Advertisement

அத்தியாயம்….20(2) 
‘ இது தானா…? இது தானா…?’ எதிர் பார்த்த அந்நாளும் இது தானா….?’  என்ற பாடல் மெல்லிசை குழு பாட..அந்த படத்தில் நடித்த விக்ரம், திரிஷாவின் கெமிஸ்ரியோடு…  பாலாஜி, ஜமுனாவின் கெமிஸ்ட்ரி கொஞ்சம் தூக்கலாகவே காணப்பட்டது. 
விக்ரமும், திரிஷாவும் இப்படத்தில் இந்த ஜோடி.  அடுத்த படத்தில் , கொடுத்த பணத்திற்க்கு வேறு ஜோடி என்று,  பணத்துக்காய் முகத்தில் காதல் வரவழைப்பர்.
ஆனால் பாலாஜி ஜமுனாவின் ஜோடி..காத்திருந்து காதலிக்க ஆசை உண்டு என்று சொன்ன பாலாஜியோடு, காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை, என்று சொன்ன ஜமுனாவையே சென்ற  வாரம் பாலாஜியிடம் வந்து…
“ இந்த கல்யாணத்தை ஆறுமாசம்  கொஞ்சம் தள்ளி வைக்க முடியுமா…?” கைய் பிசைந்துக் கொண்டு தயக்கத்துடன் கேட்ட ஜமுனாவை முதலில் அதிர்ச்சியோடு தான் பாலாஜி பார்த்தான்.
பின் என்ன நினைத்தானோ …தன் எதிரில் அமர வைத்து… “ என்ன ஜமுனா ஏதாவது பிரச்சனையா….?” என்று கேட்டதுக்கு,
“ இல்லை…” என்ற தலையாட்டல் மட்டுமே  பதிலாய் கிடைத்தது. 
“ வேறு ஏதாவது பிரச்சனையா…? ஜமுனா.” என்று  கேட்டதற்க்கும் ஜமுனா “ இல்லை…” என்று தலையாட்டல்.  பாலாஜியின் பொறுமை கொஞ்சம், கொஞ்சமாய் பறக்கும் நிலை.
“ என்ன என்னை பத்தி தப்பா ஏதாவது கேள்வி பட்டியா….?” பாலாஜியின் குரலில் கொஞ்சம் கோபம் எட்டி பார்த்தது.
இதற்க்கு மட்டும்… “ அய்யோ…” என்று அவசரமாய் மறுத்தாள்.
பாலாஜிக்கு இப்போது உண்மையாகவே பயம் ஏற்பட்டு விட்டது. ஜமுனாவுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையா….? அதை தன்னிடம் சொல்ல தயங்குகிறாளோ…
“ ஜம்மூ எந்த பிரச்சனை என்றாலும்,  தயங்காம என் கிட்ட சொல். பெண்கள் பயந்து அதை மறைத்தா தான்  பிரச்சனை இன்னும் பெருசா ஆகும்.” என்ற பாலாஜியின் பேச்சில்,  ஜமுனா இவன் வேறு ஏதோ நினச்சிட்டு இருக்கான் போலவே என்று தன் தயக்கத்தை உதறி …
“ இல்ல. இப்போ எனக்கு லவ் பண்ணா என்ன…? அப்படி  தோனுது.”(நல்லா தோனுதும்மா உனக்கு.)
ஜமுனா அப்படி சொன்னதும் தான்,  ராட்சஷி ஒரு நிமிசத்தில் மனுசனை என்ன என்ன நினைக்க வெச்சிட்டா…லவ்வ  சொன்னா, கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு சொன்னா…சரி கல்யாணத்துக்கு நாள் குறிச்சா இப்போ லவ் பண்ணலாமுன்னு சொல்றா….
இவ மூட் வேறு ஏதாவது  மாறுவதற்க்குள் தாலி கட்டி பட்டா போட்டுடலாம் என்ற  முடிவோடு… “ காதலிக்க தான் கல்யாணம் செய்ய போறோம் ஜம்மூ.” அவள் என்ன சொல்ல வந்தாள் என்று  புரிந்தும், புரியாதது போல் பேசி, இலகு வழியாக முடிக்க பார்த்தான்.
“ அய்யோ நான் அந்த காதலை சொல்லலே. நீங்க கேட்டிங்கல முதல்ல காதலிக்கலாமா…? அது போல காதலிக்கலாம்.” என்று  சொன்ன ஜமுனா, ஒரு எதிர் பார்ப்போடு பாலாஜியை பார்த்தாள்.
