Advertisement

மதுவின் வீட்டில் ஒரே ஒரு விதிமுறைதான் இருந்தது. படிப்பு முடியும் வரை காதல் என்ற வார்த்தையை இரண்டு பெண் பிள்ளைகளும் உச்சரிக்கக் கூடாது என்பது தான் அது.
மதுவின் பெற்றோரின் திருமணம் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் தங்களது பிள்ளைகளிடம் பள்ளிப்பருவத்தில் வரும் காதலுக்கு தடா விதித்திருந்தனர். அவர்களைப் பொருத்தவரையில் 2000க்குப் பிறகு பிறந்த காதல் எல்லாம் காதலே இல்லை. 2000 வருடத்திற்கு முன்பாக காதலித்த காதலர்களின் காதல்தான் தெய்வீகக் காதல். அவர்கள் காதலித்த யுகத்தில் காதலித்தவர்கள் தான் ஜென் காதலர்கள் (உண்மைக் காதலர்கள்).
 ரோமியோ-ஜுலியட், அம்பிகாபதி – அமராபதி, அஜித்-ஷாலினி… போன்ற சென்ற நூற்றாண்டு காதலுக்குத்தான் நூற்றுக்கு நூறு மார்க் போடுவார்கள் மதுவின் பெற்றோர்கள். அந்த வரிசையில் அர்ஜுன்- வித்யா என்று தங்கள் பெயரையும் கடைசியாகச் சேர்த்திருந்தனர்.
இன்றைய காதலுக்கு அவர்கள் காதல் என்றே பெயர் வைக்கவில்லை. ஏன் எதற்கு என்பதன் காரணத்தை மதுவிடமே அவளது தந்தை ஒரு நாள் பகிர்ந்திருந்தார்.
முன்பு  ஒரு  நாள்…
அந்த நாள்கூட மதுவிற்கு நன்கு நினைவில் இருக்கும். பத்தாம் வகுப்பு விடுமுறை ஆரம்பித்த இரண்டே நாளில் மதுவின் தந்தையும் அவளும் அவர்கள் வீட்டு பால்கனியில் பேசிக் கொண்டிருந்தபோதுதான் மதுவின் தந்தை புதிதாக அவர்களது வீட்டில் கடைபிடிக்கப்போகும் காதல் தடா சட்டத்தைப் பற்றியும் அதன் காரணத்தையும் அவளிடம் கூறினார்.
காதலுக்கு தடை என்ற சட்டத்திட்ட மசோதா அன்றுதான் அவர்கள் வீட்டு பால்கனியில் விவாதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
“நான் சேது படம் பார்த்துட்டு உன் அம்மாவை லவ் பண்ணவன் மது.” என்று மெல்ல சிரித்த முகமாய் ஆரம்பித்தார் அர்ஜுன்.
“எங்க காலேஜ்ல எல்லோரும் ஸைட் அடிப்போம். லவ் பண்ணுவோம். இந்த காலத்து லவ்விற்கும் எங்க காலத்து லவ்விற்கும் ஒரே ஒரு வித்யாசம் தான். நாங்க யாரை ஸைட் அடிச்சோமோ அவுங்களைதான் லவ் பண்ணோம். யாரை லவ் பண்ணோமோ அவுங்களைதான் கல்யாணம் பண்ணோம். ஆனா… இந்த காலத்துல பசங்க பொண்ணுங்களை ஸைட் அடிக்கிற லிஸ்டு நான்-ஸ்டாப்பா போகுது. அதுல ஒன்றை லவ் பண்ண செலக்ட் பண்றான். ஆனா கல்யாணம்னு வரும்போது லவ் பண்ண பொண்ணையும் விட்டுட்டு ஸைட் அடிச்ச பொண்ணையும் விட்டுட்டு யு.எஸ்ல உட்கார்ந்துகிட்டு எனக்கு இப்ப முப்பதுதான ஆகுது… இன்னும் ஒரு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்றேன்னு அம்மாக்கு வாட்ஸ் அப் பண்றான்… அதான் இந்த காலத்துல பசங்க காதல்ன்னு சொன்னாவே எனக்கும் உன் அம்மாவுக்கும் அலர்ஜியா இருக்கு.” என்று அவர் தரப்பு வாதங்களை விளக்கங்களைக் கூறினார் அர்ஜுன், மதுவின் தந்தை .
