Advertisement

“மது… மதூ…”- சமையல்கார பெண்மணி வீட்டைவிட்டு கிளம்பிய இரண்டு நிமிடத்தில் மதுவின் அன்னை வித்யா.
“வந்திட்டேன்மா.” என்று கூறியபடியே தனது அறையில் இருந்து வெளியே வந்தாள் மதுமிதா. மதுமிதாவின் அன்னை சாப்பாட்டு மேஜையில் டீகப்புடன் அமர்ந்திருந்தார். மதுவின் தந்தை அவசரமாய் குளித்து முடித்து ஈரத்துண்டால் பின்னந்தலை முடியில் லேசாகப் பட்டிருந்த தண்ணீரை துவட்டியபடியே வித்யாவின் அருகே வந்து அமர்ந்துகொண்டார்.
“வந்திட்டீங்களா? இப்ப எதுக்கு இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டீங்க? எப்போதும் போல டீ.வி முன்னாடி போய் உட்கார்ந்துக்க வேண்டியதுதான? உங்களுக்கு ஃபோன் போட்டு ஸ்கூல்ல நடந்ததை எல்லாம் ஒப்பிச்சி வச்சிட்டாளா? ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திட்டீங்க?”
“எனக்கு எதுவுமே தெரியாது வித்யா. வீட்டுக்கு சீக்கிரமா வர்றது தப்பா?” என்று போலியாகச் சலித்தபடி தனது டீக்கப்பை எடுத்து டீயைக் குடிக்க ஆரம்பித்தார்.
“அட… அட… ரியலி?” என்ற வித்யா கோபமாக தனது டீக்கப்பை மேஜையில் வைத்தார்.
“நிஜமா. என் ஃபோன்ல மதியத்தில் இருந்து சார்ஜே இல்ல தெரியுமா?”
துளியும் ஜெர்க் ஆகாமல் பதட்டம் இல்லாமல் பிள்ளைகள் பொய் பேசக் கற்றுக்கொள்வதே தந்தைகள் சொல்லித்தரும் பாடம்தான்.
 அப்பாவின் பக்கம் திரும்பாமல் (அவரே அம்மாவை சமாளிக்க அரும்பாடுபடுகிறார் என்ற நல்லெண்ணத்தில்) அம்மாவின் அருகே போய் நின்றாள் மது.
எப்படி அன்று காலை அவள் பிரின்சிபல் அறையில் நின்றபோது அவளது அன்னையின் அருகே நின்றாளோ அதே போல் இம்மி பிசகாமல் முகத்தில் பயத்தை அப்பிக்கொண்டு இப்போதும் தனது அன்னையின் அருகே நின்றாள் மது.
ஆம், இன்று காலையில்தான் லவ் லட்டர்ஸ் விஷயமாக பிரின்சிபல் அறையில் தனது அன்னை முன்னே தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள் மது.
ஏன் என்றால் அவளது அன்னைதான் அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை. அவளது அன்னை தான் கெமிஸ்டிரி மிஸ்.
                 *   *   *
“மதுமிதா கெமிஸ்டிரி மிஸ் உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. பிரின்சிபல் ரூமுக்குப் போ.” என்று அன்று மதியம் சாப்பாட்டு வேளை முடிந்து வந்த மதுவிடம் இயற்பியல் ஆசிரியை சொன்னபோது அந்த அறையில் உண்மையில் பின் டிராப் ஸைலென்ஸ் வந்துவிட்டது.
ஏன்னென்றால் மதுவின் அன்னைதான் கெமிஸ்டிரி டீச்சர் மற்றும் உதவி தலைமை ஆசிரியை. விஷயம் பிரின்சிபல் வரை சென்றுவிட்டது என்றால் அது நிச்சயம் பெரியதுதான் என்று புரிந்து கொண்ட மாணவர்கள் கப்சிப் என்றாகினர்.
“மதுமிதா அன்ட் ஹரினி ரெண்டு பேரும் இப்பவே பிரின்சிபல் ஆஃபீஸுக்குப் போங்க.” – சுத்தமான ஆங்கிலத்தில் ஆங்கில ஆசிரியை மெர்சி.
