Advertisement

அசோக்கும் கதிரும் “எவ்வளவு நாளாச்சு மா., உன்ன பார்த்து, இப்ப தான் வரணும் தோணுச்சா.,  இவ்வளவு நாள் ஏன் வரல”.,  என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.,

அவர்களுக்கு இங்கு நடந்த விஷயம் தெரியும் ஆனாலும் அதைப்பற்றி காட்டிக்கொள்ளவில்லை. பெரியம்மா தான் பட்டு என்று கேட்டுவிட்டார்., “அவ சொன்னா அவள ஒரு மனுஷி ன்னு.,  அவ பேச்சை கேட்டு நீ வராமல் இருந்தியாக்கும்.,  இது யாரு ஊரு..,  உங்க அப்பா பிறந்த ஊர்.,  உனக்கு இந்த ஊர்ல எல்லா உரிமையும் இருக்கு.,  சரியா..,  அவங்க சொந்தக்காரங்க, மட்டும் தான் இருக்காங்களா., சொந்த பந்தம் இங்க  எத்தனை பேர் உனக்கு இருக்கோம்.., நீ எப்படி வராமலிருக்கலாம். என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே கதிருக்கு திருமணம் ஆகி இருந்ததால் கதிர் அவன் மனைவியை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தான். பெரியம்மாவும் “சரண்யா இது தான் உங்க மதினி பாத்துக்கோ.,  நீ தான் கல்யாணத்துக்கு வராமல் போய்ட்ட”., என்றார்.

சிரித்தபடி அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள். “நல்லா இருக்கீங்களா அண்ணி” என்று பேசத் தொடங்கியவள் அதன் பிறகு வெகு நாள் பழகியவள் போல சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கவும்.,   கதிரின் மனைவியாகிய வடிவுக்கும் இவளை மிகவும் பிடித்துவிட்டது..

பெரியவர்கள் சொந்தக்காரக் குடும்பங்களைப் பற்றியும்., மற்றவர்களைப் பற்றியும் அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டிருக்க., இவளது படிப்பு.,  இப்பொழுது என்ன செய்கிறாள் என்பதை பற்றி அசோக்கும் கதிரும் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.,

நாங்க எல்லாம் விவசாயத்தை படிக்காம பார்க்கோம்., நீ விவசாயத்தை படிச்சிட்டு பார்க்கயாக்கும் என்று கேட்டான்.

பெரியம்மாதான் இடையில் புகுந்து “உனக்கு படிப்பு ஏறலை ன்னு சொல்லு.,  அதை விட்டுட்டு என் புள்ளை படிச்சிட்டு வந்ததை பார்த்து படிச்சிட்டு வந்து பார்க்க ன்னு., கிண்டல் பண்ணாத” என்று சொன்னார்.

“அண்ணே இது விவசாயம் சார்ந்தது தான்., ஆனா இது தோட்டத்தை பற்றி படிக்கிறது”.,  என்று அதனுடைய விவரங்களை சொல்லி அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் சிறுவயதில் அவர்களோடு எப்படி அன்போடு இருந்தார்களோ., அந்த அளவிற்கு அன்பையும்., அவர்கள் பேசிக்கொண்டு  இருக்கும் போதே உணர்ந்தாள்.

அவர்களோடு கூட பிறந்த பெண் குழந்தை இல்லாத காரணத்தால் இவளை ஒன்றுவிட்ட சித்தப்பா மகள் என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள்., சொந்த தங்கையாக தான் அவள் வரும் போதெல்லாம் கவனிப்பார்கள்., திவ்யாவின் குணம் சரி கிடையாது என்பதால் திவ்யாவுடன் அதிகமாக உறவாட மாட்டார்கள்.,

திவ்யாவிடம் இவர்கள் சென்று பேசினாலும் அவள் முகத்தில் அடித்தது போல தான் பதில் பேசுவாள். அதனால் அவளோடு அதிகமாக இவர்கள் பேச்சு வைத்துக்கொள்வதில்லை.,  அதன் பிறகு நேரமும் ஆகியிருந்ததால் கிளம்புவோம் வீட்டிற்கு இன்னும் வரக்காணோம் என்று தேடுவார்கள்., என்ற படி  கிளம்ப தொடங்கினர்.

பெரியம்மா தான் பிடித்து வைத்து “டீ குடிச்சிட்டு தான் போகணும்” என்று சொல்லி விட்டார்., “மாட்டில் பால் கறக்கும் நேரம் தான் இருங்க” என்று சொன்னவர்.,

பால் கறந்து வந்தவுடன் சூடாக பாலைக் காய்ச்சி சரண்யாவுக்கு பால் ஆகவே  கொடுக்க.,  “ஐயோ பெரியம்மா நீங்க இன்னும் இந்த பழக்கத்தை விடலையா” என்று கேட்டாள்.

