Advertisement

அத்தியாயம் பதினொன்று :

அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது! அரசியும் உறங்கவில்லை! குருபிரசாத்தும் உறங்கவில்லை! எதோ பகல் போல அந்த இரவைக் கடத்தினர்.  

அம்மா கொண்டு வந்த துணிகளை அரசி அடுக்கி வைக்க, குருபிரசாத் லேப்பில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். இருவரிடமும் ஒரு பேச்சுமில்லை.

இருவர் மனமுமே போராடிக் கொண்டிருந்தது எதிர்காலத்தை நினைத்து!

அவ்வப்போது குருபிரசாத்தை தொட்டு மீண்டன தமிழரசியின் விழிகள்! “எதற்கு இவனை நீ காப்பாற்றினாய், சில நாட்களில் முகத்திரையைக் கிழித்திருக்க வேண்டாமா? அவனே உன் அப்பாவிடம் சொல்கின்றேன் என்று நின்ற போது, வேண்டாம், வேண்டாம் என நின்றாய். அவனையும் அவனின் குடும்பத்தையும் ஏதாவது செய்து விடுவார் என ஏன் தடுத்தாய்! இப்போது எதை நோக்கி நீ சென்று கொண்டிருகின்றாய்”  

“உனக்கு எதற்கு அவன் மேல் இத்தனை கரிசனம்! என்ன பெரிய புருஷன்னு எல்லோரும் இப்படி விட்டுக் குடுத்துப் போறீங்க என்று உன்னைச் சுற்றியுள்ள பெண்களைப் பார்த்து கேட்பவள் நீ. அவர்களாவது தம்பதிகளாய் வாழ்பவர்கள். பிரியப் போகின்றோம் என்று ஆதூரத்துடன் ஆரம்பிக்கும் வாழ்க்கைக்கு நீ இப்போது கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?”

“ஒரு வாரம் வாழ்ந்த இந்த வாழ்க்கையே எத்தனை நாட்கள் ஆனது போன்ற உணர்வை ஏன் கொடுகின்றது. அவன் முகம் பார்த்து நடக்கின்றாய்! அவன் துயர் கலைய முயல்கின்றாய்!”

“நீயும் தாலி என்னும் வேலிக்குள் மாட்டிக் கொண்டாயா???”    

“காதலாகி! கசிந்துருகி! கண்ணீர்மல்கி! என்ற வார்த்தைகள் இங்கு எங்குமே வராத போதும், ஒரு சொந்தத்தை நீ உணர்கின்றாய் என்றால் மிகையாகாது!”

“ஏன் உணர வேண்டும்? அடுத்த பெண்ணைக் காதலிப்பவன் என்று தெரிந்தும் ஏன் உணர வேண்டும்? எத்துணை முற்போக்கு சிந்தனைகளை நீ கொண்டிருந்தாலும், ஏமாற்றும் கணவர்களிடம் பெண்கள் இருக்கக் கூடாது, பிரிந்து இன்னும் நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், உன்னால் உன் வாழ்க்கை என்று வரும் போது அவன் உன்னை வேண்டாம் என்று சொல்லும் போதும் ஏன் இந்தக் கரிசனம் அவன் மீது!” 

“காலம் காலமாய் இருக்கும் பெண் அடிமைக்குள் நீயும் சிக்கிக் கொண்டாயா?”  

“அல்ல! அல்ல! இது அடிமைத்தனம் அல்ல! என்னுடைய பிறப்பு, என்னுடைய வளர்ப்பு, என்னுடைய சிந்தனை, காலம் காலமாய் வரும் நமது மரபு வழிக் கலாசாரம் தான், என்னை இப்படி நினைக்க வைக்கின்றது” என்று அவளின் மனதிற்கு அவளே பதில் கொடுத்தாள்.      

“உன் பெட்ரூம் என உன் அம்மாவும் அக்காவும் கூட வரத் தயங்கும் இடம். அப்போது அவர்களின் மனதில் உங்கள் உறவு குறித்து என்ன ஓடுகின்றது. நீங்கள் கணவன் மனைவியாய் வாழத் துவங்கி விடீர்கள் என தானே! அவர்களே இப்படி நினைக்கும் போது ஊரும் உலகமும் என்ன நினைக்கும்!”

“இவனை விட்டு நீ விலகும் பட்சத்தில், நீ இனி இவனின் முன்னாள் மனைவியாக நினைக்கப் படுவாய்!” நினைக்க நினைக்க நெஞ்சம் காந்தியது. சோர்வாக உணர்ந்தாள்.

