Advertisement

திவ்யாவின் கணவனாக வந்து நிற்கும் பாலாவோ  “ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது” என்று சொன்னான். அதுவரை திவ்யாவின் அப்பாவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதா அவரை தள்ளிக் கொண்டு வந்து திவ்யாவை மீண்டும் அடிக்கத் தொடங்கினார்..,

அப்போது ராஜா தான் வந்து.,  “இப்படிப்பட்ட பொண்ணு பெத்ததுக்கு தல குனிஞ்சு தான் நிக்கணும்”., என்றான்.

அங்கு வீட்டில் பெரிய களேபரம் நடந்து கொண்டிருந்தது.., அதற்குள் பாலாவுடன் வந்திருந்த  அவர்களின் பெற்றோர்.,  “தப்பா எடுத்துக்காதீங்க., எங்க பையனும் இப்பதான் விஷயத்தை சொன்னான்., தப்பு இரண்டு பேர் மேலும் தானே இருக்கு..,  என் பையன் மேல கா வாசி   தப்பு னா..,  உங்க பொண்ணு மேல முக்காவாசி தப்பு இருக்கு..,  ஒரு பொம்பள புள்ளையா இருந்துட்டு இவ்வளவு தைரியமா இந்தமாதிரி காரியங்கள் எல்லாம் செய்யுறது பெரிய தப்பு தான்., அதனால இப்போ நீங்க தான் முடிவு சொல்லணும்.,  நீங்க சரின்னு சொன்னா..,  நாங்க பொண்ண கூட்டிட்டு போறோம் அவ்வளவு தான்., அவங்க தான் ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டாங்க.., இன்னும் என்னத்த கல்யாணம் பண்ண., அதுக்கப்புறம் சொந்த பந்தத்தை கூப்பிட்டு ஒரு விருந்து மாதிரி வேணா வைத்து விடலாம்”..,  என்று பாலாவின் பெற்றோர் சொன்னார்கள்.

தெய்வானை பாட்டி “அதெல்லாம் முடியவே முடியாது., ஒத்துக்கவே முடியாது” என்று சொன்னார்.

அவர் அழத் தொடங்க அனைவரும் சத்தம் போட்டு நிறுத்தினார்கள்., சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து அவளை பாலாவோடு அவர்கள் வீட்டினரோடு அனுப்புவது தான் சரி என்று பேசினார்கள்..

அத்தனை அடி வாங்கிய பின்பும் அவள்  பாலாவிடம் எதிர்த்துதான் பேசினாள்… “நீ என்ன லட்சணத்தில் சம்பாதிக்க என்னைய வந்து இவ்வளவு தைரியமாக கூப்பிட வந்து இருக்க..,  உன் சம்பாத்தியம் எல்லாம் எனக்கு பத்தாது., உன் கூட என்னால வாழ முடியாது.,  டைவர்ஸ் பண்ணி விடலாம்” என்று வாய்கூசாமல் பேசினாள்.

பாலாவோ  “கொன்னுருவேன்.,  ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பி வா..,  நீ தானே அடம் பிடிச்சு கல்யாணம் பண்ணுன.,  நானா உன்ன அடம்பிடிச்சு கல்யாணம் பண்ணினேன்., வரனும் னா வா..,  இல்ல உங்க வீட்ல இருக்க னா.,  இருந்துக்கோ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..,  போயிட்டே இருப்பேன்”.., என்று சொன்னான்.

வீட்டில் உள்ளவர்களும் வந்திருந்தவர்களும் “தம்பி நில்லுங்க போகாதீங்க” என்று பேச தொடங்கினார்கள்.

“ஆமா தம்பி., உனக்கு எப்படி தெரியும்” என்று அவனிடம் கேட்டார்கள்.,

ஜெ.கே யின் சித்தப்பா மகன் முன் வந்து நின்றான்., நான் தான்  சொன்னேன்.,  திவ்யா ட்ட., எத்தனையோ தடவை எடுத்துச் சொன்னேன்., ‘உனக்கு கல்யாணமாயிட்டு ன்னு., எத்தனையோ தடவை  அவ கிட்ட  இந்த கல்யாணத்த நிப்பாட்டு ன்னு சொன்னேன்…, சொன்ன பேச்சு கேட்கல அதனால தான்.,  நான் பாலாவுக்கு போன் பண்ணி வர சொன்னேன்.., என்று சொன்னான்.

