Advertisement

அந்த மோசமான ஞாயிறன்று…
“மது உன்னோட ஜியோ நம்பர் அடிச்சிட்டே இருக்குப்பா. நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்து மிஸ்ட் கால். யாரு? யாரோட நம்பர் இது? ஆர்யாவா?”
கைபேசியின் தவறவிட்ட அழைப்புகள் காட்டிய எண்ணைப் பார்த்தாள் மது. பார்த்து முடித்ததும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.
“சைலன்ட்ல போடு. அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றாள் ஜான்வி.
“சரி.” என்ற மது கைபேசியை ஸைலன்டில் போட்டுவிட்டு தனது மென்பொருள் பாடப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.
“ஆமா… ஜியோ நம்பர் எப்படி ஆர்யாவுக்குத் தெரியும்?”- ஜான்வி.
“ஜானு… எனக்கு ஏற்கனவே தலைவலிக்குது. இப்ப அந்த ஆராய்ச்சியும் பண்ணி இன்னும் தலைவலியைக் கூட்டப் பிடிக்கல. இப்ப இந்த நம்பர் ஆர்யாவுக்கு தெரிஞ்சா என்ன? தெரியலைன்னா என்ன? நான் ஃபோனை எடுக்கப்போறது இல்ல. அதனால நாம படிக்கிற வேலையைப் பார்ப்போமா?”
“அதான… ஆர்யாவுக்கு இந்த நம்பர் தெரிஞ்சதால   என்ன ஆகப்போகுது? நீ தான் பேசப்போறதே இல்லையே? பின்ன எதுக்கு கவலைப்படணும். அப்படித்தான சொல்ற?? இனி ஆர்யாகூட பேச மாட்டில?”
“ஜானு… ப்ளீஸ். லீவ் மி அலோன்.”
“சரிப்பா, சரி. நானும் படிக்க தான் போறேன்.” என்று ஜான்வி சொன்னபோது ஸைலென்ட்டில் இருந்த மதுவின் கைபேசி யாரோ அழைக்கிறார்கள் என்று கூறி மின்னி மின்னி அணைந்தது. அது ஸைலென்ட் மோட்டில் இருப்பதால் கைபேசியில் இருந்து ஒலி வரவில்லை ஒளிதான் வந்தது. மது தனது தோளைக் குலுக்கியவாறு தனது வேலைக்குள் மூழ்கிவிட்டாள்.
அரை மணி நேரம் கடந்தபிறகு அவர்களது கவனத்தில் இருந்த அந்தக் கைபேசியை அவர்களது பாடங்கள் மறக்கடித்தன. ஒரு மென்பொருள் ப்ரோகிராமை எழுதிக் கொண்டிருந்த மதுவின் கவனத்தை தந்தையின் “மது.” என்னும் குரல் கலைத்தது.
“மது…” என்று அழைத்தவாரே அர்ஜுன் அவர்களின் அறைக்குள் நுழைந்தார். ஜான்வி அவளது ப்ளஸ் டூ பாடத்தில் மூழ்கி இருந்தாள். தந்தை மதுவை அழைத்ததைக்கூட கவனிக்காமல் தனது பாடத்தை தன்னிடமே ஒப்புவித்துக்கொண்டிருந்தாள்.
“மது…”- அர்ஜுன்.
“என்னப்பா?” என்று கேட்டவாரே தனது வெள்ளை நிற திவான் மெத்தையில் இருந்து எழ, அர்ஜுன் அவளருகே வந்து நின்றார்.
“எனக்கு உன்னோட சார்ஜர் வேணும் மது.”
“இதோ தர்றேன்ப்பா.” என்று தந்தையிடம் பதில் தந்தவள் உடனே அந்த சார்ஜரைத் தேட ஆரம்பித்தாள். “இங்க தான் வச்சிருந்தேன். ஜானு, சார்ஜர் பார்த்த?” என்று ஜானுவிடம் கேட்டபோது, “அங்கதான் இருக்கும் மது, நல்லா பாரு.” என்று பதில் தந்துவிட்டு தனது பாடப்புத்தகத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்தினாள்.
