Advertisement

அத்தியாயம் பதினேழு :

காலையில் விழித்த போது தயக்கங்களும் தடைகளும் விடைபெற்று போயிருந்தன அரசியிடம். குருபிரசாத் உறக்கத்தில் இருக்க, அவன் உறக்கம் கலையாமல் வெளியே வந்தாள்.

வீடு பரபரப்பாக இருந்தது, “என்னமா?” என, “கலை, இடுப்பு வலிக்குதுன்னு சொல்றாடி!” என்றவர், “அவ அத்தைக்கு ஃபோன் பண்ணினேன் வர்ரேன்னு சொன்னாங்க!” என்றார். அதற்குள் அரசி கலையைப் போய் பார்க்க, நடந்தபடி இருந்தவள் “விட்டு விட்டு வலிக்குது!” என்றாள் முகத்தைச் சுருக்கி.

“தாங்கிக்கோ கலை!” என்று அவளைத் தேற்றி, வேகமாக குருவிடம் வந்தவள், அவனை எழுப்பி, “கலைக்கு வலி எடுக்குது போல, எதுக்கும் நீங்க குளிச்சு ரெடி ஆகுங்க, ஹாஸ்பிடல் போகணும்” என்று சொல்லிப் போக,

அதற்குள் கலையின் மாமியாரும் மாமனாரும் வந்து விட , அவர் எதோ கஷாயம் வைத்துக் கொடுக்க, அப்போதும் வலி நிற்கவில்லை, “எதுக்கும் ஹாஸ்பிடல் போகலாம், இன்னும் பத்து நாள் தானே இருக்கு!” என்ற அரசி, குருவைக் கார் எடுக்கச் சொல்லி அழைத்துப் போக,

அங்கே பிரசவ வலி தான் என்று  டாக்டர் சொல்ல, சில பதட்டமான மணித்துளிகள். அர்த்தனாரிக்கும் ராஜசேகரனுக்கும் சொல்ல அவர்களும் கிளம்பி வருகிறோம் என்று சொல்ல, ஒரு வழியாக  மதியம் போல கலையரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது, எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.

“பையன் பொறந்துட்டான்! எங்கப்பாவை இனிக் கைல பிடிக்க முடியாது” என்றாள் அரசி, “ஏன் அரசி உங்கப்பாக்கு பொண்ணு பிடிக்காதா?” என,

“இல்லையில்லை அப்படி இல்லை! அவருக்கு பொண்ணு இருக்குறதால பையன் கேட்கறார். இதுவே பையன் இருந்தா பொண்ணு கேட்பார்” என்றாள் அப்பாவை விட்டுக் கொடுக்காமல்.

“ஆனா, பொண்ணுன்னு தானே! அடிக்க வெல்லாம் செய்யறாங்க! தப்பில்லையா?” என்றவனிடம்,

“சே! சே! அடிக்கவெல்லாம் மாட்டாங்க! எப்போவோ சின்ன வயசுல அடிச்சது. இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நான் முழு மனசா எதிர்த்தேன், நீங்க நிறுத்திடு சொன்னவுடனே, அப்போ அப்பாவை எதிர்த்து பேசினேன் எல்லோர் முன்னாடியும் அந்தக் கோபத்துல அம்மா அடிச்சாங்க, அப்புறம் அன்னைக்கு நான் கல்யாணம் வேண்டாம் வந்துடுவேன் சொன்னேன் இல்லியா, அப்போ வாய் மேல வெச்சாங்க” எனவும்,

