Advertisement

“என்னடா மது கால் அட்டென்ட் பண்ண மாட்டிக்கிறா? இரண்டு நாள் ஆச்சு டா என்கூட அவ பேசி. ஒரு நம்பர் ஸ்விட்ச் ஆஃப். இன்னொரு நம்பர்ல ரிங் போயிட்டே இருக்கு.”- ஆர்யா விவேக்கிடம்.
“பொங்கல் ஹாலிடேஸ்ல வெளியூருக்குப் போயிருப்பா. விடு மச்சி. பார்த்துட்டு கூப்பிடுவா. டோன்ட் சவுன்ட் டெஸ்பரேட் மச்சி. ஃப்ரண்டோ, லவ்வர்ரோ, கிரஷ்ஷோ எதுவாக இருந்தாலும் இரண்டே இரண்டு மிஸ்ட் கால் தான் கொடுக்கணும். அவுங்ககூட பேசுறதுக்கு துடிச்சிட்டு இருக்கிற மாதிரி காட்டக்கூடாது மச்சி.”
“இரண்டா? நான் இதுவரை இருபது தடவை கூப்பிட்டுப் பார்த்துட்டேன் மச்சி. அவ திரும்பக் கூப்பிடவே இல்ல.”
ஆர்யா எப்போது இருபது என்று சொன்னானோ அப்போதே விவேக்கின் மனது இருபது முறை இருபது யானைகளின் பொற்பாதங்களால் நசுக்கப்பட்டிருந்தது. அந்த வலியையும் மென்று விழுங்கி ஆர்யாவிடம் கேட்டான், “நெஜமாவே இருபதா? இல்ல ஒரு பேச்சுக்கு இருபதுன்னு சொன்னியா?”
“ஒரு பேச்சுக்கு தான்டா இருபதுன்னு சொன்னேன்.”
“அப்பாடா.”
“ஆனா நெஜமா ஒரு இருபத்தியஞ்சு தடவை அழைச்சிருப்பேன்.”
“அடப்பாவி.”
“எதுக்கு டென்ஷன் ஆகுற?”
“கொசுவ நசுக்கிற மாதிரி மதுவோட ஃப்ரண்ட்ஷிப்பை நசுக்கிப்புட்டியே மச்சி.”
“என்ன உளறுற? அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ சொன்ன மாதிரி பொங்கல் ஹாலிடேஸ்க்கு டூர் போயிருப்பா.”
“உன்னோட ஃப்ரண்ட்ஷிப்புக்கு நீயே பொங்கல் வச்சிட்டியே மச்சி?”
“பேசாம இரு விவேக்.” என்றவன் இருபத்திஆறாவது முறையாக மதுவிற்கு அழைத்தான். ‘திமிரு பிடிச்சவ ஃபோனை எடுக்கிறாளான்னு பாரு. இவளை முதல்ல என்னோட ஃப்ரண்ட் லிஸ்டல இருந்து தூக்கணும்.’ என்று மனதுக்குள் திட்டினான் மதுவை.
“தம்பி அதெல்லாம் எப்போவோ உன்னை மதுக்கண்ணு தூக்கிடுச்சுப்பா.” – ஒருத்தரின் மைன்ட் வாய்ஸ்.
யாரோட மைன்ட் வாய்ஸ்? வேறு யாரு? மிஸ்டர் லவ் குருவேதான்.
            *   *   *
                 14
தவறு செய்யும்போது யாரும் கையும் களவுமாக பிடிபடுவதில்லை. அதற்கு அடுத்தக் காலக்கட்டத்தில், அதாவது தவறிழைத்துவிட்டு சரியான பாதையில் செல்லும்போதுதான் முக்கால்வாசி திருடர்கள் பிடிபடுகிறார்கள். இதற்கு மதுவும் விதிவிலக்கல்ல என்பது போல் ஆர்யாவின் தொடர்புகளை துண்டித்தபிறகு தந்தையிடம் மாட்டிக்கொண்டாள்.
