Advertisement

அத்தியாயம் பத்து :

“எனக்கு உங்களைப் பிடிச்சிடுமோன்னு தப்பா எடுக்கக் கூடாது!” என்ற செய்தியில், “நான் உன் மனைவி என்ற உரிமையை எடுக்க மாட்டேன். நீயும் கணவன் என்ற உரிமையை எடுத்து விடாதே!” என்ற செய்தி இருப்பதாகத் தான் குருபிரசாத்திற்கு தோன்றியது.

முகத்தில் ஒரு புன்னகை உதிக்க, “உனக்குப் பிடிக்காது ஓகே! ஆனா ஒரு வேலை எனக்குப் பிடிச்சதுன்னா” என்று கேட்க,

“அச்சோ! இவ்வளவு கஷ்டமான கேள்வியைக் கேட்டா என்ன பண்ணுவேன்? எனக்கு பதில் தெரியாது! சோ, பாஸ் பண்ணிட்டேன், வேற எந்தப் பொண்ணுக்கிட்டயாவது கேட்டுக்கங்க!” என,

“அம்மா! இவ ஜக்கம்மா தான்!” என நினைத்தவன் சிரிக்க,

“என்ன உங்க மைன்ட் வாய்ஸ்?” என்றவளிடம், “எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கற!” என,

குருவிற்கு பதில் சொல்லாமல் சிரித்தவள், அம்மாவிற்கு அழைத்து, “அம்மா இவங்க என்னை எங்கயோ வெளிய கூட்டிட்டுப் போறாங்களாம் இந்த சண்டே! நான் வேண்டாம் விருந்து இருக்கு சொல்லிடட்டுமா?” என,

“வேணாம் கண்ணு, வேணாம்!” என்று அவசரமாகச் சொன்ன பூமா, நம்ம ஆளுங்க தானே, எங்கேப் போறாங்க! நாம அடுத்த வாரம் விருந்து வெச்சிக்கலாம். நீங்க ப்ளான் பண்ணினபடி போங்க!” என்று சொல்லி கணவனிடம் சொல்ல விரைய,

போனை வைத்துக் கொண்டே, “எப்படி என் ப்ளான்?” என,

குருபிரசாத் பெற்றவர்களின் வாயாலேயே மாற்றச் சொன்ன அவளின் புத்திசாலித்தனத்தை வியந்தாலும், “பொய் சொல்றது தப்பில்லையா?”

“ஹலோ பாஸ், யார்ங்க பொய் சொன்னா, நீங்க என்னை வெளில கூட்டிட்டுப் போங்க, காலையில ஒரு வாக், இந்த ரோட் சுத்தி சரியா! யாரு கிட்ட, நானெல்லாம் பொய் சொல்ல மாட்டேனாக்கும்!” என்றபடி சாப்பிட்ட தட்டை எடுத்து எழுந்து போக,

முகம் முழுக்க புன்னகையோடு குருபிரசாத் பார்த்திருந்தான். மனது சற்று லேசாகியிருக்க,  திரும்ப வந்தவளிடம், “எங்கப்பாகிட்டயும் அப்படியே உங்க வீட்ல சொல்லச் சொல்லிடறியா?”

“ம்ம்!” என்று தலையாட்டி உடனே ஃபோனை எடுத்துப் போய் சொல்லி வந்தவளிடம், “நான் சொல்ற எல்லாம் செய்யற தானே!” என,

“என்ன எல்லாம் செய்யறேன்?” என்றவளிடம்,

“என்னைக் கொஞ்சம் திட்டிடு, நான் கொஞ்சம் நிம்மதியா தூங்குவேன்!” என்றான்.

“ஹய்யோ, தேவுடா! இந்த உலகம் உன்னை நல்லவளா இருக்க விடாதா? அரஸீஈஈஈஈஈ” என்று கத்தி, “போங்க! போங்க! உருப்படியா ஏதாவது வேலை செய்ங்க!” என்று பாவனையாக சொல்லிப் போக,

அன்று உறங்கப் போனவனுக்கு உறக்கம் எளிதாக வந்தது.

