Advertisement

அவரைப் பார்த்து முறைத்தபடி ஜெகே யின் அம்மா அவனுக்கு உணவு எடுத்து வைக்க உள்ளே சென்றார்.

குளித்து உடைமாற்றி உணவுக்காக கீழே வந்தபோது ஜெ. கே ன் அம்மா அவன் முகத்தையே பார்த்தபடி “யய்யா கார்த்தி மனசுல எதையும் போட்டு வச்சுக்காதையா நல்லா சாப்பிடு.. உன் முகத்தை பார்த்தா., நீ மத்தியானம் சாப்பிட்ட மாதிரி தெரியலையே”. என்று வருத்தத்தோடு பேசினார்.

                  அவன்  பதில் ஏதும் சொல்லாமல் எப்போதும் உண்ணும் அளவில் பாதி அளவு தான் எடுத்திருந்தான்… அவன் சரியாக சாப்பிடாததைக் கண்ட பெற்ற மனம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து.  “யய்யா தூங்க போறியா” என்று கேட்டார்..

“என்னம்மா என்ன விஷயம்” என்று கேட்டான்.

“யப்போ… கொஞ்சம் பேசணும் பா” என்று அமைதியாக சொன்னார்..

“எல்லாரையும் வெச்சிகிட்டு எதுவும் பேச முடியாது” என்று சொன்னான்.

“ஐயா கார்த்தி அப்பா  இப்ப படுக்க போயிருவாங்க., உங்க பாட்டி தாத்தாவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் போயிருவாங்க யா கொஞ்ச நேரம் இரேன்”… என்றார்.

ஹாலில் உட்கார்ந்து டிவி பார்ப்பது மாதிரி அமர்ந்துகொண்டான். அங்கு அமர்ந்தவன் யாரிடமும் பேச்சு கொடுக்காமல்.,  டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே அமர்ந்து இருந்தான்..

அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்த அவனுடைய தாத்தா பாட்டியும் சரி, அப்பாவும் சரி, பேச்சு கொடுப்பதற்காக மாறிமாறி ஏதேதோ பேசினாலும் அவன் பதில் சொல்லாமல் டிவி பார்ப்பதில் முழு கவனமும் இருப்பவன் போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்., ஏதோ நாளை பரிட்சையில் அதிலிருந்து தான் கேள்வி கேட்பார்கள் என்பது போன்ற  நிலையில் அவன் அமர்ந்திருந்தான்.

                     அந்த  சூழ்நிலையே அவனது உதாசினத்தை புரிய வைக்க  தந்தை எழுந்து படுக்க சென்றுவிட்டார்.,  அவர் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் தாத்தா பாட்டியும் சென்றுவிட.,  அவ்விடமே அமைதியாக டிவியின் சத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லாமல் நிசப்தத்தை தத்தெடுத்து இருந்தது…

சற்று நேரத்தில் எல்லாம் கார்த்தியின் அம்மா அவனை பேச அழைக்க., உணவருந்தும் இடத்தில் போய் அங்கிருந்த மேசைக்கு அருகே அமர்ந்து பேசத் தொடங்கினான்.  அவன் அம்மா உள் பக்கமாக பார்த்து அமர., இவன் வெளிப்புறமாக பார்த்த வண்ணம் அமர்ந்தான்.  அப்பொழுது தான் யாராவது அறையிலிருந்து வெளியில் வந்தாலும் தெரியும் என்பதற்காக….

“சொல்லுங்கம்மா ஏதோ பேசணும்னு சொல்லி உட்கார வச்சிங்க” என்று கேட்டான்.

“ஏம்பா இன்னைக்கி ரொம்ப அலைஞ்சுட்டியா” என்று பாசமாக அவன் கையைப் பிடித்தபடி கேட்டாள்..

அவனும் அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு “இல்லமா வேணும்னே தான் போனேன்,   சில விஷயங்கள்ல என்னால பதில் பேச முடியாத சூழ்நிலை இருக்கிறேன்., அதனாலதான் அமைதியா போறேன்” என்று சொன்னான்…

“எனக்கு புரியுது பா., அம்மாவாலையும் யாரையும் எதுவும் பேச முடியல., நீ என்ன புரிஞ்சுக்குவ ன்னு  நம்புறேன் யா.., அம்மாவை புரியுது இல்லயா, உனக்கு”.., என்று ஒரு தாயாக பரிதவித்து தன் மகன் முகம் பார்த்து கேட்டாள்…

“புரியுது மா., ஆனா நல்லா யோசிச்சு பாருங்க., இவ நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணுனு நினைக்கிறீங்களா.., கண்டிப்பா இல்லம்மா, அது தான் என்னால ஏத்துக்க முடியல., மத்தவங்க ஆயிரம் சொல்லலாம், சொந்தம் விட்டுப் போயிடக் கூடாது அப்படின்னு நினைக்கலாம்.,  பாட்டி தாத்தாவை பொருத்தவரைக்கும் அவங்களோட மகளோட பொண்ணு அப்படிங்கிறது மட்டும் தான் நினைக்கிறாங்க., ஆனா என்னனை யாராவது யோசித்தாங்களா., அப்படிங்கற மாதிரி தான் மா எனக்கு வருத்தம்” என்றான் கார்த்திக்..

