Advertisement

அத்தியாயம் பதினான்கு :

வீட்டின் உள் நுழைந்ததும், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னைக் கிண்டல் பண்றியா? என்ன பண்றா உன் டாலி? உன்னை இப்படி விட்டுட்டு!”

“பார்த்துக்கறது நீ! அவளை ஏன் திட்டுற?”

“ஓஹ்! உனக்கு அவ மேல அவ்வளவு லவ்வா?” என்று இடுப்பில் கைவைத்து தஸ்ஸு புஸ்ஸு என ஆத்திரம் பொங்கப் பார்த்தவள், “நான் உன்னை சரியாப் பார்த்துக்கலையா? அப்போ என்னை விட்டுட்டு அவளையேக் கல்யாணம் பண்ணிக்கோ, என்னை அனுப்பிடு!” என நின்றாள்.  

அரசியின் பாவனையை ரசித்து “அவளைக் கல்யாணம் பண்ணினாலும் உன்னை அனுப்புவனா சொல்ல முடியாது” என்றான் கண்ணடித்து.  

“ஏய், என் கோபத்தைக் கிளறாதே! பாவம் எதோ உடம்பு சரியில்லாதவன்னு பேசுனா, நீ திரும்ப திரும்ப என்னைக் கிண்டல் பண்ற?”

“சரி! சரி! பண்ணலை! எனக்குக் கல்யாணம் பண்ணிக்க ஓகே! ஆனா டாலி ஒத்துக்க மாட்டா! பரவாயில்லையா?” என,

“ஏன் ஒத்துக்க மாட்டா?” என்றவளிடம் “நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே வீட்ல ஆறு மாசம் இருந்திருக்கிறோம் ஜக்கம்மா” என்று ஒரு மென்னகையுடன் சொன்னான்.  

“நான் பேசறேன்! நமக்குள்ள ஏதாவது உறவு இருக்குன்னா, இல்லைன்னு நான் ப்ரூவ் பண்றேன்!” என்றாள்.  

“எப்படிப் ப்ரூவ் பண்ணுவ?” என்றவனிடம், “ஒரு சின்ன டெஸ்ட் போதும், நான் வெர்ஜின்னு ப்ரூவ் ஆகிடும்! அப்போ நீங்க என்னை எதுவும் பண்ணலை தானே! நமக்குள்ள எதுவும் இல்லை தானே!” என,

தன் மீதான அவளின் அக்கறை குருவை நெகிழ வைத்தது. “உடல் ரீதியான தொடர்பு இல்லை பெண்ணே! மன ரீதியாக விடு பட முடியாத வலையில் நான் சிக்கிக் கொண்டேன்! விடுபடவும் விருப்பமில்லை!” மனதினில் ஓட, “நீ என்ன ப்ரூவ் பண்ணினாலும் அவ ஒத்துக்க மாட்டா!”

“ஏன்?” என்ற கேள்வியைக் கண்களில் அரசி தாங்கி நிற்க, “ஏன்னா அவ புருஷன் விட மாட்டான்!” என்று பாவம் போல குரு ஒரு சிரிப்பை எதிர்பார்த்து சொல்ல, அதற்கு நேர் மாறாக நடந்தது.

அரசியின் முகம் அதன் சாரம்சத்தை புரிந்து கொள்ளாமல், அஷ்ட கோணல் ஆகியது, “என்ன?” என்று முகத்தில் ஒரு அருவருப்பைக் காட்டியவள், “நீ கல்யாணம் ஆன பொண்ணை லவ் பண்ணுனியா” என்று கேட்க,  

அரசியின் அருவருப்பான பாவனையில், “அம்மா!” என்று வாயில் தானாக கைவைத்துக் கொண்டவன், “என்னைப் பத்தி இவ்வளவு உயர்வாவா நினைச்ச!” என்றான் அதிர்ந்து.

 “நீதானே சொன்ன!”

“ம்ம்! மண்ணாங்கட்டி! நான் உன்னைக் கிண்டல் பண்ண சொன்னேன், எனக்குக் கல்யாணம் ஆனதும், அவ என்னை வேண்டாம் சொல்லிப் போயிட்டா, அதுக்கு அப்புறம் எந்தக் காண்டாக்டும் இல்லை,  அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரியும்” என்றவன்,

“கல்யாணம் ஆகி, இந்த ஆரேழு மாசத்துல, என் பொண்டாட்டியை கூட நான் இன்னும் சரியாப் பார்க்கலை. தொட்டுக் கூடப் பேசலை! என்னை அடுத்தவன் மனைவியை லவ் பண்ணினியான்னு கேட்கற, உன்னை என்ன பண்ணலாம்?” என்றான் கோபமாக.

