Advertisement

அத்தியாயம் பதினைந்து :

தமிழரசிக்கு தன்னைப் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் “தேங்க் யு”  என்ற வார்த்தையை உதிர்த்துப் போக,

உதிர்ந்த அந்த வார்த்தையும், பதிந்த அந்த முத்தமும், எதற்கு என்று புரியாத போதும் ஒரு இனிமையை, ஒரு பரவசத்தை உணர்ந்தாள்.

குருவிற்கு பேச நேரமேயில்லை. எப்போதும் ஃபோனில் பேச மாட்டான் என்றாலும், அன்று பேச ஆவலாக இருந்த போதும் நேரமின்மையின் காரணத்தால் அழைக்க முடியவில்லை.

கூட டீமில் இருந்தவர்கள் கேட்டே விட்டனர், “என்ன குரு கொஞ்ச நாளாவே டல்லா இருந்தீங்க, இப்போ ப்ரைட்டா இருக்கீங்க!” என

“அப்படியா சொல்றீங்க? ஒரு போட்டோ எடுத்துக் காட்டுங்க பார்ப்போம்” என்றவன், அவனின் செல் குடுத்து ஃபோட்டோ எடுக்க வைத்து பார்த்த போது முகம் வசீகரமாய் தான் இருந்தது.

“அதுதான் என்னைக் காலையில சைட் அடிச்சு நின்னா போல” எனத் தோன்ற முகத்தில் ஒரு ரகசியப் புன்னகை.

“என்ன குரு மேக்னா போன பிறகு இப்போ தான் ப்ரைட்டா இருக்கீங்க, வீட்ல பொண்ணு பார்த்து இருக்காங்களா?” என,

“அவ்வளவு தான் திரும்ப பொண்ணு பார்த்தா, என் மனைவி என் தோலை உரிச்சிடுவாங்க, எனக்கு கல்யாணமாகி ஆறு மாசம் ஆச்சு”

“என்னது?” என்று வாயைப் பிளந்தவர்கள் “சொல்லவே இல்லை” என,

“அதனால தாங்க மேக்னா போனா! வீட்ல எங்கப்பா கையைக் காலைக் கட்டி கல்யாணம் பண்ணி வெச்சிட்டார்!” என்று ரசனையோடு சொல்ல,

“இவனை அப்படிச் செய்ய முடியுமா?” என்று நம்பாமல் உடனிருந்தவர்கள் பார்க்க,

“பாருங்க!” என்று அவனின் மொபைலில் நேற்று கலையரசியின் வளைகாப்பின் போது எடுத்தப் படங்களை காட்டினான்.

“ஆங்!” என்று பார்த்து நின்றவர்கள், “இப்படி பொண்ணை  எல்லாம் கையைக் காலைக் கட்டி கல்யாணம் செஞ்சு வைக்கலாம் தப்பில்லை.  லக்கி குரு நீங்க” என்றனர்.

“என்னப்பா சூப்பர்?” என்ற ஒருவன், “பயந்துட்டே இருக்கணும், காதலியைப் பத்தி மனைவிக்கு தெரிஞ்சிடுமோன்னு”

“அதெல்லாம் தெரியும்ங்க, என்னை ஒரு வார்த்தை கூட குத்திக் காட்டி பேசினதேயில்லை. பக்குவமானவங்க! என்னை அதுல இருந்து வெளில கொண்டு வந்ததே அவங்க தான்!” என்று குரு அசால்டாக அதே சமயம் பெருமையாகவும் சொல்ல.   

அவனுக்கு வேளையில் இன்செண்டிவ்ஸ் கிடைக்கும் போதுக் கூட பொறாமைப் படாதவர்கள், இதற்கு மிகவும் பொறாமைப் பட்டனர். குத்திகட்டாத மனைவி எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. திரும்ப கிளையண்ட்ஸ் வந்து விட, பிறகு எதற்கும் நேரமில்லை.     

“நான் நைட் டின்னற்கும் வெளில போறேன், முடிச்சிட்டு தான் வருவேன். நீ வெயிட் பண்ணாத! சாப்பிடு!” என்று ஃபோனில் குரு மாலை ஆறு மணிக்கே மெசேஜ் போட்டு விட்டான்.

அரசி அப்போது தான் சமைக்க ஆயத்தம் ஆனவள், அவன் சாப்பிட மாட்டான் என்றதும் அத்தனையும் எடுத்து வைத்து விட்டு வந்து அமர்ந்து கொண்டாள்.