சித்தப்பா எழுந்து வந்து அவனை வேகமாக ஓங்கி அறைந்தார்., ஏண்டா அவளுக்கு   கல்யாணம் ஆகி இருக்குன்னு.,  உனக்கு முதல்லே தெரிஞ்சிருக்கு இல்ல..,  அப்ப நம்ம வீட்ல கல்யாணம் பேசும் போது நீ சொல்லி இருக்கணும் இல்லையா.., இப்ப நாளைக்கு கல்யாணம் ன்னு  இருக்குற நிலைமையில..,  இன்னைக்கு கல்யாணத்தை  நிறுத்தினா..,  நம்ம வீட்ல  அத்தனை சொந்த பந்தத்தையும் பத்திரிக்கை வைத்து அழைத்து இருக்கு..,  நம்ம வீட்டு முதல் கல்யாணம்னு ஊரையே கூட்டி.,   இருக்கும்  போது நீ இப்படி பண்ணிட்டியே டா”.., என்று சொன்னார்.

அவனை மறுபடியும் அடித்து விட அவனும் “நல்ல அடிங்கப்பா, தப்பு என் மேலதான் இவ கல்யாணமான விஷயம் தெரிஞ்ச அன்னைக்கே நான் சொல்லிக் கொடுத்து இருக்கணும்.., சொல்லாமல் விட்டது  என் தப்பு தான்.,  கல்யாணம் பண்ணிட்டு டூர் ன்னு சொல்லி  பாலா கூட ஊர் சுத்திட்டு வந்த அன்னைக்கு தான் எனக்கு விஷயம் தெரியும்.., அன்னைக்கு நான் சொல்லியிருந்தா  என்ன ஆகும்.., அவ படிப்பு போயிருக்கும்., அவனுக்கும் படிப்பு போயிருக்கும்., வேலை இல்லாம அவனும் கஷ்டப்பட்டு இருப்பாங்க., நான் சொல்லணும் தான் நினைச்சேன்.,  அப்போது  திவ்யா தான் வந்து.,  ‘இல்லடா அவனுக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் வீட்டில் சொல்லாத’ ன்னு  கெஞ்சினா.,  என் கிட்ட  வேலை கிடைச்ச அவ வீட்டில் சொல்லியிருவா  ன்னு நான் வெயிட் பண்ணினேன்..,  ஆனால் வேலை கிடைத்த அப்புறமும் வீட்ல சொல்லல.., அப்பவும் நான் கேட்டேன்., ஏன் சொல்ல மாட்டேங்குற சொல்லு அப்படின்னு.,  ‘இல்ல கண்டிப்பா சொல்லிடுவேன்.,  இப்போ சொல்லாத அவன் கொஞ்சம் லைஃப்ல செட்டில் ஆகட்டும்’ அப்படின்னு சொன்னா.., நானும்  அதுக்கப்புறம் சொல்லுவா ன்னு எதிர்பார்த்தேன்.,  கடைசில பார்த்தா எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும் னு நினைக்கிறா.,  அப்புறம் எப்படி நான் விடுவேன்.,  அதனால தான் பாலா நம்பருக்கு போன் பண்ணி சொன்னேன்” என்று சொல்லி திவ்யாவின் மேல் இருந்த தவறுகளை சுட்டிக் காட்டினான்.

திவ்யாவுக்கு தான் செய்த தவறு பெரிது என தெரியாமல் அதை சொல்லிக் கொடுத்த அவள் சின்ன மாமாவின் மகன் மேல் கோபம் வந்தது.,  “இந்த வேலையெல்லாம்  பார்த்தது நீ தானா.,  உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்” என்று கேட்டாள்.

“உன்ன விட அதிகமாக இருக்கும்.,  ஏன்னா நான் நல்லபடியா வளர்ந்திருக்கேனே.,  அந்தத் திமிர் இருக்கதான் செய்யும்..,  உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா.., எங்க வீட்டுக்கு மருமகளா வரணும் னு நினைப்ப.., அதுவும்  ஒருத்தன ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு..,  எங்க வீட்டுக்கு மருமகளா வரணுமா.,   அது மட்டும் ஜென்மத்துல நடக்காது.., என்று சொன்னான்.

“எங்க அண்ணன் முகத்தை பார்த்து கண்டுபிடிக்க கூட தெரியாத அளவுக்கு நாங்கல்லாம் இருக்கோம் ன்னு நினைச்சியா..,  எங்களுக்கு அன்னைக்கே தெரியும்., எங்க அண்ணனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு., சரி உன் கிட்ட சொல்ற விதமா சொல்லி கல்யாணத்தை நிறுத்தி வைக்கலாம் னா.,  நீ ஓவரா போன அதனால தான்  போன் பண்ணி சொன்னேன்”.,  என்று சொன்னான். அவன் தரப்பு நியாயத்தைச் சொல்லி விட்டு அவன் ஒதுங்கிக்கொள்ள அதன் பிறகு பாலா வீட்டினரோடு மற்றவர்கள் பேசத்தொடங்கினார்கள்.