மாணவர்களின் உதடுகள் கப்சிப் என்று அடைத்துக் கொண்டன. மதுவின் இதயம் திடீரென்று நூறு டன் எடை கூடி கனத்துப் போய்விட்டது. அவள் அந்த பெரிய நடைபாதையில் நடந்தபோதும் தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்த போதும் அவளது இதயம் துடித்ததற்கான அறிகுறியே தெரியவில்லை. அத்தனை அமைதி அவளது இதயக்கூட்டிற்குள். அந்த பள்ளி வளாகத்தைப்போல அவளது இதயத்திற்குள்ளும் அமைதி பரவியிருந்தது.
கைவைத்ததும் கீச்சென்று சப்தமிட்ட தலைமை ஆசிரியரின் அறைக்கதவை மெல்லத் திறந்து “கேன் ஐ கம் இன் சார்?” என்று அனுமதி கேட்டவாறு லேசாகத் தெரிந்த கதவின் இடைவெளியின் ஊடே எட்டிப்பார்த்தார்கள் மதுமிதாவும் ஹரினியும்.
“கம் இன்.” என்று தலைமை ஆசிரியரின் கணீர்க்குரலில் உடல் முழுதும் ஜில்லென ஆகிவிட மெல்ல அறைக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
அந்த அறையில் உதவி தலைமை ஆசிரியை வித்யா, தலைமை ஆசிரியர் ஜான் ஆப்ரஹாம் மற்றும் இரண்டு வகுப்பு ஆசிரியர்கள் இருந்தனர்.
“திஸ் இஸ் மதுமிதா ரைட்?? வித்யா, இஸ் ஷி யுவர் டாட்டர்??” என்று ஆசிரியர் வித்யாவிடம் பிரின்சிபல் கேட்டபோது முகத்தை எங்கு வைத்துக்கொள்ளவென்றே தெரியவில்லை மதுவிற்கு.
“யெஸ் சார்.” – வித்யா.
“இஸ் ஷி இன்வால்டு இன் திஸ் ஸ்டுபிட் வேலென்டெயின்ஸ் டே பிஸ்னஸ்?” ( Is She Involved in this stupid valentines day business?)- பிரின்சிபல்.
“ஐ, திங்க் ஸோ. திவ்யா மிஸ் கம்ப்ளைன்ட் பண்ணாங்க சார்.”- ஆசிரியர் வித்யா.
“ஓ… மிஸ் திவ்யாவை கூப்பிடுங்க ப்ளீஸ்.”
ஆசிரியை திவ்யா வந்ததும் விசாரணை ஆரம்பம் ஆனது.
“என்ன ஆச்சு மிஸ் திவ்யா? வாட்ஸ் த ப்ராப்ளம்?”
“நீங்க சொன்ன மாதிரி லன்ச் ஹவர்ல எல்லா ப்ளஸ் ஒன் ஸ்டூடன்ஸ் பேக்கையும் செக் பண்ணாங்க சார். ப்ளஸ் ஒன் பேட்ச்ல மதுமிதா பேக்லதான் சார் லவ் லட்டர்ஸ் இருந்துச்சு.”
“வாட் டூ யூ மீன் பை லவ் லட்டர்ஸ்??”
“மதுமிதா பேக்ல மூனு லவ் லட்டர்ஸ் இருந்திச்சு சார். ஹரினிக்கு லவ் லட்டர்ஸ் வரல. பட் ரெண்டு பேரும் ரொம்ப கிளோஸ் ஃப்ரண்ட்ஸ்… அதான் விசாரிக்க ஈசியா இருக்கும்னு…”
மதுமிதா மயக்கம் போடாத குறையாக நின்று கொண்டிருந்தாள். ஒரு லவ் லெட்டருக்கே இரண்டு நாட்களாகப் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தாள். அதனால் இப்போது, மூன்று லவ் லெட்டர்ஸா? என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் ஆம்புலன்ஸின் சைரன் போல அவளின் புத்திக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
ஹரினிக்கும் தான் மயக்கம் வந்தது.
லவ் லட்டர்ஸ் ஹரினிக்கு வரவில்லை என்றாலும் மதுவிற்கு வந்திருந்த மூன்றில் ரக்ஷக்தருணின் லவ் லட்டர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் என்ற அதிர்ச்சியில் அவளுக்கும் மயக்கம் வருவதுபோலத்தான் இருந்தது.
“வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்?” என்று இருவரிடமும் கேட்ட தலைமை ஆசிரியர் ஜான், “வேர் ஆர் த பாய்ஸ்?” என்று ஆசிரியர்களிடம் அனல் குரலில் கேட்டார்.
மூன்று மாணவர்களும் வந்து சேர்ந்ததும் ஒரு மணி நேரம் அனைவரையும் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினார். அதன்பிறகு, “இதுதான் இறுதியான எச்சரிக்கை.” என்று கண்டிப்பான குரலில் கூறி கண்டித்து அனுப்பினார் தலைமை அசிரியர் ஜான்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று வகுப்பறைக்கு வந்தவர்களை மற்ற மாணவர்களின் கண்கள் நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தது. மதிய வேளையின் இரண்டு வகுப்புகளிலும் யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் ஊமையாய் அழுதுகொண்டே இருந்தாள் மது. அதன்பிறகு தனது கவலை மறந்து மதுவிற்கு ஹரினி ஆறுதல் சொல்ல கொஞ்சம் இலகுவான மனநிலைக்கு வந்துவிட்டாள் மது.  அன்றைய நாளின் கடைசி பீரியட்டின் ஆசிரியர் அன்று விடுப்பு எடுத்திருந்த காரணத்தால் மாணவர்கள் அனைவரும் நூலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
பெயருக்கு என்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு மது ஹரினியிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
“என்மேல ஒரு பெர்சென்ட்கூட தப்பில்ல ஹரினி. ஸ்டுபிட் தருண் பண்ண வேலையால நான்தான் எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன். நீ ஸ்டாராங்கா எவிடன்ஸோட சொன்னதாலதான் இன்னிக்கு தப்பிச்சிருக்கேன்..”
“விடுப்பா… அதான் அந்த தருணுக்கு வார்னிங் கொடுத்திருக்காங்கல, இதுவும் நல்லதுக்குதான். இனிமே திரும்பத் திரும்ப பிரச்சனை வராமல் இருக்கும். ஆனா ஒண்ணு மது…”
“என்ன ஹரினி.”
“இந்த தருண் உன்கிட்ட கார்ட் நீட்டுவான்னு நான் கெஸ் செய்திருந்தேன். ஆனா விநோத், கார்த்திக் பற்றி நான் கெஸ் பண்ணவே இல்லையே? இரண்டு பேரும் உன்னை இன்ஸ்டாவில் ஃபாலோ பண்றாங்கல?”
“ம். இன்னிக்கி முதல் வேலையா இன்ஸ்டா அக்கவுன்ட்டை கிளோஸ் பண்ணணும். ஆனா இப்பதான் எனக்கு 500 ஃபாலோயர்ஸ் சேர்ந்திருந்தாங்கப்பா. என் அம்மா ஃபோன்லதான் அக்கவுன்ட் வச்சிருக்கேன். பாஸ்வேர்ட்கூட அம்மாக்குத் தெரியும். அம்மாவுக்கு என்னோட ஃபாலோயர்ஸ் எல்லாரையும் தெரியும். லவ் லெட்டர் கொடுத்தது விநோத், கார்த்திக் என்று தெரிந்ததும் அம்மாவே என்னோட இன்ஸ்டா அக்கவுன்டைக் கிளோஸ் பண்ணிடுவாங்க. 500 ஃபாலோயர்ஸ்… இவனுங்க மூனு பேராலப் போச்சு.” என்ற மதுவின் குரலில் பெருத்த ஏமாற்றம்.
ஒரே ஒரு காதல் கடிதம் வந்துவிட்டால் அம்மா பேட்மிட்டன் வகுப்பையே நிறுத்தி விடுவார் என்று பயந்தவளுக்கு மூன்று காதல் கடிதங்கள் வந்தால்… அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வது கஷ்டம் தானே?
1980- 2000 வரை, சிறார்களுக்கு பெற்றோரிடம் அடிவாங்குவது பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது.
ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் அதாவது 2000-2020 வரையிலான காலத்தில் பதின் வயதுடையவர்களுக்கு பெற்றோரிடம் திட்டுவாங்குவதே பெருத்த அவமானமாகக் கருதப்படுகிறது.
