Advertisement

இப்படியே மேலும் ஒரு மாதம் ஆர்யாவும் மதுமிதாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக இருந்தனர். ஆர்யா அந்த குட் மார்னிங் எல்லை தாண்டி ஹாப்பி நியு இயர், ஹாப்பி சன்டே தகுதி நிலைக்கு வந்திருந்தான். மது ஆர்யாவை கைபேசியில் அழைத்துப் பேசுவதில்லை, ஆர்யாவையும் பேச அனுமதித்ததில்லை.
ஆர்யாவும் மதுவின் எல்லைக் கோட்டை மீறவில்லை. அதனால் மதுவும் ஆர்யாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக நீடித்தார்கள்.
விவேக் தீர்க்கதரிசி தானே?
             *   *   *
விவேக்கின் எச்சரிக்கைக்குப் பிறகு ஆர்யா தனது வாட்ஸ் ஆப் பேச்சுவார்த்தைகளை அளவாகவே வைத்துக்கொண்டான். அவளுடன் பேச உள்ளத்தில் ஆழம்வரை ஆவல் கொண்டிருந்தபோதும் அதனை அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அளவான வார்த்தைகளால் தினமும் அழகாகப் பேசினான். ஒரு முறை மது அவனுக்கு ஒரு ஹாய் செய்தி அனுப்பியிருந்தாள். மது அவனுக்கு முதலில் வாட்ஸ் ஆப் செய்தி அனுப்புவது இதுவே முதல் முறை. ஆகாயக் கோட்டையில் அழகாய் அரண்மனை கட்டியது அவனது மனது. கெமிஸ்டிரியையும் கணிதத்தையும் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தவனிடம் கடவுளாகப் பார்த்து ஒரு ஜில்லென்ற கரும்புச்சாரை நீட்டுவது போல இருந்தது மதுவின் ஹாய் என்னும் வாட்ஸ் ஆப் செய்தி.
“Hi.”- மது.
“Hi..” – ஆகாய அரண்மனையில் இருந்தபடியே மதுவிற்கு பதில் அனுப்பினான் ஆர்யா.
“What are you doing?”
“padichittu irukkaen”- ஆர்யா.
“I need cs guide. Author should be balagurusamy”
“irrukaanu Friendskitta kaetkuraen”
“Ok.. thanks.. bye”
“call panava?”- ஆர்யா.
“no… no… dont call me pls”
ஆர்யா அவளது பதிலை கருத்தில் கொள்ளாமல் மதுவை தனது கைபேசியில் அழைத்தான். தான் சொன்னபிறகும் கேட்காமல் அழைத்துவிட்ட ஆர்யாவை மனதில் வைதுகொண்டே கைபேசித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மதுவின் செயலைக் கண்ட ஜான்வி நடப்பதை ஓரளவுக்குப் புரிந்துகொண்டாள்.
“மது ஃபோன் அடிக்கிது பாரு.”- ஜான்வி.
“ஷ்ஷ்.. எதுக்கு கத்துற? எனக்குத் தெரியும்.. நீ பேசாம இரு. அது பாட்டுக்கு அடிக்கட்டும்.”
“அம்மா வந்து ஃபோனை எடுக்கலையான்னு கேட்கணுமா? ஒண்ணு ஸைலன்ட்ல போடு, இல்ல அட்டென்ட் பண்ணு.”- ஜான்வி.
கைபேசி விடாமல் அடிக்கவும் அன்னைக்கு பயந்து மது வேறுவழியின்றி அழைப்பை ஏற்றாள்.
“ஆர்யா…”- கைபேசியில் ஆர்யாவிடம் மது.
“மது ஏன் ஃபோனை எடுக்கல? சாரல் காம்ப்படிஷன் பற்றிப் பேசலாம்னு கூப்பிட்டேன்.”
“படிச்சிட்டு இருக்கேன்… அப்புறம் பேசறேன்… அம்மா வீட்டுல இருக்காங்க. இனி கால் பண்ணாத. பை.”- மது.
ஆர்யா பதிலுக்கு “ஓகே பை.” என்று சொல்லும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆர்யா பேசி முடிக்கும்வரை உள்ளுக்குள் இருந்த படபடப்பை வெறுக்கவும் செய்தாள் ரசிக்கவும் செய்தாள் மது. இரவு பன்னிரெண்டு மணிக்கு சாப்பிடும் திருட்டு குல்ஃபி போல சுவையாகவும் இருந்தது, சளி பிடித்து காய்ச்சல் வந்துவிடுமோ என்று பயமாகவும் இருந்தது.