சனிக்கிழமை வீட்டில் இருந்தே வேலை செய்தான், அதனால் அவ்வப்போது தமிழரசியிடம் பேச்சுக் கொடுக்க, அவளும் பேச, நேரம் இனிமையாகக் கழிந்தது, அதே சமயம் ஒரு நல்ல தோழமையையும் உணர்ந்தான்.

மதியம் அரசியை அழைத்த கலை, “இன்னைக்கு உன்னைப் பார்க்க வர்றோம் அரசி! உன்னைப் பார்க்கணும் போல இருக்கு! இன்னைக்கு வெளில போறீங்களா? இல்லை நாளைக்கா?” என,

அவளுக்கும் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருந்ததால் குருவைப் பார்த்தபடி பேச, தன்னை அரசி பார்ப்பதை உணர்ந்து “என்ன?” என்றான் புருவம் உயர்த்தி,

“அம்மா! என்னைப் பார்க்க வரட்டுமா கேட்கறாங்க?” என, “வரச்சொல்லு!” என்றான் உடனே.

“நாளைக்கு தான் போறோம்! நீங்க வாங்க!” என்றாள், “எதுக்கு இவ்வளவு தயக்கம், எது வந்தாலும் சந்திச்சு தான் ஆகணும், உன்னைப் பார்க்கணும்னு இருக்காதா!” என்றான்.

“எஸ்! சந்திச்சு தான் ஆகணும்!” என்றாள், அவளின் முகம் தொனி எல்லாம் மாறிவிட்டது.

“என்ன விஷயம் அரசி?” என,

“ஒன்றுமில்லை!” என்று தலையசைத்து சென்று விட்டாள். எப்போதும் ஹாலில் தான் சுற்றிக் கொண்டு இருப்பவள் ரூமில் சென்று அடைந்து கொள்ள,

என்ன விஷயம் என்றே குருபிரசாத்திற்கு புரியவில்லை, “என்ன வென்று கேட்டு விடுவோம்” என நினைத்துக் கதவைத் தள்ளிப் பார்த்தான் கதவும் தாளிடப் பட்டு இருக்க,

“அரசி” என்று கதவை தட்டவும் கதவை திறந்தவள், “என்ன?” என,

“என்ன ஆச்சு? ஏன் ரூம் குள்ள வந்துட்ட, கதவை தாள் எல்லாம் போட்டுட்ட?”

“தூக்கம் வந்துச்சு! அவங்க வர்றதுக்குள்ள தூங்கலாம் வந்தேன், அது ஏதோ ஞாபகத்துல தாள் போட்டுடேன்” என்றாள் அவன் முகம் பாராது.

“அதுதானே!” என்றவனிடம், “எஸ், அது மட்டும் தான்!” என்றாள்.

“சரி, தூங்கு!” என்று சென்று விட, என்ன தான் குருபிரசாத்திற்காக அவனிடம் நன்றாகப் பேசினாலும், பெற்றோர்கள் என்று வரும் போது பயமாக இருந்தது.

பார்த்து பார்த்து செய்கிறார்கள், பிரிந்தால் என்ன நடக்கும்? அப்பா என்ன செய்வார் என்று சொல்ல முடியாது. குரு இப்போது எது வந்தாலும் சந்திச்சு தானே ஆகனும் என்று சொல்ல, அந்த சூழல்களை எல்லாம் எப்படி சந்திக்கப் போகிறோம் என்று சட்டென்று மனதில் வர சோர்வாக உணர்ந்தாள்.

“என் வாழ்க்கை மட்டும் சரியா இல்லாம இருக்கட்டும், இவங்களை என்ன செய்யறேன் பாரு!” என்று சூளுரைத்தவள் தான், ஆனால் இப்போது அப்படிச் செய்ய மனது வரவில்லை, தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தால் அப்பாவும் அம்மாவும் தாங்க மாட்டார் என்று புரிய மனது பதைத்தது.

மாலை நான்கு மணிக்கெல்லாம் அவர்கள் வந்து பெல் அழுத்த, குரு தான் கதவைத் திறந்தான். பூமாவும் கலையரசியும் மட்டும் இருந்தனர்.