“அவங்களுக்காகத் தானே அப்போ என்னை சகிச்சிட்ட!” எனவும்,

“கண்டிப்பா! முதல்ல அதுக்கு தான் உங்க வீட்டுக்கு வந்தேன், அவங்க கல்யாணம் தப்பாயிட்டா மனசு விட்டுடுவாங்க, தப்பு பண்ணிட்டோம்னு தான். நீங்க அலட்சியம் செஞ்சப்போ கூடப் பொறுத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் என்னவோ உங்களைப் பார்க்க பாவமா இருந்தது. உங்க முகம் சோர்வா இருக்குறப்போ உங்களை சிரிக்க வைக்கணும்னு தானா தான் தோணிச்சு, அண்ட் ரெஸ்ட் இஸ் தி ஹிஸ்டரி!” என்று பாவனையாக சொல்ல,

சிரித்தவன் “ஹிஸ்டரியா அப்போ கூடப் பிடிச்சிருக்கு சொல்ல மாட்டியா” என, “அதுதான் உங்களுக்குத் தெரியுதே பிறகு நான் ஏன் சொல்லணும்” என்றாள்.            

அந்த பாவனைகள் அவனை மயக்க, “அவங்க பையன் பெத்துக்கிட்டா பெத்துகிடட்டும், எனக்கு உன்னை மாதிரி பொண்ணு தான் வேண்டும்” என்ற குருவிடம்,

“பொண்ணு ஓகே! ஆனா அது என்ன என்னை மாதிரி பொண்ணு!”

“உன்னை மாதிரி அறிவா! அழகா! குணமா! சூழ்நிலையைப் பக்குவமா கையாளத் தெரிஞ்சவளா!” என அடுக்கிப் போக,

“ஹேய், ஸ்டாப்! ஸ்டாப்! இதை மட்டும் எங்கம்மா அப்பாக்கிட்ட சொல்லுங்க, அழகான்றதை மட்டும் ஒத்துக்குவாங்க, வேற எதையும் ஒத்துக்க மாட்டங்க”

“அவங்க ஒத்துக்கலைன்னா உண்மை இல்லைன்னு ஆகிடுமா யோசிச்சு பாரு, நான் உன்னை நடத்தினதுக்கு வேற யாராவதுன்னா போடானு சொல்லிப் போயிருப்பாங்க, நீ என்கிட்டே நடந்துகிட்ட முறையில தான் நான் உன்கிட்ட பொறுமையா நடந்தேன். இல்லை நம்ம உறவும் நிலைச்சு இருக்காது, நானும் என் வாழ்க்கை தோல்வியை சகிச்சு இருக்க மாட்டேன்! சிதைஞ்சு போயிருப்பேன்!” என்றான் ஆத்மார்த்தமாக.

சூழலை இலகுவாக்கும் பொருட்டு “நான் கூட நிறைய தடவை போடா சொல்லியிருக்கேன்” என்று சிரிப்போடு சொன்னவளிடம்,

“போடா சொல்லியிருக்க! ஆனா போகலயே!” என்றான் புன்னகையோடு.

“ஷ், பா! முடில” என்றவளிடம், “பரவாயில்லை நீ கோபிச்சிக்கிட்டு வந்தது, பிரயோஜனம் ஆச்சு!” என்றான்,

“என்ன பிரயோஜனம் ஆச்சு?” என்று அரசி முகம் சிவக்க கேட்க, அவளின் முகச் சிவப்பை ரசித்து, சிரித்தவன், “அண்ணியோட பிரசவ டைம்ல ஹெல்ப் பண்ண முடிஞ்சது இல்லையா! அதைச் சொன்னேன்!” என்றான்.

“ஓஹ், நீங்க அதைச் சொன்னிங்களா?” என்று அசடு வழிந்தவளிடம், “வேற எதைச் சொன்னேன்னு நீ நினைச்ச” என்று ரகசிய புன்னகை பூத்தான்.

“ஹி, ஹி” என்று அவனைக் கிண்டல் செய்தவள், “நான் இப்போ என்ன சொல்லணும்? வெக்க வெக்கமா வருதுன்னா!” என்று சிரிக்க, மனம் விட்டு சிரித்தான்.  ஹாஸ்பிடலில் போவோர் வருவோர் எல்லாம் திரும்பிப் பார்க்க கஷ்டப்பட்டு அடக்கினான்.