இதற்க்கு பாலாஜி என்ன சொல்வான்…? அவன் ஆசை பட்டது. ஊரே காதலிக்கும் போது, அதை பார்த்து தானும் காதலித்து பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டான்.
 பார்த்ததும் இல்லை என்றாலும்,  மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை பார்த்த முதல் நாளே  ஜமுனா ஏற்படுத்தி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
இல்லை என்றால் மூன்று நாள் கழித்து இன்று அவளை பார்த்தே ஆகவேண்டும் என்று  அவன் மனது அடம் பிடிக்காது. அதுவும் பார்த்ததும் தன் காதலை சொல்லவும் தோன்றி இருக்காது.
ஜமுனா தன்னை நம்பாது வீட்டில் பெண் கேள் என்று மட்டும் சொல்லி இருந்தால்,  அவன் என்ன செய்து இருப்பானோ…? அவள் சொன்ன என் அம்மாவுக்கு தான் கல்யாணம் ஆகல. அது எனக்காவது நடக்கட்டுமே, என்ற அந்த  வார்த்தை அவனை பலமாக தாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
இனி வேறு ஒரு பெண் மீது காதல் தோன்றுமா…? என்று  தெரியவில்லை. தன் மீது நம்பிக்கை வர வைக்கலாமா…? என்று தான் முதலில் யோசித்தான். பின்  நாள் கடத்த கூடாது என்று தான் சித்தாப்பா குடும்பத்தை வர வழைத்து பேசி இதோ திருமணம் வரை வந்து விட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் , ஜமுனாவுக்கு  முதலில் தன் மீது நம்பிக்கை. பின் அன்பு.  சமீப காலமாய் காதல். ஆம் அவனை பார்த்தாலே அவள்  முகம் தன்னால் ஒரு மாற்றம்.
அந்த மாற்றம் என்ன என்று   ஜமுனாவுக்கு தெரிந்ததோ…? இல்லையோ…? பாலாஜிக்கு தெரிந்து விட்டது. ஜமுனாவுக்கு தன் மீது காதல் வந்து விட்டது என்று.
ஆனால் இந்த அளவுக்கு  கல்யாணத்தை நிறுத்தி காதல்  செய்வோம் என்று அவள் சொல்வாள் என்று  சத்தியமாய் அவன் எதிர் பார்க்கவில்லை.
“ ஜம்மூ கல்யாணம் என்பது சும்மா இல்லை. இது உனக்கு நல்லாவே தெரியும். அது தெரிஞ்சி தான் காதல் வேண்டாம் கல்யாணம் தான் வேண்டும் என்று  நீ கேட்டது.” என்று பொறுமையுடம் பாலாஜி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
“ இல்ல அப்போ எனக்கு உங்கல பத்தி ஒன்னும் தெரியாது. அதான் அப்படி சொன்னேன். இப்போ நீங்க என்ன சொன்னாலும்,  என்ன செஞ்சாலும் உங்கல நம்புறேன்.” என்று ஜமுனா அவன் கை பிடித்து சொன்னாள்.
“ இது போல டக்கு டக்குன்னு வாக்கு எல்லாம் கொடுத்துடாதே ஜம்மூ. நீ வேற இன்னிக்கி ரொம்ப  கும்மூன்னு இருக்க. பிடித்த உன் கை வேற ரொம்ப சூடா இருக்கு. வெளியே இந்த க்ளைமேட் கூட சும்மா  சில்லுன்னு இருக்கு. நிறைய படத்துல இது போல ஒரு சிட்டுவேஷனில் தான் தப்பு செய்வாங்க. அது போல இங்கு ஒரு தப்பு நடந்தா, அப்புறம் என்னை குத்தம் சொல்ல கூடாது.” பிடித்த அவள் கையை இறுக்கி பிடித்து கொண்டு  சொன்னவனின் பேச்சில் இருந்து தீவிரம், முகத்தில் இல்லை.
“ ஜீ நான் சீரியசா  பேசிட்டு இருக்கேன். நீங்க தமாஷ் பேசிட்டு இருக்கிங்க.” ஜமுனாவின் பேச்சில்  கொஞ்சம் கோபம் எட்டி பார்த்தது. நான் எவ்வளவு முக்கியமான விசயம் பேசிட்டு இருக்கேன்.  இவன் என்னன்னா… காமெடி பண்ணிட்டு இருக்கான்.
இப்போது பாலாஜி தன் விளையாட்டு தனத்தை கை விட்டவனாய்…” நான் தமஷ் செய்யல  ஜமுனா. கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ தான் வந்து தமாஷ் செய்துட்டு இருந்த. உங்க அம்மா எல்லாருக்கு கல்யாண பத்திரிகை வெச்சுட்டாங்க. நானும் தான்.
