Advertisement

குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்யாவின் பள்ளி மாணவர்களை அரங்கத்தில் அமரச் சொன்னார். ஆனால் போட்டியில் பங்கேற்கப்போகும் மாணவர்களின் விபரங்களைக் கேட்கவேயில்லை. எந்த போட்டிகள் எங்கு நடக்கும் போன்ற விபரங்களும், லாட் நம்பர் பெறுவதற்கான விபரங்களும் தரவில்லை. ஆர்யாவின் பள்ளி மாணவர்கள் தங்களை அழைத்து வந்த நூலக மேலாளரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
“என்ன சார்… இன்னும் நம்மளுக்கு எந்த இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுக்கல? நம்மள ரிஜெக்ட் பண்றாங்க சார்.” – ஆர்யா.
“நான் மெயில் அனுப்பினேனே? ஏதோ தப்பாயிடுச்சு போல… திரும்ப ஸ்கூலுக்குப் போயிடுவோமா?” என்ற நூலக மேலாளர் மயில் வேடமிட்டு நின்று கொண்டிருந்த மாணவிகளைப் பார்த்து, “பாவம் பசங்க ஏமாந்திடுவாங்க.” என்றார்.
ஆர்யாவிற்கும் அந்த மாணவிகளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அறிவியல் கண்காட்சிப் போட்டிக்காக வந்திருந்த மாணவர்கள் பேருந்தில் வரும்போதெல்லாம் விவாதித்துக்கொண்டும் ஒப்பித்துக்கொண்டும் வந்ததை நினைக்கையில் அவனது ஏமாற்றம் கூடியது. அவனது உழைப்பும் அதிகமே. நான்கு நாட்களாக பாடங்களை ஒத்திவைத்துவிட்டு இந்த போட்டிக்காகவே தயாராகிக் கொண்டிருக்கிறான்.
ஏதோ ஒரு வேகம் பிறக்க, “சார் நாம போய் ஆடிட்டோரியத்துல முதல்ல உட்காருவோம் சார். என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.” என்றான் ஆர்யா. அனைத்து மாணவர்களும் அவ்வாறே சொல்ல கோஆர்டினேட்டர் அந்த பிரம்மாண்ட அரங்கத்திற்குள் மாணவர்களை அழைத்துச் சென்றார்.
அவர்கள் உள்ளே சென்று உட்கார்ந்த இரண்டு நிமிடங்களில் சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேடையேறி மைக் முன் நின்றார். சற்று முன்னர் நூலக மேலாளருடன் தனியறையில் பேசியபோது இருந்த கண்டிப்பும், கழுகுப் பார்வையும் இப்போது மைக் முன்னே நிற்கும் அதே குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் துளியும் இல்லை. அவரின் முகமெல்லாம் சிரிப்பும் பெருமையும் இருந்தது.
“குட்மார்னிங் ஸ்டூடென்ட்ஸ்.”- குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
இதைச் சொன்னதும்தான் மாணவர்கள் மத்தியில் எத்தனை கைத்தட்டல்?
கைதட்டி ஓய்ந்ததும், “குட்மார்னிங் சார்…” என்றது அந்த மாணவர் பட்டாளம்.
“நான்தான் உங்க சிவப்பிரகாசம்.” என்று தலைமை ஆசிரியர் சொன்னதும் அரங்கம் மீண்டும் கைதட்டல்களால் அதிர்ந்தது.
Y.M.J மாணவர்கள் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர். ஏன்னென்றால் இத்தனை மாணவர்களின் நாயகனான சிவப்பிரகாசத்தின் கோபத்திற்குதானே அவர்கள் ஆளாகிவிட்டிருந்தனர். Y.M.J தரப்பில் ஏதோ தவறு நடந்துவிட்டது உறுதி. ஆனால் போட்டியில் பங்குபெறுவார்களா? என்பதுதான் ஆர்யா மற்றும் அவனுடன் இருந்த சக மாணவர்களின் கேள்வியானது. மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது.
