Advertisement

   இன்று…
   பெங்களூர்  டோல்  கேட்…
“ஹா… ஹா… அப்படின்னா காலேஜ்லயும் மாட்டேன்னு சொல்லிடுச்சா அந்தப் பொண்ணு… பயங்கர கெட்டிக்கார பொண்ணா இருக்கேப்பா. படிக்கிற வயசுல ஆர்யாவுக்கு இதெல்லாம் தேவையா?” என்று கேட்டபடி சிரித்த காவல் துறை அதிகாரி சங்கரை விவேக் சற்று லேசாகக் கோபமாகப் பார்க்க,
“ம்க்கும்” என்று தொண்டையை செருமிக்கொண்டு காவல்துறை அதிகாரி அவசரப்பட்டு பேசிய வார்த்தைகளை உடனடியாக அவரே சரி செய்தார்.
“இல்ல… நல்ல பையன்னா, பழகுறதுல தப்பில்ல தான். நீ சொல்றதை வச்சிப் பார்க்கும்போது ஆர்யா ரொம்ப ரொம்ப நல்ல பையனாகத்தான் தெரியிறான். அந்த மது பொண்ணுக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி தான். நீ மேல சொல்லு. அப்புறம் என்ன ஆச்சு.”
“சார்… ”
“என்னப்பா??”
“நீங்க எங்க டீம்மா, மது டீம்மா? நீங்க ஆர்யா ஆர்மியா இல்ல, மது ஆர்மியா?”
“என்னப்பா இது… நீயும் நானும் ஒரே டீம் தம்பி. நீ மேல கதையைச் சொல்லு.”
“அப்புறம் ஒரு வழியா காலேஜ் லைஃப் முடிந்தது சார்…”
                  *   *   *
இரண்டு   வருடங்கள்   கழித்து   ஆர்யாவின் கல்லூரிக்காலம்   முடிந்த   நேரம்…
அடுத்த இரண்டு வருடங்கள் எப்படிப் போனது என்றே யாருக்கும் தெரியவில்லை. நூல் அறுந்த காத்தாடி போல, கையிலிருந்து பறந்துபோன பலூன்போல  நொடிப்பொழுதில் பறந்தே விட்டது. நான்கு ஆண்டுகள் அண்ணாயுனிவர்சிட்டியில் வெற்றிகரமாய் பொறியியல் பயின்று முடித்தார்கள் ஆர்யாவும் அவனுடன் பயின்ற சக மாணவர்களும். அனைவரும் கையில் வேலை வைத்திருந்தனர். குறைந்த பட்சமாய் இன்ஃபோசிஸ் அதிக பட்சமாய் ஐ.ஐ.டியில் இடம் கிடைத்திருந்து அனைத்து மாணவர்களுக்கும்.
“ஏய்… என்ன டா ஆரக்கிள்ல வேலை கிடைச்சிருச்சு போலயே?”- விவேக்.
“ஆமாடா மச்சி. இன்னிக்கி டிரீட் இருக்கு… வீட்டுக்கு வந்திடு.”- ஆர்யா.
“அய்ய்ய்… டிரீட்டு.” என்று யாருக்கும் கேட்காமல் கத்தினார் மிஸ்டர் லவ் குரு.
இப்ப என்ன சார் ஆகப்போகுது? உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்?                     
              *   *   *
ஆர்யாவும் விவேக்கும் புகாரி பிரியாணிக் கடையில் ஆர்யாவிற்கு வேலைகிடைத்ததை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இருவரும் கீச்சென்று அந்த ஏ.சி அறையின் கதவு திறக்கும் சப்தம்கேட்டு திரும்பிப் பார்த்தனர். உள்ளே நுழைந்த உருவத்தைப் பார்த்ததும் அறையின் ஏ.சி குளிர் ஆர்யாவின் இதயம் வரை சென்றது.
பல மாதங்கள் கழித்து மதுவை இப்போதுதான் பார்க்கின்றான் ஆர்யா. இன்டர்ஷிப் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்குப்பிறகு இப்போதுதான் மதுவைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. பழைய ஊடல் மறந்து உள்ளுக்குள் வெட்கம் கெட்டுச் சிரித்தது அவனது மனம். ஆனால் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் கண்டும் காணாததுபோல தனது பிரியாணியிடம் கவனத்தை திசை திருப்பினான் ஆர்யா.
