Advertisement

“ஹரினி, எவ்வளவு நேரமா கால் பண்றேன். செகன்ட் கால் பார்த்துட்டு எடுக்க மாட்டியா?”- கைபேசியில் படபடப்பாய் மது ஹரினியிடம்.
“சாரி சாரி மது. நான் ராம்சரண்கூட பேசிட்டு இருந்தேன்ப்பா.”- ஹரினி.
“உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான் டிரை பண்ணிட்டே இருந்தேன். நீ எடுக்கவே இல்ல. என்னத்த தான் மணிக்கணக்கா பேசுவியோ தெரியல. எனக்கு சுத்தமா இந்த ராம்சரண் விஷயம் புரியவே இல்லப்பா.”
“ராம்சரண் புரியணும்னா நீ ஹரினியா இருக்கணும். அவன் என்னோட குட் ஃப்ரண்ட். சரி, அதை விடு. நீ சொல்ல வந்த மேட்டரைச் சொல்லு.”
“நான் ஆர்யாவை இன்னிக்கு காலேஜ்ல பார்த்தேன் ஹரினி.”
“ஆர்யாவா? யாரு அது?”
“Y.M.J ஆர்யா.”
“சரி, Y.M.J ஆர்யாவைப் பார்த்த அப்புறம்??”
“காலேஜ்விட்டு நான் வீட்டுக்கு வந்த பிறகு பத்து மெசேஜ் அனுப்பிட்டான். அதுக்கு ரிப்ளை பண்ணவே பயமா இருக்குப்பா. காலேஜ்லகூட பேசிட்டே இருந்தான்ப்பா.”
“அவனை நீ ப்ளாக் பண்ணிட்டேன்னு சொன்னியே?”
“ஆமாம்ப்பா… புது நம்பர் மாத்திட்டான் போல. ரெண்டு வருஷம் கழிச்சி திரும்ப என்னை கான்டாக்ட் பண்ணுவான்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? வீட்டுக்கு வந்து வாட்ஸ் ஆப் பார்த்தா… பத்து மெசேஜ் அனுப்பிருக்கான். இப்ப நான் என்ன பண்ண?”
“பத்து அனுப்பினா இரண்டுக்கு பதில் அனுப்பு. அப்புறம் ஆஃப்லைன் போயிடு. சிம்பிள்.”
“ஓகே… ஓகே. வேற அட்வைஸ்?”
“மற்றபடி நீ ஃபாலோ பண்ணும் வழிதான்.”
“நான் ஃபாலோ பண்ற வழியா? எதுப்பா?”
“நீ தான் பசங்ககூட தமிழ்லயே சாட் பண்ண மாட்டியே? இங்கிலிஷ்ல மட்டும் தான சாட் பண்ணுவ? தமிழ்ல சாட் பண்ணா இட் சவுன்ட்ஸ் வெரி பெர்சனல்னு சொல்லுவியே??”
“அது ஸ்கூல் டேஸ்ல ஹரினி, ரொம்ப பழக்கம் இல்லாத பாய்ஸ்கூட இங்கிலிஷ்ல மட்டும் தான் சாட் பண்ணுவேன். என்னோட ஃப்ரண்ட் லிஸ்ட்ல நம்ம கிளாஸ்  பசங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? அவுங்ககூட எல்லாம் தமிழ்ல சாட் பண்ணுவேனே. எத்தனை தடவை செல்வாகிட்ட தமிழ்ல மேக்ஸ் டவுட்ஸ் கேட்டுருக்கேன்.”
“எனக்கும் அதைப் பற்றியெல்லாம் தெரியும்பா, உன்னோட சாட் மெசேஜ் எல்லாம் நானும் பார்த்திருக்கேனே? தமிழ்ல தான் மேக்ஸ்ல டவுட்ஸ் கேட்ப… ஆனா அந்தத் தமிழ், தமிழ் மாதிரி இருக்காது மேக்ஸ் மாதிரி இருக்கும். நீ பசங்ககூட ஃபிசிக்ஸ்ல கூட பேசுவ இல்ல…”
“வாட்?”