நாம் செய்யும் தவறுகள் மீண்டும் நடந்து விடுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் இருக்க முடியும். அது என்னவென்றால் நாம் கையும்களவுமாக மாட்டிக்கொள்ளாமல் இருந்துவிட்டால் அந்த தவறு மீண்டும் நிச்சயம் நடந்துவிடும். கேட்பாறற்ற நிலையே தவறுகள் தொடர்வதற்கு முழுக்காரணம். குறைந்த பட்சம் பிடிபட்டுவிடுவோம் என்ற பயமேனும் இருந்தால்கூடப் போதுமானது. ஆனால் நானே ராஜா நானே மந்திரி என்ற நிலையில் தவறான பாதையில் சென்ற மனதுக்கு ஆட்டம் போட ஒரு மேடை கிடைத்துவிட்டால், பாதை கிடைத்துவிட்டால் என்ன நடக்கும்?
தன்னை நோட்டம்விட அறிந்தவர் தெரிந்தவர் யாரும் இல்லையே என்ற மமதையில் மேடையில் குத்தாட்டம் ஆடத்துவங்கிவிடும் மனம் என்னும் குரங்கு. ஆடி சோர்ந்து மூச்சிரைக்க, மிடியல இது போதும்டா சாமி என்று மனமே உணர்ந்தால் தான் உடலுக்கு விமோச்சனம்.
திருட்டுத்தனமாய் மேடையில் தரிகெட்டு ஆடும் மனது கல்லடிகள் பட்டு மேடையைவிட்டு இறங்கி ஓடுவதும் சில நேரங்களில் நடக்கும். மதுவும் அப்படித்தான் கல்லடிபட்டாள். மதிப்பெண்கள் ரூபத்தில் முதல் கல்லடி விழுந்தது. அடுத்த கல்லடி தந்தை அர்ஜுனின் கோபம்.
சிறுவயது முதல் கோபத்தின் சாயலைக்கூட தந்தையின் முகத்தில் காணாதவள், அவரது கோபத்தை முதல் முறையாகக் கண்டாள் ஆர்யாவின் மிஸ்ட்டு கால்களை அவர் பார்த்தபோது.
அப்போது தான் அவர் அவளை கோபமாக மொட்டை மாடியின் கடைசி படிக்கட்டுகளில் நின்றபடி அழைத்தது.
“மது கீழே வா…”- அர்ஜுன்.
ஹரினியுடன் பேசிக்கொண்டிருந்த மது அவளையும் இழுத்துக்கொண்டு அடித்துப்பிடித்துக் கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
            *  *  *
மதுவுடன் மொட்டைமாடியில் இருந்து ஹரினியும் சேர்ந்து இறங்கி வந்தாள். இரு குமரிகளையும் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்தவர் ஹரினியிடம் “ஹலோ ஹரினி, அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?”
“யெஸ் அங்கிள்.”
“வண்டியிலயா வந்த?”
“இல்ல அங்கிள். ஷேர் ஆட்டோவில் வந்தேன்.”
“ஓ… வாம்மா உன்னை உன் வீட்டுல டிராப் பண்ணிடுறேன்.”
அர்ஜுனின் பேச்சில் தெரிந்த உள்ளர்த்தம் இரண்டு குமரிகளுக்குமே புரிந்தது.
சற்றும் யோசிக்காமல், “ஓகே அங்கிள். நான் ரெடி. மதுகிட்ட கால்குலேட்டர் வாங்க வந்தேன். வாங்கிட்டேன். இனி கிளம்ப வேண்டியது தான். போலாமா அங்கிள். பை மது..” என்றாள் ஹரினி.
“பை ஹரினி.”
மதுவின் தந்தை ஹரினியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஆனால் அவர் மறைமுகமாக, “நோ சாட்டிங் வித் ஃப்ரண்ட்ஸ். படிப்பில் கவனம் வை மது.” என்று மதுவிற்கு கொடுத்த எச்சரிக்கை மதுவிற்கு நன்றாகவே புரிந்தது. ஹரினியை வலுக்காடாயமாக அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றதன் மூலம் மதுவின் போக்கிரிதனத்திற்கு தந்தை கொடுக்கும் நெருக்கடி புரிந்தது.
லேசாக ஜாடையாகப் புரிந்ததை அவளின் தந்தை மறுநாளே தெளிவான வார்த்தைகளால் நன்றாக புத்திக்குள் ஏறும்படி புரியவைத்தார்.