“முன்னாள் மனைவி! இரண்டாவது வாழ்க்கை! இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உனக்கு இருக்கின்றதா?” நிச்சயம் முடியாது என்று தோன்றியது.  

“குருபிரசாத் எப்படியோ? ஆனால் தனக்கு இது மட்டும் தான் வாழ்க்கை என்று தோன்றியது. இது காதலால் அல்ல, நமது சமூகத் தளைகளால், நமது கட்டுப்பாடுகளால் என்று அரசியின் மனம் தெளிவாக அறிந்தது”      

போராட்டம்! போராட்டம்! போராட்டம்!   

தலையைக் கொண்டு போய் சுவரில் முட்ட ஒரு ஆத்திரம் கிளற, அமைதி படுத்த முடியாமல் தடுமாறிப் போனாள்.  வாழ்க்கையில் அரசி சந்தித்த மற்ற மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த பெரும் துயர சம்பவங்களை கொண்டு வந்தாள். அதற்கு இது ஒன்றுமில்லை என்று சொல்லி அமைதி படுத்திக் கொண்டாள்.

இரவு இரண்டு மணிக்கு பசித்தது என அரசி சமையலறையை தஞ்சம் புக, குரு பின்னோடு வந்து “எனக்கும் பசிக்குது! என்ன இருக்கு?” என நின்றான்.

அத்துணை மணித்துளிகளாய் மனதினில் பெரும் போராட்டத்தை சந்தித்து இருந்தவள், குரு கேட்கவும் அந்தப் போராட்டங்களின் ஞாபகமின்றி, என்ன இருக்கின்றது என்று வேகமாகப் பார்த்தாள். குழந்தை பசித்தால் என்ன இருக்கின்றது என்று பார்க்கும் அம்மாவின் வேகம் தான் அங்கே! 

அரசியின் அம்மா நிறைய திண்பண்டங்கள் செய்து வந்திருக்க, அதை அவளும் எடுத்து, குருவிற்கும் கொடுத்து, கூடவே காஃபியும் வைக்கப் போக, “நிறைய காஃபி சாப்பிடறேன், பாலே குடு!” என,

அவளுக்கும் அவனுக்கும் பால் விட, இருவரும் எடுத்து ஹால் வந்தனர். ஏன் தூங்கவில்லை என்று குருபிரசாத்தும் கேட்கவில்லை! அரசியும் கேட்கவில்லை!  திரும்பவும் எந்தப் பேச்சும் இல்லை.

கொட்ட கொட்ட அதையும் இதையும் தொட்டு அரசி விழித்திருக்க, காலை ஆறு மணி ஆக, பால் வாங்க கிளம்பியவனிடம், ஒரு வாக் போகலாமா என்று அரசி கேட்க,

“போகலாமே!” என்று அழைத்துக் கிளம்பினான்.    

அவர்கள் அபார்ட்மெண்டில் இருந்து இறங்க, செக்யுரிட்டி, “வணக்கம் மேடம்!” என்று பெரிய வணக்கம் வைத்தான். “நம்மளுக்கு இவன் எப்பவும் இப்படி வெச்சது இல்லையே!” என்று பார்க்க, அதன் பிறகு “குட் மார்னிங் சார்!” என்றான்.

குரு தலையசைப்போடு நடக்க, அரசி அங்கேயே பின் தங்கியவள்  செக்யுரிட்டியிடம் “அண்ணா!” என்று பேச ஆரம்பித்து, ஐந்து நிமிடம் கழித்து தான் வந்தாள். சிறிது தூரம் சென்றிருந்த குரு, அங்கே இருந்த ஒரு திட்டில் எம்பி அமர்ந்து அவளுக்காகக் காத்திருக்க, புடவையை குளிருக்கு இதமாய் போர்த்தி, அவனைப் பார்த்தவாரே நடந்து வருபவளை பார்த்திருந்தான்.

வாழ்க்கை இப்படியே இருந்து விடக் கூடாதா என்று மனம் ஏங்கியது! அழகான மனைவி மட்டுமல்ல இனிமையான பெண் அரசி! மனதிற்கு இதம் தரும் பெண்! காலை நேர இனிமை, ஆள் அரவம் குறைந்து இருக்கும் அந்தத் தனிமை! அவளின் நடை, உடை, பாவனை, அரசியாகக் தான் தோற்றம் கொடுத்தது. எந்த இளவயது ஆண்மகனுக்கும்  இருக்கும் கனவுப் பெண்ணாக அவள் நடந்து வர, கை எட்டும் தூரத்தில் இருந்தாலும் கையற்றவனாகிப் போனான் குரு!