அந்த பால்கனியைவிட்டு வெளியேறியபோது மது தனது தந்தையிடம் சத்தியம் செய்யாத குறையாக இன்னும் ஐந்தாறு வருடத்திற்கு காதல் என்ற வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று உறுதியளித்திருந்தாள்.
ஆனால் மது தரப்பில் இருந்து ஒரு பாயின்ட்…
“டாடி… நீங்க முதல் லிப்லாக் பார்த்தபோது உங்க வயசு 18. நான் முதல் லிப் லாக் பார்த்தப்போ என்னோட வயசு 11.”
இதை மது தனது தந்தையிடம் சொல்லவில்லை… ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் நினைத்தாள்.
                *   *   * 
பால்கனி சத்தியம் முடிந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை… அதற்குள் முதல் சத்தியச் சோதனை வந்துவிட்டது மதுவிற்கு. ஒன்றிற்கு மூன்று லவ் லெட்டர்கள் ரூபத்தில் முதல் சத்தியச் சோதனை வந்துவிட்டது மதுவிற்கு.
“நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு.” என்று கோபமாகக் கத்திவிட்டுச் சென்ற அம்மாவை சரிகட்டுவதற்காக அன்னையின் அறைக்குள் சென்றாள் மது.
“அம்மா.” – மது.
வித்யா கட்டிலில் இருந்து சிறிதும் அசையவில்லை. பிடிவாதமாய் கட்டிலில் படுத்தபடியே கண்களை கஷ்டப்பட்டு மூடிக் கொண்டிருந்தாள்.
“தருண் இஸ் எ ஃப்ளர்ட் யூ நோ… ஆனால் நான் ஃப்ளர்ட் இல்லம்மா. உங்களுக்குத் தெரியும்… நான் பசங்க பின்னாடி சுற்ற மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும்.”
வித்யா மெல்ல கண்களைத் திறந்தாள். தன்னைத் தேற்றி ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். தனது தலையணையின் அருகே அமர்ந்திருந்த மகளை இறுகக் கட்டிக்கொண்டாள். மதுவும் அம்மாவைக் கட்டிக் கொண்டாள். உண்மையை உடைத்துப்பேசும் பிள்ளைகள் என்றுமே பெற்றோருக்கு ஒரு வரம். மதுவின் பேச்சில் இருந்த உண்மை வித்யாவின் கோபத்தைக் கரைத்தது.
அரை மணிநேரம் முன்பு மதுவை அம்மா “மதூ” என்று கோபமாக அழைத்த நொடி முதல் தனது பாடத்தில் கவனம் வைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஜான்வி வீடே அமைதியானதும் வரவேற்பறைக்குச் சென்று வேவு பார்த்தாள். அங்கே ஆள் அரவம் இல்லை. அப்பாவைத் தேடினாள்.
அர்ஜுன் தொலைக்காட்சி பெட்டியை கண்ணால் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். அன்னையின் அறைக்குள் எட்டிப்பார்த்தாள்.
அறைக்குள் மது-வித்யாவின் கொஞ்சல் சீனை வேடிக்கை பார்த்தவள் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் அவர்களோடு சென்று ஒட்டிக்கொண்டாள்.
“எங்கடா நீ இன்னும் வரலையேன்னு பார்த்தேன்.” – ஜான்வியிடம் கிண்டலாக வித்யா.
“மது தள்ளிப்படு… எனக்கு இடமே இல்ல…” என்று மதுவை இடித்துக்கொண்டு ஜான்வி சிணுங்கிய அதே நேரத்தில் ஜான்வியின் கையில் இருந்த கைபேசி ஜஸ்டின் பீபரின் “பேபி பேபி ஓ பேபி” பாடலைப் பாடி அந்த அறையின், அம்மா – மகள்களின் ரொமான்ஸ் சீனைக் கலைத்தது.
