Advertisement

“டேய், ஆர்யா எப்படி காம்ப்படிஷனுக்கு வர்றான்? பைக்லயே குட்ஷெப்பர்ட் ஸ்கூலுக்கு வந்திடுவானா இல்ல நம்மகூட ஸ்கூல் பஸ்ல வர்றானா?”- விவேக்.
ஆர்யா தான் Y.M.J ஸ்கூல்லின் S.P.L (School people leader)
(ஆர்யா… ஒருவழியா நாயகன் பெயரை சொல்லியாச்சு. )
“லைசென்ஸ் இல்லடா அவன்கிட்ட. எப்படி புல்லட்ல வருவான்? நம்மகூட பஸ்லதான் வருவான்.”- ஷாம்.
இந்த இளவட்டங்கள் எல்லோருமே Y.M.J பள்ளி மாணவர்கள்.
“டேய் எட்டு மணிக்கு ரெஜிஸ்டேரேஷன் கன்ஃபார்ம் பண்ணணும்டா… அந்த ஸ்கூல் வி.பி கத்துவாருடா.- விவேக் 
“அதெல்லாம் எட்டு மணிக்கு ஆர்யா டான்னு வந்திடுவான்.” – ஷாம்.
“டேய், நாம எட்டு மணிக்கு குட் ஷெப்பர்ட் ஸ்கூல்ல இருக்கணும்.”- விவேக்.
“அந்த ஸ்கூலுக்கு நான் வரலைன்னா கேட்குறீங்களாடா? எல்லா ப்ரைஸையும் அந்த ஸ்கூல் பொண்ணுங்களே வாங்கிடுவாங்க.. நமக்கு சோப்பு டப்பா மாதிரி ஒரு கப் கொடுப்பானுங்க.” என்று இருவரிடமும் கோபமாக பேசியபடி வந்து நின்றான் சதீஷ்.
“அதுவும் பார்டிசிபேஷனுக்கு.”- ஷாம்.
“ஆமா. பார்டிசிபேஷனுக்கு.” என்று விவேக்கிடம் இருபாலகர்களும் சலித்துக் கொண்டிருந்த போது ஆர்யா அவனது பைக்கை அதிரடியாய் உறுமவிட்டு அவர்கள் முன்னே வந்து நிறுத்தினான்.
தனது பைக் சாவியை உருவி பேன்ட் பாக்கெட்டிற்குள் வைத்தவன் ஸ்கூல் பேக்கை எடுத்து தோளில் போட்டபடி தனது மூக்கோடு ஒட்டிக்கொண்டிருந்த கூலிங் கிளாஸை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.
“விவேக் கிளம்பலாமா? மணி எழு இருபது. எட்டு மணி தான ரிப்போர்ட்டிங் டைம்.”
“ஆமா எட்டு மணி தான் ரிப்போர்ட்டிங் டைம்… வாடா வேமா.. உனக்குதான் வெயிட்டிங். சுப்பிரமணியன் சார் இன்னும் வரல.. அதனால் தப்பிச்ச, வா சீக்கிரம் பஸ்ல ஏறு.” என்றவர்கள் வேகமாக பள்ளி பேருந்திற்குள் புகுந்து கொண்டார்கள். அவர்கள் நால்வரையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்து மாணவர்கள் குட்ஷெப்பர்ட் பள்ளிக்கு போட்டிக்குச் செல்கின்றனர். ஆர்யா பேருந்தில் ஏறிய இரண்டே நிமிடத்தில் சுப்பிரமணியமும் வந்துவிட்டார்.
பள்ளியின் நூலக மேலாளர் சுப்பிரமணியன் மட்டுமே பள்ளி ஆசிரியர்கள் சார்பாக போட்டிக்கான கோஆர்டினேட்டராக அவர்களுடன் செல்கிறார். பள்ளிப் பேருந்து கிளம்பியதும் சுப்பிரமணியன் மாணவர்களின் ஐ.டியை சரிபார்த்துவிட்டு எந்தெந்த போட்டிகளில் எந்தெந்த மாணவர்கள் பங்குபெறுகிறார்கள் என்பதையும் சரிபார்த்தபடியே அமர்ந்திருந்தார்.