“எங்க போச்சுன்னு தெரியலையே டாடி…” என்று கூறியபடியே மது அப்பாவிடம் திரும்ப… அவர் கைகளில் இருந்தது அவளது ஜியோ எண் ஆக்டிவேட் செய்யப்பட்ட அவளது கைபேசி. அர்ஜுனின் கையில் இருந்த போதுகூட கைபேசியில் வெளிச்சம் வந்தது. 8889097890 அழைக்கிறது என்று சொன்னது கைபேசி திரையின் வெளிச்சம். கைபேசி சில நொடிகள் மின்னி மின்னி அணைந்தது.
மதுவின் இதயம் -30 டிகிரி செல்சியஸில் உறைந்துபோன ஐஸ்கட்டியாய் மாறியது.
“செக்மேட்” என்று இன்னும் சத்தமாகச் சொன்ன மிஸ்டர் லவ் குருவின் முன்னே மது-ஆர்யாவின் சதுரங்க ராஜாவின் தலை உருண்டு விழுந்தது.
             *   *   *
“மது… இருபது மிஸ்ட் கால்ஸ் இருக்கே? இருபதும் ஒரே நம்பர்ல இருந்து வந்திருக்கு…”- மதுவின் தந்தை அர்ஜுன்.
“பாய் ஃப்ரண்டா மது?”- அர்ஜுன்.
“இல்ல டாடி. அப்படியெல்லாம் யாரும் எனக்கு இல்ல டாடி. அந்தப் பையன் வெறும் ஃப்ரண்ட் மட்டும் தான் டாடி.”
“எதுக்கு ஃபோனை ஸைலன்ட்ல போட்டிருக்க?”
“அந்தப் பையன் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுவான்னு…”
“Then switch off the damm phone or block his number”
“I blocked him daddy”
“I cant believe you are doing this madhu.. I cant believe this…”
“I blocked his number daddy… really..”
ஆனால் மதுவின் சமாதானங்களை அதற்குமேல் கேட்காமல் மதுவின் தந்தை அர்ஜுன் அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினார்.
“யார்கிட்டலாம் ஜியோ நம்பரைக் கொடுத்துத் தொலைச்ச?” என்று நடந்து முடிந்த பூகம்பத்தை நேரில் கண்ட ஜான்வி மதுவிடம் கேட்டாள்.
“யார்கிட்டயும் கொடுத்ததே இல்ல ஜானு. ஆர்யா கைக்கு இந்த நம்பர் எப்படிப் போச்சுன்னே தெரியலப்பா…” என்று மது சொல்லிக் கொண்டிருந்தபோதே, “மது” என்று அழைத்தவாறே ஹரினி அவளது அறைக்குள் வந்து நின்றாள்.
ஹரினியின் குரலைக் கேட்டதும் கீழே விழுந்த ஏதா ஒரு பொருளை எடுப்பதுபோல குனிந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் மது. நிமிர்ந்த மதுவின் முகத்தைப் பார்த்த ஹரினி,
“என்ன? பேயைப்பார்த்த மாதிரி பார்க்குற? எத்தனை தடவை காலிங் பெல் அடிக்கிறது? உன்னோட அப்பாவும் இப்படித்தான் என்னைப் பார்த்தாரு… நீயும் அதே மாதிரிதான் பார்க்குற… ஃபாதர்ஸ் டாட்டர்ன்னு சொல்றது சரிதான் போல.” என்று நடந்து கொண்டிருக்கும் களேபரங்கள் தெரியாமல் நான்ஸ்டாப்பாக பேசி முடித்தாள். அவள் பேசி முடித்ததும் மது தனது திவான் மெத்தையில் அமர்ந்துகொண்டு, “வா ஹரினி உட்காரு. என்ன திடீர்ன்னு வந்திருக்க?” என்று விசாரித்தாள்.
