Advertisement

மதுவின் வீட்டில் ஜான்வியின் கைபேசியில் எப்போதும் போல ஷான், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜஸ்டின் பீபர் என அனைவரும் வருகை தந்திருந்தார்கள். ப்ளூடூத் உதவியுடன் ஸ்பீக்கர்கள் பேய் அலறலாய் அலற மதுவும் ஜான்வியும் மேற்கத்திய பாடல்களை பாடியபடியே தத்தமது வேலைகளைச் செய்தனர்.
மதுவின் பாட்டுக்கச்சேரியை இடைபுகுந்து கலைத்தது அவளது கைபேசியின் வாட்ஸ் அப் செய்தி ஒன்று. தெரியாத எண்ணில் இருந்து செய்தி வந்திருப்பதை பார்த்து சந்தேகமாய் கைபேசியைக் கையில் எடுத்தாள் மது. அந்த எண் அனுப்பிய செய்திக்குள் உள் நுழைந்தாள்.
“Hi…”- பெயர் தெரியாத வாட்ஸ்சப் எண்.
செய்தியைப் பார்த்ததும், ‘யாருன்னு பார்ப்போமே…’ என்று நினைத்த மது கைபேசியில் பதில் அனுப்பினாள்.
“Who Is This?”- மது.
“Guess…”- பெயர் தெரியாத வாட்ஸ்சப் எண்.
“Sorry… I am Blocking You…”
“Arya…”
“Arya??? How Did You Get My Number?”
“I Got It From The Peacock Dance Girls…“
“OH… OK”
 “I Just Wanted To Say Hi..”
“OH… OK”
“We Shall Be In Touch.Save My Number”
“Yeah.. Sure I Will Save Yours…”
               *   *   *
முன்தினம் ஆர்யா தன்னை கலட்டிவிட்டு மாயக்கண்ணனாய் மறைந்த விஷயத்தை மறந்த மானம் கெட்ட, சொரணைக்கெட்ட விவேக்தான் தனது ஆவலை மறைக்க முடியாமல் பேச்சை முதலில் ஆரம்பித்தான்,
“டேய் மதுகூட பேசுனியா?”- விவேக்.
ஆர்யா சிரித்தான்.
“டேய், இப்ப உன்னை சிரின்னா சொன்னேன்? சிரிக்கிற?”- விவேக்.
“போடா.”- தலைகுனிந்து புத்தகத்தைப் புரட்டுவது போல சிரித்துக்கொண்டே ஆர்யா.
“என்னடா வெட்கப்பட்டுட்டே சிரிக்கிற… ரொம்ப பிடிச்சிருக்கா இந்த ஃபீல்?”
“ம்…  அடுத்த காம்ப்படிஷன் எப்ப வரும்னு இருக்கு டா. லோட்டஸ் இன்டர்ஸ்கூல் மீட் எப்ப வரும்? எப்பதான் அவளை அடுத்து நேர்ல பார்க்கப்போறேனோ…”
“லவ்?”
  “நோ… டெஃபனிட்லி நோ… ஒரு கிரஷ் விவேக். ரொம்ப ரொம்ப சீரியஸான கிரஷ்.”
“அப்பாடா… இன்னும் ஃப்ளஸ் ஒன்னே முடிக்கல.. அதுக்குள்ள ரெஜிஸ்டர் ஆஃபீஸ் கூப்பிட்டிருவியோன்னு பயந்துட்டேன்.”
“எரும…” என்று கணித புத்தகத்தை எடுத்து விவேக்கின் தோளில் அடித்தான் ஆர்யா.
ஆர்யாவிடம் செல்லமாய் அடிவாங்கிய விவேக், “ஆர்யா உனக்கு ஒரு ஃப்ரண்டா ஒரு அட்வைஸ் பண்றேன், கவனமா கேட்டுக்கோ. ரொம்ப வாட்ஸ் ஆப்ல பேசாத டா, பொண்ணுங்க சீப்பா நினைச்சிடுவாங்க. ஐ ஆம் வார்னிங் யூ ஆர்யா… குட் மார்னிங். ஹாப்பி சன்டே, ஹாப்பி நியூ யியர், ஹாப்பி தீபாவளி, இப்படி மட்டும் மெசேஜ் பண்ணு… வி ஆர் பாய்ஸ் யு நோ… நமக்குப் பிடிச்சிருக்குன்னு காட்டிக்கவே கூடாது.” என்றான் அக்கறையாய்.
