Advertisement

யாரை பைக்கின் பின் டயர் என்று பாவித்து புத்திக்குள் ஏற்றாமல் இருந்தானோ அவள் தான் அவனது புத்தியின் அனைத்து செல்களையும் தன் வசமாக்கியிருந்தாள்.
நிழலான கனவுகளில் ஆட்டம் கண்டது அவனது மனஉறுதி. ஆனால் நிஜமான பகலில் அசோகா பில்லரைப்போல ஓங்கி ஒய்யாரமாய் உறுதியாய் நின்றது அதே மனஉறுதி. கொத்தாய் அவனது கனவுகளை அவள் சூரையாடியிருந்தாலும் கெத்தாய் வலம் வந்தான் மது முன்னே.
அவளுடன் இருக்கும் போதெல்லாம் அவளின் செல்களின் கதிர்வீச்சு அவனுக்குள் ஊடுருவிக் கொண்டே இருந்தது. இன்ப வயாகரா… தப்பு தப்பு சாமி சரணம்… இன்ப நயாகரா அவனை நனைத்துக்கொண்டே இருந்தது.
இத்தனை நாளும் மது என்னும் பவித்திர பார்கடலில் விழாமல் தப்பித்துக்கொண்டே இருந்தவன் எப்போது எக்கணம் விழுந்து நீச்சல் அடிக்க ஆரம்பித்தான் என்பது அவனுக்கே இக்கணம் வரை புரியாத புதிராகத் தான் இருக்கின்றது.
அவளுடன் கழித்த தொண்ணூறு நாட்களில் இருந்த 5000 நிமிடங்களில் ஏதோ ஒரு நிமிடம் தான் அவன் மதுவின் பவித்திர பார்கடலுக்குள் விழுந்திருக்க வேண்டும் என்று சரியாக கணித்தவன் மதுவுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்துக்கொண்டே வந்தான். இத்தனை நாளும் அவளது முகத்தைப் பார்த்துப் பேசியவனால் தனிமையில் அவளது முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.
முகத்துக்குள் அழகாய் ஜொலிக்கும் உதடுகளை 30 டிகிரி, 40 டிகிரி, 60 டிகிரி என அத்தனை கோணத்திலும் பார்க்க பரபரத்தது அவனது ஆண்மை.
உதடுகளை மட்டுமா அவனது ஜாமென்டிரி கண்கண் நோட்டம்விட்டன??  இல்லை.
அவளது பொன்மேனியை வைத்து அங்குலம் அங்குலமாக பயாலஜி படித்துக்கொண்டிந்த தனது ஜாமென்டிரி கண்களுக்கு தனிமையில் மதுவை நோட்டம்விட அனுமதிக்கக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தான் அந்த பைக் பயணத்திற்குப் பிறகு.
அவர்களின் பைக் பயணத்தை பெங்களூர் சாலையில் பானி பூரி விற்றுக்கொண்டிருந்தவன், கோன் ஐஸ் விற்றுக்கொண்டிருந்தவன், கம்பிளிப் போர்வை விற்றுக் கொண்டிருந்தவன் என அனைவரும் ஏக்கமாகப் பார்க்க… ஒரே ஒரு ஜோடிக் கண்கள் மட்டும் கோபமாகப் பார்த்தது.
அந்த ஒரு ஜோடிக் கண்களின் சொந்தக்காரர் மிஸ்டர்… மிஸ்டர்…
               *   *   *                  
                 15
அந்த பைக் பயணத்திற்குப் பிறகு மதுவும் ஆர்யாவும் நேரில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஆர்யா சென்னை சென்றிருந்தான்.
மது அந்த பைக் பயணத்தை மறந்துவிட இந்த இடைப்பட்ட ஒரு வார கால அவகாசம் போதுமானதாக இருந்தது. அந்த முதல் நான்கு நிமிடங்கள் முழுதாக மனதைவிட்டு அகலாவிட்டாலும் அதன் தாக்கம் பெருமளவில் குறைந்து போனது. சகஜமாய் தனது வேலைகளை அந்த கருப்பு பைக்கை நினைக்காமல் அவளால் செய்ய முடிந்தது.