“வாங்க!” என்றவன், “நீங்க மட்டுமா வந்தீங்க!” என்றான் சம்பிராதாயமாக,

“இல்லைங்க தம்பி! அரசி அப்பாவும் ராஜா தம்பியும் அங்க கேட்ல நிக்கறாங்க. அந்த செக்யுரிட்டி உள்ள விடமாடேங்கறான், உங்களை கூப்பிடச் சொன்னார்” என,

“விசிட்டர்ஸ்து உள்ள விடமாட்டான்! முன்னமே சொல்லணும்!” என்று அவன் கீழே இறங்கப் போனவன், “அரசி தூங்கறா!” என்று சொல்லிக் கீழே விரைய,

அங்கே வெட்டவா குத்தவா என்று அந்த செக்யூர்ட்டியைப் பார்த்து  அர்த்தனாரி நின்றிருந்தார். “மாப்பிள்ளை உங்க கார்ன்னு சொல்றேன், உள்ள விடமாடேங்கறான்” என்று கோபமாக நிற்க,

“அதுங்க மாமா, இங்க இருக்குறவங்க சொல்லணும். இது மெயின் ஏரியான்றதால சும்மா யாரவது தெரிஞ்சவங்க பேரைச் சொல்லி இங்க நிறுத்திட்டு கடைக்குப் போயிடுவாங்க. அதுதான், அவன் மேல தப்பில்லை” என்று சொல்லியபடியே, “இது என்னோட மாமனார்! எப்போ கார் வந்தாலும் விடுங்க!” என,

“அரசி மேடம் அப்பாங்களா? சார் நீங்க அப்படிச் சொல்லியிருக்க வேண்டாமா சார்? மாமா, மாமான்னா, நான் என்னன்னு நினைப்பேன்?”

“அடப்பாவி! இப்படியா என் மானத்தை வாங்குவான்” என்று செக்யுரிட்டியை முறைத்து பார்த்தான் குருப்ரசாத். அவன் அதைப் பற்றி எல்லாம் கவலைப் பட்டதாக தெரியவில்லை, கையினில் விசில் எடுத்து “இங்க நிறுத்துங்க சார்!” என்று இடம் செய்து கொடுக்கப் போய்விட்டான்.

அவர்கள் நிறுத்தி வர, கூடவே அத்தனை பைகள், ஆளுக்கு கையினில் இரண்டு, “இன்னும் கார்ல இருக்கு! நாங்க இதைக் கொண்டு போய் வெச்சிட்டு வர்றோம்” என,

“குடுங்க! நான் கொண்டு போறேன், நீங்க இருங்க!” என்று குரு சொல்லி அர்த்தனாரி கையினில் இருந்ததை வாங்க, ராஜசேகர் அவனோடு சென்றான்.

மேலே சென்று பையை வைத்துப் பார்க்க, அங்கே அரசியின் அம்மாவும் அக்காவும் அமர்ந்து தான் இருந்தனர், “அரசியை எழுப்புங்க!” என்று சொல்லித் திரும்ப அவனும் ராஜாவும் கீழே இறங்கிவிட, திரும்ப எல்லாப் பைகளையும் ஆளுக்கு ஒன்றாக தூக்கி வந்த போதும் அப்படியே இருந்தனர்.

“ஏன் எழுப்பலையா?” என்றவனிடம், “நீங்களே எழுப்புங்க தம்பி!” என்று சொல்ல,

“இதேதடா!” என்று நினைத்து, அரசி படுத்திருத்த ரூம் சென்றான். யோசித்து யோசித்து உறங்கிவிட்டிருந்தாள்.

“அரசி! அரசி!” என்று மெதுவாக அழைக்க, அவள் அசைவதாகக் காணோம், சத்தமாக அழைக்க முடியாமல் “அரசி” என்று அழைத்துக் கொண்டே அவளின் தோள் தொட்டு அசைக்க, கூப்பிட்டது தான் மெதுவாகக் கூப்பிட்டான், உலுக்கியது சற்று வேகமாக இருக்க,

அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள், புடவை சற்று நலுங்கி விட, பார்வையை அவசரமாக விலக்கி, “உங்க அப்பா அம்மா வந்துட்டாங்க!” என்றான்.

