Advertisement

பெங்களூர்  டோல்  கேட்…
விவேக்கும் அந்த காவல் துறை அதிகாரியும் டோல் கேட் அருகே இருந்த ஹோட்டலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விவேக் மது-ஆர்யாவின் பள்ளிக்காலத்தை அப்போது தான் சொல்லி முடித்து கல்லூரியின் இரண்டாம் வருடம் வரும் வரை நிறுத்தியிருந்தான்.
“ஹா… ஹா… ஸ்கூல்ல ஆர்யாகூட மது பழகமாட்டேன்னு சொல்லிட்டாளா? ஹா… ஹா…” – காவல் துறை அதிகாரி சங்கர்.
“சார்… நாமயெல்லாம் ஒரே டீம்னு நினைச்சேன். மது செய்ததை தப்புன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன் சார்.”- விவேக்.
“ம்க்கும்…” என்று தொண்டையை செருமிக்கொண்டு காவல்துறை அதிகாரி சொன்னார், “ஆமா… டவுட்டே வேணாம். நான் உன்னோட டீம் தான். அந்த மது பொண்ணு ரொம்ப தான் பிகு பண்ணிக்குது… ஒரு பையன் கூட பழகுறதுல என்ன ஆகப்போகுது? நீ மேல சொல்லு.”
“சொல்லவா சார்? நீங்க மது பக்கம் சாய்ஞ்சிட மாட்டீங்களே?”
“ச்ச.. ச்ச… சந்தேகமே வேணாம். நாமயெல்லாம் ஒரே டீம்.”
“அப்ப சரி சார்… காலேஜ் இரண்டாவது வருஷம் ஆர்யா வந்தப்ப…”
        * * *
ஆர்யா- மதுவின் இரண்டாம் வருடம் கல்லூரிக்காலம்…
முதல் வருடம் தள்ளி நின்றபடியே ஆர்யாவை ரசித்தாள் மது. கெட்டிக்காரத்தனமாய் அவனுக்கு துளியும் சந்தேகம் வராமல் பார்த்துக்கெண்டாள். அண்ணாயுனிவர்சிட்டி மூளையை எதற்குப் பயன்படுத்தினாளோ இல்லையோ ஆர்யா விஷயத்தில் நன்றாகவே பயன்படுத்தினாள். பெண்களின் இந்த திறமையைக் கண்டு பல இளைஞர்கள் காண்டாகிப் போவது உண்டு.
“ஹேமா என்னைப் பார்க்குறாளா பார்க்கலையா?”- அழகான இளைஞன் ஒருவன்.
“டேய் ஷைலு என்னைப் பார்த்தாடா. பார்த்தா தானே?”- நிஜமாகவே அழகான இளைஞன்.
“மச்சி, ப்ரியா கன்ஃபார்மா என்னை ஸைட் அடிச்சா மச்சி. நோ டவுட். நான் சொல்றது சரிதான மச்சி?”- அக்மார்க் தமிழ்ப்பையன்.
“என் ஆளு என்னை பார்த்தமாதிரிதான் மச்சி இருந்திச்சு. ஆனா பார்க்காத மாதிரியும் இருந்திச்சி மச்சி.” – இதுவும் ஒரு அக்மார்க் தமிழ்ப்பையன்.
“100 பெர்சன்ட அந்த ஃபிகர் என்னை லுக் விடுது மச்சி… இல்ல 80 பெர்சன்ட ஷுயர் டா.. இல்ல ஒரு 70 பெர்சென்ட் வச்சிக்கோ.”- சுத்தமான அக்கிரகாரத்தில் வளர்ந்த சிவந்த கன்னங்கள் கொண்ட பிராமணப் பையன்.
“ஏன்டா இந்தப் பொண்ணுங்க இப்படி சந்திரமுகியாக இருக்குதுங்க? நாமயெல்லாம் ஸைட் அடிச்சா எப்படி பப்ளிக்கா ஸைட் அடிக்கிறோம். இதுங்க மட்டும் ஏன்டா நம்மளை கெஸ்லயே அலைய விடுதுங்க? முடியல மச்சி. அவளை ரிசர்ச் பண்ணிப் பண்ணியே பியர் பியரா குடிச்சி தொப்பை வச்சதுதான் மிச்சம்.”- அறிவாளிப் பெண்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி இளைஞன்.
