Advertisement

அவளுடைய அந்த குணம்தான் இப்பொழுது அவள் வாழ்விற்கு எதிராக அமைந்து விடுமோ என்று சீதா பயப்படுகிறார்…

நாள்கள் ஓடிக்கொண்டு தான் இருந்தது திருமணம் பேசிய பிறகு., அதன் வேலைகள் அதன்படி நடக்க ஜெ.கே எதிலேயும் தலையிடுவதில்லை..

வீட்டில் ஜெ.கே ன் அம்மாவும் அதிகம் தலையிடுவது இல்லை., அது தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே., நீங்க பாருங்க என்று சொல்லி ஒதுங்கிக் கொள்வார். சித்தப்பாவின் மனைவிகளுக்கு தெரியும் என்றாலும் யாரும் வீட்டில் வாய் திறந்து பேச முடியாத சூழ்நிலை., அதனால் யாரும் வெளியில் சொல்வதில்லை எப்போதும் வேலை பார்க்கும் நேரத்தை விட அதிக நேரம் வேலைகளில் தன் நேரத்தை செலவழித்து கொண்டிருந்தான் ஜெ.கே…

பாதி நாட்களில் உணவை தவிர்த்துவிட்டு வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்ததால் திருமணம் பேசிய பிறகு சற்று மெலிந்து இருப்பதாகவே வீட்டில் உள்ளோருக்கு தோன்றியது., கேட்டதற்கு ஏற்றுமதி வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த வேலைகளை முடிக்க வேண்டும் நேரமில்லை என்ற பேச்சோடு ஒதுங்கிக் கொள்வான்…

திவ்யா ஒருநாள் பாட்டி வீட்டிற்கு வந்து  விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பியவளை திவ்யாவின் இரண்டாவது மாமாவின் பையன் பிடித்து வைத்து பேசிக் கொண்டிருந்தான். “திவ்யா நல்லா யோசிச்சி முடிவு பண்ணு., எதுவும் பிரச்சனை வந்துச்சுன்னா இருக்கு பாத்துக்கோ”., என்று அதட்டலாக சொன்னான்.

“நீ எதுக்கு பிரச்சனை வரும்னு யோசிக்கிற., யாருக்கும் தெரியாது நீ உன் வேலைய பாத்துட்டு போ புலம்பாதே., நீயும் குழம்பி., எனக்கும் எரிச்சலை கெளப்பாத”., என்று அவனிடம் மரியாதை இல்லாமல் பேச.,

“தெரியும் நீ இப்படி தான் பேசுவேன் தெரியும்., உன் புத்தி தெரிந்தும் உனக்கு வந்து பாவம் பார்த்து சொன்னேன் பாரு, என்ன சொல்லணும் நீ நினைச்சு நினைச்சு பேசுவ.,  படிக்கும்போது ஒரு பேச்சு பேசின..,  இப்போ ஒரு பேச்சு பேசுற..,  இன்னும் நாளைக்கு என்ன எல்லாம் பேசுவே  ன்னு யாருக்கு தெரியும்”  என்று சொன்னான்..

“ஏய் பெரிய இவன் மாதிரி பேசாதடா.., ஏதோ அப்போ உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு விட்டேன்.,  அத வச்சி டென்ஷன் ஏத்தாதே.,உனக்கு  மட்டும் தானே தெரியும் நீ எதுக்கு அதையே பேசி பேசி தொல்லை பண்ண ட்ரை பண்ற.., உன் வேலையை பாரு.,  எந்த பிரச்சினையும் வராது.., எனக்கு தெரியும் நான் பார்த்துக்கிறேன்”..,  என்று அதிகாரமாக பேசினாள்…

“போடி போ.., உன் திமிருக்கு நீ பண்ணின காரியம் தெரிகிற அன்னைக்கு உனக்கு இருக்கு”… என்றான்.

“ஏய் என்னையும்., சம்பந்தப்பட்ட ஆளையும்  தவிர தெரிஞ்சது., நீ மட்டும் தானே நீ வாய மூடிக்கிட்டு இரு.., இங்க யாருக்கும் எதுவும் தெரியாது., உன் வேலை எது உண்டோ அதை பாரு”… என்றாள் திமிருடன்.