இரவு ஒன்பது மணிக்கு வந்தவன் கதவை அரசி திறக்கும் போது சோர்வாக இருப்பதைக் கவனித்து “சாப்பிட்டியா, இல்லையா?”  

“ம், சாப்பிட்டேனே!” என்று அவள் சொல்லிப் போய்விட, சமையலரை சென்று பார்த்தாள்.

அங்கே சமைத்ததற்கான அறிகுறியே இல்லை. அவனுக்கும் சமைக்க சலிப்பாக இருக்க, “ஒரு வாக் போவோமா? சாப்பிட்டது ஹெவியா இருக்கு!” என்றான்.

உடனே அரசி முகம் மலர்ந்து வேகமாகக் கிளம்பவும், சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தார்கள்.

ட்ராபிக் குறைய ஆரம்பித்து இருந்தது. “கடல்க்கு போகலாமா?” என்றாள் ஆவலாக அரசி.

“வேண்டாம், டைம் ஆகிடுச்சு, சேஃப் கிடையாது. காலையில தான் போகணும்!” என்றவன்,

“நான் எப்பவும் அந்த மாமி மெஸ்ல சாப்பிடுவேன். டேஸ்டியா இருக்கும், ஹைஜீனிக்கா செய்வாங்க!” என,

“ஒரு சிறிய மெஸ் அது, சாப்பிட்டது ஹெவியா இருக்கு சொன்னீங்க”,…

“அது எனக்கு! உனக்கு பசிக்குது தானே வா!” என்று சொல்லி, அங்கே சாப்பிட வைத்து, திரும்ப வீடு வந்த போது மிகவும் களைப்பாய் உணர்ந்தவன் படுக்கப் போக,

வெளியே ஹாலில் அரசி ஆயத்தம் ஆக, அதை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அந்த சோபாவில் அவளுக்கு முன் குரு படுத்து, “இதுல இடம் இருந்தா படுத்துக்கோ!” என்றான்.

வம்பு செய்கின்றான் என்று புரிந்து, குருவின் ரூம் சென்று படுக்க, அவனும் வந்து படுத்துக் கொண்டான்.

நேற்று போல இடைவேளி அதிகம் விடாமல் நெருங்கி படுத்தான். ஆனாலும் உடல்கள் உரசவில்லை. ஆனால் அதுவே அரசிக்கு உறக்கத்தை தொலைய வைத்தது. குரு உறங்கிவிட்டான்.

ஆனால் அரசி உறங்கவில்லை. “ஏன் இப்படிச் செய்கின்றான் எப்போதும் இப்படி செய்தது இல்லையே! என்னுடைய மாற்றங்கள் அவனுக்குத் தெரிந்திருக்குமா? இப்படியா வெட்கமில்லாமல் உன்னை நீயே காட்டிக் கொடுப்பாய் அரசி!” என்று தோன்ற,

அரசி சற்று அவமானமாய் உணர்ந்தாள்.

மனதில் ஒரு சிறு போராட்டம். அடுத்தநாள் அரசியால் எழவே முடியவில்லை, அப்படி ஒரு உறக்கம்.

எழுப்பி பார்த்தவன், “நான் போகணும் டைம் ஆகிடுச்சு! எழுந்ததும் ஃபோன் பண்ணு, ஃப்ரீயா இருந்தா அட்டன்ட் பண்றேன், சமைச்சிருக்கேன் சாப்பிட்டுடு” என்று ஒரு நோட் எழுதி சென்று விட்டான்.

அதை அவளை எழுப்பியும் சொன்னான், உறக்கத்தில் இருந்ததால் புரிந்திருக்குமா என்று தெரியாமல் நோட் எழுதி வைத்து, அவளிடமும் ஒரு சாவி இருப்பதால் முன்புறம் பூட்டிச் சென்றான்.

அன்று யு எஸ் கிளையண்ட்ஸ் கிளம்புவதாக இருந்ததால் விரைவாக சென்று விட்டான், அதில் பிசியாக இருந்ததால், அரசியைப் பற்றிய நினைவுகள் இருந்தாலும் பேச முடியவில்லை. அவர்கள் மூன்று மணிக்கெல்லாம் இந்தியாவின் வேறு ஊருக்கு பயணப்பட்டதால், உடனே வீட்டிற்கு கிளம்பினான்.

அரசி வீட்டில் இல்லை. அவன் எழுதிவைத்தது போல ஒரு நோட், “நான் ஊருக்குப் போறேன்!” என்று இருந்தது,

கூடவே “மாத்திரை கரக்டா சாப்பிடுங்க!” என்றும் இருந்தது.

