Advertisement

            13
இது மதுவின் கல்லூரிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதி நேரம். முதல் வருடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்ட விருந்தாளி போல கண்மூடித்திறப்பதற்குள் வேகமாகச் சென்று விட்டாலும் இரண்டாம் வருடம் சொல்லிக்கொண்டே வரும் ராகு-கேது திசை போலத்தான் வந்து நின்றது. பாடங்கள் கடினமாக இருந்தன. வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்த்து அலறினார்கள். மாணவர்கள் காதல், கசமுசா, பப், கப்போச்சினோ, பீச், சினிமா என அனைத்து பூலோக ரம்பைகளுக்கு மத்தியிலும் படிக்கவும் செய்தார்கள்.
மது எப்போதும்போல பல நேரங்களில் ஆர்யாவை ஸைட் அடித்தாலும் அதை சிதம்பர ரகசியமாய் வைத்திருந்தாள். வருடத்தின் கடைசி பரீட்சை முடிவுகள் வந்துகொண்டிருந்தன. இன்டர்னல்ஸ் (மாதாந்திரத் தேர்வு) மதிப்பெண்கள் ஒவ்வொரு பாடமாக வந்து கொண்டிருந்த நேரம் அது.
“மது பாத்ரூம் வர்ற மாதிரி இருக்கு.”- வகுப்பறையில் மதுவின் கல்லூரித் தோழி ஜென்சி.
“இப்பதான அப்ளைய்ட் ஃபிசிக்ஸ் ஹவர்ல ரெண்டு பேரும் போயிட்டு வந்தோம்.”- மது.
“அது அப்ளைய்ட் ஃபிசிக்ஸ் பேப்பர் கொடுத்தப்ப போனோம். இப்ப M1 மேக்ஸ் பேப்பர் கொடுக்கப் போறாங்களே? அதான் இப்ப திரும்ப வந்திடுச்சு.”
“ஜென்சி…”
“ப்ளீஸ்ப்பா.”
“சரி வா. ப்ரொபர்சர் வருவதற்கு முன்னே போயிடுவோம்.”
மெல்ல வகுப்பறையிலிருந்து நழுவி இருவரும் கழிப்பறைக்குச் சென்றால் அங்கே நீண்ட வரிசை இருந்தது.
“ஏய்… ஐஞ்சு நிமிஷம் ஆகும் போலயே? நீளமான க்யூ நிற்குதே…”- மது.
“பரவாயில்லப்பா எல்லோரும் நம்மள மாதிரிதான் போல, பேப்பர் கொடுக்கிறாங்கன்னதும் எல்லோருக்கும் பாத்ரூம் வந்திடுச்சு பாரேன். எல்லா டிபார்ட்மென்ட் பசங்களும் பேபருக்கு பயந்து இங்கதான் இருக்காங்க. இங்க ஐஞ்சு நிமிஷம் கடத்துவோம். கிளாஸ் ரூமுக்குள்ளப் போனா நெஞ்சு வலி வர்ற மாதிரியிருக்கு. என்னோட ஸ்கூல்ல நான்தான் எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்டா இருப்பேன் தெரியுமா? ஆனா இந்த அண்ணாயுனிவர்சிட்டிக்குள்ள வந்ததில் இருந்து அறுபது மார்க் தாண்டினாலே பெரிய விஷயமாகிடுது. வா அந்தக் காரிடர் பக்கமா நிற்கலாம்.” என்று கூறியபடி ஜென்சி மதுவை அந்த நீள நெடிய வராந்தா பக்கமாக இழுத்துக்கொண்டு சென்றாள். வராந்தாவின் சுவரில் சாய்ந்தபடியே இருவரும் இயற்கை பொங்கி வழியும் கல்லூரியின் மாபெரும் திடலை வேடிக்கைப் பார்த்தனர்.
“மது??” என்று ஆர்யாவின் குரலைக் கேட்டதும் மதுவிற்கு தூக்கிவாரிப்போட்டது.
“ஹாய்…” – மது ஆர்யாவிடம்.
“என்ன இந்த நேரத்துல இங்க?”