“என்னோட ஸைன்டிஃபிக் கால்குலேட்டர் உன்கிட்டதான் இருக்கு தெரியுமா?”
“ஆமால… மறந்திடுச்சு. சாரி…”
“எத்தனை தடவை நேத்து நைட்ல இருந்து இதுக்காக கூப்பிட்டேன் தெரியுமா? எதுக்கு ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க? அந்த ஆர்யா என்னோட வீட்டுக்கே வந்து உன்னை கான்டாக்ட் பண்ண உன்னோட லான்ட்லைன் நம்பர் கேட்டான்ப்பா. நான் எவ்வளவு உஷாரான ஆளு… லான்ட்லைன் நம்பர் கொடுப்பேனா? அதான்… உன்னோட ஜியோ நம்பரைக் கொடுத்தேன்ப்பா.” என்றாள் சிரித்துக்கொண்டே ஹரினி.
ஆனால் மதுவின் முகத்தில் கோபம் மட்டுமே இருந்தது. அவளது கோபத்தின் காரணம் புரியாமல் திகைத்து நின்ற ஹரினியைப் பார்த்து,
“துரோகி…” என்றாள் மது.
“வாட்??”- ஹரினி.
“மது வேணாம்… கோபப்படாத… ஹரினிக்கா ஓடி வந்திடுங்க. என் பின்னாடி ஒளிஞ்சிக்கோங்க.” என்று ஜான்வி சொல்லிக் கொண்டிருந்தபோதே,
“பச்சத் துரோகி.” என்று கத்திய மது ஹரினியின் மேல் பாய்ந்திருந்தாள் அடுத்தக் கணம்.
                *   *   *
“ஏய் சும்மா சும்மா என்னைத் திட்டாதப்பா. நாம காலேஜ்ல இருந்து கிளம்பும்போது மார்க் கம்மியாகிடுச்சுன்னு அழுத. எனக்கு அவ்வளவு தான் தெரியும். எனக்கு இப்படி ஒரு பிரச்சனை நடக்குதுன்னு தெரியாதுல?”- ஹரினி.
“உன்ன யாரு என்கிட்டக் கேட்காம ஜியோ நம்பரைக் கொடுக்கச் சொன்னது?”- மது.
“அதான் பிரச்சனை வரும்னு நான் நினைக்கலையே மது…”
“இப்ப ரெண்டு பேரும் சண்டை போடுறதை நிறுத்துறீங்களா இல்ல மொட்டை மாடிக்குப்போறீங்களா? நான் படிக்கணும். திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைப் பேசிக்கிட்டே இருக்கீங்க… எரிச்சலா இருக்கு. நாளைக்கு எனக்கு ரிவிஷன் எக்ஸாம்.” என்று ஜான்வி பொறுமையாவும் இழந்து கேட்கவும், “வா மொட்டை மாடிக்கு” என்று ஹரினியின் கைகளை பிடித்து இழுத்தபடி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.
“உன்னோட தங்கச்சிகிட்ட மட்டும் சொல்லிருக்க பார்த்தியா?” என்றாள் சிறியகோபத்துடன் ஹரினி.
“என்ன சொல்லிருக்கேன்?”