“ஏய்ய்… உன்னோட ஃப்ர்ஸ்ட் & செகன்ட் கிரஷ் நாம சாப்பிடுற அதே பிரியாணியைச் சாப்பிட வருது மச்சி.”- விவேக்.
“சும்மா இருடா. குனி. குனியல, கொன்றுவேன்.”- ஆர்யா.
விவேக் சட்டென்று குனிந்து பிரியாணியில் மட்டனை கரண்டியால் தேடினான். ஆர்யாவும் தனது தட்டில் இருந்து ஸ்பூனினால் ஒரு துண்டு மட்டனை எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டான். மட்டனைத் திணித்துவிட்டு நிமிர்ந்தவன் விழிகளின் லென்சுகள் முதலில் படம் பிடித்தது மதுவின் முகத்தைத்தான். அதே போல அவளது விழிகளின் லென்சுகளுக்குள்ளும் ஆர்யா தான். இருவரும் நேருக்கு நேர் பார்த்தபிறகு சம்பிரதாயமாய் சிரித்தான் ஆர்யா.
இரண்டு ஸ்பூன் பிரியாணியை ஒரே ஸ்பூனில் அள்ளி வாய்க்குள் திணித்துக்கொண்டான். அதிகம் வழிந்திடாமல் அளவாய் சிரிக்க அவனுக்கு உதவியது அவனது வாய்க்குள் திணித்திருந்த இரண்டு ஸ்பூன் பிரியாணி. அவன் எதிர்பார்த்தது போலவே அவனை நோக்கியே நடந்து வந்தாள் மது.
“ஏய்.. ஆர்யா. வாட் எ சர்ப்ரைஸ். ரொம்ப நாள் ஆச்சு பார்த்து, காம்பஸ் இன்டர்வியுவில நான் ஆரக்கிள் செலக்ட் ஆகிருக்கேன். நீ?” என்றாள் ஆர்யாவின் அருகே வந்து சிரித்தபடி நின்ற மது.
இப்ப லவ் குரு சார் “ஆரக்கிள் ஆரக்கிள்” என்று கத்தியதுக்கும் “அய்ய்ய் டிரீட்டு.” என்று சிரிச்சதுக்கும் காரணம் லேசாக புரிய ஆரம்பிக்குதுல?
செத்து செத்து விளையாடலாம் வா என்று சினிமா படங்களில் வரும் சிரிப்புப் பேய்கள் விளையாடுவது போல, இந்த லவ் குருவும் மது-ஆர்யா இருவரையும் சேர்த்து பிறகு பிரித்து, மீண்டும் சேர்த்து மீண்டும் பிரித்து விளையாடினார்.
“எக்ஸ்குயூஸ் மீ பாஸ்… இந்த ஆரக்கிள் கம்பெனிக்கு கொஞ்சம் வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்…” என்று மிஸ்டர் லவ் குரு ஒரு ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம் வழிகேட்டுக் கொண்டிருந்தார்.
                   *   *   *
“இப்ப எதுக்கு என்னையே உத்து உத்து பார்த்திட்டுயிருக்க? அவ பாட்டுக்கு வந்தா, ஆரக்கிள்ல வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னா. அப்புறம் கிளம்பிட்டா. இதுல என்ன பெரிசா மேட்டர் நடந்திருச்சு? நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் நடக்கலை மச்சி.”- ஆர்யா.
“இல்ல… அவ ஆரக்கிள்ன்னு சொன்னபிறகு உன் முகத்துல பல்ப் எரிஞ்ச மாதிரி இருந்தது. அதான்…”- விவேக்.
இதுக்கு தாங்க, இதுக்குதான் அரை கிளாஸ்ல இருந்து ஒரே ஃப்ரண்ட்டை ஃப்ரண்ட்டா வச்சிக்கக் கூடாது. நம்ம மூளை எப்படி டிசைன் டிசைன்னா யோசிக்கும்னு தெரிஞ்சு வச்சிருப்பானுங்க எமகாதனுங்க…
“ஆமாடா… இப்படியே ஏத்திவிட்டு ஏத்திவிட்டு நல்ல பசங்களை எல்லாம் ரோமியோவாக சுத்த விட்டுருங்க.”- ஆர்யா.
“ஹா… ஹா… அப்ப நீ மதுவை லவ் பண்ணவே மாட்ட?”