“ரெஸ்ட்ரூம்…”
“ஓ…” என்று மதுவிடம் சொன்னவன் ஜென்சியிடம் “ஐ ஆம் ஆர்யா.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
இரண்டு நிமிடங்கள் பொதுவாகப் பேசிவிட்டு “ஓகே.. பை தென்.” என்று விலகப்போனவன் மறந்து போன ஏதோ ஒரு விஷயம் திடீரென்று ஞாபகம் வந்தது போல திரும்பவும் மதுவிடம் வந்து, “அந்த ஆத்தர் புக் கிடைக்கல மது. கிடைச்சா டெக்ஸ்ட் பண்றேன்.” என்றான்.
இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு ஆர்யா விலகியதும் ஜென்சி மதுவிடம்,
“யாருப்பா இந்த டாம் குரூஸ்?” என்று கேட்டாள்.
“ஸ்கூல்ல இருந்து தெரியும். ஃப்ரண்ட்ஸ்.”
“ஃப்ரண்ட்ஸ்?”
“யெஸ்.” என்று கண்களை உருட்டிய மதுவிடம் ஜென்சி சொன்னாள், “நீ தப்பா எடுத்துக்கலைன்னா உன்கிட்ட ஒண்ணு சொல்லவா?”
“சொல்லு.”
“ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஸுக்கர்பெர்க்கும் அவரோட லவ்வரும் ரெஸ்ட்ரூம் வாசல்லதான் சந்திச்சாங்களாம்.”
“ஹா… ஹா…”
“நான் காமெடி பண்ணலப்பா. இதே மாதிரி ஒரு நீளமான வரிசையில தான் மீட் பண்ணாங்களாம்ப்பா. ஐ ஆம் நாட் ஜோக்கிங்.”
“இதுதான் 2020யோட சிறந்த ஹாஸியமான மேட்டர் பா. இப்ப நீயும் தான என்கூட ரெஸ்ட் ரூம் வாசல்ல இருக்க? அப்படின்னா நீயும் தான ஆர்யாவின் காதலி லிஸ்ட்டுல வரணும்? எதுக்கு என்னை மட்டும் சம்பந்தப்படுத்திப் பேசுற?” என்று மது ஜென்சியிடம் சிரித்துக்கொண்டே சொன்னாலும் அந்த ஹாஸியமான மேட்டரைத்தான் மதுவின் இளமை மனம் ரசித்தது.
தோழி கொடுத்த உதாரணம் அவளது வாலிப மனதை ஊஞ்சலில் வைத்து ஆட்டிவிட்டது. மதுவின் மனதும் ஊஞ்சலின் அசைவை நொடிக்கு நொடி ரசித்தது.
நண்பர்கள் இப்படி ஏத்திவிடவில்லை என்றால் காதலிப்பவர்களின் ஜனத்தொகை கூடியிருக்க வாய்ப்பே இல்லை. தானாகக் காதலிக்கும் கூட்டத்தைவிட, “நீ அவனை லவ் பண்றல? எனக்குத் தெரியும்ப்பா.” என்று நண்பர்கள் ஏத்திவிட்டுக் காதலிக்கும் கூட்டமே அதிகம்.
அதன்பிறகு வரிசையில் நின்ற இருவரும் வந்தவேலையை முடித்துக்கொண்டு அடித்துப் பிடித்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தனர்.
பேயைப் பார்த்ததுபோல வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியரைப் பார்த்து உறைந்து நின்றாள் நம் மது. சரித்திரம் திரும்புது, சரித்திரம் திரும்புது என்று சொல்வது இதுதானோ?
 லவ் குரு நிழலாய் மதுவையும் ஆர்யாவையும் தொடர்ந்துகொண்டே இருந்தார். சதுரங்கக் குதிரையின் மேல் அமர்ந்திருந்தவர் மதுவையும் ஆர்யாவையும் வேவு பார்த்தபடியேதான் இருந்தார்.
