Advertisement

7

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

காலை வேளையில் இருந்து நிச்சயதார்த்த வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இங்கு அனைவரும் தயாராக இருக்க ஜெ. கே ன் வீட்டில் இருந்து அனைவரும் வந்து சேர்ந்தனர்..

சொந்த பந்தங்கள் புடைசூழ வீட்டில் அனைவரும் போய் சேர்ந்தனர். மங்கை மெதுவாக அவள் அம்மாவிடம் வந்தவள்,  “அப்பாவிற்கு ஃபோன் செய்யுங்கள்.,  இன்னும் வரல யாரும்  கேட்டா என்ன சொல்ல” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

“அப்பவே பேசிட்டேன்.,  கோயிலிலிருந்து வந்துட்டாங்க.,  இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க., நீ மத்த வேலையை பாரு போ”.,  என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அதேநேரம் சொந்த பந்தங்கள் அங்குள்ளவர்கள் கலகலப்பான பேச்சு  சாதாரணமாக தொடங்கியிருக்க.,  திவ்யாவின் சின்னமாமா மகனான  வினோத்.,  அவளோடு சண்டை போடவன் நேரத்தை பார்த்துக்கொண்டே தனியாக நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் பதட்டம் நன்றாக தெரிந்தது. யாரும் பார்த்து விடாதபடி தள்ளி நின்று கொண்டான்.

ஜெ. கே வோ., வீட்டில நடக்கும் விஷேசம் பற்றி கண்டுகொள்ளாமல் அமர்ந்து கொண்டான்.   பெரியவர்கள் மற்றும் உறவுகள்  பேசிக்கொண்டே “எல்லாவற்றையும் பேசி முடிவு பண்ணிடலாமா”என்று கேட்டனர்.

அதே நேரம் வீட்டு வாசலில் இரண்டு மூன்று கார்களும்., சில பைக்குகளும் வந்து நிற்கும் சத்தம் கேட்க.,  விருந்தினர் தான் வருகிறார்கள் என்று மட்டும் எண்ணிக் கொண்டு வீட்டினர் இருக்க..,  சித்தப்பா பையன் மட்டும் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்…  வந்தவர்கள் நேராக வீட்டிற்குள் வந்தனர். அதில் முன்னே வந்த இளம் வயது பையன் திவ்யா என்று சத்தமாக கத்தி அழைத்தான். வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லோரும் “யார் இந்தப் பையன்., நம்ம வீட்டு பொண்ண  பெயரை சொல்லிக் கத்தி கூப்பிடுறானே” என்று கேட்டார்கள்.

“அத உங்க வீட்டு பொண்ணு கிட்ட கேளுங்க” என்றான் பதிலுக்கு…

ஜெ. கே யின் பாட்டி., அவசரமாக “கார்த்தி யப்போ என்ன ன்னு கேளுயா.,  நீ பேசுனா தான் சரியா இருக்கும்” என்று சொன்னார். அவன் அவரை முறைத்தபடி தன்னிடத்தில் அமர்ந்து கொண்டான்.

ஹாலில்  காத்திருந்தவன் மறுபடியும்  திவ்யா என்று சத்தமாக அழைக்க.,  அறைக்குள் இருந்து வெளியே வந்த திவ்யா அவனை பார்த்தவுடன் திருதிருவென முழித்தாள்., அது மட்டுமல்லாமல் யாரையும் கண்டு பயப்படாதவள்., முதல் முறையாக அவளிடம் ஒரு பயம் தெரிந்தது அதை வீட்டிலுள்ளவர்கள் கண்டுகொண்டனர்..

அசிங்கமா இல்ல ஏற்கனவே என்னைய ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு.,  வீட்டுல டூர் ன்னு பொய் சொல்லி என் கூட ஒருவாரம் சுத்திட்டு., இப்போ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறியா”.,என்று கேட்கவும் வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சியாகி முழித்தனர்….

கோபமாக திவ்யாவின் அருகில் வந்த சீதா., “திவ்யா என்ன இது” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டார்…

அவளோ பயந்தபடி “அம்மா அது வந்து.,  அம்மா அது வந்து., என்று தயங்கவும்., தாய் அறியாத சூலா., இவள் ஏதோ தவறு செய்திருக்கிறாள்  என்பதை அறிந்து கொண்ட சீதா அத்தனை பேர் முன்னிலையில் அடிக்க.,  அப்போது பாட்டி தான் வந்து அவசரமாக திவ்யாவை பிடித்தாள்.,

“சீதா பிள்ள மேல கையை வைக்காத.,  என்ன ஏதுன்னு விசாரிக்காம அடிப்பியா.,  யாரும் எதுவும் சொன்னா அப்படியே நம்பியிருவியா., முதல்ல  பிள்ளைய  நம்பு” என்று சொன்னார்.