குருவின் பேச்சை கோபத்தை எல்லாம் கவனியாமல், “அச்சச்சோ! அவ போயிட்டாளா? அதுதான் நீ டென்ஷன் ஆகி உனக்கு பீ பீ வந்துடுச்சா!” என்று அதற்கும் அரசி கவலைப்பட,

“ஹய்யோ!” என்று தலையில் கைவைத்து ஃசோபாவில் அமர்ந்தான்.

“என்ன ஆச்சு?” என்று அவனின் காலடியில் அமர்ந்து அவன் முகத்தை அரசிப் பார்க்க,

அவளின் கவலையான முகத்தைப் பார்த்தவன், “எனக்கு ஏன் டென்ஷன் ஆச்சு தெரியுமா? அவ நீ இங்க வந்த அந்த வாரத்துலயே போயிட்டா! அவ போன பிறகு நீ எனக்கு வாழ்க்கை முழுசும் வேணும்னு தோணிச்சு! ஆனா அவ போனதுனால நீ வேணுன்னு நினைக்கறது உனக்கு மரியாதை இல்லையில்லையா, அதை சொல்லவும் முடியாம, நீயும் வேணும்னு தோன, இப்படி… இப்படி… என்னை டென்ஷன் பண்ணிக்கிட்டேன்! அதுதான் பீ பீ போதுமா!” என்று அவன் வெடிக்க…

அரசி குருவை பரிதாபமாகப் பார்த்து இருந்தாள்? என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“எதுக்கு இப்படி என்னை பரிதாபமாப் பார்க்கிற? நான் கல்யாணம் ஆன பொண்ணை லவ் பண்ணுவனா? கல்யாணமாகி ஏழு மாசத்துல நீ வெர்ஜின்னு ப்ரூவ் பண்ணினா, நான் இம்பொடன்ட்ன்னு அர்த்தம்! அதாவது ஆண்மையில்லாதவன்னு அர்த்தம்! எல்லாம் விளையாட்டு இல்லை, விளையாட்டுப் போல எல்லாம் பேசாதே! இது நமக்கான ரகசியம்! அதை யார்கிட்டயும் எப்பவும் பேசக் கூடாது! நாம சேர்ந்து வாழப் போறோமோ இல்லையோ அது வேற” என்று எழுந்து போக..

“என்ன சொல்ல போய், என்னவெல்லாம் ஆகிவிட்டது” என்று நொந்து கொண்டவள், “சாரி!” என்று அவனைத் தேடி அவனின் ரூம் வந்து சொல்ல,

அப்போதும் குருபிரசாத் முகத்தைத் திருப்ப, “நான் உங்களுக்காகத் தான் சொன்னேன், இப்படியெல்லாம் அர்த்தம் வரும்னு தெரியாது! சாரி!” என்றாள் மீண்டும்.

“எனக்காக! எனக்காகன்னா ஒன்னே ஒன்னு மட்டும் செய்! என்னோடவே இருந்துடறியா, என்னோட டென்ஷன் எல்லாம் போயிடும்ன்னு கேட்க ஆசையா இருக்கு! ஆனா கேட்க முடியாது!”

“ஏன் முடியாது?”

“ஏன் முடியாதுன்னா? எனக்கு பீ பீ வந்ததுனால அந்த பரிதாபத்தைக் கொண்டு எல்லாம் நிறுத்த முடியாது புரிஞ்சதா! அதுவுமில்லாம பீ பீ யோட நிற்காம இன்னும் இன்னும் வந்துட்டா? நீ போயிடு, வேற கல்யாணம் பண்ணிக்கோ!” என,

முன் வந்து நின்றவள் “இதுக்கு மேல ஒன்னும் வராது புரிஞ்சதா!” என்று குருவை மிரட்டியவள், “போயிடுன்னா அந்த வார்த்தையோட நின்னுக்கணும்! வேற கல்யாணம் பண்ணிக்கோ எல்லாம் சொல்லக் கூடாது!” என்று அவனிடம் முறைத்து சிலுப்பிக் கொண்டு நின்றாள்.

“போடி! என்னோடையும் இருக்க மாட்ட! வேற கல்யாணமும் பண்ணிக்க மாட்டியா?” என,

“ஆமாம்! போடா!” என்று சொல்லி, ஹால் போய் சோபாவில் படுத்துக் கொண்டாள். ஆனால் அவனின் வாழ்க்கையில் வேறு பெண் இல்லை என்பது அப்படி ஒரு ஆசுவசத்தைக் கொடுத்தது. மனதில் ஒரு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தப் போறியா என்ற கேள்வி ஞாபகம் வர, சிரிப்பு பீறிட்டது. மனம் ரெக்கை கட்டித் தான் பறந்தது.