ஆர்யாவுடன் பேசுவது சரியா தவறா என்று ஒத்தையா இரட்டையா போட்டுப் பார்த்தாள் மது.
                  *   *   *
இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை ஆர்யா மதுவை கைபேசியில் அழைத்தான். அவள் கைபேசி எண்ணை தனது கான்டாக்ஸ் லிஸ்டில் பார்க்கும் போதெல்லாம் கை பரபரவென்று இருந்தது அவனுக்கு. உடனே ஆர்வக்கோளாறில் அழைத்துவிட்டான். முதல் முறை தானே எந்தவொரு காரியமும் எல்லோருக்கும் கடினமாக இருக்கிறது? இரண்டாவது முறை ஒரு காரியத்தை செய்யும் போது மனம் தனக்குத் தானே தைரியம் என்னும் சோடாவை குடித்து ஏப்பம் விட்டுக்கொண்டு படுகெத்தாய் செயல்பட ஆரம்பித்து விடுகிறது.
“ஹாய் மது… சும்மாதான் கால் பண்னேன். என்ன பண்ற?” என்று படு உற்சாகமாய் ஆரம்பித்தான் ஆர்யா.
ஆர்யாவின் குரலைக் கேட்டதும் உள்ளத்தின் படபடப்பு கூடியது மதுவிற்கு. படபடப்பை மிஞ்சிய பயமும் வந்தது. அந்த பயம் தந்த பீதியில் அவளுக்கு எதுவும் புரியவில்லை. இது சரியா தவறா என்று மனம் அலைபாய ஆரம்பித்தது.
எதுக்கு கூப்பிட்ட ஆர்யா? என்றாள் மெல்ல,
“எதுக்கு கூப்பிட்டேன்… எதுக்கு கூப்பிட்டேன்னே மறந்து போச்சு… ஹா ஹா.” என்று கூறி ஆர்யா சிரித்த நிமிடம் அம்மா சில நாட்களுக்கு முன் சொன்ன ரெண்டும் கெட்டான் என்னும் வார்த்தை ஞாபகம் வந்தது அவளுக்கு. அடுத்து அவள் பேச வேண்டிய வார்த்தையை அவள் யோசிக்கவேயில்லை. பேசவேண்டிய வார்த்தைகளை மூளை கடகடவென பேச வைத்தது.
“சாரி… ஆர்யா… எனக்கு இனி கால் பண்ணாத. சாரி… திஸ் இஸ் நாட் குட்.” என்றாள் மது.
“ஏன்? எனக்குப் புரியல.”
“காரணம் இல்லாமல் சாட் பண்றது எனக்குப் பிடிக்கல.”
மது, முகத்தில் அறையாத குறையாகப் பேசியது  1லிலி வாட்ஸ் பல்ப்பை இலவசமாக பெற்றுக்கொண்டது போல இருந்தது அவனுக்கு. அவனுக்கு உடனே கோபம் உச்சிக்கு ஏறியது.
ஆனாலும் கோபத்தை மறைத்து, “நான் இப்ப கால்லை கட் பண்ணிடுறேன்… ஆனா வைக்கிறதுக்கு முன்னே ஒண்ணு சொல்லணும்… இது தப்பா எனக்குத் தெரியல… டூ மினிட்ஸ் பேசுறது வெட்டியான சாட் இல்ல மது.” என்றான் சிறுபிள்ளையிடம் விவாதிப்பது போல.
“இது தப்புதான் ஆர்யா. உனக்கு எது தப்பு எது சரின்னுகூடத் தெரியல பாரு… ஒரு தெளிவே இல்லாம இருக்க… வெட்டியா நீ என்னோட சாட் பண்ற மாதிரி ஃபீல் பண்றேன். என்னோட அம்மா அந்த மாதிரி ஃப்ரண்ட்ஷிப்பை என்கரேஜ் பண்ணமாட்டாங்க.”
ஆர்யா அழைப்பை மறுபேச்சின்றி துண்டித்தான்.