“என்ன பாட்டு இது எப்பப்பாரு பேபி பேபின்னு… ஒரு பாப் பாட்டிலாவது இந்த பேபி இல்லாமல் இருக்கா?” என்று அந்த பாடலைக் கேட்டதும் கறார் அன்னையாக மாறிவிட்ட வித்யா இரு பெண்களையும் கட்டிக்கொண்டபடியே சலித்துக்கொள்ள…
“கெமிஸ்டிரி, ஃபிசிக்ஸ், மேக்ஸ் இப்படி எல்லா சப்ஜெக்ட்டிலும் X வருது… நாங்க கேட்டோமா? எதுக்கு எல்லாத்துலயும் X வந்து உயிரை எடுக்குதுன்னு நாங்க கேட்டோமா? அது மாதிரி ஜஸ்டின் பீபர், கேட், செலினா எல்லோரும் எதுக்கு பேபி பேபின்னு பாடுறாங்கன்னு கேட்காதீங்க.”- ஜான்வி.
“ஜானு…”- வித்யா சலிப்பாக.
“சரி.. சரி.. பேச்சைக் கொறச்சிக்கிறேன்..”- ஜான்வி.
“ம்மா..”- மது.
“என்ன மது?”- வித்யா மதுவின் தலையை வருடியபடியே கேட்டார்.
“நீங்க படிக்கும்போது இப்படி லவ் லெட்டர்ஸ் வருமா?”
வித்யா அறையின் வாசலை எட்டிப்பார்த்தபோது,
“அப்பா டி.வியில ஃபுட்பால் மேட்ச் பார்க்குறாங்க… இப்போதைக்கு வரமாட்டாங்க. நீங்க சொல்லுங்கமா… மது கேட்குறால? சீக்கிரம், சீக்கிரம் சொல்லுங்க.” என்று ஜான்வி சுவாரசியமாகக் கேட்டாள்.
“வரும்… லவ் லெட்டர்ஸ் வராமல் இருக்குமா? ஆனா ஒரே நாளில் மூனு லவ் லெட்டர்லாம் வராது.”
“ம்மா… ஐ ஆம் இன்னோசன்ட். அந்த லவ் லெட்டர்ஸை நான் என்கரேஜ் பண்ணவே இல்ல. தருண் இஸ் எ ஃப்ளர்ட். ஆல் த பாய்ஸ் ஆர் ஃப்ளர்ட்ஸ்.” (Tarun is a Flirt. All the boys are flirts…)
வித்யா மூச்சு விடவில்லை. அமைதியாக இருந்தாள்.
“ம்மா… சொல்லுங்க. எனக்குத் தெரியணும், லவ் லெட்டர்ஸ் வருமா வராதா?”- மது.
“ப்ச்…” என்று சலித்துக்கொண்டார் வித்யா.
“ம்மா…  I want a honest answer you know…” என்று தந்தையைப் போலவே மது அதிகாரமாய் சொல்லவும் வித்யா சிரித்துக்கொண்டே சொன்னார், “அபவுட் வாட்?”
“லவ் லெட்டர்ஸ்…”- மது.
“சரி பதில் சொல்றேன்… திரும்பத் திரும்ப இந்த டாப்பிக் பத்தி இனி பேசக்கூடாது. ஃப்ர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் இதுதான். ஓகே? டீல்?”
“டீல்.”
“கசம் சே?”- வித்யா. (சத்தியமாக என்று ஹிந்தியில் பொருள்)
வித்யா ஒரு ஹிந்தி பன்டிட். அதனால் பல நேரங்களில் சிறு சிறு ஹிந்தி வார்த்தைகள் சகஜமாகப் பேசுவார். பிள்ளைகள் இருவருக்கும் ஹிந்தி அத்துபடி. ஹிந்தி தெரிந்தபிறகு அலியா பட் படம் பார்க்க இன்னும் வசதியாக இருந்தது இருவருக்கும்.