சீதாவும் “அம்மா நீங்க பேசாம இருங்க.,  எல்லாம் நீங்களும் அப்பாவும்., வீட்டுல எல்லாரும் செல்லம் கொடுத்தது தான் கெடுத்து வைச்சிருக்கோம்.,  நானும் வளர்க்கத் தெரியாமல் வளர்த்துட்டேன்.,  இப்போது புலம்பி., பரிதவித்து பயன் கிடையாது., எனக்கு தோணுச்சு நான் இவ்வளவு நாள் வளர்த்த விதம் சரியில்லைன்னு.., அப்ப பிடிச்சு என் மனசுல தோணுது நான் தப்பு பண்ணிட்டேன் ன்னு.,   என் மனசு கிடந்து தவிச்சிட்டு  இருந்துச்சு.,  அது எவ்வளவு சரின்னு இப்போ புரிஞ்சிருக்குமா எனக்கு”.., என்று அழுதபடியே சொன்னார்.

அதேநேரம் அங்கு வந்த திவ்யாவின் தந்தை சந்திரன்., சீதாவை பிடித்துக் கொண்டு “நேத்து நாம பேசுனது சரிதான்.,  இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து விட்டோம்., தப்பு பண்ணிட்டோம், இப்போ வருத்தப்பட்டு பிரயோஜனம் கிடையாது., பண்ண தப்பா சரி பண்றதுக்கான வழியை பார்ப்போம்”.,  என்று சொன்னார்.

அதுவரை வெளியே வந்தவர்களை கவனித்துக் கொண்டு,  சமையல் செய்யும் இடத்தில் இருந்து காபி, டீ என வாங்கி வந்து வந்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்த ராஜா சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்தவன்., நடந்த விஷயங்களை கிரகித்துக் கொள்ள முடியாமல் அருகில் நின்ற திவ்யாவை பிடித்து வேகமாக அடித்து விட்டான்.,  அத்தனை பேரும் பதற  “சீ நீயெல்லாம் பொண்ணா.,   குடும்பத்து பெயரை எப்படி கெடுத்து வச்சிருக்கே.,  காலேஜுக்கு படிக்க அனுப்பினா, என்ன காரியம் பண்ணி வச்சிட்டு வந்து இருக்க.,  உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா,  அவனை  ரிஜிஸ்டர் ஆபீஸ் ல கல்யாணம் பண்ணும் போது பயப்படல., வீட்டில்  டூர் ன்னு பொய் சொல்லிட்டு சுத்த போயிருக்க.,  அப்பவும் உனக்கு பயம் வரல., அப்ப நீ எவ்வளவு நெஞ்சழுத்தம் பிடிச்ச பொண்ணு.,  இப்ப நினைச்சுப் பார்க்கவே அசிங்கமா இருக்கு”., என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள்.,

‘நல்ல வேளை இப்பவாவது தெரிஞ்சதே.,  எல்லாம் நன்மைக்கே’ என்ற எண்ணத்தோடு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது விசாலாட்சியும் ஜெ.கே யும் மட்டும்தான்…

முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருக்கவும்., திவ்யா அந்த சூழ்நிலையிலும் எதிர்த்துப் பேசினாள்., வந்தவனிடம் “உனக்கு என்ன தகுதி இருக்கு ன்னு., இப்ப இங்க வந்து நிக்கிற.,  வெளியே போ பாலா” என்று சத்தமாகக் கத்தினாள்.

