Advertisement

2

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே

கண் சிமிட்டும் தீயே
எனை எரிச்சுபுட்டே நீயே

“திவ்யா எழுந்திரிக்க போறியா., இல்லையா, நேரம் என்ன ஆச்சு பாரு.., பொம்பள புள்ள இப்படியா  இருப்ப”.. என்றார் சீதா.,

“அது என்னமா எப்ப பாத்தாலும் பொம்பள புள்ள, ஆம்பள புள்ள ன்னு  சட்டம் மட்டும் பேசிட்டே இருக்கீங்க”., என்ற சத்தம் மட்டும் போர்வைக்குள் இருந்து வந்தது…

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டி., பொம்பள புள்ள, ஆம்பள புள்ள, நான் ஒன்னும் சட்டம் பேசலை.  அவன் எந்திரிச்சு அப்பவே தோட்டத்துக்கு கிளம்பி போயிட்டான்,  நீ என்ன செய்ற., கல்யாணம் பேசின பிள்ளை மாதிரியா இருக்க, எந்திரிச்சு போய் முதல்ல பல்தேச்சு குளிச்சுட்டு வா., உங்க அப்பா பாட்டி இப்ப வந்துச்சுன்னா என்ன வாட்டி எடுத்துடும்  என்ன பெத்து வச்சிருக்க., என்ன லட்சத்தில் புள்ள வளத்து வச்சிருக்கே ன்னு., ஏற்கனவே ஆளாளுக்கு திட்டுதாக., புதிதாச இதுல நீ வேற சேர்ந்து என்ன கூட கொஞ்சம் மாட்டி விடாதே எந்திரி போ”…. என்று அதட்டினார்.

“அம்மா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுமா., இப்ப லேட்டா எந்திரிச்சு அதனால என்ன கெட்டுப் போச்சு”., என்றவள் போர்வையை விலக்கியபடி எழுந்து அமர்ந்தாள்…

“அடி கூறு கெட்டவளே.,  தாய் மாமா வீட்டுக்கு கல்யாணம் முடிச்சு போனாலும் நாளைக்கு உங்க அத்தைகாரி   உன்னை குறை சொல்லாமல் இருப்பாளா., இப்படி லேட்டா எந்திரிச்சா எப்படி., கார்த்தி காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சு வெளியே போய்விடுவான்.,  நீ அவனுக்கு முன்னாடி எந்திரிச்சா தானே அவன் எந்திரிச்சு வெளியே போற நேரத்துக்கு ஒரு காபி போட்டு கொடுக்க முடியும்”… என்றார்.

“என்னது அஞ்சு மணிக்கா..!  அம்மா அதெல்லாம் முடியாது, அதையெல்லாம் எப்பவும் போல அவன் அம்மாவே செய்யட்டும்.., ஏன் உன் அண்ணன் பொண்டாட்டி  இதை கூட செய்ய மாட்டாளா மா…  நான் இப்படித்தான் இருப்பேன், உடனே குறை சொல்லுவாங்க அப்படின்னு சொல்லாதீங்க.., அப்படி ஒன்னும் உங்க அண்ணன் பொண்டாட்டிக்கு பயப்படனும் எனக்கொன்னும் அவசியமில்லை”… என்றாள்.

“அறிவு கெட்டவளே., அறிவு கெட்டவளே., மரியாதை கொடுத்து பேசு என்ன தான் இருந்தாலும் உன் மாமியார் ஆகப்போறவங்க., உனக்கு பிடிக்கலனாலும்., அத்தை ன்னு., சொல்லிப் பழகு., எல்லாம் என் புத்திய சொல்லணும், நீ சின்ன வயசுல இருந்து இப்படி பேசும்  போதெல்லாம் கண்டுக்காம விட்டேன்  பத்தியா என் தப்புதான் இது.., இனிமேல் அத்தை ன்ற வார்த்தைக்கு மறு வார்த்தை பேசக்கூடாது புரிஞ்சு நடந்துக்கோ”…. என்றார்.

“நான் ஒன்னும் உங்க குடும்பத்தை பிடிச்சி போய் உங்க அண்ணன் குடும்பத்துக்கு மருமகளா போகல.., அதையும் தெரிஞ்சுக்கோங்க., ஏதோ உங்க அண்ணன் மகன் நல்ல பேரு. பணம்., புகழும் சம்பாதித்து வச்சிருக்கான். அதுக்காக மட்டும்தான் கல்யாணத்துக்கு சம்மதித்து இருக்கேன். ஜேகே பொண்டாட்டி ன்னு வெளிய சொன்னா ஒரு கெத்தா இருக்கும் இல்ல., அது மட்டும் இல்லாம அதுக்கப்புறம் என் கிட்ட பேசினா கூட யோசிச்சி பேசுவாங்க இல்ல., அதுக்கு தான் இல்லாட்டி அவனை  போய் யாரு கல்யாணம் பண்ணனுவா., மூஞ்சியை எப்ப பாரு உர் ன்னு வச்சுகிட்டு வள்ளு வள்ளு ன்னு பேசிக்கிட்டு”… என்றாள் வெறுப்புடன்.