                          
மிஸ்டர் விதியின் கட்டளைப்படி மது-ஆர்யாவுடன் விளையாடும் சதுரங்க ஆட்டத்தில் மிஸ்டர் லவ் குருவின் குதிரை சீறிப் பாய்ந்து “செக்மேட்.” என்று சொல்லி மது-ஆர்யாவின் சதுரங்க ராஜாவின் முன்னே நின்றது.
            *   *   *
அறுபது மாணவர்கள் கூடியிருந்த மதுவின் வகுப்பறையில் நடு நாயகமாக நின்றுகொண்டு குட் மார்னிங் என தனது அறிவாளித்தனமான குரலில் சொன்னார் மதுவின் தந்தை அர்ஜுன்.
“ஏன்ப்பா, அர்ஜுன் சார் இப்ப இங்க என்ன பண்றார்? அவர் திர்ட் இயருக்குதான அப்ளைடு ஃபிசிக்ஸ் எடுக்கிறார்? நம்ம ப்ரொபர்சர் பாலகுருசாமி ஏன் இன்னிக்கு வரல?” என்று அறை முழுதும் நிரம்பி வழிந்த மாணவர்களின் கேள்விக்கு பேராசிரியர் அர்ஜுன்னே பதில் தந்தார்.
“மிஸ்டர் பாலகுருசாமி டெல்லிக்கு ஒரு செமினாருக்குப் போயிருக்கார். அவர் இடத்தைதான் நான் ஃபில் பண்ணிருக்கேன். ஐ ஹோப் யு வில் என்ஜாய் மை பிரசன்ஸ்.” என்று கையில் மாணவர்களின் மதிப்பெண்கள் குவிந்துக்கிடந்த விடைத்தாள்களை அசைத்தபடியே மதுவைப் பார்த்தபடி அவர் சிரித்துக்கொண்டே சொல்ல மது அரண்டுபோய் உட்கார்ந்திருந்தாள்.
அடுத்த பத்துநிமிடத்தில் “மது” என்று அழைத்து 55 என்று மதுவின் மதிப்பெண்களைச் சொல்லி பேராசிரியர் அர்ஜுன் அழைத்தபோது இருவரின் இதயமும் இமயமலைக்குப் போய்விட்டு வந்திருந்தது.
  லவ் குரு நிழலாய் மதுவையும் ஆர்யாவையும் தொடர்ந்துகொண்டே இருந்தார். சதுரங்கக் குதிரையின் மேல் அமர்ந்திருந்தவர் மதுவையும் ஆர்யாவையும் வேவு பார்த்தபடியேதான் இருந்தார்.
“செக்மேட்.” என்று சொல்லி இன்னும் சத்தமாக நகைத்தார் மிஸ்டர் லவ் குரு.
               *   *   *
தனது ஸ்கூட்டியில் ஜான்வியை அழைத்துக்கொண்டு மது ஜான்வியின் டியூஷன் சென்டருக்குச் சென்றாள்.
“என்ன மது காலேஜ்ல எதுவும் பிரச்சனையா?”
“இல்லயே…”
“ஏய் சும்மா சொல்லு. நான் ஒண்ணும் அம்மாகிட்ட வத்தி வைக்க மாட்டேன். உன் முகமே சரயில்ல.”
உடன்பிறந்தவர்களை பல நேரங்களில் நம்பவேகூடாது. உடன்பிறந்தவர்களிடம் கர்ணன்னாய் பல நேரங்களில் இருந்தாலும் எட்டப்பனாய் எப்போது வேண்டும் என்றாலும் மாறுவார்கள்.
பெற்றோர்களிடம் எந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது என்று சொல்லி வைக்கிறோமோ, அந்த விஷயத்தை பெற்றோர்களிடம் வார்த்தை மாறாமல் முடிந்தால் கூடுதலாக இரண்டு வார்த்தைகள் சேர்த்து ஒப்பித்து விடுவார்கள்.
இந்த உண்மையை பல முறை அனுபவத்தால் அறிந்ததால் சுதாரித்த மது, அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.
ஜான்வியை டியூஷன் சென்டரில் விட்டுவிட்டு மது தனது ஸ்கூட்டியை கிளப்பியபோது அவளது கைபேசி அழைத்தது.
