Advertisement
அத்தியாயம் பதிமூன்று:
அன்றைய இரவு மட்டுமே அந்தத் தடுமாற்றம் குருப்ரசாதிடம்! அடுத்த நாள் தேறிக் கொண்டான். காலையில் அரசி எழுந்தவுடன் “குட்மார்னிங்!” என்று புன்னகையோடு அவளை எதிர்கொண்டவன், “சாரி!” என்றான். குரு அதைச் சொன்ன போது அமர்ந்து லேப்பில் ஏதோ செய்து கொண்டிருக்க,
அவன் சொன்னதை விட்டு “எப்போ எழுந்தீங்க?” என்றவளிடம், “தூங்கவேயில்லை அப்புறம் எப்படி முழிப்பேன்?” என்றான்.
அரசி கவலையாகப் பார்த்தவள், “ரெண்டு நாளா தூங்கலை! அது உடம்பைக் கெடுக்கும்!” என்று சொல்ல,
“ப்ளீஸ்! இவ்வளவு அக்கறை என் மேலக் காட்டாத! வேற ஒரு பொண்ணைக் காதலிச்சாலும், அப்புறம் நீ தான் வேணும்னு என் மனசு சொல்லும், அதனால தள்ளியே நிற்போம்!” என்றான் சீரியசாக.
“என்ன சொல்ல வருகின்றான் இவன்” என்று பார்த்தவளிடம், “ரொம்ப சுயநலவாதியா, ரொம்பக் கெட்டவனா, மாறிக்கிட்டே வர்றேன், அதனால என்கிட்டே இருந்து தள்ளியே நில்லு!” என்றான் திரும்ப.
“எப்போ இவனை நான் உரசிக்கிட்டு நிக்கறேன். என்னைத் தள்ளி நிற்கச் சொல்றான்!” என்று தோன்ற, “என்னவோ போடி அரசி, ஒன்னுமே புரியலை உலகத்திலே” என மெதுவாக முனகிக் கொண்டாள். அவளின் முக பாவனைகளைத் தீவிரமாகப் பார்த்து இருந்தான்.
அந்தப் பார்வை“வேற ஒரு பொண்ணையும் பார்க்கிறான், உன்னையும் பார்க்கிறான், அவன் சொல்ற மாதிரி தள்ளி நில்லுடி அரசி!” என மனதினில் நினைக்க வைத்தது.
ஆம்! எப்போதும் நெருக்கம் இருவருக்கும் இல்லை என்ற போதும் இன்னும் தள்ளி நிற்க ஆரம்பித்தனர், ஆறு மாதங்கள் இப்படியே நகர்ந்தது. சனி, ஞாயிறு பொன்னேரி வந்து விடுவர். மற்ற நாட்கள் சென்னை வாசம். திருமணத்தின் போது இருந்த ஒரு பார்வை குருவிடம் இல்லை என்று அரசி உணர்ந்தாள்.
ஆம்! அப்போது அவளை வேண்டாம் என்ற பார்வைப் பார்த்தவன், இப்போது வேண்டும் என்ற பார்வைப் பார்த்தான். அரசி பாராத போது அவளை அதிகம் பார்த்தான். அப்பா தங்கைகளிடம் திரும்ப சகஜமாகப் பேச ஆரம்பித்தாலும், பேச்சுக்களைக் குறைத்துக் கொண்டான். அவர்களிடம் மட்டுமல்ல எல்லோரிடமுமே.
அவன் காதலித்த நினைவுகள் எல்லாம் அவனுள் இல்லவே இல்லை மறந்தே போயிருந்தான்! அரசி மறக்க வைத்திருந்தாள்!
மனதில் ஒரு பெரிய வெற்றிடம்! அது அரசியைக் கொண்டு தான்! ஆனால் அரசியை நெருங்க முயலவில்லை. வெகுவாகத் தள்ளி நிற்க முயன்றான் என்று அரசிக்கும் புரிந்தது. எப்போதும் முகத்தில் ஒரு இறுக்கம் கூட. ஆனால் அரசியிடம் திரும்ப வம்பு வளர்க்கவேயில்லை. சேர்ந்து இருப்போமா பிரிவோமா என்ற எந்தப் பேச்சும் இல்லை.