“ஆமாப்பா… ஃபிசிக்ஸ்ல டவுட் கேட்கும்போது ஃபிசிக்ஸ்ல பேசுவ. அப்புறம் கெமிஸ்டிரி பற்றி ஏதாவது சந்தேகம் வந்தா கெமிஸ்டிரில பேசுவ, எனக்குத் தெரியாதா நீ எப்படிப் பேசுவன்னு? நான் உன்கூட ப்ளஸ் டூ வரை ஒண்ணா படிச்சிருக்கேன் மது. உன்னைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னா என்கிட்டக் கேளு. நான்தான் உன்னோட கூகுள், பிங், விக்கிபீடியாப்பா. நான் உன்னோட பெஸ்டின்னு நானே உனக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு. ஆமா, நீ ஏன் அந்த ஆர்யாவைப் பார்த்து பயந்து நடுங்குற?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. திடீர்னு தெரியாத பையன் வாட்ஸ் அப் பண்ணதும் டென்ஷனாகிடுச்சு. உன்கிட்டப்போய் அட்வைஸ் கேட்டேன் பாரு. என்னை நீ ரொம்ப டேமேஜ் பண்ற. நான் ஃபோனை வச்சிடுறேன்.”
“மது… ஐ ஆம் சீரியஸ். ஆர்யாகூட பேசுறதை குறைச்சிக்கோ.”
“ஏன்?”
“ஏன்னா ஆர்யா ராம்சரண் மாதிரி தமிழ்ல பேச ஆசைப்படுற தமிழ்ப்பையன்னு நினைக்கிறேன்.”
“ஏய்ய்… நாளைக்கு காலேஜ் வருவீல? அப்ப வச்சிக்கிறேன் உன்னை. எனக்கு நீ அட்வைஸ் பண்ண மாதிரி நானும் உனக்கு ஒரு அட்வைஸ் பண்றேன். அந்த ராம்கூட நீயும் பேச்சைக் குறைச்சுக்கோ. எப்பப் பாரு அவன்கூட அரட்டையடிச்சிக்கிட்டு.”
“ராம் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். நான் அவனோட பெஸ்ட்டிப்பா.”
“ரக்ஷக் தருண்? அவனோட ஸ்டேடஸ் என்னங்க மேடம்.”
“ஹி இஸ் மை பப்பி கிரஷ் மது. உனக்கு அது நல்லாவே தெரியும். ஸ்கூல் டைம்ல சும்மா ஸைட் அடிச்சேன். அது தப்பா? ஆமா… இப்ப எதுக்கு நீ ரக்ஷக் தருணை இழுத்த?”
“சரி… நமக்குள்ள சண்டை வேணாம். இப்ப ஆர்யா மெசேஜ்க்கு ரிப்ளை பண்ண வேணாம்னு சொல்ற அவ்வளவுதான?”
“ம்… அவ்வளவுதான். ஆர்யாகூட ரொம்பப் பேசாதப்பா. தெரியாத பசங்ககூட எதுக்கு பேசணும்? நம்ம குட்ஷெப்பர்ட் ஸ்கூல் பாய்ஸ் பற்றியே “ராம்” நிறைய சொல்றான். அவன் சொல்றதைப் பார்த்தா ஒரு பையன் பத்து பொண்ணுங்களை ஸைட் அடிப்பான் போல. அவன் லூஸ் டாக் விட்டதையெல்லாம் உன்கிட்ட சொன்னால் உன்னோட லிட்டில் ஹார்ட் தாங்காது மச்சி. தெரிஞ்ச பிசாசுகளே ஆயிரம் தப்பு பண்ணும் போது தெரியாத பேய்யிடம் எதுக்குப்பா பேசணும்? எட்டி நிற்குறதுதான் பெட்டர் மச்சி.”
“நீ இமோஷனல் ஆனா மச்சின்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவியே… மச்சின்னு கூப்பிடாதப்பா… என் தங்கச்சி ரொம்ப கேலி பண்றா… நீ சொல்ற மாதிரி பண்றேன். அப்புறம் ஹரினி…”
“மது ராம் செகன்ட் லைன்ல வர்றான்ப்பா.”
“வச்சிடுறேன் தாயே. என்ன விஷயம்? பையன் கால் பண்ணிட்டே இருக்கான்?”
“அவன் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா ஜெர்மன் போறானாம். என்னோட மாமா ஜெர்மன்ல இருக்காருன்னு தெரியும்ல? அவர் வேலை பார்க்கிற கம்பனி டீடெய்ல்ஸ் எல்லாம் கேட்டுட்டு இருந்தான். அப்பதான் நீ கால் பண்ண… அவன் மூனு வருஷம் கழிச்சிதான் வருவான்ப்பா…”
“சரி ஹரினி. அவன்கூட ஜெர்மனி பற்றி மட்டும் பேசு.”
