Advertisement

ஹரினி, மது, ஆர்யா, ஆர்யாவின் நண்பர்கள் மற்றும் ஆர்யாவின் இரண்டு வகுப்புத் தோழிகள் என அனைவரும் ஒன்றாக காலேஜ் கேன்டீனில் கட்லட்டுடையும் கோல்டு காஃபியையும் ருசித்துக்கொண்டிருந்தார்கள்.
மற்றவர்கள் சுவாரசியமாக எதையோ பேசியபோது அனைவருக்கும் நன்றாக கேட்கும்படியாகவே மது ஆர்யாவிடம், “ஆர்யா, நேத்து கொஞ்சம் பிஸியா இருந்தேன்ப்பா. அதான் கால் அட்டென்ட் பண்ண முடியல. சாரி.” என்று சொன்னாள்.
உடனே ஆர்யாவும் மற்றவர்களுக்கு கேட்கும்படியாகவே, “இட்ஸ் ஓகே” என்று தான் அவளிடம் சொன்னான்.
ஆனால் அவனது மனது, “திஸ் இஸ் நாட் அட் ஆல் ஓகே. இருபது மிஸ்ட் காலுக்கு ஒரே ஒரு சாரி… அதுவும் கூட்டத்தோட கோவிந்தா மாதிரி. நாலு பேர் முன்னாடி அஃபீஸியலா ஒரு சாரி… திஸ் இஸ் நாட் அட் ஆல் ஓகே மது.” என்று கோபமாய் உள்ளுக்குள்ளே பேசியது.
மிகவும் சகஜமான உரையாடலாகவே இருவரும் அதை வைத்துக்கொண்டனர். அதன்பிறகு ஹரினியும் மதுவும் இரண்டு நிமிடங்கள் மட்டும் அனைவருடனும் அரட்டையடித்துவிட்டு பில்லிற்குரிய பணத்தில் தங்களது பங்கை கொடுத்துவிட்டு அவரவர் வகுப்புகளுக்கு விரைந்தனர்.
ஒரு வாரம் கடந்தது. அந்த ஒரு வாரமும் மது-ஆர்யா வாட்ஸ் ஆப் செய்திகளின் போக்குவரத்து டிராஃபிக் ஜாம் ஆகிப்போய் நின்று விட்டது. இருவரும் செய்திகள் பகிரவில்லை.
ஆனால் மதுவினால் தவிர்க்கவே முடியாத கான்டீன் சந்திப்புகள் மட்டும் தொடர்ந்தது. மற்ற நண்பர்கள் அழைக்கும்போது வரவில்லை என்று மறுத்துச் சொல்ல முடியவில்லை. சிறிது சிறிதாக ஆண் நண்பர்கள் வட்டத்தைக் குறைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தாள் மது.
ஹரினி தான் அவளிடம், “கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கலாம் மது. இரண்டு வருஷமா ஒண்ணா கேன்டீன்ல லன்ச் சாப்பிடுறோம். இப்ப திடீர்னு நிறுத்தினா நல்லாயிருக்காது.”
“அப்பா திரும்ப கேன்டீன்ல வச்சிப் பார்த்தாருன்னா…”
“முன்னே மாதிரி சாப்பிட்டப்பிறகு அரட்டையடிக்காமல் கிளம்பிடுவோம். அப்படியே அவர் பார்த்தாலும் தப்பா எடுத்துக்க மாட்டார்.” என்று ஹரினி சொன்ன பதிலில் சமாதானம் அடைந்தாள் மது.
ஒரு வழியாக பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டவள் ஆர்யாவை அதன்பிறகு எப்போது பார்த்தாலும் சிரித்தபடியே நழுவிக்கொண்டாள். பேச்சுகளை வளர்க்காமல் சிரித்தபடியே, ஒரு ஹலோ, ஒரு குட் மார்னிங்குடன்  நிறுத்திக்கொண்டாள்.
ஒரு சில நாட்களிலேயே ஆர்யாவிற்கு மது தன்னிடம் இருந்து தொலைதூரம் விலகிவிட்டாள் என்று புரிந்துபோனது. ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்டில் தன்னை வைத்திருந்தவள் “ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்” லிஸ்ட்டில் தன்னை சேர்த்துவிட்டாள் என்று புரிந்து போனது.
ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்…  அப்படின்னா என்ன?