காதலிக்காமல் இருந்திருந்தால் வாழ்க்கை வண்ணமயமாய் இருந்திருக்குமோ இவளோடு. ஆனால் காதல்! அதுவாய்த் தானே வந்தது! நானா வா வா என்றேன்!” என்று யோசித்தபடி பார்த்திருந்தான்.

இனி எதுவுமில்லை! மேக்னா இல்லை! ஆம், மேக்னா இல்லை!  

ஆனால் காதல்! அது அப்படியேத் தானே இருக்கின்றது! அவள் போய்விட்டால் அவனின் காதலும் அவளோடு போய்விடுமா என்ன?  

ஆம்! இரு தினங்களுக்கு முன்பே குருவிடம் தெளிவாய்ச் சொல்லி விட்டாள் மேக்னா, “சாரி பிரசாத், இனிமே நம்ம ஒன்னு சேர்றது நடக்காது. இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்ட, இனி நீ டைவர்ஸ் செஞ்சு வந்தாலும் என் அப்பா ஒத்துக்க மாட்டாங்க, அதையும் விட நானும் ஒத்துக்க முடியாது. இது சரி வராது!” என்று தெளிவாகச் சொல்லி,

“நான் இங்க இருந்து எங்க ஊர் சைடு ட்ரான்ஸ்பர் கிடைக்குமா பார்க்கிறேன். உன்னை பார்த்துட்டே என்னால இங்க இருக்க முடியாது. உன்னை நான் இனிமே பார்க்கவும் வேண்டாம்! நாம நம்மளை மறக்க முயற்சி செய்வோம்! கண்டிப்பா கஷ்டம் தான்! இந்த ரெண்டு நாளா முழுசும் அதுதான் யோசிச்சேன்! நம்ம கல்யாணம் நடந்திருந்தா, நாம நம்ம கலாச்சாரங்களை கடக்கணும்! ஆனா இப்போ அதையும் மீறி நீ வேற ஒருத்தியைக் கல்யாணம் செஞ்சவன்ற உணர்வைக் கடக்கறது எனக்கு ரொம்பக் கஷ்டம்!” என்று ஆங்கிலத்தில் தெளிவாகச் சொல்ல.

அவளிடம் போய் திரும்ப “ஐ லவ் யு! என்னை விட்டுப் போய் விடாதே!” என்றா சொல்ல முடியும். அதுவுமல்லாமல் வாழ்க்கையில் அவன் சம்மதமில்லாமல் வலுக்கட்டாயமாக வந்திருந்தாலும், அந்தப் பெண்ணை வேண்டாம் என்று விலக்கி வைத்து, இன்னொரு பெண்ணுடன் சந்தோஷமாய் குடும்பம் நடத்தும் ஒரு மனோபாவம் தனக்கு இல்லை என்பது அவனுக்கே நிச்சயம்.

தனியாளாக காலத்தை தள்ளி விடலாம் என்று நினைத்துக் கொண்டான் குருபிரசாத். பிரிந்தாலும், காதலை உணர்ந்த, காதலை சொன்ன, காதலிக்க செய்த, காதலிக்கப்பட்ட, அந்தக் கணங்கள், உண்மையானது தானே! சேர்ந்தாலும் பிரிந்தாலும் அது என்றுமே மாறாது தானே!

மௌனமாய் மேக்னாவை பார்த்திருந்தான். “சாரி பிரசாத், நான் எங்கப்பாவை மாப்பிள்ளைக் கூட பார்க்க சொல்லிட்டேன்! எனக்கு உன்கிட்ட இருந்து வெளில வரணும்! அது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும்!” என மேக்னா சொல்லும் போது அவளின் குரலில் மிகுந்த கலக்கம் தான். ஆனாலும் அந்த க்ஷணத்தில் அவளின் முடிவு சரியானது போல தான் தோன்றியது!   

“ஆல் தி பெஸ்ட்!” என்று கைகுலுக்கி விடைகொடுத்தான். கொடுத்தவன், முதலில் செய்த வேலை, “டாலி!” என பதிந்து வைத்திருந்த அவளின் எண்ணை மேக்னா என்று மாற்றியது தான்.   