“நீங்க இப்படி திட்டினது எனக்கு எவ்வளவு ஹர்டிங்கா (Hurting) இருந்திச்சு தெரியுமா?” என்பதுதான் பிள்ளைகள் பெற்றோரிடம் பேசும் இப்போதைய பிரபலமான வசனம்.
எவன்டா அந்த hurting-ங்கிற வார்த்தையை நம்ம தமிழ் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தான்?? அவன் கையில் கிடைத்தால் பல பெற்றோர்கள் அவனுக்கு உப்பில்லாத உப்புமா செய்து கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். உப்புமா ஒரு தண்டனையா என்று யோசிக்க வேண்டாம்… உப்புமா பிடிக்காதவர்களுக்குத்தான் தெரியும் உப்பில்லாத உப்புமா எவ்வளவு பெரிய தண்டனை என்று.
மதுவும் அந்தத் திட்டுகளைத்தான் அவமானமாக நினைத்து இப்போது கவலைப்பட்டாள்.
வீட்டிற்குப் போனதும் அம்மா திட்டுவாங்களே? என்ற கவலைதான் இப்போது மதுவை பேயாய் பிடித்து உலுக்கியது.
அட விடு மதுக்கண்ணு, இதுக்கு போய் மூஞ்சியத் தூக்கி வச்சிக்கிட்டு… நாங்கலாம் ரெண்டு வௌக்கமாறு பிஞ்சாகூட அசரமாட்டோம்ல… ஐஞ்சு வயசுல இருந்து டிரைனிங் எடுக்குறோம்ல? வைரம் பாய்ஞ்ச உடம்புடா இது… ந்தில் வளையாதது ம்பதில் வளையாதுன்னு சொல்லிச் சொல்லி கேப்பில்லாம அடி வாங்கிருக்கோம் தெரியுமா மதுக்கண்ணு??– (1980- 2000 க்குள் பிறந்த பல அற்பப்பதர்களின் குரல்)
             *   *   *
           
                  5
மீண்டும்   மதுவின்   இல்லத்தில்…
மது சோம்பேறியாய் வகுப்புகளை கவனித்துவிட்டு சோம்பேறியாய் வேனிற்குப் புறப்பட்டாள். அணில் போல ஜான்வி உதவியதால் தனது வீட்டில் இப்போது தந்தையின் முழு பாதுகாப்பில் மது.
மதுவிடம் சுமார் பத்து கேள்விகள் கேட்டார் வித்யா. அனைத்திற்கும் நேர்மையாக பதில் தந்தாள் மது. மதுவின் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதை வித்யா கண்டுபிடுத்துவிட்டார்.
ஆனால் அவர் பள்ளியிலேயே ஒரு முடிவை எடுத்திருந்தார். இனி இது போன்ற பிரச்சனைகளில் மது சிக்காமல் இருக்க வேண்டும் என்பதை தலை வலிக்க வலிக்க யோசித்தவருக்கு அந்த முடிவுதான் சரியெனப் பட்டது. மதுவை பேட்மிட்டன் வகுப்பில் இருந்து நீக்க முடிவு செய்திருந்தார்.
“அந்த தருண் பேட்மின்டன் சாம்பியன் தான?”- மதுவின் அன்னை வித்யா மதுவிடம் தனது விசாரணையின் இறுதிக்கேள்வியைக் கேட்டார்.
அம்மா அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று யூகித்தவள் கண்கள் குளமாகிப்போயின.
மதுவின் வீட்டில் பெற்றோர் கறார் குரலில் பேசினால் அதில் உறுதி இரும்பு போல இருக்கும். அதை மதுவும் ஜான்வியும் மீறுவதில்லை. மீறிப் பழக்கம் இல்லை.
அன்னை வித்யா பேட்மிட்டன் பற்றிக் கேட்டதும் மகளின் வருத்தத்தை புரிந்துகொண்ட அவளது தந்தை,
“அதுக்கு? அதுக்கு இப்ப என்ன? அவ பேட்மின்டன் கிளாஸ் போகத்தான் போறா. அதெல்லாம் நிறுத்த மாட்டேன்.” என்றார் திடமான குரலில் முடிவாக.
“நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா?”- வித்யா.