அரசியும் குருபிரசாத்தும், கலையரசி ஹாஸ்பிடலில் இருந்து வரும் வரை தேவையானவைகளை செய்து கொடுத்து எல்லோரையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள, “மாப்பிள்ளை தங்களிடம் நன்றாகப் பழகவில்லையோ” என்ற அரசி வீட்டினருக்கு இருந்தக் குறையும் தீர்ந்தது.

ஆனால் பேச்சுக்கள் எப்போதும் குருவிற்கு குறைவு, அதற்கும் சேர்த்து வைத்து அரசி பேசினாள். ஆனால் பேச்சு வரம்பு மீறினாலோ, விளையாட்டுத்தனம் அதிகமானாலோ, “அரசி” என்று குருவின் ஒற்றை வார்த்தைக்கு அடங்கி விடுவாள். அம்மாவிடம் அப்பாவிடம் வாய் கொடுப்பது போலக் கொடுக்க மாட்டாள். வியந்து தான் அரசியைப் பார்த்தனர் அவளின் பெற்றோர்.

இதில் கல்யாணப் பேச்சை மீண்டும் அர்த்தனாரி எடுக்க, “நாற்பது பவுன், பாதி கல்யாண செலவு, ஒரு இடம்! அவ்வளவு தான் முடியும்!” என்று குரு கறாராகச் சொல்ல, “டாக்டர்ன்றதால கொஞ்சம் முன்ன பின்ன எதிர்பார்க்கிறாங்க, செய்வோமே!” என்று அர்த்தனாரி சொல்ல,

“இன்னொருத்தியும் இருக்கா மாமா! முடியவே முடியாது!” என்றான் குரு, “நான் உதவி செய்யறேன் மாப்பிள்ளை!” என்றவரைப் பார்த்து அரசி, “அப்பா” என்று அதட்டியவள்,

“எவ்வளவு உழைச்சிருக்கார் பா, இந்தக் கல்யாணத்துக்கு, அவருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யட்டும்! அப்புறம் அவரோட உழைப்புக்கு என்ன மரியாதை? உதவி வேண்டாம்! கடன் வாங்கினாலும் திரும்ப அதைக் கட்ட அவர் தான் ராப் பகலா உழைக்கணும்! அதுக்கெல்லாம் நான் அனுமதிக்க மாட்டேன். இது குறைவா இல்லைப்பா, இவ்வளவு தான் சொல்லுங்க!” எனவும்,

“நீ என்னமா சின்னப் பொண்ணு!” என்று அர்த்தனாரி அதட்ட, “மாமா பேசறது அவளா இருக்கலாம்! ஆனா எண்ணங்கள் என்னோடதுதான்!” என்றான். அந்தக் குரலை அர்த்தனாரியால் மறுக்க முடியவில்லை.

ஆம்! அவர்கள் டாக்டர் சொன்ன டெஸ்ட் எல்லாம் செய்து இருந்தனர். பீ பீ மட்டுமே இருக்க வேறு தொந்தரவுகள் இல்லை. அதனாலேயே மனம் தேறிக் கொண்டனர்.  

பெண் பார்க்கக் கேட்டபோது, “என் பொண்ணு எல்லாம் என்னை மறுத்துப் பேச மாட்டா” குருவின் அப்பா சொல்ல,

அதற்கும் அரசிக்கு கோபம் நாதனுடனும் வாக்குவாதம் செய்தாள், “இப்படி சொல்லித்தான் இவருக்கு தெரியாம கல்யாணம் பேசி, எவ்வளவு சிக்கலாகிடிச்சு, அந்தத் தப்பை திரும்ப பண்ணாதீங்க! எதுக்கு அவ்வளவு சிரமப்பட்டு பசங்களை வளர்த்தீங்க! அவங்க நல்லா இருக்கணும்ன்னு தானே! அப்புறம் அவங்க ஆசை நிறைவேத்தாம, நான் சொல்றது தான் கேட்கணும், எனக்குத் தான் தெரியும்னு சொன்னா, அதுல எந்த அர்த்தமும் இல்லையே. கேட்டுட்டுத் தானே செய்யணும்”