“மது மாதிரி டிசைன்ல இருக்கும் எந்தப் பொண்ணயும் நான் லவ் பண்ண மாட்டேன் மச்சி. மது ஒரு புக் வெர்ம்டா மச்சி.”
“அந்த புக் வெர்ம்தான் நீயாக சொந்தமாக, “மை ஃப்ர்ஸ்ட் & பெஸ்ட் கிரஷ்.” என்ற தலைப்பில் சேத்தன் பகத் மாதிரி புக் எழுதுற அளவுக்கு உனக்கு அனுபவங்கள் கொடுத்திருக்கு மச்சி. அந்த நன்றியுணர்ச்சி உனக்கு கொஞ்சம் கூட இல்லையே?”- விவேக்.
“ஹா… ஹா… சேத்தன் பகத் புக்கை ராத்திரி முழிச்சிருந்து படிச்சிப் படிச்சி வசனம் பேசுறியா? போடா அங்குட்டு. பிரியாணி தண்ணிட்டியா? கிளம்பலாமா?”
“இரு மச்சி. பொறுமையா சாப்பிட்டு கிளம்பலாம். ஒரு ஃப்லூடா சொல்லு.”
ஆர்யா முறைக்கவும்,
“நீயா காசு கட்டப்போற? உன்னோட கிரேடிட் கார்ட்டைத்தான இழுக்கப்போற? கனரா பேங்க்தான காசைக் கட்டப்போகுது? பின்ன எதுக்கு அலுத்துக்கிற? ஃப்லூடாவில ப்ளாக் ஃபாரஸ்ட் இருக்கு? அதை ஆர்டர் பண்ணு.”
“என்னது?? ப்லூடாவில ப்ளாக் ஃபாரஸ்ட்டா? செத்தாகூட ப்ளாக் ஃபாராஸ்ட் போலாம் மச்சி. நரகம் கருப்பா தான் இருக்குமாம். போறியா?”
“ஹி… ஹி வரவர உனக்கு ஹுமர் சென்ஸ் கூடிப்போச்சு மச்சி.”
“நோப்.”
“இல்லையா? அப்ப நீ காமெடி பண்ணலயா?”
“நோப்.”
“பப்புக்கு கூட்டிட்டுப் போன ஃப்ரண்ட்கிட்ட நோப்ன்னு சொல்லாத மச்சி. அப்புறம் நரகத்துக்குதான் போவ. போப் ஆண்டவர்கூட அவரோட நண்பர்கிட்ட நோப்ன்னு சொல்ல மாட்டார் டா.”
“எதுக்கு டா அவரை இப்ப இழுத்த?”
“ரைம்மிங் கிடைக்குதுல, தப்பில்ல மச்சி. பப், நோப் போப்ன்னு ரைம்மிங்கா வந்ததுல? நாலு வார்த்தை ரைம்மிங்கா பேச நாலு பேரை யூஸ் பண்றதுள்ள தப்பில்ல மச்சி.”
“விவேக் மிடியல டா. உன்னோட மூளை யோசிக்கிறதை எல்லாம் உன் நாக்கும் அச்சுப்பிரளாம பேசுறதைப் பார்த்தா… புல்லரிக்குது மச்சி. என்னா ஒரு கனெக்ஷன் அந்த ரெண்டுக்கும்?” என்று சொன்ன ஆர்யாவின் உதடுகள் சிரித்தன. ஆனால் மனம் எப்போதோ மதுவை மீண்டும் பார்த்து கிரஷ்ஷாக தயாராகிக் கொண்டிருந்தது.
ஆர்யா ஆரக்கிள் நோக்கி பெங்களூருக்கு பயணப்பட்டான். அவன் பின்னாடியே வால்பிடித்துக் கொண்டு சென்றார் நம்ம… நம்ம… லவ் குருவும்.
“சார் உங்களுக்கு வேற வேலையே இல்லையா?”- லவ்குருவிடம் நான்.
“இல்லையே…”- மிஸ்டர் லவ் குரு என்னிடம்.
                  *   *   *
மதுவும் ஆர்யாவும் பணியில் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. கிட்டத்தட்ட தொண்ணூறு நாட்கள்…
தொண்ணூற்றி ஓராம் நாளும் இனிமையாய் விடிந்தது…
“என்ன?? முகத்துல ஆயிரம் வாட்ஸ் லைட் எரியிது?” என்று இருட்டில் பற்றிக்கொண்ட கம்பி மத்தாப்பாய் ஜொலித்த மதுவின் முகத்தைப் பார்த்துக் கேட்டான் ஆர்யா.
