Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு:

கார் பயணம் முழுவதுமே திரும்ப யோசனைக்குப் போய்விட்டால் அரசி, “நேத்தைக்கு என்னடான்னு டிரஸ் விலகினது கூடத் தெரியாம அவன் முன்னாடி நிக்கற, இன்னைக்கு என்னடான்னா டபிள் மீனிங்ல பேசற, என்ன தான் நினைப்பாங்க உன்னைப் பத்தி” மரியாதையும் மரியாதையின்மையும் மாறி மாறி வந்தது.  

“ரொம்ப வாய் விடாத, உன் மானம் மரியாதையை நீயே காத்துல பறக்க விட்டுக்காத, விளையாட்டில்ல இந்த விஷயம்!” என்று ஸ்ட்ரிக்ட் ஆபிசராக அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு நிமிர்ந்த போது, அவர்கள் பொன்னேரியை நெருங்கியே இருந்தனர்.

நாற்பத்தி ஐந்து நிமிடத்தில் வந்து விட்டான், என்ன ஒரு வேகம்! அதைக் கூட அரசி கவனிக்கவில்லை! “அதுக்குள்ள வந்துடீங்க, எதுக்கு ஃபாஸ்டா வந்தீங்க!”  

“கூட தானே வந்த, அப்போ சொல்லாம இப்போ சொன்னா?”

“அதுவா! கண்ணைத் திறந்து தூங்கினேன், இனிமே இப்படி வேகம் கூடாது சரியா!” என்றாள் பொறுமையாக.

“ம்!” என்று அவன் ஒப்புக்குத் தலையசைத்தான். ஊரினுள் நுழையவும் அதுவரை இருந்த விளையாட்டுத்தனம் மறைந்தது. “இந்த ஊரினில் கௌரவமாக வாழ்ந்து விட்டு, இனி வாழா வெட்டி!” என்ற பெயரோடு வாழப் போகிறேனோ நினைவேக் கசந்தது. நிமிடத்தில் முற்றிலும் மாறிப் போனாள்.

குருபிரசாத் அவனின் வீட்டினில் காரை நிறுத்த, கார் நிற்கும் சப்தம் கேட்டு வெளியே வந்த ஜோதி இவர்களை எதிர்பார்க்கவில்லை, “அண்ணா!” என்று வேகமாக வந்தாள்.

“எப்படியிருக்காங்க அப்பாவும் புனிதாவும்?” என்றபடி காரை விட்டு குரு இறங்க, அரசியிடம் ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. அவளும் இறங்கினாள்.

 காரை நிறுத்தி உள் சென்றிருந்தான், இவள் வருகின்றாளா என்று பார்க்கவேயில்லை, சென்று விட்டான். திருமண நாள் அன்று அப்பாவைப் பார்க்கப் போகும் போதும் இப்படித் தானே செய்தான்! அது ஞாபகம் வர கோபம் வந்தது.

அரசி கேட்டின் உள் வர, அதைப் பார்த்த ஜோதியும் அண்ணன் பின் சென்றுவிட்டாள், அரசிக்கு அது இன்னும் கோபத்தைக் கொடுத்தது. “மொத்த குடும்பத்துக்கும் மரியாதை தெரியாது போல!” என நினைத்தவள், வீட்டின் உள் செல்லவேயில்லை. வீட்டின் உள் நுழைய இருக்கும் படியில் அமர்ந்து கொண்டாள்.

குரு சென்று முதலில் புனிதாவைத் தான் பார்த்தான். அண்ணனைப் பார்த்ததும் ஒரே அழுகை அவள். “எதுக்கு அழற புனி?” என, “உனக்கு எங்க மேல எல்லாம் கோபமா? பேசவேயில்லை! நீ பேசலை, அப்பாவும் எப்பவும் கோபமா இருக்கார்?” என்று தேம்பினாள்.

“அச்சோ இது என்ன? அப்படி எல்லாம் இல்லை. கோபம் இருந்தது ஆனா குறைஞ்சிடுச்சு!” என்று சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஜோதியும் அங்கே தான் இருந்தாள். குருவின் அப்பா அவரின் ரூமில் படுத்திருந்தார் குரு வந்ததே அவருக்குத் தெரியாது. அதனால் கால் மணி நேரமாக அரசி வெளியில் அமர்ந்திருப்பது அவருக்கு தெரியவில்லை.