“ஏன் சென்றாள்?” என்று குழம்பியவன், “கால் ரொம்ப வலிக்குதோ? நாம பிசியா இருந்ததானால கவனிக்கலையோ?” என்று தான் தோன்றியது.

உடனே அரசிக்கு அழைத்தான், எடுத்தவளிடம் “என்ன அரசி, எங்க இருக்க?” என,

“அம்மா வீட்ல!”…

“ஏன் போயிட்ட?” என்றான்.

இதுவரை அரசி தனியாக ஊருக்குச் சென்றதோ, அம்மா வீட்டில் இவனை விட்டுத் தங்கியதோ கிடையாது. ஆளுக்கு ஒரு பக்கம் முகம் தூக்கி வைத்தாலும், அது அடுத்தவருக்கு தெரியும்படி தான் இருப்பர்.

அதற்கு பதில் சொல்லாமல், “மாத்திரை சாப்பிடுங்க! மறந்துடாதீங்க!” என்றாள்.

“ஏன் அரசி தனியா போன? உடம்பு சரியில்லையா?”  

“இல்லை நல்லா இருக்கேன்! தனியா இருக்கணும் தோணுச்சு!”

“ஏன்? என்ன மனசுல போட்டுக் குழப்பற?” என்றவனிடம்,  

“ஒன்னுமில்லை!” என்று வைத்து விட்டாள்.

எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கும் பொழுது ஏன் ஊருக்கு போனாள் என்று மண்டை குடைந்தது. திரும்பவும் எதையும் மனதில் வைத்து உளப்ப, குரு தயாராக இல்லை.

இதுவரை கவனிக்கவில்லை, அதையும் இதையும் நினைத்து பீ பீ என்று இழுத்து விட்டுக் கொண்டான். இனி உடலோடு விளையாட முடியாது, மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் ஓடினாலும், இந்த அரசி, அவளையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஆகவே ஆகாது முடிவெடுத்து விட்டான்.

தள்ளித் தள்ளி நிற்கவும் தான் எல்லா தடுமாற்றங்களும், அரசியை இப்படியே விடக் கூடாது என்று தான் தோன்றியது, வேறு வாழ்க்கை எல்லாம் அமைத்துக் கொள்ளவே மாட்டாள், அவளாகவும் வர மாட்டாள், தன்னையும் நெருங்க விட மாட்டாள் என்று புரிய, ஊருக்கு கிளம்பினான்.   

அங்கே அவனின் வீடு சென்று சிறிது நேரம் இருந்து, மாலை ஏழுமணிக்கு மாமனார் வீடு சென்றான்.

“வாங்க! வாங்க மாப்பிள்ளை!” என்று தடபுடலாக வரவேற்ற பூமா,

“நீங்க நைட் வர லேட்டாகும் தனியா இருக்காத ஊருக்கு போயிடுன்னு அரசி கிட்ட சொன்னிங்கலாம்!” என்றார்.

“ஆமாம் அத்தை! ஆனா அவங்க மதியமே கிளம்பிட்டாங்க! நாளைக்கு லீவ் போட்டுட்டு நானும் வந்துட்டேன், அப்புறம் சனி ஞாயிறு மூணு நாளும் இங்கே தான்! சென்னை போகலை, திங்கள் காலை போனாப் போதும்!” என்றான்.

“மாமாவும், ராஜா தம்பியும் விவசாயிகள் மாநாடுக்கு இப்போ தான் கிளம்பிப் போனாங்க, அவங்க சனிகிழமை தான் வருவாங்க!” என்றார். அவர்கள் அத்தனை பேசும் போதும் அரசி வெளியில் வரவில்லை.

“என்ன பண்றா அத்தை?” என,

“மேல போனாத் தம்பி கூப்பிடறேன்!” எனப் போக,

“நான் போறேன் அத்தை!” என்று மாடியேறினான் குருபிரசாத். அங்கே வானவெளியை பார்த்து நின்றிருந்தாள் அரசி.

குரு அருகில் செல்லும் வரை கூடத் தெரியவில்லை. அருகில் செல்லவும் அவனின் பிரத்யேக வாசனை திரவியத்தின் வாசம் உணர்ந்து திரும்பினாள்.

அவளைப் பார்த்ததும் “எதுக்கு இப்போ ஓடி வந்த?” என்றான் கோபமாக.

