Advertisement

5

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே
என்று மானமுள்ள மனிதனுக்கு
ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது

கடைசியாக கேட்ட பாடல் வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும் இளையராஜா பாடலில் மனம் புதைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அவள் கேட்டுக்கொண்டிருந்த மெலோடி பாடலுக்கு ஏற்றவாறு கைத்தாளம் போட்டாலும்.., கண் பார்வை பாதையில் இருந்தாலும்., சில விஷயங்களை அசைபோட்டபடியே காரை ஒட்டிக்கொண்டு இருந்தாள்.

யோசனையோடு இருந்ததால் அமைதியாக இருந்தாள். “மெலோடி பாட்டு கேட்டுக்கிட்டு.,  நீ தூங்கி விடாதே” என்று கிண்டல் செய்து கொண்டு பின் பக்கம் அமர்ந்திருந்தார் தாத்தா.

சற்று நேரத்தில்  அவரது குறட்டை சத்தம் கேட்க., பாட்டியோ.,  “உன்ன தூங்காத ன்னு சொல்லிட்டு., அவரு குறட்டை விட்டுட்டு  இருக்காரு”..,  என்று சொல்லி அவள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்தார்.,

பாட்டியும் பேத்தியும் முன்பு இருந்த சொந்தங்கள் நிலை பற்றியும்., இப்போது உள்ள சொந்தங்கள் நிலை பற்றியும்.,   பேசிக்கொண்டே வந்தனர்..

‘கடைசியாக அங்கிருந்து கிளம்பும் அன்று பெரியப்பா வீட்டிற்கு கூட செல்லவில்லை.,  கேட்டதற்கு கையில் அடிபட்டது வலி காய்ச்சல்’ என்று காரணம் சொல்லி கொண்டு அமைதியாக கிளம்பிவிட்டாள்.  பெரியப்பாவும் பெரியம்மாவும் தான் வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.

அவளுக்கு வருத்தம் எல்லாம் என்னவென்றால்  மாமா வீட்டிற்கு வரக்கூடாது என்று சொன்னவள்.,  அவள் வீட்டிற்கு சென்றால் ஏதும் பேசி விடுவாளோ என்ற எண்ணத்தில் தான் போகாமல் இருந்தது.., அதை தான் இப்போது அந்த பாடல் வரிகள் உறுத்தியது அவளுக்கு..,  உரிமை உள்ள இடம் தனக்கு வேண்டாம் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தாள்.

இப்பொழுதும் அப்பாவின்., அம்மாவும் அப்பாவும் தனியாக தான் அங்கே இருக்கிறார்கள்., பெரியப்பா வீட்டிற்கு அருகிலேயே தோட்டத்திற்குள் அது இவள் அப்பாவிற்கான வீடு., எனவே அங்கு செல்வதில் எந்த தயக்கமும் இல்லை என்பதால் தான்  செல்கிறாள்.

‘எந்த சூழ்நிலையிலும் பெரியம்மாவின் வீட்டிற்கும்., திவ்யாவின் மாமா வீட்டிற்கும் செல்ல கூடாது என்ற முடிவோடு தான் கிளம்பி இருக்கிறாள்.  நிச்சயதார்த்தம் பெரியப்பா வீட்டில் நடந்து முடிந்தாலும்.,  அங்கு போகாமல் எப்படியும் சம்மாளித்து விடலாம்.., யாரும் பெரிய விஷயமாக சொல்லப்போவதில்லை..,  ஆனால் திருமணம்  கோயிலில் வைத்து தான்  நடக்கும்.., பிறகு வரவேற்பு எல்லாம் மண்டபத்தில் வைத்து தான்., எனவே போய்விட்டு தலையைக் காட்டி விட்டு கலந்து கொண்டோம் என்ற பெயருக்கு கலந்து கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு அதிகம் இருந்துகொண்டே இருந்தது..,  அதை யாரிடமும் எதுவும் சொல்லவில்லை அங்கு சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று அமைதியாக இருந்துவிட்டாள்…

நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை
தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்..