புனிதாவிற்கு காய்ச்சலும் அதிகமாகத் தான் இருந்தது. “மாத்திரை குடுத்தேன் அண்ணா, குறையலை!” என்று ஜோதி சொல்ல, “கிளினிக் தான் எதுவும் இருக்காது, ஹாஸ்பிடல்ல யாராவது டாக்டர் இருப்பாங்க! எழுந்துரு! நைட்டி மாத்தி சுரிதார் போடு!” என அவளைக் கிளம்பச் சொல்லி வெளியே வந்த போது தான் அரசி எங்கே என நினைத்து தேட, அவள் வெளியே படியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து,

“அரசி! ஏன் இங்க உட்கார்ந்து இருக்க?” என்று வேகமாக வந்தான்.  

“யார் என்னை உள்ளக் கூப்பிட்டீங்க?” என்றவளிடம், “யார் கூப்பிடணும், இது உன் வீடு!” என்று குரு சொல்லவும்,

“எப்படி என் வீடு ஆகும்! நாம தான் பிரியப் போறோமே! அப்போ விடப் போறீங்கன்னு தானே இப்போ எங்கே போனாலும் நான் வர்றனா இல்லையான்னு கூடப் பார்க்காம விட்டுட்டு போறீங்க. கல்யாணம் ஆனா நாள் கூட அப்படித்தான் செஞ்சீங்க. உங்கப்பாவை ஹாஸ்பிடல்ல பார்க்கப் போகும் போது நான் தடுக்கி விழப் போகும் போதும் நீங்க பார்த்துட்டு நின்னீங்க. எவனோ வந்து என் கைபிடிச்சு நிக்க வெச்சான்!” என்று சொல்லும் போது அன்றைய நினைவில் கண்கள் கலங்கிவிட,

“அச்சோ அரசி என்ன இது?” என்று அருகில் அமர்ந்து கொண்டான். தங்கை அழுது முடித்திருக்க இப்போது இவள்! “நான் இப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. அன்னைக்கு நான் இருந்த மன நிலையில எப்படி ஓடி வந்து பிடிச்சிருப்பேன் சொல்லு!”

“அதுவுமில்லாம நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க! ஜோதிக்கு அப்போ பத்து வயசு, புனிதாக்கு எட்டு! அப்போ இருந்து எங்க சொந்தக்காரங்க கூட அதிகம் வரமாட்டாங்க.  அதனால் எங்களுக்கு அவ்வளவா எல்லோர்கிட்டயும் எப்படி நடந்துக்கணும் கூடத் தெரியாது! இப்போ வசதி வந்தபிறகு நாங்க யாரையும் சார்ந்து இருக்க வேண்டியது இல்லைன்னு தெரிந்ஜ பிறகு வர்றாங்க. அவங்களைத் தப்பு சொல்ல முடியாது! ஆனா எங்களால யாரோடையும் ஒட்ட முடியலை! சோ, அதிகம் நல்லது கெட்டது தெரியாது! நீ சொல்லிக் குடு கத்துக்குறோம்!” என்றான்.   

அப்ப்போதும் அரசி மனம் இறங்கவில்லை. “சரி! அப்போ தான் தெரியாது. இப்போ தான் ஃபிரன்ட் ஆகிட்டோமே. உங்க பிரண்ட்ஸ் வந்தா இப்படித் தான் செய்வீங்காளா! பிறகும் விட்டுட்டுத் தானே போனீங்க!”

“சாரி! அப்படிக் கூட நின்னு கூட்டுட்டு வரணும்னு எல்லாம் எனக்குத் தோணலை!” என்று திரும்பத் திரும்ப சாரி கேட்டப் போதும் அரசி முகத்தைத் தூக்கி அமர்ந்திருக்க,

“ப்ளீஸ்! தப்பு தான்! நாம அப்புறம் சண்டை போடுவோம்! புனிதாக்கு ரொம்பக் காய்ச்சல்!” எனவும், சண்டையை விட்டு உள்ளே வந்தாள், “நான் அப்பாவைப் பார்த்துட்டு வர்றேன்!” என்று அவன் போக,

புனிதாவிற்கு எழ முடியாத அளவு சோர்வு, காய்ச்சல், ஜோதி கைப்பிடித்துத் தான் ரூமை விட்டு வெளியே அழைத்து வரவும், அதுவரை இருந்த தயக்கத்தை விட்டு அரசி சென்று புனிதாவைத் தொட்டுப் பார்க்க, உடல் அனலடித்தது.