அரசிக்கும் ஆன்லைனில் வீட்டில் இருந்து செய்வது போல ஒரு வேலையையும் அறிமுகப் படுத்தி இருந்தான். அதனால் செய்ய ஒரு வேலையும் இல்லாமல் இருந்த அரசி, சமையல், பிறகு வேலை, பிறகு அங்கே பிளாட்டில் ஒரு நான்கைந்து பேருடன் சிநேகிதம் செய்து அரட்டை என்று பொழுதுகள் கழிய, சமாளித்துக் கொண்டாள்.
எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவேயில்லை. இருக்கும் பொழுதில் மனதை அமைதியுடன் வைத்துக் கொண்டாள். பல சமையங்களில் “திரும்ப ஒரு வாக் போகலாமா நாம பீச்சுக்கு” என்று கேட்க மனம் வெகுவாக ஆசைப்படும், அவன் தள்ளி நில் என்று சொல்லிவிட்டான், தள்ளியும் நிற்கின்றான். இப்போது தானாகக் கேட்க மனம் தயங்கியது.
குருபிரசாத் அதிகம் பேசாவிட்டாலும், இவளும் தள்ளி நிற்க முயன்றாலும், குரு வீட்டில் இருக்கும் சமயம் எல்லாம் அரசியின் பார்வை வட்டத்தில் தான் இருப்பான்.
“இவன் வேற யாரையாவது காதலிக்காம இருந்திருக்கலாம் தானே!” என்று சமீபமாக தோன்ற ஆரம்பித்தது. கூடவே “ஆமாம், இவன் காதலி அந்த டாலி என்ன ஆனா? இவன் ஏன் நம்மோடயே இருக்கான். திரும்ப எதைப் பத்தியும் பேசலை!” என்றும் தோன்றியது.
கலையரசிக்கு ஒன்பது மாதம் ஆக வளைக்காப்பு வைத்தனர். ஐந்து வருடங்களுக்குப் பிறகு கலையரசி கர்ப்பமாகி இருக்க மிகவும் விமரிசையாக அர்த்தனாரி அதைச் செய்தார். பெரிய மண்டபத்தில் உறவுகள் கூடி இருக்க நடுநாயகமாக கலையரசி அமரவைக்கப் பட்டு நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.
அக்காவைப் பார்ப்பது, வந்த விருந்தினர்களைப் பார்ப்பது என, தமிழரசி ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தாள். அரசி தன்னை அன்று கவனமாக அலங்கரித்துக் கொண்டிருக்க, குருபிரசாத்தின் பார்வை அவளைச் சுற்றித் தான் வட்டமிட்டது. ஆம்! எப்போதும் அவளின் முகத்தில் ஒரு பௌடரை கூடப் பார்க்க முடியாது, ஒரு பொட்டு இருக்கும் அவ்வளவே! அதுவும் மிகவும் சிறியதாக இருக்கும், தலையை அப்படியே பின்னிக் கொள்வாள், ஒரு பின் குத்தி ஏதாவது ஸ்டைல் செய்வதோ இல்லை போனி டெயில் போடுவதோ எதுவேமே அதுவரை குரு பார்த்தது இல்லை.
ஒரு நைட்டி போட்டுக் கூடப் பார்த்திருக்க மாட்டான், அதை போட மாட்டாள். எப்போதும் புடவை மட்டுமே உடை. ஒரு முறை கேட்டும் இருக்கின்றான். “எங்கப்பாக்கு வேற போட்டா பிடிக்காது, அப்புறம் எங்களுக்கும் அது பழகிடுச்சு, இப்போ எனக்கு அது பிடிக்கக் கூட செய்து, சோ அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டுடேன்”
ஒரு முறை உடை நலுங்கி பார்த்திருக்கின்றான். அவள் அங்கு வந்த புதிதில். அதன் பிறகு எப்போதும் நீட்டாக பின் செய்து இருப்பாள், உறங்கும் போது போர்வை கூடக் கலையாது.