“மது… ராம் இஸ் மை ஃப்ரண்ட் மச்சி…”
“கசம் சே?” (ஹிந்தியில் உண்மையாக என்று அர்த்தம்)
“கசம் சே…”
“ஓகே பை தென். நாளைக்கு காலேஜ்ல பார்ப்போம்.”
“சரிப்பா. பை மது. ஞாபகம் வச்சிக்கோ, இரண்டே இரண்டு மெசேஜ்க்கு மட்டும் பதில் போடு. அப்புறம்…”
“ஆஃப்லைன்… போயிடுறேன்.”
“யெஸ். என்னை மாதிரி இன்டலிஜென்ட்டா பசங்களை ஹான்டில் பண்ண உனக்குத் தெரியாது. அதனால பாய்ஸ்கிட்ட நீ எப்போதும் எட்டி நில்லு. ஸ்வீட் டிரீம்ஸ்.”
“ஏய்ய் போடி… ஸ்வீட் டிரீம்ஸ் பேப்.”- மது.
ஹரினி சொல்லியாச்சுல… தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம். இங்கு ஹரினி எட்டடியில் எட்டி நிற்கச் சொன்னதால் மது பதினாறு அடிகள் எட்டியே நின்றாள் ஆர்யா விஷயத்தில். ஹரினி சொல்லியது போல தெரிஞ்ச பிசாசுகளே ஆயிரம் தப்பு பண்ணும் போது தெரியாத பேயிடம் எதுக்குப் பேசணும் என்ற கருத்தை மதுவும் ஆமோதித்தாள்.
ஆனால் மது பதினாறு அடி தாவிய விஷயம் புரியாமல் ஆர்யா மதுவை தனது அருகில் வைத்து, இல்லை இல்லை அருகில் வைத்து இல்லை… தனது மடியில் வைத்து அழகு பார்க்க ஆசைபட்டான். சத்தியமாக நிச்சயமாக இது காதல் இல்லை. காதலுக்கு பத்து படிக்கட்டுகள் கீழே ஒரு நிலை. இது காமமும் இல்லை, காமத்திற்கும் பத்து படிக்கட்டுகள் கீழே ஒரு நிலை. இது விடலைத்தனம். பக்கா விடலைத்தனம்.
                  *   *   *
விவேக்கும் ஆர்யாவும் மெரினா கடற்கரையின் மணலில் அமர்ந்தபடியே கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு சிறிய பீச் கடையில் வாங்கிய ஸ்வீட் கார்னுடன் அந்தக் கடையின் அருகேயே மணலில் அமர்ந்துவிட்டனர்.
“டேய் தாகமா இருக்கு. ஒரு தண்ணி பாட்டில் வாங்கு டா.” என்று ஆர்யா விவேக்கிடம் சொல்லவும் அவன் ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்தான்.
தண்ணீர் பாட்டிலுடன் விவேக் பீச் மணலில் அமர்ந்த சில நிமிடங்களில் இருவருக்குள்ளும் மதுவின் பேச்சு வந்தது. எப்போதும் போல விவேக் தனது ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்துவிட்டான்.
“மது உன்னை அண்ணான்னு கூப்பிடக் கூடாதுன்னா நீ என்ன பண்ணணும்னு சொல்றேன் கேளு, ரூல் நம்பர் ஒன் 1) மதுவை எப்ப, எங்க பார்த்தாலும் ஒரு சின்ன ஸ்மைல், சிரிக்கிறியா இல்லையான்னு தெரியாம சிரிக்கணும். வாட்டர் ஃபாள்ஸ் திறந்துவிட்ட மாதிரி சிரிச்சி வச்சிடுடாத. முதல் நாள் அப்படித்தான் சிரிச்சிருப்ப. இனி அப்படிச் செய்யாத.”- ஆர்யாவிற்கு டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தான் விவேக்.
“போடா லூசு…” – கடுப்பாக ஆர்யா.
“எனக்குப் புரியிது மச்சி, மது உன்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ் அதனால உன்னோட மனசுல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு. அது புரியிது… ஆனா பதட்டத்துல தப்பு பண்ணிடாத மச்சி. அதான் திரும்பத்திரும்ப சொல்றேன்.”