உடனே அரசி அர்த்தனாரிக்கு அழைத்து, “அப்பா! நாங்க இங்க ஊருக்கு வந்திருக்கோம், புனிதாக்கு ரொம்ப காய்ச்சல்!” என்று சொல்லிவிட்டாள். குரு அப்பாவைப் பார்த்து வெளியே வந்து, “அப்பாக்கு குடிக்க ஏதாவது குடு ஜோதி! அவரும் ரொம்ப சோர்வா தெரியறார்!” என்றான்.

இவர்கள் வீட்டின் உள்ளே கூடக் கூப்பிடவில்லை என்று கோபத்தில் வெளியில் இருந்தது அரசிக்கு மறந்தே போனது. வேகமாகச் சமையலறை சென்றாள். நாதன் வந்து, “நீங்க வந்ததே தெரியாது, வாம்மா!” என்று சொல்ல,

அதற்குள் அர்த்தனாரியும் பூமாவும் வந்து இருந்தனர். அவர் வந்ததும் நிலைமை அப்படியே மாறிவிட்டது. “நான் ராஜா மாப்பிள்ளையை நம்ம விஸ்வத்தை அழைச்சிட்டு வரச் சொல்லியிருக்கேன்!” என்றார்.

“விஸ்வம் அண்ணா இங்க வந்துட்டாங்களா?” எனக் கேட்ட அரசிடம், “ம்ம்! ரெண்டு நாள் முன்னாடி தான் வந்தான்!” என்றார் அர்த்தனாரி. விஸ்வம் பங்காளி முறையில் இருப்பவரின் மகன். எம் பி பி எஸ் முடித்து, எம் டீ சண்டிகரில் படித்துக் கொண்டிருந்தவன், அப்போதுதான் முடித்து வந்திருந்தான்!

“அப்பா! இங்க வீட்டுக்கு வரச் சொன்னா தப்பா எடுத்துக்கப் போறாங்க! நாம அவங்க வீட்டுக்குப் போவோம்!” என்று அரசி சொல்ல,

“எதுக்கு தப்பா எடுக்கறான்? எல்லாம் நான் பார்த்துக்கறேன்! அப்பா சொன்னா அப்படியே ஒத்துக்கணும், மறுத்துப் பேசக் கூடாது. ஏதாவது காரணம் இருக்கும்!” என, தன் தந்தையைப் பார்த்து அவர் அறியாமல் அரசி பழிப்பு காட்ட, மொத்த வீடும் பார்த்தது அவரைத் தவிர, பூமா பத்திரம் என்று அரசியைப் பார்த்து மிரட்ட,

“போ! போ!” என்று அவரையும் திட்டிப் போனாள். 

எப்போதும் தனி ஆட்களாக நிற்கும் அவர்களின் வீட்டில் அத்தனை ஜனம். சிறிது நேரத்தில் அந்த விஸ்வம் வந்து விட, அவன் பார்த்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்து, எதற்கும் ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்துவிடலாம் என்றான்.

“இப்போவே போகலாம்!” என்றவரிடம், “அப்பா இன்னக்கு சண்டே! யாரும் இருக்க மாட்டாங்க! நாளைக்கு காலையில போகலாம்!” என்று அரசி சொல்ல,

“நாளைக்கு எடுத்தா பரவாயில்லையா?” என்று அர்த்தனாரி கேட்டு, விஸ்வம் “சரி” என, பிறகு தான் அமர்ந்தார். எல்லாம் மௌனப் பார்வையாளராக குரு பார்த்திருந்தான். எப்போதும் தனியாளாக ஓடும் அவனுடன் இத்தனை பேர்கள். மனதிற்கு இதமாக இருந்தது. 

அர்த்தனாரி மகளிடம் மீண்டும் ஒரு அதட்டல், “இத்தனைப் பேர் இருக்கோம், சாப்பிட என்ன செஞ்ச?” என,

“இதெல்லாம் ஆகாது!” என்று அம்மாவைப் பார்த்து அரசி முறைக்க, அவர் சமையலறை நோக்கிப் போக, நாதன் ஜோதியைப் பார்க்க, அவளும் போக, வேறு வழியில்லாமல் அரசி மெதுவாக அம்மாவின் பின் சென்றாள்.