“அவ போயிட்டான்னு நீ என்னோட இருந்துடு சொல்ல முடியாது இல்லையா?” என்று குரு சொன்னதை நினைத்தவள், “ரொம்ப நல்லவன்டா நீ! ஆனா இவ்வளவு நல்லவனா இருக்கணும்னு அவசியமில்லை!” என்று தோன்ற, இனிமையாக உணர்ந்தாள்.     

குருவும் நாளையை மீட்டிங்கிற்கு தேவையானதை முன்பே செய்திருந்தாலும், சரி பார்த்து விடலாம் என்று லேப்பை ஆன் செய்ய,

அதை பார்த்தவள் இனிமை எல்லாம் குறைய “என்ன பண்ற நீ?” என்று மீண்டும் வந்தவள், “முதல்ல இதை மூடி வெச்சிட்டு ஒழுங்கா தூங்கு!” என,

வாய் வார்த்தையாக அரசி சொல்லாவிட்டாலும், தன்னை விட்டுப் போகமாட்டாள் என்று உணர்ந்தவன், ஏற்கனவே நிறைய வாக்குவாதங்கள் என்று புரிந்து, மீண்டும் வார்த்தையாடாமல் மூடி வைத்தவன், “இவ்வளவு அக்கறை காட்டாத, அப்புறம் நீ தான் வேணும்னு மனசு நினைக்கும்!” என,

அதற்கு பதில் சொல்லாமல் “மாத்திரை வாங்கினோமே, சாப்பிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“இல்லை!” என்று குரு எழுந்து மாத்திரை எடுக்க, ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்தாள். இவள் திருந்தவே மாட்டாள் என்று தோன்ற, அது தந்த இதத்தில் “போய்ப் படு!” என்றான்.

என்னவோ அரசிக்குப் போக மனதில்லாமல் குருவின் அருகாமை வேண்டும் என்று தோன்ற, “அங்க வீட்ல ஒரே ரூம்ல தானே தூங்கினோம். இங்கயும் தூங்கலாம், நான் கீழப் படுக்கறேன்!” என,

“ப்ச்! அது ஆகாது! படுக்கறதுன்னா இங்க படுத்தாப் படு!” என்று படுக்கையைக் காட்டியவன், “இல்லை, வெளில படு!” என,

“எனக்கு இன்னைக்கு அக்கா விஷேஷதுல நின்னு நின்னு கால் வலிக்குது. அங்க சோபால கால் குறுக்கி படுக்க முடியலை!”  

“அரசி! இங்க படு ப்ளீஸ்!” என்று கெஞ்சலாகப் பேசி படுக்கையைக் காட்டினான்.

தயங்கி தயங்கி அவள் படுக்க, ஏதும் பேசாமல் வெளியே சென்று லைட் அணைத்து வந்தவன், கதவை மூட!

“ஏன் கதவை மூடறீங்க? திறந்து தானே இருக்கும்!”

“அது நீ வெளில இருப்பேன்னு கதவை திறந்து வைப்பேன், மூடினா தானே ஏ சீ போட முடியும். இன்னைக்காவது போடுவோம்!” என்று கதவை மூடி ஏ சீ போடவும், பேசாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.

குரு பக்கத்தில் படுக்கும் அரவம் கேட்டும் கண் திறக்கவில்லை. நெஞ்சு துடிக்கும் ஓசை அவளுக்கே தெரிந்தது. எதற்கு இவ்வளவு பதட்டம் என்று அவளுக்கேப் புரியவில்லை. குரு எந்த வகையிலுமே தொந்தரவு செய்ய மாட்டான், இத்தனை நாட்களாக அவனோடு தானே இருக்கின்றாள். ஆனாலும் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

மெதுவாக கண்களைத் திறந்து பார்க்க, சற்று தூரத்தில் குரு அவளின் முகம் பார்த்துப் படுத்திருந்தான்.

இவள் கண்களைத் திறந்ததும் “எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்க!” என அவன் கேட்க,

“கால் வலிக்குது!” என்றாள் சம்மந்தமில்லாமல்.

எழுந்து அமர்ந்தவன், “எங்க வலிக்குது” என, “குதிகாலையும் கெண்டைக் காலையும் காட்டினாள். கால் நிஜமாகவே வலித்தது தான். ஆனால் அவளின் பதட்டம் அதனைக் கொண்டு அல்ல, “ஏன்?” என்று தெரியவில்லை.