                 *   *   *
“என்னடா லன்ச்லயும் சரியா யார்கூடயும் பேசல.. இப்ப லைப்ரரியில என்றைக்கும் இல்லாத திருநாளா புக் வாசிக்கிற? நாம லைப்ரரியில் எப்போதும் புக் கிரிக்கெட் தான விளையாடுவோம்?”- விவேக்.
“ப்ச்…”- ஆர்யா.
“என்ன? மது உன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டாளா?”
“ம்… ஆமாடா ப்ளாக் பண்ணிட்டா. கால் பண்ணிப் பேசுனேன்… அதனால ப்ளாக் பண்ணிட்டா..”
“ஹா… ஹா… நான் அப்பவே சொன்னேன்ல??”- விவேக்.
ஆர்யா பலமாக முறைக்கவும்,
“சாரி டா. நீ மேலச் சொல்லு.” என்றான் விவேக்.
“நானும் ப்ளாக் பண்ணிட்டேன். அவ மட்டும்தான் ப்ளாக் பண்ணுவாளா? அவளுக்கு மட்டும்தான் தெரியுமா? எனக்கும் ப்ளாக் பண்ணத் தெரியும்னு அவ தெரிஞ்சிக்கட்டும். என்னைக்காவது எனக்கு கால் பண்ணிப் பார்ப்பால… அப்ப தெரிஞ்சிக்கட்டும் நானும் அவளை ப்ளாக் பண்ணிட்டேன்னு.”
“ஹா… ஹா…”
“ஏன்டா சிரிக்கிற?”
“நீ ப்ளாக் பண்ணது அவளுக்கு தெரியவே தெரியாது டா. அவ தான் உன்னை கால் பண்ணப்போறதே இல்லையே. பின்ன எப்படி அவளுக்குத் தெரியும்?”
“போடா அங்குட்டு. எப்பப் பாரு மது, மதூன்னு பேசிட்டே இருக்க…” என்ற ஆர்யா அடுத்த இருபது நிமிடங்களுக்கு மௌனவிரதம் இருந்தான்.
“என்னடா… இன்னும் உம்முன்னு இருக்க?”- விவேக்.
“First crush மச்சி. மது இஸ் மை first crush மச்சி. எல்லாம் நல்லாதான் டா போய்க்கிட்டு இருந்திச்சு.”
“அதான் புட்டுக்கிச்சுல. விடு.” என்றான் விவேக் அசால்ட்டாய்.
“உன்கிட்டப்போய் சொன்னேன் பாரு.”
“ஹா… ஹா… வா இரண்டுபேரும் அட்டைக்கத்தி படத்துல காதல்ல பல்ப் வாங்குனதும் ஹீரோ வடை வாங்கி சாப்பிடுவான்ல அது மாதிரி கேன்டீன்ல போய் கட்லட் வாங்கிச் சாப்பிடுவோம்.”
விவேக்கை முறைத்த ஆர்யா இரண்டே நொடியில் கோபம் மறந்து சிரித்தான்.
“பயங்கர உஷார்டா அந்த மது. நீ சொன்ன மாதிரி நான் பெர்சனலா அட்டாச் ஆகிற மாதிரி ஆனதும் கட் பண்ணிட்டா டா…”
“நான் எத்தனை பேரைப் பார்த்திருக்கேன்… நீயாவது முப்பது நாள் குப்பை கொட்டிருக்க… முப்பது செகன்ட் தாக்குப்பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும். என்னோட சோகக்கதைய கேட்ட… அழுதுடுவ. உனக்கு இளகுன மனசுடா, அதான் நான் இதுவரை உன்கிட்டக்கூட என்னோட சோகக் கதையை சொன்னது இல்ல, இந்த மேட்டரை விடு.. வா கேன்டீனுக்குப் போவோம்.”
“ஏன்டா விவேக்… எது சரி எது தப்புன்னு கர்ல்ஸுக்குத் தான் தெரியுமா?”
“ஏன்டா கேட்குற?”
“என்னைப் பார்த்து, உனக்கு எது சரி எது தப்புன்னு தெரியலன்னு சொல்றா… அப்படின்னா என்ன விவேக்? எனக்கு சரியாப் புரியல. ‘என் அம்மாவுக்கு இந்த மாதிரி வெட்டியா சாட் பண்ற ஃப்ரண்ட்ஷிப் பிடிக்காது’ ன்னு சொல்லிட்டா தெரியுமா? ரொம்ப எம்பாரஸிங்கா இருந்திச்சு தெரியுமா?”