இப்படி இருந்த அரசியை, அலங்காரம் செய்து, கண்ணுக்கு மையிட்டு, நகைகள் அணிந்து பார்க்கும் போது, அரசியாகத் தான் தெரிந்தாள். கண்களில் நிரப்பிக் கொண்டான்.
ஜோதியும் புனிதாவும் அவளின் அண்ணியோடே சுற்றிக் கொண்டு அவள் சொல்லும் வேலைகளை செய்து, இல்லை அவளோடு வெறுமனே நின்று இருந்தனர்.
அரசியைப் பார்க்கும் போது தங்கைகளும் பார்வையில் பட்டனர். ஜோதியும் படிப்பை அடுத்த மாதம் முடிக்க இருக்க, அவளுக்கு திருமணம் செய்து விடலாமா என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.
இந்த யோசனைகளோடே இருந்தான். அரசி அவனிடம் வந்தவள், “வாங்க! அக்கா நம்மளோட ஃபோட்டோ எடுக்கணும் சொல்றா!” என,
எதுவும் பேசாமல் எழுந்து அவளுடன் நடந்தான். “கொஞ்சம் சிரிச்ச மாதிரி முகத்தை வெச்சா என்ன? எதுக்கு எப்பவும் இவ்வளவு சீரியஸா வைப்பீங்க” என முனகிக் கொண்டே நடந்தாள். குரு பதிலே சொல்லாமல் அரசியுடன் நடக்க, அவர்கள் சேர்ந்து நடந்து வரும் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருக்க, “அண்ணா! அப்படியே இரு!” என்று வந்த புனிதா அவர்களை செல்லில் படம் பிடித்தவள், “அண்ணா, கொஞ்சம் சிரியேன்!” என,
முகத்தை சிரிப்பது போல இழுத்து வைத்தாலும், என்னவோ அதில் குறைய “அண்ணா! இந்தச் சிரிப்பு நல்லாவே இல்லை, ரொம்ப சோகமா இருக்கு, கொஞ்சம் நல்லா சிரி!” என,
“ஏய் லூசு, நீ ஃபோட்டோ எடுக்க வேண்டாம், போ!” என்று அவளைக் கடித்து நகர, “இப்போ எதுக்கு அவளைத் திட்டுறீங்க!” என்று அரசி கிளம்ப,
“இப்படியே திரும்பி வெளில போயிடுவேன்!” என்றான் அரசியிடமும் கோபமாக, குரு கோபப்பட்டு நிறைய நாட்கள் ஆகிவிட்டது. எதற்கு இவ்வளவு கோபம் என்று நினைத்த போதும் அதன் பிறகு அரசி எதுவும் பேசவில்லை.
கலையரசியுடன் நின்றுப் புகைப் படம் எடுத்து, அவளை மனையில் இருந்து எழுப்பிய பெரியவர்கள், “அரசி நீ உட்காரு! உனக்கும் ஆலம் சுத்தலாம்! சீக்கிரம் உனக்கும் இந்த மாதிரி வளைக்காப்பு நடக்கணும்!” என்று அவளின் அத்தை சொல்ல,
“வேண்டாம் அத்தை!” என்று மறுத்து, அந்த இடத்தை விட்டு நகர எத்தனிக்க,
“அரசி, உட்காரு! என்ன இது சிறுபிள்ளைத்தனம்!” என்று பூமா அதட்ட, அரசி வேறு வழியில்லாமல் அமர, “நீங்களும் வாங்க தம்பி” என்று குருவையும் அழைக்க, வேறு வழியில்லாமல் அவனும் வந்தான். இருவரையும் அமர வைத்து நலங்கு வைத்தனர்.
குருபிரசாத்திற்கு இன்னும் எல்லோரையும் ஏமாற்றுவது போல ஒரு உணர்வு, நடக்காத ஒன்றை பிடித்து ஏன் தொங்க வேண்டும், ஆனாலும் இது நிஜமாகி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனம் வெகுவாக ஆசைப்பட்டு ஏங்கவும் செய்தது.