தனியாளாக காலத்தைக் கடக்க நினைத்தானே தவிர அரசியுடன் சேர்ந்து வாழ எல்லாம் நினைக்கவில்லை. மேக்னா வேண்டாம் என்று சொன்ன பிறகு நாம் சேர்ந்து வாழலாம் என்று சொல்வதை விட அரசிக்கு தான் பெரிய அவமானத்தை தேடித் தர முடியாது என்று நினைத்தவன், அந்த எண்ணத்தை மனதில் க்ஷண நேரமும் கொண்டு வர முயலவில்லை. அதே சமயம் மேக்னா சென்றிருந்தாலும் அவனின் காதல் அப்படியே தானே இருக்கின்றது.

எல்லாம் தொலைத்த உணர்வு என்பதை விட, அவன் தொலைந்து போன உணர்வு தான் அதிகமாக தாக்கியது. மனதில் ஒரு பெரிய சோர்வு, இனி வாழக்கையில் என்ன என்பது போல, இந்த இரண்டு நாட்களாக குருவை சற்று ஜீவனோடு வைத்தது, அரசி அவனுடன் பேசும் பேச்சுக்கள் தான்.

குரு தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அரசி இன்னம் மெதுவாக நடந்து வர, அவளின் கண்களில் தெரிந்த பாவனையில் “பார்க்கும் போது ஜக்கம்மா தான்!” என்று தோன்ற பார்த்திருந்தான்.  

அவனருகில் வந்திருந்தவள், “ஹல்லோ பாஸ்! என்னை என்ன இப்படி சைட் அடிக்கறீங்க! உங்க டாலி கிட்ட சொல்லிடுவேன்!” என்று மிரட்ட,

மெல்லிய முறுவல் குருபிரசாத் முகத்தினில்.

எதுவும் பேசாமல் அவளோடு இணைந்து நடக்க, “என்ன பாஸ் நீங்க? அப்பப்போ சைலன்ட் ஆகிடறீங்க! சண்டை போட்டாலும் சைலன்ட் ஆகிடறீங்க! நல்லா பேசினாலும் சைலன்ட் ஆகிடறீங்க!” என,

“எனக்கு பதில் சொல்ல வாராத போது சைலன்ட் ஆகிடுவேன்!” என்றவன், திரும்பப் பேசும் எண்ணம் இல்லாதவனாக ரோடை பார்த்து நடக்க, குருவிற்கு பேசும் ஆர்வம் இல்லாததை புரிந்து, அரசியும் அமைதியாக அவனுடன் நடந்தாள்.

அவர்களுடைய அபார்ட்மென்ட் கடற்கரையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்க, இங்கே சென்னையில் இருந்தால் அடிக்கடி வரும் அந்த இடத்திற்கு வெகு நாட்களுக்குப் அதனை நோக்கி நடையை எட்டிப் போட்டான்.

கடல் தெரிந்தது, அந்தக் காலை நேரக் கடல் காற்றை இருவருமே அனுபவித்தார்கள். கடல் தெரிய மட்டுமே செய்தது, அதன் அருகில் போக இன்னும் ஒரு கிலோமீட்டர் நடக்க இருக்க,

“போவோமா” என்றான் அரசியைப் பார்த்து, “போவோமே!” என்றவள், “ஆனா திரும்ப வரும் போது எனக்கு கால் வலிச்சா?” என்று கேட்க,

“தூக்கிக்கறேன்!” என்று யோசிக்காமல் குரு சொல்ல, “தோடா!” என்றபடி இடுப்பில் கைவைத்து அரசி முறைத்தாள்.

“அப்போ உனக்குக் கால் வலிக்காது தானே!” என்றான் மெல்லிய புன்னகையுடன்.

இப்போது அரசி பதில் பேசவில்லை, முதல் முறையாக என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

அமைதியாக நடக்க ஆரம்பித்தாள். கடலிற்கு சென்று அதன் அலைகளில் கால் நனைத்தாள். குரு தண்ணீர் படாதவாறு மணலில் அமர்ந்து கொண்டான். பின்பு கடலை வெறித்து அமர்ந்திருந்தவனைப் பார்த்தவள், “ஏன் இவன் இப்படி இருக்கின்றான்” என்று குருவைப் பார்த்திருந்தாள்.

