொன்னான்.

“பிடிக்கலைன்னா போட வேண்டாம், கலட்டுங்க!” என்றாள் முறுக்கியவளாக அரசியும்.  

“அச்சோ அண்ணா, ரொம்ப நல்லா இருக்கு!” என்று ஜோதியும் சொன்னாள்.

அப்போதும் அரசியை ஒரு பார்வை பார்த்தான்.

“போடா…” என்று அவனுக்கு மட்டும் புரியுமாறு வாயசைத்துக் காட்டினால் அரசி.

பதிலுக்கு குரு பார்த்த பார்வையில் அவளிடம் “இருடி, இவங்க ஊருக்கு போகட்டும், அப்புறம் உன்னை பார்த்துக்கறேன்…!” என்ற செய்தி இருக்க,

“போடா, போடா…” என்று அவனுக்கு மட்டும் புரியுமாறு வாயசைத்தாள். ஒருவாறு உண்டு முடித்து தயாராகி கிளம்பினர்.

ஐந்தே நிமிடத்தில் தயாராகி வந்தால் அரசி. இவனின் சட்டைக்கு ஏற்ற அதே கலரில் புடவை பார்த்தவுடனே கண்ணை பறித்தது.

“அண்ணி என்ன இது?” என்று புனிதாவும் ஜோதியும் கிண்டலாய் சிரிக்க,

“எப்படி? நானும் உங்க அண்ணாவும் மேட்ச், மேட்ச்!” என அரசியும் சிரித்தாள்.

“ஐயோ, என் மானத்தை வாங்கறா” என்று குரு வாய் விட்டே சொல்லிய போதும், இருந்த எரிச்சல் மனநிலை மாற அவனுக்குமே சிரிப்பு வந்தது.

நால்வரும் காரில் போய் அந்த பாரம்பரியமான ஜவுளிக் கடையில் இறங்கிய போதும் குருவின் முகம் புன்னகையோடு இருக்க, “என்ன பாஸ், உங்க தலையை சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியுது…” என்று அரசி அவனோடு ரகசியம் பேசினாள்.

குரு பரிதாபமாக “பாரு, என் தங்கைகளோட வந்திருக்கேன். ரொம்ப கலாட்டா பண்ணக் கூடாது. இப்படி உன் உதடு என் காதுல படர மாதிரி ரகசியம் பேசக் கூடாது, என்னை ஒட்டி நடக்கக் கூடாது, என்னையே விடாம பார்க்க கூடாது…!” என்று பேசப் பேச,

அவனின் முகம் பார்த்து சிரிப்பு பொங்க, “சரி, பொழைச்சு போங்க…!” என்று ஜோதியோடும் புனிதாவோடும் இணைந்து கொண்டாள்.

அப்படி ஒன்றும் யார் முன்னும் ஒட்டிக் கொண்டும் உரசிக் கொண்டும் திரிபவர்கள் அல்ல. குரு சுற்றி ஆட்கள் இருந்தால் சாதாரணமாய் பார்ப்பது கூட பார்க்க மாட்டான். அதனால் வேண்டுமென்றே தங்கைகளின் முன் அவனை சீண்டிக் கொண்டிருந்தாள் காலையில் இருந்து. இப்போது அவன் டென்ஷன் ஆகின்றான் என்று புரிந்ததும் விட்டு விட்டாள்.

ஆம்! இப்போதுதான் மணப்பெண்ணிற்கு முகூர்த்த புடவை எடுக்க வந்திருந்தனர். மாப்பிள்ளை விஸ்வமும் அவனின் பெற்றோர்களும் அவனின் தங்கையும் அங்கே முன்பே இருந்தனர்.

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா பெரியப்பா?” என்று அரசி அவர்களோட சகஜமாய் உரையாட,

குருவும் அவனின் தங்கைகளும் “வாங்க…!” என்ற வார்த்தையோடு தான் நின்றனர். புனிதாவாவது சற்று பேசுவாள், ஜோதியும் குருவும் மிகவுமே குறைவு.

“அரசி, நானும் இவளும் தானே மாப்பிள்ளையும் பொண்ணும். எனக்கென்னவோ உங்களை பார்த்தா எங்களுக்கு போட்டியா வர்ற மாதிரி தெரியுது…” என்று விஸ்வம் கிண்டல் செய்தான்.

“அண்ணா, நீங்க கல்யாணம் ஆகற வரை தான் மாப்பிள்ளையும் பொண்ணும், ஆனா நாங்க எப்பவும் தெரியுமா?” என்று புருவம் உயர்த்தி வசீகரமாய் சிரிக்க,

அவ்வளவு அழகாய் இருந்தாள் அரசி. குரு பார்த்தும் பாராமல் பார்வையை திருப்ப, அவளின் பெரியம்மா நெட்டி முறித்தார் , “ஷ், கண்ணு படும், அடங்கி இரு!” என்று.

“இவ எப்படி இவ்வளவு அழகா இருக்கா?” என்ற யோசனை தான் குருவிடம். 

 

Advertisement