“டேய் காம்ப்படிஷன்ல கலந்துக்க விடலைன்னா.. O.D (on duty) போறோம், O.D போறோம்ன்னு நாம பண்ண அலப்பறைக்கு நம்ம கிளாஸ் பொண்ணுங்க கொசுவோட குட்டிமாதிரிகூட இனி நம்மள மதிக்காதுங்கடா…”- விவேக்.
“கொசுவோட குட்டியா?” என்று ஆர்யா கோபமாகக் கேட்க,
“சாரி சாரி.. கொசு முட்டைதான போடும்? நம்ம கிளாஸ் பொண்ணுங்க கொசுவோட முட்டை மாதிரிகூட இனி நம்மள மதிக்காதுங்கடா.”- விவேக்.
ஆர்யா பற்களைக் கடித்துக்கொண்டே மேடையில் கண் பதித்தான். சிவப்பிரகாசம் சிரித்துக்கொண்டே மாணவர்களிடம் மைக்கில் நிறைய பேசினார். வேகமாக 20 நிமிடங்கள் முழுமையாய் முடிந்தபோது அவரது உரையும் முடிந்தது. பேசி முடித்தவர் கிளம்பும் முன் ஒரு பன்ச் வைத்தார்.
“இன்னைக்கு போட்டியில கலந்துக்க வந்த அத்தனை ஸ்கூல்லோட கோஆர்டினேட்டரும் எழுந்து நில்லுங்க. ப்ளீஸ்.” – தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம்.
உடனே போட்டியில் பங்குபெற வந்திருந்த அனைத்து பள்ளியின் கோஆர்டினேட்டர்களும் எழுந்து நின்றார்கள்.
“ஓகே… உங்க எல்லோர்கிட்டயும் ஒரு விஷயம் ஷேர் பண்ணணும். எதிர்காலத்துல இந்த மாதிரி நடக்கக்கூடாது என்பது தான் இதன் நோக்கம், அஜென்டா. நீங்க யாரும் தப்பா எடுத்துக்ககூடாது. எங்க பள்ளியின் மெயில்ல நாங்க கிளியரா சொல்லியிருந்தோம்… போட்டியில கலந்துக்க நினைக்கிற பள்ளிகள் 8337689902 என்ற நம்பருக்கு ஒரு கால் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணணும், மேலும் எங்களது மெயில் ஐ.டிக்கு ஒரு மெயில் அனுப்பணும்னு கிளியர் கட்டா சொல்லியிருந்தோம். போன்ல கான்டாக்ட் பண்ற டைம் காலை 9-11 என்றும் சொல்லியிருந்தேன். எல்லா ஸ்கூலும் அதை கடைப்பிடிச்சிருந்தாங்க.. ஒரு ஸ்கூலைத்தவிர.” என்று சொன்னவர் சில நொடிகள் நிறுத்தினார்.
  “போன வாரம் நான் நம்ம ஸ்கூல் ஹாஸ்டலுக்கு கொஞ்சம் காய்கறி பர்சேஸ் பண்ண  ஒரு மணிக்கு கோயம்மேடு மார்க்கெட் போயிருந்தேன். அப்ப எனக்கு ஒரு கால் வந்தது. நல்லா கற்பனை பண்ணிப்பாருங்க ஒரு கையில தேங்காய் இன்னொரு கையில வெண்டைக்காயை அள்ளிட்டு இருக்கேன். அப்ப என்னோட செல்ஃபோன் அடிக்கிது…”
மாணவர்கள் சிரித்தனர். ஆர்யா மற்றும் அவனது சக பள்ளி மாணவர்கள் சிரிக்கவில்லை. அவரது சொற்களின் தோட்டாக்கள் தங்களை நோக்கித்தான் பாய்கிறது என்று புரிந்து கொண்டார்கள்.
நூலக மேலாளர் நின்றபடியே தலைகுனிந்து கொண்டார்.
சிவப்பிரகாசம் பிரகாசமாய் தனது உரையைத் தொடர்ந்தார்.
“என்னோட வைஃப்புக்குகூடத் தெரியும் இந்த டைம் நான் காய்கறி மார்க்கெட்டுல இருப்பேன் கூப்பிடக்கூடாதுன்னு…”
மாணவர்கள் கெக்க புக்கவென சிரிக்க.. நூலக மேலாளர் இன்னும் நன்றாக குனிந்துகொண்டார்.