ஃப்ரண்ட் தான் ஆனா ஃப்ரண்ட் மாதிரி…
                   *   *   *
“மது சரியாவே பேச மாட்டிக்கிறா விவேக். ஃபோன்லயும் பேச மாட்டிக்கிறா. நானாக கால் பண்ணால் அட்டென்ட் பண்றதே இல்ல, ஏன்னு கேட்டா என்னோட தங்கச்சி ப்ளஸ் டூ படிக்கிறதால என்னோட ஃபோனும் அவளோட ஃபோனும் ப்ளாக் பண்ணிருக்காங்க என்னோட பேரன்ட்ஸ்ன்னு சொல்றா. நேர்ல பார்க்கிங் ஏரியாலக்கூட பேசாம சிரிச்சிட்டுப் போயிடுறா மச்சி. அவ என்னை அவாய்ட் பண்றது நல்லாவே புரியிது மச்சி… ஆனா கோபமா வருதுடா… Just Friends மாதிரி என்னை டிரீட் பண்றா மச்சி. ஏன் சரியா பேச மாட்டிகிறன்னு நேருக்கு நேர் கேட்டுடவா?” 
(“Just friends” அப்படின்னா என்ன? ஃப்ரண்ட் தான் ஆனா ஃப்ரண்ட் மாதிரி…)
“என்னது? நேருக்கு நேரா கேட்கப்போறியா? எதுக்கு மச்சி உன் மானத்தை நீயே ஃப்ளைட் பிடிச்சி அமெரிக்காவுக்கு ஏத்திவிடுற? இந்த ஒரு மாசமா என்ன நடந்திச்சு? மிஸ்ட் கால் மேட்டருக்கு பிறகு என்ன நடந்திச்சுன்னு தெளிவா சொல்லு.”
ஆர்யா தனது இருபது, சாரி… சாரி இருபத்தாறு அழைப்புகளை மது ஏற்காமல் போனதற்கு அவள் சொன்ன சாரி என்ற பதிலைக் கேட்டதும் விவேக் மனதில் கமென்ட்கள் கோடிக்கணக்கில் உலா வந்தன.
மச்சி… சீன் முடிஞ்சது டா. மது ஸ்கிரீனை கிழிச்சி ரொம்ப நேரம் ஆச்சு டா.
மச்சி… இது வேலைக்கு ஆகாது.
மச்சி… அண்ணான்னு கூப்பிடலைன்ன சந்தோஷப்படு.
மச்சி… இனி உனக்கு நான் எனக்கு நீ. மதுன்னு ஒரு கேரக்டரை நீ சந்திச்சதை மறந்திடு.
மச்சி… ஹா… ஹா… சிரிப்பா வருதுடா. என்ன பண்ணலாம்?
இப்படித்தான் விவேக்கின் மனதில் பல கமென்ட்டுகள் விமர்சனங்கள் உலா வந்தன. எதையும் ஆர்யாவிடம் சொல்லவில்லை அவன். ஜிம் பாடியிடம் வம்பிழுக்க அவனது ஸ்லிம் பாடிக்கு இஷ்டமில்லை.
ஒருவழியாக மனதில் விமர்சனங்களை ஒதுக்கி மறைத்துவிட்டு ஆர்யாவிடம், “ஓகே… இப்ப நீ என்ன கேட்கப்போற மதுகிட்ட?” என்று கேட்டான் விவேக்.
“என்கூட ஏன் முன்ன மாதிரி பேசமாட்டிக்கிறன்னு அவகிட்ட நேருக்கு நேரா அவ கண்ணைப் பார்த்துக் கேட்பேன் டா.”
“நீ கேட்டா என்ன சொல்வா? நிறைய படிக்க இருக்கு அதான் பேச முடியலைன்னு சொல்வா. அவளோட அப்பா உங்க காலேஜ் ப்ரொபர்சர்ன்னு நீ சொன்னப்பவே நினைச்சேன்… பட்சி சீக்கிரம் பறந்து போயிடும்னு. அவுங்க அப்பா தான் இப்பயெல்லாம் அவளை பிக் அப், டிராப் பண்றாங்கன்னு நீ சொன்னபோது சீன் முடிஞ்சதுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. உனக்குப் புரியலையாடா? ஆர்யா… ஸ்கூல் படிக்கும்போது அம்மாக்குப் பிடிக்கலைன்னு சொன்னா, இப்ப அப்பாக்கு பிடிக்கலைன்னு மறைமுகமா விலகுறா… ஆனா ரெண்டு தடவையும் நடந்த ஒரே ஒற்றுமையான விஷயம் என்ன தெரியுமா?”