“ஹாப்பி மாட்டுப்பொங்கல். அதை விட்டுட்ட…”
“என்னடா?? ஐ ஆம் டெட் சீரியஸ்.”
“அப்புறம் என்னடா? விட்டா ஹாப்பி ரக்ஷாபந்தன் கூடச் சொல்லச் சொல்வ போலயே?”
“சரி அதைவிடு நேத்து என்ன ஆச்சு??”
“சும்மா ஒரு டைம் பாஸ் டா. நல்ல பொண்ணு அவ.”
“இப்ப மதுவோட கான்டெக்ட் (conduct) சர்டிஃபிகேட் கேட்டேனா? மது வாட்ஸ் ஆப்ல என்ன டெக்ஸ்ட் பண்ணா?”
“What’s your hobbyன்னு கேட்டா டா. FootBall, Tennis, Chessன்னு பதில் சொன்னேன்.”
“சரி சரி…” என்று சொன்னவனின் “சரி” சரியேயில்லாமல் பல அர்த்தங்களில் ஒலித்தது. விவேக்கை சந்தேகமாய்ப் பார்த்தபடி ஆர்யா கேட்டான்,
“என்ன சரி சரி? வேற என்னமோ உன் மனசுல நினைச்ச, அதைச் சொல்லு விவேக்.”
“இன்னொரு நாள் சொல்றேன். இப்ப ஹோம் வொர்க்கை காப்பியடிப்போமா? அடுத்த பீரியட் மேக்ஸ்.”
பத்து கணித கணக்குகளை ஈ அடித்தான் காப்பியடிப்பதில் நேரம் பறந்தோட அந்த நாள் முடியும் வரை விவேக் அந்த “சரி” க்கு விளக்கமே தரவில்லை. ஆனால் மீண்டும் ஒரு முறை இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தபோது வேறு வழியின்றி அந்த ‘சரி’ க்கு சரியான விளக்கத்தை தந்தான் ஆர்யாவிடம்.
                 *   *   *
                  9
 ஒரு  மாதம்  கடந்திருந்தது…
மதுவும் ஆர்யாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. அடிக்கடி செல்பேசித் திரையைப் பார்த்தவண்ணம் இருந்தான் ஆர்யா. ஆனால் மதுவும் ஜான்வியும் ஒரே கைபேசியை பகிர்ந்து கொள்வதால் மது கைபேசியை அடிக்கடி எடுத்துப்பார்க்கும் பழக்கத்தை பழகவில்லை.
ஜான்வி என்னும் கண்காணிப்பு கேமரா இருபத்திநாலு மணி நேரமும் அவளுடன் இருப்பதால் ஆர்யாவுடன் வாட்ஸ் அப் செய்வதிலும் அளவோடு இருந்தாள்.
ஒரு நாள் பள்ளியில் ஆர்யாவும் விவேக்கும் வேதியல் ஆய்வுக்கூடத்தில் சில பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தனர். காப்பர் சல்ஃபைட் டெஸ்ட் செய்து கொண்டிருந்தனர். பள்ளியில் கைபேசிக்கு அனுமதி கிடையாது. ஆர்யாவின் பள்ளியிலும் அதே விதிமுறைதான். மாணவிகள் அனைவரும் அந்த விதிமுறையை சரியாகக் கடைபிடித்தனர். ஆனால் மாணவர்கள்???