அவர் “எப்பவா  இருந்தால் என்ன., அதே என் புள்ள தான்., நீ பால் தான் குடிக்கணும்”என்று சொன்னார்.

அவள்  சிறுபிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே அங்கு வந்தால் எப்போதும் பெரியம்மா அவளுக்கு பால் தான் ஆத்திக் கொடுப்பார். கிராமப்புற வீடுகளைப் பொறுத்தவரை அனைவர் வீட்டிலும் மாடுகள் இருக்கும். இப்போது தான் அது குறைந்து விட்டது.  ஒரு சில வீடுகளில் மட்டும் இன்னும் வைத்து வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் அப்படி வளர்த்துக் கொண்டிருப்பவரில்  பெரியம்மாவும் ஒருவர்…..

டீ  குடித்துக் கொண்டிருக்கும் போதே பெரியவர்களோடு பெரியம்மா பேசிக்கொண்டிருந்தார். அவள் அமைதியாக அமர்ந்து சுத்தமான பால் ருசி அனுபவித்து குடித்துக் கொண்டிருக்கும் போது., ரத்னா தான் பெரியம்மாவிடம் “திவ்யாவுக்கும் கார்த்திக்குக்கும் கல்யாணம் பேசி முடித்திருக்கிறார்கள்., நீங்க கல்யாணத்துக்கு  பேசி முடிக்கும்போது போனீங்களா” என்று சாதாரணமாக பேச்சை தொடங்கினார்.

அசோக் தான் “நம்மள எல்லாம் கூப்பிட மாட்டாங்க… ஆச்சி.,  உங்களுக்கு விஷயம் தெரியாதா., அவங்க வீட்டுக்குள்ளே பேசி முடிச்சிட்டாங்க,  பாட்டி தாத்தாவின் கட்டாயத்தில் தான் கல்யாணம் நடக்குது.,  எனக்கு தெரிஞ்சு கார்த்தி மச்சானுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல.,  அத்தைக்கும் அப்படித்தான்.  வீட்டில் மத்தவங்களுக்கு இஷ்டமா.,  இஷ்டம் இல்லையா ன்னு தெரியல.., ஆனா யார் மூஞ்சிலேயும் ஒரு சுரத்தே இல்ல.., என்றான்.

பாட்டி தான் “அங்க  உன் சித்தியும் சித்தப்பாவும் எல்லாருக்கும் சந்தோஷம் ங்கிற மாதிரி சொன்னாங்க”., என்றார்.

” கார்த்தி மச்சான் கல்யாணம் பேசின நாளிலிருந்து வீடு தங்குவதே கிடையாது., எப்ப பார்த்தாலும் வேலை செய்யற இடத்துல தான்.,  இந்தா  ரெண்டு நாளைக்கு முன்னாடி துணி எடுக்கப் போறோம்.,  வான்னு கூப்பிட்டாங்க.,  நானும் அம்மாவும் தான் போனோம்.,  இதுக்கெல்லாம்  சொல்லல னா.,  பிரச்சினை ஆயிடும்னு கூப்பிட்டாங்க.,  சரின்னுட்டு போனோம்.., அங்க பாத்தா மச்சான் வரல  போல.., அத்தை ஒரு ஓரமா நின்னு கிட்டாங்க..,  சொன்னதுக்கு  அவங்களுக்கு பிடிச்சது அவங்க எடுத்துக்க வேண்டியது தான்.., அப்படி னாங்க., மச்சான எங்கே ன்னு கேட்ட  போது., அவன் வேலை இருக்கு ன்னு வரலை ன்னு சொல்லிட்டான்., ம்ம்ம்..,  அவன் எங்க வீட்ல இருக்கான்..,  வீட்ல இருந்தா தான் வரதுக்கு  அப்படின்னு சொன்னாங்க.., எனக்கு என்னமோ மச்சானுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லையோன்னு தோணுது.., எல்லாரும் கல்யாணம் பேசின பிறகு., ஜம்மு ன்னு ஆவாங்க ன்னு சொல்லுவாங்க.., புது மாப்பிள்ளையா லட்சணமா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க..,  எனக்கு தெரிந்து இந்த இருக்கானே கதிரு.,  இவனுக்கே மதனியை பேசி முடித்தவுடன் அப்படி ஆயிட்டான்., ஒரே சிரிப்புதான்.,  பேச்சு தான்.,  ஃபோன் பேசின வண்ணமா தான் இருந்துச்சு.., ஆனா அங்க மச்சான் முகமே மாறி.,  வாடி போயிட்டாரு,  அத்தைக்கும் ஒரு சிரிப்பு இல்ல.., எனக்கு தெரிஞ்சு சின்னத்தை.,  சின்ன மாமா.,  வீட்டிலேயும் எல்லாரும் பேசுகிறது என்னென்ன இதைத்தான் சொல்றாங்க..,  கார்த்தி மச்சானுக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லனு தான்., அத்தையோ  அவன் கிட்ட போய் கேளு.,  கல்யாணம் பேசி தேதி குறிச்சாச்சு.., என்கிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்க அப்படின்னு சொல்லி சொல்றாங்க..,  அத்தை பட்டும் படாமலும் எல்லாத்தையும் பேசுதாங்க.., நாம உள்ளே போய் கேட்கமுடியாது.., சில விஷயத்தில் தள்ளி நிக்குறது தான் மரியாதை., என்ன சொல்றீங்க நீங்க”.,  என்று அசோக் சொல்லிக் கொண்டிருந்தான்.