ஆர்யா பதில் பேசாமல் விவேக்கைப் பார்த்தபோது,
“இரண்டு தடவையும் உன்னை ப்ளாக் பண்ணிட்டா மச்சி.”
“இப்ப ஒண்ணும் ப்ளாக் பண்ணல. அவ கையில ஃபோன் இல்ல. அவ்வளவு தான். அவளும் அவ தங்கச்சியும் ஒரே ஃபோனை ஷேர் பண்றாங்களாம். அதனால அவளாக நேரம் கிடைக்கும் போது மட்டும் கூப்பிடுவாளாம்.”
“இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு?”- கேள்வியாய் விவேக்.
“இல்லதான?” என்று தன்னிடமே கேட்டுக்கொண்ட ஆர்யா,
“நீ சொன்ன மாதிரி இரண்டுக்கும் வித்தியாசம் இல்லையில? அவளாக இன்னைக்கு வரை என்னை கூப்பிடலடா… நேத்து ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பினா டா. ஆசையா திறந்து பார்த்தேன் டா. ஆனா படு கடுப்பாகிருச்சு.” என்று ஆதங்கமாய் முடித்தான்.
“என்ன அனுப்பினா? குட் மார்னிங் ஆர்யா ப்ரோன்னு அனுப்பிட்டாளா? Brotherன்னு கூப்பிட்டாளா?”
“ப்ச்… இல்ல டா. செமெஸ்டர் எக்ஸாம் டைம் டேபிள் அனுப்பினா டா… ரொம்ப கடுப்பாகிடுச்சு…”
சிரிக்கத் துடித்த உதடுகளை அரும்பாடுபட்டு அடக்கினான் விவேக்.
“பரீட்சை வருதுன்னு எனக்குத் தெரியாதா? இந்த மேடம் சொல்லித்தான் எனக்குத் தெரியுமா? இப்பவரை அவ எனக்கு கால் பண்ணவே இல்ல மச்சி.” – கோபமாய் ஆர்யா.
“இனியும் கூப்பிட மாட்டா. உன்னை அவ விர்ச்சுவலா (Virtual) ப்ளாக் பண்ணிட்டா மச்சி.”
விவேக் சிரித்துக்கொண்டே விஷயத்தை தீவிரமாகச் சொல்லாமல் லேசாகச் சொன்னான். ஆனால் ஆர்யாவினால் இதை ஹாசியமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவனது கோபம் உச்சிக்கு ஏறியது.
“நானும் அவளை ப்ளாக் பண்ணப்போறேன் மச்சி. நல்லா பாரு… உன் முன்னாடியே ப்ளாக் பண்றேன். இதோ, செலக்ட் பண்ணிட்டேன். இதோ ப்ளாக் ஆகிடுச்சு. அவளுக்கு மட்டும் தான் ப்ளாக் பண்ணத் தெரியுமா? எனக்கும் ப்ளாக் பண்ணத் தெரியும்னு அவளுக்குத் தெரியட்டும். டூவீலர் பார்க்கிங்ல பார்த்து சிரிச்சா நானும் சின்னதா சிரிப்பேன். அவ்வளவுதான். அதுக்கு மேல நோ ரிலேஷன்ஷிப்.”
“ஹா…ஹா…”
“எதுக்குடா சிரிக்கிற.”
“என்னமோ ஷிப் பற்றிப்பேசுனியே… அதை நினைச்சேன் சிரிச்சேன். என்றைக்கு டா உங்களுக்குள்ள அந்த ரிலேஷன்ஷிப் இருந்திச்சு? அதை நீ கட் பண்றதுக்கு?”
“சும்மா இருடா… ஆனா ஒண்ணு, அவளாக என்கிட்ட வந்து, “எதுக்கு என்னை ப்ளாக் பண்ணிட்ட?”ன்னு கேட்டாக்கூட “அப்படியா?” ன்னு கேட்டுட்டுப் போயிடுவேன் மச்சி. என்னோட பிடிவாதம் உனக்குத் தெரியும்ல? நான் பொண்ணுங்க பின்னாடி அலையிற டைப்பும் கிடையாது. மது பின்னாடி என்னைக்குமே அலைஞ்சதும் கிடையாது. நான் பெட் வைக்கிறேன், அவளாக என்கிட்ட வந்து என்கூடப் பேசுவா டா. “எதுக்கு என்கூடப் பேசாம இருக்க? ஏன் என்னை ப்ளாக் பண்ண”ன்னு அவளாக கெஞ்சிக் கேட்கட்டும்… அப்ப பேசிக்கிறேன் அவகிட்ட.”