“என்ன? என்ன ஓடி வந்தேன்?” என்று அரசியும் சற்றும் கோபம் குறையாமல் கேட்டாள்.

“பின்ன எதுக்கு சொல்லாம கொள்ளாம வந்த” என்று அதட்டினான் குருபிரசாத்.

“ப்ச்! எல்லாம் சொல்ல முடியாது! அவங்க அவங்களுக்கு சில ப்ரைவசி இருக்கு!”  

“என்ன உன் ப்ரைவசிய நான் டிஸ்டர்ப் பண்றேன்! நீ இப்படி ஃபீல் செஞ்சு தனியா என்னை விட்டு வர்ற அளவுக்கு!” என நேர்பார்வை பார்த்துக் கேட்டான்.

“இப்போ எதுக்கு சண்டை போட அவ்வளவு தூரத்துல இருந்து வந்தீங்களா”

“சண்டை போடறதுக்கு ஃபோன்ல கூடப் போடலாம். அதுக்கு எதுக்கு இவ்வளவு தூரம் வரணும்!”

“அப்போ எதுக்கு வந்தீங்க?”

“அதெல்லாம் சொல்ல முடியாது! அது என்னோட ப்ரைவசி!” என்றான் சற்று திமிராகவே.

முறைத்துப் பார்த்து அரசி நிற்க, இவனும் சலிக்காமல் பதில் பார்வை பார்க்க, “அரசி, கீழ வா கண்ணு!” என்று அம்மாவின் குரல் கேட்கவும்,

“போடி!” என்றான்,

“என்ன போடி சொல்ற?” என்று அரசி முறைக்க,

“நீ எத்தனை தடவை என்னை போடா சொல்ற, நான் கேட்டுட்டுத் தானே இருக்கேன், நீ சொல்வ! நான் சொல்லக் கூடாதா?” என்றான் அலட்சியமாக.

“என்ன இவன் இப்படி பேசுகின்றான். என்னை திட்டி ஒரு வழியாக்குவது என்ற முடிவோடு தான் வந்திருக்கின்றான் போல!” எனத்  தோன்றிய போதும், சண்டையை வளர்க்காமல் கீழே இறங்கினாள்.

அங்கே கலையும் இருக்க சிறிது நேரம் பொதுவாக பேசி பின்னர் இரவு உணவு பரிமாறப் பட, குருபிரசாத் உண்டவன், கிளம்பும் எண்ணமின்றி அமர்ந்து கொண்டான்.

பெண்களும் உண்டு முடிக்க, “இங்க இருக்கலாமா, வீட்டுக்குப் போகலாமா அரசி?” என்று பூமாவின் முன்னே கேட்க, பதில் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து அரசி வாய் திறக்க,

அரசி பேசுமுன்னே பூமா, “இங்க இருங்களேன் தம்பி, அவங்கப்பாவும் பெரிய மாப்பிள்ளையும் கூட இல்லை, நான் வேணா அண்ணன் கிட்ட சொல்லவா, நீங்க இங்க இருப்பீங்கன்னு” என்று கேட்டவரிடம்,

“இல்லை அத்தை. நான் சொல்லிக்கறேன்!” என்று குரு சொன்னான். அவன்தான் அப்பாவிடம் ஏற்கனவே சொல்லி தான் வந்திருந்தானே.

“சரி” என்றவர், முன் வாசல் கதவை அடைத்து, எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்த்து பூமாவும் கலையரசியும் உறங்கப் போய்விட்டனர்.

தமிழரசி அவனை “வாங்க” என்று அவளின் ரூம் அழைத்துச் சென்றாள்.

குரு குளியலிட்டு உடை மாற்றி, வந்த போது அரசி சுவரைப் பார்த்து படுத்திருந்தாள். உறங்கிவிட்டாளா தெரியாது, ஆனால் கண்மூடி படுத்திருக்க,

அருகில் படுத்தான். சற்று நேரம் திரும்புவாளா என்று பார்க்க, ம்கூம் ஒரு அசைவுமில்லை.

அருகில் நெருங்கி அவளை அணைத்துப் பிடித்து, அவளின் முதுகில் முகம் புதைத்துக் கொள்ள, அரசியின் உடலில் ஒரு அதிர்வு. அதுவே சொன்னது அவள் உறங்கவில்லை என.

“என்னைப் பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியாத அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன், அது எனக்குத் தெரிஞ்சிட்டா என்ன பண்றதுன்னு தான் இங்க வந்துட்டியா?” என்றான்.

 

Advertisement