“சரி யாருக்கு தலையெழுத்து என்ன இருக்கோ., அப்படித்தான் நடக்கும்., என்ன சொல்லுதீய பெரியம்மா”  என்று பாட்டியை பார்த்து பெரியம்மா கேட்டார்…

“அப்படி சொல்லாதீங்க ம்மா..,  தலையெழுத்து  என்ன தலையெழுத்து.,  மச்சான் மனசுல என்ன இருக்குன்னு யாராவது கேட்டு இருக்கிறாங்களா.,  பாட்டி தாத்தா வந்து எப்பவுமே கட்டாயம் தான் படுத்துவாங்க., உங்களுக்கு தெரியாது இல்ல., பெரிய மாமா.,  பாட்டி, தாத்தா,  சொல்ற பேச்ச வேற வழி இல்ல., பெத்தவங்க அப்படிங்கறதுக்காக.,  வாயே திறக்காமல் சரி சரி ங்காங்க..,  ஆனா  நீங்க யோசிச்சு பாருங்க., அத்தைக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு  அதனால தான் அத்தை பட்டும்படாமலும் இருக்காங்க..,  ஆச்சி நீங்களே பாருங்களேன் நாளைக்கு நிச்சயதார்த்தத்தில் எப்படி இருக்குன்னு”.,  என்று சொன்னான்.

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் திரும்பி கூட பார்க்காமல் அமைதியாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவள்., பால் குடிப்பது மட்டுமே தன் வேலை என்பது போல அமர்ந்திருந்தாள்.,

சரண்யா பாட்டியும்., தாத்தாவும் அந்த பேச்சை அப்படியே விடுத்து “சரிமா நாளைக்கு நிச்சயதார்த்தத்துக்கு வருவீங்களா பார்ப்போம்” என்றுசொன்னார்.

” கண்டிப்பா வருவோம்., பாப்போம்”.,   என்றபடி பெரியம்மாவும் விடைகொடுத்தார்.

அதேநேரம்  தாத்தாவிடம் சரண்யா “நாளைக்கு நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி, நம்ம ரெண்டு பேரும் ஆரியங்காவு கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துருவோமா, தாத்தா”..,  என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

பாட்டி “வந்த உடனே ஆரம்பிச்சிட்டியா.,  ஆரியங்காவு போகணும் னு”., என்று சொன்னார்.

தாத்தா “பேசாம இரு.,  இங்க இருந்து ஒரு மணி நேர டிராவல்..,  நானும் அவளும் காலைல போனா.., பதினோரு மணிக்கு மேல தானே நிச்சயதார்த்தம்.., சரியான நேரத்துக்கு நாங்க வந்து சேர்ந்து விடுவோம்..,   நீ  தான் வரமாட்டியே.,    நானும்.,  என் பேத்தியும் போயிட்டு வாரோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்.,  “எப்பா நீங்க யாராவது வர்றீங்களா”.,   என்று  தாத்தா கேட்கவும் செய்தார்.

“இல்ல நாங்க மத்த விஷயத்துக்கு தான்., ரொம்ப நிக்கல.,  இதில் பக்கத்துல இல்லைனா  எதுவும் சொல்லக்கூடாது.., நீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க..,  நாம நிச்சயதார்த்தத்தில் பார்ப்போம்” என்று பேசிக்கொண்டனர்.

அங்கிருந்து விடைபெற்று சரண்யாவின் அப்பா பாட்டி வீட்டை நோக்கி கார் கிளம்பியது…

Advertisement