மறுநாள் திங்கட்கிழமை.
மதுவின் இரண்டாவது மோசமான திங்கட்கிழமை.
                 *   *   *
இரண்டாவது மோசமான திங்கட்கிழமை…
“மது இன்னிக்கு என்கூட காலேஜ்க்கு வா.”- மதுவின் தந்தை.
இது அவரது வழக்கமான பேச்சு இல்லை. வரியா என்று கேட்பார்களே ஒழிய, வா என்று அவர் கட்டளையிட்டது இல்லை இந்நாள் வரை.
தந்தையிடம் இப்போது மறுக்கும் துணிவு அவளுக்கு இல்லை.
கல்லூரி வளாகத்திற்குள் அவள் நுழைந்ததும் ஆர்யாவைப் பற்றிப் பேசாமல் அவரது வகுப்பிற்குச் சென்றுவிடுவார் என்று நினைத்திருந்த மதுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் அவளுடன் வளாகத்திற்குள் நடந்து வந்தார். அப்படியே கல்லூரி கேன்டீனுக்கு அழைத்துச்சென்றார். இருவருக்கும் ஒரு காஃபி ஆர்டர் செய்தார்.
மதுவிற்கு இப்போது ஒரு காஃபி அத்தியாவசியத் தேவையாக இருந்தது. காப்பி குடிக்கவில்லை என்றால் அவள் தலைக்குள் இருக்கும் மூளை வெடித்தே விடும். ஏன் என்றால் தந்தையுடன் காரில் கிளம்பிய நேரத்தில் இருந்து தந்தையின் கோபமான இறுகிய முகத்தைப் பார்த்து பேய்த்தலைவலி வந்துவிட்டது.
“இந்த செமஸ்டர்ல ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணிருக்க மது..”- ஒரு மிடறு காப்பியை குடித்தபடி அர்ஜுன்.
“ம்.. யெஸ் டாடி…”- ஒரு முழு கப் காப்பியை முழுதாய் ஒரே மடக்கில் குடித்து முடித்தபின் மது.
“You are talking too much with boys madhu… முன்பே ஒரு நாள் உன்னை கேன்டீன்ல ஒரு பையன்கூடப் பார்த்தேன்.. அந்தப் பையன் முகத்தைக்கூட நான் பார்க்கல.. எனக்கு அவன் யாரு என்னங்கிற விஷயம் தேவையில்ல மது. பட் உன்னோட லைஃப்ல முக்கியமான கட்டத்துல இருக்க.. இந்த காலேஜ் கேம்பஸ்க்குள்ள நுழைய முடியலையேன்னு எத்தனை பேர் அழுது இருக்காங்க தெரியுமா? எனக்குத் தெரியும். ஏன்னா நான் அழுதுருக்கேன். அண்ணா யுனிவர்சிட்டில சீட் கிடைக்கலைன்னு அழுதிருக்கேன். அந்த வெறியிலதான் நல்லா படிச்சி சீட் கொடுக்காத காலேஜ்ல ப்ரொபர்ஸரா வேலையில சேர்ந்தேன்.”
காலியாகிப் போன காபி கப்பையே உற்றுப் பார்த்தபடி மது. கண்களில் அருவிகளைச் சுமந்தபடி அமைதியாக மது அமர்ந்திருந்தாள்.
“அப்பா என்ன சொல்றேன்னு புரியிதா மது?”
“புரியிது டாடி. இனி ஃப்ரண்ட்ஸ்கூட ரொம்ப பேசி அரட்டையடிக்க மாட்டேன் டாடி.”
“ஃப்ரண்ட்ஸ்?” என்று சொன்னவர் புருவம் வளைத்து சைகையில் கேள்விகேட்கவும்,
“பாய்ஃப்ரண்ட்ஸ்கூட ரொம்ப பேச்சு வச்சிக்க மாட்டேன் டாடி.”
“குட்.” என்றார் அர்ஜுன்.
மதுவின் கண்களிலிருந்த அருவிகள் வெள்ளமாய் விழத் தொடங்கின.
“வெரி குட்.” என்றார் மிஸ்டர் லவ் குரு.
இரண்டாவது மோசமான திங்கட்கிழமை இனிதே முடிந்தது.
                  *    *    *

Advertisement