“இன்னும் சின்னப்புள்ளையாகவே யோசிக்கிறியே மச்சி… நீ ப்ளாக் பண்ண விஷயம் அவளுக்குத் தெரியவே தெரியாது மச்சி. அவதான் உன்னைக் கூப்பிடப்போறதே இல்லையே? பின்ன எப்படி அவளுக்குத் தெரியும்?அதுலயும் கெஞ்சிக் கேட்கணும்னு நீ சொல்றது டூ டூ டூ மச் மச்சி…”
“ப்ச்..”
“நான் ஒண்ணு சொல்லவா?”
“என்ன?”
“இந்த அம்மா பேச்சு அப்பா பேச்சை தட்டாம நடந்துக்குற பொண்ணுங்க எல்லாமே ரொம்ப ரொம்ப டேன்ஜரஸ். நல்லா பழகி லவ் பண்ணித் தொலைச்சிட்டு அப்பா அம்மாக்குப் பிடிக்கலைன்னா நாளைக்கு நம்மளயே வேணாம்னு தூக்கி போட்டுருவாங்க. உன் விஷயத்துல ஆரம்பத்துலயே இந்த விஷயம் தெரிஞ்சிக்கிட்டது நல்லதாப்போச்சு.”
“ஆரம்பத்துலனா??”
“உன்னோட ஃப்ரண்ட்ஷிப் ஆரம்பத்துல என்று மீன் பண்ணேன் டா. என்ன ஃப்ரண்ட்ஷிப் தான? இல்ல வேற எதுவும் ஆசையை உன் மனசுல வச்சிருந்தியா?”
“ஃப்ரண்ட்ஷிப் தான்டா… ஃப்ரண்ட்ஷிப் தான்டா. 200 பெர்சன்ட் ஃப்ரன்ட்ஷிப் தான். அம்மா மேல ப்ராமிஸ்ஸா ஃப்ரன்ட்ஷிப் தான் விவேக். நல்ல வேளை மதுவை அந்த லவ் கிவ் பண்ணித்தொலைக்கல.”
“மது விஷயத்துல நான் சொல்ற அட்வைஸ் இதுதான் மச்சி, இன்னும் ரெண்டே வருஷம் தான். காலென்டர் பேப்பர் மாதிரிப் பறந்தே போயிடும். கடைசி வருஷம் காம்பஸ் வரும். அவ அமெரிக்கா போயிடுவா, நீ லன்டன் போயிடுவ. மேட்டர் சால்வ்டு. காம்பஸ்ல நல்ல கம்பனியா பார்த்து செலக்ட் ஆகுற வழியப்பாரு மச்சி. ஆரக்கிள் கம்பனி நல்ல கம்பெனியாமே அப்படியா?”
“ஆமா விவேக், ஆரக்கிள் நல்ல கம்பெனிதான். நான்கூட அதுக்கு தான் ஏய்ம் பண்றேன்.”- ஆர்யா.
“குட்.”
“விவேக்…”
“என்ன?”
“மது நல்ல பொண்ணுடா.”
“என்னது??
“ஷி இஸ் மை பெஸ்ட் கிரஷ் மச்சி.”
“அதென்ன பெஸ்ட் கிரஷ்??”
“மறக்கவே முடியாத கிரஷ்ன்னு அர்த்தம். என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷும் அவதான். செகன்ட் கிரஷும் அவதான் மச்சி. மதுவுக்கும் அந்த மாதிரி ஃபீலிங்ஸ் இருக்கும்ல?”
“கண்டிப்பா. உன்கூட ஒரு வருஷம் பழகிருக்கா, பிடிக்காமலா பழகுனா? பொண்ணுங்களுக்குப் பிடிக்கலைன்னா ஒரு சிரிப்புகூட இலவசமா அவுங்ககிட்டயிருந்து கிடைக்காது மச்சி. அனுபவஸ்தன் சொல்றேன், நம்பு. ஆனா… மதுப்பொண்ணு பயங்கர உஷார் மச்சி. கமிட் ஆகிடுவோம்னு பயந்து, இப்ப படிப்புதான் முக்கியம்னு தெரிஞ்சிக்கிட்டு ஒதுங்கிடுச்சு.”