மாலையில் உறவுகள் எல்லாம் சென்று விட, அரசியின் வீட்டில் தான் குருவும் அரசியும் அவன் தங்கைகள் அப்பா என்று எல்லோரும் இருந்தனர். பெண்கள் உள்ளே இருக்க, ஆண்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, “ஜோதிக்கும் கல்யாண வயசாகிடுச்சு மாப்பிள்ளை பார்க்கலாமா?” என்ற அர்த்தனாரி, “நம்ம விஸ்வம் டாக்டருக்கு கூடப் பொண்ணு பார்க்கறாங்க! ஜோதி ஜாதகத்தை கொடுக்கலாமா!” என்றார்.
“டாக்டர் மாப்பிள்ளையா? நிறைய எதிர்பார்த்தா மச்சான்..” என்று நாதன் சொல்ல, “எதிர்பார்ப்பாங்க தான்! நாம நம்ம என்ன செய்வோமோ சொல்லலாம்! அவங்களுக்குப் பிடிச்சா சம்மதிக்கட்டும், நம்ம பொண்ணு நல்லா இருக்கு தானுங்களே!” என்றார். ஆம் ஜோதி நன்றாக இருப்பாள், கூடவே அந்த வயதுக்குரிய ஒரு பரிமாணம் அவளை மிகவும் அழகுறக் காட்டியது.
“விஸ்வம்! அது யாரு?” என்று குரு கேட்க, “அதுதான் நம்ம டாக்டர் அன்னைக்கு நம்ம வீட்டுக்குக் கூட சின்னப் பொண்ணுக்கு உடம்பு சரியில்லாதப்போ வந்தானே, நம்ம பங்காளி மகன்!”
சுத்தமாக குருவிற்கு விஸ்வத்தின் முகம் ஞாபகம் இல்லை, “சரியா ஞாபகம் வரலை” என, “வீட்டுக்குப் போற வழில தான் அவன் கிளினிக், சும்மா ஒரு எட்டுப் பார்த்துட்டு போங்க! அப்புறம் பேசிக்கலாம்!” என்றார் அர்த்தனாரி.
குருவிற்கு பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை “சரி” என்று ஒப்ப்புக்குத் தலையசைத்தான்.
சிறிது நேரத்தில் வீட்டினர் கிளம்பிவிட, இரவு உணவை முடித்து தான் கிளம்ப வேண்டும் என்று அர்த்தனாரி சொல்லிவிட, இவர்கள் உண்டு கிளம்ப, வழியில் விஸ்வத்தின் கிளினிக் வர, “அப்பா! உங்களுக்கு காட்டிட்டு கூட்டிப் போகச் சொன்னார்!” என்றாள்.
ஒரு வேலையையும் அர்த்தனாரி மறப்பதில்லை என்று தான் தோன்றியது. அவருக்காக காரை நிறுத்தி குரு அரசியுடன் உள்ளே செல்ல, அங்கு ஒன்றிரண்டு பேர் டாக்டரைப் பார்க்க காத்திருக்க, அவர்கள் போகட்டும் செல்லலாம் என்று அமர்ந்தனர். அங்கு இருந்த நர்ஸ் பெண்மணி “யாரு?” என்று கேட்க, டாக்டரின் உறவினர்கள் என்றால் முடிந்து விட்டது, ஆனால் அரசி “டாக்டரை காட்டனும் இவருக்கு!” என்று சொல்ல,
“ஓஹ், அப்படியா!” என்றவர், உடனே பீ பீ பார்க்கும் கருவி எடுத்து வந்து “ம், கையை நீட்டுங்க!” என்றார் குருவைப் பார்த்து. அரசிக்கு சிரிப்பு வந்து விட “ம்ம்ம், காட்டுங்க! காட்டுங்க!” என்றாள் விளையாட்டுப் போல. அரசியின் முகத்தில் இருந்த சிரிப்பில் குரு கை நீட்ட, அந்தப் பெண்மணி செக் செய்ய, அவர் செக் செய்யும் போதே பேஷன்ட் சென்று விட, “நீங்க போங்க!” என்று அவர்களை அனுப்பினார்.
விஸ்வம் இவர்களை பார்த்தும் “அரசி, என்ன இங்க?” என்று சொல்லும் போதே, உள்ளே வந்த அந்தப் பெண்மணி “சார்! இவருக்கு பீ பீ அதிகமா இருக்கு!” என குருவும் அரசியும் விழித்தனர்.