“உன்னை கூறு கெட்டவளே.,அறிவு கெட்டவளே., ன்னு  திட்டுவது தப்பே இல்ல போல., திரும்பத் திரும்ப சொல்றேன் இப்படி பேசிக்கொண்டே இருக்க.,  யார் காதில் விழுந்தால் என்ன ஆகும்., யோசிச்சு பார்த்தியா” … என்றார்.

“ நான் அவன்கிட்டேயே., அப்படி  தான் பேசுவேன் அதுக்காக என்னை மாத்திக்கலாம் முடியாது., அவன்  என்ன பெரிய இவனா… நான் போயிக்கிறேன், அந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் இருக்கு பாரு…  என்னைய  இவ்வளவு சொல்லுறீங்களே., அவன் என்னைக்காவது என்கிட்ட நார்மலா பேசி இருக்கானா., கேட்டா என்னைய  திமிருபிடிச்சவ ன்னு சொல்லுவான்”… என்றாள்.

“ இப்படி பேசாத திவ்யா.,சொன்னா கேளு நாளைக்கு நீ அந்த வீட்டுக்கு போனா நீ அந்த வீட்டோட மூத்த மருமகள்.,  நீ தான் எல்லாம் பாக்கணும்., எங்க அம்மா அப்பா சொந்தம் விட்டுப் போயிடக் கூடாது ன்னு நினைச்சாங்க., வேற யாருக்கும் கொடுத்தா குடும்பத்துக்குள்ள உறவு விட்டுப் போய் விடக் கூடாது அப்படின்னு தான் எங்க அண்ணன் பையனுக்கு பேசி முடித்து இருக்காங்க.., நானும் எங்க அம்மா அப்பா ட்ட இதை  ரகசியமா கேட்டி  வைத்திருந்தேன்., அதை புரிஞ்சுக்கோ ., உங்க ஆச்சியும் தாத்தாவும் இருக்கும் போது எல்லாரும் நல்லபடியா உன்னை பார்த்துக்குவாங்க., தங்கமா தாங்குவாங்க.,  அதை ஏம்மா யோசிக்கவே மாட்டீங்க”… என்று வருத்ததோடு கேட்டார்.

“எனக்கும் அது தெரியும்மா., நான் அங்க போனா ராணி மாதிரி இருக்கலாம், அப்படி என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்து இருக்கேன். மத்தபடி உங்க அண்ணன் வீட்டுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது., இந்த லட்சணத்துல கல்யாணம் வேற பார்த்துக்கோ”… என்றாள்.

“ஏன் திவ்யா இப்படி எல்லாம் பேசுற., யோசிச்சு பேசு, எங்க அண்ணன் மார்  எல்லாம் என் மேல  எவ்வளவு பாசமா இருக்காங்க., அதேமாதிரி உன் மேலயும் பாசமா இருப்பாங்க., சரி இதுக்கு மேல பேசாத யார் காதிலும் விழுந்துச்சி னா பிரச்சினை ஆயிடும்”… என்றார்.

“மத்தவங்க கிட்ட என்னைய  திமிருபிடிச்சவ ன்னு சொல்றான் இல்லம்மா., நேத்திக்கி இவ்ளோ பேசி முடித்து எல்லாம் பண்றாங்க., மத்தியான சாப்பாட்டுக்கு வந்தானா கல்யாணம் பேசும் போதே யாருக்கோ கல்யாணம் பேசுற மாதிரி அவன் பேசாம அவன் வேலையை பார்க்க போனான் இல்ல., அப்பா அவனுக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை  தானே.,  அதை யாராவது கேட்டாங்களா இல்ல இல்ல”.. என்றாள்.

“ஏட்டி வாய மூடுதியா, இல்லையா, எல்லா ஆம்பளையும் இஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணுதாங்க ன்னு  உனக்கு தெரியுமா.., நூத்துல ஒருத்தர் தான் பிடிச்சு போய் கல்யாணம் பண்ணுவாங்க.., மத்த எல்லாரும் பிடிச்சிருக்கோ., பிடிக்கலையோ., குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணிடுவாங்க.., அப்படித்தான் முக்காவாசி கல்யாணம் நடக்கும்., இதில் என்ன புதுசா கண்டுபிடிச்சிட்ட., வாய மூடிட்டு வேலையப் பாரு”… என்றார் எரிச்சலோடு.,

“அட போம்மா., நீ உன் அண்ணன் மகன விட்டுக்கொடுக்காமல் பேசுற”…. என்றாள்.