“ஆன்சைட்ல அமெரிக்கா போறேன் ஆர்யா… இப்பதான் மெயில் வந்தது.” என்றாள் அவளும் பெருமையாக.
மதுவின் வெளிநாட்டு மோகத்தை நினைத்து லேசாகச் சிரித்தவன் சம்பிரதாயமாய்,
“ஓ… கங்ராட்ஸ் மது. உனக்குத்தான் அமெரிக்கான்னா இஷ்டம் போலயே. என்ஜாய்.” என்றான்.
“தாங்க்ஸ் ஆர்யா.” என்ற மதுவிடம் மரியாதை நிமித்தமாய் கைகுலுக்கிவிட்டு தனது கேபினுக்கு சென்றுவிட்டான் ஆர்யா.
ஆனால் மனமோ தனது முதல் கிரஷ் அமெரிக்கா நோக்கிப் பயணப்படுவதை நினைத்து ‘போகுதே போகுதே’ என்று விளையாட்டாய் கேலியாய் பாடிடத்தான் செய்தது. ‘அடச்சீ கம்முன்னு கிட.’ என்று அதனை அடக்கினான் ஆர்யா.
மதுவின் மனதில் ஆர்யாவிடம் கல்லூரிக்காலத்தில் இருந்த சபலம் துளியும் இல்லை. ஆர்யாவின் தேஜஸ்ஸோடு ஒத்துப்போகும் பல இளைஞர்களை கடைசி இரண்டு ஆண்டு கல்லூரிக் காலத்தில் அவள் பார்த்து விட்டதால் இப்போது அவனது இளமை அவளது இளமையை பாதிக்கவில்லை.
இளமை ததும்பி நின்ற ஆர்யாவின் மேல் கல்லூரிக்காலத்தில் பற்றிய மோகத் தீ அணைந்து போய் வெகு நாட்கள் ஆகிப்போனது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல அறிவாளி ஆண்களை அவள் சந்திக்க நேர்ந்து அவர்களுடன் நட்பாக மட்டுமே இருக்கப் பழகிக்கொண்டதால் இப்போதும் ஆர்யாவிடம் நட்பு மட்டுமே பாராட்டுவதில் அவளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, தயக்கமும் இல்லை.
அவளது இளமைக்கும் தயக்கம் இல்லை அவளது புத்திக்கும் தயக்கம் இல்லை.
ஆண் நண்பர்களின் கைபேசி அழைப்புகளை இன்றும் விரும்பாத மது இப்போது ஆர்யாவுடன் பேசுவதை முந்தைய காலத்தில் தவிர்த்ததைப் போல இப்போது தவிர்க்கவில்லை. அவன் நாலு வார்த்தையுடன் நறுக்கென்று நகர்ந்துவிட்டபோதும் மதுவால் விலக முடியவில்லை.
சொற்ப நிமிடங்களிலேயே ஆர்யாவின் கேபினுக்குள் வந்து நின்று, ‘ஆர்யா’ என்று அவனது பெயரைச் சொல்லி அழைத்திருந்தாள் மது.
“ஆர்யா.” – மது.
மது அழைத்ததும் சட்டென்று திரும்பி “என்ன மது?” என்றான்.
“கிளம்பிட்டியா?” – மது.
“யெஸ். நீ? கிளம்பலையா?”
“இனிதான். கம்பெனி கேப்ல போகணும்.”
“ஓ” என்றவனுடன் அவளும் சேர்ந்தே நடந்தாள். பத்து நிமிடங்கள் அவளுடன் நட்பாய் பலவிஷயங்கள் பகிர்ந்து கொண்டான். விவேக் பற்றிக்கூட பேசினான்.
பத்து நிமிடங்களுக்கு மேல் நட்பு பாராட்ட மனம் வரவில்லை. பவித்திரமான மதுவின் பவித்திர பார்கடலில் தொபுகடீர் என்று கவிழ்ந்து விழுந்து மீண்டும் அவளிடம் பல்ப் வாங்கிடவும் அவனுக்குஇஷ்டம் இல்லை.
“சரி… பை மது. நீ கிளம்பல? கேப் இப்ப இருக்குமா?” என்று கேட்டபடி தனது ஹெல்மெட்டின் பெல்ட்டை லூசாக்கினான் ஆர்யா.