ஒரு அலுவலக விழாவில் பஃபேயில் இருந்த புஃல்காவோடு பன்னீர் பட்டர் மசாலாவையும் எடுத்துக்கொண்டு, வெள்ளை சாட்டின் ஆடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கபட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டாள் மது. அப்போது தான் பத்து நாட்களுக்குப் பிறகு அந்த அரங்கத்தில் ஆர்யாவைப் பார்த்தாள் மது. ஆர்யா தனியாக அந்த அரங்கத்திற்குள் சுற்றி வருவதைப் பார்த்தாள்.
தனதருகே அதேபோல உடையணிந்திருந்த நாற்காலியை பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டு சாலட்டை தனது தட்டில் அடுக்கிக்கொண்டிருந்த ஆர்யாவை, ‘ஏய் ஆர்யா’ எனச் சத்தமாக அழைத்தாள். தான் சிறை பிடித்து வைத்திருந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டி, “உனக்கு தான் ரிசர்வ் பண்ணிருக்கேன். கம் ஃபாஸ்ட்.” என்றாள்.
ஆர்யா அருகே வந்ததும், “என்ன ஊருக்குப்போய் பத்து நாள் டேரா போட்டுட்ட?” என்று கேலியாய் வினவினாள் மது.
“சித்தப்பா பையன் கல்யாணம் மது. டெல்லியில்  நடந்தது. அதான் பத்து நாள் லீவு தேவையாகிடுச்சு.”
“ஓ…”
“இன்னும் நாலு மசாத்துல அமெரிக்கா போறேன் ஆர்யா. விசா வந்திடுச்சு.”
“ஓ…”
“ஆர்யா உனக்கு அமெரிக்கா லைஃப் பற்றி ஏதாவது தெரிஞ்சா சொல்லு… என்னோட ஃப்ரண்ட்ஸ் அமெரிக்கா பற்றி நிறைய சொல்றாங்க… அந்த நாட்டுக்குள்ள கால் எடுத்து வைச்சதும் முதல் நாலு நாள்ல நமக்கு கழுத்து சுழுக்கிடுமாம். மேலே நிமிர்ந்து நிமிர்ந்து எல்லா கட்டிடத்தின் உயரத்தையும் பார்த்து கழுத்து வலியே வந்திடுமாம் ஆர்யா. பத்து மாடி பில்டிங்ல 150 அப்பார்ட்மென்ட் வீடுகள் வரை இருக்குமாம் ஆர்யா. ஒரு முறை 2003 ஆம் வருஷம் நான்கு நாட்கள் கரன்ட் கட் ஆச்சாம். அப்போ யாரும் வீட்டுக்குப் போக முடியாம தெருவில் படுத்துக் கிட்டாங்களாம். பத்தாவது மாடியில குடியிருந்தவர்கள் எல்லோரும் கரன்ட் இல்லாமல் லிஃப்ட்ல போக முடியாதுன்னு தெருவிலேயே படுத்துக் கிட்டாங்களாம் ஆர்யா.” 
“ஓ… மது அவன்ஜர்ஸ் படம் பார்க்கணும்னு சொன்னீல? இந்தா பென் டிரைவ்..” என்று தனது பென் டிரைவ் கொடுத்து அவளது பேச்சை திசை திருப்பப் பார்த்தான் ஆர்யா.
ஆனால் ஆர்யாவின் பென்டிரைவ்வை வாங்கி தனது பேக்கில் போட்டுக்கொண்டவள் மீண்டும் அமெரிக்காவைப் பற்றியே புரளி பேசினாள்.