“நான் பிடிச்சி விடறேன், வலி குறையும், எங்கம்மாக்கு சின்னப் பையன்ல நைட் டெய்லி பிடிச்சு விடுவேன்!” என குரு காலைப் பிடிக்கப் போக,

“வேண்டாம்! வேண்டாம்!” என்று பதட்டமாகக் காலை இழுத்தாள், அவளின் பதட்டத்தைப் பார்த்து புன்னகைத்தவன் “அரசி, நான் உன்னை படுத்தின பாட்டுக்கு உன்னை என் கால்ல விழ வைக்கிறேன்னு நினைச்சிருக்க வேண்டாம். அப்படி நினைக்கலைன்னா நினைச்சிக்கோ!” என்று வலுக்கட்டாயமாக அவளின் குதிகாலை பிடித்து இதமாய் அழுத்த,

“ஐயோ! அப்போ எங்கடா படுத்தின! இப்போ தான் படுத்தற!” என்று நினைத்தவள், இறுக்கமாய் கண் மூடிக் கொண்டாள். குருவின் சூடான கைகள் அரசியின் கால் ஜில்லிபிற்கு பதமாய் அழுத்த, ஒரு புது சுகம் உடல் முழுவதும் படர, அரசி தவித்துப் போனாள்.

அவன் விட்டேனா என்று புடவையும் சற்று மேல் தள்ளி கெண்டைக் கால்களையும் அழுத்த, உடல் நடுக்கமே எடுத்து விட்டது அரசிக்கு. வேண்டும்! வேண்டும்! போல ஒரு உணர்வு, தாள முடியாமல் எழுந்து அமர்ந்தவள், “போதும்!” என்று சற்று கறாராக சொல்ல,

“ஏன் வலி அதிகமாகுதா?” என்றவனிடம், அவனைப் பரிதாபமாகப் பார்த்தவள் “ஆம்!” என்று தலையாட்ட, “சரி படு!” என்றான்.

“ஷ், பா! விட்டானே!” என்று தோன்றி வேகமாக மறு புறம் திரும்பி படுத்துக் கொண்ட போதும், “இவனை யாரு என்னைத் தொட சொன்னா?” என்று தான் தோன்றியது. உடலில் பல ரசாயன மாற்றங்கள். உறங்குவதற்குள் பெரும் பாடு பட்டுப் போனாள். அரசியின் இந்தத் தடுமாற்றங்கள் குருவிற்கு புரியவில்லை.

நிஜமாகவே நிறைய வலி போல என தான் நினைத்தான். காலையில் அரசி விழிக்கும் போதே குரு தயாராகி இருந்தவன், “நான் கிளம்பறேன்!” என, “என்ன சாப்பிட்டீங்க? லஞ்ச் என்ன?” என்று வேகமாக எழ,

“ஹேய் ஈசி, காஃபி குடிச்சிட்டேன், தோசை சுட்டு சாப்பிட்டேன். லஞ்ச் க்ளையன்ட்ஸ் கூட, வர லேட்டானா ஃபோன் பண்றேன்!” என்று கிளம்பினான.

இன்று க்ளையன்ட்ஸ் மீட்டிங் என்பதால் எப்போதும் இருப்பதை விட இன்னும் நன்றாக உடுத்தி, டை எல்லாம் கட்டி இருக்க, குருபிரசாத்தின் தோற்றம் அரசியை வசீகரித்தது. அவனையேப் பார்த்து இருந்தவள், அவன் கதவை நெருங்கும் சமயம் “மாத்திரை எடுத்துக்கிட்டீங்களா” என,

“மறந்துட்டேன்!” என்று அதை எடுக்கப் போனவன், “இப்படியே என்னை பார்த்துப் பார்த்து கவனி, அப்புறம் உன்னை விடவே மாட்டேன்” என்று சொல்லி ரூம் போக,

“அம்மா! நேத்து ராத்திரியே ஒரு வழியாகிட்டேன்! இதுல விடமாட்டேன்னா என்ன பண்ணுவான்?” என முனுமுனுத்தாள். ஹாலில் மாத்திரை இருப்பதை உணர்ந்து வெளியே வந்த குருவின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழ, அவனின் முகத்தில் புன்னகை. அதைக் கேட்காதவன் போல உள்ளே சென்று “அரசி, மாத்திரைக் காணோம்!” என,

“இங்க இருக்கு!” என்று அவள் குரல் கொடுக்க, வந்தவன், அதை வாங்கிக் கொண்டு, வெளி வாசல் நெருங்கும் சமயம் திரும்பிப் பார்க்க, அரசியும் அவனைப் பார்த்து நின்றிருக்க, “இங்கே வா!” என்று தலையசைத்தான்.

“என்னவோ?” என்று அருகில் வரவும், அவளின் முன் நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்கி “தேங்க்ஸ்!” என்றவன்,

அரசி எதற்கு என்று கேட்கும் முன்னரே, அவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட, குருவின் அருகாமை, அவன் வாசனை எல்லாம் ஒரு மயக்கத்தை கொடுத்தது. அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்க பெரும் பாடகிப் போனது.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவளை, கன்னத்தில் செல்லமாக தட்டி அவன் செல்ல, குரு சென்ற பிறகு “எதுக்கு தேங்க்ஸ் சொன்னான்?” என்று அரசி மண்டையை உடைத்துக் கொண்டாள்.          

 

Advertisement