“கிளம்பிட்டியா? டைம் என்னச்சு?” என்று தனது கைபேசியில் மணியைப் பார்த்தவளோ அரண்டு போய், “அச்சோ… மணி ஒன்பது. உன்கிட்டப் பேசிட்டே டைம் பார்க்கல… இனி கம்பெனி கேப் பிடிக்க முடியாது. நைட் ஷிஃப்ட் ஆளுங்களை பிக் அப் பண்ணப் போயிருக்குமே… ஓலா தான் புக் பண்ணணும். ஆர்யா டூ மினிட்ஸ், ஓலா மட்டும் புக் பண்ணிடுறேன். வெயிட் ப்ளீஸ். ஓலா வரும் வரை பேசலாமே. One sec ப்ளீஸ்…” என்றவள் தனது கைபேசியில் டாக்சியை புக் செய்ய ஆரம்பித்தாள்.
என்னதான் ஒதுங்கிப்போக நினைத்தாலும் இரவு ஒன்பது மணிக்கு மதுவை தனியாக அனுப்ப மனம் வரவில்லை. தான் அவளுக்கு உதவுவதை விட வேறு உருப்படியான வழியே இல்லை என்றான பிறகு,
“எதுக்கு ஓலா? என்கூட வா. மெட்ரோ ஸ்டேஷனுக்குதான? பக்கத்துலதான இருக்கு? 40 minutes டிரைவ் தான? வா டிராப் பண்ணிடுறேன்.” என்றான் ஆர்யா.
“உன் கூடயா?”
“ஆமா. என்கூடத்தான்.”
“நீ பைக்ல தான போவ?”
“ஆமா… இது என்ன கேள்வி மது?”
“இல்ல… கார்னா வசதியா இருக்கும். உன்கிட்ட கார் இல்லயா ஆர்யா?”
‘அட பவித்ரமான பெண்ணே…’ என்று மனம் மீண்டும் மதுவிற்கே சபாஷ் சொன்னது.
சற்றுமுன் அவளுக்காக இளகிய மனது தூய மேரி ஆலயத்தின் பிரார்த்தனை மெழுகுவர்த்தியாய் இன்னும் இளகிப்போனது. ‘அடச்சீ கம்முன்னு கிட.’ என்று எப்போதும் போல மனதை அடக்கிய ஆர்யா, மதுவிடம், “கார் தான? இனி தான் வாங்கணும். ஆனா… எனக்கு பைக்தான் பிடிக்கும்.” என்றான்.
“ஓ…”
“ஏய்… என்ன அசையாம நின்னுட்டு இருக்க? வா மது. என்கூட நீ பைக்ல வந்ததை யார் பார்க்கப்போறா? இது பெங்களூர்ப்பா, சென்னை இல்லை. உன்னோட டீச்சர் அம்மாவிடமும் ப்ரொபர்சர் அப்பாவிடமும் வத்திவைக்க ஆள் இல்லை, பயப்படாம வா.”
“அது…”
“என்ன மது? டோன்ட் பி சில்லி. வா.” என்று முன்னே நடக்க ஆரம்பித்தான்.
அவன் சொன்னதை ஆமோதித்தபடியே கொஞ்சம் திருட்டுத்தனம் செய்யத் துடித்த மதுவின் டீன்ஏஜ் மனதும் ஆர்யாவுடன் பைக்கில் செல்ல ஒப்புதல் அளித்தது.
பைக்கில் ஒரு பையனுடன் சென்றால் மனது ‘மென்ட்டல் மனதில்…’ பாடலை இசைக்க ஆரம்பித்து விடுமா? இல்லை இறக்கை முளைத்து விடுமா? பலமுறை பைக் பயணத்தை மற்ற பெண்கள் ரசித்துப்பேசியபோது வேடிக்கையாகப் பரிதாபமாகப் பார்த்திருக்கிறாள். ஆனால் இப்போது தனக்குள் துள்ளிக் குதிக்கும் மனதை சமன்படுத்திவிட்டு ஆர்யாவின் பைக் அருகே அமைதியாகவே நின்றாள் மது.
“மது… வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஏறு.”
“சரி.” என்றவள் ஒரு பக்கமாக கால்களைப் போட்டுக்கொண்டு ஆர்யாவின் பைக்கில் உட்கார்ந்தாள்.
“இரண்டு பக்கம் கால் போட்டு நல்லா உட்காரு மது. 40 மினிட்ஸ் டிரைவ்… ஒரு பக்கம் கால்போட்டு உட்கார்ந்து வந்தா கால் கடுக்கும்.”