‘நான் பத்து நாள் முன்னே இவளைத்தான் என்னோட பைக்ல கூட்டிட்டுப் போனேனா, இல்ல… வேற பொண்ணை பைக்ல கூட்டிட்டுப் போனேனா? இவ பேசுறதைப் பார்த்தா என் கூட பைக்ல வந்த மாதிரி சிம்டம்ஸே காட்டலயே… ஆம்பளப் பிள்ளை எனக்கே பல சமாச்சாரங்கள் தோணும்போது இந்தப்பிள்ளைக்கு ஏன் எதுவுமே தோணல? யாக்கர் பவுள் பண்ணாக்கூட உன்னோட ஸ்டெம்ப் மண்ணைக் கவ்விட்டு ஸ்டெடியா நிற்குதே மது. நீ உண்மையிலேயே கிரேட்தான். பசங்களோட கரிஷ்மா, தேஜஸ் தாக்காம இருக்க ஏதாவது ஸ்ஹஸ்ரீஸ்ரீண்ய்ங் போடுறாளோ? அமெரிக்காகாரன் கரண்ட் இல்லாம ரோட்டுல படுத்தா எனக்கென்ன? அவன் பெட்டுல படுத்தா எனக்கென்ன?’ என்று தீவிரமான யோசனையில் இருந்தவனிடம்,
‘கால் வலிச்சா கால்ல ஜன்டூ பாம் போட்டுக்கலாம். காது வலிச்சா… காதுல ஜன்டூ பாம்மா போட்டுக்க முடியும்? மதுவை நிறுத்துச்சொல்லு ஆர்யா. ஒரு ஓரத்துல உட்கார்ந்து இந்த சாலட்ல இருக்கிற நாலு காரெட், நாலு வெள்ளிரிப்பிஞ்சை சத்தமில்லாம சாப்பிட்டுட்டுப் போயிடலாம் வாடா ஆர்யா.’ என்று மேலும் இம்சித்தது அவனின் மனது.
மனதையும் சமாளித்து தன்னையும் சமாளித்து தேவையானபோது ஒரு “ஓ” மட்டும் மதுவிடம் பதிலாகச் சொல்லிக்கொண்டே இருந்தான் ஆர்யா.
“ஓ…”- ஆர்யா.
 “அமெரிக்காவின் அந்த நியு யியர் பால், அந்த கவுன்ட் டவுன் எல்லாம் நான் இந்த வருஷம் பார்க்கப்போறேன்னு நினைச்சா எனக்கு நம்பவே முடியல ஆர்யா.” என்று விழாவில் இருந்து கிளம்பும் போதும் மது மட்டுமே பேசிக் கொண்டே இருக்க… ஆர்யாவும் மதுவும் லிஃப்ட் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் கிளம்பிய நேரம் இரவு எட்டு மணி.
இப்போது இருவரும் அலுவலகத்திற்கு நைட் ஷிஃப்ட் வேலைக்குச் செல்ல வேண்டும். கீழ் தளத்தில் விழா நடந்தது, மற்றவர்கள் இன்னும் ஜுஸ் டான்ஸ் என்று லயித்து இருந்தபோது மதுவும் ஆர்யாவும் மேல் தளத்தில் இருக்கும் அலுவலகம் செல்ல லிஃப்ட் நோக்கி நடந்தனர்.
லிஃப்ட்டை நெருங்க நெருங்க பதட்டம் அடைந்தான் ஆர்யா. அவனது விழிகள் தான் அவளுடன் பேச ஆரம்பித்த கணத்தில் இருந்து அவளிடம் பயாலஜி பாடத்தை படிக்க ஆரம்பித்து விட்டதே… அதனால் வந்த பதட்டம். விழிகளில் ஆரம்பித்த பாடம் உதடு, கன்னம், தாடை என்று படிபடிப்பாக கீழ்நோக்கி நகர ஆரம்பிக்க ஜன்னியே வந்துவிட்டது அவனுக்கு. பதட்டம் கூடியது…
அவனது கெட்ட நேரம் லிஃப்ட்டின் எதிரே அவர்கள் இருவரும் சென்று நின்ற நொடி அது உடனே திறந்து கொண்டது.
அவனது கெட்ட நேரத்தின் கெட்ட நேரம் லிஃப்டிற்குள் யாருமே இல்லை.
அவனது கெட்ட நேரத்தின் கெட்ட நேரத்தின் கெட்ட நேரம் லிஃப்ட்டிற்குள் நுழைந்ததும் மது அவனது உதடுகளுக்கு வெகு அருகில் இருந்தாள்.