“கசம் சே மா.”- மது.
“ஓகே தென்… லவ் லெட்டர்ஸ் தானே? லட்டர்ஸ் வரும். வராம இருக்குமா? காலேஜ் படிக்கும்போதுதான் வந்திச்சு. ஸ்கூல்ல வரல. அந்த வயசுல அதாவது இருபது வயசுல எது கிரஷ்… எது உண்மையான புரிதல், எது இரண்டும்கெட்டான் கேஸ்ன்னு எங்களுக்குப் பிரிச்சிப் பார்க்கத் தெரிஞ்சது. அதனால அந்த மாதிரிப் பசங்ககிட்டயிருந்து பத்தடி விலகி இருந்தோம். என்னோட ஃப்ரண்ட் ஒரு பையனை ப்ளஸ் ஒன்ல இருந்து லவ் பண்ணா. இரண்டு பேரும் காலேஜ் முடிக்கிறதுக்கு முன்னேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா நாலே வருஷத்துல அவுங்க கல்யாணம் டைவர்ஸ்ல முடிஞ்சிடுச்சு. இரண்டு நாள் முன்னே அவளைப் பார்த்தேன்.. டைவர்ஸ்க்கு என்ன காரணம்னு கேட்டேன், “ஐந்தாறு வருஷம் கழிச்சு நான் என்னவாக ஆகப்போறேன்னு முடிவு பண்ணாம… முப்பது நாற்பது வருஷம் சேர்ந்து வாழப்போற வாழ்க்கையை முடிவு செய்தது எவ்வளவு பெரிய மடத்தனம்னு லேட்டாதான் புரிஞ்சது வித்யா.”ன்னு சொன்னா… அவ சொன்னது எவ்வளவு கரெக்ட் தெரியுமா மது… ப்ளஸ் ஒன் படிக்கும்போது இன்னும் ஐந்தாறு வருஷம் கழிச்சி நாம என்ன ஆகப்போறோம்னு தான் அவ முடிவு எடுத்திருக்கணும். அந்த நேரத்துல முதல் பத்து வருஷத்தைத் தாண்டி ஒரு பெரிய லாங் ஜம்ப் பண்ணி.. முப்பது நாற்பது வருஷம் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்கிறது எவ்வளவு பெரிய மடத்தனம்? நானும் உங்க அப்பாவும் ஒரு இன்டர் காலேஜ் மீட்டுல தான் முதல் முதலா பார்த்தோம். உங்க அப்பாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் எனக்குத் தெரிஞ்சவங்கதான். முதல்ல உங்கப்பா நல்லவர்ன்னு நம்பிக்கை வந்திச்சு. அதற்குப்பிறகு மூனு வருஷம் கழிச்சிதான் காதல் வந்திச்சு. என்ன ஆனாலும் வாழ்க்கையில எந்தக் கஷ்டம் வந்தாலும் இந்தப் பையன் சகிச்சிப்பான்னு ஒரு நம்பிக்கை வரணும்… போடி ன்னு அவன் என்றைக்குமே எதற்குமே கோபமா கத்த மாட்டான்னு நம்பிக்கை வரணும். அவன்கூட வாழும்போது போடா டாஷ்ன்னு நீ என்னைக்குமே சொல்லமாட்டேன்னு உனக்கும் நம்பிக்கை வரணும்… அதன்பிறகுதான் தைரியமா லவ் பண்ண ஆரம்பிக்கணும். கண்ணும் கண்ணும் பேசிக்கிட்டா மட்டும் பத்தாது. கொஞ்சம் மூளைகூடயும் பேசணும். 8 கிராம் கண்ணை நம்புற மாதிரி 3000 கிராம் மூளையையும் நம்பணும். கண்ணால ஸைட் அடிச்சா பத்தாது. மூளையாலும் ஸைட் அடிக்கணும்.”
“சூப்பர்மா, அப்புறம் அந்த இரண்டும் கெட்டான்னா என்ன அர்த்தம் மம்மி?”- ஜான்வி.
“ஏய் லூசு… அம்மா பேசி முடிக்கட்டும்.”- மது.