“ஆர்யா மேல உனக்கு இருந்த ஃபீலிங்ஸ் பற்றி என்கிட்ட சொன்னியா? ஆனா ஜானுகிட்ட விளக்கமா சொல்லிருக்க…”
“ஹரினி ஃபீலிங்ஸும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்லை. ஆர்யா நல்ல பையன் தான் இல்லைன்னு சொல்லலை. அம்மாவுக்காக கோயிலுக்குப் போற பையன் நல்ல பையனாகத் தான் இருப்பான். ஆனா, எனக்கு அவன் மேல வந்தது வந்தது வந்தது… ம், வார்த்தை கிடைச்சிருச்சு… ஈர்ப்பு. அது ஒரு ஈர்ப்பு ஹரினி. அவ்வளவுதான். செக்ஸுவல் அட்ராக்ஷன். என்னால அதைத்தாண்டி வர முடியும்னு தோணுச்சு. வந்திட்டேன். இந்த மாதிரி ஏதாவது பெரிய பிரச்சனை வந்துதான் நான் மாறணும்னு இருந்திருக்கு போல… மாறிட்டேன். அவ்வளவுதான். என்ன ஒண்ணு… ஆர்யாகூட மணிக்கணக்கா பேசினப்பா எல்லாம் வீட்டுல மாட்டிக்காம ஃபோனை ஸைலன்ட்ல போட்டப் பிறகு அப்பாகிட்ட மாட்டிக்கிட்டதுதான் என் நேரம்ங்கிறது.”
“அது உலக நியதி மது. திருடன் திருடும்போது மாட்டிக்க மாட்டான். டிக்கடையில் தம்மடிக்கும்போது தண்ணியடிக்கும் போது தான் திருட்டு முழி முழிச்சி போலிஸ்கிட்ட மாட்டிப்பான். என்னோட அண்ணனோட புதுப் பேன்ட்டை போடும்போதுகூட அவன்கிட்ட நான் மாட்டிக்க மாட்டேன், அவனே எனக்கு வாங்கிக் கொடுத்த சட்டையைப் போடும்போது தான் மாட்டிக்குவேன். “நீ தான்டா எனக்கு இதை வாங்கிக்கொடுத்த, இது உன்னோட சட்டையில்லடா”ன்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டான். அது அவனோட சட்டைதான்னு சாதிப்பான் மது.”
ஹரினியின் இலகுவான பேச்சில் மனம் லேசாகிவிட கோபம் விடுத்து, “நீ சத்தியம் பண்ணா நானே நம்ப மாட்டேன்.” என்றாள் அமைதியான குரலில் மது.
“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட? இதுயெல்லாம் நல்லாவேயில்ல மச்சி.”
ஹரினி மச்சி என்றதும் சிரிப்பே வந்துவிட்டது மதுவிற்கு.
“அம்மா தாயே மச்சின்னு கூப்பிடாத. என் தங்கச்சி காதுல கேட்டது அவ்வளவுதான்… நீ சத்தியம் பண்ணாமல் சொன்னாக்கூட உன்னை நம்பித் தொலைக்கிறேன்.”
“அது… அந்த பயம் இருக்கணும்.”
“ஹா… ஹா…” என்று மது சிரித்ததைப் பார்த்ததும் மிஸ்டர் லவ் குருவின் மூக்கில் வியர்த்துவிட்டது.
காலென்டரைப் பார்த்தார் மிஸ்டர் லவ் குரு. மறுநாள் திங்கட் கிழமை என்று சொன்னது அந்த நாட்காட்டி.
ஹா… ஹா… என்று சிரித்தார் லவ் குரு. அவருக்கு மதுவின் மிக மிக மோசமான திங்கட்கிழமை ஞாபகம் வந்தது. அதை மறுநாள் மிஞ்சிவிடுமோ? என்று தனக்குள் யோசித்தபோதும் ஹா… ஹா… என்று சிரிப்பே வந்தது அவருக்கு. லவ் குரு தாமாக தனியாகச் சிரித்துக் கொண்டிருக்க,
“மது…” என்று மாடிப்படிகளின் முதல் படிக்கட்டில் நின்றபடி அவளை சத்தமாக கண்டிப்பு நிறைந்த குரலில் அழைத்தார் அர்ஜுன்.
மீண்டும் மறுபடியும் மது என்று அழைத்த அர்ஜுனின் குரலில் லேசான கண்டிப்பு இருந்தது. அலறி அடித்துக்கொண்டு தந்தையின் முன் சென்று நின்றாள் மது.
                 *   *   *

Advertisement