சரி என்னை விடு. உன் அம்மா நேத்து தான்  உன் தாய் மாமன் வீட்டுக்கு போய் பத்திரிக்கை வெச்சிட்டு  “ குடும்பத்தோடு வாங்கன்னு.” அழச்சிட்டு வந்து இருக்காங்க.  இத்தனை வருசம் ஒட்டு உறவு இல்லாம இருந்தவங்க. எதுக்கு வலிய சென்று அழச்சிட்டு வந்து இருக்காங்க..? .” என்று  பாலாஜி கேட்டதுக்கு,
“ ஊரு மெச்ச என் பொண்ணுக்கு கல்யாணம் செய்யிறேன் பாருன்னு காட்ட தான். ” என்று  ஜமுனா சொன்னதும். 
“தெரியுதுல. இந்த கல்யாணம் உங்க அம்மாவோட கவுரவ பிரச்சனை ஜம்மூ.  நான் கூட முதல்ல எல்லாம் நான் என்ன பெருசா ஆசை பட்டேன். காதலிச்சி கல்யாணம் செஞ்சிக்க  தானே…என்னுடைய இந்த ஆசை கூட நிறைவேறலையேன்னு.
ஆனா இப்போ உங்க அம்மாவோட நிலையில் இருந்து யோசிச்சி பார்த்தா. இப்போ நாம் காதலிச்சி இருந்தா…கண்டிப்பா  நாம எங்காது பார்த்து பேசி இருப்போம். அதை உங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க யாராவது பார்த்து இருந்தா… என்ன நினச்சி இருப்பாங்க…?”  சொல். என்பது போல் பாலாஜி அடுத்து பேசாது ஜமுனாவை அமைதியாக பார்த்தான்.
பாலாஜி சொல்லாது விட்ட வார்த்தையில் தான், மற்றவர்கள் அதை என்ன என்ன சொல்லி இருப்பார்கள் என்று  அவளை யோசிக்க வைத்தது. மற்றவர்களுக்கு எப்படியோ…? தன் அம்மாவுக்கு இது பெரிய தலை குனிவை தான் ஏற்படுத்தி இருக்கும்.
ஜமுனா இதை பற்றி யோசிக்க யோசிக்க தான்.  இந்த காதல் என்னையும் இப்படி மாத்திடுச்சே… “ என்ன இப்போவாவது நிலமை புரியுதா…?” ஜமுனாவின் முகம் மாற்றத்தை பார்த்து பாலாஜி கேட்டான்.
“ உங்களுக்கு இதில் வருத்தம் இல்லலே…?” 
“ கண்டிப்பா இல்ல. என் மனசுக்கு பிடிச்சவளை  கல்யாணம் செய்துக்க போறேன். இதோட வேறு என்ன சந்தோஷம் எனக்கு வேண்டும் சொல்.”
காதலில் நம்பிக்கை இல்லை என்று சொன்னவளையே…காதலித்து திருமணம் செய்யலாம் என்று சொல்ல வைத்ததோடு, இத்திருமணம் நின்றால் வைதேகியில் நிலையை பற்றி  விளக்கி சொல்லியும், தன் மனது பற்றி யோசித்தவளை கைய் பற்றுபவனுக்கு எப்படி வருத்தம் இருக்கும்.
சாந்தி ஒரு நாள் அவன்  அபிஸ் அறைக்கு வந்து… “ நீங்க செஞ்ச உதவிக்கு நன்றின்னு சொன்னா மட்டும் பத்தாது. ஆனால்  நன்றி. இப்போ அதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும்.” என்று சொன்னவள்.
பின்… “ நான் ஊருக்கு கிளம்புறேன் சார்.” என்று விடைப்பெற வந்த போது… “ நான் ஒன்னும் பெருசா செஞ்சுடல. இன்னும்   கேட்டா இதுல நேரிடையா நான் தலையிடவே இல்ல.” என்று சொன்னவன்.
“ பத்திரம். இதோடு வாழ்க்கை முடிஞ்சிடல. பார்த்து.” என்று சொல்லியதோடு வெளியே வந்து வழி அனுப்பியும் வைத்தவன் சம்பிரதாயத்துக்கு கூட…
தன் கல்யாணம் வரை இரு என்றோ, இல்லை கல்யாணத்துக்கு வா…என்றோ அழைக்கவில்லை.  எந்த சூழ்நிலையிலும் ஜமுனா, வைதேகியின் மனம் புண்படுவதை அவன் விரும்பவில்லை.