“சும்மா அப்பா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கார், அப்புறம் கல்யாணமும் வேணாம், ஒன்னும் வேணாம்னு வீட்டுக்கு வந்துடுவேன்!” என்று அரசி சொல்ல,

“என்ன பேச்சு பேசற நீ?” என்று அவளின் வாய் மேல் பூமா பட்டென்று ஒரு அடி வைத்து விட, அதை எதிர்பாராத அரசிக்கு கண்கள் எல்லாம் கலங்கி விட்டது.

அப்போதும் அவர் அமைதியாகவில்லை, “சாமி முன்னாடி இன்னைக்கு தூங்கறதுக்குள்ள பத்து தோப்புக்கரணம் போடற புரிஞ்சதா?” என மிரட்ட வேற செய்ய,

“அப்படித்தான் சொல்வேன்! என்ன பண்ணுவ?” என்று அரசி நிற்க, அரசியின் பின் என்ன செய்கிறார்கள், வீட்டில் எதுவும் இருக்கின்றதா இல்லையா என்று பார்க்க வந்த குரு இதையெல்லாம் பார்த்து தான் இருந்தான்.

“ஷ், அரசி! என்ன இது? பேசாம இரு! எல்லோரும் வெளில இருக்காங்க!” என்று குரு சமாதானம் செய்ய, “அப்போ அவங்க போன பிறகு சண்டை போடறேன்!” என்று அரசி அங்கே இருந்து வெளியே போகப் போக, “அரசி!” என்று அவளின் கை பிடித்து அசைய விடாமல் நிறுத்தினான்.

ஜோதி இவர்களின் சண்டையை சுவாரசியமாய் பார்த்து நின்றாள். “அம்மாவும் பெண்ணும் இப்படித்தான் சண்டை இடுவார்களோ?” என நினைத்து! பூமா வேறு “மாப்பிள்ளையா இருக்கவும் நீ பண்ற கலாட்டாக்கு எல்லாம் அமைதியா இருக்கார்! வேற ஒருத்தங்களா இருந்தா…” என்று முடிக்காமல் நிறுத்த,

“என்ன பண்ணுவாங்க?” என்று அரசி பேச்சை முடித்து நிற்க,

“அரசி ப்ளீஸ்!” என்று மெதுவாக சொன்னவன், அவளைப் பிடித்திருந்த கைகளுக்கும் ஒரு அழுத்தம் கொடுத்து விடுவிக்க, அதன் பிறகு தான் வாய் பேசாமல் நின்றாள்.

“வா! வா! இதைச் செய்!” என்று மீண்டும் பூமா சொல்ல, “அத்தை! அவளை விடுங்க! ஜோதிக் கிட்ட சொல்லுங்க! இல்லை எல்லோரும் போங்க நான் என்னனு பார்க்கிறேன்! யாரும் செய்ய வேண்டாம்” என்றவன்,

கூடவே “அது என்ன அடிக்கற பழக்கம், பேசக் கூடாதுன்னு சொன்னா பேசக் கூடாது, அவ்வளவு தான்! அதுக்கு அவளைப் பழக்கப் படுத்துங்க. அதை அடிச்செல்லாம் நிறுத்த முடியாது. அடிக்கறது தப்பு! கல்யாணத்திளையும் இப்படித்தான் அடி வாங்கி உட்கார்ந்தா!” என்றான் கோபமாக.   கோபத்திலும் மரியாதைக் குறைவு எல்லாம் இல்லை! ஒரு உரிமை தான் இருந்தது. 

அதன் பின் பூமா பேசுவாரா என்ன? வாயே திறக்கவில்லை! “எவ்வளவு நல்ல மாப்பிள்ளை, இவளுக்கு எவ்வளவு பரிஞ்சு பேசறார். இவ எப்படி விட்டுட்டு வந்துடுவேன்னு அச்சாணியமா பேசறா, இவளை..!” என்று மனதினில் ஏகத்திற்கும் திட்டி முடித்தார்.

ஒரு வழியாய் டாக்டரை அனுப்பி, அரசியின் பெற்றோர்களும் கிளம்பினர். குரு அரசிடம் “இன்னைக்கு இங்க தங்கிட்டு நாளைக்கு போகலாம்!” என்று சொல்லியிருந்தான்.