“ஏய் இங்கேரு வீட்டில் போய் சொன்னேன் வையி.,  கதை கந்தலாகிரும்,  ஞாபகம் வச்சுக்கோ, என்ன எனக்கும் சேர்த்து திட்டு விழும் அது ஒண்ணு தான் நான் அமைதியா இருக்கேன்., ஆனா அதுவும் எப்போதும் ஒன்னு போல இருப்பேன் நினைக்காதே”… என்றான் மிரட்டலுடன்.

“ஏன் இப்ப என்ன..,  போய் சொல்லித்தான் பாரேன்., மொதல்ல உனக்குதான்  கிழி., விழும்., அதுக்கு அப்புறம் தான் எனக்கு திட்டு விழும்., ரொம்ப பேசாத டா” என்று உதாசீனப்படுத்தி பேசினாள்….

அன்று பகல் பொழுதில் பண்ணையிலுள்ள வேலைகள் முடித்து., பால் பொருள் தயாரிக்கும் இடத்திலும் வேலையை முடித்துக் கொண்டு வந்தவனுக்கு சிறுவயதில் விளையாடிய அந்த வாய்க்கால் கரையோரம் ஞாபகம் வந்தது., எனவே அவ்வழியே தன் ராயல் என்ஃபீல்டை விட்டான்.., அந்த ஒற்றையடிப்பாதையில் வண்டியில் வந்து கொண்டிருந்தான்.,  அப்போது கரை அருகே இருந்த கொடுக்காய்ப்புளி மரமும் அவனுக்கு பழைய ஞாபகங்களை எடுத்துக் கூறியது., அருகிலிருந்த கூர்மையான கல்லும் அதன் மேல் இப்போது பாதுகாப்பிற்காக செடிகொடிகளை வைத்து மறைத்து அவ்விடத்திற்கு யாரும் வராத வண்ணம் சுற்றி மரம் வைத்து விட்டாலும்., கூர்மையான அப்பாறையும்., கொடுக்காப்புளி மரமும்., வாய்க்கால் கரையும் அவனுக்கு ஞாபகங்களை கிளறி விட்டு அவன் மனதை ரணமாகி கொண்டிருந்தது…

திவ்யாவின் வீட்டில் சந்திரன் சீதாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். “கல்யாணத்துக்கு முதல் நாள் தானே நிச்சயதார்த்தம் இருக்கும்.., தம்பி வீட்ல சொல்லணும் பாத்துக்கோ.., தம்பி மாமனாரை வரச்சொல்லணும்., முன்னாடி நிச்சயதார்த்தம் வைக்கிறதா இருந்தா அவங்க எல்லாத்தையும் ஊருக்கு வந்துட்டு போங்க ன்னு சொல்லணும்., அதுக்கு தான் கேட்டேன்”., என்றார்.

“நான் நேத்து தான் கேட்டேன்., அங்கேயும் சொல்லிட்டேன்., கல்யாணத்துக்கு முதல் நாள் தான் நிச்சயதார்த்தம் எல்லாம்., ஒரு வாரத்துக்கு முன்னாடி பட்டு எடுக்குற அந்த வேலையெல்லாம் இருக்குல்ல.., மங்கை கிட்ட போன்ல நான் சொல்லிட்டேன்., ஒரு வாரத்துக்கு முன்னாடி இங்க இருக்கணும் அப்படின்னு சொல்லி., நீங்களும் தம்பி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருங்க”., என்று சொல்லிக்கொண்டிருந்தார்

அண்ணன் தம்பி அவர்கள் மனைவிமார் ஒற்றுமையாக இருந்தாலும் திவ்யாவிற்கு மட்டும் சற்று பொறாமை உணர்வு உண்டு.., சித்தப்பாவும் சித்தியும் ஏற்றுக்கொள்ள முடிந்த அவளால் அவர்களின் அழகான மகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.., மங்கையின் அப்பா அம்மா இருப்பது திண்டுக்கல்லில் அவர்களுக்கு  கொடைக்கானலில் ஒரு பழத்தோட்டம்., ஹோம் ஸ்டே வசதியுடன் கூடிய ரெஸார்ட் இருக்கிறது., திண்டுக்கல் தோட்டம் துரவு என்று சொத்து பத்துக்களோடு வசதியான வாழ்வில் இருப்பவர்கள்., மங்கையின் மகள் அங்குதான் வளர்ந்து வருகிறாள்…