                   *   *   *
“லிஃப்ட்டின் கதவுகளை மூடும் பொத்தானை மது தொட்டுவிட்டு நான் 4வது மாடி… நீ மீட்டிங் ஹால் தான போற? அது ஆறாவது மாடி…” என்று அவனுடன் பேசியபோது தான் அவனது உதடும் அவளது கன்னமும் அருகருகே இருந்தன.
அடுத்த நொடி அவள் அவனது உதடுகளிமிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்து விட்டாள். லிஃப்ட் நகர ஆரம்பித்ததும் அமைதியாக தனது கைபேசியில் மூழ்கிய மதுவின் உதடுகளைப் பார்த்து தடைபட்ட பயாலஜி பாடத்தை மீண்டும் படிக்கும் தீர்மானத்துடன், “என்ன பண்ற மது? அமிஞ்சிக்கரை பற்றி கூகுள் பண்றியா?” என்று வம்பு வளர்த்தான் ஆர்யா.
“வாட்?”
“அமெரிக்கா பற்றி கூகுள் பண்றியான்னு கேட்டேன்…”
“ஏய் என்னைக் கிண்டல் பண்றியா? என்று மது கேட்டதற்கு பதிலே தராமல் சிரித்தவனிடம், நீங்க கூகிள் பண்ணவே மாட்டீங்களோ?? கடைசியா நீங்க எதை கூகுள் பண்ணீங்க சார்?” என்று எடக்காகக் கேட்டாள்.
“ரீசென்ட்டா திருமலைநாயக்கர் மஹால் பற்றி பார்த்துட்டு இருக்கேன்… உன்னோட அமெரிக்கா இது பக்கத்துலயே வர முடியாது தெரியுமா?” என்றவன் மஹாலின் புகைப்படத்தை அவளுக்கு தனது கைபேசியில் காட்டினான்.
“இந்த பில்டிங் எனக்குத் தெரியும் ஆர்யா… ஐஸ்வர்யா ராயும் அபிஷேக்கும் குரு படத்துல இந்த பில்டிங்ல டான்ஸ் ஆடிருப்பாங்க…”
“என்னது பில்டிங்கா? சத்தமா சொல்லாத மது… திருமலைநாயக்கர் மன்னர் நைட் கனவுல வந்து உன்னைக் கசமுசா பண்ணிடுவார்.”
“வாட்??” என்று அதிர்ச்சியாய் விழித்தவளிடம்,
“இது ஒரு அரண்மனை மது. அரண்மனையை பில்டிங்ன்னு சொன்னா மன்னர் கோச்சிக்க மாட்டாரா?”
“ஹா… ஹா… உன்னோட அம்மிஞ்சிக்கரை உண்மையிலேயே அமெரிக்காவை விட நல்லாதான் இருக்கு.” என்று அவனிடம் தனது விரல்களில் தம்ப்ஸ் அப் காட்டியபடியே சொன்னாள் மது.
“தம்ப்ஸ் அப்” என்று காட்டிய விரல்களை விடுத்து “தம்ப்ஸ் அப்” என்று சொன்ன உதடுகளைப் படித்தான் ஆர்யா. எத்தனை முறை அதைப் படித்தாலும் அதைப்பற்றி… அவளது உதடுகளைப் பற்றிக் கண்ணா பிண்ணாவென்று சந்தேகம் எழுந்துகொண்டே தான் இருந்தது அவனுக்கு.
“உதடுகள் பற்றிய சப்ஜெக்டில் நீயும் அவளும் குரூப் ஸ்டடி பண்ணா டவுட் வராதுன்னு நினைக்கிறேன்…” என்று அவனிடம் எடுக்கு பேசியது அவனது ஆண்மை.
“பிடிச்ச பொண்ணா இருந்தாலும் அவ பெர்மிஷன் இல்லாம அவ உதடு, கண்ணு அப்புறம் Etc, Etc எல்லாம் பார்க்கிறது தப்புப்பா ஆர்யா.” என்று நல்லவிதமாய் புத்திமதி சொன்ன மனதிடம், “மண்ணாங்கட்டி” என்று திமிராய் பதில் தந்தான் ஆர்யா.