பல நேரங்களில் பெண்கள் ஏமாந்த சோனகிரியாக இருப்பதால்தான் இந்த எச்சரிக்கை உணர்வும் ஆண்களிடம் இல்லாத புதுவித ஹார்மோனாக பெண்களிடத்தில் உற்பத்தியாகிவிடுகிறது. ஏமாந்து விடக்கூடாது என்பதாலேயே அலைபாயும் மனதை மறைத்து ஒளித்து வைத்துக்கொள்கின்றனர் பெண்கள்.
மதுவும் பெண்களின் அனைத்து ஹார்மோன்களுடனும் ஒட்டிப்பிணைந்திருந்த அந்த எச்சரிக்கை உணர்வினால் தான் ஆர்யாவிடம் தனக்கு இருந்த ஆர்வத்தை அவனிடமோ, மற்றத் தோழிகளிடமோ வெளிச்சம் போட்டுக்காட்டவில்லை.
கல்லூரியின் முதல் வருடம் இப்படித்தான் கொஞ்சம் ஸைட், கொஞ்சம் ஆட்டம், கொஞ்சமே கொஞ்சம் படிப்பு என்று சென்றுவிட்டது. ஆனால் இரண்டாம் வருடத்தில் மது என்னும் துள்ளித் திரிந்த மானுக்கு கால்கள் மட்டும் போதவில்லை. அதனால் இரண்டாம் வருடத்தில் இறக்கைகளும் முளைத்துக் கொண்டன அந்த மான்குட்டிக்கு.
காமம் என்னும் மாயமான்…
காமம் என்னும் உண்மையான பொன் மாயமான்… ஆபத்தா? பேராபத்தா?
சளி பிடித்தால் தும்மல் எடுப்பதுபோல் பதின் வயதில் அந்த வயதுடன் இலவச இணைப்பாக எதிர்பாலரிடம் காமமும் ஆர்வமும் வருவது ஆபத்தா? பேராபத்தா?
மிஸ்டர் லவ் குரு மதுவின் எண்ணங்களை கண்காணித்தபடி காத்திருந்தார். அவர் நகர்த்தியிருந்த  குதிரைப்படை நேரம் பார்த்துக் காத்திருந்தது. பாய்ச்சலை ஆரம்பிக்கும் நேரம் பார்த்துக் காத்திருந்தது.
                  *  *  *
“யேய் மது உன்னோட வண்டிச் சாவி தாயேன். என்னோட பைக் ரிப்பேர் ஆகிடுச்சு.” என்றபடி பார்க்கிங்கில் தனது வண்டியை நிறுத்திக்கொண்டிருந்த மதுவின் அருகே வந்து நின்றான் ஆர்யா.
“எங்க போகப்போற? வண்டியில பெட்ரோல் கம்மியா இருக்குப்பா. ரொம்ப தூரம் போக முடியாது. சாயங்காலம் காலேஜ் முடியும்போது பெட்ரோல் போடலாம்னு நினைச்சேன்.”
“ஷிட்…”
“என்ன?”
“சரி உன்கிட்ட எவ்வளவு ரூபா இருக்கு?”
“500 இருக்கும்.”
“குடு மது. நாளைக்கு கொடுத்திடுறேன். என்னோட வாலட்டை வீட்டுல மறந்து வச்சிட்டு வந்திட்டேன். கார்ட்ஸ் எல்லாம் அதுலதான் இருக்கு. கையில 200 தான் இருக்கு. நீ 500குடு, திருப்பித் தந்திடுறேன்.”
“அஃப்கோர்ஸ் தர்றேன்.” என்றவள் தனது ஹேன்ட் பாக்கில் இருந்து 500 ரூபாய்த்தாளை எடுத்து அவன் முன்னே நீட்டினாள்.
“வண்டிச் சாவி?”
“வண்டி கண்டிப்பா வேணுமா?” என்று கேட்டுக்கொண்டே வண்டிச்சாவியை அவன் உள்ளங்கைகளில் அவள் வைக்க…
“ஆமா மது வண்டி கண்டிப்பா வேணும். ஒரு  எமர்ஜென்சி. என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் இன்டர்ஷிப்க்கு போறதால் வண்டி தரமாட்டிக்கிறாங்க. மணி பத்தாயிடுச்சு. பை கிளம்பறேன் மது.”
“கிளாஸ்?”
“என்ன கேள்வி இது? பங்க் பண்றேன் மது. பை…” என்றபடி மதுவின் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஆர்யா.