“பீ பீ பார்த்தீங்களா?” என்றான் விஸ்வம், “ஆமாங்க!” என, “நாங்க உங்களைப் பார்க்கணும் சொன்னோம்! சொந்தம்னு சொல்லலை! அதனால அவங்க பீ பீ பார்த்தாங்க!” என்றாள் அரசி.
ஆனாலும் என்ன பீ பீ யா என்று அவளின் மனது படபடவென்று அடித்துக் கொண்டது. “நீங்க பார்க்கறீங்களா அண்ணா?” என்றாள்.
அவளின் முகத்தில் கவலையைப் பார்த்த விஸ்வம், “இவங்க சில சமயம் தப்பா கூடப் பார்ப்பாங்க!” என்று சொல்லி அவனும் பார்க்க மிகவும் அதிகமாகத் தான் இருந்தது.
“முன்னமே இருக்கா?” என்றான் விஸ்வம்.
“இல்லை, ஆனா செக் பண்ணிப் பார்த்ததும் இல்லை” என்று பதில் சொன்ன குருவிடம்”, “என்ன வயசு உங்களுக்கு?” என்று விஸ்வம் கேட்டான்.
“இருபத்தி ஒன்பது!” என “எதுக்கும் ஒரு ஈ சி ஜி எடுத்துடலாம்!” என்று ஈ சீ ஜி எடுக்க, மிகவும் சிறிய அளவில் சில மாற்றங்கள் அதில்.
“பெருசா ஒண்ணுமில்லைன்னு சொல்லலாம். ஆனா அது ஒரு அம்பது வயசுல இருக்குறவங்க வந்திருந்தா சொல்லலாம். இவருக்கு முப்பது வயசுல இது அதிகம்” என்ற விஸ்வம், “நிறைய ஸ்ட்ரெஸ் பண்ணிக்கறீங்களோ?” என,
“தூங்கவே மாட்டாங்க!” என்றாள் அரசி, சொல்லும் போது சத்தமே வரவில்லை. குருவுமே இதைக் கேட்டு அதிர்ந்து இருந்தான். அவனுமே எதிர்பார்க்கவில்லை.
“இப்படி நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்கக் கூடாது. இப்போ இருக்குற நிறைய ஐ டி மக்கள் இந்த மாதிரி அந்த அந்த பணிக்கான நேரத்தை மிஸ் பண்றாங்க. அதுவே உடலை நிறைக் கெடுக்குது. நிறைய பேருக்கு ஹார்ட் அட்டாக். நம்ம உடலும் ஒரு மெஷின் தாங்க. அப்போ அப்போ ஆஃப் பண்ணனும் இல்லை சூடாகிடும், ரிப்பேர் ஆகிடும். தூக்கம் மனுஷனுக்கு ரொம்ப முக்கியமான விஷயம். அது சரியா இல்லாத போது உடம்பு நிச்சயம் கெடும். எதுக்கும் ஒரு ட்ரெட்மில் டெஸ்ட், எகோ ஸ்கேன் பண்ணிடலாம்” என்றவன், “நாளைக்கு வந்துடுங்க!” என,
“இல்லை டாக்டர்! நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் யு எஸ் ல இருந்து எங்க கிளையண்ட்ஸ் வர்றாங்க. என்னால ஸ்கிப் பண்ண முடியாது. ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க, அவங்க போனதும் பண்ணிக்கலாம்!” என்றான்.
“சரி!” என்ற விஸ்வம் அப்போதைக்கு மாத்திரைகள் எழுத, வாங்கிக் கொண்டவன் எழ, அரசி அப்போதும் அப்படியே அமர்ந்திருந்தாள். “போகலாம், அரசி! என்று குரு தோள் தொட, எழுந்தவள், “அப்பாக்கிட்ட சொல்லிடாதீங்க!” என்று நிற்க,
“சொல்ல மாட்டேன்!” என்று விஸ்வம் சொல்லவும் தான் வெளியே வந்தனர்.
ஒரு மாதிரி அதிர்ச்சியில் இருவருமே இருந்தனர். பார்க்க மிகவும் திட காத்திரமான இளைஞன் குருபிரசாத். தனக்கு பீ பீ என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.
