Advertisement

12
ஒரு ஞாயிறு அன்று ஆர்யா விவேக்கின் பான்ட் பாக்கெட்டில் இருந்து வாலட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “வா பார்பிக்குயூ போகலாம்.” என்றான்.
“அய்யா சாமி புகாரிக்கு பிரியாணி சாப்பிடப் போலாம் டா. பார்பிக்குயூ போற அளவுக்கு என் அப்பாகிட்ட வசதியெல்லாம் இல்ல மச்சி. நீயும் நானும் சம்பாதிச்சு பெத்தவங்களுக்கு சோறு போட்டப் பிறகு பார்பிக்குயூ பக்கம் எட்டிப்பார்க்கலாம் மச்சி.”
“சரி, சரி ஷேக்ஸ்பியரா மாறாத.”
“ஆமா… அதென்ன என்கிட்டக் கேட்காமலே, என்னோட பர்மிஷன் இல்லாமலே என் பர்ஸை எடுக்குற?”
“மறுக்கமாட்டன்னு உறுதியா தெரியும். அதான் எடுத்தேன். பெர்மிஷன்லாம் கேட்க முடியாது. உன் பைக்கா என் பைக்கா? எதுல போறோம் பிரியாணி சாப்பிட?”
“உன் பைக்லதான் டா. நம்ம பைக்குன்னு சொல்லு மச்சி. உன் பைக்குன்னு எதுக்குப் பிரிச்சிப் பேசணும்? அது உன்னோடது இல்ல மச்சி, ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணி மாலை போட்டு பூஜை போட்டப்பவே அது நம்ம பைக் ஆகிடுச்சு.”
“எரும… போதும் நிறுத்து. இந்தா என் பைக் சாவி. நீ எடுக்கிறியா? நான் எடுக்கவா?”
“நீயே வண்டி ஓட்டு மச்சி. அப்பதான் பெட்ரோல் போடும்போது பைசா கொடுக்க உனக்கு வசதியா இருக்கும். இந்தக் கையில பெட்ரோல் டாங்க் மூடி. அந்தக் கையில ரூபாய் நோட்டுன்னு இரண்டு கையையும் நீ நீட்டிட்டு பைக்ல உட்கார்ந்திருக்கிறதப் பார்க்கும்போது இரு கைகளையும் விரித்து வரங்களை அள்ளித் தரும் அந்தப் பரந்தாமனே நேர்ல வந்த மாதிரி இருக்கும் மச்சி.”
“ஷேக்ஸ்பியர் எப்படிச் செத்தார்ன்னு தெரியுமா மச்சி? ‘நான் ஷேக்ஸ்பியர் மாதிரி டிசைன்’ அப்படின்னு சொல்லிட்டுத் திரியும் ஒரு ஆளைப் போட்டுத் தள்ளணும்.”
“இனி நான் கடி ஜோக் பேசுனா அட மானங்கெட்டவனேன்னு திட்டு. சரியா?” என்ற விவேக் பூகாரி பிரியாணி கடைக்குள் நுழையும் வரை ஜோக்குகள் பேசவேயில்லை. 
அவர்களது டேபிளின் அருகே மதுவையும் ஜான்வியையும் பார்த்ததும் அந்தக் கடையின் அடுக்களையில் இருக்கும் அகலமான பிரியாணி டேக்சாவைப் போல ஆர்யாவைப் பார்த்து உதடுகளை அகலமாக்கிச் சிரித்தான் விவேக்.
“டேய் மச்சி அது மதுதான?”- விவேக்.
“ம்… கத்தாத மச்சி. ப்ளீஸ்.”
“ஒரு குஸ்காவே குஸ்கா பிரியாணிச் சாப்பிடுகிறதே… ஹா… ஹா… ஆச்சிரியக்குறி.” – விவேக்.
ஆர்யா விவேக்கைப் பார்த்து முறைத்தான்.
“அட மானங்கெட்டவனே.”- (யாருப்பா அது கடி ஜோக் சொன்ன எங்க விவேக்கைத் திட்டுனது? நீங்களா? இல்ல அந்த ஆர்யா பயலா? கவிதையே சொல்ல விடமாட்டீங்களே?)
              *   *   *
ஆர்யாவும் மதுவும் தங்களது இரு சக்கர வாகனங்களை பார்க் செய்திருந்த இடத்தில் இருந்து நகர்த்தியபடியே பேசிக்கொண்டு வந்தனர். சென்னை வெயிலை உச்சந்தலை உணர்ந்தபோதும் இருவருக்கும் வேகமாக வண்டிகளை நகர்த்தும் எண்ணமே இல்லை.
