Advertisement

4
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

(நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

(நினைப்பதெல்லாம்)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.

தாத்தா எம்எஸ் வி யின் தீவிர ரசிகர்., அதுவும் கண்ணதாசன் வரிகளில் என்றால் அவ்வளவு பிடிக்கும்., அதனால் அவர் காரோட்டும் போதெல்லாம் எம்எஸ் வி யின் பாடல்களே காரில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஏனோ கிளம்பி சற்று நேரத்தில் இந்த பாட்டு வர அதுவரை அவர்களோடு பேசிக் கொண்டிருந்த சரண்யாவால் அதன் பிறகு பேச்சை தொடர முடியவில்லை.., அவள் மனமெங்கும் பாடலில் லயித்து இருந்தது என்றால் அப்பாடலின் வரிகள் அவளின் எண்ணங்களை கொண்டு வந்திருந்ததை கண்டு  தவிக்க வைத்தது., மனம் ஒரு குரங்கு என்பது அனைவருக்கும் தெரிந்தாலும்.., ஏனோ சில நேரங்களில் அது மரம் விட்டு மரம் தாவுவது போல தாவி கொண்டிருக்கும் நிமிடங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறித்தான் போகிறது அம்மனதின் உரிமை காரர்களாக… மனிதமனங்கள்.

அவளறியாமல் கண்களைமூடி பாடலை ரசித்தாலும் மனம் ஏழு வருடங்களுக்குப் பின் நோக்கி ஓடியது..

அம்முறை தனது பத்தாவது எக்ஸாம் நல்ல படியாக எழுதியதால் மிகவும் சந்தோஷமாகவே அவள் அப்பா அம்மாவோடு ஊருக்கு சென்றாள்.. எப்போதும் பாட்டி வீட்டில் தோட்டத்திலேயே விளையாடுவது தான் சரண்யாவின் வழக்கம் எப்போதாவது பாட்டி தாத்தாவோடு அருகில் இருக்கும் ஜெ.கே வீட்டின் தோட்டத்திற்கும் சொல்வதுண்டு., சில சமயங்களில் ஜெ.கே யின் அம்மா பார்த்தால் அவர் வீட்டிற்கும் அழைத்துச் செல்வார்.., அன்றும் அப்படித்தான் அழைத்துக்கொண்டு சென்றிருந்தார் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவளை அவர்தான் அழைத்து வந்திருந்தார்.

அன்னையுடன்  திவ்யா அங்கு வந்திருக்க.,
“ஓய் சரண்யா., நீ இங்க என்ன செய்ற., இது எங்க மாமா வீடு‌‌.. நீ எதுக்கு இங்க எல்லாம் வர” என்று சத்தமிட்டு கேட்டாள்.

            அத்தையின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததால் அவள் அறியாமல் சட்டென்று ஜெ. கே ன் அம்மாவின் கையை பிடித்துக் கொண்டாள். ஏனெனில் பொதுவாக வெளியே எங்கும் வரமாட்டாள்., அம்மா அப்பா இல்லாமல் அல்லது தாத்தா பாட்டியோடு  தான் செல்வாள்., அன்று அவள் அத்தையோடு வந்தது திவ்யாவிற்கு பிடிக்காமல் வேண்டுமென்றே பேசத்தொடங்கினாள்.

ஜெ.கே  அம்மா தான் “திவ்யா தேவையில்லாம பேசாதே” என்று சத்தம் போட்டார்.,

             “அது எப்படி தேவையில்லாம பேசுறேன் ன்னு., நீங்க சொல்லுவீங்க., அவளுக்கு இங்கே என்ன உரிமை இருக்கு” என்று சத்தமாக அதற்கு பேசினாள்.,

“தேவையில்லாம பேசாதே சின்னப்பிள்ளையா இலட்சமா இரு., இது என்ன பெரிய மனுஷி மாதிரி பேசிகிட்டு இருக்க.,   தோட்டத்தில் விளையாண்டுட்டிருந்த பிள்ளைகளை வேடிக்கை பார்த்துட்டு இருந்தவளை.,  நான்தான் கூட்டிட்டு வந்தேன்” என்று பேசும்போது ஜெ.கே யின் பாட்டி தாத்தா மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக தான் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் எதுவும் சொல்லவில்லை.