“ஓஹ்” என்று வேகமாக வெளியே போகப் போக, “அரசி!” என்று அவசரமாக அழைக்கவும், “என்ன?” என்று திரும்பிப் பார்த்தவளிடம்,

“உன் டிரஸ்!” எனச் சொல்ல,

தன்னை பார்த்தாள், மாராப்பு வெகுவாக விலகியிருக்க,  “அச்சோ!” என்று திரும்பி சரி படுத்திக் கொண்டு அவன் முகம் பாராமல் சென்றாள். “அம்மா!” என்று ஓடி அணைத்துக் கொண்டாள்.

“வந்து எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா? கும்பகர்ணி, பகல்ல இந்த தூக்கமா?” என்று கலை கடிய,

“நேரம் ஆச்சா? என்னை எழுப்ப வேண்டியதுதானே!”

“ஷ், இன்னும் சின்னப் பொண்ணு மாதிரி பேசக் கூடாது! பெட்ரூம்குள்ள நாங்க வருவோமா?” என்று கலை மெதுவாகத் தான் அரசியிடம் சொன்னால், அந்த சமயம் பார்த்து குருபிரசாத் அந்த இடம் கடக்க.

“ஓஹ்! இதுதான் விஷயமா!” என்று நினைத்த படி குரு கடந்தான்.

“ஏன்? வந்தா என்ன?” என்று அரசி பெரிய குரலில் கேட்க,

“அடியேய் அரசி, கத்தாதடி?” என்று கலை சொல்ல, “ஏன், வந்தா என்ன?” என்று அதையே மெதுவான குரலில் அரசி கேட்க,

குருபிரசாதிற்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடானது. “என்ன ரெண்டு பேரும் வம்பு பேசறீங்க?” என்று பூமா கேட்க,

“மா! இவ என்னை டீ போட்டுப் பேசறா! எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, மரியாதைக் குடுக்கச் சொல்லு!”  

“அரசி! பெரிய மாப்பிள்ளை வந்திருக்கார், வாங்கன்னு சொன்னியா?” என்று அப்பா சொல்லவும், “வாங்க மாமா!” என்று ராஜசேகரனின் புறம் பார்வையைத் திருப்பி சொன்னாள்.

“அன்றே தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க சொன்னார்களே, இன்றும் அப்படியேத் தானே நிற்கின்றாள்” என்று குருபிரசாத் நினைத்து, “அரசி, தண்ணி கொண்டு வா!” என்று சொல்ல,

முகத்தை சுருக்கிக் கொண்டு செல்லும் மகளைப் பார்த்த பெற்றோர்கள், “இன்னும் விளையாட்டுத்தனம் மாப்பிள்ளை!” என,

குருவிற்கு சிரிப்பு தான் வந்தது! “என்ன விளையாட்டுத்தனமா? அரசியா? என்னை சிதைய விடாமல் காத்துக்  கொண்டிருக்கிறாள். மிகவும் பொறுப்பானவள்! இவர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று தான் தோன்றியது.

பதில் எதுவும் பேசாமல் குருவின் முகம் புன்னகையுடன் இருக்க, “மாப்பிள்ளை மகளுக்கு நன்றாக அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் போல” என்று தான் தோன்றியது. மகள் மாப்பிள்ளைக்கு அட்ஜஸ்ட் செய்கிறாள் என்று புரியவேயில்லை.

அரசி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே, “என்னமா இத்தனை பைங்க!” என,  

“உன் துணி” என அம்மா சொல்ல, “என்ன துணியா, துணிமணி சொல்லணும். துணி இருக்கு! மணி எங்க?”  

“அரசி! உன் வாயே குறையாதா?” என்று கலை கடிய, “ஹய்யோ அக்கா! அப்புறம் யாருக்கும் என்னை அரசின்னே தெரியாது” என்று பதில் சொன்னவள்,

“அப்புறம் முதல்ல மாதிரி எல்லாம் என்னை யாரும் அதைச் செய், இதைச் செய், அப்படி நட, இப்படி நடன்னு எல்லாம் ரூல்ஸ் போட முடியாது. எனக்குக் கல்யாணம் ஆகிடிச்சு, ஞாபகம் வெச்சிக்கோ” என்று கெத்தாக அரசி சொல்ல, இப்படியே பேச்சுக்கள் தொடர,

அவர்கள் பேசுவதை ஒரு முறுவலுடன் வேடிக்கைப் பார்த்திருந்தான் குருபிரசாத். அவனாக எதுவும் பேசவில்லை.  அரசியின் பேச்சுக்கள் “ஹப்பா, என்னமா வாய் பேசறா?” என்று தான் தோன்றியது. அவனையறியாமல் அவன் முழு கவனமும் அரசியிடம் மட்டுமே!     