“நீ அங்க உங்க அம்மா வீட்டுக்குப் போறியா?” என்று கேட்க, அம்மாவோடு நடந்த சண்டையில் “நான் ஒன்னும் போகலை!” என்று அரசி முறுக்கி நின்றாள்.

“எங்கே உறங்குவாள், என்னோடா? இவள் என்ன புரியாமல் பேசுகின்றாள்!” என்று தான் குருவிற்கு தோன்றியது.

அரசிக்கு அந்த ஞாபகம் இருந்ததாகவே தெரியவில்லை. எல்லோரும் போன பிறகு ஜோதி சமையல் அறையை ஒதுங்கச் செய்ய, திருமணம் நிச்சயம் ஆகும் வரை அரசி எல்லாம் சமையல் அறைப் பக்கம் சென்றது கூட இல்லை, அர்த்தனாரி நிறையக் கட்டுபாடுகள் விதித்தாலும், நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் நெறிமுறைப் படுத்தினாலும், சமையல் கற்றுக் கொள், பெண்களுக்கு சமையல் தான் என்ற வார்த்தையை எல்லாம் சொல்லியதில்லை. பூமாவும் இவள் சென்றாள் “நீ போ கண்ணு, நான் பார்த்துக்கறேன்!” என்று விடுவார். ஜோதியைப் பார்க்க பாவமாக இருந்தது.   

“நீ போ ஜோதி, நான் கழுவறேன்!” என்று அரசி நிற்க, “இல்லை, பரவாயில்லை அண்ணி!” என்று ஜோதி சொல்ல, “அப்போ ரெண்டு பேரும் செய்யலாம்!” என்று அரசியும் அவளும் செய்ய எட்டிப் பார்த்த குரு ஹாலில் அமர்ந்து கொண்டான்.

எல்லோரும் உறங்கப் போக, “எனக்கு எந்த ரூம் இல்லை ஹாலா” என்று அரசி வந்து நிற்க, “அங்க நாம ரெண்டு பேர்! நீ எங்க வேணா தூங்கலாம். ஆனா இங்கே அது முடியாது. நம்ம ரூம்ல தான் தூங்கணும்!” என்று குரு சொல்லி “வா” என்று மாடியில் இருந்த அவனின் ரூம் சென்றான்.

பின்னோடு அரசி செல்ல, படுக்கையைத் தட்டி, பெட்ஷீட் எல்லாம் எடுத்துப் போட்டான் குரு, அரசி கை கட்டி வேடிக்கை பார்த்து நின்றாள். அந்த வேலையை செய்து கொண்டே, “உங்கம்மா வீட்டுக்கு வந்துடுவேன்னு நீ சொன்னதுக்கே வாய் மேல அடிக்கறாங்க. என்னால தான் நாம பிரியப் போறோம்னு உங்கப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவாரோ” என்றான்.

“உங்களாலன்னு எப்படித் தெரியும்! நான் என்னால தான் பிரியறோம். எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லிக்குவேன்!”

“ஏன் அப்படிச் சொல்லணும்? நீ எதுக்கு என்னைக் காப்பாத்தி விடணும்,

“அதுதான் நம்ம ஃபிரன்ட் ஆகிட்டோமே!” என்றவளைப் பார்த்து, “ஃபிரன்ட் ஆகிட்டோமோ? என்னவாகிட்டோமா? பொய் சொல்லிப் பிரியக் கூடாது! உண்மை சொல்ற மாதிரி இருந்தா பிரிஞ்சிப் போ! இல்லை வேண்டாம்!” என்றான் கறாராக.

“நீங்க என்ன லூசா? அப்பா அவ்வளவு தான் உங்களை உண்டு இல்லை ஆக்கிடுவார்!”

“ஆமாம்! நீ சொல்றதும் சரிதான்! எனக்கு பயமா இருக்கு! அதனால நம்ம இப்படியே இருந்திடலாமா?” என்று அவளைப் பார்த்தான்.

“பயமா? இவனுக்கா? என்னிடம் காமெடி செய்கின்றனா” என்று தான் அரசிக்கு தோன்றியது.

“ஆம்! உண்மையில் குருப்ரசாதிற்கு பயமாகத் தான் இருந்தது. அது அரசியின் அப்பாவைக் குறித்து அல்ல, எதிர்காலத்தை நினைத்து. “இப்படியே இருந்துடலாமா?” என்று கேட்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை அது தானாக வந்தது.