             ஜெ. கே ன் அப்பா மட்டும் திவ்யாவிடம்  “இப்படி எல்லாம் பேசக்கூடாது அவங்க  உன்  சித்தப்பா பொண்ணு., தேவையில்லாமல் பேசாதே” என்று சொல்லி சத்தம் போட்டார்..

யாரா இருந்தாலும் அவங்க வரக்கூடாது மாமா.., அவளுக்கு இங்கே என்ன வேலை இருக்கு,  எங்க அம்மா கூட பிறந்தவங்க நீங்க எல்லாரும் அது காரணமா நான்  வாரேன்., போறேன்., அப்படி னா., அவ  அவங்க அம்மா கூட பிறந்தவங்க இருந்தா, அங்கு போக வேண்டியது தானே என்றாள்.,

                   இவள் பதிலுக்கு பதில்  பேச சின்ன மாமாவின் மனைவி சத்தம் போட்டார்., “திவ்யா பெரிய மனுஷி மாதிரி பேசாத., அக்கா சொன்னாங்க இப்ப நானும் அதான் சொல்றேன்., தேவையில்லாம பேசாத., உங்க சித்தி மங்கை ஒரே பொண்ணு, அவங்க வீட்ல வேற பிள்ளைகள்  கிடையாதுன்னு தெரியும்., தெரிந்தும் நீ இப்படி பேசுறது தப்பு” என்று சொன்னார்.

               “ நான் அப்படிதான் பேசுவேன்” என்று சொன்னாள்.

                       ஜெ. கே என் அம்மா சும்மா இருக்காமல் சரண்யா மா நீ சொல்லு.,  நீ உங்க மாமா வீட்டுக்கு வந்திருக்க., நான் எங்க அத்தை வீட்டுக்கு வந்து இருக்கேன்னு சொல்லு” என்று சொன்னார்.,

        இவளும் தனக்கு புதிதாக ஒரு சொந்தம் கிடைத்த சந்தோஷத்துடன்  அவளிடம் “அக்கா நீ மாமா வீட்டுக்கு வந்து இருக்கேன் னா.., நான் அத்தை வீட்டுக்கு வந்திருக்கேன், இது எங்க அத்தை” என்று சொல்லி  உரிமை கொண்டாட.,

    பல்லை கடித்த படி., திவ்யா பதிலுக்கு சண்டைக்கு வர தொடங்கினாள்….. திவ்யா அதன் பிறகு சற்று அதிகமாக பேச தொடங்கியவள், “நீ யாரும் இல்லாதவள் உனக்கு சொந்தம் என்று யாரும் கிடையாது என்று பேச தொடங்கியவள்., சரண்யாவை கைப்பிடித்து இழுத்து வெளியே விட்டாள். ஜெ.கே அம்மா பதறி அடித்து வெளியே  பின்னாடியே சென்றவர்., சரண்யாவை சமாதனம் செய்து அழைத்துக்கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு வந்தார் ., ஆனால் அங்கு நடந்த எதையும் வீட்டில் சொல்லவில்லை சரண்யா..,  ஏனெனில் மங்கை மனம் வருத்தப்படும் என்பது அவள் அறிந்த ஒன்று  தான்.,  அதன்  பின்பு அங்கு இருந்த ஒரு நாளில் வாய்க்கால் கரை ஓரமாக கொடுக்காப்புளி மரத்தில்  கொடுக்காப்புளி பறிப்பதற்காக அவளோடு விளையாடிய அவளது ஒன்றுவிட்ட பெரியப்பா மகன்களான கதிரும்., அசோக்கும் சொல்ல இவளும் அவர்களோடு கொடுக்காய்ப்புளி பறிக்க போனாள். இவளுக்கு தேவையான அளவு பறித்து கொடுக்கவும் அதற்குள் அவர்களோடு விளையாடும் பையன்கள் வர வீட்டிற்கு போய் விடுவாயா என்று கேட்டான் அசோக்., நான் போய்விடுவேன் என்று கொடிக்காய்புளி   பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்,

             அப்பாதை வாய்க்கால் கரையோரம் இருப்பதால் ‘யாராவது வேலை செய்து கொண்டிருப்பார்கள் அவர்கள் கொண்டு விட்டுவிடுவார்கள்’.,என்று இவளும் அங்கு தள்ளி நின்று வேலை செய்யும் பெண்களை பார்த்துக் கொண்டே வர.,

                அந்தப் பக்கமாக இருந்து ஓடி வந்த திவ்யா “நீ எதுக்கு இங்க வந்த., இது எங்க மாமா வீடு இடம்” என்று சொல்லி சண்டை போட தொடங்கினாள்.