“ஏன் எனக்கு தகுதி இருக்கா இல்லையான்னு., என் கூட சேர்ந்து சுத்தும் போது தெரியலையோ.,  லவ் பண்றேன்னு சொல்லி முதலில் வந்து என்கிட்ட சொன்னது நீ தான்.,  நான் உன்கிட்ட வந்து சொல்லல சரி தானே.,  சரி நீயே வந்து லவ் பண்றேன்னு சொன்ன.,  எனக்கும் புடிச்சிருந்துச்சு சரின்னு சொன்னேன்.,  அதுக்கு அப்புறம் நான் என்ன சொன்னேன்.,   எனக்கு வேலை கிடைச்சப்புறம்  முறைப்படி பொண்ணு கேட்டு வரேன்னு சொன்னேன்.,  நீ தான் சொன்னே இல்ல படிப்பு முடியும் போது.,  உடனே என்னைய கல்யாணம் பண்ணிக்கோ ன்னு.,  சொன்ன,  எங்க அப்பாவோட பிசினஸை பார்க்க முடியாது.,  வேலைக்கு போகணும் அப்படின்னு சொன்னதுக்கு..,  நீ வேலைக்கு போ அதுக்கு அப்புறமா ஒரு வேலையில் செட்டில் ஆனதுக்கப்புறம் வந்து என்னை கூப்பிட்டு போ  சொன்ன அப்படி தானே.,  அப்பவும் யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு போ ன்னு., நீ தானே அடம் பிடிச்ச.,  எனக்கு வேலை கிடைச்சி  ஆறு மாசம் தான் ஆகுது., நான் இன்னும் முழுசா செட்டில் ஆகலை இல்ல.,  அதுக்குள்ள நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடியாயிட்ட., இதுக்கிடையில ஒரு  தடவை கூட நீ எனக்கு போன் பண்ணல., நான் போன் பண்ணும் போதெல்லாம் ஏதாவது வேலை இருக்கிறதா சொல்லி போனை கட் பண்ணிட்டு தான் இருந்த.,  சரி இப்போ சொல்லு கல்யாணம் பேசி எத்தனை மாசம் ஆச்சு.,  இதற்கிடையில் என் கிட்ட சொல்லனும்னு தோணல இல்ல..,  அப்ப என்னைய ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு.,   ஊர் சுத்திட்டு வந்தாச்சு.,  இப்ப மாமா பையனா இரண்டாவது புருஷனாக போறியா”.., என்று கேட்டான்.

அதுவரை அமைதியாக இருந்த விசாலாட்சி “தம்பி இங்க பாரு., உனக்கு அவளுக்கும் பிரச்சினை னா., உன்னோட  நிறுத்திக்கணும் என் பிள்ளைய இப்படி  பேசக்கூடாது.., என் புள்ளைக்கு பொண்டாட்டியாக அவளுக்கு தகுதி கிடையாது.., எங்க மாமியார் மாமனார்.,  என் புருஷன்.., புருஷன் கூட பிறந்தவங்க எல்லாரும் சேர்ந்து பேசினாங்க.,  நானும் வாயை மூடிட்டு இத்தன நாளா சும்மா இருந்தேன்., என் பிள்ளைக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமே கிடையாது.,  அவனும் குடும்பத்துக்காக பொறுமையாய் இருந்தான்.. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் குடும்பத்துக்கு மருமகளா ஏத்துக்கணும் எனக்கு அவசியமே கிடையாது சரியா.,   என் பிள்ளைக்கு பொண்ணு பார்த்து நான் கட்டி வச்சுக்குவேன்”.,  என்று சொன்னார்.

பாட்டி சும்மா இருக்காமல் “விசாலாட்சி என்ன பேச்சு பேசுற” என்று கேட்டார்.

” நீங்க வாய மூடிட்டு சும்மா இருங்க.,  அத்த,  இவ்வளவு நாள் நான் உங்களுக்கு வயசுக்கும்., மாமியார் என்பதுக்கும் தான் மரியாதை கொடுத்தேன்.,  இனி என் பிள்ளை வாழ்க்கை பற்றி நீங்க பேச வேண்டிய அவசியம் இல்லை”.., என்றபடி கையை நீட்டி, விரலை ஆட்டி ஆட்டி பேசவும்., அத்தனை பேருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

ஏன் என்றால் விசாலாட்சி அனைவருக்கும் அவ்வளவு மரியாதை கொடுப்பவர் ஆனால் இன்று அத்தனை பேர் முன்னிலையிலும் மாமியாரை எடுத்தெறிந்து பேசுவது அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்த ஜெ. கே விசாலாட்சியை தோள் பற்றிய படி “அவங்க என்ன வேணாலும் பண்ணிட்டு போகட்டும்,  ரொம்ப நல்லது ன்னு., நினைச்சுக்கோங்க,  கடவுள் நம்மளை காப்பாத்திட்டான் ன்னு நினைத்து சந்தோஷப்பட்டுக் கோங்க.,  வாங்க நாம போகலாம்”.., என்று சொன்னான்…

அதேநேரம் பழனிவேல் தாத்தாவும்., பாட்டியும் ஜெ. கே யிடம் வந்து “எப்பா கார்த்தி கொஞ்சம் பேசுப்பா”.,  என்று சொன்னார்கள்.

“என்ன பேசுறீங்க., இதுல  பேசுறதுக்கு என்ன இருக்கு.., அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு., கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுதுன்னு கேளுங்க.,  என்று சொன்னான்.

Advertisement