“அவ என்ன சொல்ல வர்றான்னு புரியலையா?”
“சரியா தெளிவா புரியலைடா.”
“லவ் பண்ணக்கூடாதுன்னு, பசங்ககூட எப்பவும் எதிரியாகத்தான் இருக்கணும்னு மறைமுகமா சொல்லிக் கொடுத்துருக்காங்க டா.”
“அப்படிங்கிற?”
“மதுவோட அம்மா செம்மையா கெமிஸ்டிரி கிளாஸ் எடுப்பாங்களாம். என்னோட டியூஷனுக்கு வரும் அந்த ஸ்கூல் பசங்க பேசிக்கிட்டாங்க. அப்படிப்பட்ட டீச்சர் எந்த டாப்பிக்கானாலும் அடிச்சி தூள் கிளப்பிட மாட்டாங்களா?   பசங்ககூட எங்க எப்படிப் பழகுறதுன்னு மதுவுக்கு பத்து நாள் கிளாஸ் எடுத்திருப்பாங்க.”
“அப்படித்தான் டா இருக்கும். அம்மாக்கு பயந்த பொண்ணு மாதிரிதான் தெரியுது…”
“அம்மாக்கு பயந்த பொண்ணே தான். டவுட்டே இல்ல. உனக்கு கொடுத்த பல்ப் தான் அதுக்கு சாட்சி. உன் கையில எவ்வளவு பெரிய பல்ப் கொடுத்திருக்கா? அதுக்கப்புறமும் டவுட்டா இழுக்குற?” என்று கூறிய விவேக் திரும்பவும் நகைக்கவும் அவனின் தலைமுடியைப் பிடித்து ஆட்டினான் ஆர்யா.
“முடியை விடுடா ஆர்யா… அவளோட பதிலுக்கு அதுதான் டா அர்த்தம். அப்புறம் இன்னொரு விஷயம் கேட்டியே அது என்ன?”
“என்னைப் பார்த்து எது சரி எது தப்புன்னு தெரியாத பையன்னு சொன்னா டா.”
“ஓ…” என்று சிறிது நேரம் மனதுக்குள் ஆய்வு நடத்திய விவேக், “எது சரி எது தப்புன்னு தெரியலைன்னா இரண்டும் கெட்டான் மனநிலையில இருக்கிறதா அர்த்தம் ஆர்யா.” என்றான் உறுதியாக.
“அப்படிங்கிற? நல்லாத் தெரியுமா? அதுதான் அர்த்தமா? ரொம்ப எம்பாரஸிங்கா இருக்கு. அப்பவும் இப்பவும்.”
“நல்லாத் தெரியும். என்னோட அம்மாதான் தினமும் இதே டயலாக்கைச் சொல்லிச் சொல்லி என்னையும் என்னோட அண்ணனையும் திட்டுறாங்கல… ரெண்டும்கெட்டான் என்னும் தமிழ் வெர்டுக்கு நல்லாவே அர்த்தம் தெரியும். ரெண்டும்கெட்டான் என்றால் எது சரி எது தப்புன்னு தெளிவா பிரிச்சிப் பார்க்கத்தெரியாத ஆளுன்னு அர்த்தம். இங்குட்டும் இருக்க முடியாம, அங்குட்டும் இருக்க முடியாம அந்தரத்தில் மிதிப்பவன்னு அர்த்தம்.”
“சே சே… நான் அப்படியெல்லாம் இல்ல டா விவேக்.”
“சரி நான் இப்ப வரிசையா கேள்வி கேட்பேன். டக் டக்குன்னு பதில் சொல்லணும்.”
“கேளு.”
“மதுவைப் பிடிச்சிருக்கா?”
“ம். பிடிச்சிருக்கு.”
“அடுத்து வரப்போகும் ஜனவரி மாதமும் மதுவைப் பிடிக்குமா?”
“பிடிக்கும். நோ டவுட்.”
“அடுத்த ஜுன்னில்??”
“ஜுன்லயா? இன்னும் ஆறு மாசம் இருக்குடா…”
“ஆமா/ இல்ல, ரெண்டுல ஒண்ணு பட்டுன்னு சொல்லு ஆர்யா.”