“பரவாயில்ல ஆர்யா. இப்படியே உட்கார்ந்துக்கிறேன். நீ கிளம்பு.”
‘பைக்ல இரண்டு கால் போட்டு உட்கார மாட்டியா? ஒத்தக்கால் போட்டுத்தான் உட்காருவியா? டச்சிங் டச்சிங் பிடிக்காதா?அடப் பவித்திரத்தின் சிகரமே… எனக்கும் இப்ப அந்த டச்சிங் டச்சிங் வேணாம். என் வீட்டுல ஏற்கனவே பத்து பன்னிரெண்டு பல்ப் இருக்கும்மா. உன்கிட்டயும் பல்ப் வாங்கிட எனக்கு இஷ்டமில்ல. நல்ல நல்ல பொண்ணுங்களுக்கு மட்டும் தான் டச்சிங் டச்சிங் பிடிக்காதா? நல்ல நல்ல பசங்களுக்கும் தான் அந்த டச்சிங் டச்சிங் பிடிக்காது மது.’ என்று சொன்னது ஆர்யாவின் மனது.
ஆனால் பைக்கில் சென்றபோது எந்தவொரு ஷணத்திலும் அவள் நகம்கூட அவன் மேல் படவில்லை. அவனது ஆண்மையை சோதிக்காத மதுவை, ‘பவித்திரத்தின் பவித்திரமே, பவித்திரத்தின் சிகரமே…’ என்று வாழ்த்துப் பாடல் பாடியது அவனது மனம்.
மனதின் கேலி கிண்டலை வழக்கம் போல், ‘அடச்சீ கம்முன்னு கிட.’ என்று அடக்கவில்லை ஆர்யா. ஏன்னென்றால் அவனது உடலின் லட்சோப லட்சம் செல்களும் மனதின் அக்கருத்தை ஆமோதித்தன.
மதுவின் நிழல்கூட ஆர்யாவைத் தொடவில்லை. அவளின் மூச்சுக்காற்றுகூட அவனது கழுத்தில் உராயவில்லை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு போகிறோம் என்று உணர்வு கூட ஆர்யாவிற்கு வரவில்லை. அவனது முதுகுக்கு பின்னால் இருக்கும் வண்டியின் பின்டயரைப் போல அவளும் வண்டியின் பாகமாக மாறிவிட்டிருந்தாள்.
மெட்ரோ வரும்வரை அவளுடன் பேசிக் கொண்டே இருந்த போதும் அதிகப்படியாக உரிமை எடுத்துக்கொள்ளாத ஆர்யாவின் ‘ஜென்டில்மேன்’தனம் மதுவிற்கு மிகவும் பிடித்தது. 
ஆர்யாவின் பைக் வேகமெடுத்த முதல் நான்கு நிமிடங்களில் ஆர்யாவின் இளமை அவளை திமிங்கலமாய் விழுங்கத் தொடங்கியது.
அந்த நான்கு நிமிடங்கள் மட்டுமே அவளது இளமையின் சபலத்திற்கான கோட்டா. அதற்குப் பிறகு எந்த ஒரு நிமிடத்தையும் மது தன் இளமைக்கு விட்டுத்தரவில்லை. ஒரு ஆண்ணின் நெருக்கத்தில் உண்டான சபலம் இது என்று புரிந்த பிறகு கிறுக்கு மனதை இருட்டு அறையில் ஒரு சிறு இரும்புப் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டாள். இருட்டு இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட மதுவின் கிறுக்கு மனம் மயங்கி மூர்ச்சையாகிட… நிம்மதியாய் ஆர்யாவுடன் பைக்கில் மதுவின் உடல் பயணப்பட்டது.
அந்த பைக் பயணத்தின்போது அவளை தனது பைக்கின் பின்டயராய் ஆர்யா பாவித்திருந்தாலும் வீடு வந்தபிறகு இரவெல்லாம் மதுமிதாதான். அவனது முதலாவது மற்றும் இரண்டாவது கிரஷ்ஷாக இருந்த ‘மதுமிதா அர்ஜ÷ன்’ அவனது மூன்றாவது கிரஷ்ஷாகவும் மாறி அவனை அன்று முதல் இம்சிக்கத் தொடங்கினாள்.
                   *   *   *
 

Advertisement