“சரி… ஏதோ முக்கியமான ஃபோன் போலன்னு.. எடுத்தேன். பேசினவங்க எந்த ஸ்கூல் எதுன்னு சொல்லலை மெயில் அனுப்பியிருக்கோம் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சிட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. சரின்னு காய் வாங்குறதைக் கன்டினியு பண்ணேன். ஃபோன் பண்ணவங்கதான் அரைவேக்காடா இருந்தா நாமும் அரைவேக்காடா இருக்கக்கூடாதுல்ல?”
மாணவர்கள் மீண்டும் சிரித்தனர்.
“மானம் போகுதுடா.. பாவம்டா லைப்ரரியன். அவருக்கு என்ன விபரம் தெரியும்? வேற டீச்சர்ஸ் இந்த வேலையை கரெக்டா செய்திருக்கலாம். பாவம்டா சார்…”- விவேக்.
“ஆமா ஆமா… ரொம்ப தான் மானம் மரியாதை போயிருச்சு. நல்ல வேளை ஸ்கூல் பேர் சொல்லலை.”- ஆர்யா.
“எந்த ஸ்கூல்னு நான் சொல்ல மாட்டேன்.” என்று அடுத்ததாக சிவப்பிரகாசம் சொன்னபோது அனைத்து கோஆர்டினேட்டர்களும் ஆர்யாவின் பள்ளி நூலக மேலாளரைப் பார்த்தனர். அவர்தான் குனிந்த தலை நிமிரவேயில்லையே? அதனால் எளிதில் கண்டு பிடித்துவிட்டார்கள்.
“மே.. மே” என்று இரண்டு தடவை கத்தினால்தான் ஆடு என்று கண்டுபிடிக்க முடியுமா? “மே” என்று ஒரு தடவை கத்தினால்கூடப் போதுமே அது ஆடு என்று கண்டுபிடிக்க.. அதுபோல சிவப்பிரகாசம் குறிப்பிடுவது Y.M.J பள்ளியைத்தான் என்று மற்ற மாணவர்கள் சிரமமே இல்லாமல் கண்டுபிடித்துவிட்டார்கள். அனைத்து மாணவர்கள் கண்களும் தலை குனிந்த நூலக மேலாளரிடம் இருந்தன.
ஆர்யா லைப்ரரியனையும் விவேக்கையும் பார்த்தான்.
“ஸ்கூல் பேரையே அந்த சார் மைக்கில் சொல்லியிருக்கலாம்ல?”- விவேக்
ஆர்யா முறைக்க அமைதியானான் விவேக்.
“சரின்னு ஸ்கூலுக்கு வந்ததும் மெயில் செக் பண்னேன்… அதுல ஸ்கூல் பேரு மட்டும் இருக்கு, எந்தெந்த காம்ப்படிஷன்ல எந்தெந்த மாணவர்கள் கலந்துக்கிறாங்க அவுங்க பெயர் லிஸ்ட் என்ன? அப்படிங்கிற விபரம் எதுவும் இல்ல.”- சிவப்பிரகாசம்.
அரங்கத்தில் பயங்கர அமைதி.
“சரி. விபரம் தரல, ஓகே… எட்டு மணிக்கு ரிப்போர்டிங் டைம். ஒரு 7.30 மணிக்கு வந்திருந்தாங்கன்னா இதையெல்லாம் சால்வ் பண்ணிருக்கலாம். அதுவும் வரல.. அவுங்க வந்த டைம் 8.15.”
இப்போது ஆர்யா தலைகுனிய மற்ற மாணவர்களும் அவனைப் பின்பற்றினர்.
“டேய் அத்தனை பேரும் நம்மளதான்டா பார்க்கிறாங்க…”- விவேக்.