இதற்கு அவனின் வாழ்க்கை மிகவும் நெறி முறைகளைக் கொண்டது. தண்ணி, தம், பெண்கள் என்று எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. உலக நாடுகளை சுற்றி வந்தாலும், இதை எல்லாம் மிகவும் எளிதாக பழகும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும், அவனின் கவனம் அந்தப் புறம் திரும்பியதே இல்லை.
அவனின் கார்பரேட் கலாச்சாரத்தில் வீக்கென்ட் என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. ரெஸ்ட் எடுக்க மட்டுமல்ல, அதன் பார்ட்டி கலாச்சாரதிற்கும், கூடவே லிக்கர்ளுக்கும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள் சில பேர் கூட ஸ்ட்ரெஸ் ரிலீவர்ஸ் என்று கூல் பீர் என்று சொல்லிக் கொண்டு சர்வ சாதாரணமாக குடிப்பர்.
ஆனால் நான் எதுவுமே செய்தது இல்லையே? எனக்கா இப்படி?
குரு தன் இதயதிற்குக் கொடுத்த அழுத்தம், உறக்கமின்மை, ஓய்வு எடுக்காத பணி, எல்லாம் சேர்ந்து இந்த நிலைமைக்கு கொண்டு விட்டது. அதையும் விட அதை அவன் கணிக்கவேயில்லை. அவனுக்கு எந்த மாற்றங்களும் உடலில் தெரியவில்லை.
அங்கே வீட்டில் சொல்லி நேரே சென்னை வந்து விட்டனர். அரசி கார் நின்ற உணர்வு கூட இல்லாமல் காரில் இருந்து இறங்காமல் அப்படியே அமர்ந்து இருந்தாள். வரும் வழி முழுவதும் யோசனை, ஒற்றை வார்த்தை பேசவில்லை.
“இறங்கு அரசி!” என குரு சொல்ல,
“நான் உங்களுக்கு ரொம்ப டென்ஷன் குடுக்கறேனா? நம்ம பிரிஞ்சிடலாம். நான் உங்களைப் பிரியாததுனால நீங்க உங்க காதலியோட சேர முடியாததுனால உங்களுக்கு உடம்பு கெடுதா? டைவர்ஸ் வர லேட் ஆகும்னா, நான் வேணா எனக்கு ஒரு அப்ஜக்ஷனும் இல்லை நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கங்க, திரும்ப உடம்பை இன்னும் மோசமாக்கிக்காதீங்க, நான் ஏதாவது சொல்லி எங்கம்மா வீட்டுக்கு போயிடறேன்” என்றாள் அவனைப் பார்த்தபடி. அவனை எதோ பெரிய இடரில் இருந்து காத்து சரி செய்வது போல பேசினாள்.
பல சமயங்களில் குரு உணர்ந்திருகின்றான், அரசி தனக்காக மட்டுமே அவளுக்கு பிடித்தமில்லாத சில விஷயங்களை செய்கின்றாள் என்று, இப்போது பேசுவது அதையும் மீறிய ஒன்றாகத் தான் தோன்றியது.
காலம் காலமாக வரும் பெண்களின் அடிமைத்தனம் கொடுக்கும் எண்ணம் அல்ல, அதையும் மீறிய அவர்களின் தாய்மை குணம் கொடுக்கும் எண்ணமாகத் தோன்றியது.
அரசியை இன்னும் இன்னும் பிடித்தது.
“எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தப் போறியா?” என்றான் அவளைப் பார்த்து சிறு புன்னகையுடன்.
அரசி அவனை முறைத்துப் பார்க்க, “ஆங்! இப்போ ஓகே! எதுக்கு ஜக்கம்மா உனக்கு இவ்வளவு கலக்கம், உனக்கு அந்த லுக் செட் ஆகலை, இந்த லுக் ஓகே!” என்றான் புன்னகையுடன்.
கையில் என்ன கிடைக்கிறது அவன் மேல் வீச என்று அரசிப் பார்க்க, “வா! வீட்டுக்குப் போயிடலாம்! அப்புறம் எதுல வேணா அடி!” என்றான்.