சொந்தத்தில் வேறு யாராவது பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கலாமா என்ற பேச்சு தொடங்கியது..,  ஜெ .கே விசாலாட்சியிடம் “அம்மா தயவுசெய்து இப்ப கல்யாணம் வேணாம்னு சொல்லுங்க.., வேற யாரும் இந்த மண்டபத்தில் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்த பண்ணட்டும்., செலவெல்லாம் நம்மளோட தா  இருந்துட்டு  போகட்டும்”., என்று சொன்னான்.,  பணம் ஒரு பிரச்சனை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க…

சொந்தத்தில் ஒருவர் “தம்பி பணம் காரணம் இல்லை., நமக்கு கல்யாணத்துக்கு செலவு பண்ண பணம்  பெரிய விஷயம் கிடையாது., தம்பி உனக்கு இந்த ஊர்ல ஒரு மரியாதை இருக்கு..,  நாளைக்கு கல்யாணம் நின்னுருச்சி என்று சொன்னால்., ஏன் எதுக்குனு ஆயிரத்தெட்டு பேச்சு வரும்., அந்த பேச்சு வரக்கூடாது.,  அதனால நல்லபடியா நாளைக்கு அதே முகூர்த்தத்தில் உனக்கு கல்யாணம் நடக்கணும்.,  சொல்லுங்க உங்க சொந்தத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கு.., எந்த பொண்ணு பிடிச்சிருக்கோ  சொல்லுங்க பேசி முடித்துவிடுவோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்…..

அதே நேரம் வெளியில் கார் சரியாக வீட்டின் முன் பக்கமாக வந்து நிற்க., தாத்தாவிடம் “தாத்தா நீங்க இறங்கிக்கோங்க.,  அந்தப் பக்கமா சுத்தி கொண்டு போய் தோட்டத்தில பாட்டி வீட்டு பக்கம் காரை விட்டுவிட்டு நிக்கிறேன்.., கொஞ்ச நேரத்துல வர்றேன்., நிறைய கூட்டமா இருக்கு தாத்தா., நீங்க இறங்குங்க”, என்று சொன்னாள்.

தாத்தா கோயில்  இலைப் பிரசாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இறங்கினார். “நீ வா” என்று சொல்ல “வந்துருவேன் தாத்தா., அந்தப்பக்கம் விட்டுட்டு வர்றேன்., இந்த பக்கம் கூட்டமா இருக்கு., இந்த வாசல் வழியாக போக முடியாது, அந்த பக்கம் வாசல் இருக்குல்ல , அந்த வாசல் வழியா போய் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்”.,  என்று சொன்னாள்.

தாத்தா பிரசாதத்தை எடுத்துக் கொண்டவர்., அவளுடைய செல்போனையும் தன் கையில் எடுத்துக் கொண்டார். இல்லை எனில் செல்லை வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள்.,  இல்லையெனில் யாருக்காவது  போனில் பேசிக் கொண்டிருப்பாள்., என்ற எண்ணத் தோடு தான்…..

அதற்குள் பாலா வீட்டினரோடு பேச்சுவார்த்தை நடத்த  வந்துவிட்டனர்.,  “அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவளை அழைத்துக் கொண்டு செல்லுங்கள்”., என்று பெரியவர்கள் பேசி முடித்துக் கொண்டனர்.

அவள் மூஞ்சி தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்., அனைவரும் பிடித்து சத்தம் போட்டு அவளுக்கு அறிவுரை சொல்லி.., விருப்பப்பட்டு தான கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் என்ன போ.., என்று சொன்னார்கள்.

“ரெஜிஸ்டர் மேரேஜ் மட்டுமே நடந்திருந்த காரணத்தினால், மறுநாள் காலை கோயிலில் வைத்து திருமணத்தை முடித்து அழைத்துச்செல்லுங்கள்” என்று திவ்யாவின் அப்பா சொன்னார்.,

அதற்கு அவர்களும் சரி என்று சொல்ல அவர்களோடு வந்த சொந்த பந்தங்களும் சரி என்க.,  அவர்களுக்குள் பேசி முடிக்க அங்கு அனைவரும் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர்.

அப்போதுதான்  “சொந்தத்தில் ஒருவர்  கண்டிப்பாக நாளை காலை ஜெ.கே க்கு திருமணம் நடக்க வேண்டும்” என்று சொன்னார்.

விசாலாட்சி  “எனக்கும் ஆசைதான் ஆனால் என் பிள்ளைக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு வேணுமே” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.,

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே தாத்தா கோயில் பிரசாதத்தோடு உள்ளே வர.., அதுவரை அமைதியாக இருந்த பாட்டி எட்டி பார்த்து “அவள் எங்கே” என்று கேட்டார்.

“காரை விட்டுட்டு வருவா”என்று தாத்தா சொன்னார். அங்கு அவ்வளவு கூட்டத்தைப் பார்த்தவுடன் நிச்சயதார்த்த வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என்று, அங்குள்ள விபரம் எதுவும் தெரியாமல் நிச்சயதார்த்த  நேரத்தில் சரியா வந்துட்டேனா என்று தாத்தா கேட்டார்…

Advertisement