சுற்றம் உணராத ஒரு மோன நிலை குருவிற்கு.

மெதுவாக நடந்து வந்து அரசியும் அவனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். வெகு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான். அரசியும் அவனைக் கலைக்க முயலவில்லை. அங்கிருந்த சிலரை வேடிக்கைப் பார்த்து அமர்ந்திருக்க, நடப்பிற்கு வந்தவன், அரசியை எதிரில் அவள் இருந்த இடத்தில் தேட, இல்லை என்றதும் பரபரப்பாக எழ முயன்றான்.

அவனின் அரவத்தில் “என்ன ஆச்சு?” என்று பக்கத்தில் இருந்த அரசி கேட்க,

“ஷப்பா! நீ இங்க இருக்கியா? உன்னைக் காணோம்னு தான் எழுந்தேன்!” என்று அப்படியே திரும்ப அமர்ந்தான்.

“நாங்கல்லாம் அரைமணி நேரமா இங்கத் தான் ஒளிஞ்சிட்டு இருக்கோம்! இவ்வளவு லேட்டா கண்டுபிடிக்கறீங்க!” என்று பாவனையாகச் சொல்ல,

குருபிரசாத்திற்கு சிரிப்பு வந்தது. “செமையா பேசற நீ அரசி!” என்றான் புன்னகையுடன்.

“நான் சேமியா வா பேசறது இருக்கட்டும்” என்று தனக்குத் தானே நக்கல் அடித்துக் கொண்டவள், “நீங்க எந்தக் கப்பல் கவிழ்ந்து போச்சுன்னு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க!”

“கவிழலை! பாதில நின்னுடுச்சு!” என்றான் அதே புன்னகையுடன்.

“அட! யாமிருக்க பயமேன் பாஸ்! நடுக் கடல்னாளும் இறங்கி நான் தள்ளறேன் சொல்லுங்க! எங்க எது நின்னுச்சு?” என

“ஷப்பா! ஜக்கம்மா தான் நீ!” என்றான் வெளிப்படையாக. சொன்ன பிறகு “அச்சோ!” என்ற பாவனையை குருபிரசாத் காட்டவும்,   

“என்னது? நான் ஜக்கம்மாவா?” என்று கத்தியவள், “அரசி! உனக்கு இப்படி ஒரு காம்ப்ளிமென்ட் ஊர் உலகத்துல யாருமே குடுத்தது இல்லை! இவனை!” என்று சொல்லி, கையில் என்ன கிடைக்கிறது தூக்கி வீச என்று தேட,

குரு அதை உணர்ந்தவனாக எழுந்து நகர, அரசி கையில் கிடைத்த மணலை அவன் மேல வீச முயல, குரு மேலே படாதவாறு தள்ளி நின்றான். அதில் நிஜமாகவே சற்று கோபமானவள், எழுந்து அவளும் துரத்த, அவனும் ஓட, புடவையில் இருந்தவள் சற்று தூரத்திலேயே ஓட முடியாமல் அமர்ந்து கொள்ள, முகமும் சுருங்கி விட,

அரசி அமர்ந்த விதத்தைப் பார்த்தவன் அருகில் வந்து, “இப்போ என்ன என் தலைல மண் அள்ளிப் போடணுமா? போடு!” என்று தலையைக் காட்ட,

குருவின் தலையைப் பிடித்து ஆட்ட எழுந்த கைகளை, அவன் தலை முடிவரை கொண்டு சென்று, அது மிகவும் அதிகப்படி என்று தோன்ற கையை கீழே இறக்கியவள், “நான் ஏன் உங்க தலையில மண் அள்ளிப் போடணும்?” என,

“அதுதானே! நீ ஏன் போடணும்! அதெல்லாம் நானே போட்டுக்குவேன்!” என்று குரு தன் கைகளை மணலை அள்ளிப் போடப் போக,

“அச்சோ! என்ன பண்ணறீங்க? வேண்டாம்!” என்று அவனின் கைப் பிடித்து தடுத்தவள், “கீழே போடுங்க!” என்று அதட்ட, போட்டு கையை மண் இல்லாமல் தட்டினான்.

“என்ன பிரச்சனை? ஏதாவது பிரச்சனையா?” என்றாள் சீரியசாக.

“இல்லை! இல்லை!” என்றான் அவசரமாக.

பின்பு இருவரும் வீடு திரும்ப நடக்க ஆரம்பிக்க, “கால் வலிக்குதா?” என்றான் விளையாட்டுப் போல.