தந்தையின் பெயரை திரையில் பார்த்ததும் திகைத்தாள் மது. மதிப்பெண்களை தந்தையின் கையால் வாங்கியப் பின்னே கல்லூரி முடிந்தவுடன் அவசரம் அவசரமாக வீட்டிற்கு கிளம்பிய மது இந்நிமிடம் வரை தந்தையைச் சந்திக்காமல் தவிர்த்தபடியே இருந்தாள். இப்போது கைபேசியில் அவர் எதற்காக அழைக்கிறார் என்பதை யூகித்து தைரியத்தை வரவழைத்தபடி கைபேசியின் அழைப்பை ஏற்றாள் மது.
“அப்பா, சொல்லுங்க.”- மது.
“எங்க மது இருக்க?”
“பெசன்ட் நகர். ஜான்வியின் டியூஷன் சென்டர்லப்பா. ஜான்வியை விட வந்தேன்.”
“ஓ… சரி சும்மாதான் கேட்டேன். பாத்து கவனமா வண்டியோட்டு.”
“சரிப்பா.”
“ம். வச்சிடுறேன்.”
“சரிப்பா.”
“ஒண்ணுமே சொல்லலையே… ஒரு வார்த்தைகூடக் கேட்கலையே?” என்று மதுவின் மனம் நினைத்தபோதும் அமைதியாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். வீட்டில் வரவேற்பறையில் இருந்த குஷன் சோபாவில் அவளது தந்தை அமர்ந்தபடி ஃபுட்பால் மேட்ச் பார்த்துகொண்டிருந்ததைப் பார்த்தாள். அப்போது மதுவின் மனசாட்சி ஃபுட்பால் போல உள்ளுக்குள் அவளிடமே உதையும் மிதியும் வாங்கிக்கொண்டிருந்தது.
மது நேரே அப்பாவின் எதிரே சென்று நின்றாள். வீட்டில் அன்னையில்லாதது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தது.
“அப்பா…”
“என்ன மது?”
“இந்த தடவை மார்க் கொஞ்சம் கம்மியாகிடுச்சு.”
“ஸோ வாட்? அடுத்த தடவை நல்ல மார்க் வாங்கிடு. இட் ஹாப்பன்ஸ் மது. அடுத்து கவனமா இருந்திட்டாப் போச்சு… அவ்வளவுதான்.”
இரண்டு திட்டு திட்டியிருந்தால்கூட மனது சமாதானம் அடைந்திருக்கும். ஆனால் தந்தை தட்டிக்கொடுத்துப் பேசியதும் உள்ளுக்குள் மனம் அழத்தொடங்கியது. மனதையும் முகத்தையும் தந்தையிடம் மறைத்தபடியே அடுக்களைக்குச் சென்று தண்ணீரை மொண்டிக் குடித்தாள் மது.
சிலருக்கு தான் அழுவதை வெளியே காட்டிக்கொள்ளப் பிடிக்கவே பிடிக்காது. சிலருக்கு தான் அழுவதைப் பார்த்து ஆயிரம் பேர் துக்கம் விசாரிக்க வேண்டும். மது இதில் முதல் ரகம்.
தனது அறைக்குள் நுழையும் முன் தந்தையைக் கடக்கையில் மீண்டும் மனதின், முகத்தின் வாட்டத்தை அவருக்குத் தெரியப்படுத்தாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் மது.
கட்டிலில் படுத்தவள் போர்வையை தலைவரை இழுத்து மூடிக்கொண்டாள். அன்னை வித்யா வந்தபோதும் தூங்குவது போலவே பாசாங்கு செய்துகொண்டு அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.
ஜான்விக்கும் மதுவிற்கும் ஒரே அறைதான் படிப்பதற்கும் படுப்பதற்கும். இருவரும் ஒரே அறையைத் தான் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். ஜான்வி அவர்களின் அறைக்குள் நுழைந்துபோது அன்னை வித்யா அவளை “ஜானு” என்று அழைத்து,
“மது சாப்பிட்டாளான்னு கேளு.” என்று சொன்னார்.