ஆர்யாவின் வகுப்பு மாணவிகள் இருவர் அழகாக பரதநாட்டிய உடையில் ஜொலித்தார்கள். ஆர்யா ஓரக்கண்ணால் பரதநாட்டியப் போட்டியில் பங்குபெறும் தனது வகுப்பு மாணவி ப்ரியாவைப் பார்த்து ரசித்துக்கொண்டான். அவளது கன்னங்கள் ஒப்பனையால் சிவப்பாக மின்னியன. உதடுகளைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் தலையைத் திருப்பிக்கொண்டான். மற்ற மாணவர்கள் முன்னே வெளிப்படையாய் ஸைட் அடிப்பது அவனுக்கே ரொம்ப அநாகரிகமாகத் தெரிந்தது.
மயில் போல உடையணிந்த இரண்டு எட்டாம் வகுப்பு மாணவிகள் சிரித்துக்கொண்டே பேருந்தில் வந்தனர்.
“டேய் அந்தப் பொண்ணு டிரஸ்ல இருக்கிற மயில் இறகைப் பிச்சிக்கவா? கை பரபரன்னு இருக்குடா.”- விவேக்.
“அதை வச்சி என்ன பண்ணப்போற?”- ஆர்யா.
“மயில் இறகை புக்குல வச்சா குட்டி போடுமாம்டா..”
“அந்த டிரஸ்ஸை வாடகைக்கு விட்டவன் அதைத் துவைத்து எத்தனை நாள் ஆச்சோ… கம்முன்னு இரு…” என்று கூறியபோதே அந்த மயில் வேடம் அணிந்திருந்த மாணவி உட்கார சிரமப்பட்டு மயில் இறகை ஒன்றாக குவித்து வைத்தபடி கஷ்டப்பட்டு உட்காருவதைப் பார்த்தான் ஆர்யா.
உடனே விவேக்கிடம், “டேய் நாம முன் சீட்டுக்குப் போயிடுவோம். அந்தப் பொண்ணு உட்காரக் கஷ்டப்படுதுல? நம்ம சீட் கொஞ்சம் பெரிசு…” என்றான்.
“அந்த மயில் பொண்ணா?”- விவேக்.
“ஆமாடா..”
“சரி வா… நாலு பேருக்கு நல்லது செய்தா தப்பில்ல.. அதுவும் நாலு பொண்ணுங்களுக்கு நல்லது செய்தா தப்பில்ல.” என்று சொன்னபடி ஆர்யாவுடன் இடம் மாறி உட்கார்ந்தான் விவேக்.
“டேய் … வா பேசாம… சின்னப்பொண்ணுங்கடா…”
“சின்னப் பொண்ணுங்கனாதான் நம்மை மரியாதையா பார்க்கும் ஆர்யா. நம்ம கிளாஸ் பொண்ணுங்களை எடுத்துக்கோ.. நம்மள கொசு மாதிரியாவது மதிக்குதுங்களா? தெனாவட்டா பார்க்குதுங்க.. அதுகதான் ஐன்ஸ்டீன் பேத்திக மாதிரியும், நாம என்னமோ படிக்காத அரசியல்வாதிங்க பசங்க மாதிரியும் நினைச்சிக்கிட்டு நம்மைப் பார்க்குதுங்க. சின்ன கிளாஸ் பசங்கதான் நம்மள ஜீனியஸ் மாதிரி பார்க்கும். போன எக்ஸாம்ல நான் காம்பஸ் யூஸ் பண்றதை என் பக்கத்துல உட்கார்ந்திருந்த எய்த் ஸ்டான்டர்ட் பொண்ணு எப்படி பார்த்துச்சு தெரியுமா?”- விவேக்.
“எப்படிப் பார்த்துச்சு?”
“நான் என்னமோ என் கையில டெலஸ்கோப் வச்சி வானத்துல இருக்கிற ஜுபிட்டரைப் பார்த்துப் பார்த்து என்னோட எக்ஸாம் பேப்பர்ல வரையிற மாதிரி பார்த்துச்சுப்பா… அவ்வளவு மரியாதை தெரியுமா?” என்று விவேக் சொன்னபோது, “இடம் மாறி உட்கார்ந்ததுக்கு தாங்க்ஸ் அண்ணா.” என்று குறிப்பாக விவேக்கை அழைத்துச் சொன்னது மயில்.