“வேளச்சேரியிலதான் உன் வீடா? இந்த புகாரி பிரியாணி கடைப் பக்கத்துல அடிக்கடி உன்னைப் பார்க்குறேனே? என்னோட வண்டியில வீட்டுக்குப் போகும்போதெல்லாம் உன்னை இங்க பார்த்திருக்கேன்…”- மது
“ஆமா மது. வாயேன் என் வீட்டுக்கு. அம்மா அப்பா வீட்டுலதான் இருக்காங்க. அக்காகூட இங்கதான் இருக்கா…”
“இருக்கட்டும். இன்னொரு நாள் வர்றேன்ப்பா. தங்கச்சிக்கூட வந்திருக்கேன்ல. என்னோட சிஸ்டர் தெரியும்ல?”
“ஓ… தெரியுமே. நல்லாவே ஞாபகம் இருக்கு மது.”
“எப்படிப்போகுது காலேஜ்? எலக்டிரானிக்ஸ் டிபார்ட்மென்ட் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்னு சொன்னாங்க.”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனா கொஞ்சம் படிக்கணும். அண்ணா யுனிவர்சிட்டி பற்றித்தான் தெரியும்ல? படிக்கலைன்னா மற்ற பசங்க ஆளையே காலி பண்ணிடுவாங்க. நம்மை தூக்கிச் சாப்பிட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. அப்புறம் அவுங்க பின்னாடி ஓடுறது ரொம்பக் கஷ்டமாயிடும்.”
“கரெக்ட். என் கிளாஸ்லகூட எல்லோருமே அவுங்க அவுங்க ஸ்கூல் டாப்பர்ஸ்தான். ஒவ்வொருத்தனும் அவென்ஜர்ஸ் ஹீரோஸ் ரேன்ஜுக்கு அவுங்க அவுங்க ஸ்கூல்ல பாப்புலரா இருக்காங்க… கண்ணக் கட்டுது. கொஞ்சம் நெர்வர்ஸா இருக்கு. அப்பாவும் என் மார்க்ஸை வாட்ச் பண்ணுவார். அதான் கொஞ்சம் டென்ஷன்.”
“உன்னோட அப்பா உன் மார்க்கை வாட்ச் பண்ணுவாங்களா?”
“ஆமா ஆர்யா.”
“ஏன்? என்னோட பேரன்ட்ஸ் அந்த ஏரியா பக்கமே வர மாட்டாங்க. அதெல்லாம் ஸ்கூல்லோட முடிந்தது.”
“ஏன்னா…” என்று மது ஆர்யாவிடம் காரணத்தைச் சொல்ல வந்த போது ஜான்வி, “மதூ… லேட்டாச்சு வா…” என்று அவள் நின்ற இடத்தில் இருந்துக் கத்தவும் தனது பதிலை சொல்லாமலேயே கிளம்பிச் சென்று விட்டாள்.
அதன்பின்னர் பேசுவதற்கு அவகாசம் இல்லாமல் இருவரும் கிளம்பினார்கள்.
“மது அப்பாவிடம் பயப்படுகிறாளா? இருக்காதே. இருவரும் ஃப்ரண்ட்ஸ் ஆச்சே, ஸ்கூல்ல படிக்கும்போது வாட்ஸ் ஆப் பண்ணப்ப அப்படித்தான சொல்வா மது?” என்று ஆர்யா தனக்குள் பேசி சந்தேகப்படும்போதே ஒரு பலத்த சிரிப்பு சப்தம் அந்த இடத்தை ஆக்கிரமித்தது.
ஹா… ஹா… என்று பேய் அலறலாய் சிரித்தார் மிஸ்டர் லவ் குரு.
“மதுவின் அப்பா கண்டிப்பாக மது வாங்கும் மதிப்பெண்கள் மீது குறியாக இருப்பார் ஆர்யா. ஏன்னா… அது ஏன்னா…” என்று கரகரக் குரலில் சிரித்தபடி லவ் குரு பேச ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.
அது ஏன் என்ற காரணத்தைச் சொல்ல ஆரம்பித்த லவ் குரு காரணத்தைச் சொல்லாமலே மாயமாய் காற்றில் மறைந்துவிட்டார். அவர் எவ்வளவு சத்தமாகப் பேசினாலும் அது மனிதர்களின் காதுகளுக்குக் கேட்கவே கேட்காது.
லவ் குரு அலறலாய் சிரித்ததையும் அவன் புலம்பலுக்கு பதில் பேசியதையும் உணராத ஆர்யா மனதில் தனது சந்தேத்தை யோசித்தபடியே தனது வண்டியில் விவேக்கை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டான்.
            *   *   *
“ஆர்யா இப்பயெல்லாம் ரொம்ப மெச்சூர்டாக நடந்துக்கிறான்ல ஜானு?”- மது.
“அப்படியா?”- ஜான்வி.
