Advertisement

அத்தியாயம் பதினாறு :

அரசியிடம் பதிலில்லை, ஆனால் என்னை உணர்ந்து கொண்டானே என்ற வியப்பு மனதில் தோன்றியது.

“சொல்லு அரசி!” என, அப்போதும் பதிலில்லை,

“சொல்லு! என்ன தப்பு பண்ணினேன். இந்தக் கல்யாணத்துக்கு முன்ன ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். எனக்கு தெரியாம கல்யாணம் பேசிட்டாங்க, எனக்குத் தெரியலை, உன்கிட்ட சொன்னேன் நிறுத்திடுன்னு சொன்னேன். அதுல எந்தத் தப்பும் எனக்குத் தெரியலை. அப்போ என் மனசும் அவ மனசும் தான் ஒண்ணா இருந்தது”

“கல்யாணத்தை நிறுத்த முடியலை, நடந்துடுச்சு, அதை நிறுத்த முடியாத கோபம் என்கிட்டே இருந்துச்சு! அதை உன்கிட்ட காட்டினேன், தப்பு தான்! ஆனா அந்தத் தப்பை நான் மேல மேல செய்ய விடாம நீ என்னை மாத்திட்ட, அவளும் போயிட்டா, அவ்வளவு தான்!”

“என் காதல் அது எங்க போச்சுன்னே தெரியலை. அதை நீ மறக்க வெச்சிட்ட. இப்போ எனக்குள்ள அந்த நினைவுகள் மட்டும் தான். அதுவும் நீ தள்ளிப் போகும் போது மட்டும் தான் அந்த ஞாபகங்கள் வருது. அதுவும் நீ ஏன் தள்ளிப் போறன்னு நான் நினைக்கும் போது” 

“இது மட்டும் தான் நான் செஞ்சது. இந்த ஏழுமாசமா சேர்ந்து இருக்கோம், ரெண்டு முறை திரும்பவும் என்னை வெளிநாடு போகச் சொன்னாங்க, நான் இப்போதைக்கு வேண்டாம் சொல்லிட்டேன்”

“ஏன் தெரியுமா? நான் போனாத் திரும்ப நமக்குள்ள இடைவெளி ஆகிட்டா என்ன பண்றதுன்னு. சொல்லிட்டேன் தான் பிரியலாம்னு ஆனா என்னால அது முடியும்னு தோணலை. என்னைப் பார்த்து பார்த்து நீ கவனிக்கற, அக்கறையா பேசற”

“அப்போ என் மனசு உன்மேல திரும்பாதா? ஏன் இப்போ இங்க வந்துட்ட, உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியக் கூடாதா?” என,

அரசி மெதுவாக வாய் திறந்தவள், “நீங்க என்னை வேண்டாம் சொன்னாலும், எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு இல்லையா, அது ஏன் அப்படின்னு எனக்குள்ள ஒரே யோசனை. அப்புறம் அது உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சு இல்லையா, அது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. எப்படி இப்படி ஆகலாம்னு” என்று திரும்பப் படுத்த வாக்கிலேயே சொல்ல. 

“முதல்ல திரும்பு! என் முகத்தைப் பாரு!” என்று குரு ஒரு அதட்டல் போட திரும்பினாள்.

அரசியின் கண்கள் கலங்கியிருக்க, “லூசு அழறியா நீ!” என்றான்.

“ஆம்” என்பது போலத் தலையசைக்க,

“எதுக்கு” என்றவனிடம்,

“தெரியலை!” என்றவள்

“நீ வேண்டாம் வேண்டாம் சொன்னாலும், எப்படி எனக்கு உன்னை பிடிக்கலாம்ன்னு என்னைப் பத்தி நினைச்சு மனசை போட்டு குழப்பறியா?” என்றான்.   

