Advertisement

பீச்சில் மிளகாய்ப் பொடி பவுடர் பூசிக்கொண்ட பிறகு விவேக் மதுவைப் பற்றி அதிகம் வாய் திறப்பதே இல்லை.
ஆர்யாவின் கைபேசியில் ஒரு வீடியோ கேம்மை தரவிறக்கம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான் விவேக்.
ஆனால், “மதுவுக்கு கால் பண்ணணும். கொடு என்னோட ஃபோனை.” என்று ஆர்யா மறுநாளே அவனிடம் கேட்ட போது அவனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த காதல் ப்ரொபர்சர் விழித்துக் கொண்டார்.
“நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? நீயா வழியப் போய் பேசாதன்னு சொன்னேனா இல்லையா?”- கோபமாக விவேக்.
“இல்ல விவேக். அவளோட லாப்டாப்ல சின்ன பிரச்சனையாம், என்னோட லாப்டாப்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு ஒரு மணி நேரத்துல தந்திடுறேன்னு கேட்டா. என்னோட லாப்டாப் கொடுத்தேன். அவ வேலை முடிந்ததும் கொடுத்துட்டா. பைக்ல வந்தப்ப கால் பண்ணாடா. டிராஃபிக்ல எடுக்க முடியல. மிஸ்ட் கால் ஆயிடுச்சு. அதான், இப்ப பேசப்போறேன். போனைக் கொடு மச்சி.”
ஆர்யாவின் விளக்கத்திற்குப் பிறகு ஓரளவு சமாதானம் அடைந்த விவேக் தனது கையில் வைத்திருந்த ஆர்யாவின் கைபேசியைப் பார்த்தபடியே,
“இரு மச்சி… மிஸ்ட் கால் டியுரேஷன் பார்த்திட்டு தர்றேன்.” என்றான்.
“என்னது??”
ஆர்யாவின் கைபேசியில் மதுவின் தவறவிட்ட அழைப்பின் காலநேரம் இரண்டு நொடிகள் (Ringed two seconds) எனக் காட்டவும்,
“லூசாடா நீ? இரண்டே செகன்ட் தான் டிரை பண்ணிருக்கா… இதுக்கு பெயர் மிஸ்ட் கால்லாடா? இதெல்லாம் கால் லிஸ்ட்ல சேரவே சேராது தெரியுமா?” என்று பொங்கிவிட்டான் விவேக்.
“அப்படின்னு சொல்ற?”
“ஆமா ஆர்யா. தயவு செய்து கூப்பிட்டுத் தொலைச்சிடாத. கெத்தை மெயின்டேன் பண்ணு மச்சி. நீ பத்தடி தள்ளி நிள்ளு மச்சி, மேங்நெட் மாதிரி இழுக்கப்பட்டு பொண்ணுங்க பத்தடி முன்னே வந்து நிற்பாங்க.”
“என்னமோ சொல்லிட்டுப்போ. எனக்கு நீயும் வேணாம் மதுவும் வேணாம். நான் என்னோட ப்ராஜெக்ட்க்கு ரிசர்ச் பண்ணப்போறேன். கொடு ஃபோனை.” என்று தனது கைபேசியை விவேக்கிடம் இருந்து வாங்கிய ஆர்யா தனது பாடவேலையை மட்டுமே செய்தான். ஆனால் மது விஷயத்தில் அவனது புத்தி புத்திசாலியாய் விவேக் கூறியதை ஆமோதித்து அமைதி காத்தது.
பொண்ணுங்க வேணாம்ன்னு சொன்னா வேணும்னு அர்த்தமாம், இதைத்தானே காலம் காலமாய் பழமொழியாய் தலைமுறை தலைமுறையாய் சொல்லிவருகின்றனர்? அதே தானுங்க பசங்களுக்கும். பசங்க வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம். ஆர்யா தான் அதற்குத் தகுந்த உதாரணம். விவேக்கிடம் மது வேண்டாம் என்று கூறினான். ஆனால் உண்மை அதுவல்ல.
அவனுக்கு மதுவின் நட்பு வேண்டாம் என்ற எண்ணம் துளியும் இல்லை. மதுவின் நட்பு வேண்டும். அவளுடன் அரட்டையடிப்பது வேண்டும். பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட அந்த கிரஷ் மீண்டும் அவள் மீது ஏற்பட்டாலும் ஆர்யாவிற்கு நோ அப்ஜெக்ஷன், ஆட்சேபனையே இல்லை.
பள்ளிப் பருவத்தில் ஆர்வக்கோளாறில் தனது முதல் கிரஷ்ஷை அவனது முந்திரிக்கொட்டைத் தனத்தால் நசுக்கிவிட்டதுபோல (கிரஷ் செய்துவிட்டதுபோல) இப்போது செய்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தான்.
வெட்டி அரட்டையடிக்கும் ஆண்களை புத்திசாலிப்பெண்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்பதை அனுபவம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்திருந்ததும் ஒரு காரணம்.