“பேசுறதுக்கு வேற எந்த லவ் மேட்டரும் என்கிட்ட இல்லப்பா. என்னோட லவ் ஸ்டோரியில அடுத்து என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க, சொல்லிச் சொல்லி வாயே வலிச்சிப்போச்சு.”
“சரி… இரண்டும் கெட்டான்னா என்ன அர்த்தம் மா??”- மது.
“ம்மா.. என்னைப் பார்த்துச் சொல்லுங்க, என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க, நான் தான ஃப்ர்ஸ்ட் அதைப் பற்றிக் கேட்டேன்?”- ஜான்வி.
“எந்த முடிவும் சரியா எடுக்கத் தெரியாத ஆளுங்க ஜானு. சரியாகச் சொல்லணும்னா… இந்த மாதிரி ஆளுங்களுக்கு முடிவே செய்யத் தெரியாது. இது சரி, இது தப்புன்னு முடிவே பண்ணத் தெரியாத கேஸ். என்ன பேசறோம்… எதுக்கு பேசுறோம்னு தெரியாமயே வெட்டிப்பேச்சு பேசுவாங்க… நம்ம எல்லோரும் இந்த ஸ்டேஜைக் கடந்துதான் வரணும். ஒரு குறிப்பிட்ட வயசுல அந்தப் பக்குவம் வந்திடும். வெட்டிப்பேச்சு பேசும் ரோமியோக்களை கண்டுபிடிச்சிடலாம்…” என்றார் வித்யா ஜான்வியின் கண்களைப் பார்த்தவாறு.
“புரியிதும்மா. ரெண்டும்கெட்டான்னா என்னன்னு இப்ப தெளிவா புரியிது. நம்ம மது மாதிரின்னு பளிச்சுன்னு சொல்லுங்களேன். நேத்துகூட ஹமாம் சோப் போடவா? டவ் சோப் போடவான்னு உங்ககிட்ட டவுட் கேட்டாளே??”- கட்டிலில் மல்லாக்கப்படுத்தபடி ஜானவி.
“அன்றைக்கு ஒரு நாள், மது உங்ககிட்ட வந்து அவளோட டம்மி கொறஞ்சிடுச்சா இல்லையான்னு கேட்டாளே?? டம்மி பெரிசா இருக்கா, ஆர்ம்ஸ் குண்டா இருக்கான்னு அவளைப்பற்றி அவளுக்கே தெளிவில்லாமல் கேட்டாளே… அதுதான ரெண்டும் கெட்டான் கேஸ்??” – கட்டிலில் மல்லாக்கப்படுத்து மதுவின் டம்மியையும் மதுவின் ஆர்ம்ஸையும் காட்டியபடி ஜானவி.
அதற்குப் பிறகுகூட ஜான்வி நிறைய பேசினாள்.. மதுவை வைத்து இரண்டும்கெட்டான்னுக்கு நிறைய விளக்கங்கள் கொடுத்தாள், உதாரணங்கள் கச்சிதமாகக் கொடுத்தாள். ஆனால் சத்தம் தான் வெளிவரவில்லை. மதுதான் ஜான்வியின் வாய்க்கு தலையணைகொண்டு பேபர்வெயிட் வைத்திருந்தாளே.. அதனால் சத்தமே கேட்கவில்லை.
இருவரின் சண்டையையும் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்த அன்னையின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
ஆனால் மது சீக்கிரமே வெட்டிப்பேச்சு பேச்சத் துடிக்கும் ரோமியோவை சந்திக்க நேர்ந்தது யார் செய்த குற்றம்?
காலம் செய்த குற்றமடி… அது காலம் செய்த குற்றமடி… ( அட போங்கப்பா இந்திய ஜனத்தொகை செய்த குற்றம்… 130 கோடி மக்கள் தொகையில் இளசுகளுக்கு பஞ்சமா என்ன?? அதுவும் இரண்டும் கெட்டான் இளசுகளுக்குப் பஞ்சமா என்ன?)
           *   *   *

Advertisement