“ஆமாப்பா. நேத்து பேசினப்ப ரொம்ப ரொம்ப டீசென்டா பேசினான் தெரியுமா? முன்ன மாதிரி தேவையில்லாம எல்லாம் பேசவேயில்ல ஜானு.”
“அப்படியா?”
“நல்ல பையனாகத்தான் இருக்கான்.”
“அப்படியா?”
“ஆமா ஜானு. ரொம்ப ரொம்ப நல்ல பையனாகத் தான் இருக்கான்.”
“அப்படியா?”
“ஏய்ய்… என்னை டீஸ் பண்றியா ஜானு?”
“நான் பண்றதை விட்டுத் தள்ளு. நீ என்ன பண்றன்னு நான் சொல்லவா?”
“ஒண்ணும் வேணாம். போ போ. தள்ளிப்போ.” என்று ஜான்வியின் தோளைத்தட்டி நகர்த்திய மதுவிடம் ஜானு சொன்னாள்,
“ஐய்யய்யோ ரகசியங்களை மண்டைக்குள் வச்சிக்கக்கூடாதாம் மது. யாராவது ஒருத்தர் கிட்டயாவது சொல்லிடணுமாம். இல்லைன்னா தலை வெடிச்சிடுமாம். அப்படித்தான் அம்மா நெட்ஃப்ளிக்ஸ்ல போட்ட ஒரு பழைய படத்துல காட்டினான்ப்பா.” (அந்தோ பரிதாபம்… நெட்ஃப்ளிக்ஸ் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன மதுவின் வீட்டில்.)
“ரகசியத்தைச் சொன்னாதான் தலைவெடிக்கும் ஜானு. யார்கிட்ட பீலா விடுற? போடி அங்குட்டு.”
“நோ வே. நான் கண்டுபிடிச்ச ரகசியத்தை சொல்லியே ஆகணும். நீ ஆர்யாவை நல்லா ஜொல்லு விடுற மது. நல்லா ஸைட் அடிக்கிற.”
“ஓ மை காட். வெளியே அப்பட்டமா தெரிஞ்சிச்சா?”
“பொண்ணு எனக்கே தெரியும் போது, அதுவும் உன்னைவிட ஆர்யாவை விட சின்னப் பொண்ணு எனக்கே தெரியும் போது, புரியும்போது… பையன் அவனுக்குப் புரியாதா?”
“ஓ… மை காட்… ஹரினியும் இதையே தான் சொன்னா, அவ கண்டுபிடிச்சது பெரிய விஷயம் இல்ல. ஆனா நீகூட கண்டுபிடிச்சிட்ட பார்த்தியா… அது தான் பெரிய விஷயம். I Should control myself…”
“ஓ மை காட் சொல்லாத. ஓ மை குட்நெஸ்ன்னு சொல்லு.”
“ஓ மை குட்நெஸ்ஸா? எதுக்கு?”
“நீயும் ஆர்யாவும் வேற வேற கிளாஸ்ல இருக்கிறதால ஓ மை குட்நெஸ்ன்னு சொல்லு. ஒரே கிளாஸ்ல இருந்திருந்தா உன்னோட ப்ரொபர்சர்ஸ் எல்லோருக்கும் தெரிஞ்சிடும்… அவுங்களுக்கு தெரிஞ்சா…”
“மேல சொல்லாத ஜானு. மயக்கமே வருது…”
மயக்கமா? ஏன்? எதற்கு? எப்படி? லவ்குரு சார் தான் திட்டம் போட்டு வச்சிருக்காரே, அவர் திட்டப்படி எல்லாம் நன்றாகவே நடந்திருக்கிறது, நடக்கிறது, நடக்கும்.
                    *  *  *
ஆர்யாவின் அரட்டைகள் மூச்சு முட்டினாலும் அவை இம்சிக்கும் சுகமாகத்தான் இருந்தன. ஆனால் இந்தச் சுகமான இம்சையை முதல் செமஸ்டர் மற்றும் இரண்டாம் செமஸ்டர் பரீட்சைகளும் ரசிக்கவே விடவில்லை. ஆர்யாவிடம் அரட்டையடிக்கச் சொல்லி நச்சரிக்கும் மனது செமஸ்டர் பரீட்சைகளை எதிர்கொள்ளும் நாட்களில் அரட்டையடித்து வீணாகிப்போன நிமிடங்களுக்காக வருந்திடத்தான் செய்தது.
அந்நியனாய் மாறி மாறி யோசிக்கும் டீன் ஏஜ் மனதிடம் மதுவின் புத்தியின் வாதங்கள் எடுபடவேயில்லை. சரியான ஆர்யாவின் ஜொல்லு தாசனாக மாறிப்போன மனதிடம் “ஸ்டாப் இட்.” என்று சொல்லும் துணிவு மதுவின் புத்திக்கு இல்லை.