ஆனாலும் மனதில் ஒரு பக்கம் பெரிதாக உதைத்து.. “ஒரு பெண் வேண்டாம் என்றால் இவளிடம் வந்து நிற்பாயா?”  

ஆனால் இன்னொரு பக்கம் மனது சொன்னது “நான் கீழோ, மேலோ எனக்கு அரசி வேண்டும்! அவளோடானா வாழ்க்கை வேண்டும்! இப்படி என்னையும் என் வீட்டையும் யார் கவனிப்பர்! எனக்கு இவள் வேண்டும்!” என்று பார்த்திருந்தான்.

     அரசி அவனை என்ன பேசுகின்றான் என்று புரியாமல் பார்த்து, “நானா பிரியணும் சொன்னேன்! நீங்க தான் சொன்னிங்க!”

“அப்போ நாம சேர்ந்து இருக்கலாம் சொன்னா இருந்துடுவியா?” என

“இருக்க மாட்டேன்! என்னை வேண்டாம்னு சொன்ன யாரும் எனக்கு வேண்டாம்!”

“இப்போ வேணும்னு சொன்னா?” என்றவனிடம், “இப்போ சொல்றதெல்லாம் செல்லாது!” என்று நிற்க,

“ஓகே! பிரிஞ்சிடலாம்! ஆனா தப்பு என்மேலன்னு உண்மை சொன்னா மட்டும் தான் பிரிய ஒத்துக்குவேன்!” என்று சொல்லி, “நீ அந்தப் பக்கம் படு! நான் இந்தப் பக்கம் படுக்கறேன்! என்று சொல்லிப் படுத்து விட,

“என்னடா இது? சொன்னதெல்லாம் இவன்! இப்போது என்னவோ நான் சொல்வது போல சொல்கின்றான்!” என்று நினைத்தவள், “ஐயோ இவனுடன் ஒரே படுக்கையிலா?”, “நான் கீழப் படுக்கறேன்!” என போர்வை எடுத்து விரிக்க,

“ஏன்? நான் உன்னை என்ன பண்ணிடுவேன்?” என்று கோபப்பட்டான் குருப்ரசாத். தன்னுடைய கோபங்கள் அர்த்தமற்றது, நியாயமற்றது என்று தெரியும்.

“நீங்க தான் என்னை உங்க ரூம்குள்ள விடலை, வேற ரூம்க்கு பாத்ரூம் போறதுக்கு கூடப் பெர்மிஷன் வாங்கிப் போனேன், சமையல் கட்டு கூட  நீங்க என்னை முறைச்சு பார்க்கும் போதும், நானா சொரணை கெட்டு வந்து நின்னேன்!” என்று அரசியும் பதிலுக்கு கோபப்பட,

அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாகி விட்டான். ஆனால் உறக்கம் மீண்டும் அணுகவில்லை. வெள்ளியும் சரியாக உறக்கமில்லை, சனிக்கிழமை உறங்கவேயிலை, ஞாயிறும் உறக்கத்தைத் தொலைத்து, தொடர்ந்து மூன்றாவது நாளாக உறங்காமல் இருந்தான்.

“போனாப் போகுதுன்னு ஃபிரன்ட் ஆனா, இவன் ரொம்பப் பண்றான். இதுக்கு பேசாம அம்மவோடவே போய் இருக்கலாம்!” என்று நினைத்துப் “போடா!” என்று சத்தமாகச் சொல்லி உறங்க ஆரம்பித்தாள்.       

அவள் “போடா!” என்று சொல்லிய ஒரு தொனியில், இவள் எப்போ “இருடா!” என்று சொல்லுவாள் என்று மனம் ஏங்கியது. தெரியும் அதற்கு அவனுக்குத் தகுதி இல்லை என்று. ஆனால் அது தானே மனம்! அரசியின் தோள் சாய விரும்பியது. அரசியின் செயல்கள் முழுவதும் குருவைத் தேற்றும் செயல்களாகிப் போக, அது அவனை அரசியின் புறம் திருப்பி, அரசி வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நினைக்க வைத்தது. 

அரசியின் சுயநலமற்ற செயல், குருபிரசாத்தை சுயநலவாதி ஆகியது! அது தப்பென்று புரிந்த போதும் அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை.   

 

Advertisement