“இல்லையே!” என்று அவளும் புன்னகையுடன் சொல்ல, வீடு வந்தனர்.

அந்த நாள் பிறகு இனிமையாகவே சென்றது, மாலையில் “உங்க வீட்டுக்குப் பேசறீங்களா! உங்க சிஸ்டர்ஸ் கிட்ட நானும் பேசறேன், எங்கப்பா என்கிட்டே கேட்காம, அவங்க கிட்டயே உங்க அண்ணி பேசினாளான்னு கேட்பார்!” என்றாள்.

“நான் பேசலை! நீ பேசு!” என்று தன் மொபைலில் இருந்தே ஜோதியின் நம்பருக்கு அழைத்துக் கொடுத்தான்.

“ஹாய் ஜோதி!” என்ற அரசியின் குரல் கேட்கவும், “சொல்லுங்க அண்ணி!” என்றாள் ஜோதி, குரலிலுமே ஒரு சுரத்தில்லை.

“என்ன ஜோதி, டல்லாப் பேசற?” என,

“ஒன்னுமில்லை அண்ணி!” என்று சொல்லும் ஜோதியின் குரல் கலங்கியது போலத் தோற்றமளித்தது.

“சும்மா தான் கூப்பிட்டேன்!” என்று அவளிடம் சில நிமிடங்கள் பேசியவள், “புனிதா கிட்ட கொடு!” என,

“புனிதாக்கு காய்ச்சல் அண்ணி! தூங்கறா!” என்றவளிடம், “என்ன காய்ச்சலா?” என்றாள் அரசி.

“ஆமாம் அண்ணி! ரொம்ப அடிக்குது! இன்னைக்கு ஞாயத்துக்கிழமை, டாக்டர் இல்லை, மெடிக்கல்ல மாத்திரை வாங்கி குடுத்தேன்! என்றாள் சோர்வாக.

“ஏன்? நீ வாங்கிக் குடுத்த, மாமா இல்லையா?”

“தெரியலை! அப்பாவும் காலையில இருந்து ரொம்ப சோர்வா தெரியறார்! படுத்தே இருக்கார்!” என, ஒற்றை ஆளாக ஜோதி பயந்து போயிருக்கின்றாள் என்று புரிந்தது.

குருபிரசாத்திடம் சொல்ல, நேரம் பார்த்தான், அது ஐந்து என்று காட்டவும், “நான் ஊருக்குப் போயிட்டு நைட் வந்துடட்டுமா” என்றான்.

“இல்லையில்லை, நாம ரெண்டு பேரும் போவோம்! நானும் வருவேன்! இங்கத் தனியா பயமா இருக்கும்!” என்று அவளும் கிளம்ப,

கீழே இறங்கும் போதே சொல்லி விட்டாள், “அந்தக் கார் எனக்காக அப்பா வாங்கித் தந்தது, கல்யாணம் நிச்சயம் பண்ணும்போது உங்க வீட்ல கார் கூட இல்லைன்னு நான் சொன்னதுக்கு!” என,

“எதுக்கு இப்போ அதைச் சொல்ற?” என்றான் பதிலுக்கு.

“இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா, நீங்க தனியாப் போகும் போது எப்படியோ போங்க! ஆனா என்னோட வரும் போது கார் எடுக்கணும்! அரசி கொஞ்சம் சொகுசா வளர்ந்துட்டேன்! ப்ளீஸ்!” என்று வணங்குவது போலக் கை குவித்து, பின் வேண்டுவது போல முகத்தை சுருக்கி, கையையும் வேண்டி வைக்க,

“ஷ்! கையை இறக்கு முதல்ல!” என்று கை இறக்கியவன், “வா! படுத்தாதா!” என்று சொல்லி நடக்க,

“என்னது படுக்கறதா? நான் எப்போ சொன்னேன்!” என்று விளையாட்டுப் போல சொன்னவள், அது கொடுக்கும் ரெட்டை அர்த்தத்தை உணர்ந்து “ஷ்!” என்று நாக்கைக் கடித்தாள்.

அரசியின் தலையில் செல்லமாகக் குட்டுவது போல பாவனைக் காட்டி “பேசாம வா!” என்று காரினில் ஏற, அரசியும் அதன் பிறகு வாயை ஜிப் போட்டு தைத்துக் கொண்டாள்.  

 

Advertisement