பள்ளிக்காலத்தில் கட்டுப்பாடுகள் இருந்தன, இத்தனை சுதந்திரம் அவளுக்கு இல்லை. இப்போது அவள் வீட்டிற்கு வருவதும் வீட்டிலிருந்து கிளம்புவதற்கும் நேரம் காலம் வரையறைக்கப் படவில்லை. கேட்பார் அற்ற சுதந்திர வாழ்க்கையாக கல்லூரி வாழ்க்கை மாறிப் போனது. அளவுக்கு அதிகமான சுதந்திரம் திடீரெனக் கிடைக்கவும் மது என்னும் மான் துள்ளித் திரிய ஆரம்பித்தது.
தன்னை மீறி நடக்கும் பதின்பருவ உணர்வுகளை வெல்லவே முடியாமல் போக, பாடத்தில் கவனமே வைக்க முடியவில்லை அவளால். ஒரு கட்டத்தில் மதிப்பெண்கள் குறையக் குறைய தனது கைபேசியை உடைத்துவிடும் வேகம் வந்தது மதுவிற்கு.
ஆர்யாவின் உதடுகள் சிரித்தபோது அந்த இதழ்களைத் தொட்டுப்பார்க்கச் சொல்லும் மனதிடம் விவாதித்து விவாதித்து சோர்ந்தாள் மது. அன்னையின் போதனைகள் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் ஆர்யாவின் இதழ்களிடம் உறவாடிருப்பாள்.
“ஆர்யாவின் மார்பில் படுத்துக்கொள்ளவா?” என்று ஒரு முறை தனது கன்னங்கள் அவளிடம் கேட்டபோது அரண்டே போனாள் மது. அக்கணம் உடனே ஆர்யாவினிடமிருந்து தனது பார்வையைத் திருப்பி, காக்க காக்க கனவேல் காக்க என்று மனதை அடக்கிட ஸ்லோகம் சொல்லவும் ஆர்யாவே, “என்ன மது திடீர்ன்னு ஸ்லோகம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட?” என்று நகைத்தபடி விசாரித்தான்.
“ஆம்புலன்ஸ்…” என்று வாய்க்கு வந்ததை உளறினாள் மது அக்கணம்.
“என்ன ஆம்புலன்ஸ்?”
“அம்புலன்ஸ் போகுதுல… ஆம்புலன்ஸ் போனா நான் கந்த ஷஷ்டி ஸ்லோகம் சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.”- மது.
தனது உடலின் ஹார்மோன்கள் அனைத்தும் தாருமாறாக வேலை செய்ய மது விழிப்பிதுங்கி நின்றாள்.
பள்ளிக்காலத்தில் அரும்பு மீசையுடன் தன்னிடம் வம்பு பேசிய ஆர்யாவை அவளால் எளிதில் கடந்து சென்றிட முடிந்தது. நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கடவுளும் கொடுக்காத காரணத்தால் அவளால் எளிதில் கடந்துவிட முடிந்தது. மனதை சிறைப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது?
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற ரீதியில் ஆய்வுக்கூடத்தில், வகுப்பறையின் முன்னே நீண்டுகொண்டே போகும் வராந்தாவில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் என எங்கும் எதிலும் ஆர்யாவைப் பார்த்தபோது அவளால்…
இளமையின் புதையலாக, ஆண்மையின் செழித்த உருவமாக இருந்த கல்லூரி ஆர்யாவை அவளால் எளிதில் கடந்திட முடியவில்லை. அவனது சிரிப்பை மனம் ரசித்தது. குரலை உடல் முழுதும் ரசித்தது.
கைபேசியின் அடிமையாகிப் போவதை அவளது அறிவுக்கண்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தன.
“யாராவது ஒரு டஜன் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அந்தக் போனை தூங்க வச்சிடுங்கப்பா.. உங்களுக்கு கோடி புண்ணியம்.” என்று மதுவின் புத்தி, அறிவு, மூளை அலறின.
மதுவின் மனதின் தடுமாற்றத்தை உன்னிப்பாக கவனித்தார் லவ் குரு.
தான் விளையாட ஆரம்பித்த சதுரங்க ஆட்டத்தில் முதல் காய்யை மெல்ல நகர்த்தினார் மிஸ்டர் லவ் குரு.
முன்னால் நின்ற சிப்பாய்களைத் தாண்டி நாலு கால் பாய்ச்சலில் குதிரைப்படையை நகர்த்தியிருந்தார் லவ் குரு.
அவரின் முதல் காய் நகர்த்தல் இனி மது- ஆர்யாவின் உறவில் என்ன மாற்றம் செய்யும்?
            *   *   *

Advertisement