“கேட்குறேன்மா.” என்று அடுக்களையில் இருக்கும் அன்னைக்கு பதில் தந்துவிட்டு மதுவை எழுப்பினாள் ஜான்வி.
“ஏய்… மது… அம்மா சாப்பிட்டியான்னு கேட்கிறாங்க.”- ஜான்வி மதுவிடம்.
“ஏய்…”- மீண்டும் ஜான்வி மதுவிடம்.
“அம்மா மது தூங்கிட்டா. எழுந்திரிக்கல.”- ஜான்வி அன்னையிடம்.
“சரி… நீ வா சாப்பிட.” என்று அன்னை வித்யா ஜான்வியை அழைத்ததும்,
“இதோ வந்திட்டேன்.” என்ற ஜானு வேகமாக உடைமாற்றி சாப்பாட்டு மேஜைக்கு விரைந்தாள். மெதுவாக இரவு உணவை முடித்துவிட்டு தனது பால் டம்பளருடன் அறைக்குள் நுழைந்தாள். மதுவின் அருகேயே கட்டிலில் அமர்ந்தபடி சிறிது நேரம் கணிதம் பயின்றாள். சிறிது நேரம் தமிழ் பாடங்களை எழுதிப்பார்த்தாள். ஒரு மணி நேரத்திற்கு மேல் பறந்துவிட்டது. மணியைப் பார்த்தாள். மணி இரவு ஒன்று நாற்பது என்றுக் காட்டியது. அடுக்களைக்குச் சென்று பால்லை சூடு பண்ணினாள். அறைக்கு வந்ததும் தனது போர்வையை எடுத்து போர்த்தியபடியே மதுவின் அருகே படுத்த ஜான்வி மெல்லிய குரலில் சொன்னாள்,
“மது எல்லோரும் தூங்கிட்டாங்க, இப்ப எழுந்து பாலை மட்டும் குடிக்கிறியா?”
மதுவிடம் அசைவேயில்லை.
“ஏய்… நீ முழிச்சிட்டுதான் இருக்கன்னு தெரியும். எழுந்திரிப்பா.”
மது மெல்ல தனது போர்வையை விலக்கினாள். கண்கள் ஊட்டியின் சிவப்பு ரோஜா நிறத்தில் சிவந்து இருந்தன.
“என்னப்பா இப்படி அழுதிருக்க?”- ஜான்வி.
“இந்த செம்ல…”
“இந்த செம்ல??”
“மார்க் ரொம்ப கம்மி ஜானு.”
“ஃபெயில் ஆகிட்டியா?”
“இல்ல இல்ல ஆனா 55 தான் வாங்கிருக்கேன். அண்ணா யுனிவர்சிட்டியில அது கிட்டத்தட்ட ஃபெயில் மார்க்தான்.”
“ஆமா… அந்த காலேஜ்ல இது ஃபெயில் மார்க் போலத்தான். சரி, இப்ப என்ன ஆச்சு?அடுத்த முறை நல்ல மார்க் வாங்கு.”
“என்னோட மார்க்கை டிஸ்டிரிபியூட் பண்ணதே அப்பாதான் ஜானு.”
“ஷிட்… ஓ மை காட். அப்பாவா?”
“ஆமா…”
“ரொம்ப எம்பாரஸிங்கா இருந்திச்சா?”
“ம்… ரொம்ப ரொம்ப.”     
“அப்பா திட்டிட்டாரா? அதான் ஹர்ட் ஆகிடுச்சா?”
“இல்ல. திட்டல. என்னை அவர் திட்டவேயில்ல அதான் ஹர்ட் ஆகிடுச்சு ஜானு.” என்று கூறிய மது ஜான்வியைக் கட்டிக்கொண்டு சத்தமாக அழுதாள்.
“ஏய் மது… என்னப்பா இது? நான் உன்னை கிரேட் வாரியர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீ என்னடான்னா சின்ன விஷயத்துக்கு அழுகுற?”
“சின்ன விஷயமா இது? அப்பா கையால 55 மார்க் வாங்குனது சின்ன விஷயமா?”