லிஃப்ட் நின்றது. மது நான்காம் தளத்தில் இறங்கிக்கொண்டாள். ஆர்யா ஆறாவது பொத்தானை அழுத்தினான்.
“அப்பாடா… இன்னும் ரெண்டு ஃப்ளோர் இருந்தது… இந்நேரம் பெரிய கசமுசாவே இந்த லிஃப்டில் நடந்திருக்கும்ல ஆர்யா? உலக மகா லவ் சீன் இப்ப இந்த லிஃப்டல தான் நடந்திருக்கும் இல்ல ஆர்யா?” என்று அவள் சென்ற பிறகு அவனது மனது அவனிடமே சந்தேகம் கேட்க, “ஆம்” என்று சொல்லி ஆமோதிப்பதா, இல்லை… “நான் மதுவைவிட ஸ்டாராங் மச்சி.” என்று சொல்லி மறுப்பதா என்று தெரியாமல் லிஃப்டிற்குள் குழம்பி நின்றான் ஆர்யா.
“யெஸ் ஆர் நோ…(yes or no)” – மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது.
லிஃப்ட்டிற்குள் இருந்த சில்வர் நிறத்தில் ஜொலித்த ஸ்டீல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஆர்யா அமைதியாக நின்றான்.
“யெஸ் ஆர் நோ…(yes or no)” – மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது.
ஆர்யா மனதிடம் பிடிவாதமாய் பதில் பேசாமல் அமைதி காத்தான்.
“இன்னும் இரண்டு மாடி இருந்திருந்தா, இப்ப இந்த லிஃப்டுக்குள்ள தப்பு நடந்திருக்குமா இல்லையா? யெஸ் ஆர் நோ… (yes or no)”- மீன்டும் மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது. 
“யெஸ் யெஸ் யெஸ்.” என்று கண்மூடித்தனமாய் தனது பதிலை மனதிடம் கத்தினான் ஆர்யா. அதே நேரம் ஐந்தாம் தளத்தில் லிஃப்ட் கதவுகள் திறந்தன. அவன் எதிரே மது நின்று கொண்டிருந்தாள்.
“எனக்கும் மீட்டிங் ஹால்தானாம்… நானும் ஆறாவது ஃப்ளோர் ஆர்யா.” என்று கூறிச் சிரித்தாள் மது.
உடலின் ஹார்மோன்களின் கஷ்டம் புரியாத ஈவுஇரக்கமற்ற மனது, “இன்னும் ஒரு மாடி அவகூட லிஃப்ட்ல தனியாகப் போகப் போற… இப்ப யெஸ் ஆர் நோ சொல்லு ஆர்யா. கசமுசா நடக்குமா நடக்காதா? யெஸ் ஆர் நோ?” என்று சற்றுமுன் தன்னிடம்  கோபப்பட்டவனிடம் படு கெத்தாய்க் கேட்டது.
சற்று முன் தன்னிடம் மண்ணாங்கட்டி என்று கூறி எறிச்சல் அடைந்தவனிடம் நக்கலாய் அக் கேள்வியைக் கேட்டது அவனது மனது.
                   *   *   *
“ஏய் நான் பெங்களூர் வந்து பத்து நாளாச்சு. இன்னும் இங்க வானிலை எப்படின்னு நீ ரிப்போர்ட்டே வாசிக்கலையே மச்சி?”- விவேக்.
“டேய்… ஒரு மேட்டரும் இல்ல டா. நம்பு.”
“ஒண்ணுமில்ல?”
“ஒண்ணுமில்லயே…”
“டேய், புழுகாதடா. கடைசி காலத்துல பிட்ஸா கிடைக்காம அலைவ. மது உன்னோட பிரான்ச் தான?”
“ஆமா. நாங்க ஒரே ஃப்ளோர்தான். இரண்டு கேபினுக்கு தள்ளிதான் இருக்கா. இப்ப அதுக்கு என்ன?”
“எப்படி பேசுறா? உன்கூட எப்படி பேசுறா?”