“நீ ஏதாவது உளறு. நான் நீ பேசுறதை கவனிக்கவேயில்ல. மது இப்பவும் என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ். அவ்வளவு தான். அதுக்கு மேல ஒண்ணும்மில்ல விவேக். அண்ணா யுனிவெர்சிட்டிக்கு நான் படிக்க மட்டும்தான் வந்திருக்கேன். பொண்ணுங்க பின்னாடி அலையிறதுக்கு எல்லாம் எனக்கும் என்னோட B.E எலக்ட்ரானிக்ஸுக்கும் டைமே இல்ல.”
“ரூல் நம்பர் டூ அன்ட் திரி. ரெண்டு விதிமுறைகளும் ஒண்ணுதான்.” என்று விவேக் அசால்ட்டாகச் சொன்னபோது ஆர்யா குபீரென சிரித்துவிட்டான். 
“ஹா… ஹா… ரூல் 2ம்,3ம் ஒரே விஷயமா? அப்புறம் அதுக்கு ஏன் டா மூனுன்னு பெயர் வச்சிருக்க?” என்று சிரித்தபடியே கேள்வி கேட்டான் விவேக்கிடம்.
“ஆமா மச்சி… ரூல் 2ம், 3ம் ஒரே விஷயம் தான். அப்பதான் மச்சி அதோட முக்கியத்துவம் உனக்குத் தெரியும். அதான் 2ம் 3ம் ஒண்ணுன்னு சொன்னேன். இப்ப அது என்னன்னு சொல்றேன். நல்லா கவனிச்சுக்கோ. ரூல் நம்பர் 2) & 3 ) நீயாக முதல்ல கால் பண்ணவே பண்ணாத. அவளுக்கு உன்கூடப்பேசப் பிடிச்சா அவளே உன்னைக் கால் பண்ணுவா.”
“இப்பவும் சொல்றேன். நீ சொல்றது எதுவுமே என் புத்திக்குள்ள ஏறலை. மது என்னோட ஃபர்ஸ்ட் கிரஷ். அவளை திரும்பவும் இரண்டு வருஷம் கழிச்சிப் பார்த்ததும் ஒரு ஹாய் சொல்லிக்கிட்டேன். அவ்வளவு தான். அவ்வளவே தான். அதுக்கு மேல ஒண்ணுமே இல்ல. நீ சொன்ன ரூல்ஸை என் காது கேட்கவே இல்ல. தள்ளு கையெல்லாம் மிளாகாப் பொடியாக இருக்கு. இவ்வளவு காரமாகவா ஸ்வீட் கார்ன் வாங்குவ?” என்று கேட்டபடி ஆர்யா மணலில் இருந்த தண்ணீர் பானையின் அருகே சென்றான்.
“நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் மது என்கூட பேச மாட்டிக்கிறான்னு என்கிட்ட அழுதுட்டு வந்து நிற்கக்கூடாது. திரும்பவும் உன்னை அட்டக்கத்தி படத்துக்கு என்னால கூட்டிட்டுப் போக முடியாது ஆர்யா. அந்தப் படத்தை நீ பத்து தடவை பார்க்க ரெடியாக இருக்கலாம். ஆனா என்னால அது முடியாது. அதனால நான் சொன்னதை மனசுக்குள்ள பத்து தடவை யோசிச்சிப் பாரு.” – ஆர்யாவிடம் விவேக்.
“ஸ்கூல் லைஃப்ல மதுகிட்ட விழுந்த மாதிரி நான் இன்னும் பத்து பேர்கிட்ட தடுக்கி விழுந்து அட்டக்கத்தி படத்தை பத்து தடவை பார்க்கணும்… அப்படித்தான சொல்ல வர்ற…”- விவேக்கிடம் ஆர்யா.
“ச்ச… ச்ச அப்படி நான் சொல்வேனா டா?” என்று கண்ணீர் வடிய சிரிக்க முடியாமல் சிரித்துக்கொண்டே விவேக் சொன்னதும், ஆர்யா மிளகாய்ப் பொடியின் சாரில் நனைந்திருந்த தனது உள்ளங்கையைப் பார்த்தான். சற்றுமுன் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ நினைத்தவன் அந்த எண்ணத்தை நொடிப்பொழுதில் மாற்றிக்கொண்டு விவேக்கின் முகத்தில் பரபரவென கைகளைத் தேய்க்க ஆரம்பித்தான்.

Advertisement