“அதான்டா… அதான்டா எனக்கு அவளை இப்பவும் பிடிச்சிருக்கு. என்னை எவ்வளவு இக்னோர் பண்ணாலும் பிடிக்கிது.”
“மச்சி. நான் சின்சியரா ஒரு அட்வைஸ் பண்றேன். கேட்டுக்கிறியா?”
“சொல்லு. வேற வழி?”
“உனக்கு பென் டிரைவ்ல பத்து படம் ஏத்திக்கொடுக்கிறேன். அதில் இருக்கும் படத்தை தினம் தினம் பார்த்தீனா… மதுவோட நினைப்பே வராது…”
“இந்தா என்கிட்ட ரெண்டு பென்டிரைவ் இருக்கு. இதுலயே ஏத்திக்கொடு.” என்று விவேக் கையில் இரண்டு பெண் டிரைவ்களைக் கொடுத்தான் ஆர்யா.
“என்னடா? ரெண்டு பென் டிரைவ் கொடுக்கிற? ஒரு பென்டிரைவ்ல ப்ளூகலர் மூடி போட்டிருக்கு… இன்னொரு பென் டிரைவ்ல ரெட் கலர் மூடி போட்டிருக்கு?” – விவேக்.
“ப்ளூ கலர் மூடி போட்டதுல ப்ளூ கலர் படம் இருக்கும் மச்சி. ரெட் கலர் மூடி போட்டதுல…”
“சின்னப்புள்ளங்க பார்க்குற படம் இருக்குமா? பொம்மைகள் நடிச்ச கிராஃபிக்ஸ் படமா இருக்குமா?”
“கரெக்ட்… எப்படிடா கண்டுபிடிச்ச?”
“ஆர்யா, நீ ரெண்டு கலர்ல தான பென் டிரைவ் வச்சிருக்க? நான் பத்து கலர்ல பத்துவிதமான சினிமா கேட்டகிரில அதாவது… பத்து பிரிவில் படங்கள் சேர்த்துருக்கேன்… பேய் படம், கிரைம் படம், காமெடி படம், கசமுசா படம், கிராஃபிக்ஸ் படம், ஹிஸ்டிரி படம், சயின்ஸ் படம், காதல் படம், பக்திப் படம், ஜாக்கி சான் படம், ஜேம்ஸ் பான்ட் படம்… அப்படின்னு பத்து கேட்டகிரில படம் சேர்த்து வச்சிருக்கேன் டா. போன மாசம் தான் சேர்த்தேன். மொத்தமா சேர்த்த பிறகு உன்கிட்ட காட்டலாம்னு நினைச்சேன்…”
“ஹா… ஹா…”
“நான் தர்ற படத்தையெல்லாம் பார்த்தபிறகு அடுத்ததாக நீ என்ன செய்யணும்னா.. எய்த் ஸ்டான்டர்ல ஸ்கூல் வாட்ஸ் ஆப் குரூப்ல நம்ம டீச்சர்ஸ், கீதா சான்டிங்கை பேரன்ட்ஸ்க்கு அனுப்பி வச்சி மனப்பாடம் செய்ய வச்சாங்கல? அந்தக் கீதாச்சாரம் மாதிரி ஆரக்கிள், ஆரக்கிள்ன்னு சொல்லணும்… புரியிதா? எப்படிச் சொல்லணும்? சொல்லு பார்ப்போம்…”- விவேக்.
“ஹா… ஹா… சரி… இனி கொஞ்ச நாள் ஆரக்கிள் ஆரக்கிள்ன்னு சொல்றேன்.” – ஆர்யா.
“ஹா… ஹா… ஆரக்கிள். ஆரக்கிள்.”- மிஸ்டர் லவ் குரு.
ஆர்யா ஆரக்கிள் என்று சொன்னதில் அர்த்தம் இருக்கு. ஆனா லவ் குரு எதுக்குங்க ஆரக்கிள் பெயரைச் சொன்னார்? மனுஷன் எதுக்குங்க இன்னும் மது பின்னாடியும் ஆர்யா பின்னாடியும் சுத்திட்டே இருக்கார்?

Advertisement