“தெரியும். கம்முன்னு இருடா. இப்ப நீ வாய மூடல, கொன்றுவேன்.”- ஆர்யா
“சரி. இப்ப நான் என்ன செய்யணும்? நீங்களே சொல்லுங்க. போட்டியை குறிச்ச நேரத்துல ஆரம்பிக்காம அவுங்க பிரச்சனையைப் பார்க்கட்டுமா? ஒரு அரை மணி நேரம் வேஸ்ட் ஆகலாம், பரவாயில்லையா? இல்ல டிஸ்குவாலிஃபை செய்து அனுப்பிடலாமா? நான் என்ன பண்ண? நீங்களே பதில் சொல்லுங்க. அவுங்களை போட்டியில கலந்துக்க விடலாமா, வேணாமா? சரின்னா கைதூக்குங்க. மெஜாரட்டி ஓட் வின்ஸ்.”- சிவப்பிரகாசம்.
“ஹும், ஹும். எனக்கு நம்பிக்கை இல்ல. இப்பவே நம்ம பஸ் டிரைவருக்கு கால் பண்ணி வண்டிய ஸ்டார்ட் செய்யச் சொல்லலாம்.”- விவேக்.
“விவேக் ப்ளீஸ், ஷட் அப்.”- ஆர்யா.
“சொல்லுங்க ஸ்டூடன்ட்ஸ், கமான், யாருல்லாம் யெஸ் சொல்றீங்களோ கை தூக்குங்க.” என்று  சிவப்பிரகாசம் மீண்டும் சொன்ன நொடியில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாகக் கைத்தூக்கினர். பள்ளி வேறுபாடு இல்லாமல் வந்திருந்த அனைத்து பள்ளி மாணவர்களும் கைகளை உயர்த்தியிருந்தார்கள்.
“ஓகே தென். இது தான் கடைசி வார்னிங். இதை எல்லா ஸ்கூலும் மனசுல வச்சிக்கோங்க. அவுங்க போட்டியில் கலந்துக்கலாம். நன்றி.”- சிவப் பிரகாசம்.
முன்னூறு மாணவர்களின் அறுநூறு கைகளைப் பார்த்ததும் ஆர்யாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
மகிழ்ச்சியுடன் சேர்ந்து இன்னும் ஒரு உணர்ச்சியும் அவனது முகத்தில் ஒட்டிக்கொண்டது.
அவனுடன் வந்திருந்த அவனது வ.ங.ஒ பள்ளியின் அத்தனை மாணவர்களின் மனதிலும் அந்த உணர்வு இருந்தது.
 அதன் பெயர் என்ன?
              *   *   *
   
                 7
ஆர்யாவின் முகத்தில் இருந்த உணர்ச்சியின் பெயர் தீர்மானம். போட்டிகளில் வெல்லவேண்டும் என்ற தீர்மானம்.
“விவேக் நாம எத்தனை பேர்?” – ஆர்யா.
“இருபத்தியஞ்சு.”- விவேக்.
“எத்தனை காம்ப்படிஷன் இருக்கு?”
“இருபது இருக்கும்டா.”
“நாம எத்தனையில கலந்திருக்கோம்?”
“மொத்தம் பதினைந்துல கலந்துக்குறோம்.”
“மீதி அஞ்சு?”
“அதுக்கு நாம் ரெடியாகலடா. யாரும் அதுல கலந்துக்கல.”
“என்னென்ன போட்டி அது?”
“இந்தா இன்விடேஷன்ல இருக்குல. ஸ்பீக் அவுட், கொலாஜ், சான்ட் டிராயிங், கிளாசிக்கல் சிங்கிங், ஹேர்டூ.”
“ஓகே.. மிச்சம் இருக்கும் அஞ்சுலயும் சேரணும்.”
“எதுக்கு? என்ன விளையாடுறியா ஆர்யா?”
“அப்பதான்டா திர்ட் ரன்னர்-அப் கப்பாவது கிடைக்கும். இருபத்தியஞ்சு ஸ்கூலும் நம்மளை வேடிக்கை பார்த்துச்சுல… முதல் பிரைஸை ஜெயிக்கத்தான் முடியாது, ஆனா நாம ஸ்டேஜ் ஏறி ரன்னர்-அப் டிராபியாவது வாங்கணும் விவேக்.”- ஆர்யா.

Advertisement