“இல்ல.. ஆமா.. இல்ல.. ஆமா, ஆமா.. ஃபைனலா ஆமா தான் சொல்லுவேன்டா.”
“பார்த்தியா பார்த்தியா… எத்தனை ஆமா இல்ல சொல்லிட்ட? யெஸ்ஸா நோவான்னு சட்டுன்னு சொல்லத் தெரியல.. இதுக்கு பேர்தான் இரண்டும்கெட்டான். ஆனா மதுகிட்ட உனக்கு ஆர்யா பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டா பளிச்சுன்னு, “வி ஆர் ஃப்ரண்ட்ஸ்”-ன்னு சொல்வா தெரியுமா. பிடிச்சாலும் பிடிக்காட்டியும் ஃப்ரண்ட் ஃப்ரண்டு தான? கர்ல்ஸ் ஆர் வெரி பிரில்லியன்ட் டா. safe zone-ல தான் இருப்பாங்க. நாம தான் Danger Zone பக்கத்துலயே நின்னுகிட்டு ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம் டா. மது மட்டும் இல்ல… எந்தப் பொண்ணை அப்ரோச் பண்ணாலும் வாட்ஸ் ஆப்ல கடலை வறுக்கும் பசங்களுக்கு இதுதான் அவர்களின் பதிலாக இருக்கும். நாம எங்கேயும் எப்போதும் அவுங்களுக்கு ஃப்ரண்ட் தான். ஃப்ரண்ட் மட்டும் தான். அதை மீற நினைச்சா ப்ளாக் பண்ணிடுவாங்க.”
“நிரந்திரமா.”
“ஆமா நிரந்திரமா.”
“சரிடா… இனி இந்தப் பேச்சே நாம பேசக்கூடாது. நமக்கு இருக்கு ஆயிரம் பிரச்சனை. என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ் பற்றி இனி நான் பேசவே மாட்டேன் விவேக். நீயும் என்கிட்டக் பேசக்கூடாது.”
“ஆமா ஆமா… நமக்கு இருக்கு ஆயிரம் பிரச்சனை. பிப்பட்ல உறிஞ்சிடும் போது சொலூஷனைக் குடிக்காமல் உறிஞ்சிடணும்… மேக்ஸ்ல இருபத்திமூனு சாப்டர்ஸ் இருக்கு. ஃபிசிக்ஸ் கெமிஸ்டிரில எத்தனை சாப்டர்ஸ் இருக்குன்னுகூடத் தெரியல, எண்ணுறதுக்கே பயமா இருக்கு. இந்த தீபாவளிக்கு நாலு படம் ரிலீஸ் ஆகுது. அடுத்த வருஷம் ப்ளஸ்டூகிறதால இந்த வருஷமே நாலு படமும் பார்க்கலாம்னு பார்த்தா, பாக்கெட் மணி இருக்கிற பாக்கெட்டுல ஹல்க் (hulk) சைஸ்ல பெரிய ஓட்டையிருக்கு. இப்படி ஆயிரம் பிரச்சனை எனக்கும் உனக்கும் இருக்கும்போது மற்றக் கண்றாவியெல்லாம் நமக்கு எதுக்கு?” என்று தத்துவமழை பொழிந்தான் விவேக்.
“ஹா… ஹா… நீ 20ம் நூற்றாண்டின் ஷேக்ஸ்பியரா பொறக்க வேண்டியவன்டா.. தப்பிப்போய் விவேக்கா பொறந்திட்ட.”
“என்னை ஷேக்ஸ்பியர்ன்னு சொல்லாத… இங்கிலிஷ் நைட்டோட நைட்டா தற்கொலை பண்ணிக்கிடும். வருங்கால C.M விவேக்ன்னு சொல்லு.”
….
“என்னடா அப்படிப் பார்க்குற? நாம் பேசுற விஷயத்திற்கு சம்பந்தமே இல்லாமல் அரசியல் பேசுறேன்னா? சம்பந்தமே இல்லாமல் பேசுறதுதான அரசியல்?? அதனால வருங்கால C.M விவேக்ன்னு சொல்லு லாஜிக் இடிக்காது.”- விவேக்.
“ஹா.. ஹா..”
                *   *   *

Advertisement