மறுநாள் மதுவை அவன் நேரில் காணும் வரை அவன் அவளிடம் பேச முயற்சிக்கவே இல்லை. அதனால் தானோ என்னவோ ஆர்யாவின் மீது ஒரு நல்லெண்ணம் வந்தது மதுவிற்கு. தனது ஸ்கூட்டியை ஸைட் ஸ்டான்ட் போட்டு பார்க்கிங்கில் நிறுத்தியபோது ஆர்யாவை தற்செயலாகப் பார்த்தாள் மது. ஆர்யா இன்ப அதிர்ச்சியாய் அவளைப் பார்க்க அவனைப் பார்த்து முதலில் புன்னகைத்தது மது தான்.
அந்தப் புன்னகையில் அவள் சிக்கனமாய் இருக்கவில்லை. ஆயிரம் சூரியனின் வெளிச்சத்தை நிரைத்திருந்தாள் தனது புன்னகையில். தன்னை நோக்கி நடந்து வரும் தனது முதல் கிரஷ்ஷை பேராவலுடன் பார்த்தான் ஆர்யா.
பத்தடி தள்ளி நின்றால் காந்தமாய் பெண்கள் இழுக்கப்படுவார்கள் என்ற விவேக்கின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதை நினைத்து ஆர்யாவும் தனது முன்னே வந்துவிட்ட மதுவைப் பார்த்து சிரித்தான்.
“விவேக் வாழ்க…” – (இதைச் சொன்னது நானில்லைங்க… யாரப்பா அது?? நான் அசந்த நேரம் பார்த்து எனக்குப் பதிலாக டயலாக் எழுதுறது???)
                   *   *   *
“ஹாய்… ஆர்யா. நேத்து கால் பண்ணேன். நீ எடுக்கல.”- மது.
“ஓ… அப்படியா? கவனிக்கல மது. கொஞ்சம் ப்ராஜெக்ட் வேலையா இருந்தேன். எதுக்கு கால் பண்ண?” (அடப்பாவி… பயபுள்ள என்னமா கப்சா விடுது??)
“தாங்க்ஸ் சொல்லத்தான் கால் பண்னேன். இரண்டு ரிங் மட்டும் கொடுத்துட்டு வச்சிட்டேன். நீ கூப்பிடுவேன்னு நினைச்சேன். நீ உன்னோட ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருந்திருக்க… நல்லவேளை உன்னை டிஸ்டர்ப் பண்ணலை.”
“கெத்தை மெயின்டேன் பண்ணு டா. உடனே வழிஞ்சிடாத…” என்று அந்த இடத்தில் விவேக் இல்லையென்றாலும் விவேக்கின் ஆவி ஆர்யாவைச் சுற்றிச் சுற்றி காற்றில் வந்து பேசுவதுபோல ஆர்யா உணர்ந்தான்.
“ஆமா… கொஞ்சம் ரொம்ப பிஸியா இருந்தேன்.”- ஆர்யா.
“என்ன டா சொல்ற? கொஞ்சம் பிஸியா இருந்தேன்னு சொல்லு, இல்ல… ரொம்ப பிஸியா இருந்தேன்னு சொல்லு ஏன்டா ரெண்டையும் சொல்லி சொதப்புற?” என்று விவேக்கின் ஆவி மீண்டும் ஆர்யாவின் காதில் கத்திவிட்டுப்போனது.
உடனே தான் சொதப்புவது புரிந்து, விவேக் இந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வான் என்று யோசித்தவன், “சரி… அப்புறம் பார்க்கலாமா?” என்று பேசியபடியே தனது கைக்கடிகாரத்தை பார்த்தபடி நின்றான்.
உடனே அவனிடம் “ஓ.. கிளாஸுக்கு டைம் ஆச்சுல? பை. சீ யூ சூன்.” என்றாள் மது.
“பை…” என்றான் ஆர்யா மேற்கொண்டு பேச்சை இழுக்காமல்.
இரண்டு எட்டுகள் நகர்ந்தபிறகு “ஆர்யா.” என்று அவனது பெயரைச் சொல்லி அழைத்தாள் மது.
“என்ன மது?”
“நீ ஃப்ரீயா இருந்தா எனக்கு கால் பண்ணு.  வீட்டுக்குப் போனதும் ஸ்கூல்ல அந்த பேச்சுப்போட்டியில நீயும் நானும் ஜெயிச்சப்ப போடியம்ல எடுத்தப் ஃபோட்டோ வச்சிருக்கேன். அதை ஷேர் செய்யறேன்.”
“ஷுயர்.”
ஆண்மகனாய் தனது தன்மானத்தைக் காத்து கெத்து குறையாமல் மதுவிடம் பேசிய விதத்தை நினைத்து மனதில் மெச்சிக்கொண்டான் ஆர்யா.
              *   *   *

Advertisement