“ஒருவேளை எங்களுக்குப் பிடிக்காமப் போயிருந்தா, எங்க வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்! எங்கப்பாக்கு தெரிஞ்சிருந்தா என்ன ஆகியிருக்கும், திரும்ப அந்த தப்பை செய்யாதீங்க” என,

“ஷ், அரசி!” என்று குரு அவளின் பேச்சை நிறுத்துவதற்குள் போதும் என்றானது, பிறகு பெண் பார்க்க வைத்து இருவருக்கும் பிடித்துப் போக, ஜோதி விஸ்வத்தின் திருமணம் நிச்சயமானது.

இரவின் தனிமையில் “அரசி, எதுக்கு இப்படி எல்லோர்கிட்டயும் எனக்காகச் சண்டை போடற?” என்றவனிடம், “அது அப்படித்தான்!” என்றாள் அவனை இடித்துக் கொண்டு அமர்ந்து.

“ஹப்பா!” என்றவன், “ஜக்கம்மா தாண்டி நீ!” என, “அது என்ன அவ டாலி! நான் ஜக்கம்மா!” என, “தோன்றதை தானே சொல்ல முடியும்!” என்று சிரிப்போடு சொன்னவனிடம், முகம் சுணங்கியவள், “இப்போவும் உங்களுக்கு அவளைப் பிடிக்குமா?” என.

இழுத்து அவளை மேலே போட்டுக் கொண்டு அணைத்தவன், “உன் கேள்வியே அபத்தம்! நான் காதலிச்சேன்! ஆனா இப்போஅந்த ஞாபகமே எனக்குள்ள இல்லை! அரசி மட்டும் தான் இருக்கா! அதுவும் அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு, இனி அந்த நினைவுகளைக் கூட நான் அசைப் போடக் கூடாது அது தப்பு!”

“என் மனைவியை யாராவது பார்த்தாக் கூட கண்ணை நோண்டணும்னு எனக்கு ஆத்திரம் வர்ற மாதிரி தானே எல்லோருக்கும்! சோ, நான் என்னோட காதலை மறந்துட்டேன்! அதைப்பத்தி விளையாட்டுக்குக் கூடப் பேசாதே” என.

“ம்ம்ம்!” என்று சொன்னவள், குருவை இன்னும் இறுக்கமாக அணைக்க, “தேங்க்ஸ்!” என்றான் மீண்டும், “எதுக்கு?” என்றவளிடம்,

“என் காதலை நான் மறக்கணும்னு ஒரு ஃபீல் எனக்குக் குடுத்தே இல்லையா அதுக்கு! அதை ஞாபகம் வராம வைக்கறதுக்கு!” என,

“காதலிச்சீங்களா, எப்போ? யாரை?” என்று தலையை நிமிர்த்தி ஒரு அறியாத பாவனையில் அவனின் முகம் பார்க்க,

“காதலிக்கிறேன்! இப்போ! உன்னை! என்றவன், “போதுமா?” எனக் கேட்க,

“போதாது!” என்றாள் ஒரு ரகசியப் புன்னகையுடன், புன்னகைத்த  இதழ்களை வன்மையாகச் சிறை செய்தவன், 

சிறிது நேரம் கழித்து விடுவித்து, “இப்போ போதுமா!” என அரசியின் முகம் பார்க்க, “ம்கூம், போதாது!” என்று அவளின் சிவந்த முகம் சொல்ல, மேலும் மேலும் சிவக்க வைக்க ஆரம்பித்தான்.  

                           (நிறைவுற்றது)             

              

         

 

 

             

 

 

 

Advertisement