10 வயது வரை தாய் தந்தையாரோடு வளர்ந்த குழந்தை., அதன்பிறகு தாத்தா பாட்டியோட இருக்க ஆசைப்பட அவர்கள் அங்கு ஊரில் வைத்துக் கொண்டார்கள்.,

வருடத்திற்கு ஒருமுறை முரளியும்., மங்கையும்., அவர்களது சொந்த ஊரான செங்கோட்டைக்கு வரும்போதெல்லாம் திண்டுக்கல்லில் இருந்து அவளும் ஊருக்கு வந்து விடுவாள்., ஒவ்வொரு வருடமும் அப்படித்தான் வந்து கொண்டிருந்தாள். அவள் பத்தாவது படிக்கும் வரையும் அதன்பிறகு இங்கு வருவதில்லை., ஆனால் முரளியும் மங்கையும் வருடம் தவறாமல் ஊர் கோவிலில் நடக்கும் திருவிழாவிற்கு வந்து செல்வது வழக்கமாகவே இருந்தது..

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இப்போது தாத்தா பாட்டியோடு வளரும் சரண்யா ஒரே பெண் என்றாலும் அவளுடைய குணாதிசயங்கள் சற்று வித்தியாசமானது தான்., அதற்கு முக்கிய காரணம் திவ்யா தான் அதிக துறுதுறுப்பும் வாயாடி தனமும் இருந்த சரண்யாவை வாயைக் கட்டிப் போட்டு மனதில் அடிவாங்க வைத்தவள் திவ்யாதான்.., அதன் பிறகு அவள் இங்கு வருவதை நிறுத்தி விட்டாள்…

தன்னுடைய பத்தாம் வகுப்பு லீவில் ஊருக்கு வந்து இருந்தவள்., இங்கு ஏற்பட்ட சிறு பிரச்சினையால் அதன்பிறகு இவ்வூருக்கு வந்ததே இல்லை எனலாம்., கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கடந்த நிலையில் இப்பொழுது வருவாளா., மாட்டாளா என்ற ஒரு எண்ணம் எல்லோருக்குமே இருந்தது., அதிலும் சரண்யாவின் அப்பா பாட்டியான செண்பகத்துக்கு அதிகமிருந்தது.

அடிக்கடி பேத்தியை திண்டுக்கல்லில் சென்று பார்த்துவிட்டு வந்தாலும் செண்பகம் ராமையா இருவருக்கும் அவள் முன்பு போல் யாருடனும் ஒட்டி பழகுவது இல்லை என்பது வருத்தமாகவே இருந்தது., ஏழு வருடங்களாக அவள் இங்கு வராமல் இருப்பது இவர்களுக்கு சற்று உறுத்தலாக தானிருந்தது., இனியாவது பிள்ளைகள் எல்லோரும் வந்து போயிருக்க வேண்டும் என்ற ஆசையும் பெரியவர்களாக அவர்களுக்கு இருக்கத்தான் செய்தது…

திவ்யாவின் குணத்திற்கு வெளியிடத்தில் திருமணம் செய்து கொடுத்தால் நான்கு நாட்களில் திரும்பி விடுவாள்., அதனால்தான் சீதாவின் அம்மா அப்பா பெண் கேட்டு பேசி முடிக்கலாம் என்ற உடன் இங்கு அனைவரும் சம்மதித்தது., திவ்யாவின் திருமணத்திற்கு பிறகு ராஜாவிற்கு திருமணம் முடிக்கும் முன் அவளுக்கும் வரன் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பாட்டி தாத்தாவிற்கு அதிகமாக இருந்தது…

ஏனெனில் சரண்யா இப்போது தான் அவளது படிப்பை முடித்து ஆறு மாதமாக அவளது தாத்தாவோடு சேர்ந்து தொழிலை பார்த்துக்கொண்டிருக்கிறாள்., அவளுக்கு வயது 22 ஆகிறது அவளை விட இரண்டு வயது மூத்தவள் திவ்யா அவளுக்கு 24 இவளுக்கு முடித்தவுடன் அவளுக்கு நல்ல இடமாகப் பார்க்க வேண்டும் என்று வீட்டில் அனைவருமே பேசிக்கொண்டிருந்தார்கள்., திருமணத்திற்கு வரும்போது மங்கை இடமும் பேசி வரன் பார்ப்பதை துரிதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெரியவர்களிடமும் இருந்தது..

  பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுர போதும் யாரோடும் சேரலை நான்

Advertisement