ஆர்யா முன்பெல்லாம் பள்ளிக்கு கைபேசியை எடுத்துவருதில்லை. மதுவுடன் வாட்ஸ் ஆப்பில் பேச ஆரம்பித்தப் பிறகு கைபேசி இல்லாமல் எங்குமே செல்வதில்லை அவன். பள்ளி முடிந்து வேனில் வரும்போது மதுவிடமிருந்து வரும் ஒரு குட்டி மெசேஜுக்காக அவன் நாள் முழுதும் கைபேசியை கையில் வைத்திருந்தான். அதில் ஒரு கிக்… அந்த கிக் ஆர்யாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
“மதுகூட அடிக்கடி சாட் பண்ற போலயே? சொல்லவே இல்ல? என்ன பேசுறா மது?” என்று ஆர்யாவின் கைபேசி காட்டிக்கொடுத்த மதுவின் வாட்ஸ் அப் மெசேஜ்களைப் பார்த்தபடியே கேட்டான்.
“வி ஆர் ஜஸ்ட் சாட்டிங். அன்ட் தட்ஸ் இட்.” என்று கடுப்பாக பதில் தந்த ஆர்யா கைபேசியை விவேக் கையில் இருந்து பிடுங்கி ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்க பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்துக்கொண்டான்.
“மெசேஜ் பார்க்கலாமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க,
“என்னது? மது மெசேஜ் பார்க்கப்போறியா?? மெசேஜ்குள்ளப் போன செத்த… அடுத்தவன் மெசேஜ் பார்க்கிறது இன்டீசென்ட்னு தெரியுமா தெரியாதா?”
“சரி, இனி அதைப் பத்தியே பேச மாட்டேன். எதுவும் கேட்கவும் மாட்டேன்.” – விவேக்.
“உடனே முகத்தைத் தூக்கி வச்சிக்குவியே.. குட் மார்னிங், குட் டே, ஹாப்பி மன்டேன்னு வாட்ஸ் அப் மட்டும்தான்டா பண்ணுவா. பேசலாம் மாட்டா.”
“ஓ.. வாட்ஸ் அப் பண்ண ஆரம்பிச்சி ஒரு மாசம் ஆச்சே? இவ்வளவுதனா? நீ பொய் சொல்லமாட்டன்னு தெரியும்… ஆனாலும் நம்புற மாதிரி இல்லயே… போன மாசம் உன்னோட பொழுதுபோக்கு பற்றிக் கேட்டா, அதற்குப் பின்ன கடைசியா என்ன கேட்டா உன்கிட்ட?”
“Give Me Your Insta Detailsன்னு சொன்னா.”
“நீ என்ன பதில் தந்த?”
“இன்னும் ஆரம்பிக்கல. ஆரம்பிச்சிட்டு தர்றேன்னு சொன்னேன். அவ்வளவுதான்டா டெக்ஸ்ட் பண்னோம்.”
“ஓ.”
“ஆமா.. அதுக்கு மேல ஒரு வார்த்தைகூட அவ பேசலைடா.”
“நீ எப்படி டைப் பண்ண? தமிழ்லயா?
“Innum Aarambikkala…. Aarambichittu tharaen… அப்படின்னு தமிழையே இங்கிலிஷ்ல டைப் பண்ணேன். இப்பத் தெளிவா சொல்லிட்டேனா? “
“அவ தமிழ்ல மெசேஜ் பண்ண மாட்டாளா?”
“இல்ல. இங்கிலிஷ்லதான். நல்லா இங்கிலிஷ் தெரியிதுடா அவளுக்கு..”
“ஓ.. நீ?”
“நான் ரெண்டுலயும் மெசேஜ் பண்ணுவேன். தங்கிலிஷ்தான் முக்கால்வாசி.”
“ஓ… ஓஹோ.”
“அன்றைக்கு “சரி” என்று சொன்ன அதே விசித்திர ஒலியில் இன்றும் “ஓ.. ஓஹோ.” என விவேக் சொன்னதும் ஆர்யாவின் கோபம் எல்லையைக் கடந்துவிட்டது.
கோபத்தில், “ப்ராக்டிக்கல் பண்ணலாமா? என்னோட பிப்பட் புயூரட் எடுக்கப்போறேன்… நீ கெமிஸ்டிரி ப்ராக்டிகல் பண்ணப்போறியா இல்ல இப்படியே வெட்டி அரட்டை அடிக்கப்போறியா? உன்னோட பிப்பட் பியூரட் எடுத்துக்கொடுக்க உன் தாத்தாவா வருவாங்க?” என்றான் ஆர்யா.