“இல்லடா இதை பத்தி ஒன்னுமே சொல்ல முடியாது., உங்க அப்பாட்ட பேசினால் சண்டை தான் வரும்., குடும்பம் மொத்தமும் ஒரே பொம்பள பிள்ள ன்னு பாசம் வச்சிருக்காங்க., ஆனா என்ன பண்ண அப்படிங்கறது தான் எனக்கு புரியல” என்றார்

“இருக்கட்டுமா தங்கச்சி மேல பாசம் இருக்க வேண்டியது தான்.., அத்தையும் பாசமானவங்க தான்., ஆனா அந்த பொண்ணு அதே அளவுக்கு பாசத்தோட இருப்பா ன்னு., நீங்க நம்புறீங்களா., கண்டிப்பாக கிடையாது மா, ஏன்னா அவளோட திமிரு, அவளோட அகம்பாவம், எடுத்தெறிந்து பேசும் குணம், எதுவுமே இந்த குடும்பத்திற்கு செட்டாகாது மா., முக்கியமா என்னோட மனைவியா இருக்கறதுக்கு இந்த குணம் எதுவுமே இருக்கக்கூடாது”.,  என்றான்.

“தெரியுது பா., உன் முகத்தைப் பார்த்த உடனே எனக்கு புரிஞ்சுருச்சு., உனக்கு பிடிக்கலை ன்னு.,  ஆனா எதுவும் பேசமுடியாத பாவியா உட்கார்ந்துட்டு இருக்கேன்., எனக்கும் ஒருநாள் பேச சந்தர்ப்பம் வரும்., என்னால முடிஞ்ச அளவுக்கு இத நடக்கவிடாமல் பார்க்கிறேன் பா., ஆனால் என்ன செய்ய முடியும்., இந்த வீட்டோட மூத்த மருமகள் குடும்பம் கலைஞ்சிறக்  கூடாது., ன்னு யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் ஒக்காந்து இருக்கேன் பா”., என்றார்..

“அம்மா புரியுது மா., உங்க நிலைமை எனக்கு நல்லாவே புரியுது., ஆனா எனக்கு மனைவியா வர்றவ அன்பான குணத்தோடு இருக்கணும்., எல்லாரையும் அனுசரிச்சு போறவளா இருக்கணும்., இந்த குடும்பத்தோட மூத்த மருமக அப்படிங்கிற முறையில் குடும்பத்த நல்ல பாத்துக்கற  மாதிரி  இருக்கணும்,  அப்படின்னு யோசிக்கிறேன். ஆனா இவ யாரையும் மதிக்க மாட்டா., இவ நம்ம வீட்ல ன்னு., இல்லம்மா சித்தப்பா வீட்ல உள்ள ஆட்களிடமும்  சண்டை தான் போடுவா., இந்த நாலு குடும்பமும் ஒற்றுமையாக இருக்கும் நினைக்கிறீங்களா கண்டிப்பா இருக்காது… சித்தப்பா வீட்ல எல்லாரும் இப்ப என்ன யோசிப்பாங்க ன்னு, நினைக்கிறீங்க. நல்ல வேளை நம்ம வீட்டுக்கு யாரும் பேசல அப்படிங்கற மாதிரி தான் யோசிப்பாங்க., இதே இது அவங்க வீட்டுக்கு னா., கண்டிப்பா சித்தி ஏதாவது பிரச்சினை பண்ணியாவது நிப்பாட்டி இருப்பாங்க மா”.., என்றான்.

                        “தெரியுண்டா.., இன்னைக்கே லேசா பிரச்சனை ஆரம்பிக்க பார்த்துச்சு., நம்ம வீட்ல ஏதும் விசேஷம் அல்லது., ஒண்ணா உட்கார்ந்து கலந்து பேசுறோம் அப்படின்னாலே  இங்க பெரிய வீட்டில் தான் சமைச்சு எல்லாரும் ஒண்ணா தான் சாப்பிடுவோம்.., அவ இத்தனை நாள் தெரியாத மாதிரி இன்னைக்கு கேட்குறா., எல்லாரும் இங்க தான் சமையல் னா., எல்லாரும் செலவை பகிர்ந்து செய்வீங்களா ன்னு., தெரியாத மாதிரி கேட்குறா.., நம்ம என்னைக்கு அப்படி செலவு கணக்கு பார்த்தோம் சாப்பாட்டு விஷயத்துல.,  எனக்கு அதுவே கஷ்டமா தான் இருந்துச்சு.., அப்போ சீதா தான் சத்தம் போட்டா.., என்ன பேசுற அப்படின்னு., இருந்தாலும் அதை பார்க்கும் போது எனக்கு பயமா தான் இருக்கு.., உங்க சித்தி ங்க எல்லாருக்கும் முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சு”  என்று சொன்னார்…