அந்த சிறுமி அண்ணா என்றதும் அணுகுண்டே அவனது இதயத்தின் மத்தியில் டொம் டொம் எனத் தாருமாறாக வெடித்துக் கொண்டிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், “இட்ஸ் ஓகே. யு ஆர் வெல்கம்.” என்று சொன்னான் விவேக்.
ஆர்யா முன்சீட்டில் சாய்ந்தபடி முகத்தை மறைத்துக் கொண்டே சிரிக்க,
“என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு? வெளிய வேடிக்கைப் பார்த்துட்டு வா… என்னையே எதுக்குப் பார்க்குற?” என்று தனது பையால் ஆர்யாவின் தோளில் அடித்தான் விவேக். ஆர்யாவும் அதன்பிறகு விவேக் பக்கம் திரும்பாமல் சிரித்தபடி சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்தான்.
பேருந்து போக்குவரத்து நெரிசலால் மெதுவாகத்தான் நகர்ந்து சென்றது. சுமார் அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு Y.M.J பள்ளிப்பேருந்து குட்ஷெப்பர்ட் பள்ளியின் வாசலில் சென்று நின்றது. ஆனால் வாசலின் பிரதான கேட் மூடப்பட்டு இருக்க, ஹார்ன் ஒலி எழுப்பினார் பேருந்து ஓட்டுநர். குட்ஷெப்பர்ட் பள்ளியின் வாயிலில் நின்றிருந்த காவலாளி வேகமாக பேருந்தின் அருகே வந்து நின்றார்.
“எந்த ஸ்கூல்?”- காவலாளி.
“Y.M.J சார். ரிஜிஸ்டர் பண்ணிட்டோம்.”- நூலக மேலாளர் சுப்பிரமணியன்.
“ஆனால் ஃப்ன்ஷன் ஆரம்பிச்சிடுச்சே… கேட் எல்லாம் கிளோஸ் பண்ணச் சொல்லிட்டாங்களே?”
“இந்தா பாருங்க சார் இன்விடேஷன். கையில இன்விட்டேஷன் இருக்கே சார்… பயங்கர டிராஃபிக் சார், அதான் வர்ற லேட் ஆகிடுச்சு. நீங்க வேற பேசிகிட்டே இன்னும் லேட் பண்றீங்க.”
அழைப்பிதழைப் பார்த்ததும் காவலாளி இரண்டு மனதாக மெயின் கேட்டைத் திறந்து விட்டார். பேருந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. வாகனம் நிறுத்தும் இடத்திற்குச் செல்லவே ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது.
“டேய் விவேக் நீ எந்தெந்த காம்பட்டிஷன்ல இருக்க?”- என்று பேருந்தில் இருந்து இறங்கியபடியே விவேக்கிடம் கேட்டான் ஆர்யா.
“பெயின்டிங் அன்ட் டம் ஷரட்ஸ். நீ எப்பவும் போல எலக்கூஷனா? “- விவேக்.
“ஆமாடா… என்னோட அக்காகிட்ட ஜெயிச்சுடுவேன்னு பெட் வச்சிருக்கேன்.”
“நீ தான் எப்பவுமே ஜெயிப்பீல? பின்ன என்ன பெட்?”
“ஃப்ர்ஸ்ட் பிரைஸ் ஜெயிச்சிடுவேன்னு பெட் வச்சிருக்கேன் விவேக்.”
“ஓ… அப்ப டஃப்பான பெட்தான். குட்ஷெப்பர்ட் ஸ்கூல் பொண்ணுங்க பேச்சுப் போட்டியில தான் எப்பவுமே டாப்பாச்சே. ஜெயிக்கிற பிள்ளைங்களா பொறுக்கி எடுத்து போட்டியில சேர்த்துவிடுறாங்க அவுங்க டீச்சர்ஸ். போன தடவை சாரல் 2லி2லி போனப்ப மதுமிதான்னு ஒரு பொண்ணு, ஸ்டேஜ்ஜையே அலற விட்டுருச்சு ஆர்யா. இந்த ஸ்கூலோட வி.பி பொண்ணாம் அது. நீ அந்தப் பொண்ணு பேசுறதை மிஸ் பண்ணிட்ட, ஜட்ஜ் எழுந்து நின்னு கிளாப் பண்ணாங்கன்னா பார்த்துக்கோ.”