“சரி… சரி வா வா செய்யலாம்.” என்ற விவேக் தனது புயூரட்டை எடுத்துக்கொண்டு ஆர்யா அருகிலேயே போய் நின்றான்.
ஆனால் சில மணி நேரங்களிலேயே ஆர்யாவிற்கு அந்த சரி, ஓஹோ பற்றி முழுதாகத் தெரியவில்லை என்றால் தலையே வெடித்துவிடும் போல இருக்க அந்த நாளின் கடைசி பாடவேளையின்போது,
“அப்ப நாம பேசும்போது ஓஹோன்னு ஏன் சொன்ன?” என்று விவேக்கிடம் தன்மானத்தை உதறிவிட்டுக் கேட்டே விட்டான்.
“சொன்னா நீ கோபப்படுவ. என்னை நம்ப மாட்ட.”- ஆர்யாவிடம் அடி வாங்குவதற்கு முன் உஷாராக விவேக்.
“இல்ல நீ சொல்லு. நான் கோபப்பட மாட்டேன்.”
“மது உன்கூட இதுக்கு மேல பேச மாட்டா ஆர்யா. அதாவது குட் மார்னிங், குட் நைட், குட் டே… சுருக்கமா சொன்னா நீ ஒரு குட் மார்னிங் ஃப்ரண்ட் அவளுக்கு.”
“என்னது குட் மார்னிங் ஃப்ரண்டா?”
“ஆமா எல்லா மெசேஜ்ஜும் குட்ல தான் ஆரம்பிக்கும்.”
“நோ நோ நோ..”
“மிஞ்சி மிஞ்சிப் போனா… ஹாப்பி நியு யியர். சொல்லலாம். தட்ஸ் ஆல்…”
“நோ நோ நோ..”
“யெஸ் யெஸ் யெஸ். ப்ளஸ் ஒன் படிக்கிறேன் இதுகூடத் தெரியாம இருப்பேனா?”
“நீ மட்டுமா ப்ளஸ் ஒன்? நானும் தான ப்ளஸ் ஒன் படிக்கிறேன்? விட்டா என்னை நீயே L.K.Gல கொண்டு போய் சேர்த்துடுவ போலயே?”
“ஆர்யா பொண்ணுங்க விஷயத்துல நீ L.K.Gதான்னு நீயே ஒத்துக்கணும்.”
“விவேக்க்க்..”
“கோபப்படாத இப்ப நான் தெளிவா சொல்றேன் கேளு. அவ சுத்தமான இங்கிலிஷ்ல டைப் பண்றா, ஆனா நீ தங்லிஷ்ல டைப் பண்ற… உனக்குப் புரியலையா? இங்கிலிஷ்ல பேசும் போது பெர்சனலா அட்டாச் ஆக மாட்டோம். தமிழ்ல பேசும் போது பெர்சனலா அட்டாச் ஆவோம்ப்பா.. நீ அவகூட ஒட்டுற.. அவ உன்னை கட் பண்றாடா. ஒரு மாசம் வாட்ஸ்சப் பண்ணிருக்க… கண்டிப்பா அவ தமிழ்ல பேச ஆரம்பிச்சிருக்கணும். இது ரொம்ப நாள் நீடிக்காது ஆர்யா. ஷி வில் இக்னோர் யூ. நீ லிமிட் கிராஸ் பண்ணா உன்னை இக்னோர் பண்ண ஆரம்பிச்சிடுவா.”
விவேக் சொன்னதை சிறிது நேரம் யோசனையில் வைத்த ஆர்யா அதன்பிறகு விவேக் பக்கமாகத் திரும்பாமல் தனது புயூரட்டுடன் மட்டும் கெமிஸ்டிரியில் பேசினான். ஆனால் புத்தி, மூளை, அறிவு எல்லாம் விவேக் சொன்னதைத்தான் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தன.
அக்கணத்திலிருந்து அவன் ஆங்கிலத்தில் வெறுத்த வார்த்தை குட் மார்னிங்…
            *   *   *

Advertisement