       அப்போது தான் ஜெ. கே யும் அங்கு வந்தான். பொதுவாக திவ்யா முன்னிலையில் அதிகம் பேசமாட்டார்கள். போனமுறை விடுமுறைக்கு வந்த போது விசாலாட்சி “திவ்யாக்கு அத்தான் முறை னா., உனக்கும் அத்தான் முறை தான்., சும்மா அத்தான் கூப்பிடு” என்று சொன்னார். வீட்டில் உள்ளவர்களும் “அப்படியே கூப்பிடு” என்று சொன்னார்கள்.

        இவளும் இரண்டு முறை அல்லது மூன்று முறை கூப்பிட்டு இருப்பாள்., அதற்கும் திவ்யா சண்டைபோட அதிலிருந்து அவனை அத்தான் என்று அழைப்பதை விட்டுவிட்டாள்., அப்போது தான் முதன்முதலாக அவனது பெயரின் முதல் எழுத்துக்களை வைத்து ஜெ.கே என்று இவள் அழைக்க தொடங்கினாள். வீட்டில் எல்லோரும் கார்த்தி என்று அழைத்தாலும்.,  நண்பர்களும் கார்த்திக் என்று அழைப்பார்கள்.

இவள் வேண்டுமென்றே ஜெ.கே என்று அழைக்க., அவனும் அப்படியே கூப்பிடு என்று சொல்லிவிட்டான்., அப்படி பேர் சொல்லி அழைப்பதற்கு எல்லாம் திவ்யா ஒன்றும் சொல்லவில்லை., மரியாதை இல்லாமல் தான் பேசுவாள்  என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டாள், ஆனால் அவள் அத்தான் என்று அழைக்க கூடாது என்று சொன்னது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும்.  யாரும் கண்டுகொள்ளவில்லை திவ்யாவின் பிடிவாதமும்., திவ்யாவின் குணமும் தெரியும் என்பதால் யாரும் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.

             அதிலிருந்து அவனை ஜெ.கே  என்று மட்டுமே அழைப்பாள்., அவனிடம் அவள் முன்னிலையில்  அதிகம் பேச மாட்டாள்., பேசினால் அதற்கும் திவ்யா ஏதாவது சொல்லி சண்டை போடுவாள் என்ற பயமே அவளிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்க வைத்தது., ஜெ.கே கேட்கும் போது.,  அப்போது  தான் அவள் “உங்களிடம் உரிமையாக பேசினால் திவ்யா வீட்டில் போய் பாட்டியிடமும்., தாத்தாவிடமும் ஒன்றுக்கு இரண்டாக ஏதாவது சொல்லிக் கொடுத்து., வீட்டில் பிரச்சினையை உருவாக்கி விடுவாள்., விசாலாட்சி அத்தைக்கு தான் திட்டு விழும் அது தான்”., என்றாள்., அந்த ஒரே காரணத்திற்காக இருவரும் அவள் முன்னிலையில்  சற்று தள்ளி தான் இருப்பார்கள்., மற்றபடி இருவரும் நன்கு  பேசக் கூடியவர்கள்…

‌      அன்று வாய்க்கால் கரையில் வைத்து  அவளிடம்  “தாத்தா இடத்திற்கு பக்கத்தில் உள்ள இடம்  தானே” என்று கேட்டாள்.

             இவளோ “அந்த இடம் அங்க இருக்கு”.,  அவள் கையிலிருந்து அந்த கொடிக்காபுளி பையை புடுங்க திவ்யா முயற்சி செய்ய., அந்நேரம் ஜெ.கே வந்துவிட்டான்.,

       “என்ன பண்ற அறிவு இல்ல” என்று சொல்லி திவ்யாவை சத்தம் போட்டான்.

Advertisement