“சரி… பெரிய விஷயம் தான். அதுக்கு என்னப் பண்ணப்போற?”
“ஆர்யாவை ப்ளாக் பண்ணப்போறேன்.”
“வாட்???”
“ஆமா ஜானு… ஹி இஸ் டிஸ்டர்பிங் மீ… என்னால படிக்கிறதுல முழுசா கவனம் செலுத்த முடியாததுக்கு ஆர்யாதான் காரணம். அவனோட சார்ம், கரிஸ்மா, பேச்சு எல்லாமே ரொம்ப டெம்ட் பண்ணுது ஜானு. உனக்குப் புரியாது. அவன் பக்கத்துல வந்து நின்னாவே வேற உலகத்துக்குள்ள நான் இருக்கிற மாதிரி இருக்கு. அவன் என்னை மட்டும் அறிவாளின்னு சொல்லணும், என்கூட மட்டும் பேசணும், அவனோட…”
“அவனோட??”
“அவனோட கையைப் பிடிச்சி கிஸ் பண்ணணும்னுகூடத் தோணுதுப்பா… நான் ரொம்ப கெட்டப் பொண்ணு ஆகிட்டேன்ல?”
“சொல்லு ஜானு… நான் ரொம்பக் கெட்டப்  பொண்ணு ஆகிட்டேன்ல?? அதனாலதான இது மாதிரித் தோணுது எனக்கு?”
“நீ கெட்டப் பொண்ணு ஆகலப்பா… 2019, 2020ஆக மாறிடுச்சு. அதனாலதான் உனக்கு இப்படியெல்லாம் தோணுதுப்பா. அதனால இது உன்னோட மிஸ்டேக் இல்லப்பா. இந்த பூமியோட சுழற்சியோட மிஸ்டேக்.”
“ஜானு…”
“ஆமாப்பா… 2019, 2020 ஆனதால நீ பதினெட்டு வயசுல இருந்து 19 வயதுக்கு வந்திட்ட… அந்த வயசுக்கு ஏத்தமாதிரி உன்னோட ஹார்மோன்ஸ் சேட்டை செய்யிது. அவ்வளவு தான். நீ கெட்டப் பொண்ணு இல்லப்பா…” என்று ஜானு சொன்னதுதான் தாமதம் மது வேகமாக எழுந்து ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தாள்.
“இப்பவே எதுக்கு ஃபோனை ஆஃப் பண்ற?”
“எனக்கு இந்த ஹார்மோன்ஸ் பண்ணும் சேட்டை பிடிக்கலப்பா ஜானு. If not now then when jaanu? இப்பதான் தப்பு செஞ்சுட்டோமோன்னு லேசா மனசு ஒத்துக்க ஆரம்பிச்சிருக்கு. அதான் இப்பவே ஃபோனை ஆஃப் பண்ணேன். நாளையில் இருந்து நாலு நாள் காலேஜ் லீவ் ஜானு. பொங்கல் ஹாலிடேஸ் ஆரம்பிக்குது. நாளைக்கு சன்டே ஆர்யா கண்டிப்பா கூப்பிடுவான். அதான் ஆஃப் பண்ணிட்டேன். இனி இந்த நம்பரை ஆன் பண்ணவே மாட்டேன். என்னோட ஃபோன்ல ஜியோ சிம்மை ஆக்டிவேட் பண்ணிடு மது.”
ஜானு அமைதியாக மதுவின் முகத்தையே பார்த்தபடி இருக்கவும், “ப்ளீஸ்… சீக்கிரம்ப்பா ஜானு.” என்றாள் அழுது சோர்ந்த விழிகளுடன் மது.
இரவு ஒருவழியாகக் கழிந்து மறுநாள் தொடங்கியது. அந்த ஞாயிற்றுக்கிழமை நல்ல படியாகத்தான் தொடங்கியது. ஆனால் முடிந்த போது மோசமான ஞாயிறாக முடிந்தது.
மதுவின் வாழ்வில் அதுதான் மிக மிக மோசமான ஞாயிறு.
                *   *   *
அந்த மோசமான ஞாயிறன்று…

Advertisement