“பசங்க எல்லோரும் சொன்னாங்கடா. நான் வேற போட்டியில இருந்ததால அந்தப்பொண்ணு பேசினதைக் கேட்க முடியல. இன்னிக்கு வாட்ச் பண்ணணும். அந்தப் பொண்ணாலதான் எனக்கு ஃப்ர்ஸ்ட் பிரைஸ் போச்சு. இந்த தடவை மிஸ் பண்ணக்கூடாது விவேக்.”
“என்னடா இவ்வளவு ஃபீல் பண்ற?”
“ஆமாடா… பொண்ணுங்ககிட்ட ஒரு தடவை தோக்கலாம்… ரெண்டு மூனு தடவை தோத்தா நம்ம பிரஸ்டீஜ் என்ன ஆகுறது?”
“நீ சொல்றதும் சரிதான் ஆர்யா.” என்று பேசிக்கொண்டே வந்தவர்கள் அந்த பிரம்மாண்ட ஆடிட்டோரியம் முன்னே இருந்த வரவேற்கும் மேஜை அருகே சென்றனர். அங்கே பிற பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பன்னீர் தெளித்து வரவேற்க காத்திருந்த  குட்ஷெப்பர்ட் ஆசிரியர்களிடம் தங்களது பெயர் பள்ளி விபரங்களைத் தந்தனர்.
“Y.M.J ஸ்கூல்லா?”- வரவேற்கும் குழு ஆசிரியர்.
“ஆமாம் மேம்.”- ஆர்யா.
“அந்த சின்ன ரூம் தெரியிதுல? அங்க வி.பி இருப்பார். போய் அவரைப் பார்த்திட்டு மெயின் ஸ்டேஜுக்குப் போங்க.. சார் உங்களை பார்க்கணும்னு சொன்னார். சீக்கிரம் போங்க. சார் இன்னும் இரண்டு நிமிஷத்துல மெயின் ஸ்டேஜுக்குப் போகணும்.”- வரவேற்கும் குழுவில் இருந்த குட்ஷெப்பர்ட் பள்ளி ஆசிரியர்.
ஆர்யாவின் பள்ளி கோஆர்டினேடராக வந்திருந்த நூலக மேலாளர் குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல் அறை நோக்கி முன்னே செல்ல, அவரது பள்ளி மாணவர்கள் அவர் பின்னே வந்தனர். ஒரு நிமிடத்தில் இருபத்தைந்து மாணவர்களும், Y.M.J பள்ளி நூலக மேலாளரும் குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல் அறையில் குழுமியிருந்தனர்.
                *   *   *
அவர்கள் உள்ளே நுழைந்ததும் குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
“சார், நீங்க காம்ப்டிஷன் கலந்துக்கிறதா எங்களுக்கு மெயில் அனுப்பினீங்களா?”- குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல்.
“ஆமா சார். போன வாரம் அனுப்பினேன்.”- ஆர்யாவின் பள்ளி கோஆர்டினேடர் ( நூலக மேலாளர்).
“ஒரு செல் நம்பர் தந்திருந்தோமே… அதுக்கு…”
“அதுக்கும் பேசினேன் சார்.”
“நீங்கதான் பேசுனீங்களா?”
“ஆமா சார். போன புதன் கிழமை பேசினேன் சார்.”
“ஓ…  புதன் கிழமை பகல் ஒரு மணிக்கா?”- பிரின்சிபால்
“ஆமா சார்.”
“இரண்டு செகன்டு பேசுனீங்கல?”
“ஆமா சார்.”
“டேய் லைப்ரரியன் ஏதோ சொதப்பிட்டாரு, மெயில் தப்பா அனுப்பிட்டாரு போல…”- விவேக் ஆர்யாவின் காதினில்.
“ஷ்.ஷ்..ஷ்.. பேசாத.”- ஆர்யா.
“சரி… போய் ஆடிட்டோரியத்துல உட்காருங்க. வெல்கம் ஸ்பீச் ஆரம்பிக்கப்போகுது.” என்றார் தனது நாற்காலியில் இருந்து எழுந்தபடியே பிரின்சிபல். அவர் எழுந்ததும் நூலக மேலாளரும் எழுந்து பிரின்சிபலிடம் நன்றி என்று உரைத்துவிட்டு தனது மாணவர்களுடன் அறையில் இருந்து வெளியேறினார்.
            *   *   *

Advertisement