தண்ணீர் கொடுத்ததுடன் சரி! பிறகு எதுவும் கொடுக்காமல் அரசி பேசுவதில் மும்முரமாய் இருக்க, “இவளை என்ன செய்ய? நானா போய் காஃபி போட முடியும்!” என்று நொந்து கொண்டான். அரசி வாய் ஓயாமல் அம்மாவிடமும் அக்காவிடமும் பேசிக் கொண்டிருக்க,

இது வேலைக்காகாது என்று புரிந்தவனாக, அவனே எழுந்து சமையல் அறைப் போய் பாலைக் காய்ச்ச ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து, “உன் வீட்டுக்காரர் சமையல் கட்டுப் போய் இருக்கார்!” என்று கலை எடுத்துக் கொடுக்க, “ஓஹ்! காஃபி போடுவாரா இருக்கும்!” என்று அரசி அப்படியே அமர்ந்திருக்க,

“அப்பாக்கு தெரிஞ்ஜா என்னைத் திட்டுவார் கண்ணு, என்ன பொண்ணை வளர்த்து வெச்சிருக்கேன்னு, போ! போ!” என்று அம்மா கெஞ்ச,

எழுந்து உள்ளே சென்றாள், சொல்லப் போனால் அரசி தான் சமையல் வேலை எல்லாம் பார்ப்பதே, அவன் பால் காய்ச்சி முடித்திருக்க, “நீங்க போங்க! ஹால்ல இருங்க!” என, “இல்லை, இங்க இருக்கேன்!” என குரு கூட நின்று உதவ,

என்னவோ கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்து விட்டாலும் “ஒரு வேளை பொண்ணு சொன்ன மாதிரி ஏதாவது இருக்குமோ?” என்று உள்ளுக்குள் நாளும் நாளும் பயந்து, உறக்கத்தைத் தொலைத்திருந்த அந்த தந்தைக்கு அப்படி ஒரு ஆசுவாசம் மனதில்.

குருவிற்கு மாமனார், மாமியார் என்பது எல்லாம் கிடையாது. அரசியின் அப்பா, அம்மா, உறவினர்கள் என்பது முதன்மையாகிப் போக, அவளுக்காக நன்றாக கவனித்துக் கொண்டான். ஆறு மணிக்கு மேல் ஆகவும் அவர்களை ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் அழைத்துச் சென்று பஃபே முறையில் ஒரு நல்ல விருந்தும் கொடுத்தான்.

“மாப்பிள்ளை இப்படி பார்த்துப் பார்த்து கவனிக்கறார், நம்ம பொண்ணு பொறுப்பா விளையாட்டுத்தனம் விட்டு இருக்கணுமே! அவரைக் கவனிக்கணுமே!” என்ற கவலையே அரசியைப் பெற்றவர்கள் மனதினில் வந்தது.

ஒருவழியாக அவர்கள் அங்கிருந்து ஊருக்குக் கிளம்ப, அந்தக் காரை அங்கே விட்டு, “நீங்க இதை எடுத்துட்டு போங்க! உங்களுக்கு வாங்கினது! ஊர்லயே இருக்கு!” என்று அர்த்தனாரி சொல்ல,

“வேண்டாம்!” என்று குரு மறுத்துப் பேச முயலும் போதே, “சரிப்பா!” என்று வேகமாகத் தலையாட்டினாள் தமிழரசி, குரு அவளைக் கண்டனப் பார்வை பார்க்க, அந்தப் பார்வையை உணர்ந்தாலும், அவன் புறம் திரும்பாமல் பெற்றவர்களிடம் பேசி நின்றாள். கால் டேக்சி வரவழைத்துக் கிளம்பினர்.