அதோடு சேர்ந்து பாட்டு பாடியபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏனோ மனது கொஞ்சம் கொஞ்சமாக சமன் படுவது போல தோன்றியது.., ஏனெனில் காரில் ஓடிய பாடல் அனைத்தும் அவளுக்கு மிகவும் பிடித்தமான தாகவே இருந்தது…

அப்போது  தான் தாத்தாவும் பாட்டியும் அவளிடம் நேரடியாக திருமணத்தை பற்றி பேசத் தொடங்கினார்கள்…

“சரண் அடுத்து உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கட்டுமா., டா..,  எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் ன்னு சொன்னா நாங்க அதுக்கு தகுந்தாற்போல் வெளியே சொல்லி வைப்போம்” என்று சொன்னார்.

கவனம் முழுவதும் ரோட்டில் வைத்தபடி சாதாரணமாகவே பதில் சொன்னாள். “எனக்கு அந்த மாதிரி பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் எதுவும் இல்லை தாத்தா..,  நீங்க பாருங்க.,  உங்க எல்லாருக்கும் தெரியும் இல்ல.,  எப்படி இருந்தா நல்லா இருக்கும் னு., அந்த மாதிரி பாருங்க, ஒன்னும் பிரச்சனை இல்ல”.,  என்று சொன்னவள் மேற்கொண்டு திருமணத்தைப் பற்றி வேறு எதுவும் பேசாமல் கொடைக்கானலில் உள்ள பழத் தோட்டத்தைப் பற்றியும்.,  அவர்களிடம் எப்போதும் பழம் பதப்படுத்துபவர்கள்  வாங்கும் விலையை விட சற்று கூட வைத்து சொல்லவேண்டும் என்று பேசிக் கொண்டே போனாள்.

தாத்தா தான் “ஏன்மா எப்பவும் கொடுக்கிறவங்களுக்கு தானே கொடுக்கிறோம்.,  அதே விலைக்கு கொடுத்து விடுவோமே” என்று சொன்னார்.

” இல்ல தாத்தா.,  நம்ம தோட்டத்து பழத்தில்  தரம்  நல்லா இருக்கு.., எனக்கு தெரிஞ்சி நல்ல தரமான பழமாகவும், அதே நேரத்தில விளைச்சல் அருமையா இருக்கு.,  அப்படி இருக்கும்போது நம்ம எதுக்கு மத்தவங்க மாதிரி குறைஞ்ச விலையில கொடுக்கனும்., முதல் தரமான பழத்தால் நல்ல விலையிலேயே கொடுக்கலாமே.,  அவங்க அதைவிட பலமடங்கு வச்சித்தான் விக்கிறாங்க. யோசிச்சு கொடுக்கலாம்” என்று சொன்னாள்.

“சரிமா பார்க்கலாம்”என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஊருக்கு போனப்பிறகு., டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று சொல்ல “சரி” என்று ஏற்றுக் கொண்டாள்….

மாலை நெருங்கும் நேரத்தில் கார் தென்காசி.,  குற்றாலம், தாண்டிய பாதையில் செங்கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது., இடையில் ஒருமுறை தாத்தாவை சிறிது நேரம் ஓட்ட விட்டு.,  பின்பு இப்போது அவள் தான் கார் ஓட்டிக் கொண்டு வருகிறாள்.,  ஊர் அருகே வரவும் பாட்டி பேசத்தொடங்கினார்.

“சரண்யா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.,  உங்க தாத்தா உன் அம்மாவ  இந்த ஊர்ல பொண்ணு கேட்ட உடனே சரின்னு சம்மதிச்சிடாரு., எனக்கு அப்ப விஷயம் தெரியாது.,  அதுக்கு அப்புறம் தான்., உங்க பெரிய தாத்தா சொன்னாரு,  உங்க தாத்தாக்கு  இந்த ஊரில் தான் முதலில் பொண்ணு பார்த்தாங்களாம்.,  சரியா பொண்ணு அமையலையாம்., உங்க தாத்தா ஊரை ரொம்ப பிடிக்கும் போல.,  அதனால தான் மகளை கேட்டவுடன் சரி ன்னு உடனே சம்மதித்தார் போல”., என்று தாத்தாவை பார்த்து பேசினார்.

தாத்தாவோ “ஆமா பின்ன உங்க ஊர் மாதிரி காஞ்சக்காட்டுல கல்யாணம் பண்ணிட்டேனே., இந்த மாதிரி செழிப்பான ஊர்ல கல்யாணம் பண்ணனும்னு நெனச்சேன்.., விதி  என்னைய உங்க ஊர் பக்கம் திருப்பி விட்டுருச்சி” என்றார்.