நல்லது நடந்தால்,   தொடர்ந்தார் போல் நல்லது நடக்கும் என்பாகர்கள். அதற்க்கு ஏற்றார் போல் நிச்சயத்துக்கு ஏதோ வந்தோம் என்று வந்த சித்தப்பாவின் குடும்பத்தினர்,  திருமணத்துக்கு மனதார வந்து திருமண வேலையை, முன் நின்று இதோ நடத்திக் கொண்டு இருக்கிறனர்.
செந்தில் சிறை சென்றதும் சித்தப்பா ஒரே அடியாக ஒடுங்கி விட்டார் என்று  தான் சொல்ல வேண்டும். பணத்துக்கு ஆசை பட்டு, செந்தில் நட்பு என்று அழைத்து வந்த  பசங்களை, அன்றே கவனித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே…காலம் கடந்த யோசனை.
அதுவும் தன் மருமகளையே அப்படி படம் பிடித்தது கேள்வி பட்டதில்,  ஆடி தான் போய் விட்டார். பாலாஜி இல்லை என்றால் அதுவும் ஏதோ டூயூபில் வந்து இருக்கும். அதை ஊரே பார்த்து இருக்கும்.  
“அப்படி மட்டும் ஆகி இருந்தால் குடும்பமே  நாண்டுகிட்டு தான் செத்து இருப்போம்.” பாலாஜி பத்திரிகை வந்து கொடுத்த  போது, அவன் சித்தப்பா சொன்னது.
 “ செந்திலின் மனைவிக்கு இந்த விசயம் தெரியக்கூடாது.” பாலாஜி சொல்லி விட்டான்.  ஏற்கனவே அப்பெண் கணவன் இப்படியா…?என்று அதிர்ந்து இருப்பாள். இதுவும் கேள்வி பட்டால் உயிரை விட்டாலும், விட்டு விடுவாள்.
பாலாஜியை பாசமாக நாம் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும்,  அவன் தங்களுக்கு செய்த உதவியில், இதோ உள்அன்போடு திருமணத்தில் ஈடுபட்டனர்.
சொந்தமே இல்லை என்று இருந்த பாலாஜிக்கு காதல் மனைவி.அம்மா இடத்தில் அத்தை. உண்மையான பாசத்தில் சித்தப்பா குடும்பம் வேறு என்ன வேண்டும்  அவனுக்கு….?
மாலை வரவேற்ப்பு முடிந்து,  காலை ஆறு ஏழரைக்கு முகூர்த்தம். இதோ தான் வாங்கி கொடுத்த கூரை புடவையில்,  பொன்நகையும், புன்னகையும் மின்ன…கூடவே வெட்க சிவப்பில் ஜமுனாவின் அழகு மேலும் கூட…
தன் அருகில் தன் தோள் உரச அமர்ந்தவளின் அழகை பார்த்தவனுக்கு இன்னும் இரவு வரை பொறுக்க வேண்டுமா…? என்ற எண்ணம் தான் அவன் மனதில்.
“ தோ புள்ளயாண்டான் நான் சொல்றது செஞ்சிட்டு உங்க ஆத்தூக்காரிய பாருங்கோ…” ஐய்யர் மூன்று முறை இப்படி கத்தி சொன்னதும் தான் பாலாஜி நிஜ உலகுக்கே வந்தான்.
 இதை கேட்ட அனைவரும் கொல்லன சிரிக்க. அதே மகிழ்ச்சியுடன் ஜமுனா கழுத்தில் இரண்டு முடிச்சி இட்டவன்,  மூன்றாம் முடிச்சி தன் சித்தப்பா மகள் இட, ஜமுனாவை தன் மனைவியாய் , உன் இன்பம், துன்பம் அனைத்திலும் உன் கூடவே  இருப்பேன், என்று மனதில் நினைத்து அக்கினியை வலம் வந்தான்.
வைதேகி தன் மகள் திருமணத்தில் எந்த சடங்கும் விட்டு விட கூடாது என்று,   தனக்கு தெரியவில்லை என்றாலும் கேட்டு கேட்டு ஒன்று விடாது செய்து முடித்தார். கடைசியில் வைதேகியின் அண்ணன் வந்து ஜமுனாவை வாழ்த்த… அதை பார்த்த வைதேகிக்கு ஏதோ சாதித்த உணர்வு.
பாலாஜியும்,  ஜமுனாவும் காலம் முழுவதும்   திகட்ட திகட்ட காதலிப்பார்கள்.  
                      (நிறைவு)

Advertisement