“ கூறு கெட்டவளே., கூறு கெட்டவளே., எத்தனை தடவை தாண்டி என்ன திட்ட வைப்ப.., ஊர்ல முக்காவாசி ஆம்பள., பொம்பள., யாரையும் பிடித்து எல்லாம் கல்யாணம் பண்ணல சரியா., அதுக்காக எல்லாரும் கஷ்டப்படவா செய்யுறாங்க., நல்லா தான் இருக்காங்க., எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்துப் போக போயி நல்லா தான் இருக்காங்க., நீயும் கொஞ்சம் பொறுத்துக்கோ பொறுமையா இரு.,அப்போ என்ன எல்லாம் தானா சரியாயிடும் உன் வாயை முதல்ல அடக்கு திமிர்த்தனமாக பேசாத”…..என்றார்.

“நீ தாம்மா காரணம் நான் திமிரா பேசினேன்., திமிரா பேசுறேன்னு., சொல்லி சொல்லியே உன் அண்ணன் குடும்பத்திலிருந்து, தெரிஞ்சவங்க, பழகுறவங்க, வரைக்கும் அப்படித்தான் சொல்லிட்டயே.,  இனிமேல் இப்படி பேசுற வேலை நீ வெச்சுகாதே முதல்ல”… என்று அதட்டினாள்.

“சரிடி சொல்லல முதல்ல  படுக்கையை விட்டு எந்திரி., அதுக்கே எவ்ளோ நேரம் ஆகுது., போய் பல் தேய்ச்சி குளிச்சிட்டு வா.,  காலைல காபி கூட குடிக்காமல் மணி என்ன ஆகுது  பாரு”., என்று சத்தம் போட்டு எழுப்பிக் கொண்டிருந்தார்…

ராமையா செண்பகத்தின் மூத்த மகன் சந்திரன்., அவர் மனைவி சீதா இவர்களது பிள்ளைகள் தான் முதல் மகன் ராஜா., இரண்டாவது தான் திவ்யா. பெரியவர்களின் அடுத்த மகன் முரளி அவரின் மனைவி மங்கை இவர்களுக்கு ஒரே மகள் சரண்யா..

முரளி படிப்பை முடித்துவிட்டு., அவர் படிப்புக்கேற்ற வேலை தேடி வெளிநாடு செல்ல அங்கேயே தங்கி விட்டார்.,  அவருக்கு பெண் எடுத்தது வெளியிடத்தில் மங்கை அவர் குடும்பத்தில் ஒரே மகள் வேறு பிள்ளைகள் கிடையாது அது போலவே இவர்களுக்கும் சரண்யா ஒரே மகளாக போய்விட்டாள்….

திவ்யாவின் திருமணத்திற்கு பிறகுதான் ராஜாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறது குடும்பம் சீதாவின் அண்ணனிடம் பெண் குழந்தைகள் இருக்க., பெண் எடுப்பது பற்றி யோசித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்…

ஜெ. கே என் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரே தம்பி நந்தா.,

ராமையா செண்பகம் தம்பதியினர் ஓரளவுக்கு நில புலன்களோடு நல்ல வசதி வாய்ப்போடு இருக்கவும்., அவர்களுக்கு பெண் கொடுக்க ஜெ.கே யின் தாத்தா-பாட்டி மறுக்கவில்லை., ஏனெனில் ஒரே ஊர் மகள் தங்கள் அருகிலேயே இருப்பாள் என்ற எண்ணம் தான் அவர்கள் பெண் கொடுத்ததற்கு காரணம்…

சீதாவிற்கு எப்படி அவர் பிறந்த வீட்டில் செல்லமோ., அதேபோல அவள் பிள்ளைகளுக்கும் அங்கு செல்லம் ஜாஸ்தி தான்., அதில் திவ்யா சற்று அதிகமான பிடிவாதத்துடன்., அவள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் வளர்ந்துவிட்டாள்., சிறு வயதிலிருந்தே அவளுக்கு அந்த குணம் உண்டு யாரையும் மதிக்கும் குணம் சுத்தமாகக் கிடையாது.,  அவள் மட்டும் தான் என்ற எண்ணம் அவளுக்கு அதிகமாகவே உண்டு., மாமா பிள்ளைகளிடமும் யாரிடமும் அவள் பாசம் காட்டி அதெல்லாம் கிடையாது அன்போடு பழகியதும் கிடையாது எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் குணம் அவளுக்கு எப்போதும் உண்டு…

Advertisement