“இருக்கலாம்!” என்றவளிடம்,

“அது நம்ம மரபு அணுக்கள்ள இருக்குற திருமணத்தை குறித்த நமது எண்ணங்கள். திருமணத்தை நம்மளால அவ்வளவு அலட்சியமா எடுக்க முடியாது. பிடிச்சா எல்லா கல்யாணமும் நடக்குது. இல்லை நடந்த அப்புறமும் பிடிச்சிடுதா?”

“ஆனாலும் ரொம்ப சில பேர் தான் பிரியறாங்க. மத்தவங்க எல்லாம் சேர்ந்து தான் இருப்பாங்க. ஆனா நம்ம ரொம்ப லக்கி, பிடிக்காம கல்யாணம் பண்ணினாலும் இப்போ ரொம்ப பிடிச்சிடுச்சு இல்லையா”

“இப்போ பாரு, ஒரு நாள் நீ வந்த, நான் பின்னாடியே வந்துட்டேன். என்னவோ அந்த வீட்லத் தனியா இருக்க முடியலை!” என்றான்.     

அப்போதும் அரசி முகம் தெளியாமல் இருக்க, “பிடிக்கலைன்னு அப்போத் தானே சொன்னேன். அதுக்கு அப்புறம் உனக்காகத் தானே சொன்னேன். இன்னும் சொல்லப் போனா உன்னை பிடிக்கலைன்னு கூட சொல்லலை, மேக்னாவைப் பிடிச்சதால நீ வேண்டாம் சொன்னேன்!” என்றவனிடம்,

“ஹய்யோ செம ஸ்மார்ட் பதில்!” என்றாள் நக்கலாக!  

“இப்போ நான் என்ன பண்ணனும்?” என்றான்.

அதற்கும் “தெரியவில்லை” என,

“ஷ், படுத்துறடி நீ!” என்று அவன் பேசிக் கொண்டிருக்க,

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக வேகமாக எழுந்து அமர்ந்தவள் “மாத்திரை சாப்பிட்டீங்களா, நான் கேட்கவேயில்லை!” என்றாள்.

குருவிற்கு சிரிப்பு வந்தது. “எதுக்கு சிரிக்கறீங்க?” என,

“உன் கடமை உணர்ச்சியை நினைச்சு சிரிப்பு வந்தது. அதுதான் நான் வேண்டாம்னு வந்துட்ட அப்புறம் என்ன அக்கறை”

“வேண்டாம்னு வந்தேனா! யாரு சொன்னா? சும்மா ஒரு ரெண்டு நாள் இருக்கலாம்னு வந்தேன், அவ்வளவு தான்! அவ்வளவு ஈசியா எல்லாம் என்கிட்டே இருந்து எஸ்கேப் ஆக முடியாது பாஸ்!” என்றாள்.

“எஸ்கேப் ஆகிற ஐடியா எல்லாம் எனக்கு இல்லவே இல்லை!” என்றவன்,

“இங்க உன்னைப் பார்க்க வர்ற அவசரத்துல மாத்திரை எடுக்க மறந்துட்டேன். சாப்பிட்ட பிறகு தான் ஞாபகம் வந்தது. நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்!” என்றான்.

இடுப்பில் கைவைத்து முறைத்தவள், “நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு தெரியும். அதனால தான் ஒரு ரெண்டு மாத்திரை என் கிட்ட ஸ்பேர் வெச்சிருக்கேன்” என அவனை வேகமாகத் தாண்டி போய் எடுத்து வந்தாள்.

“அப்போ நான் இங்க வருவேன்னு எதிர்பார்த்தியா?” என்றவனிடம், 

“கண்டிப்பா!” என்றாள் ஒரு மென்னகையுடன்.

குருபிரசாத் பார்த்திருக்க, “கிளம்பிட்டேன்! அப்புறம் தப்புன்னு தோணிச்சு. அதுவும் திரும்ப உங்களை டென்ஷன் பண்றனோன்னு தோணிச்சு. ஆனாலும் நீங்க எப்படியும் வந்துடுவீங்கன்னு தெரியும். அதுதான் வந்துட்டேன்!” என்றாள் சிரிப்புடன்.