“என்ன எமர்ஜென்சி? எனக்கு சாயங்காலத்துக்குள்ள வண்டி வேணும்… அம்மா திட்டுவாங்க…” என்று கத்தியபடி மது கேட்க,
“வந்து சொல்றேன். நாலு மணிக்கு வண்டி வந்திடும் மது.” என்று பார்க்கிங்கில் நிற்கும் மதுவிற்குக் கேட்கும்படி சத்தமாகக் கூறியவன் சில கணங்களில் அந்தக் கல்லூரி வளாகத்தையே கடந்துவிட்டிருந்தான்.
சரியாக 4.10க்கு மது ஆர்யாவிடம் கோபமாக, “என்ன ஆர்யா, ஃபோன் பண்ணேன் ஃபோனை எடுக்கவே இல்ல? மணி நாலு ஆகி பத்து நிமிஷம் ஆச்சு. காலேஜ் முடிஞ்சி இரண்டு மணிநேரம் ஆச்சு… இனி நான் ஹரினியோட வீட்டுக்குப் போய் என்னோட அஸென்மென்ட் பண்ணிட்டு பேசிட்டுக் கிளம்ப மணி ஏழு ஆகிடும். ஆறு மணிக்கு வீட்டுக்குப் போனாகூட அம்மா கேள்வியே கேட்க மாட்டாங்க. ஏழு மணிக்கு மேல வீட்டுக்குப் போனா கால்லை உடைச்சி பார்சல் கட்டிக் கையிலக் கொடுத்திடுவாங்க என்னோட அம்மா. எவ்வளவு நேரம் இந்த பார்க்கிங் இடத்துல உனக்காக வெயிட் பண்ணேன் தெரியுமா? நான் E2 பேப்பருக்கு படிக்கணும், மேக்ஸ் பேப்பருக்கு படிக்கணும், காலையில பத்து மணிக்கு போன… 4 மணிக்கு வந்திருக்க ஆர்யா.” என்று சண்டையிட்டாள்.
“சாரி மது.”
அந்த ஒரு சாரியில் மதுவின் கோபம் போயே போயிந்தி.
“தலையில என்ன?”- மது.
“ப்ளாஸ்டிக் கவர்ப்பா. திடீர்ன்னு லேசா வானம் தூர ஆரம்பிச்சிடுச்சு. ஒரு டீக்கடையில் ப்ளாஸ்டிக் கவர் வாங்கி தலையில போட்டுக்கிட்டு வந்தேன். இந்தக் கவர் வேணுமா? கேட்டாக் கொடுத்துடப்போறேன், அதுக்குப்போய் கோபப்பட்டுக்கிட்டு… இந்தா கவரை வச்சிக்கோ.” என்று சிரித்துக்கொண்டே அவளின் கைகளில் கவரைத் திணித்தான் ஆர்யா. 
“எனக்கு எதுக்கு அந்தக் கவர்? நீயே வச்சிக்கோ… எதுக்கு வண்டிய வாங்கின? அந்த காரணத்தைச் சொல்லு முதல்ல. அப்படி என்ன எமர்ஜென்சி?” என்று தனது E2 பேப்பரை மறந்து நிறுத்தியிருந்த தனது வண்டியின் சீட்டில் நன்றாக உட்கார்ந்தபடியே கேட்டாள் மது.
“இன்னிக்கு என்னோட அப்பாவோட பர்த்டே மது. என்னோட அம்மாவை கோயிலுக்கு கூட்டிட்டுப் போறேன்னு நைட் ப்ராமிஸ் பண்ணேன். மறந்தே போச்சு. நைட் அப்பாவும் அம்மாவும் வெளியே எங்கயாவது ஷாப்பிங் போவாங்க… அதான் கோயில் நடை சாத்துறதுக்குள்ள பகல்லயே அம்மாவை அழைச்சிட்டுப் போணும்னு முடிவு பண்ணி கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்.”
“அட… கோயிலுக்கு எல்லாம் சார் போவீங்களா?”
“போவேன். ஆனா கடவுள் நம்பிக்கை கிடையாது மது.”
“இது ஒரு ஃபேஷன் ஆகிப்போச்சுல? கடவுள் இல்லைன்னு சொன்னாதான் எல்லோரும் நம்மைத் திரும்பிப் பார்ப்பாங்கல? கமல் கடவுள் இல்லைன்னு சொல்ல ஆரம்பிச்சப்பிறகுதான் அவரை சினிமா இன்டஸ்டிரியில எல்லோரும் திரும்பிப் பார்த்தாங்க. அவர் கடவுள் இல்லைன்னு சொன்னபிறகு தான் எதிர்த்த வீடு பக்கத்து வீடு ஆளுங்க எல்லாம் கடவுள் இல்லைன்னு சொல்ல ஆரம்பிச்சாங்களாம். என்னோட அம்மா சொல்லிருக்காங்க. பெரியார், அண்ணா கடவுள் இல்லைன்னு சொன்னப்ப அரசியல்வாதிகள் மேதைகள் மட்டும் தான் அந்தக் கருத்தோட ஒத்துப்போனாங்களாம். ஆனா கமல் சொல்ல ஆரம்பிச்சப் பிறகுதான் எதிர்த்தவீட்டு மாமாகூட There is no God you know… என்று தத்துவம் பேச ஆரம்பிச்சாராம் ஆர்யா.”