“வித்யா.. திஸ் இஸ் பாயின்ட்லெஸ்.. ஷி இஸ் எ கிட்…” ( vidya this is pointless. she is just a kid.) 
“அ-ர்-ஜு-ன்.” (இது வார்னிங் நம்பர் ஒன். மனைவி கணவனின் பெயரை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால் அது முதல் வார்னிங். இரண்டாவது மூன்றாவது எல்லாம் சொல்ல வேண்டுமா என்ன? அந்தச் செல்லப் பெயர்கள் வீட்டுக்கு வீடு மாறாது?)
ஆனால் மதுவின் தந்தை தனது எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல் மதுவிடம் திரும்பி, “ஆர் யூ இன்வால்டு இன் திஸ் மது? உனக்கும் இதுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா?  I want an honest you know…” என்று கேட்டார் இறுதியாய்.
“நோ டாடி… சத்தியமா இல்ல.” – உறுதியாய் உண்மையாய் மறுத்தாள் மது.
மதுவின் கண்களை ஆழமாகப் பார்த்த பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர். வித்யாவிற்கும் நிம்மதிதான். ஆனால் வரட்டுப் பிடிவாதம் பிடித்தபடி கோபமாக, “நீங்களாச்சு… உங்க பொண்ணாச்சு… ஐ டோன்ட் கேர்.” என்று கத்திவிட்டு பெட்ரூமிற்குள் சென்று அடைந்து கொண்டாள்.
மது மெல்ல சாப்பாட்டு மேஜை அருகே இருந்த நாற்காலியில் தந்தையின் அருகே அமர்ந்தாள்.
“ஹோம் வொர்க் இருக்குல? போ கண்ணா… போய் ஹோம்வொர்க் பண்ணு…”
“பேட்மிட்டன் கிளாஸ் கட்டாகிடுமோன்னு ரொம்ப பயந்தேன். தாங்க்யூ டாடி.” என்று சொன்ன மதுவின் கண்களில் அத்தனை நன்றிகள் இருந்தன.
அர்ஜுன் மெல்லியதாய்ச் சிரித்தார்.
“டாடி…”
“ம்??”
“அம்மாகிட்டப் போய் பேசவா?”
“எதுக்கு? நாளைக்குப் பேசு. இப்ப நீ போனா கத்துவா. ஸ்கூல்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசிருப்பாங்கல… அந்தக் கோபத்துல கத்துவா.. லீவ் ஹர் அலோன்.”
“அம்மாகூட நீங்க சண்டை போட்டா, நீங்க போய் சமாதானம் செய்வீங்கல? அப்படியே விடமாட்டீங்கல… அதே மாதிரிதான் நானும் சமாதானம் செய்யப்போறேன்… ஓகே?”
“ஓகே.” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அர்ஜுன்.
சொல்வதைச் சொல்லுமாம், செய்வதைச் செய்யுமாம் கிளிப்பிள்ளை. பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்களை பல விஷயங்களில் நகல் எடுக்கின்றனர். அதுவும் பெண் பிள்ளைகள் அப்பா எவ்வழியோ அவ்வழியேதான்.
இந்தக் கதையெல்லாம் விடுங்க இன்ஸ்டா அக்கௌன்ட் என்ன ஆச்சுன்னு 500 ஃபாலோயர்ஸ் கதி என்ன?? என்று நீங்க கேட்குறது கேட்குது… இன்ஸ்டா அக்கௌன்ட் இன்னும் நான்கு வருடங்களுக்கு பக்கவாதம் வந்து எந்த ஒரு அசைவும் இன்றிக்கிடக்கும் வாசகர்களே. புது டிரஸ் வாங்கியபோதெல்லாம் அதனை அணிந்து வலம் வரும் மதுவின் புகைப்படங்களை இனி அந்த 500 பேரும் பார்க்க முடியாது. மதுவின் புத்தாடைகளைப் பார்த்து அதேபோன்ற உடைகளை வாங்கிய தோழிகள் இனி அதேபோல ஃபிளிப் கார்டில் ஆர்டர் செய்ய முடியாது. ஜொல்லுவிட்ட பசங்க நாலைந்து வருஷத்துக்கு வேற மதுமிதாவைத் தேட வேண்டியதுதான். சிம்பிள்…
               *   *   *

Advertisement