கிளம்பும் சமயம் “அடுத்த வாரம் விருந்து வெச்சிக்கலாமா?” என்று குருபிரசாத்திடம் கேட்க, அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தயங்க, அரசி தான் “நான் ஒரு ரெண்டு நாள்ல ஃபோன் பண்றேன்பா!” என்றாள்.

“நாளைக்கு எங்க போறீங்க?” என்று கலை கேட்க, இருவரும் திருதிரு என விழித்தனர், எங்கே போகிறார்கள்? எங்கேயும் இல்லையே!

“இங்க தான், சென்னையிலயே நிறைய ப்ளேசஸ் போறோம்!” என்றான்.

“சரி!” என்று கிளம்பும் சமயம் அர்த்தனாரி, “அங்க ஊர்ல மாப்பிள்ளை தங்கச்சிங்க கிட்ட பேசறியா கண்ணு, அம்மா இல்லாத பிள்ளைங்க, நீ தான் பார்த்துக்கணும்! விளையாட்டுப் போல இருக்கக் கூடாது” என்றார்.

அரசி அவர்களிடம் எல்லாம் இதுவரை பேசவேயில்லை. பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை, உறவுகளின் முக்கியத்துவம் தெரிந்து தான் வளர்ந்தவள். இப்போதும் அவளின் பெற்றோர்கள் அதைதான் போதித்தனர். 

ஆனால் எப்படிப் பேசுவாள், குரு வேறு பெண்ணைக் காதலிக்கிறேன் என்று சொல்லி அரசியை வேண்டாம் என்று சொன்ன விஷயம் அவர்களுக்குத் தெரியும் எனும் போது, அதையும் மீறி திருமணமும் நடந்து விட்ட போது, என்னவோ அது அவளுக்குரிய ஒரு அவமானம், அது அவர்களுக்கும் தெரியும் என்பதால் அரசியால் சகஜமாகப் பேச முடியவில்லை. குருவிடம் பேச முடிந்த அவளால் குருவின் வீட்டினருடன் பேச முடியவில்லை என்பது தான் உண்மை!

குருபிரசாத்தும் இந்தத் திருமண ஏற்பாட்டை சொல்லாமல் விட்டு விட்டார்கள் என்ற கோபத்தில் தங்கைகளிடம் என்ன ஏது என்ற பேச்சு மட்டுமே! வேறு பேசுவதில்லை!

“சரிப்பா!” என்ற அரசியின் முகம் சீரியஸ் ஆகிவிட, குருபிரசாத்தும் யோசனைக்குப் போய் விட்டான். குருவின் மனதில் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் நான் என்று மனது முழுவதும் ஒரு குற்ற உணர்ச்சி வியாபிக்கத் துவங்கியது மீண்டும். மனது பாரமாக உணர்ந்தது.

கார் அருகில் வந்தவுடன் “நான் வேண்டாம் சொல்றேன்! நீ இருக்கட்டும் சொன்ன தானே நீயே ஒட்டு! என நின்றான்.

“ஏன்? நான் ஓட்ட மாட்டேனா?” என்றெல்லாம் கேட்கவில்லை, போய் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

“அட, ஜக்கம்மா ஒட்டுவாப் போல!” என்று குருவும் அமர்ந்து கொள்ள, அவள் காரை ஸ்டார்ட் பண்ணிய விதத்திலேயே புது கார் என்பதால் ஜெர்க் எடுத்து நகர, “அம்மா! தாயே! மெதுவா நிறுத்து!” என்று சொன்னவன், அவள் நிறுத்தவும் “இறங்கு, இறங்கு” என்று சொல்லி அவன் ஓட்ட,

“இதை முன்னமே பண்ண வேண்டியதுதானே!” என்றாள் ஒரு முறைப்புடன்.

அவ்வளவு தான் பேச்சு! அதன் பின் ஆழ்ந்த மௌனம் இருவரிடமும். இருவரிடமும் எதை நோக்கி செல்கிறோம் என்ற தடுமாற்றம். குருபிரசாத்திற்கும் தமிழரசிக்கும் நடந்த திருமணத்தில் ஏதாவது சிக்கல் வரும் பட்சத்தில், அவர்கள் இருவரும் மட்டுமல்ல, மொத்த குடும்பமும் பாதிக்கும் என்ற யோசனைதான்.   

 

Advertisement