“மது, எனக்கு கமல் பற்றித் தெரியவே தெரியாது.”
“நிஜமா?”
“நிஜமாப்பா. நான் குணா படம்கூட இன்னும் பார்த்ததில்லை. நாயகன் படம்கூட பாதிதான் பார்த்தேன். மைக்கேல் மதன காம ராஜன்னு ஒரு படத்துல பின்னி பெடல் எடுத்திருப்பாருன்னு என்னோட பாட்டி சொல்லும்… ஆனா நான் பார்த்ததில்லை… அதனால எனக்கு…”
“ஹா… ஹா… உனக்கு கமல் பத்தி தெரியலைன்னு சொன்னதை ஒத்துக்குறேன். ஆனா உன்னோட பாட்டி வயசுக்கு கமல்ஜியைக் கம்பேர் பண்றது ரொம்ப ரொம்ப ஓவர். அதனால குணா படம் பார்க்காத உன்னை தமிழ்நாட்டுல இருந்து நாடுகடத்திடலாம்ப்பா…”
“ஹா… ஹா…”
“நாயகன் படம் பார்க்கலைன்னு சொன்னதால உன்னை இந்தியாவை விட்டுத் துரத்தலாம்ப்பா…”
“ஹா… ஹா…”
“மைக்கேல் மதன காம ராஜன் படம் பார்க்கலைன்னு சொன்னதால உன்னை உலகத்தைவிட்டே துரத்தலாம்ப்பா…”
“ஹா… ஹா…” என்று சிரித்த ஆர்யா அவளிடம் மீண்டும் தனது கையில் இருந்த ப்ளாஸ்டிக் கவரைக் கொடுத்து, “நான் இந்த உலகத்தைவிட்டுப் போறது இருக்கட்டும் இந்த கவரை உன்னோட பேக்ல வச்சிக்கோ. உன்னோட அம்மா உன் கால்லை உடைச்சி உன் கையில கொடுக்கிறப்போ இந்தக் கவர் உபயோகமா இருக்கும் மது.”
“அச்சோ மணி ஐஞ்சு இருபது.”
“யெப்.” என்று தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே சொன்னான் ஆர்யா.
“மேக்ஸ் படிக்கணும்…”
“யெப்.” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஆர்யா.
“அஸைன்மென்ட் பண்ணணும்…”
“யெப். அப்படித்தான் சொன்ன மது.”
“வீட்டுக்குப் போனதும் அம்மா கால்லை உடைச்சிடுவாங்க.”
“யெப். கரெக்ட். நீ எதையும் மறக்கல. சரியா ஞாபகம் வச்சிருக்க மது.”
“உன்கூட அரட்டையடிச்சதாலதான் இது எல்லாம் நடக்கப்போகுது. நேரம் போனதே தெரியல.”
“யெப்.” என்று சொன்ன ஆர்யா படபடவென சிரித்தான். மது அவனது சிரிப்பை அசட்டை செய்துவிட்டு “தள்ளு… தள்ளு.” என்றபடி தனது வண்டியை அவனைத்தாண்டி கிளப்பிக்கொண்டுச் சென்றாள்.
ஆனால் போகும் வழியாவும் அவளைக் கடந்து சென்ற பேருந்துகளின் ஹார்ன் ஒலியுடன் ஆர்யாவின் “யெப்” சத்தம் இதமாய் அவளது காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது.
 லவ் குரு மதுவின் தடுமாற்றத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவளது காதுகளில் கேட்ட யெப் சத்தம் அவருக்கும் கேட்டது. சதுரங்க ஆட்டதை முழுவீச்சில் தொடர ஆயத்தமானார்.
தான் தேர்ந்தெடுத்தக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து வலுவாக இழுத்து ஒரே பாய்ச்சலில் அதில் ஏறி அமர்ந்தார் மிஸ்டர் லவ் குரு.
பாய்ச்சலுக்கான நேரம் நெருங்கிவிட்டது…
            *   *   *

Advertisement