பாத்தீங்களா மா., வீட்டில் இத்தனைக்கும் எல்லாரும் ஒண்ணா பொறந்தவங்க., அவங்களுக்கே இவ பிரித்துப் பார்க்கிறா., அப்படின்னா என்கிட்ட வேலை பாக்குறவங்க எத்தனை பேர் இருக்காங்க.., என் மனைவியா நான் அவள  ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகும் போது., அத்தனை பேர்க்கிட்டையும்  நல்ல பழகுறவளா இருக்கணும்., அவங்க முன்னாடி தான் பெரிய ஆளு அப்படின்னு காட்டாத., நல்ல பொண்ணா இருக்கனும்., அவங்க கிட்ட எல்லாம் நல்ல தன்மையோடு நடந்துக்கிற நல்ல மனுஷியா இருக்கணும்., அப்படி இருக்கிறவ  மட்டும்   தான்., எனக்கு மனைவியா இருக்க முடியும்.., இது எப்படி ஒத்து வரும் என்று யோசிங்க  மா” என்று அம்மாவிடம் கேள்விகளை வைக்க முதல்முறையாக கார்த்தியை கூர்ந்து கவனித்த அவன் அம்மா….

“தம்பி உன் மனசுல வேற ஏதாவது இருக்கா பா” என்று கேட்டார்..

விருப்பம் இருந்தா மட்டும் நடந்திடுமா., விருப்பம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது தான் ம்மா .., எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சா நல்லா இருக்கும்.,  எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை துணை கிடைச்சா நல்லா இருக்கும்., அப்படின்னு எல்லாரும் ஆசைப்படுற ஒரு விஷயம் தான்.. ஆனால் தலையெழுத்து ன்னு., ஒன்னு இருக்கு பார்த்தீங்களா.., அதன் படிதான் நடக்கும்., நான் என் மனசுல என்னென்னமோ நெனச்சேன் விடுங்கம்மா விதிப்படி நடக்கட்டும்”… என்றான்.

“எப்பா அப்படி ஏதும் விருப்பமிருந்தால் சொல்லுயா.., என்ன விஷயம்” என்று மறுபடியும் கேட்டார்…

“அம்மா தயவு செய்து இந்த பேச்ச விடுங்க., ஏன் தலையில என்ன எழுதி இருக்கோ., இந்த வீட்டுக்கு இப்படித் தான் ஒரு மருமக வரணும்னு., சேர்த்து எழுதி வைத்திருந்தால் அதை மாற்றவா முடியும் ., நடக்கிறது நடக்கட்டும்” என்றபடி எழுந்தவனை கைப்பற்றி அமர வைத்தார் விசாலாட்சி…

அவன் கன்னம் தடவி “கவலைப்படாத அம்மா கும்பிடுற சாமி.., உன்ன கைவிடாது, உன் மனசுக்கு ஏத்த ஒருத்தி வருவா” என்று சொன்னார்…

சிரித்தபடி மனசுல “ரொம்ப  ஆசையை வளர்த்துக்காதீங்க மா., ஏன்னா உங்களால அப்பாட்டையும்., பாட்டி தாத்தாட்டையும் எதுவும் பேச முடியாது., நான் தொழில்ல எவ்வளவுதான் காலூனி நின்னாலும்., இந்த குடும்பத்துக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஒண்ணு இருக்கு”… என்றான்.

வெளியே ஜெ.கே னா ஒரு பெயர் இருக்குமா.., இந்த குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் ஜெ. கே அப்படிங்கிற பேரும் வெளியே இருக்கு..,  அதுமட்டுமில்லாம எனக்குனு ஒரு மரியாதை இருக்கு., அதை நானே அசிங்கப்படுத்த முடியாதும்மா..,  எது நடந்தாலும் நல்லதுக்கு ன்னு  நினைச்சிட்டு அப்படியே விடுங்க.., இதுக்கு மேல நீங்க எதுவும் யோசிக்காதீங்க., போய் தூங்குங்க மா”., என்று விசாலட்சிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினான்…

மனதில் எவ்வளவு தான் கவலை இருந்தாலும்.,அனைத்தையும் மறந்து சிரித்தபடி வீட்டின் மூத்த மகனாக கடமைக்காக திருமணம் செய்து கொள்வது என்ற முடிவோடு தான் இரவு உறக்கத்தை தேடி சென்றான்…

Advertisement