“ப்ச். அடிச்சிடுவேன்டா… மது பத்திக் கேட்காத…”
“என்ன மச்சி ரொம்ப டென்ஷனாகுற? வானிலை அவ்வளவு மோசமாவா இருக்கு?”
“மச்சி… நமக்குத் தெரிஞ்ச பொண்ணை நாலு பேர் ஸைட் அடிக்கிறதைப் பார்க்கும்போது எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமாடா விவேக்?”
“என்னடா இப்படி சட்டுன்னு கேட்டுட்ட? என்கிட்ட கேட்காமலே எனக்கு அதுல நிறைய அனுபவம் இருக்குன்னு உனக்கும் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் சம்பிரதாயமா கேட்டிருக்க. அப்படித்தான?”
“டேய்…”
“சரி… பேச்சை கொறச்சிக்கிறேன். அதுல எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு மச்சி. 100 டிகிரியில ஒரு மூனு மணி நேரம் டைம் செட் பண்ணி நம்ம ஹார்ட்டை மைக்கிரோவேவ் ஓவன்ல வச்ச மாதிரி இருக்கும் அந்த ஃபீல். நீ மேல சொல்லு.”
“எதிர்த்த கேபின், பக்கத்து கேபின்னு எல்லா கேபின்ல இருப்பவனும் மதுவை ஸைட் அடிக்கிறானுங்க மச்சி.”
“பயப்படாத. மது எல்லோருக்கும் டாட்டா காட்டிடுவா.”
“ஒருத்தனும் உருப்படியில்ல மச்சி. இங்கயிருக்கிற பசங்க எல்லோரும் பீரையும் ரம்மையும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் மாதிரி குடிக்கிறாங்க டா. ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவேன்கிற மாதிரி அப்படியே ராவாக ரம்மை அடிக்கிறானுங்க மச்சி. பார்க்கப் பார்க்க உமட்டுது. மது மாதிரி பவித்ரமான பொண்ணு இந்த மாதிரி கேஸுங்ககிட்ட மாட்டிக்குமோன்னு பயம் வருது மச்சி. அவ டேஸ்ட் எனக்குத் தெரியாதுல… “
“பயப்படவே பயப்படாத. அதுக்கு வாய்ப்பே இல்ல.”
“நிஜமாகவா டா விவேக்?”
“ஆர்யா நீ அக்மார்க் கன்னிப்பையன் டா…”
“என்னது??”
“சரி கன்னிப் பையன் இல்லதான் ஒத்துக்குறேன், ஆனா நீ ஒரு அக்மார்க் தமிழ்ப் பையன் டா.”
“டேய் துணி துவைக்கிற அக்கா வாஷிங்மிஷின்ல துணியைப் போட்டுட்டு இருக்காங்க டா, மானத்தை வாங்காதடா விவேக். சத்தமா பேசாத… என்ன டா சொல்ல வர்ற?”
“நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ ஒரு அக்மார்க் தமிழ்ப்பையன். உனக்கே டாட்டா காட்டினவடா அவ. மத்தவங்களுக்கு காட்ட மாட்டாளா? நீ பயப்படவே பயப்படாத. மது நோ என்று சொன்னால் நோ தான் டா. அது எப்பவுமே யெஸ்ஸாக மாறாது. மது அவுங்க அப்பா அம்மா சொன்ன பையனைத்தான் கட்டிக்கும் மச்சி. ஆமா எனக்கு ஒரு டவுட் மச்சி…”
“என்னடா?”
“நீ மதுவை லவ் பண்ண ஆசைப்படுற மாதிரி இருக்கே… போர் அடிக்கிதேன்னு “கார்ஸ்” படம் பார்க்க உன்னோட ரெட் கலர் பென் டிரைவ் கேட்டா… மதுகிட்டக் கொடுத்திருக்கேன்னு சொல்ற. லாப்டாப் குடுன்னு கேட்டா… அதுவும் மதுகிட்ட இருக்குன்னு சொல்ற… பென்டிரைவ், லாப்டாப் என்று பண்டம் மாற்றம் எல்லாம் பலமா இருக்கே…”
“நான் மதுவை லவ் பண்றேன் மச்சி.”

Advertisement