“திருச்சி  காவிரி பாயும்  ஊரு., உங்க திண்டுக்கல் மாதிரி நினைச்சேங்களா”.., என்று பாட்டி அவர் ஊரான திருச்சியைப் பற்றி பேச தொடங்கினார்.

அவர் சிரித்துக் கொண்டாள்.  அடிக்கடி இருவருக்கும் ஊர் சண்டை வரும்., திண்டுக்கல் பெருசா.,  திருச்சி பெருசா., என்று., ஆனால் இன்று செங்கோட்டைக்கு சாதகமாக தாத்தா பேச திருச்சியை குறைத்து  பேசியதாக  பாட்டி  பேச அவர்கள் பேச்சு சுவாரஸ்யம் இவளுக்கு மிகவும் சிரிப்பாக தான் இருந்தது.

“பாட்டி அப்படியெல்லாம் இருக்காது பாட்டி”.,  என்று வேண்டுமென்றே தாத்தாவை மாட்டி விட வேண்டும் என்றே.,  அம்மாவ  கேட்ட உடனே எதுக்கு கொடுத்திருப்பாங்க தெரியுமா.,  திருப்பி இந்த ஊருக்கு வந்தா, அந்த பொண்ண எங்காவது பார்க்க முடியுமா என்கிற எண்ணம் தான் வேற என்ன” என்று சொன்னாள்.

பாட்டியோ “பாத்தியா.,  இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு நான் யோசிக்கவே இல்லை..,  யாரு அந்த பொண்ணு., எனக்கு காமிச்சு தாங்க” என்று கேட்டார்.

தாத்தாவோ “அவ எந்த ஊர்ல இருக்கா ன்னு., யாருக்கு தெரியும். என்கிட்ட இப்ப வந்து கேட்க..,  எனக்கு ஊருல இருக்கும்  அருவி.., நல்ல மலை காடு எல்லாம்  ரொம்ப பிடிக்கும்.., அதனால தான் கொடைக்கானல் எஸ்டேட் வாங்குனது., தோட்டம் வாங்கி., ரிசார்ட் எல்லாம் போட்டது காரணமே அது தான்.,  அந்த மாதிரி ஒரு  காரணத்துக்காக  பிடிக்கும்..,  நீ சும்மா இரு சரண்.,  உங்க ஆச்சி இதை வச்சு இன்னும் பத்து நாளைக்கு பேசுவா”., என்று பாட்டியிடம் பேச்சைத் தொடங்கி பேத்தியிடம் முடித்தார்.

சிரித்தபடி பேசிக் கொண்டே வர அவர்களது கதை இவளுக்கு சுவாரசியமாக இருந்தது…

சரியாக அவர்களின் ஊர் அருகே வந்து வண்டியை திருப்பவும்.,  அவள் அறியாமல் அவள் மனது படபடத்தது.  வரும் வழியிலேயே ஜெ கே யின் ஃபார்ம் ஹவுஸ் நேம்., மற்றைய தொழில் அனைத்தும் ஜெ.கே ஜெ.கே என்று இருக்க., அதை பார்க்கும் போது நிஜமாகவே அவளுக்குள் ஒருபுறம் மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள்..,  அதற்கு மேற்கொண்டு மற்றவற்றை யோசிக்க கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்…

ஊருக்குள் நுழைந்து சற்று நேரத்திற்கெல்லாம்  ஒரு தோட்டத்தின் அருகே சென்று கொண்டிருக்கும் போதே அது சரண்யாவின் ஒன்றுவிட்ட பெரியம்மா இடம்., அவளுக்கு நினைவு இருந்தாலும்  பார்த்துக்கொண்டே காரை ஓட்டி வந்தவள் அவர்கள் நிற்பதை பார்த்தவுடன் “நிறுத்தவா” என்று பாட்டியிடம் கேட்டாள்..,

பாட்டியும் “நிறுத்துமா.,  இறங்கி பேசிட்டே போவோம்” என்று சொன்னார்.

சரி என்று நிறுத்திவிட்டாள். பின்பு அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவளுடை அண்ணன்கள்  அசோக்கும்.,  கதிரும் அங்கிருந்த தோட்டத்திலிருக்க, பெரியம்மாவும் அழைத்துவிட்டார்., அதன்பிறகு அவர்களோடு பழைய நினைவுகளை பேசி சிரித்து கொண்டிருக்கும் போது.,

Advertisement