“சாப்பிடுங்க!” என்று மாத்திரையும் தண்ணீரும் கொடுத்தவள்,

“விஸ்வம் அண்ணாக் கிட்ட சொல்லிட்டேன். நாளைக்கு நாங்க வர்றோம்! எதோ டெஸ்ட் பண்ணனும் சொன்னீங்களே பண்ணிடலாம்னு!” என்றவளின் குரலில் கலக்கம் கூட,

“பெருசா ஒன்னுமிருக்காது, இருந்தாலும் டென்ஷன் ஆகக் கூடாது. வந்துடுச்சு! இனி அதுக்கு கவலைப் பட்டா அது பெருசு தான் ஆகும். அது இன்னும் அதிகமாகாம பார்த்துக்கணும் அவ்வளவு தான்!” என்றான்.

“ஆனாலும் இப்போவே..” என்று அரசி கலங்க,

“வா!” எனக் கை விரிக்க, அவன் கைகளுக்குள் புகுந்து கொண்டவளை கட்டிக் கொண்டவன்,

“ஒன்னும் ஆகாது! நம்பு ! நம்மளோட வியாதிளுக்கும் நம்மளோட எண்ணங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கு. கண்டிப்பா ஒன்னும் பெருசா ஆகாது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், அதைக் கண்ட்ரோல் கொண்டு வந்துடறேன், சரியா!” என்றான்.

“சரி!” என்பது போல நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்க்க,

அவளின் கலங்கிய கண்களில் மென்மையாக முத்தமிட்டவன், “அழகுடி நீ!” என்று கண்ணடித்தான்.

“ஆறு மாசம் கழிச்சு தெரியுதா?” என்று கிண்டல் செய்ய,

“அதெல்லாம் அப்போவே தெரியும், இருந்தாலும் சொல்ல முடியாது இல்லையா!” என்றவனைப் பார்த்து,

“சொல்ல முடியாதவங்க எல்லாம், என்னை ஒன்னும் பிடிக்க வேண்டாம்!” என்று அவன் கைகளில் இருந்து திமிறி விடுபட முயல,

“ஆரம்பிச்சிட்டாடா இவ!” என்று சலிப்பது போலக் காட்டியவன்,

“முடிஞ்சா போ!” என்று இன்னும் இறுக்கிப் பிடிக்க, ம்கூம், அசையவே முடியவில்லை.

சில நொடிகள் முயன்றவள், திரும்ப வாகாக அவளும் கட்டிப் பிடித்து நிற்க,

“அவ்வளவு தானா!” என்பதுப் போல குரு பார்க்க,

“முடியாத விஷயத்தை நான் முயற்சிக்கறதேயில்லை!” என்றாள் கூலாக.

“ரொம்பப் பேசற நீ, சமயத்துல பேசற உன் வாயை ஏதாவது பண்ணனும் போல தோணும்” என்று ரசனையாக அவளின் உதடுகளைப் பார்த்து சொன்னவன், அதை மென்மையாக வருடி விட, உடல் சிலிர்த்தவள்,  

“ஐயோ அரசி, இன்னும் இவருக்கு தோணிக்கிட்டேத் தான் இருக்காம்! ஒன்னும் செய்ய மாட்டார் போல!” என்று அரசி கிண்டல் செய்ய,

சிரித்தவன் “அதை நீ சொல்றியா, காலைத் தொட்டாலே உருகிக் கரையிற!” என,

பதிலுக்கு நக்கலாக “காலை மட்டும் தானே தொட்டீங்க” என,

குருபிரசாத் அதற்கு சொன்ன பதிலில், முகம் சிவந்து, அவன் நெஞ்சிலேயே முகம் சரண் புகுந்து கொள்ள, மனைவியின் வெட்கம் குருவை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்ல, அவன் மனைவியையும் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றான்.   

Advertisement